Tuesday, July 27, 2010

கண்ணீரை உறிஞ்சும் புன்னகையும் சும்மா இருக்கும் சூரிக்கத்திகளும்


- தி.பரமேசுவரி 
நன்றி: புத்தகம் பேசுது , ஏப்ரல் 2010
கவிதையின் முகம் ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு தோற்றத்தில் மாற்றம் கொண்டிலங்குகிறது. புதிய புதிய வண்ணங்கள்; நிறைந்த பொருட்செறிவு என ஆழப்பட்ட கவிதைகள் பெருகி வரும் காலமிது. எங்கோ ஓரிரு ஓரங்களில் எழுந்த கலகக் குரல்கள், பெருகிப் பேரோலமென ஓசை எழுப்பும் எதிர் இலக்கியங்களின் காலமும் கூட. இன்றைய சமூகச் சூழல், அடிப்படையில் பெரிதும் மாற்றமின்றி மாற்றம் பெற்றதான போலித் தோற்றத்துடன் ஆரவாரமாய் இயங்குவது மானுடத்திற்குப் பெரும் சவாலாகவும் படைப்பாளிகளுக்கு அறச் சிக்கல்களையும் எழுப்புகிறது.
கவிஞர் ரகசியனின் என் மாமிசத்தைப் பிடுங்கிப் பசியாறும் சைவம்என்ற கவிதை நூலின் தலைப்பே ரௌத்ரமானதொரு கவிதையென அதிகாரப் பீடத்தை அசைத்துப் பார்க்கிறது. படிநிலைச் சாதிய அடுக்குமுறையின் அடக்குமுறை அரசியலால் ஆயிரம் ஆயிரமாண்டுக் காலம் ஒடுக்கப்பட்டிருந்த மக்கள், இன்று தங்களுக்கான இலக்கியத்தை, பண்பாட்டை, அழகியலைக் கட்டமைக்கின்றனர்.
ஒடுக்க ஒடுக்க ஒடுங்கி இருந்தவர்கள் இப்போது அதற்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். ரகசியனின் கவிதைகளில் சில இயலாமையுடனும், சில கவிஞனுக்கேயுரிய அறச்சீற்றத்துடனும் பெருக்கெடுக்கிறது.
உயிர்ப் பிணம்என்னும் கவிதையில் பெருகும் ஆற்றாமையும் அவலமும் கடக்க முடியாமல் நம்மைத் தடுமாற்றுகிறது. ஒவ்வொரு முறையும் உயிருடன் மரணிக்கும் அவஸ்தையை, நடமாடும் பிணமென அலையும் உடலை, அவமானப்பட்ட ரணங்களோடு வாழும் கணங்களை அதன் வலியோடு நமக்குத் தருகிறார்.
இரும்புக் கோட்டையென இறுகி நிற்கும் சாதியாலான இச்சமூகத்தில் தலித்துகள் ஒடுக்கப்பட்டவர்கள் என்றும் பண்பாடற்றவர்கள் என்றும் அவர்களே நம்பும்படிக் காலங் காலமாய்க் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். சொந்த நாட்டிலேயே அகதிகளென, ஊருக்கு வெளியே வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் வாழும் கொடுமையையும் அனுபவித்து வருகிறார்கள்.
ஏதோ ஒரு துண்டுத் துணியை / என் /
தேசியக் கொடி என்கிறார்கள் / இது தான் உன் சாமி /
இது தான் உன் பண்பாடு / இது தான் உன் விழா என /
எனக்குப் புரியாத இவைகளை / எனதாக்குகிறார்கள் /
ஆகுமெனில் / அவர்கள் கனவையும் காணச் சொல்வார்கள்.
என்ற வரிகள் இனக்குழுச் சமயத் தெய்வங்கள் மெல்ல, மெல்லப் பெருஞ் சமூகத் தெய்வத்துள் அடைக்கப்படுவதையும் எல்லாவற்றையும் இழுத்து உறிஞ்சித் தனக்குள் அடக்க முயலும் ஆக்டோபஸென நெளியும் பெருஞ் சமூகத்தின் அடையாளத் திணிப்பையும் இக்கவிதை வெளிச்சப்படுத்துகிறது.
இன்றைக்கும் திண்ணியங்களுக்கும் வெண்மணிகளுக்கும் பாப்பாரப் பட்டிகளுக்கும் உத்தபுரங்களுக்கும் குறைவில்லாத நம் நாட்டில் ஒடுக்குமுறை தன் முகத்தை மாற்றி, வேறொரு வடிவத்தில், வெட்ட வெட்ட முளைக்கும் பார்த்தீனியம் போலக் கிளைத்தெழுவதை,
‘‘சாணிப்பால் தொடங்கி
மனித மலம் வரை
கழித்தாயிற்று நம் வாயில்’’
என்று சுட்டிக் காட்டும் கவிஞர், இவ்வன் கூறுகளுக்கு எதிரான தலித் எழுச்சியை,
நாம் தான் தொடங்க வேண்டும்
அத்திமிரை அடக்கும் போரை
இது நாள் வரை
சும்மா தான் இருக்கிறது
மாடு அறுத்த
நம் தாத்தாக்களின் சூரி
என்று உரத்த கோபத்துடன் வெளியிடுகின்றார்.
அடிமட்ட ஊழியர்களாய், எல்லா வேலை களையும் செய்யப் பயன்படுத்தப்படும் தலித் மக்கள் போஸ்டர் ஒட்டுகிறார்கள்; வாழ்க ஒழிக எனக் கோஷமிடுகிறார்கள்; தன் தலைவனுக்காக மூளைச் சலவை செய்யப்பட்டுத் தீக்குளிக்கவும் துணிகிறார்கள். ஆனால்,
பரந்து விரிந்த / என் தேசத்திற்குக் கூட இல்லை /
புள்ளியாய் இருக்கும் ஒரு ஊருக்கு / நான்
தலைவனானால் / சூத்தெறிகிறது / உன் சாமிக்கும்
என்று ஒடுக்கப்பட்ட மக்களின் சிறு, உயர் பதவிகளுக்கான நகர்வுகள் கூடத் தடுக்கப்படுவதைக் கவிஞர் சினக்கையில் நம்மையும் அது பற்றிக் கொள்கிறது.
பார்ப்பனீய மேலாதிக்கம் புனிதப்படுத்தும் கற்பிதங்களைத் தகர்த்து, புனித நீரால் கழுவினாலும் போகாத அவர்களது அழுக்குகளைக் கேள்விக்குட்படுத்துபவர் தன் நெருப்பு மொழியால் தலித்களுக்கான அழகியலை வார்த்தெடுக்கிறார். அழுக்கானவர்கள்என்ற கவிதையில்
உன் அம்மணம் / எங்களது ஆடையால்
அலங்கரிக்கப்பட்டுள்ளது / இக்காற்றை
இவ்வெளியை / இம் மண்ணை
அழுக்காக்கியவர்கள் நீங்கள்
தூய்மை பற்றிப் பேச உங்களுக்கு
அருகதை இல்லை
என்று தூய்மை பற்றிக் கதைத்துக் கொண்டே இயற்கையை அசுத்தப்படுத்தும், பிறர் உழைப்பைச் சுரண்டி ஒட்டுண்ணி வாழ்க்கை வாழும் ஆதிக்க வர்க்கத்தைத் தோலுரிக்கிறார்.
இன்றைய கால கட்டத்தில் சூழலியல் பற்றிய விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டிருக்கும் நிலையில் கவிஞர், எல்லையிலாப் பிரபஞ்சத்தின் மகிழ்ச்சித் துளியாம் இயற்கையை, பசுமையை மனிதன் தனக்கு மட்டுமே உடைமையாக்கிக் கொண்டு அதனைப் பாதுகாக்காமல் சீரழிப்பதை, காற்றின் சீற்றத்தால் முறிந்த மரத்தைக் காட்சிப்படுத்தி,
நன்றி மறந்து / உணர்வின்றிக் / கண்ணீர் இன்றி
விறகு ஒடிக்க ஓடினான் / மனிதன் / தன் சிறகுக்
கைகளால் / மார்படித்து அழுகிறது / பறவை
என்று மனிதனின் சுயநலத்தை அம்பலப்படுத்துகிறார்.எளிமையான மொழி, தேர்ந்தெடுத்த சொற்கள், செறிவான கவிதைக்கட்டு என ரகசியன் தன் உணர்வுகளை, சீற்றத்தை நமக்குள்ளும் கடத்தி விடுகிறார். நீண்ட மௌனத்தின் முகத்திரை கிழித்து அகப்பூச்சை வெளிப் படுத்துகிறார். கூர்ப்படுத்திய சொற்களை ஆயுதமாகத் தருகிறார். கவிதையின் பணி இதுவன்றி வேறெதுவாக இருக்க முடியும்?
நமது இறுக்கமான சமூகக் கட்டமைப்பையும் பொறுப்பற்ற அரசியல் தளத்தையும் பெருஞ் சமூகத்தின் போலி ஒப்பனையையும் சந்திப்பில் இழுத்து நிறுத்தும் ரகசியன், தன் கவிதைகள் மூலமாக எதிர் வினைகளை, செயலாக்கங்களை நிகழ்த்துகிறார். ஒடுக்கு முறைக்கு எதிரான தொடர்ந்த கேள்விகளை முன்வைக்கிறார். அதற்கு விடை காணும் முடிவற்ற பயணமாக ரகசியனின் கவிதைகள் முன் நகர வேண்டும்; தொடர வேண்டும். வெட்டியெறியப்பட்ட கரங்கள் வளர்ந்து உயர வேண்டும்.
என் மாமிசத்தைப் பிடுங்கிப் பசியாறும் சைவம் - ரகசியன்
பூங்குயில் பதிப்பகம்,
வந்தவாசி,
பக்கம் 72, ரூ.30 

1 comment:

  1. பின்னே..அப்துல் கலாமு காணச் சொன்னது யாருடைய கனவுன்னு நெனச்சீங்க...இப்புடி பச்சப்புள்ளயாட்டமா கவிதை எழுதுவாங்க..அவுங்க நெனைகிறததான் நாம கனவா காணனும். தாத்தாவோட சூரிக்கத்தி எங்கயிருக்கு...தேவப்படுது...கடனாத் த்ர்ரீங்களா...?

    ReplyDelete