Tuesday, August 7, 2012

தடம் பதிக்கும் பெண்ணெழுத்து

- தி.பர​மேசுவரி

நன்றி : தாமரை மாத இதழ்

மனிதன் வாய்திறந்து பேசக் கற்ற காலத்துக்கு முன்னரே ஓவியமாக, கற்படிமமாகத் தன் எண்ணங்களை வெளிப்படுத்தத் தொடங்குகிறான். பின்னர் வாய்மொழியாகப் பன்னெடுங்காலம் வளர்ந்த இலக்கியம் எழுத்துமொழி வந்து அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் வேகமெடுத்தது. மொழிக்கு ஆண், பெண் பேதமுண்டா என்ற கேள்விக்கு அது யார் கையகப்பட்டு இருக்கிறது என்னும் பிறிதொரு கேள்வியின் மூலம் விடையளிக்கலாம். பால் அதிகாரம் மையப்பட்டு இருக்கக் கூடிய சமூகத்தில், அதனை வளர்த்தெடுக்கும், உறுதியாக நிறுத்திக்கொண்டிருக்கும் மதம், சாதி, அரசு ஆகியன எவரை முன்னெடுக்கிறது; ஆதரிக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும். இவர்களை மையப்படுத்தியே, இவர்களின் அதிகாரத்திலேயே இயங்கும் சமூகம், அதன் வெளிப்பாட்டு மொழியான ஆணை அலங்கரிப்பதாகவும் அவனால் இரண்டாம் பாலினமாக்கப்பட்டிருக்கின்ற பெண்ணை அவமதிப்பதாகவுமே இருக்கிறது. மொழி எப்படிப் பெண்ணை இழிவுபடுத்துகிறது என்பது பல முறை சொல்லிச் சலித்த விஷயம். அந்த மொழி வெளியிலிருந்து புறப்படும் இலக்கியங்களும் ஆணாலேயே படைக்கப்படுவதும் ஆண் சார்போடே இயங்குவதும் அறிந்ததே. ஆனாலும் எழுத்திலக்கியத்தின் முன்னோடியாக இன்றைக்கு நம் கைக்குக் கிடைக்கின்ற சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய நாள் வரையிலும் கூடத் தன்னை, தன் சுயத்தைச் சமயம் கிடைக்கும்போதெல்லாம் பெண் வெளிப்படுத்தியபடியே இருக்கிறாள். அப்படித்தான் சங்க இலக்கியத்திலிருந்து பெண் இலக்கிய வரலாறும் தொடங்குகிறது.

ஆண் / பெண் பற்றிய சமூக மதிப்பீடுகள் வெவ்வேறாக இருக்கின்றன. பெண் பிறந்த கணத்திலிருந்தே ஆணுக்கு ஏற்றபடியானவளாகவே உருவாக்கப்படுகின்றாள். வெவ்வேறான சூழலில், மனநிலையிலிருந்து வருகின்ற இலக்கியத்தை ஒன்றாகப் பார்க்க முடியாது; பார்க்கவும் கூடாது. எனவேதான் கருப்பு இலக்கியம், தலித் இலக்கியம், பெண்ணிலக்கியம் என்ற வகைமைகள் உருவாகி சமூகத்தின் கவனிப்பைக் கோருமளவில் வளர்ந்திருக்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில் ஆயிரக்கணக்கான பாடல்கள் உள்ளன. அவற்றைப் பாடியவர்களாக 473 புலவர்கள் இருக்கின்றனர். இவர்களுள் பெண்பாற் புலவர்களைக் கணக்கிட்டால் 45 பேர் என்று முனைவர் தாயம்மாள் அறவாணன் ஒரு பட்டியலைத் தருகின்றார். இது மொத்த எண்ணிக்கையில் 10 விழுக்காட்டிற்கும் குறைவு. பத்துப்பாட்டில் ஒரே ஒரு பெண் புலவரின் கவிதை மட்டுமே உள்ளது. பதினெண்கீழ்க்கணக்கு நூலில் ஒரு பெண் புலவர் கூடக் கவிதை எழுதவில்லை. பக்தி இலக்கியத்தில் சைவத்திற்குப் புனிதவதியும் வைணவத்திற்கு ஆண்டாளுமாக 63 க்கு ஒன்று, 12க்கு ஒன்று என்ற கணக்கில்தான் இருக்கின்றனர். ஒரே ஒரு காப்பியம்கூடப் பெண்களால் எழுதப்படவில்லை. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் இயங்கிய இன்றும் அறியப்படும் பெண்களைக் கை விரல்களுக்குள் அடக்கி விடலாம். தனிப் பாடல் திரட்டில் அறியப்படும் பெண் கவிஞர்களெனப் பதினைந்து பேரை முனைவர் தாயம்மாள் அறவாணன் சுட்டிக் காட்டுகின்றார்.

இதற்கு, பெண் முழுமையாக ஒடுக்கப்பட்டிருந்ததும் கல்வி மறுக்கப்பட்டிருந்ததும் புற வெளி முற்றாக மறுதலிக்கப்பட்டிருந்ததுமே காரணிகளாகும். இன்றைக்கும் பெண்களில் ஒரு பகுதியனருக்கே கல்வியும் வேலை வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இன்னமும் இத்தகைய வெளி கிடைக்காத, அதை அறியாத பெண்கள் செம்பாகம் உள்ளனர். இச்சூழலில் கல்வியும் புற வெளியும் கிடைக்கப்பெற்றிருக்கின்ற பெண்களில் ஒரு குறைந்த விழுக்காட்டினரே சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, நாடகம், நிகழ்த்து கலை ஆகியவற்றில் இயங்கி வருகின்றனர். சிறுகதை, புதினம், கட்டுரை, கவிதை போன்றவை தொல்காப்பியத்திலேயே பேசப்பட்டிருப்பதாகக் கூறினாலும் அச்சு இயந்திரத்திற்குப் பிறகுதான் அவற்றுக்கான பெருவெளி சாத்தியப்பட்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் கொடை என்றே இவற்றைச் சொல்லலாம். தொடக்கத்தில் வாய்மொழி இலக்கியத்தில் குறிப்பாக, கும்மி, நாற்றுப் பாடல், தாலாட்டு, ஒப்பாரி ஆகிய பாடல்கள் எழுத்தாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அதில் பொதிந்துள்ள பெண் வாழ்வு இன்னும் பேசப்படவே இல்லை; ஆய்வுக்கும் உட்படுத்தப்படவில்லை. நாட்டுப்புறப் பாடல்களில் பெண் நிலை ஆய்வு செய்யப்பட்டால் அக்காலத்தின் பெண் குரலை வெளிப்படுத்தும் முக்கியமான ஆய்வாக அது அமையும்.

பின்னர் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி, 20ஆம் நூற்றாண்டின் பாதி வரையிலும் கூட எழுதிய பெண்கள் ஆதிக்க வர்க்க்கத்திலிருந்தும் மேல் மற்றும் இடை நிலை ஆதிக்க சாதிகளிலிருந்துமே கிளம்பினர். அவர்களுடைய எழுத்து ஆண் எழுத்தைப் பிரதி எடுப்பதாகவே இருந்தது. இன்றைக்கும் கூடப் பல பெண் படைப்பாளர்கள் மேல்தட்டு மனோபாவத்துடன் இயங்குவது மேற்சொன்ன ஆதிக்க வர்க்கத்தின் சாதிகளின் இயக்கத்தைக் காட்டுவதாகவே உள்ளது. சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றில் தனித்தனியாக இயங்காமல், இருந்த சிலரே தான் திரும்பத்திரும்ப இயங்கி இருக்கின்றனர். காலகட்ட அடிப்படையில் பெண் படைப்பாளர்கள் பற்றிப் பார்க்கும்போது இன்றைக்கும் நமக்குக் கிடைப்பவர்களாக கு.ப. சேது அம்மாள் (கு.ப. ரா வின் சகோதரி), கமலா விருத்தாசலம் (புதுமைப்பித்தனின் மனைவி), வை.மு.கோதைநாயகி அம்மாள், சாவித்திரி அம்மாள், சரசுவதி, விசாலாட்சி போன்றோர் தொடக்க நிலையில் இருக்கின்றனர். இவர்களுள் வை.மு.கோதைநாயகி அம்மாள் 1925 ஆகஸ்டு மாதத்தில் நின்று போயிருந்த ஜெகன்மோகினி என்ற இதழை வாங்கி வெளியிடத் தொடங்குகின்றார். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண் சிக்கல், குழந்தைத் திருமணம் போன்ற அவலங்களைப் பேசியுள்ளார். பத்திரிகையாளராகவும் 115 நாவல்கள் எழுதிய நாவலாசிரியராகவும் குறிப்பிடத்தகுந்தவராக விளங்குகின்றார். இவருடைய நாவல்கள் சில திரைப்படங்களாக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் இலக்கியத்தில் முதல் சிறுகதை எழுதியது பாரதியா, வ.வே.சு அய்யரா? புதுக்கவிதையின் தொடக்கம் பாரதியா, ந. பிச்சமூர்த்தியா? என்னும் விவாதமே முடிவடையாத நிலையில் சிறுகதை, நாவல், எழுதிய முதல் பெண் யார் என்ற கேள்வியே எழாமல் இருப்பது பெண் இலக்கியச் சூழலின் அவலத்தையே காட்டுகிறது.தாஸிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் என்ற நாவலை எழுதிய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அல்லது 3 ஆம் வகுப்பு வரை படித்து, 12 வயதில் திருமணம் செய்யப்பட்டு நான்கு குழந்தைகளுக்குத் தாயாய், 16 வயதிலேயே கைம்பெண்ணாகி, எழுத்தே தன் வாழ்வெனக் கொண்டு, தன் இல்லத்தின் வாசலில் சித்தி ஜுனைதா பேகம், பன்னூலாசிரியை என்ற பெயர்ப் பலகையை வைத்திருந்த காதலா, கடமையா என்ற நாவலை எழுதிய சித்தி ஜுனைதா பேகம் இருவரில் ஒருவர்தான் தமிழில் பெண்களில் முதல் நாவலை எழுதியவராக இருக்க வேண்டும். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் இன்று வரையிலும் பேசப்படாதவராக, கவனிக்கப்படாதவராகவே இருப்பது நம் சாபக்கேடே. குறிப்பாக, அவர் சார்ந்திருந்த இயக்கத்தவராலும் முன்னெடுக்கப்படாத, இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில் இருப்பது பதிவு செய்யப்பட வேண்டியது.

மூடுண்ட சமூகமாக இருக்கும் இஸ்லாத்தில் இருந்து கொண்டு 1930 களிலேயே கதை, நாவல், கட்டுரைகளை எழுதிய சித்தி ஜுனைதா பேகம் மிக குறிப்பிடப்பட வேண்டியவர். "இஸ்லாத்தில் தெளிவாய் வற்புறுத்திப் பெண் கல்வி அனுமதிக்கப் பட்டிருப்பினும் முஸ்லீம் பெண்கள் கல்வியில் மிகவும் பிற்போக்கடைந்திருக்கவும் மற்றைப் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் காரணம் என்ன? தந்நலப் பேய் பிடித்த பலர் பொருள் தெரியாது குர்ஆன் ஓதி விடுதலே அறிவை அளிக்குமெனப் பல ஆண்டுகளாய்க் கூறி, இஸ்லாமியப் பெண்களை ஏமாற்றி அவர்களை விலங்குகட்குச் சமமாய் ஆக்கி வைத்திருப்பதே காரணமென்றால் மிகையாமோ?"என்று அவர் அன்று எழுப்பிய வினா இன்றைக்கும் விடை சொல்லப்படாமலே உலவி வருகிறது.

சித்தி ஜுனைதா பேகத்திற்குப் பிறகு அச்சமூகத்திலிருந்து எழுத வந்த பெண்ணாக நமக்குக் கிடைப்பவர் கவிஞர் சல்மா. இருவருக்குமான கால இடைவெளியை அறியும்போதுதான் அது எத்தனை இறுக்கமான சமூகமாக இருக்கிறதென்பதை உணர முடிகிறது. தாம் எழுதிய கட்டுரை ஒன்றில் கீரனூர் ஜாகிர் ராஜா, நானறிந்த வரை கடந்த 25 ஆண்டுகளில் சல்மா மட்டுமே எழுத்துக்கு வந்திருக்கிற இஸ்லாம் சமூகத்துப் பெண்ணாக இருக்கிறார். சல்மாவைத் தொடர்ந்து ஒரு பெண் கூட எழுத முன் வரவில்லை என்பது எத்தனை பெரிய சோகம்? இதன் பின்னணியில் நிலவுகின்ற நீண்டதொரு மௌனத்துக்கு எவர் பொறுப்பு? என்று கேட்பது கவனிக்கத்தக்கது. ஈழத்தில் பஹீமா ஜஹான், அனார், சுல்பிகா ஆகியோர் இருந்தாலும் நம் நாட்டில் இன்னமும் பின்னடைந்த சூழலே மாறாமல் இருக்கிறது.

மூவலூர் இராமாமிர்தம் தொடங்கி இன்றைக்கு எழுதத் தொடங்கியிருக்கும் ஆர்த்தி வரையிலும் ஒரு பட்டியல் எடுத்தாலும் கூட ஒரு நூற்றாண்டு வரலாற்றில் எழுதிய, எழுதிக் கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவான விழுக்காட்டையே கொண்டுள்ளது வருந்தத்தக்கது. மற்றுமொரு கவனிக்க வேண்டிய விஷயம், எழுபதுகளில் ஓரளவு உரைநடையில் இயங்கிய அளவுக்குக் கூட இன்றைக்குப் பெண்கள் இல்லை என்பது. நாவல், கட்டுரை, சிறுகதை ஆகிய தளங்களில் இன்றைக்கு எழுதும் பெண்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஆனால் கவிதைப் பரப்பில் எழுதும் பெண்கள் அதிகரித்திருந்தாலும் அதற்கான காரணத்தை ஆராய வேண்டியதாகிறது.

கன்னிமரா நூலகத்தில் உள்ள புத்தகப் பட்டியலில் கவிதை வகைப்பாட்டை எடுத்தால் ஒரு பெரிய அதிர்ச்சி கிடைக்கும். ஒரு புத்தகம் போட்ட பெண்கள் ஏராளமாக இருக்கிறார்கள். பிறகு அவர்கள் என்ன ஆனார்கள்? பெரும்பாலானோர் திருமணத்துக்குப் பிறகு காணாமல் போய் விடுகின்றனர். இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்த, கவனிக்கப்பட்ட கவிஞர்களான ப. கல்பனா, அழகு நிலா, சே. பிருந்தா போன்றோர் இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார்களெனினும் அவர்களின் இயக்கம் முன்னைப் போலில்லாமல் இருப்பது குடும்ப வெளியின் அடக்குமுறைக்குள் காணாமல் போய் விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தொண்ணூறுகளில் தலித் இலக்கியம் தீவிரமடைந்து கவனிக்கப்படும்போதுதான் பெண் எழுத்தும் தீவிரமடைகிறது. ஒடுக்கப்பட்டோரின் குரல் உரக்கக் கேட்ட காலமாக இதனைப் பதித்துக் கொள்ளலாம். பெண் கவிதை மொழியே உடலும் உடலின் உபாதைகளும் வேட்கைகளும் சார்ந்தது என்று குறிப்பிடுகிறார் ஜூலியா கிறிஸ்தவா. தமிழ்ப் படைப்புகளில் இத்துடன் சமூகக் கட்டமைப்பின் ஒடுக்குமுறை தரும் வலியும் வேதனையும் கசியும் குரல்களும் சேர்ந்தே பதிவாகி இருக்கின்றன. வாழ்க்கை பூராவுமே கவலையும் கஷ்டமும் கண்ணீருமாகக் கழிந்ததனால் இந்தக் கதைக்குக் கவலை என்று பெயரை வச்சி எழுதினேன் என்று அழகிய நாயகி அம்மாள் தன் நாவலுக்குப் பெயர் சூட்டியதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருப்பார்.

உலக மயமாதல், தனியார் மயமாதல், தாராள மயமாதல் கொடுக்கும் அழுத்தம் பெண் மீது எத்தனை தீவிரமாகப் பதிந்திருக்கிறது என்பதனை இன்றைய பெண் கவிதைகளில் பரக்கக் காணலாம். ஊடகப் பெருக்கம், பெண் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவை ஆகியவை இன்றைக்கு இலக்கியத்தில் பெண்களின் வருகையைச் சற்றே எளிமைப்படுத்தி இருக்கிறது. ஆனால் இன்றைக்கும் கதை, நாவல், கட்டுரை தளத்தில் இயங்கும் பெண்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். எழுபதுகளில் எழுதிய அளவு கூட இல்லை என்பது பெண் எழுதுவதற்கான நேரமின்றி, குடும்பச் சுமையில் அழுந்திக் கிடப்பதைத்தான் காட்டுகிறது. வீடு, அலுவலகம் என்ற இரட்டைச் சுமையில் இயங்கும் பெண், தனக்கான நேரத்தைக் கண்டடைந்து, வாசித்தலையும் எழுத்தையும் சாத்தியப்படுத்துவது என்பதன் போதாமையே இதற்குக் காரணம். இதன் மற்றுமொரு விளைவே ஏராளமான பெண்கள் இன்றைக்குக் கவிதை எழுதுவதும். மற்ற இலக்கிய வகைமைகளுடன் ஒப்பிடும்போது கவிதை மனத்துள் அசை போட்டு, சொற் சிக்கனத்துடன், குறைந்த நேரத்தில் எழுதக் கூடியது. சீசாவுக்குள் அடைபட்ட காற்று, அணு அளவு இடம் கிடைப்பினும் வெடித்துக் கிளம்புவது போலவே இன்றைக்குக் கவிதைப் பெண்கள் கிளம்பியிருக்கின்றனர்.

குடும்பத்து ஆண்களால் மட்டும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்த பெண், அவளுடைய மொழி வெளியில் பரவலாகக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தப்படவுமாகவே இருக்கிறாள். அதன் விளைவே பெண் எழுத்துக்குக் கிளம்பும் எதிர்ப்புகள். தொண்ணூறுகளின் இறுதியில் கிளம்பிய உடலரசியல், உடல் மொழி ஆகியவை இலக்கியப் பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன்மூலம் கவிஞர்கள் குட்டி ரேவதி, சுகிர்த ராணி, சல்மா, மாலதி மைத்ரி போன்றோர் கவனிக்கப்பட்டனர். பெண்களின் உடலை வணிகமாக்கி, துய்ப்புப் பொருளாய்ப் பார்க்கும் ஆண் பார்வை கடந்து, அந்த உடலையே ஆயுதமாக்கியது இவர்களுடைய மொழி. காலம் காலமாகப் புனிதமாக்கப்பட்டும் உற்பத்திப் பொருளாகவும் அவளுக்கே உரிமையற்றும் இருந்த பெண் உடலை இவர்கள் மறுவாசிப்புக்குட்படுத்தினர். இதன் மென்மையான போக்கு இரா. மீனாட்சி காலத்திலேயே தொடங்கி விட்டதெனினும் இவர்கள் காலத்திலேயே உக்கிரம் பெற்றது.

குட்டி​ரேவதி
பெண்ணின் காதல், அன்பு, உடல் விழைவு, வலி, வேதனை என எல்லாமும் பதிவு செய்யப்பட்டது. ஆணாதிக்கப் பார்வையில் வெளிப்பட்ட காமக் குரலிலிருந்து மடைமாற்றப்பட்டது இவர்தம் மொழி.

முலைகள் சதுப்பு நிலக் குமிழிகள்/பருவத்தின் வரப்புகளில்
மெல்ல அவை பொங்கி மலர்வதை/அதிசயித்துக் காத்தேன்
எவரோடும் ஏதும் பேசாமல் என்னோடே/எப்போதும் பாடுகின்றன 
விம்மலை/காதலை/போதையை
.... ....

ஒரு நிறைவேறாத காதலில்/துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த் துளிகளாய்த்/தேங்கித் தளும்புகின்றன

என்று குட்டி ரேவதி நிறைவேறாத காதலின் வலியைத் தேங்கித் ததும்பும் கண்ணீர்த் துளிகளென நிற்கும் முலைகளின் வழியே காட்சிப்படுத்துகிறார். தனக்கான விடுதலையை முன்னெடுத்தல்,  தன்னுடலைக் கொண்டாடுதல், சமூகம் பெண்ணுக்கு விதித்துள்ள வரையறைகளை விசாரணைக்கு உட்படுத்துதல் என்ற அரசியலைக் கொண்டே இவர்தம் உடல்மொழி இயங்குகின்றது.

உடல் மொழி என்ற சொல்லையே மறுத்து, அதை மற்றுமொரு பெண் சுயமழிக்கும் ஆண் மேலாதிக்க அரசியல் என்று திலகபாமா உள்ளிட்ட சில பெண் கவிஞர்கள் மறுக்கின்றனர். இக்கருத்தினைப் பல ஆண் படைப்பாளர்கள் ஆதரிக்கின்றனர். முலைகள் என்ற தலைப்புக்காக குட்டி ரேவதி ஏராளமான சிக்கல்களைச் சந்தித்தார். ஆனால் குட்டி ரேவதியின் மேற்சொன்ன கவிதையோ, அல்லது சல்மாவின்,

ஒவ்வொரு முறையும்/அம்மா நாசூக்காய்ச் சொல்வதை
அக்கா கோபமாய்ச் சொல்வாள்/ படுக்கையறையின் தவறுகள் எல்லாம் என்னுடையதென
 உன்னிடமிருந்து/ கலங்கலானதே எனினும் 
சிறிது அன்பைப் பெற/வெளியுலகிலிருந்து சானிட்டரி நாப்கின்களையும்
கருத்தடைச் சாதனங்களையும் பெற/இன்னும் சிறு சிறு உதவிகள் வேண்டி
முடியுமானால்/உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய
நான் சிறிதளவு அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள
எல்லா அறிதல்களுடனும் விரிகிறது என் யோனி

இந்தக் கவிதையோ அதிகாரச் சமூகம் தங்களுக்கான புணர்ச்சி இன்பத்துக்கென்றே வைத்திருந்த பெண் உடல் உறுப்புகளை வழமையான அவர்தம் வகையிலன்றி, தம் துயரத்தைச் சொல்ல, அதிகாரத்துக்குச் சமரசம் செய்துகொண்டு அதன் வழி சிறிது அதிகாரம் செலுத்தும் சுய இரக்கத்தையுமே கவிதையாக்கி இருக்கின்றன.

தமிழ்நதி
அத்தருணத்தில் பெரும் பாய்ச்சலாகக் கிடைத்த ஊடகக் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்க இன்றைக்கு இதே சொற்களைப் பயன்படுத்திக் கொண்டு புற்றீசலெனக் கவிஞர்களும் கவிதைகளும் கிளம்புகிறதென்றாலும் காலம் கடந்து நின்று கேள்வி கேட்கின்றன இக்கவிதைகள்.

ஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின்மதிய நேரம்
தெரு முடக்கில் நீட்டிக் கொண்டிருந்தது
அன்று விசித்திரப் பிராணியாகிச்
சொல்லாமல் வகுப்பினின்று வெளி நடந்தேன்
ஓடும் பேருந்தில்/திடுக்கிட்டு விழி தாழ்த்தி 
அவமானம் உயிர் பிடுங்க/கால் நடுவில் துருத்தியது
.... 

பிறிதொரு நாள்/வீட்டிற்குள் புகுந்து
சோபாவிலமர்ந்தபடிக் காட்சிப்படுத்திற்று
இருள் படர்ந்த தெருவொன்றில் மார்பழுத்தி 
இறைச்சிக்கடை மிருகமென வாலுரசிப் போனது 
பின் கழுத்தை நெருங்கிச் சுடுமூச்செறியும் போதில் 
ஈரம் படர்ந்து திகைப்பிருள் சூழ்ந்த 
உன் கண்களை நினைத்தபடி 
குறி தவறாது சுடுகிறேன் 
இதழ்க் கடையிரண்டிலும் முளைக்கின்றன பற்கள் 
என் சின்னஞ்சிறுமியே

என்னும் தமிழ் நதியின் கவிதையில் குறி நேர்ப் பொருளன்றி மறைமுகமான அர்த்தங்களுடன் மற்றுமொரு தளத்துக்கு, பெண்களின் சிக்கலை, கோபத்தை வெளிப்படுத்துமிடத்திற்குக் கவிதையை நகர்த்துகிறது.

சொற்களுக்கு வலிமை சேர்ப்பது அதன் பாடு பொருளே. இது பயன்படுத்தத்தக்கது, இதைப் பயன்படுத்தக் கூடாது என்னும் ஆதிக்கவாதிகளின் குரல்கள் ஏன் பெண் கவிஞர்களை நோக்கி மட்டும் எழுகிறது? மேலாதிக்கத்தின் சுட்டு விரல்கள் ஏன் இவர்களை நோக்கி நீள்கிறது?

சங்க இலக்கியம் தொடங்கி இப்போது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இலக்கியம் வரையிலும் பெண்ணை, அவள் உடலை வெற்று வருணனைகளாய்ச் சொல்லிச் செல்லும் கவிதைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களுடைய கவிதைகள் எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் வெளி வந்த இந்தக் கவிதைகளையும் கவனிப்போம்.

தொண்டையடைத்த பறவையின்/விக்கல்களாகப் பிதுங்கி வருகிறது
உன் விரியோனியின் சமிக்ஞை (யூமா. வாசுகி)

காயப்படுத்தியதற்காக உன் முலைகளிடம்
மாறி மாறி மன்னிப்புக் கோரினேன்
பல்தடங்கள் சிரிக்கின்றன (ஜெ. பிரான்சிஸ் கிருபா)

இந்தக் கவிதைகள் ஏன் இலக்கிய பீடாதிபதிகளால், சமூக ஆதிக்கங்களால் கேள்வி கேட்கப்படுவதில்லை? மேலே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்ற கவிதைகளில் பெண்களுடைய கவிதைகள் பாலியல் கவிதையாக இல்லாமல் சமூக வக்கிரத்தை, அதிகாரத்தை, வன்புணர்வைச் சொல்லும் வகையில் அமைந்திருப்பதையும் அது எழுதப்பட்ட காலத்தில் பெற்ற எதிர்ப்புகளையும் சற்றே நினைத்துக் கொண்ட பின் ஆண் கவிஞர்களுடைய கவிதைகளையும் படித்துப் பாருங்கள்.

உலகில் வேறெந்த மொழியிலும் இல்லாத அளவு தமிழ் இலக்கியப் பரப்பில் பெண் பெயரில் எழுதும் ஆண் படைப்பாளர்கள் மிகுந்திருக்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் பாலினப் பாகுபாடு முன்னிறுத்தப்படும் தமிழ்ச் சமூகத்தில் பெண் அடையாளத்தைக் கைப்பற்றிக் கவனப்படும் எளிமையான தந்திரத்துடனேயே பெரும்பாலானோர் இயங்குகின்றனர். மிகக் குறைவாக இருந்த இந்தப் போக்கு, பெண்கள் எழுதத் தொடங்கிய எழுபதுகளில் மிகுதிப்பட்டு, இன்றைக்கு வரையிலும் கட்டுப்படுத்தப்பட முடியாத வகையிலேயே உள்ளது. படைப்பாளர்களே முன்னின்று தொகுத்த பெயல் மணக்கும் பொழுது, பறத்தல் அதன் சுதந்திரம் ஆகிய பெண் படைப்பாளர்களின் தொகுப்பில் கூட பெண் பெயரால் எழுதும் ஆண் படைப்பாளர்களின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. காலப் போக்கில் பெண்ணெழுத்தைக் கைப்பற்ற நினைக்கும் ஆணாதிக்கப் பார்வையாகவே இதனைப் பார்க்க வேண்டும். பெண் மொழி வெளியில் ஆண் படைப்பாளர்களின் நீதியற்ற இத்தகைய வன்முறை நுழைவு கண்டிக்கப்படவும் வேண்டும். உலக அளவில் கருப்பர்களின் பெயரால், எழுத்தால் வெள்ளையர்கள் எழுதத் தொடங்கியபோது அதற்குப் பெரிய எதிர்ப்புக் கிளம்பி, முடிவு கட்டினர். தமிழில் இன்னமும் முடிவு கட்ட முடியாத துயரமாகவே ஆண்களின் ஊடுருவல் இருந்து கொண்டு இருக்கிறது.

பாலியல் வேட்கை என்பதும் காதல் வெளிப்பாடு என்பதும் ஆணுக்கானது மட்டுமல்ல. அது பெண்பிறவிக்குமானதே. ஆனால் நடப்பில் வெளி வந்திருக்கும் கவிதைகளில் நகுலனுக்கு ஒரு சுசீலாவைப் போலவோ, கலாப்ரியாவுக்கு ஒரு சசி போலவோ ஏன் ஒரு பெண்ணுக்கு அமையவில்லை அல்லது வெளிப்படுத்தவில்லை? இத்தகைய வெளிப்படுத்த முடியாத வகையில்தான் தமிழ் இலக்கியச் சூழல் இருக்கிறது. பெண்களின் பாலியல் வேட்கையைச் சொன்ன கவிதைகளைக் காட்டிலும் தனதாயிராத தன்னுடலை, அதன் வாதையை, வன்புணர்வை, தன் விருப்பமின்றியே தான் ஆளப்படுவதை, தன்னடிமைத்தனத்தைப் பேசும் கவிதைகளே அனேகமாக இருக்கையில் ஒரு சில கவிதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கூச்சல் போடுவதும் பெண்ணின் வலி பேசும் கவிதைகள் வேண்டுமென்றே கவனிக்கப்படாமல் இருப்பதுமே இலக்கியத்தின் அரசியலாக இருக்கிறது.

உதிரத்தின் சுவையோடிருந்தது/அந்தக் கூடல்
என்னைக் குத்திய சிலாம்புகள் பிடுங்கப்படாமலிருந்தன
பயணக் களைப்பையும்/ரணங்களின் நோவையும்
பசிக்கும் வயிற்றையும்/உன் கண்ணசைவு
புறக்கணித்தது/கொன்ற கோழியிறகுகளைப் பிய்த்து எறிவது போல்
எப்படிக் களைந்தாய் என் ஆடைகளை/நாம் தழுவத் தழுவ
அவை நழுவி விட விரும்பினேன்/தானாகவே இறுகித் தவிக்கும் மனம்
உன் வருடலில் ஆறுதல் தேட
தேகமோ இளகி விடுகிறது/வெண்ணையில் செய்த மலராக
உன் கத்திகளைக் காதலுடன் வரவேற்றவாறு

உமா மகேசுவரியின் இந்தக் கவிதை அத்தகைய உடல் ஆக்கிரமிப்பைப் பெருத்த வேதனையுடன் பேசும் கவிதை. இப்படியொரு கவிதையை ஒரு ஆணால் எழுத முடியுமா? கவிதை மொழியில் ஆண்/பெண் பேதம் இல்லை என்று பேசுவோர் பதில் சொல்லட்டும்.

சிவகாமி
இதையே சிவகாமியும்,

எனதாயிராத என்னுடலை
விக்கிரமாதித்தனெனச் சுமப்பதில்/பேதலிக்கிறேன்
மரங்களிலிருந்து மலர்கள் உதிர்கின்றன

என்று பேசுகின்றார்.

தன்னுடலைப் பேசுதல், உடல்மொழி ஆயுதம் என்ற சுழலுக்குள்ளேயே இன்றைய பெண் கவிஞர்கள் சுற்றிக் கொண்டிருப்பதாக எழும் குற்றச்சாட்டும் தேவையற்றதே. மைய ஓட்டத்திலிருந்து உள்ளொடுங்கிய தனித்த கூறுகளை, விளிம்பு நிலைத் துயரத்தைப் பேசும் கவிஞர்கள் அத்துடன் நின்று விடாமல்,

இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லி விடுவேன்/பறச்சி என்று

என்ற இன்னொரு கவிதை இவர்களுக்குப் பதில் சொல்கிறது. பெண்Xஆண் முரணைக் கேள்விக்குள்ளாக்குவதுடன் இத்தகைய முரண்களைக் காப்பாற்றி நிற்கும் மதமும் சாதியும் தோலுரிக்கப்பட வேண்டியவை என்ற இடத்தில் நின்று எழுந்ததே தலித் பெண்ணியக் கவிதைகள். சக மனிதர்களை ஒடுக்கி, கயர்லாஞ்சியிலும் உத்தபுரத்திலும் திண்ணியத்திலும் நடக்கும் மனித இழிவுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது சுகிர்தராணியின் இக்கவிதை. பெண்களின் சிக்கலும் தலித்களின் பிரச்சனையும் ஒடுக்கப்படுவதாகவே இருக்கிறது. தீட்டாகவும் சேரியாகவும் அவை கருத்தாக்கம் பெற்று ஒடுக்கிக் கொண்டிருக்கிறது என்னும் குரலை மிகச் சரியாக இக்கவிதை பதிவு செய்கிறது.

சுகிர்தராணி
தேனும் தினைமாவும் கிழங்குச் சீவல்களும்/டப்பாக்களில் அடைக்கப்பட்டு
நாளங்காடிகளில் விற்பனையாகின்றன
சறுக்குமர மலை விளிம்புகளில்/நாங்கள் பாடிய குறவஞ்சிப் பாடல்கள்
கல் குவாரிக் குட்டைகளில் மிதக்கின்றன
கையில் குறி சொல்லும் கோலுடன்/கடற்கரை நகருக்கு/
நகர்ந்து விட்டனர் குறத்திகள்
புழுத்த அரிசிச் சோற்றைத் தின்றபடி/வேடிக்கை பார்க்கிறோம் 
யாரோ யாருக்கோ கையளிக்கும்/எங்கள் வாழ்நிலங்களை

என்னும் சுகிர்தராணியின் இக்கவிதை சிறப்பு மண்டலம் என்ற பெயரால் அரசு தன் மக்களுக்குச் செய்யும் துரோகத்தை, அந்நிய ஆதிக்கத்துக்கு விலை போகும் அவலத்தைப் பதிவு செய்கிறது. பெண்ணரசியல் என்பது தனித்த பெண்ணின் வலி மட்டுமல்ல; அது எல்லாச் சிக்கல்களையும் உள்ளடக்கிய நுண்ணரசியல் என்ற தத்துவார்த்த அடிப்படையில் இன்றைய அதிகார அரசியலின் முகத்தை வெளிப்படுத்துகிறது.

சங்கராபரணி என்ற ஆற்றைப் பெண்ணுக்கான படிமமாக்கி, அது சவுக்குக் காடாய், கரட்டுப் புல்லாய், தேங்கிய குட்டையாய் மாற்றப்பட்டிருப்பதை, தன் சதையை வெட்டி எடுத்துச் செல்லும் லாரியில் மணலைப் போலவே இருக்கிறாள் என்று பெண்ணைப் பற்றியும் கொள்ளையடிக்கப்படும் ஆற்றைப் பற்றியும் ஆதங்கப்படுகிறார் மாலதி மைத்ரி.

பெண்ணின் தனி மனித உளவியல் சிக்கலை, உழைப்புச் சுரண்டலை,

உனக்கு வேலை மட்டுமே வேலை
எனக்கு வேலையும் ஒரு வேலை

என்னும் இளம்பிறையின் எளிமையான சொற்கள் காத்திரமாய் நின்று குரலெழுப்புகிறது. கிராமமாயினும் நகரமாயினும் வர்க்க பேதமின்றிப் பெண் சுரண்டப்படுகிறாள் என்பதே இளம்பிறை சொல்லும் செய்தி.

இன்றைக்குப் பல பெண்கள் எழுதுகிறார்களெனினும் அவர்களின் கவிதை மொழியில் வெளிப்படும் அரசியல், அவர்தம் வெளிப்பாட்டுத் தன்மை, பாடுபொருள் என்ற அளவில் கவனப்படும் கவிஞர்கள் வெகு குறைவே. அரசியல் இயக்கங்கள் சார்ந்து அடையாளப்படும் பெண் கவிஞர்களின் செயற்பாடுகளைப் பேசப் புகுந்தால் எள் முனையளவாய் இருக்கும் துயரத்தையும் இங்கு பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. இன்னும் சுருங்கிப் போயிருக்கும் அவர்க்கான நேரத்தைப் பிய்த்துத் தங்களை வெளிப்படுத்துதல் என்பது அவர்களுக்கு அரிதாகவே வாய்க்கிறது.

நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ
உமது உயிர்க்கூறு
அரசியல் கடந்த காலம் கொண்டது
உமது சருமம்
அரசியல் படிந்தது
உமது விழிகள்
அரசியல் நோக்குக் கொண்டது

- விஸ்வாலா சிம்போர்ஸ்கா.  

4 comments:

  1. சிறப்பான பதிவு... பாராட்டுக்கள்...

    விரிவான விளக்கம்...

    நன்றி… தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வளரட்டும் ஆரோகியமான விவாதங்கள்.....

    ReplyDelete
  3. அற்புதமான பதிவு தோழர்

    ReplyDelete
  4. தங்களின் பதிவு இன்று தமிழ்மணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

    ReplyDelete