Friday, February 18, 2011

மெய்யகத்தே மிகும் இன்பம்


பொத்தான் அழுத்தப்பட்டதும் திரை மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. மனம் ஒரு புள்ளியில் லயித்து மௌனித்தது. சிந்தனையற்று உற்று நோக்கிய கண்களுக்குச் சிலை துலக்கமாகத் தெரியத் தொடங்கியதொரு கணத்தில் மறைந்தது. பனித்திரை படர்ந்தது. என்னையறியாமல் விழிகளில் அமிழ்தமெனக் கண்ணீர் பெருக்கெடுத்தது. எத்தனை முயற்சி! எத்தனை பேரின் ஆர்வம்! எத்தனை நாள் தவம்!

எனக்கு முன்னமிருந்தே குரல் கொடுக்கத் தொடங்கிய எம் மூத்தவர்களைச் சற்றே சிந்தித்துப் பார்க்கிறேன். வடசென்னை ம.பொ.சி. நற்பணிப்பேரவையிலிருந்து திரு.சுந்தரபாபு மனுக்கள் பல அனுப்பி, அதற்காக அலைந்து, ஜூனியர் விகடன் இதழில் சிலை தொடர்பான ஒரு பேட்டியில் மனம் குமுறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, தன் தனித்த முயற்சியில் தாத்தா, தொடக்க காலத்தில் வாழ்ந்த வட சென்னையில் சிலை வைக்கும் எண்ணத்தில் இருப்பவர்...

குரோம்பேட்டையில் இருக்கும், தீவிரமாக இயங்கும் சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி. தமிழ்ப் பேரவையின் திரு.இராமானுஜன். ஒவ்வொரு ஆண்டும் தாத்தாவை நினைவுகூர்ந்து சிறப்பாக விழா நடத்துபவர்கள்; அங்கே மார்பளவு சிலை வைத்து மரியாதை செய்பவர்கள்...

அண்ணா நகரில் தெய்வ நெறி மையம் நடத்தும் திரு.சூர்யசந்திரானந்தா, தொடர்ச்சியாக ம.பொ.சி.க்கு மட்டுமல்லாமல் விடுதலைப் போராட்ட வீரர்களையும் நினைவுகூர்ந்து இன்றும் தொடர்ந்து விழா நடத்துபவர்.

சோளிங்கரிலிருந்து எங்களுக்கு அவ்வப்போது மடல் எழுதும் கொண்டபாளையம் திரு.ரங்கநாதன், கடிதத்தோடு நிற்காமல் எம்.எல்.ஏ. போன்ற அரசு இயந்திரத்தின் வெவ்வேறு பாகங்களுக்குத் தவறாமல் கடிதங்கள் மூலை சிலையை நினைவூட்டி வந்தவர்.

ம.பொ.சி. நூற்றாண்டு விழா நடத்திய நாங்கள் முயற்சித்து முடியாமல் கைவிட்ட விழா மலர் வெளியிடும் பணியை, தனியொருவராகவே தாத்தாவின் மணிமொழிகளைத் தொகுத்து விழா மலராக வெளியிட்ட தேப்பெருமாநல்லூர் திரு.உப்பிலி. அவருக்கு உதவிய அவருடைய மகன் திரு.நரசிம்மன்...

இன்னும் வெவ்வேறு ஊர்களில் இருந்து சிலை வைப்பது தொடர்பாகவே பேசிய, இயங்கிய, போராடிய, வருந்திய உள்ளங்கள் ஓராயிரம். அவர்கள் அத்துணை பேரையும் இந்த நேரத்தில் மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

ம.பொ.சி. இந்த மூன்றெழுத்தில் தமிழகத்தின் அரை நூற்றாண்டு வரலாறு அடங்கி இருக்கிறது. செய்த சாதனைகள், நடத்திய போராட்டங்கள், முழங்கிய முழக்கங்கள், அவருடைய எழுத்துகள் ஏன் சறுக்கல்களையும் கூடப் பேசிக் கொண்டே போகலாம். அந்த மாமனிதருடைய நூற்றாண்டு விழா 2006-இல் நெருங்கியபோது, எங்கள் குடும்பத்தார் விழாவாகக் கொண்டாட வேண்டுமென்று முடிவு செய்தனர். அப்படி முன்னெடுக்கப்பட்டு, முடிவெடுக்கப்பட்டபோதே தவிர்க்கமுடியாமல் எங்கள் முன்னெழுந்த பெயர் கலைஞர் கருணாநிதி. அவருடைய சொற்களிலேயே சொல்ல வேண்டுமானால், ஆயிரம் முரண்கள் இருப்பினும் கூடப் பல காலம் இணைந்து செயல்பட்டவர்கள்; போற்றியும் தூற்றியும் கொண்டவர்கள்.

இந்த இடத்தில் அய்யா பெ.சு. மணி, திரு.சின்னக் குத்தூசி ஆகியோருக்கு நிச்சயமாக நாங்கள் நன்றி பாராட்ட வேண்டும். முதல்வர் கலைஞர் அவர்களை அணுகி அழைக்க உதவியவர்கள். அவர்களின் உதவியின்றி ம.பொ.சி. நூற்றாண்டு விழா அத்துணை கோலாகலமாகச் சாத்தியப்பட்டிருக்காது.

மிகச் சிறப்பாக நடந்து விழாவில் முதல்வர் அவர்கள் நாங்கள் மனம் மகிழும்படியாக ம.பொ.சி.யின் நூல்களை  நாட்டுடைமையாக்குதல், அஞ்சல் தலை வெளியிடுதல், சென்னை நகரின் மையமான ஒரு இடத்தில் சிலை நிறுவுதல் என்ற எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அந்த விழாவிலேயே அதனை அறிவிப்பாகவும் வெளியிட்டார். ம.பொ.சியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, ரூ. 20 இலட்சம் பரிவுத் தொகையாக வழங்கப்பட்டது. ஆகஸ்டு 15 அன்று சென்னை கோட்டையில் ம.பொ.சி. நினைவு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. சிலைக்கான பணியும் தொடங்கப்பட்டு விட்டதாகக் கேள்விப்பட்டு அகமகிழ்ந்தோம்.

இடையில் தம்பிகள் திருஞானம், ஞானசிவம் இருவரும் சிலையைப் பார்த்து ஆலோசனையும் வழங்கிவிட்டு வந்தனர். திடீரென ஏற்பட்ட புழுதிப் பரப்பொன்று கண்களை மறைத்தது போல் பிறகு சிலை பற்றிய செய்தியும் மறைந்து, மறந்து போனது. எங்களுக்குள் பேசினோம்; பரிதவித்தோம்; காலணாத் தொண்டர்களென்று பிற கட்சியினரால் அன்று கேலி பேசப்பட்ட, எங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே நாங்கள் கருதும் எங்கள் தமிழரசுக் கழகத் தோழர்கள் எங்களை விடவும் மிக அதிகமாக வேதனைப்பட்டனர்.

பிறகு தொடங்கியது மனு யுத்தம்; ஓயாத நினைவூட்டல். தினமணியில் எனக்கு எழுத வாய்ப்பு கிடைத்தபோது சென்னையில் வைக்கப்பட வேண்டிய ம.பொ.சி. சிலையை எனது கட்டுரையின் மூலப்பொருளாகக் கொண்டேன். அக்கட்டுரை மண்மொழியிலும் தோழர் இராசேந்திர சோழனால் மீள் பதிவு செய்யப்பட்டது. எழுத்தாளர் பிரபஞ்சன், குடும்ப நண்பர் கோபாலபுரம் செல்வதுரை ஆகியோரும் அவர்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டனர்.

பிறகு ஏற்பட்டதொரு நீண்ட அமைதிக்குப் பிறகு, கவிஞர் அமுதகீதன், திரு. எக்பெர்ட் சச்சிதானந்தம், காஞ்சி அமுதன் ஆகியோரின் முயற்சியின் பேரில் அவர்கள் தொடங்கியுள்ள இலக்கியக் களம் என்னும் அமைப்பின் மூலம்  காஞ்சிபுரத்தில் ம.பொ.சி. - நாம் அறிந்ததும் அறியாததும் என்னும் தலைப்பின் கீழ் அரைநாள் கருத்தரங்கமொன்றை நடத்தினர்.

பின்னர் தோழர் யுவபாரதி மூலமாக, என்னுடைய வலைப்பூவைப் படித்த தோழர் வெற்றிவேலின் உறுதுணையுடன் நண்பர் ஆனந்த் செல்லையா  மனம் வருந்தும் ம.பொ.சி குடும்பத்தைக் குமுதத்தில் வெளிச்சமிட்டுக் காட்ட, மாயமானதொரு காட்சி போல் அடுத்த சில நாட்களில் சிலை பற்றிய அறிவிப்பினை அரசு வெளியிட்டது. ஆனந்த அதிர்ச்சி. அதிர்ச்சிக் கடல் என எத்தனைச் சொற்களை இட்டு நிரப்பினாலும் அந்த நேரத்து என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.

09.02.11 அன்று சிலை திறப்பு என்ற அறிவிப்பு வெளியான கணத்தில் என் அலைபேசி அழைப்புகளாலும் குறுஞ்செய்திகளாலும் நிரம்பியது. கிண்டி, விவேகானந்தர் இல்லம் எனப் பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டுத் திடீரென்று தி.நகர் - போக் ரோடு சந்திப்பில் என்று அந்த அறிவிப்பு சொன்னது. பணிபுரியும் இடத்துக்கும் சென்னைக்குமான இடைவெளி தொடர்ந்த என் பயணங்களால் நிரப்பப்பட்டது. சென்னையின் அனல் என்னைப் பொறுத்தவரை மறைந்து குளிர் பனியென மனது நிரம்பித் தளும்பத் தொடங்கியது. அந்த நாளும் வந்திடாதோ என்று நான் ஏங்கிய அந்த நாளும் வந்தது. மனம் என் வீட்டில், என்னிடம் இல்லாமல் எனக்கு முன்னரே தி. நகருக்குப் பயணப்பட்டு விட்டது.

அரசின் சடங்கு, சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றாய் நிறைவேறின. நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள், நகரத்தின் முக்கியமான மனிதர்களென விழா நடக்குமிடம் நிரம்பியது. பின்னால் ஒரு மக்கள் கூட்டம் குழுமத் தொடங்கியது. தாத்தாவின் நண்பர்கள், அன்பர்கள் என ஒவ்வொருவராய் வரத் தொடங்கினர். நான் அங்கே இருந்தேன்; அங்கே இல்லை. ஒவ்வொருவருடனும் பேசினேன், கை குலுக்கினேன், வணங்கினேன். எதையும் செய்யாமல் உட்கார்ந்துமிருந்தேன். ஏதோ ஒன்று என்னிலிருந்து பிரிந்து, மறைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டிருந்த சிலைக்குள் சென்று விட்டது. 

முதல்வர் வந்து, பெருமக்கள் உரையாற்றிய பின் சிலை வெளிப்படையாய்த் திறந்து வைக்கப்பட்டது. கண்கள் பெருக்கெடுக்கத் தொடங்கியது. மனம் விம்மியது. மறைந்த என் தந்தை ம.சி.திருநாவுக்கரசுவை நினைத்துக் கொண்டேன். சில்லிட்டிருந்த என் கரங்கள் கண்மலர்களைத் தாங்கிக் கொண்டது. நான் மட்டும் அவ்விடத்தில் என் தாத்தாவுடன் வழக்கம்போல் பேசியபடி இருப்பது போன்றதொரு உணர்வு.

என் வாழ்வின் பொருளில் ஒரு பாதியை நான் அடைந்து விட்டதான எண்ணம்; மகிழ்ச்சி; மனம் ஆனந்தப் பெருக்கில் லயித்தபடி; நானும் என் தாத்தாவும்.

- தி.பரமேசுவரி

No comments:

Post a Comment