Saturday, May 19, 2012

தேர்வு எனும் அகழி

நன்றி: பாவையர் மலர்
பொதுத் தேர்வுகள் நடைபெறும் நேரம். மாணவர்கள் கண்ணுங்கருத்துமாக, இரவுபகல் பாராது படிக்கும் தருணம். இத்தனை ஆண்டுக் கல்வியின் அறுவடைப் பருவம். நடத்தும் பரபரப்பில் கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் பள்ளிகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அன்றாடம் நாளிதழில், மாணவர்கள் காப்பியடித்துப் பிடிபடுவதும் தேர்வுத்தாள் கடினமாக இருந்ததாகச் சொல்லித் தன்னையே வருத்திக் கொள்வதும் செய்திகளாகின்றன. அப்படித்தான் சென்ற வாரம் அதிகாலை, நாளிதழைப் புரட்டுகையில் கண்ணில்பட்டது அந்தச் செய்தி. திருவண்ணாமலையில் உள்ள ஒரு புகழ் பெற்ற ஒரு பள்ளி, தன் மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு வினாத்தாளின் விடைகளை நகலெடுத்துக் கொடுக்கையில் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவிடம் நகலும் கையுமாகப் பிடிபட்டிருக்கின்றனர். அதற்கு உதவி செய்த அரசுப் பள்ளி சார்ந்த ஏழு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்வுமுறை சரிதானா என்று தொடர்ந்து நடைபெறும் விவாதத்துக்கு இந்நிகழ்வு வலிமை சேர்க்கிறது. இத்தகைய தேர்வுமுறை சரியில்லையென்று சொல்லும் தரப்பினர் அதற்குச் சில தீர்வுகளையும் சொல்கின்றனர். அவையும் விவாதத்திற்குரியதே. இன்றைய நம் கல்விமுறை என்பதே மெக்காலேவின் குமாஸ்தாக்களை உருவாக்குவதற்கான கல்வித்திட்டம் என்பது அனைவரும் அறிந்தது. நம்முடைய பாரம்பரியமான கல்வித்திட்டத்தை, அதில் சில குறைபாடுகள் இருந்தாலும் கூட நாம் இன்றைக்கு இழந்துவிட்டோமென்பது மிகவும் வருந்துதற்குரிய ஒன்று. இந்த மெக்காலே கல்விமுறையே இன்றைய நம் குறைபாடுகளுக்கும் குளறுபடிகளுக்கும் முதன்மைக் காரணமாகும்.

இன்றைய நம் கல்வி அமைப்பில் உள்ள தேர்வு முறையைப் பொருத்த அளவில் மாணவரின் அறியாமையை அளக்கிற அளவுகோலாக மட்டுமே இருக்கிறதேயொழிய அறிவை வளர்க்கும் அளவுகோலென்று சொல்ல முடியாது.   அறியாமையை அகற்றி நல்வழிப்படுத்துவதே கல்வியின் தலையாய பயன். ஆனால் நீ இவ்வளவு அறியாமையுடன் இருக்கிறாய் என்று மாணவனை உளவியல்ரீதியாகத் துன்புறுத்தும் ஒரு முறை எப்படி நன்மையைத் தருவதாக, அறிவை வளர்ப்பதாக, தனித்திறன்களை அடையாளம் காட்டுவதாக இருக்க முடியும்?

"குழந்தைகளிடமிருந்து உடல், உள்ளம், ஆன்ம உணர்வு ஆகியவற்றில் சிறந்தவற்றை ஒருங்கே வெளிக்கொணர்வதுதான் கல்வி" எனத்தான் நம்புவதாகக் காந்தியடிகள் கூறுகிறார். அத்தகைய ஒரு கல்விமுறையில் முட்டாளென்று ஒருவனை முத்திரை குத்தி ஒதுக்க முடியுமா? நீ எதற்குமே இலாயக்கற்றவனென்று சொல்லி முகம் முறிக்க முடியுமா? அத்தகையதொரு வேலையைத் தான் இன்றைய தேர்வுமுறை செய்து வருகிறது. கற்றுக் கொள்ளுதல் என்பதை ஆனந்தமானதொரு விஷயமாகக் கருதப்படுவதற்கு மாற்றாகக் கசப்பாக்குகிறது. தேர்வு, தேர்ச்சி என்பதே ஒருவன் உயர்ந்தவனென்றும் மற்றவன் ஏதோவொரு வகையில் அவனை விடத் தாழ்ந்தவன் என்பதயுமே சுட்டிக்காட்டுகிறது.

மனனம் செய்தலென்பது ஒரு வகைத் திறமை. அதுவும் ஓரளவிற்குத் தேவை. இன்றைக்கு அலைபேசி வந்த பிறகு, நாம் எண்களை நினைவில் பதிக்கும் ஆற்றலை இழந்து விட்டதை நினைத்துப் பாருங்கள். நம் பாடத்திட்டத்திலோ மனனம் என்பதும் ஒரு வகைத் திறனாகக் கருதப்பட்டு, அத்திறனை வளர்த்துக் கொள்ளும் பொருட்டுத்தான் மனப்பாடச் செய்யுள் என்ற வகையில் பாடல்களையும் அறிவியல், கணித விதிகளையும் கொடுத்திருக்கிறார்கள். இது தவிர, கூர்ந்தறிதல், சிந்தித்தல், காரண காரியமுணர்தல், கவனித்தல் எனப் பல வகையான திறன்கள் பாடத்திட்டத்திலே பேசப்படுகின்றன. ஆனால், தனியார் பள்ளிகள் கரையான் புற்றுகளெனத் தமிழகத்தை ஆக்கிரமித்தபிறகு புரிந்து கொள்ளாமலே மனப்பாடம் செய்தல், கணிதக் கணக்குகளைக் கூட அப்படியே மனனம் செய்து எழுதுதல், புத்தகத்தில் உள்ளதை அச்சுப் பிசகாமல் எழுதுதல் ஆகியவையே திறமைகளாகத் தவறான புரிதலோடு மதிப்பெண்ணை நோக்கி ஓடும் பந்தயக் குதிரைகளெனத் தயார் செய்யப்பட்டனர் நம் மாணவர்கள். 100% தேர்ச்சி என்பதே முழுமையான கல்விக்கான அளவுகோல் என்ற கருத்து திட்டமிட்டே உருவாக்கப்பட்டது. ஆடம்பரமான கட்டிடங்கள், விலை உயர்ந்த வண்ணமயமான சீருடைகள், நுனிநாக்கு ஆங்கிலம் ஆகியவற்றை உள்ளடக்கிய பள்ளிகளே சிறந்த பள்ளிகள் என்ற மாயத் திரை விரிக்கப்பட்டது. அந்த வலையில் விழுந்த பெற்றோர்களின் தொடர்ச்சியான ஓட்டத்தில் இன்றைக்கு அரசு பள்ளிகளும் 100% தேர்ச்சி என்னும் இலக்கை நோக்கி ஓடத் தொடங்கியுள்ளது, தவறான முறையில்.

அப்படியென்றால் 100% தேர்ச்சி தேவையில்லையா என்னும் கேள்வி எழும். தேவைதான். அது எப்படிப் பெறப்படுகிறது என்பதில்தான் இருக்கிறது சூட்சுமம். பல தனியார் பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களே எடுக்கப்படுவதில்லை என்பது வருந்தத்தக்க செய்தி. ஏனெனில் அடுத்த வகுப்புக்கான தரத்தை இந்த வகுப்பில் தான் மாணவர்கள் அடைகிறார்கள். அந்தப் பாடங்களையே படிக்காமல் அடுத்த நிலைக்குச் செல்வதென்பது அவர்களுக்கு நன்மை செய்யாது. தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஒரே பாடத்தை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கும் ஒரு வருடம் படிக்கும் மாணவனுக்கும் நிச்சயம் மதிப்பெண் வேறுபாடு வரும்தானே. புரியாமலே மனப்பாடம் செய்வதால் ஏதேனும் பயன் விளையுமா? சாலிப் பயிராக அன்றோ நிற்கும்.
மதிப்பெண் போட்டியில் அடுத்தபடியாக, தேர்வுகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள ஆசிரியர்களே பிட் போடுதல், காப்பி அடிப்பதைக் கண்டும் காணாமல் இருத்தல், ஒரு மாணவரின் தாளை அடுத்தவருக்கு மாற்றித் தருதல், ஒரு மதிப்பெண் வினாக்களின் விடைகளை தேர்வறையிலே உரக்கச் சொல்லுதல் எனப் பல வழிமுறைகளுண்டு. அந்தப் போட்டியின் அடுத்த நிலைதான் விடைகளை ஆசிரியரைக் கொண்டே எழுதச் செய்து நகலெடுத்து அனைவருக்கும் தேர்வறையிலேயே வழங்குதல். இவற்றுக்கெல்லாம் ஒருவரை மட்டும் பொறுப்பாக்க முடியாது. கல்வித் துறை சார்ந்த அதிகாரிகள், பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர், ஆசிரியர் என இந்தக் குற்றத்தில் அனைவருக்கும் பங்குண்டு. இவர்களே செய்வதால் இதைப் பெரிய தவறாக உணராத மாணவனிடமிருந்து சமுதாயம் என்ன ஒழுங்கை எதிர்பார்க்கமுடியும்? அவர்தம் வாழ்நெறியில் நேர்மைக்கு என்ன இடம் இருக்கும்?

உணரப்படாமல், புரியாமல் எழுதும் இந்தத் தேர்வுகள்தான் மாணவர்களின் அடுத்தகட்டக் கல்வியை, வாழ்வை நிர்ணயம் செய்வதாக உள்ளது என்பது எவ்வளவு அநியாயம்? நவீன கட்டமைப்புகளைக் கொண்ட மேல்தட்டு வர்க்கத்தினருக்கான பள்ளி, ஓரளவு வசதி கொண்ட மத்தியதரத்தினருக்கான பள்ளி, சாதாரண மக்களுக்கான அரசுப் பள்ளி என்று தான் இன்று பள்ளிகள் பிரிக்கப்படுகின்றன. அதிலும் நம் மாநிலத்தில் மட்டும்தான் சிபிஎஸ்இ, மெற்றிகுலேஷன், ஆங்கிலோ இண்டியன், ஸ்டேட் போர்டு என்று கல்வியின் தரம் வெவ்வேறு வகையாக உள்ளது. பல அறிஞர்கள் பன்னெடுங்காலம் இந்த ஏற்றத்தாழ்வைப் பற்றிப் பேசித் தான் இன்று சமச்சீர்க் கல்வி கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதுவும் சமச்சீர்க் கல்வி அல்ல; பொதுக் கல்விதான். அதற்குள்ளும் தனியார் பள்ளி முத(லை)லாளிகள் புகுந்து புறப்படும்வகையில் எல்லா ஓட்டைகளும் வைத்துத் தான் கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்தனை சிக்கல்களை, அகழிகளைத் தாண்டித்தான் நம் மாணவர்கள் மதிப்பெண் பெற்று வருகிறார்கள். நகர்ப்புற மாணவருக்கும் கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவருக்கும் பாரிய வேறுபாடு இருக்கும். முதல் தலைமுறையாகக் கல்வி வாய்ப்புப் பெறுபவரும் இன்ன பிற வகையில் பின் தங்கிய மாணவர்கள் எல்லாம் சேர்ந்துதான் பொதுத்தேர்வு என்னும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறார்கள். இது எப்படி சமமான போட்டியாக இருக்க முடியும்? வசதி வாய்ப்புகளைப் பெற்ற மாணவர்களே குறுக்கு வழிகளின் மூலமாக மேலும் மதிப்பெண் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இம்முறைகேட்டிற்குப் பெற்றோரும் பள்ளி நிர்வாகமும் கூட உறுதுணையாகவும் உடந்தையாகவும் இருக்கும் பேரவலமும் இன்றைக்குப் பரவலாக நடக்கிறது. இவர்களையெல்லாம் தாண்டி எப்படி எந்த வசதியுமில்லாத ஒரு மாணவர் தொழில்நுட்பப் படிப்புகளை நோக்கி முன்னேற முடியுமென்பதைச் சிந்திக்க வேண்டும்.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஓர் ஒழுங்கு இல்லை. மதிப்பெண் போடும் முறையில் ஆசிரியருக்கு ஆசிரியர் வேறுபடுகிறார் என்று சொல்லி ஒற்றைச் சொற்களில் விடைதரும் முறையைக் கொண்டு வந்தனர். இதை அடியொற்றித்தான் ஒற்றைச் சொல்லாகவும் விரிவாகவும் பதிலளிக்கக் கூடியதாக இருந்த வங்கித் தேர்வு, அரசுப் போட்டித் தேர்வு, மத்திய அரசுத் தேர்வு ஆகியவற்றையெல்லாம் இன்று வெறும் ஒற்றை வார்த்தை விடைகளைத் தேர்வு செய்வதாக மட்டுமே மாற்றி விட்டனர். விரிவான வகையிலும், சொந்தமாக எழுதும் திறனை வளர்க்கும் வகையிலும் இருந்த கட்டுரை வடிவக் கேள்விகளையெல்லாம் எடுத்துவிட்டு இன்று ஒற்றைச் சொற்களை எழுதுவதன் மூலமாகவே தேர்ச்சி அடையலாம் என்னும் நிலை உள்ளது. இது மாணவர்களின் எழுத்தாற்றலை அறவே அழித்து விட்டது. வாக்கியங்களை அமைத்து எழுதவே தெரியாத ஒரு மாணவர் கூட்டம் உருவாகி விட்டது. இவர்களால் புதியதொரு சொல்லையோ, தன் சிந்தனையில் எழுந்த ஒரு வாக்கியத்தையோ எழுத முடியாது. வழிகாட்டி நூல்களில் உள்ளதை அப்படியே படித்து ஒரு சொல்லும் மாற்றாமல் எழுதும் பயிற்சி மட்டுமே பள்ளிகளில் இன்றைக்கு வழங்கப்படுகிறது. இப்படியான ஒரு தவறான தேர்வு முறையால் மாணவர்கள் தங்கள் திறன்களை இழக்கிறார்கள், தேர்வு பயத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதே நிதர்சன உண்மை.

தன் பிள்ளைதான் நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற பெற்றோரின் ஆசைக்கும் தன் மாணவனே முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற பள்ளியின் போட்டி வெறிக்கும் ஆளாகி, கண் கட்டப்பட்ட குதிரைகள் போல எதை நோக்கி ஓடுகிறோம் என்ற தெளிவோ அறிவோ இன்றி அவர்கள் போட்ட பாதையிலே ஓடிக்கொண்டிருக்கின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர். மதிப்பெண் மட்டுமே குறியாகக் கொண்டு ஓடுவதனாலேயே அதற்காக எதற்கும் துணியும் நிலைக்குச் சென்று மனிதத்தன்மை இழந்து, அறிவிழந்து அஃறிணைகளைப் போல மாறிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் மொழி, நாடு எதன் மீதும் பற்றற்றவராய் சுயநலமிகளாய் மாறி வருவதற்கு நாம் தானே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாத மாணவக் கூட்டம் தவறான கல்வி, தேர்வு முறையால் லெகான் கோழி இனத்தைப் போல செயற்கை முட்டைகளை இட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நடைமுறை வாழ்வின் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு உதவுவதற்குப் பதிலாக தவறான தேர்வுமுறையின் மூலமாக மாணவர்களைக் கடுமையான உளவியல் அழுத்தத்திற்குள்ளாக்குவதுடன், மன நோயாளிகளாகவும் மாற்றி விடுகிறது. சிந்திக்கும் ஆற்றலே ஒருவரைச் சிறப்பாக்கும். சிந்திக்கும் ஆற்றலே மழுங்கடிக்கப்படும் தேர்வு முறையே இன்றைக்கு இருப்பதால் சவலைப் பிள்ளைகளாய் நம் மாணவர்கள் மாறி விட்டனர். 35 மதிப்பெண் பெற்றவன் தேறியவன், 34 எடுத்தவன் தவறி விட்டவன் என்பது எவ்வளவு கேலிக்கூத்து. அதுவும் கல்வி பெரும் சூதாட்டமாக மாறி விட்ட இந்தக் காலத்தில் இந்த மதிப்பெண்களை எப்படி உணர்வது? நடைமுறையில் இருக்கும் தேர்வுமுறை மாணவரின் திறன்களைக் கண்டடைவதாகவோ, வளர்ப்பதாகவோ, ஊக்குவிப்பதாகவோ அல்லாமல் முடக்குவதாகவும் ஏற்றத்தாழ்வினை அப்படியே கொண்டு செல்வதாகவும் இருப்பதே இன்றைய கல்வியாளர்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால்.

ஒவ்வொரு வருடமும் தேர்வரக்கன் இளம்உயிர்களைப் பலியாக எடுத்துக் கொண்டே இருக்கிறான். தவறான நடைமுறைத் தேர்வுமுறை மாற்றப்பட வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும். தவறு செய்யும் மாணவனை விடவும் முறைகேட்டில் ஈடுபடும் ஆசிரியருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.

"காற்றில் அலைக்கழிக்கப்படும் தூசு போல ஒன்றுக்கும் உதவாதவன் என்று எவருமே இருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் ஒளிர வேண்டும், கோடானுகோடி விண்மீன் திரள்கள் ஒளிருவது போல" என்று சோவியத் நாட்டைச் சேர்ந்த கல்வியாளரான வாசிலி சுகோம்லின்ஸ்கி கூறுவதன் அடிப்படையில் தேர்வுமுறை அமைந்து முரண்கள் களையப்பட்டால் கல்விப் பூங்காவில் அறிவுள்ள மலர்களை நாமும் பறிக்கலாம்; தொடுக்கலாம்; மகிழலாம்.

Tuesday, May 8, 2012

பள்ளியெனும் பெருஞ்சிறை

நன்றி: பாவையர் மலர்

நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை. ஆரம்பப் பள்ளிகளில் உள்ளது என்று சொன்னார் அபுல் கலாம் ஆசாத். மாணவர்களே நாட்டின் வருங்காலத் தூண்கள் என்பதையே இவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். ஆனால் நாளைய தலைமுறை இன்று பள்ளிகளில் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் நமக்கு மிஞ்சுவது ஏமாற்றமே. அண்மையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேதியியல் மற்றும் இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியையாகப் பணியாற்றிய உமா மகேசுவரி, அவரிடம் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவனாலேயே கொலை செய்யப்பட்ட நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆசிரியர் பணி மீதிருந்த காதலால் தனக்குக் கிடைத்த வங்கிப் பணியையும் மறுத்து விட்டு, ஏழு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியைக்கு கிடைத்த இந்த முடிவு அதிர்ச்சியானதுதான். ஆனால் கொலை செய்ய நீண்ட அந்தக் கைகள் மாணவனுடையது மட்டும் தானா என்று நாம் சிந்திக்க வேண்டிய நேரமிது. அவருடைய உடலில் சரமாரியாக விழுந்த அந்தக் குத்துகள், நம் கல்வி முறையின் மீது, ஏனைய ஆசிரியர்கள் மீது, சமூகத்தின் மீது, மாணவர் நலனில் அக்கறை செலுத்தாத அரசின் மீது என்று நம் அத்தனை பேருக்கும் அந்தக் குத்து விழுந்திருக்கிறது. இந்தக் கொலையில் அனைவருக்கும் பங்குண்டு என்பதை நாம் கவனப்படுத்த வேண்டும்.

தவறு செய்த (கொலை செய்த என்று எழுதவும் கரம் நடுங்குகிறது) அந்த மாணவனின் வீட்டுச் சூழலைக் கவனித்தால் மகிழுந்திலேயே பள்ளி வந்து செல்லுமளவுக்கு வசதியானவன். மூன்று பெண் குழந்தைகளுக்கு இடையில் ஒரே ஆண் பிள்ளை எனும் செல்லம். ஒவ்வொரு நாளும் 100 ரூபாயைச் செலவுக்குக் கொடுக்கும் பெற்றோர். வீட்டில் தனி அறை, கணிணி வசதி. மிக அமைதியானவன். யாருடனும் கலந்து பழகாத தன்மை. ஆசிரியருக்குப் பயந்து அவ்வப்போது பள்ளிக்கு விடுப்பு எடுப்பவன். அந்த மாணவன் குறித்து ஊடகங்கள் நமக்கு வழங்கிய சித்திரம் இது.

இன்றைய மாணவன் கடும் உளவியல் சிக்கல்களில் தவித்துக் கொண்டிருக்கிறான். பெரும்பாலான பள்ளிகளில் இது கவனிக்கப்படுவதேயில்லை. மேற்கத்திய மனோபாவத்துடன் வாழத் துடிக்கும் பெற்றோர், மகனு/ளுக்கு எல்லா வசதிகளையும் செய்து தருகிறார்களே தவிர, தங்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கிப் பேசுவது, அவர்களுடன் விளையாடுவது பற்றிச் சிந்திப்பதில்லை. பள்ளிகளைப் பொறுத்தவரையில் 100% தேர்ச்சியை நோக்கிச் சவுக்கை சுழற்றும் ரிங் மாஸ்டர்களாக இருந்து கொண்டு மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்திக் கொண்டிருக்கின்றனர். மாணவர்களை வியாபாரப் பொருட்களாக மட்டுமே பார்க்கும் ஊடகங்கள், தம் பொறுப்பை மறந்து, துறந்து இழிதொழில் செய்து கொண்டிருக்கின்றன. பள்ளியில் இருக்கும் பெற்றோரே ஆசிரியர் என்பதை மறந்தே போன ஆசிரியர், மாணவனது உள நலம் பற்றிச் சற்றும் சிந்திக்காமல் மதிப்பெண் அட்டையை மட்டும் வைத்துக் கொண்டு, உரையாடலேதுமின்றியே அவனைக் குற்றம் சாட்டி விட்டு நகர்கிறார். அவனைச் சுற்றியிருக்கக் கூடிய சமூகம் அவனை மேலும் பல தூண்டில்களோடு வீழ்த்தக் காத்திருக்கிறது. ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் கல்விக்காக அதிகத் தொகை ஒதுக்கு அக்கறையோடு கவனிக்க வேண்டிய அரசாங்கம், மாணவர் நலன் பற்றிக் கிஞ்சித்தும் சிந்திக்காமல் அவ்வப்போது எழும் பிரச்சனைகளைத் திசை திருப்பிச் செல்கிறது. மாணவனின் உடல், உள நலம் பற்றியும் எதிர்காலம் பற்றியும் சற்றும் பிரக்ஞையற்ற மண் போன்ற கல்வித்திட்டம் அவன் காலைப் பிடித்திழுக்கிறது. அதன் பின்னொட்டாய்த் தேர்வுகள்.

இதனால்தான் ஆசிரியை உமா மகேசுவரி கொல்லப்பட்டபோது பெரும் அதிர்ச்சிக்குள்ளான நிலையிலிருந்து வெளி வருவதற்குள் விருது நகரில் ஆசிரியரை மிரட்டிய சம்பவமும் நிகழ்ந்தது. காலை வழிபாட்டிற்குச் செல்லாமல் வகுப்பறையிலேயே அமர்ந்திருந்த இரண்டு 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஆசிரியர் கண்டித்தபோது, எங்களைக் கண்டித்தால் சென்னையில் நடந்தது இங்கும் நடக்கும் என்று அவர்கள் ஆசிரியரை மிரட்டியிருக்கிறார்கள். ஏற்கெனவே நடந்திருந்த கொலையால் மிரண்டிருந்த ஆசிரியர் சமூகம், வெகுண்டெழுந்து, அந்த மாணவர்கள் மீது புகார் கொடுத்ததால் அவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். பள்ளி மாணவர்களாய்த் தேர்வு எழுத வேண்டியவர்கள் இப்போது தனித் தேர்வர்களாய்த் தேர்வு எழுதிக் கொண்டிருப்பர். அரசை எதிர்த்து ஊதிய உயர்வுக்காகவும் வேறு பயன்களுக்காகவும் போராட்டம் நடத்திய ஆசிரியர் சமூகம் அங்கு, மாணவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது. தான் செய்வது இன்னதென்பதை உணராது மாணவன் செய்யும் தவறுக்கு இத்தனை கடுமையான தண்டனை தேவையா என்று அந்த ஆசிரியர் ஏதேனும் ஒரு கணத்தில் இதைச் சிந்தித்திருந்தாலும் தவிர்த்திருக்கலாம்.

ஆசிரியரும் மாணவரும் பள்ளியில் எட்டு, ஒன்பது மணி நேரத்தை ஒன்றாகவே கழிக்கின்றனர். ஒரு நாளின் மிக முக்கியமான, மனிதன் மிகச் செயலூக்கத்துடன் இருக்கும் பொழுதுகளை அவர்கள் ஒன்றாகக் கழிக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு நேர்க் கோட்டில் சற்றே பெற்றோர் மனோபாவத்துடனும், ஆசிரியராயும் கொஞ்சம் நட்பாயும் இருக்க வேண்டிய ஆசிரியர், மாணவர் உறவு இன்று ஆசிரியர் X மாணவர் என்று விரோத பாவத்துடன் எதிர் எதிர் வரிசையில் நிற்க வைக்கப்பட்டிருப்பது யாருடைய பிழை என்பதை மாணவனை விடவும் ஆசிரியரே மறுபரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.

நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் மாணவர் கையில் அலை பேசியும், அறையில் கணிணியும் அமர்ந்திருக்கிறது. ஆனால் அவர்களின் கரம் பற்றிப் பேசவும் உணர்வுகளால் அவர்களின் உள்ளம் தொடவுமான உறவுகள் ஏதுமின்றி அலைக்கழிக்கப்படுகின்றனர். அவர்கள் விளையாடும் கணிணி விளையாட்டுகளில் கூட கொலையும் வன்முறையும் புகுந்திருப்பதை, வீட்டின் நடுவில் அமர்ந்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியும் வன்முறையைப் போதிப்பதை எவரேனும் கவலையுடன் யோசிக்கிறார்களா?
ஒற்றைக் குழந்தையாய், அணுக்குடும்பங்கள் பெருகி வரும் இவ்வேளையில் குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்தல், சொல்வதையெல்லாம் அப்படியே நம்புதல், பெற்றோரின் நேரமின்மை ஆகியவை ஏமாற்றத்தைப் பொறுத்துக் கொள்ளும் பக்குவத்தை அவர்களுக்கு வழங்குவதில்லை. உலகச் சுகாதார அமைப்பு மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சியில் குறிக்கோளுடன் வாழ்வது எப்படி, பொறுமை, சகிப்புத் தன்மை, ஒழுக்கம் போன்ற பத்து விஷங்களில் பயிற்சி அளிக்க வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது.

கசடு அறக் கற்ற கல்வி இன்று பணத்தைத் துரத்திச் செல்லும் கல்வியாய் மாறி விட்டது. பெற்றோர், தன் மகன் முதல் மாணவனாய் வர வேண்டும்; பணம் கொழிக்கும் படிப்புகளைப் படிக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். மாணவர்களும் தொழில்சார் படிப்புகளே உயர்ந்தது என்ற மனோபாவத்துடன் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை நோக்கி நகர்கின்றனர். இதைப் பயன்படுத்திக் கொள்ளும் பள்ளி நிர்வாகமும் பெற்றோரிடம் அதற்கான கல்விக் கட்டணமாகப் பெரும் தொகையைக் கறந்து விடுகிறது. உண்மையான கல்வி இவர்கள் கையில் சிக்காமல் வேறெங்கோ இருப்பதைப் பார்க்கையில் ஒரு இதழ்க்கடை முறுவலுடன் நகர்வதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலையில் நாம் இருக்கின்றோம்.

இரண்டு நாட்களாகத் திட்டமிட்டு, கத்தி வாங்கி, அவர் தனியாக இருப்பார் என்பதை அறிந்து அவரிடம் சென்று அவரைக் கத்தியால் குத்திய அந்த மாணவனின் மனத்தில் வன்முறையைத் தூண்டியது யார் என்ற கேள்விக்கு மேற்சொன்ன எல்லோரையும்தான் சுட்டிக் காட்ட வேண்டும். பதினான்கு முறை அந்தச் சிறுவனுக்குப் படிப்பு வரவில்லை என்பதை, சரியாகப் பள்ளிக்கு வரவில்லை என்பதை, தேர்ச்சி பெற முடியாது என்பதை அந்த ஆசிரியர் சுட்டிக் காண்பித்திருக்கிறார். தேர்ச்சி அட்டையிலும் பள்ளி நாட்குறிப்பிலும் திரும்பத் திரும்பப் பதியப்பட்ட இந்தக் கருத்து அந்த மாணவனின் உள்ளத்தைப் பாதித்திருப்பதும் அதை எடுத்துச் சென்று பெற்றோரிடம் கையெழுத்துப் பெற்று வர வேண்டுமென்ற உத்தரவில் அவன் அவர்களிடம் வாங்கி இருக்கக் கூடிய திட்டு, அடி ஆகியவையும் அவன் அதற்கு முதல் நாள் பார்த்த திரைப்படமும் தன்னால் படிக்க முடியாது என்று கேலி செய்த அவனுடைய இந்தி புத்தகமும், இவை எல்லாமும்தான் ஆசிரியர் மீதான கத்திக்குத்துக்குக் காரணம்.

கற்பதும் கற்பிப்பதும் மட்டுமே நடக்கும் பயிலரங்கமல்ல பள்ளிக் கூடம். அனைவருடனும் கூடி மகிழ்ந்து, விட்டுக் கொடுத்து, விளையாடி உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலைப் பயிலும் இடமும்தான். கல்வியை மட்டிலும் கற்பிக்க இன்று பல தனிப் பயிற்சிக் கல்லூரிகள் இருக்கின்றன. விளையாட்டு, ஓவியம், பாட்டு, நடனம், நன்னெறிக் கல்வி, பண்பாட்டு நிகழ்ச்சிகள் என இன்னோரன்ன கல்விகளும் மாணவனுக்குத் தேவையாய் இருப்பதை யார் யாருக்கு உணர்த்துவது? இவை தானே மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கி, மனத்தை விசாலமாக்கும் வாயில்கள். இந்த வாசல்களை அடைத்த ஒரு பெருஞ்சிறையாகக் கல்வி வளாகத்தை மாற்றியது யாருடைய குற்றம்? படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை; அது வாழ்வின் ஒரு பகுதிதான் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம். கோடை விடுமுறையை கூட விடாமல் வீட்டுப் பாடங்களைப் பெரும் சுமையாய்க் கொடுப்பதும் 10, 12 வகுப்பு மாணவர்களின் மொத்த நாட்களையும் களவாடி அவர்கள் கையில் புத்தகத்தைத் திணிப்பதும் உண்மையான கல்வியைக் கொடுக்குமா? இப்படிப் பயிலும் மாணவர்களின் மனத்தில் கல்வி சார்ந்து என்ன மாதிரியான பிம்பம் உருவாகும்?

மாணவனைச் சிறு வயதிலிருந்தே கவனிக்கும் ஆசிரியர், அவனிடம் இருக்கும் சிறு வன்முறையையும் கவனித்து அக்கறையாய்ப் பேசி, பெற்றோரிடம் அறிவித்து, அவன் வாழ்வை மடைமாற்றம் செய்வதாலேயே மாதா பிதா குரு தெய்வம் என்று பெற்றோருக்கு அடுத்த நிலையில், தெய்வத்துக்கும் முன்னர் வைக்கப்பட்டனர் ஆசிரியர் பெருமக்கள். ஆசிரியப் பணி அறப்பணியாகக் கருதப்பட்ட கால்மொன்று இருந்தது. இன்றைக்கு இப்பணியில் புகுந்துள்ள சில காளான்களால் ஆசிரியர் சமூகமே குற்றவாளிக் கூண்டில் தலை குனிந்து நிற்க வேண்டிய அவல நிலை.

ஒரு பள்ளிக் கூடம் கட்டப்படுகிறதென்றால் பத்து சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்று கூறுவார்கள். அதனால்தான் நம் பாரதியும்,
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்"

என்று எழுத்தறிவித்தலை ஏற்றிப் போற்றிப் பாடுகின்றார்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது. அந்த மிருகத்தை அடியோடு ஒழித்து, நல்ல பண்புகளைப் புகட்டுமிடமாகப் பள்ளிகள் இருக்க வேண்டுமேயன்றி அந்த மிருகத்தைத் தூண்டி விட்டுக் கொலைக் களத்துக்கு அனுப்பும் பணியைச் செய்தல் தகாது. பள்ளிக் கூடத்தின் நீண்ட, நெடிய, பிரம்மாண்டமான சுவர்களுக்கு நடுவில் எந்த நுண்கலைகளுக்கும் விளையாட்டுக்கும் இடமில்லாமல் தேர்வுகள் நடத்தி மதிப்பெண் அட்டை கொடுப்பவராக மட்டும் ஆசிரியர் இருத்தலும் அந்த மதிப்பெண் அட்டையில் கையெழுத்திடுபவராக மட்டுமே பெற்றோர் இருப்பதுமே இத்தகைய கேடுகளுக்கு முதன்மைக் காரணம்.

பல ஆண்டுகளாக மாணவர் தற்கொலைகள் நடந்து, நடந்து அது நம் மனத்துக்குப் பழக்கப்பட்ட செய்தியாகி விட்டது. அவை இன்றைக்கு அதிர்ச்சியைக் கொடுப்பதில்லை. இப்போது கத்தி நம் பக்கம் திருப்பப் பட்டிருக்கிறது. அதன் முதல் குறி ஆசிரியர். இன்றைக்கு உமா மகேசுவரி. இன்னும் இருக்கும் வரிசையில் ஒவ்வொருவராய்க் குறி பார்க்கப்படுவர். இனியும் தாமதித்தால் நாம் நம் பிள்ளைகளை இழப்போம்; பிள்ளைகள் தம் குழந்தைமையை இழப்பார்கள்; நாடு ஒரு தலைமுறையையே இழக்கும். இனியாகிலும் சிந்திப்போமா நாம்?      
    


-    தி. பரமேசுவரி

Thursday, March 15, 2012

நீதிக்கட்சி என்னும் தெலுங்கர் நலவுரிமைச் சங்கம்

நன்றி : தடாகம்.காம்

தமிழர் x தெலுங்கர் என்ற இனச்சிக்கலைப் பற்றிப் பேசிய கட்டுரையை ம.பொ.சி x திராவிடம் என்ற குறுகிய பார்வையில் சுருக்கிப் பார்த்து விட்டு, தன் உளச்சுருக்கம் அறியாமல் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியவர்களின் சிறு புள்ளிகளைப் பெரிதாக்கிப் பேசுவதன் மூலம் வரலாற்றை உணர முடியாது. சிறுபிள்ளைத்தனமாய் வரலாற்றைத் திசை திருப்புவதாயும் திரிப்பதாகவுமே அமையும்.

தமிழ்நாட்டில் சென்ற நூற்றாண்டில் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி என்னும் தெலுங்கர் கட்சியின் நீட்சிக் கட்சிகள் எவ்வாறு இன்றுவரை தமிழ் நாட்டை, தமிழர் நாட்டைத் தம் வேட்டைக்காடாய் மாற்றிக் கையகப்படுத்தி இருக்கிறது என்பதை உணர்த்துவதே கட்டுரையின் நோக்கம். அதைப் பேசாமல், திசை திருப்பும் துரோகத்தை எப்போதும் அனுமதிக்க முடியாது.

படித்த இளைஞருக்கு வேலை தேடித் தரும் நிறுவனமாகவே இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை ஹ்யூம் துரையால் தோற்றுவிக்கப்பட்டது. அப்படித் தென்னாட்டில் பார்ப்பனரல்லாதாருக்கு உயர் உத்தியோகங்களைப் பெற்றுத் தரும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டதே தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்று அழைக்கப்பட்ட நீதிக்கட்சியாகும்.

1874 இல் சென்னை மாகாணத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேலாளராகப் பணி புரிந்த டபிள்யூ. ஆர். கார்னிசு, இந்தியர்கள் பங்கேற்கத் திறந்து விடப்பட்டுள்ள எல்லாக் குடிமையியல் உயர்துறைகளிலும் பிராமணத்தன்மை பெரும்பான்மையாக நிறைந்தோங்கி உள்ளது என்று குறிப்பிடுகின்றார். அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் வலுவாக அமர்ந்திருந்ததை, சென்னை மாகாண அரசு 1912 இல் வெளியிட்ட எண்ணிக்கையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

அரசுப் பதவி ஆயினும், நிலவுடைமையாளராயினும், அக்காலத்தில் பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக தெலுங்கு ரெட்டிகளும் நாயுடுக்களுமே அதிகார சாதிகளாக விளங்கினர். இவர்களுக்குப் பின்னர்தான் மற்ற சாதியாரும் இனத்தாரும் இருந்தனர். பார்ப்பனர் ஆதிக்கத்தைக் குறைக்கவும் சமூகத்தில் பிற்பட்ட நிலையில் இருந்த சாதியாரை மேம்படுத்தவும் 1854 இலேயே ஆங்கிலேயர் பல திட்டங்களைக் கொண்டு வந்தனர். இலவசப் பள்ளிப்படிப்பு, பள்ளிக்கட்டணத்தில் சலுகை, ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளி துவங்க நிதியுதவி, சாதி அடிப்படையில் எந்தவொரு மாணவனுக்கும் அனுமதி மறுக்கக் கூடாது என்னும் ஆணை எனப் பல வகையிலும் பின் தங்கியிருக்கும் மக்களை முன்னேற்றும் திட்டங்கள் தீட்டப்பட்டன.

1909 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு, அரசியல் சீர்திருத்தங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டபோது ஒடுக்கப்பட்ட, கீழ்சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து சர். பிட்டி தியாகராயரும் டாக்டர் டி.எம். நாயரும் கருத்துச் சொன்னார்கள். ஆனால் இவர்களால் தொடங்கப்பட்ட நீதிக்கட்சிதான் இன்றைக்கு வகுப்புவாரி ஆணையை வெளியிட்டுச் சென்னை மாகாணத்திலுள்ள பார்ப்பனர் அல்லாதாருக்குச் சமூக நீதி கிடைக்க வழி செய்ததாகப் போற்றப்படுகின்றது?!

1915 இல் மாநகராட்சித் தேர்தலில் பிட்டி தியாகராய செட்டி ஒரு பார்ப்பனரால் தோற்கடிக்கப்பட்டதும், மத்திய சட்ட மேலவைக்கான தேர்தலில் பனகல் ராஜா கே.வி. ரங்கசாமி அய்யங்காரால் தோற்கடிக்கப்பட்டதும் ஆட்சி அதிகாரத்தில் அங்கம் பெற்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு, தோல்வியுற்று அதிகாரமின்றி இருந்ததை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில், இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் எனும் மத்திய டெல்லி சட்ட மேலவைத் தொகுதித் தேர்தலில் டி. எம். நாயரும் (தரவா மாதவன் நாயர்) வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி எனும் பார்ப்பனரிடம் தோல்வியுற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பார்ப்பனர் x தெலுங்கர் பகைதான் நீதிக் கட்சியின் தோற்றத்துக்கு அடிகோலியதேயன்றி, பிற்பட்ட அடித்தட்டு மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றம் குறித்த அக்கறையினால் அல்ல. அக்காலகட்டத்தில் முதலியார், பிள்ளை போன்ற ஒரு சில முன்னேறிய சாதிகள் தவிர ஏனைய தமிழ்ச்சாதிகளில் பெரும்பாலோர் கல்வியற்றவர்களாய், நிலமற்றவர்களாய், தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவர்களாயும் விழிப்புணர்வு அற்றவர்களாகவும்  இருந்தனர். இந்நிலையைப் பயன்படுத்திக்கொண்ட தெலுங்கர், பார்ப்பனர்/பார்ப்பனரல்லாதார் என்னும் முரணைத் தூக்கிப் பிடித்துத் தமிழர்களைப் பிரித்தனர். ஆனால் ஆந்திர மகாசபை என்னும் பெயரால் அவர்கள் ஒன்றிணைகையில் கட்சி, சாதி என எள்ளளவும் பேதமின்றி இன அடிப்படையில் தம் உரிமைகளையும் அதற்கும் மேலான பதவிகளையும் பெற்று அனுபவித்தனர்.

ஆந்திர மகாசபையின் கீழ் தெலுங்கர் பார்ப்பனர்/பார்ப்பணரல்லாதார் என்ற வேறுபாடின்றி இணைந்திருந்தனர். சாதிரீதியான ஏற்றத்தாழ்வுகளை மொழியும் இனமும் வென்றெடுத்தன. ஆந்திரர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டுமென தேசாபிமானி பத்திரிகை வலியுறுத்தியது. தனி ஆந்திரக் கோரிக்கையை வலியுறுத்தி 1908 இலிருந்து ஆந்திரா என்ற பத்திரிகையும் வெளியிடப்பட்டது.

1913 ஆம் ஆண்டு பார்டிலா என்ற இடத்தில் முதல் ஆந்திர மாநாடு நடைபெற்றது. பட்டாபி சீதாராமையா, வல்லூரி சூரிய நாராயணா, கொண்டா வெங்கடப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

1914 இல் இரண்டாவது ஆந்திர மாநாடு விஜயவாடாவில் நடைபெற்றது. அய்யடேவரா, காலீஸ்வரா ராவ், அய்யங்கி வெங்கட ராமண்ணயா ஆகியோர் முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டனர்.

1915 ஆம் ஆண்டு நடந்த மூன்றாவது மாநாட்டிற்குப் பனகல் ராஜா (பனங்கன்டி ராமராய நிங்கார்) தலைமையேற்றுத் தனி ஆந்திரக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார்.

1916 இல் காக்கிநாடாவில் நடந்த நான்காவது ஆந்திர மகாசபைக் கூட்டத்திற்கு மச்சேர்ல ராமச்சந்திர ராவ் தலைமையேற்றார். ஏ.பி. பாத்ரோ (அனெப்பு பரசுராம் தாஸ் பாத்ரோ), கே. வெங்கிட ரெட்டி நாயுடு ஆகியோர் தனித் தெலுங்கு நாடு உருவாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.

தமிழ்நாட்டில் பார்ப்பனர்/பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் பங்கு பெற்ற தெலுங்கர், தாம் துவக்கிய தனி ஆந்திர இயக்கத்தில் அப்பாகுபாடு ஏதுமின்றிப் பங்கு கொண்டதையும் தனித் தெலுங்கு நாட்டைத் தீவிரமாக வலியுறுத்திய பனகல் அரசர், ஏ.பி. பாத்ரோ, கே.வி. ரெட்டி நாயுடு ஆகியோர் நீதிக் கட்சியின் அமைச்சரவையில் பங்கு பெற்றதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நான்கு மொழியினர் கலந்து வாழ்ந்த சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரையுள்ள 17 ஆண்டுகள் ஆட்சி செய்தது நீதிக் கட்சி. அதன் ஆட்சியில் பதவி வகித்த ஐந்து முதல்வர்களும் தெலுங்கர்கள்.

1919 ஜனவரியிலேயே எழுத்தர்கள், துணை தாசில்தார், சார்பு நீதிபதிகள் நியமனத்தின்போது தமிழ், தெலுங்கு மொழியினருக்கும் அவரவர் விகிதாசாரத்திற்கு ஏற்ப வழங்கப்பட வேண்டுமென ஆணை 128 (2) பிறப்பித்திருந்தது. மேலும் மொத்தப் பதவிகளில் பார்ப்பனர்கள் 50% மேற்படாமலும் பார்ப்பனரல்லாதார் / முஸ்லீம்கள் 50%  குறையாமலும் நிரப்பப்பட வேண்டுமெனவும் அதே அரசு ஆணை தெரிவித்திருந்தது. இது சாதி மற்றும் இன ரீதியாக உரிமை பேசிய அரசாணை.

1921இல் நீதிக்கட்சி கொணர்ந்த அரசாணை 613 இல் சாதி, மத ரீதியாகத் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை அனுப்ப வேண்டுமென்று மாற்றம் செய்தது. தமிழ்/தெலுங்கர் என்ற விகிதாச்சாரம் திட்டமிட்டே மறைக்கப்பட்டது. இன அடிப்படை தகர்க்கப்பட்டு தெலுங்கர் பெரும்பான்மை எண்ணிக்கையில் நுழைய வழி வகை செய்யப்பட்டது. தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தராத, தெலுங்கர்களை மட்டுமே கொண்ட நீதிக்கட்சியிடமிருந்து நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

1922 ஆகஸ்ட் 15இல் இரண்டாவது இடஒதுக்கீட்டு அரசாணை 658 ஐ பனகல் ராஜா தலைமையிலான நீதிக்கட்சி வெளியிட்டது. தெலுங்கு மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும் தெலுங்கர்களுக்கே வேலை வாய்ப்பு என்பதுடன் முன்னரே அங்கு பணியிலிருக்கும் பிறமொழியாளர் பட்டியலைத் தயாரித்துக்கொண்டு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென்பது இதன் சாராம்சம். இந்த ஆணையுடன் தெலுங்கு, ஒரியப் பகுதிகளின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

1919 இல் ஆங்கில அரசு வெளியிட்டதும் 1922இல் பனகல் ராஜா வெளியிட்ட சிறப்பாணையுமே இன அடிப்படையிலானவை. இவை தெலுங்கு, ஒரிய மொழிப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

1929இல் சுப்பராயன் தலைமையிலான அரசு, இன அடிப்படையிலான ஒதுக்கீடு பற்றிப் பேசாத 1921 அரசாணையைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியது. இன்று வரையிலும் மாநில அரசு அளவில் உள்ள உயர் பதவிகள் உள்ளிட்ட அனைத்து வேலைகளிலும் பிற மொழியாளர் அமர்வதும் தமிழர்களின் வேலை வாய்ப்புகளைத் தட்டிப் பறிப்பதும் தொடர்கிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் அந்தந்த மொழி பேசும் இனத்தார்க்கே முதன்மை என்னும் சமூக நீதி சாத்தியப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மண்ணின் மைந்தர்களே வேலை வாய்ப்புகளில் முதன்மைப்படுத்தப்படும்போது தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் அறியாத பிற மொழியாளர் புற்றீசலென நுழைவதும் அடிப்படை மொழியறிவுக்கான தேர்வினைக் கூட இரண்டு வருடத்திற்குள் எழுதினால் போதுமென்னும் விதிக்குள் புகுந்து கொண்டு மொழியறியாமலே இங்கு சுகமாய்க் காலம் தள்ளுவதும் தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே புறக்கணிக்கப்படும் அவலமும் தொடர்கிறது.

தன் சிந்தனையில், செயலில் தெலுங்கு மக்களின் நலனையே எண்ணியிருந்த நீதிக்கட்சியினர் தங்களை ஏமாற்றிய வரலாற்றையறியாமல் இன்றைக்கும் அவர்களைச் சமூக நீதி காத்தவர்களெனப் பாராட்டி, நூற்றாண்டு விழாவையும் சிறப்பாக நடத்தத் தயாராகி விட்டார்கள் மரத் தமிழர்கள். உண்மையில் நாம் ஏமாந்ததற்குத்தான் நூற்றாண்டு விழா என்பது எத்தனை கேலிக்கூத்து.

புதிதாய் உருவாக இருந்த ஆந்திர மாநிலத்தின் தலைநகராய்ச் சென்னை இருக்க வேண்டும் என்று மாநகராட்சியில் பேசியவர் பிட்டி தியாகராய செட்டி. நீதிக்கட்சி தொடங்கியபோது அதன் கொள்கைப் பரப்புக்காக மூன்று மொழிகளில் நாளிதழ்களைத் தொடங்கினர்.

தமிழ் - திராவிடன்
தெலுங்கு - ஆந்திரப் பிரகாசிகா
ஆங்கிலம் - ஜஸ்டிஸ்

இந்த மூன்று நாளிதழ்களில் தெலுங்கு மொழியில் நடத்தப்பட்ட நாளேடு ஆந்திர என்னும் இனப்பெயர் கொண்டிருக்க, தமிழ் மொழியில் நடத்தப்பட்ட ஏடு மட்டும் திராவிட என்னும் மாயச் சொல்லைப் பெற்றிருக்கிறது. இதுதான் தெலுங்கர்களின் சமூக நீதி.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் பேசும் மாகாணத்தில் தோன்றிய நீதிக் கட்சி (ஜஸ்டிஸ் கட்சி?!) தன் கொள்கைப் பிரகடனத்தில் பிரதேச மொழிகளின் - அம்மொழி பேசும் இனங்களின் உரிமைகள் குறித்துப் பேசியிருக்க வேண்டும். மொழி வேறுபாடுடைய மக்களை இணைக்கும் எந்தக் கட்சியும் இது பற்றித் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு சிறு குறிப்பு கூட அக்கட்சியின் கொள்கைப் பிரகடனத்தில் இல்லை. தெலுங்கு மொழி தவிர்த்த பிற மொழி பேசுவோரின் உரிமை குறித்து அக்கட்சி மௌனம் சாதித்தது என்பதே கசப்பான உண்மை.

பார்ப்பனருக்கு எதிரான கட்சி என்ற பொய்க்குள் மறைந்திருந்த நீதிக்கட்சியின் ஆட்சியில்தான் இந்து அறநிலையப் பாதுகாப்பு மசோதா சட்டமானது. பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து தமிழ் நாட்டுக் கோயில்களை விடுவிக்கவே இச்சட்டமென்று சொல்லி நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அறநிலையக் குழுவின் முதல் தலைவராக சர். டி. சதாசிவ அய்யரும் சிறப்பு உறுப்பினராக என். கோபால்சாமி அய்யங்காரும் நியமிக்கப்பட்டனர்.

1920 முதல் 1937 வரை நீதிக்கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு வந்த ஐவர் தெலுங்கர். இடையில் தமிழரான டாக்டர் சுப்பராயன் நீதிக்கட்சியைச் சேர்ந்தவராயினும் அக்கட்சி ஆதரிக்காத அக்கட்சியிலிருந்து வெளியேறி, காங்கிரஸ் அரசின் அரசியல் பிரிவான சுயராஜ்யக் கட்சியின் ஆதரவோடுதான் முதல்வரானார்.

அன்று நீதிக்கட்சியின் ஆட்சியில் வலிமைப்பட்ட தெலுங்கர் ஆதிக்கம் இன்று வரை தமிழ் நாட்டின் வணிகம்/ஊடகம்/அரசியல் அதிகாரம் என எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தியே வருகிறது. 2010-இல் தமிழ்நாடு தெலுங்கு சம்மேளனம் என்ற அமைப்பின் கீழ் நடந்த மாநாட்டில் அப்போதைய தி.மு.க அமைச்சர்களான நெப்போலியன், கே.என். நேரு, ஆற்காடு வீராசாமி, அன்றைக்குக் காங்கிரஸ் தலைவராக இருந்த கே.வி. தங்கபாலு ஆகியோர் கட்சி வேறுபாடின்றி கலந்து கொண்டனர். இன்றைக்கும் ஆந்திர, தமிழக எல்லையில் சிக்கல்கள் தீர்க்கப்படாமலும் ஆந்திரத்துடனான நீர்ச்சிக்கல் பேசப்படாமலும் சிக்கல்கள் சிக்கல்களாகவே நீடிப்பதில் மேற்சொன்ன அரசியலுக்குப் பெரும்பங்கு உண்டு.

ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில்
அந்நியர் வந்து புகலென்ன நீதி

என்ற பாரதி பாடல் இங்கும் பொருத்தமாய் அமைவது விசித்திரம்தான். இன்றும் மற்ற மாநிலத்தவர் தம் சிக்கல்களைப் பேசக் கட்சி வேறுபாடின்றி இணைவதும் தமிழகத்தில் அது சாத்தியப்படாமலே இருப்பதும் கவனிக்க வேண்டியவை. தமிழகம் அனைவருக்குமான பொதுச்சத்திரமா? அல்லது தமிழருக்கான வாழ்விடமா? இனியாகிலும் சிந்திப்போம்.

-    தி.பரமேசுவரி

Thursday, February 23, 2012

தமிழ் நாடா? திராவிட நாடா?

- தி.பரமேசுவரி 

கருணாநிதி

“1912 ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்ற அமைப்பின் வழிகாட்டியாக இருந்த டாக்டர் நடேசனார்தான் திராவிட இயக்கத்தின் நிறுவனர். 1913 ஆம் ஆண்டு நடந்த அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவில் திராவிடர் சங்கம் என அது பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டாக்டர் நடேசனார் தொடங்கிய திராவிடர் சங்கம்தான் இன்று வளர்ந்துள்ள மொழி உணர்வு, பகுத்தறிவு உணர்வு, சமூக நீதி ஆகியவற்றுக்கு அடித்தளம் என்பதை அறிந்து கொள்ளலாம். எனவே திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை தி.மு.க சார்பில் ஆண்டு முழுவதும் திராவிடர்களாகிய நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். இது தமிழன் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் விழா, தன்மான உரிமைத் திருவிழா என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்” என்று மானமிகு முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழக மக்களை... தவறு... திராவிட மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

உண்மையில், “மலையாளியான டாக்டர் டி.எம். நாயர், தமிழ்நாட்டுத் தெலுங்கரான சர். பி.டி. தியாகராச செட்டியார் ஆகிய இரு பேரறிஞர்களின் கூட்டு முயற்சியால்தான் இந்தப் புதிய கட்சி ஆரம்பிக்கப் பெற்றது. 1920 இல் முதன்முதலாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒற்றைக் கட்சியாகத் தேர்தலில் புகுந்து பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. ஏ. சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராகவும் பனகல் அரசர் பி. இராமராய நிங்கார், கே. வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய இருவரும் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இந்த அமைச்சரவையில் தமிழர் ஒருவர் கூட இடம் பெறவில்லை. முதல்வரான ஏழே திங்களில் சுப்புராயலு ரெட்டியார் நோய் காரணமாகப் பதவி விலகியதால் இரண்டாவது அமைச்சரான பனகல் அரசர் முதல் மந்திரியானார். இதனால் காலியான ஓர் இடத்திற்கு ஆந்திரரான ஏ.பி. பாத்ரோ நியமிக்கப் பெற்றார். தொடர்ந்து தமிழர் புறக்கணிக்கப்பட்டனர். 1923 இல் நடந்த சட்ட மன்றத்தேர்தலில் மீண்டும் பனகல் அரசரே முதல் அமைச்சரானார். டி.என். சிவஞானம் பிள்ளை என்ற ஓய்வு பெற்ற அதிகாரி அமைச்சரானார்.

1916 இல் ஜஸ்டிஸ் கட்சி தோன்றியதிலிருந்து 1936 இல் அந்தக் கட்சியின் ஆட்சி அஸ்தமித்தது வரையுள்ள 17 ஆண்டுக் காலத்திலே சுத்தத் தமிழர் எவரும் அந்தக் கட்சியின் தலைவர் பீடத்தில் ஏறியதில்லை. அது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அதன் தலைமை ஆந்திரரிடமே இருந்தது. பிராமணர் ஆதிக்கத்திலிருந்து பிராமணரல்லாத்தாரைக் காப்பதற்குப் பிறந்த ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியிலே அரிசனர் எவரும் அமைச்சராக்கப்படவில்லையென்பதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும். இத்தனைக்கும் இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, வி.ஐ. முனுசாமிப்பிள்ளை, தர்மலிங்கம் பிள்ளை, என். சிவராஜ் ஆகிய பட்டதாரிகளான அரிசனத் தலைவர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் முன்னணியில் இருந்தனர். ஆனால் அப்படி ஒரு நீதியை அரிசன மக்களுக்கு வழங்கவில்லை நீதிக் கட்சி. பிராமணர் ஆதிக்கத்தை அழிக்கப் பிறந்த நீதிக் கட்சியின் ஆதரவோடு என். ஆர். சேதுரத்தினம் ஐயர் கூட அமைச்சராக முடிந்தது. ஓர் அரிசனருக்கு அந்தப் பேறு கிடைக்கவில்லை”.

(தமிழகத்தில் பிற மொழியினர் - பக்கம் 31-32, 35)

கருணாநிதி சொல்லும் நடேசனார் ஒரு தெலுங்கு முதலியார். ஆனால், அவர் தெலுங்கர் என்பதை வெளிக்காட்டாமல் தமிழர் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தும் இவ்வறிக்கையை நரித்தனத்துடன் வெளியிட்டுள்ளார் கருணாநிதி. தெலுங்கர்களால் தொடங்கப்பட்டது ஜஸ்டிஸ் கட்சி. அக்கட்சி ஆட்சியில் இருந்தவரை சென்னை மாகாணம் தெலுங்கு முதல்வர்களாலேயே ஆளப்பட்டது. ஏ. சுப்பராயலு ரெட்டி, பனகல் அரசர்(ராஜா பனங்கன்டி ராமராயநிங்கார்), பி. முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர் (ராஜா ராமகிருஷ்ண ரங்காராவ்), சர். கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய தெலுங்கர்களே ஆண்டனர். ஆந்திரம் பிரிந்து போன பிறகுதான் காமராசர் முதல்வர் பதவிக்கு வர முடிந்தது என்பதை மறக்கக் கூடாது. பிராமணர், பிராமணரல்லாதார் என்ற சாதிப் பிரிவினைப் போராட்டத்தில் தமிழர் என்ற மொழிவழி இன உணர்வு மங்கி இன்று மறைந்தே போய்க்கொண்டிருப்பதை இப்போதாவது நாம் உணர வேண்டும். இப்படிச் சொல்வதனால், சாதிவழி ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்வதாகப் பொருளில்லை. சாதீய ஏற்றத்தாழ்வுகளைக் களையும் நம் முயற்சியில் மொழி, இன உணர்வை இழந்து, தெலுங்கர் உள்ளே புக இடம் கொடுத்து விட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று வரையிலும் தமிழகத்தில் தமிழரால் தொடங்கப்படும் கட்சிகள் சாதீய அடையாளத்துடன் பார்க்கப்படுவதையும் தெலுங்கர்களால் 'திராவிட' என்னும் அடைமொழியுடன் தொடங்கப்படும் கட்சிகள் “பொதுவான கட்சிகளாகப்” பார்க்கப்படுவதையும் கவனத்தில் கொள்வது நல்லது.

தமிழ்நாட்டில் அரசியல் செய்து பிழைப்பு நடத்தும் தெலுங்கர்கள் தலைமைப்பதவியை நோக்கி நகர்வதை எல்லாக் கட்சிகளிலும் பேதமின்றிப் பார்க்க முடியும். தமிழ்த் தேசிய அடையாளத்துடன் இயங்கும் அமைப்புகளிலும் தெலுங்கர்கள் ஊடுருவி, தலைமைப் பதவியில் இருப்பதைப் பார்க்கும்போது தமிழரின் அறிவைப் பற்றி அவர்கள் 'தமிழர் தந்தை' என்று போற்றும் ஈ.வெ. ராமசாமி சொன்னது சரிதானோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இன்று வரையிலும் பொருளாதாரம், ஊடகம், அரசியல் என மாநிலத்தை நிர்ணயிக்கும் அனைத்துத் துறைகளும் பெரும்பாலும் அவர்கள் கையிலேயே உள்ளது. வடநாட்டினரை ஏன் கணக்கில் கொள்ளவில்லை என்ற கேள்வி எழலாம். நம் பொருளாதாரத்தை அவர்களும் சேர்ந்துதான் சுரண்டுகிறார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் அதிகாரம், பதவிகளில் இருப்பவர் யார் என்பதை மனச்சாட்சியுடன் சிந்தியுங்கள்.

"தெலுங்கருக்குத் தெலுங்கு பாஷையில் பிறந்திருக்கும் உண்மையான அபிமானம் தமிழருக்குத் தமிழினிடமில்லை" (பாரதி தமிழ் பக்: 273 -274) என்று பாரதியும் சுதேசமித்திரனில் அப்போதே இடித்துரைத்திருக்கிறார். அன்று முதல் இன்று வரையிலும் இந்த நிலையில் மாற்றம் இல்லை. தமிழ்நாட்டில் தமிழுக்கு ஏற்றம் இல்லையென்பதே கசப்பான உண்மை. ஓர் அயலானுக்குக் கூட இடம் கொடுக்கும் தமிழன், மற்றொரு தமிழன் அங்கே அமர்வதைச் சகிப்பதில்லை. தமிழர் இப்படித் தமக்குள் ஏற்றத்தாழ்வு கொண்டு இருப்பதாலேயே நாம் இன்று வரையிலும் திராவிடக் கட்சிகளால் ஆளப்பட்டு வருகிறோம். நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான் வரைக்கும் இது பொருந்தும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில், விருந்தோம்பும் பண்பில் சிறந்த தமிழர், உகாதி மற்றும் ஓணம் பண்டிகைகளுக்கு விடுமுறை விட்டு மிகச் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆந்திர முதல்வர் இராஜசேகர ரெட்டி விமான விபத்தில் அகால மரணமடைந்தபோது அரசு விடுமுறை கொடுத்து அஞ்சலி செலுத்தினோம். சென்னையை ஆந்திரத்தோடு சேர்க்க வேண்டுமென்று போராடிய பிரகாசம் பந்துலுவுக்கு சென்னை பாரிமுனையில் சிலையும், தெருவின் பெயரும், உண்ணாவிரதமிருந்த பொட்டி ஸ்ரீராமுலுவிற்கும் மயிலையில் சிலையும், சென்னையை ஆந்திரத்தோடு சேர்க்க வேண்டுமென்று மாநகராட்சியில் போராடிய பிட்டி தியாகராசருக்கு அங்கேயே சிலை, தெருவின் பெயர், சென்னையின் இதயப்பகுதிக்கும் அங்கே உள்ள அரசு கலையரங்கத்திற்கும் அவர் பெயரை வைத்து மரியாதை செலுத்தியிருக்கிறோம். இவ்வளவும் போதாதென்று இந்த அவமான வரலாற்றிற்கு நூற்றாண்டு விழாவும் கொண்டாட வேண்டுமென்று கூறுகிறார் கருணாநிதி.

நன்றி :  தடாகம்.காம்

Thursday, February 16, 2012

பயன்தவா செய்வார் சிலர்

"திரைத்த விரிக்கின் திரைப்பின்நா வாய்போல்
உரைத்த உரையதனைக் கேட்டும் - உரைத்த
பயன்தவா செய்வார் சிலர்ஏதம் நெஞ்சத்து
இயன்றவா செய்வார் பலர்"
 
என்னும் இன்னிலையில் உள்ள பாடலொன்றைப் படித்தது ஒரு தற்செயல் 
 ஆகூழ்(அதிர்ஷ்டம்) என்றே கூறலாம். இது அறத்துப்பால், பொருட்பால், இன்பப்பால், வீட்டுப்பால் என்று நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அறத்துப்பாலில் 10 பாடல்களும் பொருட்பாலில் 9 பாடல்களும் இன்பப்பாலில் 12 பாடல்களும் வீட்டுப்பாலில் 14 பாடல்களுமாக மொத்தமே 45 பாடல்களைக் கொண்ட நூல். பொய்கையார் என்னும் புலவரால் எழுதப்பட்டது. எழுதியவர் பெயர்க் குழப்பம், பதினெண்கீழ்க்கணக்கு நூலில் உள்ளதா, என்னும் வழக்கமான குழப்பங்களுடனே இந்த நூலும் உள்ளது. அதைப் பிறகு பார்ப்போம்.

பாடலின் பொருட்சுவை, சொற்சுவை, நாம் இழந்த சொற்கள், சொல்லப்பட்ட உவமை என இந்தப்பாடலைப் படிக்கும்போதே என் மனத்திற்குள் போய் உட்கார்ந்து கொண்டது. பாய்மரத்தையும் காற்றின் திசை வழி செல்லும் பாய்விரிக்கப்பலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் மாலுமியையும் உவமையாகக் கொண்டு ஓர் அறிவுரையைக் கூறுகிறார் பொய்கையார். கடலிலே செல்லும் பாய்மரக்கப்பல் காற்றின் வழியில் விட்டாலோ தன் பாட்டில் போகும். பாயைச் சுருட்டி விட்டாலோ நின்ற இடத்திலேயே சுழன்று திரியும். ஆனால் அக்கப்பலில் ஒரு மாலுமி இருந்தால், அவன் காற்றின் திசையறிந்து, பாயை விரிப்பான். அவன் விரிப்பதையும் மடக்குவதையும் பொறுத்துக் கப்பல் செல்லும். தான் செல்லுமிடத்திற்கேற்ப, மாற்றியும் விரித்தும், சுருட்டியும் கப்பலை மாலுமி வழி நடத்துவான். காற்றின் திசைக்கேற்பப் பாய்மரமும் விதவிதமாகத் திருப்பப்படும்.

மாலுமி போன்ற சான்றோர், நம் வாழ்வெனும் கடலில் வெவ்வேறு விதமான சூழலாக வரும் காற்றைத் தம் அறிவுரையெனும் பாய்மரத்தைக் கொண்டு செலுத்துவர். பாய்மரம் எப்படி மாலுமியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ, அப்படிப் பெரியவர்கள் சொல்லும் அறிவுரையின் வழி நம் வாழ்வை நடத்தினால் நாம் வெற்றி பெறலாம் என்பது பாடலின் பொருள். பாடலுக்குள் சில நுணுக்கமான செய்திகள் இருப்பதைக் கவனித்தால் அதன் சுவை இன்னும் உயர்வதை உணரலாம். பாயை விரித்தால் கப்பல் செல்லுதல் இயற்கை. அறிவுரை கேட்டால் திருந்துவதும் இயற்கை. சான்றோர் சொல்லும் அறவுரைகளைக் கேட்டால் நன்றாக வாழலாம். பாயோ அஃறிணை. ஆறாமறிவினைப் பெற்றிருக்கும் மனிதனோ அந்த அஃறிணைக்கு இருக்கும் செயல்திறம் கூட இன்றி, சொல்லும் அறவுரைகளைக் கேளாமல் தீய வழியில் சென்று இடர்ப்படுகின்றனர்.

பாய்மரத்தை விரித்தல், குறுக்குதல் என்பது மனத்தைக் குறுக்குதல், விரித்தலையும் சுட்டும். காற்றின் சக்தியை மாலுமி தனக்கு உதவியாக்கிக் கொள்வான். கடினமான சூழல் தரும் அனுபவத்தை அறிவுடைய மனிதன் தன் வாழ்வுக்கான அறிவுரையாகப் பெற்றுக் கொள்வான். "தவா செய்வார் சிலர் அவா செய்வார் பலர்" என்னும் வரி பாடலின் உச்சம். காற்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் வீசிக் கொண்டே இருக்கிறது. பாய்மரம் தன் பாட்டில் இருக்கிறது. அப்படி அறிவுரை கூறுவது மட்டுமே நம் கடமை. அதை அவர்கள் கடைப்பிடிக்கிறார்களா இல்லையா என்றெல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அறிவுரையைச் சிலரே விரும்புவர் என்பதைச் சிலர்; பலர் என்ற சொற்களில் சொல்லும்போது அந்தக் காலத்திலும் இதே நிலைதானா என்று நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. உரைத்த உரையதனைக் கேட்டும் என்பதில் அந்த 'உம்' எவ்வளவு இகழ்ச்சியாக ஒலிக்கிறது?!

'நாவாய்' என்னும் ஒற்றைச் சொல் அதனோடு தொடர்புடைய மரக்கலம், தோணி, பரிசல், புணை, தெப்பம், படகு, கப்பல் எனப் பல சொற்களைக் கிளர்த்தியது. விரித்தல் என்பதற்கு எதிர்ச் சொல்லாக சுருட்டுதலை இன்றைக்குப் பயன்படுத்துகிறோம். அதைவிடச் சிறப்பாக திரைத்தல் என்ற சொல்லைப் புலவர் கையாள்கிறார். ஏதம் என்ற சொல் அண்மைக்காலத்தில் பயன்படுத்தப்படாத சொல். இடும்பை, துன்பம், இடர், ஏதம் ஆகியவை ஒரு பொருள் குறித்த சொற்கள். இன்றைக்கும் 'கேதம் விசாரித்தல்' என்று துக்கம் விசாரித்தலைக் கூறுவார்கள். இது பழந்தமிழ்ச்சொல் என்ற ஓர்மையின்றியே இச்சொல் தமிழகத்தின் தென்பகுதியில் வழங்கி வருகிறது. இவ்வளவு செய்திகளை இவ்வொற்றைப்பாடல் தெரிவிக்கிறது எனின் தமிழின் வளமையை எண்ணிப் பெருமைப்படலாம். 

ஆனால், சொல்லச் சொல்ல இனிக்கும் செழுந்தமிழின் குறைபாடுகளுள் முதன்மையானது, சரியான காலப்பதிவின்றி இருப்பது. நம் பெரும்பாலான இலக்கியங்களின் காலம், இயற்றியவர் பெயரில் குழப்பம் போன்றவை நம் தொன்மையைப் பேசுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்தப் பாடலும் கூடப் பொய்கையார் இயற்றியது என்ற தகவல் இருந்தாலும் சங்க காலத்தில் நற்றிணை (18), புறநானூற்றில் (48,49) எழுதிய பொய்கையாரா?, களவழி நாற்பது எழுதிய பொய்கையாரா?, ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வாரா? இவர்கள் யாருமல்லாது வேறொருவரா? என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இன்னிலை எழுதியவரும் பொய்கையாழ்வாரும் ஒருவரே என்று கூறுவாரும் உளர்.

"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணை
முப்பால் கடுகங்கோவை பழமொழி மாமூலம்
இன்னிலை காஞ்சியுடனே லாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு"

என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் பாடலில் இன்னிலையா, கைந்நிலையா என்னும் நூற்பெயர்க் குழப்பமும் உள்ளது. கைந்நிலை என்ற நூல் ஐவகை நிலத்தைப் பின்னணியாகக் கொண்டு புல்லங்காடனார் எழுதிய 60 பாடல்களைக் கொண்டது. இன்னிலை எனும் நூல் பொய்கையார் எழுதிய அறநூல். இவற்றுள் எது பதினெண்கீழ்க்கணக்கு நூல் என்பதில் இப்போதும் குழப்பம் உண்டு.

இன்னிலையே என்று வாதாடி அந்நூலைப் பதிப்பித்துத் தமிழ்ப்பணி புரிந்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையென்று சொன்னால் வியப்பாய் இருக்கும். வ.உ.சி யை விடுதலைப் போராட்ட வீரராக மட்டுமே தெரிந்தவர்களுக்கு ஒரு செய்தி. அவர் ஜேம்ஸ் ஆலன் எழுதிய நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்; தன் வரலாற்று நூலைச் செய்யுள் வடிவில் இயற்றியவர்; பல நூல்களை எழுதியுள்ளார். பதிப்புப் பணியிலும் தன் தனி முத்திரையைப் பதித்தவர். இவ்வாறு தமிழ் இலக்கிய உலகுக்கு அவர் செய்துள்ள தமிழ்ப்பணியை விரிக்கின் தனிக் கட்டுரையாகவே விரியும். ஒரே ஒரு பாடல் அழகிய உவமை, பழஞ்சொற்கள், தொடர்புடைய சொற்கள், அறவுரை, வரலாற்று ஆய்வு என் எத்தனைக் கருத்துகளை உள்ளடக்கியிருக்கிறது என்று சிந்தித்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. 


_


Wednesday, December 21, 2011

நினைவிலோடும் பச்சை நதி

"வெட்டப்பட்ட ஒரு மரம் அதன் அடிக்கட்டையின் ரணத்தை சூரிய வெளிச்சத்தில் நம்மிடம் காட்டும் போது அதன் சுயசரிதையை தெளிவான ஒரு மொழியில் நம்மிடம் சொல்கிறது. மரங்களிடம் பேச வேண்டும் என்றால் அதற்கொரு தனிப்பட்ட திறமை வேண்டும்" - ஹெர்மன் ஹெஸ்ஸே


"நினைவில் காடுள்ள மிருகம்
எளிதில் அடங்குவதில்லை
அவள் தோளில்
சதுப்பு நிலங்களின் குளிர்
அவள் முடிக்கற்றைகளில்
வனப்பூக்களின் கடும்நெடி
அவள் விழிமணியில்
பாறைகளில் தெறித்துவிழும்
காட்டுச் சூரியன்
அவள் வாயில் காட்டாறுகள்
சந்திக்கின்றன.
அவள் நாவில் காட்டுத்தேன்
ஊறுகிறது
அவள் செவிகளில்
இடிமேகங்கள் முழங்குகின்றன
அவள் ரத்தத்தில்
காட்டுயானைகள் பிளிறுகின்றன
அவள் இதயத்தில்
காட்டு நிலவுகள் பூக்கின்றன
அவளது சிந்தனைகள்
காட்டுப் பாதைகளினூடே
பாய்ந்து செல்கின்றன
நினைவில் காடுள்ள மிருகம்
எளிதில் அடங்குவதில்லை
என் நினைவில் காடுகளுண்டு"

என்னும் சச்சிதானந்தனின் புகழ் பெற்ற கவிதை வரிகள் எப்போதும் என்னைத் துன்புறுத்துபவை. என் நினைவிலும் காடுண்டு. நினைவில் மட்டும்தான். இன்று நான் மரங்கள் அழிக்கப்பட்ட, ஒரு கான்கிரீட் நகரத்தில் வாழ்கிறேன். சென்னையைப் பற்றிப் பேசும் படைப்பாளர்கள், அதன் செயற்கைத் தன்மையை, மூச்சு முட்டுவதைப் பற்றிப் பேசும்போது என் மனது வலிக்கும். என்ன செய்ய? சென்னையை விட்டு நீங்கி, திருவண்ணாமலையிலும் காஞ்சீபுரத்திலும் இருக்கும் சிறு கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பணி புரிந்து, வார இறுதி நாட்களில் சென்னை மீளும் தருணத்தில் நானும் அவ்வாறே உணர்கிறேன். இருக்கும் ஓரிரு மரங்களையும் அழித்து அங்கு ஏதாவது கட்டி வாடகை விட முடியுமா என அலையும் ஒரு பெரும் கூட்டம் சென்னையைச் சுற்றி இருக்கத் தான் செய்கிறது.

என் சென்னை எப்போதும் இப்படித் தான் இருந்ததா? கூவத்தில் குளித்தெழுந்து கோயிலுக்குப் போனதாக வள்ளல் பச்சையப்பனாரின் குறிப்புகளை இன்று படிக்கும்போது சிரிப்பு வருகிறதோடு நம்புவதற்கும் சற்றுக் கடினமாக உள்ளது. ஆனாலும் அந்தச் செய்தி உண்மைதானே. அப்படித்தான் நான் இருக்கும் ஆழ்வார்ப்பேட்டையிலும் ஒரு காலத்தில் மரங்கள் இருந்தன. மக்கள் நெருக்கடி குறைவான பகுதியாக, வணிகப் பகுதியாக மாறாத ஒரு கால கட்டமாக அது இருந்தது. மாலை தொடங்கி இரவு வரையிலும் போக்குவரத்து பற்றிய எந்தப் பயமுமின்றித் தெருவிலே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறோம். இன்றைக்கு அந்த ஆழ்வார்ப்பேட்டையும் இல்லை; அங்கு இருந்த எங்கள் குட்டித் தோட்டமும் இல்லை.

எங்கள் வீட்டில் மா, வாழை, கொய்யா, தென்னை போன்ற மரங்களும் ரோஜா, செம்பருத்தி, தேன்பூ, வண்ண வண்ண டிசம்பர் பூக்கள், மல்லி, நந்தியாவட்டை ஆகிய மரங்களும் மருதாணி, கத்தரி, வெண்டை போன்ற செடிகளும் நிறைந்த ஒரு சிறிய தோட்டம் இருந்தது. இன்று வீடு பெரிதாகி, அன்றைய அழகின் அடையாளமாக மா மரமும், தென்னை மரமும் மட்டும் எஞ்சி நிற்கிறது. ஒவ்வொரு முறை என் வீட்டுக்குள் நுழையும் போதும் என் பால்யம் மனசுக்குள் இருந்து எட்டிப் பார்க்க, அதன் வலி பொறுக்க முடியாமல் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் தஞ்சம் புகுந்து விடுவேன்.

இன்றைக்கு இழந்ததை நினைத்து ஏங்குகிறேன். அன்றைக்கோ, ஆயா எங்கே நம்மைக் கூப்பிட்டு விடுவார்களோ என்று ஓடியிருக்கிறேன். செடிக்குத் தண்ணீர் ஊற்றச் சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டுதான் இந்த ஓட்டம். நான்தான் செய்யணுமா, நீ செய்யேன் என்ற போட்டி வேறு. விடியற்காலை அற்புதமானது என்பதை எனக்கு என் வீட்டுத் தோட்டம்தான் கற்றுக் கொடுத்தது. காக்கை, குயில், குருவி, மைனா, இன்னும் பெயர் தெரியாத பல பறவைகளை என் தோட்டத்தில் பார்த்திருக்கிறேன். பாரடி இந்த வன்னத் தியல்பை என்று பாரதி அதிசயிப்பது போல எத்தனை வகையான வண்ணத்துப் பூச்சிகள்? இன்றைக்கு அவை எல்லாம் எங்கே? இன்று என் மகள் குருவியேயோ அணிலையோ பார்த்ததே இல்லையென்கிறாள். நத்தைகள் எல்லாம் எங்கே போயின? அன்றைக்கு எங்கள் தோட்டத்தில் நரி புகுந்தது ஒரு பெரிய அதிசயம். வௌவால்கள் இருந்தன. எப்போதாவது பாம்புகள் கூட வரும்.

பேரன், பேத்திகள் அத்தனை பேருக்கும் சுற்று முறையில் தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றும் வேலை. அதெல்லாம் ரொம்ப நியாயமாக நடக்கும். யாரும் எங்கள் இராஜேசுவரி ஆயாவை ஏமாற்ற முடியாது. மிகச் சரியாக நினைவில் வைத்திருந்து, வயதில் பெரியவர் ஒருவரும் சிறியவர் ஒருவருமாகப் பணிப்பகிர்வு இருக்கும். எங்கள் நாள் வருவதற்கு முதல் நாளே எங்களுக்குக் காய்ச்சல் தொடங்கி விடும். ஆனால் விட்டால் தானே. அவரால் படியேற முடியாது. கீழேயிருந்து கூப்பிடுவார். நாங்களா எழுந்திருப்போம்? ஆயா, மெதுவாக இரண்டு படி ஏறி அங்கே இருந்து கூப்பிட்டும் ஆள் வரவில்லையென்றால் எங்கள் அம்மாவுக்கு வசவு தொடங்கும். அம்மா வந்து முதுகில் இரண்டு போட்டு எழுப்பி அனுப்பி வைப்பார். சுணங்கிக் கொண்டும் மனத்தில் திட்டிக் கொண்டும் எழுந்து போவோம். ஆயாவுக்குக் காது கொஞ்சம் மந்தமானாலும் எங்கள் வாய் அசைவை வைத்தே எங்களைக் கண்டுபிடித்துக் காதைப் பிடித்துத் திருகுவார்.

இந்த அக்கினிப் பரீட்சையைத் தாண்டித் தோட்டம் வந்தால், அது ஒரு தாய் மடி போல எங்களை அரவணைத்துக் கொள்ளும். சில்லென்ற பனித் துளிகள் படர்ந்த இலைகளையும் பூக்களையும் தொட்டுத் தொட்டு இரசிக்கலாம். மைனாக்களைத் துரத்தலாம். வெளிச்சம் வருவதற்குள் தோட்டத்தில் உள்ள அடி பம்ப்பை ஒருவர் அடித்து அடித்துக் குடத்தை நிரப்பினால், அடுத்தவர் மரங்களுக்கும் செடிகளுக்கும் கொண்டு ஊற்ற வேண்டும். பிறகு ஒருவர் தோட்டத்தைப் பெருக்கினால், மற்றவர் பூக்குடலையில் பூக்களைப் பறித்து வைக்க வேண்டும். முடித்து விட்டுச் சென்றால் ஆயா இரண்டு நெய் பிஸ்கெட் கொடுக்கும். அது அன்றைக்கு எங்களுக்கு அமிழ்தத்துக்கு ஈடு. நாக்கிலிருந்து நீர் சுரக்கும். கேட்டாலும் அதற்கு மேல் கிடைக்காது. அதுதான் அன்றைய கூலி. பிறகு குளித்து, பள்ளிக்குக் கிளம்ப வேண்டியதுதான். ஒரே ஆசுவாசம்; அன்று காலை படிக்க வேண்டாம்.

வீட்டில் அப்போது எப்போதாவதுதான் மின்சாரம் போகும். அப்படி ஒரு காலம். அப்போது வீட்டில் தாத்தா இருந்து விட்டால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். வீட்டுக்குள் இருக்கப் புழுக்கமாக இருக்குமென்பதால் அவருடைய சாய்வு நாற்காலியை எடுத்துத் தோட்டத்துக்குள் போட்டு உட்கார்ந்து கொள்வார். சுற்றி நாங்கள் உட்கார்ந்து கொள்ள, எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதபடி இராமாயணம், மகாபாரதம் கதைகளைச் சொல்வார். அவருடைய அம்மா கற்பித்த நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவார். ரொம்பக் குஷியாகி விட்டால் எழுந்து குதித்து விளையாடுவார். மரங்களைப் பற்றிய கதைகளை, சங்க இலக்கியப் பாடல்களை விவரிப்பார். பேச்சு அப்படியே சிலப்பதிகாரம், இன்ன பிற இலக்கியங்களென்று போகும்போது அவருடைய நண்பர்களும் கூடச் சேர்ந்து கொள்வார்கள். கேட்கச் சுவாரசியமாக இருக்கும்.

என் வீட்டில் இருக்கும் மரங்களிலேயே கொய்யா மரம் எனக்கு ரொம்பப் பிடித்தமானது. மரங்களிலேயே ரொம்ப வழவழப்பான, தன்மையான பட்டைகளை உடையது கொய்யா என்பது என் அபிப்ராயம். அதன் மேல் ஏறி விட்டுப் பிறகு இறங்க முடியாமல் அழுது, பிறகு தாத்தாவின் பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் என்னை இறக்கி விட்டது இன்றைக்கு நினைத்தால் சிரிப்பாக இருந்தாலும் அதற்குப் பிறகு நான் மரம் ஏறியதேயில்லை. அவ்வளவு பயம். அன்றைக்கு அப்பாவிடம் வாங்கிய அடி இன்றைக்கும் மறக்கவில்லை. பொம்பளைப் பிள்ளை மரம் ஏறிக் கையைக் காலை உடைச்சிக்கிட்டா, பின்னாடி யார் கட்டிக்குவா? என்று சொல்லிச் சொல்லி அடித்தார். பிறகு என்னைக் கடைக்குக் கூட்டிப் போய் எனக்குப் பிடித்த கதைப் புத்தகம், சாக்லேட் எல்லாம் வாங்கிக் கொடுத்தாலும் (அது அப்பாவின் வழக்கம். முதலில் அடிப்பார். பின் கொடுப்பார்) அப்பான்னா பயம்தான்.

போன மாதத்தில் கவிஞர் யாழன் ஆதியின் வீட்டுக்குப் போயிருந்தபோது, அங்கு கொய்யா மரம் பார்த்தேன். என் அடியாழத்திலிருந்து கிளம்பிய இசையை அந்த மரத்தைச் சுற்றிப் பதியமிட்டுவிட்டு வந்தேன். கிளர்ந்தெழுந்த நினைவுகளை நண்பரிடம் பகிர்ந்து சிரித்தேன். என்றாலும் மரங்களை இழந்த சின்னப் பெண்ணின் அழுகுரல் ஈனசுரத்தில் கேட்டுக் கொண்டே இருந்தது.

என் வீடு மட்டுமல்ல; எங்கள் தெரு மூலையில் செட்டியார் வீடு என்று நாங்கள் அடையாளம் சொல்லும் முத்துவின் வீடு மிகப் பெரியது. காரைக்குடிச் செட்டியார்களுடையது. உள்ளுக்குள் சிறிய வனத்தையே அடக்கியது. அங்கு பலாவும், வேம்பும் தென்னையும் மாவும் அடர்ந்து செறிந்து இருக்கும். இடையிடையில் பூச்செடிகள். அங்கே பெரும்பாலும் ஐஸ்பாய்ஸ்தான் விளையாடுவோம். பலா மரத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டால், கண்டுபிடிக்கவே முடியாது. ஒவ்வொரு மரமாகத் தாவித் தாவி ஏமாற்றி விடலாம். நேரம் போவதே தெரியாமல் அங்கே விளையாடி, வீட்டிலிருந்து யாராவது தேடிக் கொண்டு வந்து, தெருவிலேயே அடி வாங்கி வீடு திரும்பியிருக்கிறோம். இன்றைக்கு முத்து எங்கிருக்கிறானோ தெரியாது. செட்டியார் வீடும் பல கை மாறி, ஒரு கணிணி நிறுவனக் கட்டிடமாக உருமாறி, இப்போது அப்போலோ மருத்துவமனையாகி விட்டது. அதைக் கடக்கும் ஒவ்வொரு நாளும் பறந்து விட்ட குயில்களின், மைனாக்களின் காக்கைகளின் குரல்கள் என் காதுகளில் ஒலிக்கத் தொடங்கும். மனம் முழுக்க வருத்தம் சூழ்ந்து கொள்ளும். மனிதன் இல்லாமல் மரங்கள் இருக்க முடியும். ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதனால் இருக்க முடியுமா?

அதற்குப் பிறகு மரங்கள் என் நினைவுகளில் மட்டும் வாழத் தொடங்கின. கல்லூரியின் மிகப் பெரிய ஆல மரமும் அதன் அடியில் இருக்கும் குட்டிப் பிள்ளையாரும் என் நெருங்கிய சினேகிதர்கள். என் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட பருவம் வரையுள்ள என் இன்ப, துன்பம் அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். தோழிகளுடனான என் அரட்டைக் கச்சேரி அந்த இடத்தில்தான். உணவு உண்பதும், பேருந்துக்காகக் காத்திருப்பதும் அதன் அடியில்தான். பிறகு நான் அடர்ந்த மரங்களை என் வாழ்நாளில் பார்த்தது, திருவண்ணாமலையில் உள்ள தானிப்பாடியில் ஆசிரியராகச் சேர்ந்த பிறகுதான்.

எழிலார்ந்த தென்பெண்ணையாற்றின் ஒரு துணை நதி ஓடும் வழியில் இருந்தது எங்கள் பள்ளி. வழியெல்லாம் வயல்கள், செடிகள், மரங்கள் என்று என்னைச் சுற்றிலும் ஒரு பச்சை நதி ஓடியபடியே இருந்தது. அந்த வயல் வெளிகளைக் கடக்கும்போதெல்லாம் பச்சை மரகதப் பட்டு விரித்துப் படுத்துக் கிடக்குது இயற்கை என்னும் பரிணாமனின் பாடல் வரிகள் நினைவுக்கு வரும். அங்கே பெரும்பாலும் மரத்தடி வகுப்புகள்தான். மாணவர் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்குமென்பதால், தமிழ் வகுப்பு எப்போது மரத்தடியே. அதிலும் நீங்க சூப்பரா நடத்துவீங்க. எப்ப நடத்தினாலும் பசங்க கேட்பாங்க என்ற வஞ்சப் புகழ்ச்சியோடு மதிய முதல் வேளையை என் தலையில் கட்டி விடுவார்கள். சூழ்ச்சி அறியாத குழந்தையாய் ஒத்துக் கொண்டு, நொந்தே போனேன்.

புத்தகத்தில் உள்ளது அல்லாமல் புதிய தகவல்களைச் சொல்ல வேண்டுமென்று மெனக்கெட்டு சங்க இலக்கியம் பற்றித் தயாரித்துக் கொண்டு சென்ற அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. பணியில் சேர்ந்தே இரண்டு வாரங்கள்தான் ஆகியிருந்தது. நற்றிணையில் மட்டுமே 47 மரங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளது என்று நற்றிணை பற்றிய மேலதிகமான தகவல்களைச் சொல்லிக் கொண்டு வரும்போதே ஒரு குறட்டைச் சத்தம் மெல்லியதாய்க் கேட்கத் தொடங்கியது. கோபம் மூக்கேற, கையில் பிரம்பைப் பிடித்துக் கொண்டு, இன்னும் உரக்கக் குரலெடுத்து, ஒழுங்காய்ப் பாடத்தைக் கவனிக்கும்படி எச்சரித்து விட்டு மருத நிலத்தின் வளமையைக் கூறும் பட்டினப்பாலைப் பாடல் ஒன்றைச் சொல்லத் தொடங்கினேன்.

"விளைவு அறா வியன் கழனி
கார்க்கரும்பின் கமழ் ஆலைத்
தீத் தெறுவின் கவின்
வாடிநீர்ச் செறுவின் நீள் நெய்தற்
பூச்சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக்குழவி
கூட்டு நிழல் துயில் வதியும்
கோள் தெங்கின் , குலை வாழை,
காய்க் கமுகின் , கமழ் மஞ்சள்
இனமாவின் இணர்ப் பெண்ணை
முதற் சேம்பின் முளை இஞ்சி" (8-19)

என்று சொல்லி வரும்போதே குறட்டைச் சத்தத்தோடு, குழந்தைகள் சிரிக்கும் சப்தமும் சிலு சிலுவெனக் கேட்கத் தொடங்க, என் விதியை நொந்தபடி, திட்டிக் கொண்டே கடைசி வரிசையை நோக்கி நகர்ந்தால், அடுத்த மரத்தடியில் பாடம் எடுக்க வந்த கணக்கு வாத்தியாரின் கும்பகருணக் குறட்டைதான் அது என்று தெரிந்த உடன் அசடு வழிந்தாலும் என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. வேறு வழியின்றி, அந்தப் பாடலை மாணவர்கள் அனைவரையும் கூட்டாகச் சொல்லச் சொல்லித்தான் அவருடைய தூக்கத்தைக் கலைக்க முடிந்தது. வேப்ப மரத்தடியின் சுகமான காற்றோடு, உண்ட மயக்கத்தில் எனக்கும் சில வேளைகளில் உறக்கம் வந்ததுண்டு. அதை உணர்ந்து, சிறு வெட்கத்தோடு அரை வட்டமாய் உட்கார்ந்திருக்கும் மாணவர்களைச் சுற்றி வந்து அதைத் தவிர்த்ததும் உண்டு.

இன்றைக்கும் காஞ்சீபுரத்தில் உள்ள மானாம்பதி அரசுப் பள்ளியில், இரண்டு வகுப்புகளை இணைத்துப் பாடம் எடுக்கையில் வகுப்பறைப் போதாமையினால் மரத்தடிப் பாடம் நடக்கும். மாணவர்களுக்கு, ஆசிரியர் நடத்தும் பாடத்தை விட மரங்கள் பேசாமலே உணர்த்தும் உண்மைகளின் மீதுதான் ஆர்வம் அதிகம். மரத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டும், மேலே இருக்கும் காக்கை, அணில், குரங்கை எல்லாம் வேடிக்கை பார்த்தும் என்னை வெறுப்பேற்றுவார்கள். இதற்காகவே மரத்தடியில் வகுப்பு எடுங்க மிஸ் என்று கெஞ்சும் ஒரு மாணவர் கூட்டம் உண்டு. மரங்களே அவர்களுடைய போதி மரங்கள்.
எங்கள் பள்ளியின் நுழைவுவாயிலிலிருந்து வகுப்பறை வரையிலுமான ஒரு சிறு பாதை முழுவதும் தும்பைப் பூக்கள் பூத்து, நமக்கு வரவேற்பளிப்பது போலத் தலையசைப்பது காலை வேளையில் பெருத்த உற்சாகத்தைக் கொடுக்கும். புங்க மரம், பூவரச மரம், அசோக மரம், பூவரச மரம், வேப்ப மரம் என மரங்கள் நிறைந்த அரசுப் பள்ளிகளே பூவுலக சுவர்க்கங்கள்தான். வாரம் ஒரு முறை வந்தாலும் பெருத்துக் கொண்டிருக்கும் சென்னையைத் தொடும் நேரத்தில் ஒரு அயர்ச்சி வருவதை மறுப்பதற்கில்லை.

சென்னையில் என் மகள் படித்த ஒரு பெயர் பெற்ற பள்ளியில் ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் 7,8 அசோக மரம் தவிர்த்து அங்கு வேறு மரங்களே கிடையாது. அவர்கள் விளையாட மண் தரையும் கிடையாது. முழுக்க முழுக்க சிமென்டினால் பூசப்பட்ட தரை. ஓடி விளையாட முடியாதபடி கட்டுப்படுத்தப்பட்ட பிள்ளைகள். குழந்தைகளைக் கூட்டி வரச் செல்லும் என் போன்ற பெற்றோர் கையில் குடையோடு வெயில் தாளாமல் நின்றபடி அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். அந்த இடம் முழுவதுமே அந்த மதிய வேளையில் காளான் குடைகள் பூத்ததுபோலக் காட்சியளிக்கும். குழந்தைகளே அங்கு போன்சாய் செடிகளாய்த் தொட்டிக்குள் இருப்பது போன்ற பிரமையில் மூழ்கி விடுவேன். இயற்கைச் சூழலுக்கு, கிராமத்துப் பள்ளிகள்தான் நிலை. ஆனால் இன்றோ பெருகி வரும் மக்கள் பெருக்கத்துக்குக் கிராமங்களும் இரையாகி வருகின்றன.

சென்னையில் ஆங்காங்கே தெரு ஓரங்களில் பெரிய பெரிய மரங்களைப் பார்க்கலாம். ஆழ்வார்ப்பேட்டையில் இப்போதும் ஓரங்களில் நின்று தலையாட்டிச் சிரிக்கும் மரங்கள் எம்.ஜி.ஆர் காலத்தில் வைக்கப்பட்டவை. செடிகள் வைத்து, அதைப் பாதுகாக்க இரும்பு வேலிகளும் போடப்பட்டன. அப்படியும் அதில் பல செடிகள் ஆடு, மாடுகளுக்கு இரையாகின. அப்போது தப்பிப் பிழைத்த மரங்களே இன்றைக்கு எங்கள் தெருக்களில் பசும் கைகளை விரித்து, மலர்ப் போர்வைகளைத் தெருக்களில் விரித்து அழகு காட்டிக் கொண்டிருக்கின்றன.

ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இன்றும் ஆழ்வார்ப்பேட்டையில் பரந்து விரிந்த நிலப்பரப்பொன்று மரங்கள் சூழ்ந்து இருக்கத்தான் செய்கிறது. அதுதான் கவிஞர் கண்ணதாசனுக்குச் சொந்தமான கவிதா ஓட்டல் என்று சொல்லப்படும் இடம். அவர் அங்கு உட்கார்ந்து பாடல்கள் எழுதியிருப்பதாகவும் சொல்வார்கள். கான்கிரீட் காட்டிலும் கூட அந்த இடத்தின் அருகில் செல்லும்போது எங்கிருந்தோ கூவும் ஒரு சோகக் குயில் குரலைக் கேட்கலாம். அது எனதா? கவிஞருடையதா? பிரித்தறிய முடியவில்லை.

Sunday, December 18, 2011

முல்லைப் பெரியாறு அணை : ஒரு விளக்கம் - ஒலிப்பதிவு / டிசம்பர் 21 பொருளாதார முற்றுகைப் போராட்டம்


முல்லைப் பெரியாறு அணை 

17.12.2011 அன்று காலை சென்னை எழும்பூர் இம்பீரியல் ஹோட்டல் சிராஜ் மகாலில் "முல்லைப் பெரியாறு அணை : ஒரு விளக்கம்" எனும் தலைப்பில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. மறுமலர்ச்சி இணையதள நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல் குறித்த தமிழ் நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தினர் எடுத்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. அவ்வாவணப்படத்தின் குறுந்தகடு பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை வரலாற்றைத் தெளிவாக தொழில் நுட்ப நோக்கில் விளக்கும் இப்படத்தின் குறுந்தகடுகளை பற்பல படிகள் எடுத்து தமிழர் அனைவருக்கும் விநியோகிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்விற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கிப் பேசினார். மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை அடுத்து கேரளத்தில் மலையாளிகளால் தமிழர்கள் தாக்கப்படுவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அங்கு நம்மவர் தாக்கப்படுகின்றனர்,     உடைமைகள் சூறையாடப்படுகின்றன என்பதற்காக, உணர்வெழுச்சியில், இங்கு வாழும் மலையாளிகளின் கடைகள், வணிக நிறுவனங்களின் மீது நம் இளைஞர்கள் எவரும் பதில் தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், அது நம் பண்பாடு இல்லை என்றும் இருவரும் கேட்டுக்கொண்டனர்.

கேரள அரசுக்கும், கேரளத்தவருக்கும் நமது உணர்வையும், உரிமையையும் வெளிக்காட்டும் விதமாக, வரும் டிசம்பர் 21 அன்று, தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் 13 சாலைகளிலும் அறவழியில் மறியலில் ஈடுபட்டு, பொருளாதார முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர். அதில் யாதொரு கட்சிச் சின்னங்களும், கொடிகளும் இல்லாமல் தமிழர் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

அந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.

mp3 வடிவில்...

முல்லைப் பெரியாறு அணை - ஆவணப்படம் 


பழ.நெடுமாறன் உரை :


வைகோ உரை :



ஒலிப்பதிவு - யுவபாரதி