Monday, February 7, 2011

ரௌத்ரம் பழகு

- தி.பரமேசுவரி 
கானலம்பெருந்துறை எனச் சிறப்பிக்கப்படும் மூதாதைக் கூட்டம்; நம் தொல்பழங்குடி மக்களின் நீட்சியாய் நெய்தல் மக்கள்; கடற்கரைப் பரதவர். மிதமாய் வீசும் வாடைக் கொண்டலின் சுகத்தில் திளைக்கும் கடற்புறாக் கூட்டம். நுரை பூத்துக் கிடக்கும் நெய்தல் துறை; உமணரின் உப்பு வயல்கள்; பரந்து விரிந்து கிடக்கும் வெள்ளை மணற்பரப்பு.

நாவாய்களும் நாட்டுப்படகுகளும் கட்டுமரங்களும் ஓடிய பவ்வத்துள் இன்று விசைப் படகுகளின் ஓசை. நெய்தலந்துறையின், பரதவரின் பழம்பெருமை அழிந்து, ஒடுக்கப்பட்டு மீனவ சாதியென சுருங்கிய நொய்மை. தெற்கே இந்தியப் பெருங்கடலும் கிழக்கே வங்காள விரிகுடாவுமாகத் தண்ணீர் சூழ்ந்த மாநிலமான தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களின் இன்றைய கேட்பாரற்ற, கவனிப்பாரற்ற சூழல்.
 
பழவேற்காட்டில் தொடங்கி குமரி மாவட்டத்தின் கேரள எல்லையான நீரோடி வரைக்கும் சுமார் 1,225 கி.மீ பரப்புள்ள கடற்கரைப் பகுதி கொண்ட தமிழகத்தில் கடல்சார் வாழ்வுடன் சுமார் 10 லட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். மீன் பிடிப்பதையே தொழிலாகக் கொண்டு வாழும் மிகுதியான இம்மக்கள் தமிழகத்தின், இந்தியாவின் கடல்சார் வளத்துக்குப் பெரும் பங்களிப்பைச் செய்து வருகிறார்கள். லட்சக்கணக்கான மதிப்புள்ள மீன்களைப் பிடிப்பதும் முத்துக் குளித்தலும் உப்பு விளைத்தலுமான இவர்களது வாழ்வு அன்றாட உணவுக்கே துன்பப்படும் நிலையில். துறைவனும் சேர்ப்பனுமென சங்க காலத்தில் போற்றப்பட்ட நிலை மாறி இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாகவே கழிகிறது வாழ்க்கை.

பரதவர்களின் பண்டைவீரம் இன்றும் சவாலும் சாகசமும் நிறைந்த அன்றாடக் கடற் பயணத்தில் தெறிக்கிறது. மரணத்தின் விளிம்பில் ஊடாடும் இவர்களின் நெருக்கடியான வாழ்வை நிலப்பரப்பில் இருப்பவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போவதும் இரு வேறு நிலப்பரப்பு மக்களுக்குமான இடைவெளியே இன்றைய பெருஞ்சோகம். கடல்வாழ் மக்களின் துயரம் மண்வாழ் மக்களால் பிரதிபலிக்கப்படாமல் கவனமற்றே கிடக்கிறது.

இராமேசுவரத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலிருக்கும் கச்சத்தீவு, நம் மீனவர்கள் காலங்காலமாக மீன் பிடித்துவந்த பகுதி. இராமநாதபுரத்தைத்தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட சேதுபதி மன்னனுக்குச் சொந்தமான எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று. ஆமைகள் அதிகமுள்ள இடமாதலால் இது கச்சத்தீவு எனப்பட்டது (கச்சம் - ஆமை). இந்திய நாட்டின் தமிழகத்திலுள்ள இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமான கச்சத்தீவைத் திடீரென இலங்கை அரசு உரிமை கொண்டாடியபோது, அப்போதைய இந்தியப் பிரதமரான நேரு கடுமையாக எதிர்த்தார். ஆனால் அவருக்குப் பின்னால் பிரதமர் பதவிக்கு வந்த இந்திராகாந்தி சில, பல அரசியல் காரணங்களுக்காகத் தமிழக அரசின் ஒப்புதலின்றி, தமிழக மக்களின் அனுமதியின்றி 1974இல் இலங்கை அரசுக்குத் தாரை வார்த்தார். ஆனாலும் தமிழக மீனவர்களிடம் மிகுந்த அக்கறை கொண்டிருந்த அரசு அவர்களின் நலனுக்காகச் சிலவற்றை ஒப்பந்தத்தில் சேர்த்தது.

அவை,

1.    இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் இளைப்பாறலாம்.
2.     வலைகளைக் காய வைக்கலாம்.
3.    அந்தோணியார் கோயில் விழாவுக்கு ஆண்டுதோறும் வரலாம்.

என்பனவாகும். ஆனால் மெல்ல மெல்ல காட்சிகள் மாறத் தொடங்கின. அதுவரையிலும், நிம்மதியாக அந்தப் பகுதியில் மீன் பிடித்து வந்த, ஓய்வெடுத்த, தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படை அடிக்க ஆரம்பித்தது.

இதன் தொடக்கமாக, 1970 களைச் சொல்லலாம். இலங்கையில் தமிழரைத் துன்புறுத்திய இனக் கலவரம் தொடங்கிய காலகட்டம். இரண்டாந்தர மக்களாகச் சொந்த நாட்டிலேயே தமிழர்கள் இழிவு படுத்தப்பட்டனர். இலங்கை அரசுக்கு எதிராக அணி திரண்ட ஈழத்தமிழர்களுக்குத் தமிழக மீனவர்கள் உதவிகள் செய்வதாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பின. மீனவர்கள் வழியாகத் தமிழக அரசு மறைமுக உதவிகள் செய்வதாகவும் இலங்கை அரசு ஐயப்பட்டது. அது வரையிலும் இலங்கையின் பருத்தித்துறை, யாழ்ப்பாணம் வரை வந்து மீன் பிடித்து வந்த இராமேசுவரம் மீனவர்கள், இந்த ஐயத்திற்குப் பிறகு தடுக்கப்பட்டனர்; கைது செய்யப்பட்டனர்; சுடப்பட்டனர். இலங்கையில் போராட்டம் தீவிரமடையத் தொடங்கிய நேரத்தில் மீனவர்களின் ஒரு பிரிவான கரையாளர் இனத்தில் பிறந்த பிரபாகரனின் மீது காட்ட முடியாத சினத்தை நம் மீனவர்கள் மீது காட்டியதாகவும் ஒரு கருத்துண்டு. விடுதலைப் புலிகள் நிகழ்த்தும் வன்முறைக் கொலைகள் என்று புலிகளுக்கு எதிராகப் பரப்புரை செய்யவும் இலங்கை அரசு  மீனவர் படுகொலைகளைப் பயன்படுத்திக் கொண்டது.

தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக எழும் குரல்களை நசுக்கி, மீண்டும் ஈழத்தில் போராட்ட எண்ணங்கள் மலராதபடிக்கு அதன் வேர்களைக் கருக்குமுகத்தான் எல்லையோரப்பகுதிகளைத் தம் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வருவதே இலங்கை அரசின் நோக்கமாக இருக்க முடியும். அதற்கு அத்துமீறி உள்நுழையும் தமிழக மீனவர்கள் தடையாக இருப்பார்களென்று அந்த அரசு கருதுவதாலேயே இத்தகைய தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. கடலையும் கடற்கரையோரங்களையும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்குக் கைமாற்றிக் கொடுக்கவே இந்தக் கொலைகள் இந்திய - இலங்கை அரசுகளால் கூட்டாக நடத்தப்படுவதாகவும் கருத இடமிருக்கிறது. இந்தியாவின் கிழக்குக் கடற்படைக் கமாண்டோ இராஜசேகர் அளித்த ஒரு பேட்டியில் "இலங்கைக் கடற்படையினர் இந்தியாவில் எங்களை மீறி நுழைய வாய்ப்பில்லை" என்று கூறுவது கவனிக்கத்தக்கது. நீ அடிப்பதுபோல அடித்தால், நான் அழுவது போல அழுகிறேன் என்னும் பகல் வேடதாரிகளின் பொய்ப்பூச்சு உப்புக்கடல்நீரால் கரைந்தபடிதான் இருக்கிறது. இவ்விரு அரசுகளின் இந்தப் பொருந்தாக் கூட்டணியின் முகமூடி கிழிபடும் நாளில் இந்திய இறையாண்மைக்குச் சரியான பரிசு கிடைக்குமென்று நாம் நம்பலாம்.

கடல் மேல் பிறந்து, கண்ணீரிலும் மிதக்கின்ற தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும்போது, சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதும், அவர்களின் மீன் வலைகள் அறுக்கப்படுவதும், அவர்கள் பிடித்த மீன்கள் சூறையாடப்படுவதும் தொடர்ந்த கதையாகவே நடந்து வருகிறது. 1983 முதல் 1991 வரை தாக்கப்பட்ட, கொல்லப்பட்ட மீனவர்கள் என்று புள்ளிவிவரங்களை அளித்துவந்த அரசு அதன் பிறகு கணக்கெடுப்பதையே நிறுத்தி விட்டது. கடந்த 30 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டதாக ஒரு கணக்கை இராமேசுவரம் மீனவர்கள் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் உயிருக்கு உத்திரவாதமின்றி, கடல் நடுவில் பயணிக்கும் மீனவன் பேதம் பார்ப்பதில்லை; பகை பாராட்டுவதுமில்லை. அவனது உயிர்நாடியில் மரணம் கசிந்து கொண்டே இருக்கிறது. ஆனால், எல்லை தாண்டி, புயல் மழையில் சிக்கி உணவின்றித் தவிக்கும் மனிதர்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும் எல்லையற்ற பெருங்கருணையும் அன்பும் கொண்டவன் அவன்.

உண்மையில் கடலோரம் விடுதிகள், பூங்காக்கள், செயற்கைத் துறைமுகங்கள், கேளிக்கை மையங்கள், இறால் பண்ணைகள் என அரசு பெருமுதலாளிகளோடு கை கோர்த்துக் கொண்டு தம் சுய லாபத்துக்காகப் பல்வேறு வணிகத் திட்டங்களைச் செயல்படுத்த எண்ணியுள்ளது. நிலங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களமைத்து, மக்களின் வளத்தைச் சுரண்டுவது போலவே கடலையும் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கும் மீன்பிடி நிறுவனங்களுக்கும் பிரித்துக் கொடுத்துச் சம்பாதிக்கவே மீன்பிடி மசோதாவை கொண்டு வர எண்ணியது. இது இயற்கையாகவே கடல் காவலர்களாக விளங்கும் மீனவர்களைக் கடலை விட்டு விலக்கி வைக்கும் திட்டமாகும். மீனவர்களின் கடுமெதிர்ப்பு காரணமாக அரசு தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ளது. மீனவர்கள் எதிர்க்கும் சேது சமுத்திரத் திட்டத்தையும் இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும்.

இத்தகையதொரு விரிவான பின்புலத்தில் மீனவர்களின் கொலைகளைப் பற்றி நாம் பேச வேண்டியிருக்கிறது. கடல் எல்லை பற்றிக் குறிப்பிட்டு அறிய இயலாத நிலையில் மீனவர்கள் எல்லை தாண்டிப் போவதைப் பெருங்குற்றமாகச் சொல்ல முடியாது. மட்டுமின்றி, எல்லை தாண்டும் மீனவர்களைக் கைது செய்யலாம்; சிறைப்படுத்தலாம்; குற்றம் சாட்டி நம் இந்திய அரசிடம் ஒப்படைக்கலாம். உயிரைப் பறிக்கும் அதிகாரத்தை இவர்களுக்குத் தந்தது யார்? பாகிசுதான், பங்களாதேசு, தாய்லாந்து, இலங்கை மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டியபோது இந்திய அரசு அவர்களை என்ன செய்தது? கைது செய்து, அந்த நாட்டுக்குத் தகவல் கொடுத்தபின் நல்லெண்ண அடிப்படையில் அவர்களை விடுதலை செய்தது. இது ஏன் தொழில் காரணமாக எல்லை தாண்டும் நம் அப்பாவி மீனவர்களுக்கு நிகழவில்லை? அப்போது நம் கடற்படை என்ன செய்து கொண்டிருக்கிறது? ஏன் இலங்கை அரசு சொல்லும் உப்புசப்பில்லாத காரணங்களை ஏற்றுக்கொண்டு நம் நடுவண் அரசு சும்மா இருக்கிறது?

உலகெங்கிலும் உள்ள மீனவர்கள் சந்திக்கும் சிக்கல்தான் இது. எங்கு மீன்வளமிருக்கிறதோ அதைத் தேடிச் செல்லும் மீனவர்கள் எல்லைக்கோட்டைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்க முடியுமா? இதனைப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணனும் ஒப்புக் கொண்டிருக்கிறார். "இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பது முறையற்றதுதான். ஆனாலும், கடலுக்குப் புறப்படும் எந்த மீனவனும் மீன் வளம் எங்கிருக்கிறதோ, அங்கேதான் போவார்கள். எனவே இந்திய, இலங்கை எல்லைக்கோட்டைத் தாண்டி மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவரைத் தடுக்க முடியுமா? அப்படி அவர்கள் சென்றால், அவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுடலாமா? துப்பாக்கியால் சுடாதீர்கள். இந்திய மீனவர்களைக் கொல்லாதீர்கள் என்று இலங்கை அரசிடம் சொல்லியுள்ளோம். ஒத்துழைப்பதாக இலங்கை அரசும் உறுதி அளித்துள்ளது" என்பது அவர்தம் கருத்து.

அன்று ஒரு செல்லப்பன், நேற்று ஒரு வீரபாண்டி, இன்று மாற்றுத்திறனாளியாக, ஒரு கை பகுதி செயலிழந்தவரானாலும் நம்பிக்கை தளராமல் மீன் பிடிக்கச் சென்ற ஜெயக்குமார் என்று இன்னும் எத்தனை களப்பலிகளைத் தமிழகம் இழந்து கொண்டிருக்கப் போகிறது? ஒவ்வொரு முறையும் இத்தகைய கொடூர நிகழ்வுகளின்போது, இன உணர்வுடன் அப்போதைக்கு அங்குமிங்குமாய்க் குரலெழுவதும் உடனே தமிழக அரசு நடுவணரசுக்குத் தகவல் அனுப்புவதும், கடிதமெழுதுவதும், தந்திகள் கொடுப்பதும் இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதுமாகக் கொடுங்காலம் கழிந்து கொண்டிருக்கிறது. 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்தபோதும் நடுவணரசு இது வரையிலும் ஒரு குடும்பத்திற்கேனும் நிவாரணத் தொகையோ, ஆறுதல் அறிக்கையோ அளித்ததேயில்லை. தமிழக அரசோ ஒரு சடங்கு போல தொகையும் அரசு வேலையும் வழங்கி அமைதியடைகிறது. தேர்தல் நெருக்கம் காரணமாக, அண்மையில் நடந்த மரணத்திற்குச் சில சிறப்பான காட்சிகள் நடந்தேறின. கட்டியணைத்து ஆறுதல் சொல்வதும் பணம் வழங்குவதும் நடந்ததோடு சிறப்புப் பரிசாக மீனவ சமுதாயத் தலைவர் சிங்காரவேலரின் 151-ஆவது பிறந்தநாள் விழாவை அரசே கொண்டாடும் என்ற அறிவிப்பும் பின் தொடர்ந்தது.

தன் வாழ்வாதாரங்கள் சீரழிக்கப்பட்டு, உணவுக்குத் திண்டாடும் நிலையிலும், உயிருக்கு உத்திரவாதமில்லாத, உயிராபத்து அதிகமுள்ள மீன்பிடித் தொழிலை இப்போதும் மீனவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கடலில் இறங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் கண்ணீரோடு செந்நீரும் கடலில் கலந்துகொண்டுதான் இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் முதல்வர் கருணாநிதி சொன்னார், "இது தொடர்ந்தால், எங்கள் மீனவர் கை, மீனை மட்டுமே பிடித்துக் கொண்டு இருக்காது". இன்றைக்கு அது காற்றோடு கலந்த சொற்களாகி விட்டன. காற்றின் ஓசையில் மீனவக் குடும்பங்களின் அழுகையொலி கரையோர மனிதர்களை வந்தடைவதில்லை.

இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு ஒன்றென்றால் பதறும் நடுவணரசு, தமிழக மீனவர்களை மட்டும் மனிதர்களாகவே சிந்திப்பதில்லை. பிரான்சு நாட்டில் ஒரு சீக்கியருக்கு உரோம-மதப் பிரச்சனை எழுந்தபோது நம் பிரதமர் அடுத்த விமானம் பிடித்து அந்நாட்டிற்குச் சென்று சிக்கலைச் சரி செய்தார். ஆனால், நமக்கென்று வரும்போது சும்மா இருக்கும் அவர்கள் முகம் பார்த்து, "சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூடத் தமிழ் மீனவனின் உயிருக்கு இல்லையா?" என்னும் சீமானின் இந்தக் கேள்வியை நாமும் கேட்கத் தோன்றுகிறது.

இனியாகிலும், தாள்களைக் கொண்டே அரசு நடத்துவதைக் கைவிட்டு நம் தமிழக அரசு, தன்மான வாளெடுத்து நடுவணரசிடம் கேள்விகள் கேட்டால் நம் தமிழக மீனவனுக்குக் கடல் வசப்படலாம். நடக்குமா?     

7 comments:

  1. கட்டுரை நல்லாருக்கு மேடம்.. விகடன்ல உங்க படைப்பை பார்த்திருக்கேன்

    ReplyDelete
  2. நன்றி செந்தில்குமார். உங்கள் படைப்புகளை ஏராளமாக நானும் விகடனில் படித்திருக்கிறேன். தொடர்ந்து வாருங்கள் நண்பரே.

    ReplyDelete
  3. அன்புடையீர்
    உணர்வு பொங்க அருமையாக எழுதியுள்ளீர்கள்.

    எனினும் சூழல் மாறாதவரையிலும் தாளெடுக்கும் அரசு வாளெடுக்கும் வாய்ப்பில்லை.
    நம் எதிர்ப்பு வலி‌மையாகும் பொழுது
    அனைத்து நாட்டுத் தமிழர் நலனும் பாதுகாக்கப்படும் . அந்நாள் விரை வில் வருவதாக!
    சில இடங்களில் கிரந்தத்்ிதை த் தவிர்த்துள்ள நீங்கள் எல்லா இடங்களிலுமே பிற ‌எழுத்துகள் இன்றியும் பிற மொழிச் சொற்கள் இன்றியும் எழுதுவதே நலம பயக்கும்.

    உத்தரம் என்று சொல்ல எண்ணி உத்திரம் எனத் தவறாக எழுதியுள்ளீர்கள். இது போன்ற தவறுகளையும் தவிர்க்க வேண்டுகிறேன்.

    உங்கள் ‌ தொண்டு தொடரட்டும்! உங்கள் புகழ் உயரட்டும்!

    தோழமையுடன்
    இலக்குவனார் திருவள்ளுவன்

    2011/2/7 தி.பரமேசுவரி

    அன்புள்ள தோழருக்கு வணக்கம்.

    கீழ்க்கண்ட கட்டுரை படித்துத் தங்கள் மேலான கருத்துகளைக் கூறவும். நன்றி.

    ரௌத்ரம் பழகு


    --
    தி.பரமேசுவரி




    --
    பின்வரும் பதிவுகளைக் காண்க:

    www.ilakkuvanar.org
    thiru2050.blogspot.com
    thiru-padaippugal.blogspot.com
    http://semmozhichutar.com

    ReplyDelete
  4. நல்ல எழுத்து நடையுடன் பிரச்சினையின் ஆணிவேரை அலசுகிறது கட்டுரை.

    குரல் கொடுப்போம்!

    ReplyDelete
  5. ஒவ்வொரு நாளும் உயிருக்கு உத்திரவாதமின்றி, கடல் நடுவில் பயணிக்கும் மீனவன் பேதம் பார்ப்பதில்லை; பகை பாராட்டுவதுமில்லை. அவனது உயிர்நாடியில் மரணம் கசிந்து கொண்டே இருக்கிறது. // உண்மைதான்.... இலக்குவனார் சொல்வது போலத் தனித்தமிழிலேயே எழுதலாமே! 'அதி அசுரனின்' கட்டுரைக்கு நீங்கள் எழுதிய மறுப்புக் கட்டுரை படித்தேன். 'திராவிடத் தந்திரம்' என மும்மொழிக்கொள்கையை மறைமுகமாகக் கொண்டுவர நினைக்கும் தமிழக அரசு பற்றிய உங்களுடைய கருத்துகள் பலருக்கும் சென்று சேர வேண்டியவை.. எனவே 'கீற்று' முதலிய பொதுத் தளத்தில் வெளியிட்டுப் பின்னர் வலைப்பூக்களில் இடலாமே!

    ReplyDelete