-முனைவர் தி. பரமேசுவரி
நன்றி : தடாகம்.காம்
மனிதன் காலம் காலமாக ஓரிடத்தை விட்டு மற்றோரிடத்திற்குப் பெயர்ந்து கொண்டே இருக்கிறான். ஓரிடத்தில் தங்குதல் என்பது எப்படி மனித இயல்புகளில் ஒன்றோ அப்படி அதன் எதிரிடையான புலம் பெயர்தலும் மாந்த இயல்பே. பரவிப் படர்ந்த சமூகம் தங்கி வாழத் தலைப்பட்டபோது மண் சார்ந்தும் குழு, இனம் சார்ந்தும் பற்றுப் பிறந்தது.
வணிகத்துக்காகவும் உயர்கல்விக்காகவும் போர்க் காரணங்களுக்காகவுமே புலம் பெயர்தல் நிகழ்ந்ததாகத் தொல்காப்பியம் கூறுகிறது. நம் ஆற்றுப்படை நூல்களைப் புலம் பெயர் நூல்களின் முன்னோடியாகக் கொள்ளலாம். பண்டைப் புலவர்களின் இயல்பும் புலம் பெயர்தலாகவே இருந்தது. துறவிகளுக்கும் ஓரிடத்தில் தேங்குதல் என்பது மறுக்கப்பட்டது. ‘புலம் பெயர்தல்’ என்கிற போது நாம் கவனிக்க வேண்டியது ‘சென்று மீளுதல்’ , ‘சென்றடைந்த இடத்திலேயே தங்கி வாழ்தல்’ என்பது. தொல்காப்பியர் குறிப்பிட்ட பிரிவின் வகைப்பாடு சென்று மீளுதலைக் குறிக்கின்றது. இத்தகைய மேனாட்டுத் தொடர்புகள் பற்றி, பிளினி, பெரிப்ளூஸ், தாலமி போன்ற மேலை நாட்டினர் தம் குறிப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.
தொல் துறைமுகங்களான முசிறி, தொண்டி, கொற்கை, காவிரிப்பூம்பட்டினம் போன்ற இடங்களிலிருந்து யானைத் தந்தங்களும் வாசனைப் பொருட்களும் முத்தும் அரிசியும் இஞ்சியும் மிளகும் பாபிலோனியாவிற்கும் கிரேக்கத்திற்கும் யவனத்திற்கும் சோனகத்திற்கும் சீனத்திற்கும் இன்ன பிற நாடுகளுக்கும் ஏற்றுமதியாயின. தமிழகத்தையும் ஈழத்தையும் தங்களின் பூர்வநிலங்களாகக் கொண்ட தமிழர்கள் பழங்காலத்திலிருந்தே பர்மா, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து, இந்தோனேஷியா முதலான நாடுகளுக்கு வணிகத்தின் பொருட்டுச் சென்று வாழ்ந்து வந்தனர். இந்தியாவின் பல பகுதிகளிலும் உலகின் பல நாடு நகரங்களிலும் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ‘இன்று உலகில் 72 நாடுகளில் தமிழர் வாழ்வதாக’ தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் குறிப்பிடுகின்றார்.
நந்தமிழ்நாட்டிலும் யவனர், கிரேக்கர், சோனகர், சீனர் போன்ற நெடுந்தூரத்தினரான பிற நாட்டவர் நம் நாட்டின் வளம், வீரம், கொடை, வாணிகம், அறிவு போன்ற காரணங்களால் தொழில் நிமித்தம் இங்கு புகுந்து கலந்து வாழ்ந்திருக்கின்றனர் என்பதை,
“பல்லாயமொடு பதிபழகி
வேறுவே ருயர்ந்த முதுவா யொக்கற்
சாறயர் மூதூர் சென்று தொக்காங்கு
மொழி பல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்தினி துறையும்…”
என்று பட்டினப்பாலை கூறுகிறது. பல பழந்தமிழ்ப்பாக்களும் இக்கூற்றை வலியுறுத்துகின்றன. இப்பாடலுக்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர் “பலப்பல சாதிகளாயுயர்ந்த தத்தம் நிலத்தைக் கைவிட்டுப் போந்த பல பாடை மிக்க மாக்கள் பல திரளோடே இவ்வூரிடத்தே பழகி ஈண்டை நன்மக்களோடே கூடி நன்றாக விருக்கு மறுகு” என்கிறார். ‘புலம் பெயர் மாக்கள்’ என்று சிலம்பில் வரும் சொற்றொடருக்குக் ‘கடலோடிகள்’ என்று அரும்பதவுரைகாரர் பொருளுரைக்கின்றார். ‘புலம் பெயர் மாக்கள்’ என்றாலே ‘அயல்நாட்டினர்’ என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் லெக்சிகனும் உரைக்கிறது. மேலும் மேற்படிப் பாடலில் பயின்றுவரும் ‘மாக்கள்’ என்ற சொல்லுக்கு ‘ஐயறிவுடையோராதலின் என்று சோனகர், சீனர் முதலியோரை’ என்று நச்சினார்க்கினியர் விளக்கம் தருகின்றார். இதன் மூலம் ‘சென்று மீளுதலை’ உயர்வாகக் கருதிய அக்காலத் தமிழர் ‘சென்ற இடத்துத் தங்கி வாழ்தலைக்’ குறைவு பட்டதாகவே நோக்கியுள்ளனர் எனத் தெரிகிறது. போர் மேற்சென்ற அரசர்களும் கூடத் தான் வெற்றி பெற்ற நாடுகளில் தன் சார்பு ஆட்சியை நிலைநிறுத்தாமல் திறை பெற்றுத் திரும்பியே இருக்கின்றனர். ‘முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை’ எனும் தொல்காப்பிய வரியும் சென்ற இடத்தில் தங்கி வாழ்தல் இல்லை என்பதை உணர்த்துகிறது.
ஆனால் இவை யாவற்றையுமே உயர்த்தட்டு மக்களின் வாழ்க்கைப் பதிவாகவே கொள்ளவேண்டும். வணிகத்திற்காகச் சென்றவர்களுடன் சார்நிலை மற்றும் கீழ்நிலைப் பணிகளுக்காகச் சென்ற மக்கள் அங்கேயே தங்கி இருந்து பணிபுரிந்திருக்க வேண்டும். பிற்காலச் சோழர் காலத்தில் படைநடத்திச் சென்றவிடங்களில் எல்லாம் கோயில் கட்டுதல், தொடர் வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் செய்தல், பெருநிலை எய்திய கடல் வணிகம் போன்ற செயல்பாடுகளினாலும் மக்கள் அங்கு சென்று தங்கியிருப்பர். அவ்விதம் சென்றவர்கள் நாளடைவில் அவ்வவ்விடங்களையே தத்தம் வாழிடங்களாகக் கொண்டு வாழ்ந்திருப்பர்.
ஆங்கிலேயர் தேயிலை மற்றும் இரப்பர் தோட்டத் தொழில் சார்ந்த அடிநிலைப் பணிகளுக்காகவும் இருப்புப் பாதை அமைக்கும் பணிகளுக்காகவும் தம் காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட பிஜி, மத்திய இலங்கை, மலேஷிய, சிங்கப்பூர் முதலான நாடுகளுக்கும் தமிழகத் தமிழர்களைக் குடியேற்றினர். இங்கு தமிழ்நாட்டின் வரலாறு, தமிழர் வரலாறு என்கிற இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டினை நுண்மையாகக் கவனிக்கவேண்டும். தமிழ்நாட்டின் தொல்வரலாறு என்கிறபோது ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகு’ பற்றிப் பேசவேண்டும். அல்லது இன்றைய நிலையில் நமது ‘திராவிட சகோதர’ இனங்களால் நாம் இழந்துவிட்ட பகுதிகள் தவிர்த்து, இன்றைக்கு எஞ்சியிருக்கிற தணிகை முதல் குமரி வரையிலான பகுதிகள் குறித்துப் பேசவேண்டும். ஆனால் தமிழரின் தொல்வரலாறு என்கிறபோது திருவேங்கடம் முதல் திருக்கோணமலை வரையிலும் பரந்து வாழ்ந்து வரும் நம்மின மக்கள் வரலாற்றை முன்வைத்தே விரிவு பெறவேண்டும். ஆனால் தமிழர் வரலாறு சார்ந்து தமிழகத்தில் எழுதப்பட்டுள்ள முந்தைய அறிவுசார் நூல்களும் கூட அப்படிக் கண்ணுராத காரணத்தால் குறைவுபட்ட பார்வையுடையதாகவே இருக்கிறது.
தமிழகத் தமிழரைப் போலவே ஈழத் தமிழரும் முன்பு கல்விக்காகவும் வணிகத்திற்காகவும் மட்டுமே புலம் பெயர்ந்திருக்கின்றனர். ஆனால் சொந்த நாட்டிலேயே உயிருக்கு உத்தரவாதமின்றி விரட்டப்பட்டும் வெளியேறியும் உலகின் பிற நாடுகளுக்கும் சிதறிச் செல்கிற அவல வாழ்க்கைக்கு இன்று தள்ளப்பட்டுவிட்டனர். சிங்கள ராணுவத்தின் அடக்கு முறையால் ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர்ந்தோரே இன்று அவர்களில் புலம்பெயர்ந்தோர். ஆங்கில ஆட்சியிடமிருந்து பெறப்பட்ட இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின் ஆக்கப்பட்ட இலங்கையின் புதிய ஆட்சித் திட்டத்தின் கீழ் படிப்படியாகத் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நேர்ந்ததும், அதன் காரணமாக தமிழ்த் தேசியக் கருத்தாக்கம் வலுப்பெற நேர்ந்ததும் தனி ஈழக் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தது.
1974இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் போது சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். யாழ் நூலக எரிப்புக்குப் பிறகு ஜனநாயகப் போராட்டம் முற்றிலும் வலுவிழக்க நேரிட்டது. ஆயுதப் போராட்டம் தமிழ் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு அன்றாட வாழ்வே போர்க்களத்தினூடாகக் கழியும் அவலநிலை தொடங்கியது. அதன் விளைவாக இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, டென்மார்க், நார்வே, அயர்லாந்து, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கெல்லாம் ஈழத் தமிழர் குடிபெயர நேரிட்டது.
தமிழகத்திலிருந்து வறுமை காரணமாகவும், ஆங்கிலேயரின் அடக்குமுறை காரணமாகவும் தோட்டத் தொழிலுக்காக ஆங்கிலேயரால் மத்திய இலங்கைக்குச் செல்ல நேர்ந்த மலையகத் தமிழரை நாம் தமிழகத்துடனே பொருத்திப் பார்க்க வேண்டும். இவ்ர்கள் தலைமுறை தலைமுறையாக அங்கேயே வாழ்ந்தாலும் தம் வேராகத் தமிழகத்தையே கொள்கின்றனர். அவ்வெண்ணத்தைத் தம் சந்ததியினருக்கும் கடத்தி நிற்கின்றனர். இதுவே அங்கு தமிழர் இரு கூறாகப் பிரிந்திருப்பதற்கான காரணமுமாகும்.
இலங்கைக்கு மட்டுமின்றி தென்னாப்பிரிக்கா, பிஜித் தீவு, மலேஷியா, பர்மா போன்ற நாடுகளுக்கும் இரப்பர்-தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகக் கப்பலேறிச் சென்று கைகளும் கால்களும் சோர்ந்து விழும்படி உழைத்தனர். அத்தொழிலாளர்களின் கண்ணீரும் வியர்வையும் அம்மண்ணில் கலந்து உரமாய் மாறி அந்நாடுகளின் வளர்ச்சிக்குத் துணை நின்ற வரலாற்றை எவரும் மறுக்க இயலாது.
இன்றைக்கு உயர்கல்விக்காகவும், உயர்பணிகளுக்காகவும் ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளுக்குச் செல்வோர் அங்கேயே நிலைத்து வாழத் தொடங்குகின்றனர். அங்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள் கருதியும் அதற்குப் பழகியும் இருந்தாலும் அங்கும் தம் மொழி, சமயம், சடங்கு முதலான பண்பாட்டுக் கூறுகளைப் பேணி வருகின்றனர். ஆனால் அரபு நாடுகளுக்குத் தொழிலின் காரணமாகச் செல்லும் தமிழர் அந்நாட்டின் சட்ட திட்டங்கள் காரணமாக பணம் ஈட்டிய ஐந்து, பத்தாண்டுகளில் திரும்ப மீளுதலையே செயலாக்குகின்றனர். அன்றி அந்நாடுகளில் நிலைத்து வாழ்வோர் குறைவே. அரசியல் ரீதியாகவும், நிலம் சார்ந்தும் இயங்க முடியாத, கட்டுப்பட்ட நிலையிலேயே பிற நாட்டு மக்கள் அங்கு வாழ நேர்கிறது.
நம் நாட்டிலேயே பிற மாநிலங்களுக்குப் பிழைப்புக்குச் சென்ற தமிழர்கள் இந்தியா முழுக்கப் பல்கிப் பெருகியிருக்கின்றனர். குறிப்பாக மும்பை, தில்லி, பெங்களூரு முதலான இடங்களில் தமிழர்கள் பெருமளவில் வாழ்கின்றனர். இந்தியநாட்டின் பிற மாநில மக்களும் குறிப்பாக கேரள, ஆந்திர மக்களும் மேற்சொன்ன நாடுகளிலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் பரவி வாழ்கின்றனர். ஆனாலும் தாக்குதல்களுக்குப் பெரும்பாலும் தமிழரே உள்ளாகும் காரணத்தை ஆராய்கையில் பழம் பெருமை பேசித் திரியும் தன்மை, பிற பண்பாடுகளைத் தம்மிலும் கீழாக மதித்தல், சென்று வாழுமிடங்களில் வேர் கொள்ளாத தன்மை ஆகியவற்றைத் தமிழர்தம் குறைபாடாகக் குறிப்பிடலாம். ஆயினும் அந்தந்த நாடுகளில், மாநிலங்களில் வேர்கொண்டு விருட்சமாகும் இன மற்றும் மொழி மைய அடிப்படையிலான ‘மண்ணின் மைந்தர்’வாதங்களும், அரசியல் கட்சிகளும், அரசுகளும் அதைத் தத்தம் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதும் தமிழர் அந்நியமாதலையும், பாதுகாப்பின்மையையும் உணரப் பிரதானக் காரணங்களாகும்.
திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டில் பழம் பெருமைகளைப் பேசிப் பேசியே அரசியல் ஆதாயங்களைப் பெற்றும், பிற பல இயக்கத்தினர் முயன்று சாதித்த பலவற்றையும் தமதாகச் சொல்லிச் சொல்லி இன்று வரை தமிழ் மொழி-பண்பாட்டு வரலாறுகளுக்கு ஏதும் செய்யாதபோதும், தமிழ்-தமிழர் என்பதை ஒரு மாயச்சொல் வலையாய்ப் பின்னித் தமிழினத்தைச் சிக்க வைத்திருக்கும் தன்மை அவன் செல்லுமிடங்களிலும் அவனைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இலங்கையிலும் மலேஷியாவிலும் மும்பையிலும் பெங்களூருவிலும் தமிழர்கள் அடியும் உதையும் பட்டுத் துரத்தப்பட்ட போதும், ஈழத்தில் இன ஒடுக்குமுறை இனப்படுகொலையாகக் கோர நாட்டியம் ஆடியபோதும் தமிழகத்தின் ஆட்சி நிர்வாகம் ‘கையது கொண்டு மெய்யது பொத்தி’ வேடிக்கை பார்த்ததோடு, ‘இனப் படுகொலை’ என்ற சொல்லையே பதிவு செய்யவும் தயங்கியது. இன்று ஈழம் இடுகாடான பிறகும் கூட, அங்கு முள்வேலி முகாம்களில் தமிழர் நலமாய் இருப்பதாய்ப் பொய்ப் பரப்புரை செய்து கொண்டும் இருக்கிறது.
நூறாண்டுகள் கழிந்த பின்னரும், உலகெங்கும் பற்பல நாடுகளிலும் புலம் பெயர்ந்து வாழத் தலைப்பட்ட பெரும்பான்மைத் தமிழர் நிலையைக் காண்கையில்,
“ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை அடுத்தத் தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவி இவ்வெளிய
தமிழச் சாதி, தடியுதை யுண்டும்
காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்…”
அறிந்து அன்று
“விதியே விதியே தமிழச் சாதியை
என்செயக் கருதி இருக்கின் றாயடா?”
என்று பாரதி கலங்கியதைப் போல இன்று வாய்விட்டுக் கதறவும் கதியற்று இருக்கிறோம்.

No comments:
Post a Comment