நன்றி: தாமரை ஜூன் 2010
அடைபட்டிருக்கும் உடலில் இருந்து
வெடித்துக் கிளம்புகிறது மனம்
முளைக்கும் சிறகை மறைத்துக் கொண்டு
மென்பாதங்களுடன் வெளியேறும்
கனத்த மழையின் முதல் துளியை
முகத்தில் ஏந்தி மென்னகை புரியும்
அருவியின் விசையில் சிலிர்த்து நனைந்து
தெறிக்கும் திவலைகள் சேகரிக்கும்
அடங்கிக் கிடக்கும் காற்றை
உசுப்பி விரட்டும்
சிவந்த நெருப்பின் மிச்சம் எடுத்துக்
கொண்டையில் செருகி அழகு பார்க்கும்
நிலம் பிளக்கத் தூசு கிளப்பிக்
கண்ணாமூச்சு ஆட்டம் ஆடும்
சீழ்க்கையடிக்கும் வானம் நோக்கிச்
சிறகடித்துச் சிகரம் எட்டும்
இரவின் எச்சம் மெலிதாய்க் கழிய
தளர் நடையுடனே
உடலுள் முடங்கும்.
No comments:
Post a Comment