Wednesday, December 21, 2011

நினைவிலோடும் பச்சை நதி

"வெட்டப்பட்ட ஒரு மரம் அதன் அடிக்கட்டையின் ரணத்தை சூரிய வெளிச்சத்தில் நம்மிடம் காட்டும் போது அதன் சுயசரிதையை தெளிவான ஒரு மொழியில் நம்மிடம் சொல்கிறது. மரங்களிடம் பேச வேண்டும் என்றால் அதற்கொரு தனிப்பட்ட திறமை வேண்டும்" - ஹெர்மன் ஹெஸ்ஸே


"நினைவில் காடுள்ள மிருகம்
எளிதில் அடங்குவதில்லை
அவள் தோளில்
சதுப்பு நிலங்களின் குளிர்
அவள் முடிக்கற்றைகளில்
வனப்பூக்களின் கடும்நெடி
அவள் விழிமணியில்
பாறைகளில் தெறித்துவிழும்
காட்டுச் சூரியன்
அவள் வாயில் காட்டாறுகள்
சந்திக்கின்றன.
அவள் நாவில் காட்டுத்தேன்
ஊறுகிறது
அவள் செவிகளில்
இடிமேகங்கள் முழங்குகின்றன
அவள் ரத்தத்தில்
காட்டுயானைகள் பிளிறுகின்றன
அவள் இதயத்தில்
காட்டு நிலவுகள் பூக்கின்றன
அவளது சிந்தனைகள்
காட்டுப் பாதைகளினூடே
பாய்ந்து செல்கின்றன
நினைவில் காடுள்ள மிருகம்
எளிதில் அடங்குவதில்லை
என் நினைவில் காடுகளுண்டு"

என்னும் சச்சிதானந்தனின் புகழ் பெற்ற கவிதை வரிகள் எப்போதும் என்னைத் துன்புறுத்துபவை. என் நினைவிலும் காடுண்டு. நினைவில் மட்டும்தான். இன்று நான் மரங்கள் அழிக்கப்பட்ட, ஒரு கான்கிரீட் நகரத்தில் வாழ்கிறேன். சென்னையைப் பற்றிப் பேசும் படைப்பாளர்கள், அதன் செயற்கைத் தன்மையை, மூச்சு முட்டுவதைப் பற்றிப் பேசும்போது என் மனது வலிக்கும். என்ன செய்ய? சென்னையை விட்டு நீங்கி, திருவண்ணாமலையிலும் காஞ்சீபுரத்திலும் இருக்கும் சிறு கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பணி புரிந்து, வார இறுதி நாட்களில் சென்னை மீளும் தருணத்தில் நானும் அவ்வாறே உணர்கிறேன். இருக்கும் ஓரிரு மரங்களையும் அழித்து அங்கு ஏதாவது கட்டி வாடகை விட முடியுமா என அலையும் ஒரு பெரும் கூட்டம் சென்னையைச் சுற்றி இருக்கத் தான் செய்கிறது.

என் சென்னை எப்போதும் இப்படித் தான் இருந்ததா? கூவத்தில் குளித்தெழுந்து கோயிலுக்குப் போனதாக வள்ளல் பச்சையப்பனாரின் குறிப்புகளை இன்று படிக்கும்போது சிரிப்பு வருகிறதோடு நம்புவதற்கும் சற்றுக் கடினமாக உள்ளது. ஆனாலும் அந்தச் செய்தி உண்மைதானே. அப்படித்தான் நான் இருக்கும் ஆழ்வார்ப்பேட்டையிலும் ஒரு காலத்தில் மரங்கள் இருந்தன. மக்கள் நெருக்கடி குறைவான பகுதியாக, வணிகப் பகுதியாக மாறாத ஒரு கால கட்டமாக அது இருந்தது. மாலை தொடங்கி இரவு வரையிலும் போக்குவரத்து பற்றிய எந்தப் பயமுமின்றித் தெருவிலே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறோம். இன்றைக்கு அந்த ஆழ்வார்ப்பேட்டையும் இல்லை; அங்கு இருந்த எங்கள் குட்டித் தோட்டமும் இல்லை.

எங்கள் வீட்டில் மா, வாழை, கொய்யா, தென்னை போன்ற மரங்களும் ரோஜா, செம்பருத்தி, தேன்பூ, வண்ண வண்ண டிசம்பர் பூக்கள், மல்லி, நந்தியாவட்டை ஆகிய மரங்களும் மருதாணி, கத்தரி, வெண்டை போன்ற செடிகளும் நிறைந்த ஒரு சிறிய தோட்டம் இருந்தது. இன்று வீடு பெரிதாகி, அன்றைய அழகின் அடையாளமாக மா மரமும், தென்னை மரமும் மட்டும் எஞ்சி நிற்கிறது. ஒவ்வொரு முறை என் வீட்டுக்குள் நுழையும் போதும் என் பால்யம் மனசுக்குள் இருந்து எட்டிப் பார்க்க, அதன் வலி பொறுக்க முடியாமல் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் தஞ்சம் புகுந்து விடுவேன்.

இன்றைக்கு இழந்ததை நினைத்து ஏங்குகிறேன். அன்றைக்கோ, ஆயா எங்கே நம்மைக் கூப்பிட்டு விடுவார்களோ என்று ஓடியிருக்கிறேன். செடிக்குத் தண்ணீர் ஊற்றச் சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டுதான் இந்த ஓட்டம். நான்தான் செய்யணுமா, நீ செய்யேன் என்ற போட்டி வேறு. விடியற்காலை அற்புதமானது என்பதை எனக்கு என் வீட்டுத் தோட்டம்தான் கற்றுக் கொடுத்தது. காக்கை, குயில், குருவி, மைனா, இன்னும் பெயர் தெரியாத பல பறவைகளை என் தோட்டத்தில் பார்த்திருக்கிறேன். பாரடி இந்த வன்னத் தியல்பை என்று பாரதி அதிசயிப்பது போல எத்தனை வகையான வண்ணத்துப் பூச்சிகள்? இன்றைக்கு அவை எல்லாம் எங்கே? இன்று என் மகள் குருவியேயோ அணிலையோ பார்த்ததே இல்லையென்கிறாள். நத்தைகள் எல்லாம் எங்கே போயின? அன்றைக்கு எங்கள் தோட்டத்தில் நரி புகுந்தது ஒரு பெரிய அதிசயம். வௌவால்கள் இருந்தன. எப்போதாவது பாம்புகள் கூட வரும்.

பேரன், பேத்திகள் அத்தனை பேருக்கும் சுற்று முறையில் தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றும் வேலை. அதெல்லாம் ரொம்ப நியாயமாக நடக்கும். யாரும் எங்கள் இராஜேசுவரி ஆயாவை ஏமாற்ற முடியாது. மிகச் சரியாக நினைவில் வைத்திருந்து, வயதில் பெரியவர் ஒருவரும் சிறியவர் ஒருவருமாகப் பணிப்பகிர்வு இருக்கும். எங்கள் நாள் வருவதற்கு முதல் நாளே எங்களுக்குக் காய்ச்சல் தொடங்கி விடும். ஆனால் விட்டால் தானே. அவரால் படியேற முடியாது. கீழேயிருந்து கூப்பிடுவார். நாங்களா எழுந்திருப்போம்? ஆயா, மெதுவாக இரண்டு படி ஏறி அங்கே இருந்து கூப்பிட்டும் ஆள் வரவில்லையென்றால் எங்கள் அம்மாவுக்கு வசவு தொடங்கும். அம்மா வந்து முதுகில் இரண்டு போட்டு எழுப்பி அனுப்பி வைப்பார். சுணங்கிக் கொண்டும் மனத்தில் திட்டிக் கொண்டும் எழுந்து போவோம். ஆயாவுக்குக் காது கொஞ்சம் மந்தமானாலும் எங்கள் வாய் அசைவை வைத்தே எங்களைக் கண்டுபிடித்துக் காதைப் பிடித்துத் திருகுவார்.

இந்த அக்கினிப் பரீட்சையைத் தாண்டித் தோட்டம் வந்தால், அது ஒரு தாய் மடி போல எங்களை அரவணைத்துக் கொள்ளும். சில்லென்ற பனித் துளிகள் படர்ந்த இலைகளையும் பூக்களையும் தொட்டுத் தொட்டு இரசிக்கலாம். மைனாக்களைத் துரத்தலாம். வெளிச்சம் வருவதற்குள் தோட்டத்தில் உள்ள அடி பம்ப்பை ஒருவர் அடித்து அடித்துக் குடத்தை நிரப்பினால், அடுத்தவர் மரங்களுக்கும் செடிகளுக்கும் கொண்டு ஊற்ற வேண்டும். பிறகு ஒருவர் தோட்டத்தைப் பெருக்கினால், மற்றவர் பூக்குடலையில் பூக்களைப் பறித்து வைக்க வேண்டும். முடித்து விட்டுச் சென்றால் ஆயா இரண்டு நெய் பிஸ்கெட் கொடுக்கும். அது அன்றைக்கு எங்களுக்கு அமிழ்தத்துக்கு ஈடு. நாக்கிலிருந்து நீர் சுரக்கும். கேட்டாலும் அதற்கு மேல் கிடைக்காது. அதுதான் அன்றைய கூலி. பிறகு குளித்து, பள்ளிக்குக் கிளம்ப வேண்டியதுதான். ஒரே ஆசுவாசம்; அன்று காலை படிக்க வேண்டாம்.

வீட்டில் அப்போது எப்போதாவதுதான் மின்சாரம் போகும். அப்படி ஒரு காலம். அப்போது வீட்டில் தாத்தா இருந்து விட்டால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். வீட்டுக்குள் இருக்கப் புழுக்கமாக இருக்குமென்பதால் அவருடைய சாய்வு நாற்காலியை எடுத்துத் தோட்டத்துக்குள் போட்டு உட்கார்ந்து கொள்வார். சுற்றி நாங்கள் உட்கார்ந்து கொள்ள, எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதபடி இராமாயணம், மகாபாரதம் கதைகளைச் சொல்வார். அவருடைய அம்மா கற்பித்த நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவார். ரொம்பக் குஷியாகி விட்டால் எழுந்து குதித்து விளையாடுவார். மரங்களைப் பற்றிய கதைகளை, சங்க இலக்கியப் பாடல்களை விவரிப்பார். பேச்சு அப்படியே சிலப்பதிகாரம், இன்ன பிற இலக்கியங்களென்று போகும்போது அவருடைய நண்பர்களும் கூடச் சேர்ந்து கொள்வார்கள். கேட்கச் சுவாரசியமாக இருக்கும்.

என் வீட்டில் இருக்கும் மரங்களிலேயே கொய்யா மரம் எனக்கு ரொம்பப் பிடித்தமானது. மரங்களிலேயே ரொம்ப வழவழப்பான, தன்மையான பட்டைகளை உடையது கொய்யா என்பது என் அபிப்ராயம். அதன் மேல் ஏறி விட்டுப் பிறகு இறங்க முடியாமல் அழுது, பிறகு தாத்தாவின் பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் என்னை இறக்கி விட்டது இன்றைக்கு நினைத்தால் சிரிப்பாக இருந்தாலும் அதற்குப் பிறகு நான் மரம் ஏறியதேயில்லை. அவ்வளவு பயம். அன்றைக்கு அப்பாவிடம் வாங்கிய அடி இன்றைக்கும் மறக்கவில்லை. பொம்பளைப் பிள்ளை மரம் ஏறிக் கையைக் காலை உடைச்சிக்கிட்டா, பின்னாடி யார் கட்டிக்குவா? என்று சொல்லிச் சொல்லி அடித்தார். பிறகு என்னைக் கடைக்குக் கூட்டிப் போய் எனக்குப் பிடித்த கதைப் புத்தகம், சாக்லேட் எல்லாம் வாங்கிக் கொடுத்தாலும் (அது அப்பாவின் வழக்கம். முதலில் அடிப்பார். பின் கொடுப்பார்) அப்பான்னா பயம்தான்.

போன மாதத்தில் கவிஞர் யாழன் ஆதியின் வீட்டுக்குப் போயிருந்தபோது, அங்கு கொய்யா மரம் பார்த்தேன். என் அடியாழத்திலிருந்து கிளம்பிய இசையை அந்த மரத்தைச் சுற்றிப் பதியமிட்டுவிட்டு வந்தேன். கிளர்ந்தெழுந்த நினைவுகளை நண்பரிடம் பகிர்ந்து சிரித்தேன். என்றாலும் மரங்களை இழந்த சின்னப் பெண்ணின் அழுகுரல் ஈனசுரத்தில் கேட்டுக் கொண்டே இருந்தது.

என் வீடு மட்டுமல்ல; எங்கள் தெரு மூலையில் செட்டியார் வீடு என்று நாங்கள் அடையாளம் சொல்லும் முத்துவின் வீடு மிகப் பெரியது. காரைக்குடிச் செட்டியார்களுடையது. உள்ளுக்குள் சிறிய வனத்தையே அடக்கியது. அங்கு பலாவும், வேம்பும் தென்னையும் மாவும் அடர்ந்து செறிந்து இருக்கும். இடையிடையில் பூச்செடிகள். அங்கே பெரும்பாலும் ஐஸ்பாய்ஸ்தான் விளையாடுவோம். பலா மரத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டால், கண்டுபிடிக்கவே முடியாது. ஒவ்வொரு மரமாகத் தாவித் தாவி ஏமாற்றி விடலாம். நேரம் போவதே தெரியாமல் அங்கே விளையாடி, வீட்டிலிருந்து யாராவது தேடிக் கொண்டு வந்து, தெருவிலேயே அடி வாங்கி வீடு திரும்பியிருக்கிறோம். இன்றைக்கு முத்து எங்கிருக்கிறானோ தெரியாது. செட்டியார் வீடும் பல கை மாறி, ஒரு கணிணி நிறுவனக் கட்டிடமாக உருமாறி, இப்போது அப்போலோ மருத்துவமனையாகி விட்டது. அதைக் கடக்கும் ஒவ்வொரு நாளும் பறந்து விட்ட குயில்களின், மைனாக்களின் காக்கைகளின் குரல்கள் என் காதுகளில் ஒலிக்கத் தொடங்கும். மனம் முழுக்க வருத்தம் சூழ்ந்து கொள்ளும். மனிதன் இல்லாமல் மரங்கள் இருக்க முடியும். ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதனால் இருக்க முடியுமா?

அதற்குப் பிறகு மரங்கள் என் நினைவுகளில் மட்டும் வாழத் தொடங்கின. கல்லூரியின் மிகப் பெரிய ஆல மரமும் அதன் அடியில் இருக்கும் குட்டிப் பிள்ளையாரும் என் நெருங்கிய சினேகிதர்கள். என் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட பருவம் வரையுள்ள என் இன்ப, துன்பம் அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். தோழிகளுடனான என் அரட்டைக் கச்சேரி அந்த இடத்தில்தான். உணவு உண்பதும், பேருந்துக்காகக் காத்திருப்பதும் அதன் அடியில்தான். பிறகு நான் அடர்ந்த மரங்களை என் வாழ்நாளில் பார்த்தது, திருவண்ணாமலையில் உள்ள தானிப்பாடியில் ஆசிரியராகச் சேர்ந்த பிறகுதான்.

எழிலார்ந்த தென்பெண்ணையாற்றின் ஒரு துணை நதி ஓடும் வழியில் இருந்தது எங்கள் பள்ளி. வழியெல்லாம் வயல்கள், செடிகள், மரங்கள் என்று என்னைச் சுற்றிலும் ஒரு பச்சை நதி ஓடியபடியே இருந்தது. அந்த வயல் வெளிகளைக் கடக்கும்போதெல்லாம் பச்சை மரகதப் பட்டு விரித்துப் படுத்துக் கிடக்குது இயற்கை என்னும் பரிணாமனின் பாடல் வரிகள் நினைவுக்கு வரும். அங்கே பெரும்பாலும் மரத்தடி வகுப்புகள்தான். மாணவர் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்குமென்பதால், தமிழ் வகுப்பு எப்போது மரத்தடியே. அதிலும் நீங்க சூப்பரா நடத்துவீங்க. எப்ப நடத்தினாலும் பசங்க கேட்பாங்க என்ற வஞ்சப் புகழ்ச்சியோடு மதிய முதல் வேளையை என் தலையில் கட்டி விடுவார்கள். சூழ்ச்சி அறியாத குழந்தையாய் ஒத்துக் கொண்டு, நொந்தே போனேன்.

புத்தகத்தில் உள்ளது அல்லாமல் புதிய தகவல்களைச் சொல்ல வேண்டுமென்று மெனக்கெட்டு சங்க இலக்கியம் பற்றித் தயாரித்துக் கொண்டு சென்ற அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. பணியில் சேர்ந்தே இரண்டு வாரங்கள்தான் ஆகியிருந்தது. நற்றிணையில் மட்டுமே 47 மரங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளது என்று நற்றிணை பற்றிய மேலதிகமான தகவல்களைச் சொல்லிக் கொண்டு வரும்போதே ஒரு குறட்டைச் சத்தம் மெல்லியதாய்க் கேட்கத் தொடங்கியது. கோபம் மூக்கேற, கையில் பிரம்பைப் பிடித்துக் கொண்டு, இன்னும் உரக்கக் குரலெடுத்து, ஒழுங்காய்ப் பாடத்தைக் கவனிக்கும்படி எச்சரித்து விட்டு மருத நிலத்தின் வளமையைக் கூறும் பட்டினப்பாலைப் பாடல் ஒன்றைச் சொல்லத் தொடங்கினேன்.

"விளைவு அறா வியன் கழனி
கார்க்கரும்பின் கமழ் ஆலைத்
தீத் தெறுவின் கவின்
வாடிநீர்ச் செறுவின் நீள் நெய்தற்
பூச்சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக்குழவி
கூட்டு நிழல் துயில் வதியும்
கோள் தெங்கின் , குலை வாழை,
காய்க் கமுகின் , கமழ் மஞ்சள்
இனமாவின் இணர்ப் பெண்ணை
முதற் சேம்பின் முளை இஞ்சி" (8-19)

என்று சொல்லி வரும்போதே குறட்டைச் சத்தத்தோடு, குழந்தைகள் சிரிக்கும் சப்தமும் சிலு சிலுவெனக் கேட்கத் தொடங்க, என் விதியை நொந்தபடி, திட்டிக் கொண்டே கடைசி வரிசையை நோக்கி நகர்ந்தால், அடுத்த மரத்தடியில் பாடம் எடுக்க வந்த கணக்கு வாத்தியாரின் கும்பகருணக் குறட்டைதான் அது என்று தெரிந்த உடன் அசடு வழிந்தாலும் என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. வேறு வழியின்றி, அந்தப் பாடலை மாணவர்கள் அனைவரையும் கூட்டாகச் சொல்லச் சொல்லித்தான் அவருடைய தூக்கத்தைக் கலைக்க முடிந்தது. வேப்ப மரத்தடியின் சுகமான காற்றோடு, உண்ட மயக்கத்தில் எனக்கும் சில வேளைகளில் உறக்கம் வந்ததுண்டு. அதை உணர்ந்து, சிறு வெட்கத்தோடு அரை வட்டமாய் உட்கார்ந்திருக்கும் மாணவர்களைச் சுற்றி வந்து அதைத் தவிர்த்ததும் உண்டு.

இன்றைக்கும் காஞ்சீபுரத்தில் உள்ள மானாம்பதி அரசுப் பள்ளியில், இரண்டு வகுப்புகளை இணைத்துப் பாடம் எடுக்கையில் வகுப்பறைப் போதாமையினால் மரத்தடிப் பாடம் நடக்கும். மாணவர்களுக்கு, ஆசிரியர் நடத்தும் பாடத்தை விட மரங்கள் பேசாமலே உணர்த்தும் உண்மைகளின் மீதுதான் ஆர்வம் அதிகம். மரத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டும், மேலே இருக்கும் காக்கை, அணில், குரங்கை எல்லாம் வேடிக்கை பார்த்தும் என்னை வெறுப்பேற்றுவார்கள். இதற்காகவே மரத்தடியில் வகுப்பு எடுங்க மிஸ் என்று கெஞ்சும் ஒரு மாணவர் கூட்டம் உண்டு. மரங்களே அவர்களுடைய போதி மரங்கள்.
எங்கள் பள்ளியின் நுழைவுவாயிலிலிருந்து வகுப்பறை வரையிலுமான ஒரு சிறு பாதை முழுவதும் தும்பைப் பூக்கள் பூத்து, நமக்கு வரவேற்பளிப்பது போலத் தலையசைப்பது காலை வேளையில் பெருத்த உற்சாகத்தைக் கொடுக்கும். புங்க மரம், பூவரச மரம், அசோக மரம், பூவரச மரம், வேப்ப மரம் என மரங்கள் நிறைந்த அரசுப் பள்ளிகளே பூவுலக சுவர்க்கங்கள்தான். வாரம் ஒரு முறை வந்தாலும் பெருத்துக் கொண்டிருக்கும் சென்னையைத் தொடும் நேரத்தில் ஒரு அயர்ச்சி வருவதை மறுப்பதற்கில்லை.

சென்னையில் என் மகள் படித்த ஒரு பெயர் பெற்ற பள்ளியில் ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் 7,8 அசோக மரம் தவிர்த்து அங்கு வேறு மரங்களே கிடையாது. அவர்கள் விளையாட மண் தரையும் கிடையாது. முழுக்க முழுக்க சிமென்டினால் பூசப்பட்ட தரை. ஓடி விளையாட முடியாதபடி கட்டுப்படுத்தப்பட்ட பிள்ளைகள். குழந்தைகளைக் கூட்டி வரச் செல்லும் என் போன்ற பெற்றோர் கையில் குடையோடு வெயில் தாளாமல் நின்றபடி அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். அந்த இடம் முழுவதுமே அந்த மதிய வேளையில் காளான் குடைகள் பூத்ததுபோலக் காட்சியளிக்கும். குழந்தைகளே அங்கு போன்சாய் செடிகளாய்த் தொட்டிக்குள் இருப்பது போன்ற பிரமையில் மூழ்கி விடுவேன். இயற்கைச் சூழலுக்கு, கிராமத்துப் பள்ளிகள்தான் நிலை. ஆனால் இன்றோ பெருகி வரும் மக்கள் பெருக்கத்துக்குக் கிராமங்களும் இரையாகி வருகின்றன.

சென்னையில் ஆங்காங்கே தெரு ஓரங்களில் பெரிய பெரிய மரங்களைப் பார்க்கலாம். ஆழ்வார்ப்பேட்டையில் இப்போதும் ஓரங்களில் நின்று தலையாட்டிச் சிரிக்கும் மரங்கள் எம்.ஜி.ஆர் காலத்தில் வைக்கப்பட்டவை. செடிகள் வைத்து, அதைப் பாதுகாக்க இரும்பு வேலிகளும் போடப்பட்டன. அப்படியும் அதில் பல செடிகள் ஆடு, மாடுகளுக்கு இரையாகின. அப்போது தப்பிப் பிழைத்த மரங்களே இன்றைக்கு எங்கள் தெருக்களில் பசும் கைகளை விரித்து, மலர்ப் போர்வைகளைத் தெருக்களில் விரித்து அழகு காட்டிக் கொண்டிருக்கின்றன.

ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இன்றும் ஆழ்வார்ப்பேட்டையில் பரந்து விரிந்த நிலப்பரப்பொன்று மரங்கள் சூழ்ந்து இருக்கத்தான் செய்கிறது. அதுதான் கவிஞர் கண்ணதாசனுக்குச் சொந்தமான கவிதா ஓட்டல் என்று சொல்லப்படும் இடம். அவர் அங்கு உட்கார்ந்து பாடல்கள் எழுதியிருப்பதாகவும் சொல்வார்கள். கான்கிரீட் காட்டிலும் கூட அந்த இடத்தின் அருகில் செல்லும்போது எங்கிருந்தோ கூவும் ஒரு சோகக் குயில் குரலைக் கேட்கலாம். அது எனதா? கவிஞருடையதா? பிரித்தறிய முடியவில்லை.

1 comment:

  1. எங்கிருந்தோ கூவும் ஒரு சோகக் குயில் குரலைக் கேட்கலாம். அது எனதா? கவிஞருடையதா? பிரித்தறிய முடியவில்லை.
    எனதாகவும் இருக்கலாம்...
    சிறந்த பதிவு வாழ்த்துகள்..

    ReplyDelete