Tuesday, October 7, 2014

அறிவிலோங்கி இவ்வையம் தழைக்க..

நன்றி: பாவையர் மலர்


“காடா கொன்றோ நாடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர் 
அவ்வழி நல்லைவாழிய நிலனே” 

என்னும் புறநானூற்றுப் பாடல் மக்களின் தன்மையை, உணர்வை முதன்மைப்படுத்திப் பேசும் ஒரு பாடல். ஆணோ, பெண்ணோ மண்ணில் நல்ல வண்ணம் வாழும் வகையில் அமைந்திருக்கும் சமூகமே நல்ல நிலமாகக் கருதப்படும். பெண்கள் வாழப் பாதுகாப்பான நாடுகள் என்று அண்மையில் எடுத்த கணக்கீடு ஒன்றில் இந்தியா 161 ஆவது இடத்தில் இருப்பதே அந்நிலத்தின் பாதுகாப்பின்மையைச் சொல்லும்.

ஒவ்வொரு நாளும் பாலியல் வன்முறையால் வதைபடும், மரணிக்கும் பெண்கள், குறிப்பாக குழந்தைகளின் எண்ணிக்கை நாம் அறியக்கூடுவதில்லை. அது கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதே உண்மை. சமூகத்தின் சிறிய அலகான குடும்பத்தில் பெண் எப்படிப் பொருட்படுத்தத்தக்கவளாக இல்லையோ, அதையே பெருஞ்சமூகமும் நடைமுறைப்படுத்துகிறது. ஆனால், தடைகளைத் தாண்டி, அவள் முன்னேறும் இவ்வேளையில் தன் உடல், அதன் சுதந்திரம், தடைகள், சமூகம் பெண்ணுடலின்மீது விதிக்கும் கட்டுப்பாடுகள் பற்றிய அறிவும் ஆணுக்குக் கிடைக்கும் தடையற்ற சுதந்திரம், அவனுக்குப் புகட்டப்படும் பெண்ணுடல் பற்றிய பார்வை பற்றியும் ஆண், பெண் இருபாலருமே அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதுவே ஒரு பாதுகாப்பான, ஆணும் பெண்ணும் நிகரென வாழும் நிலத்தை அமைக்க முடியும்.

பெண் மீதான வன்முறை குடும்பம், வெளி என இரண்டு இடங்களிலிருந்தும் நிகழ்கிறது. அது பெரும்பாலும் வெளிப்படுவதேயில்லை; வெளிப்படினும், அப்பெண் எதிர்கொள்ளும் சிக்கல்களும் கேள்விகளும் முற்றுமாக அவளை முடக்கிப் போடுவதாகவே உள்ளது. டிசம்பர் 2012 இல் தில்லியில் ஒரு 23 வயதுள்ள மருத்துவம் படிக்கும் மாணவியொருத்தி ஒரு தனியார் வாடகைப் பேருந்தில் ஆறு ஆண்களால் வன்புணர்வு செய்யப்பட்டாள். அந்த ஆண்கள் ஓர் இரும்புக் கம்பியால் அவளது பிறப்புறுப்பிலும் குடலிலும் ஏற்படுத்திய காயங்களால் பத்து நாட்கள் மருத்துவமனையில் நரகவேதனைப்பட்டுப் பின் உயிரிழந்தாள். அடுத்த சில நாட்களில் எட்டாவது படித்துக்கொண்டிருந்த மாணவி, பள்ளிக்குச் செல்லும் வழியில் குடிபோதையில் இருந்த ஒருவனால் வன்புணர்வு செய்யப்பட்டு, புதர்மறைவில் அவளுடைய உடலிருந்த செய்தி நாளிதழில் படிக்கக் கிடைத்தது. ஐந்து வயதுச் சிறுமி அவரது வீட்டருகில் வசித்த 23 வயதுடைய ஒருவனால் கடத்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டது ஏப்ரல் 2013 இல் நடந்தது. மருத்துவமனைத் தகவலின்படி ஒரு பிளாஸ்டிக் பாட்டிலும் மெழுகுவத்தியும் அந்தக் குழந்தையின் பிறப்புறுப்பில் திணித்து நுழைக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சம்பவங்கள் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படும்போது, அரசு மேலும் சில சட்டங்களை இயற்றும்; அல்லது செயல்படுத்தப்படாமலிருக்கும் சட்டங்கள் மூலம் சிலருக்குத் தண்டனை வழங்கி, சட்டம் - ஒழுங்கு இன்னும் உயிருடன் இருப்பதாக ஒரு பாவனை காட்டும். சட்டம்போட்டு யாரையும் திருத்திட முடியாதென்பதை நாமறிவோம். பதிவாகும் குற்றங்களே மிகக் குறைவு; நம் மனஅமைப்பு அப்படி. பதிவாகும் குற்றங்களிலும் கூட, அந்தப் பெண்ணே குற்றம் சாட்டப்படுவாள்; இழிவாகப் பார்க்கப்படுவாள்; வாழ்வை இழந்து பலியாவாளேயன்றி வேறெதுவும் ஆகப்போவதில்லை. உதாரணமாக, சென்ற வருடம் 21,093 குற்றங்கள் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. எண்ணிக்கையில் பார்த்தால் நடப்பை விடவும் பதிவு மிகக் குறைவு. அதிலும் கூட 4072 குற்றங்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது. 11351 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன அல்லது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. மற்றவை இன்னும் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நாம்  பாலியல் வன்முறைக்கான அடிப்படைக் காரணத்தை ஆராயாமல், தொடர்ணந்து அதனை மூடி மறைப்பதையோ, நடக்கும்போது உடன் எதிர்வினையாற்றுவதையோ மட்டுமே செய்து வருகிறோம். அரசும்கூட அப்போதைக்குக் கிடைக்கும் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை கொடுத்து, பொதுச்சமூகத்தின் மனசாட்சியைத் திருப்திப்படுத்த முனைகிறதேயன்றி, மாற்றத்துக்கான எந்த முன்முயற்சியையும் எடுப்பதில்லை. கல்வியில் பின் தங்கியிருக்கும் பெண்களும் அவர்களின் சார்ந்திருக்கும் கீழ்நிலையும் ஆண்மையச் சமுதாயத்தின் ஆணாதிக்கப் பண்புமே முதன்மைக் காரணம். வாய்ப்புக் கிடைக்குமிடத்திலெல்லாம் பெண்களின் சமூக நிலையை மேம்படுத்தவும் பெண்களுக்குச் சம அதிகாரம் தரும் வகையிலுமான செயல்பாடுகளை அரசும் பெண் சார்ந்த இயக்கங்களும் ஆணையங்களும் முன்னெடுக்க வேண்டும். இளம்பருவத்திலேயே கல்வியிலேயே அந்த அறிவைப் புகட்டுவதே எளிதாகவும் காத்திரமானதாகவும் அமையும். பாலியல் வன்முறை பற்றிப் பேசும்போதே, அதற்குள் இருந்து வினையாற்றும் சாதி, பொருளாதாரம், மதம் ஆகியவற்றைப் பற்றியும் பேசியாக வேண்டும்.

குழந்தைப் பருவத்திலிருந்தே சமூகம் பெண்ணுக்கு அவள் எப்படி இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதைப் புகட்டியபடியே இருக்கிறது, மரணத்தருவாய் வ்ரையிலும். பெண், தன் உடைகளில் கவனமாக இருக்க வேண்டும்; இரவு வேளைக்கு முன்னால் வீடு திரும்ப வேண்டும்; அவள் எப்போதும் தன் நடத்தையில் கவனமாக இருக்க வேண்டும் போன்று பல எல்லைக்கோடுகள் அவள் உடலைக் குறுக்கும்நெடுக்குமாய்க் கண்ணுக்குத் தெரியாமல் பிணைத்திருக்கின்றன. அவள் அதை மீறும்போதெல்லாம் வன்மையாகக் கண்டிக்கப்படுகிறாள்; காரணமாக்கப்படுகின்றாள்.
அதே சமூகம், ஆண் குழந்தைகளையும் சிறு வயது முதலே, நீ ஆண்; கண்கலங்கக் கூடாது; பெண் உன் சொத்து, அவளைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை; பெண்ணுடல் கவர்ச்சியானது, காமத்தைத் தூண்டக்கூடியது; அவள் உனக்கு அடங்கி இருக்க வேண்டியவள் என்பதையும் கற்பித்து மனத்தின் அடியாழத்தில் பதித்துவிடுகிறது. பெண்ணுடலை மையப்படுத்திய இத்தகைய ஆணாதிக்கக் கருத்தியல்களைப் பல பெண்களே நம்பும், பேசும் சூழலுமே இருக்கிறது. பெண்ணுக்கு, ஒரு புறம் கடவுள் தன்மையும் மற்றொரு புறம் அவளைக் காமப் பண்டமாகப் பார்ப்பதும் அதை வணிகமாக்குவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஒரு பெண் பிக்குணியை வழிமறித்து ஆணொருவன் பாலியல் கண்ணோட்டத்தில் அணுகிய நிகழ்ச்சிக்குப் பின், புத்தர், பெண் பிக்குணிகள் தனியாய் வழிகளில் செல்வதும் உறங்குவதும் கூடாது என்று விதிமுறைப்படுத்தினார் (Old Path White Clouds, Thich Nhat Hanh (2011) என்று கட்டுரையொன்றில் கு. அழகர்சாமி என்பவர் குறிப்பிடுகின்றார். 

பெண் குழந்தைகள் வளர வளர அவர்கள் அணியும் உடைகள் கட்டுப்படுத்தப்படுவதும் அவளுடைய செயல்பாடுகள் வரையறுக்கப்படுவதுமே இன்று வரையிலும் தொடர்வதும் அப்படியான சூழலிலும் கூட அவள் பாதுகாப்பற்றே ஒவ்வொரு நாளும் வன்முறையைச் சந்தித்து வருகிறாள் என்பதுமே பாலியல் கல்வியின் தேவையை வலியுறுத்துகிறது. பாலியல் கல்வியில் இருக்க வேண்டிய கருத்தியல்களை நாம் இப்படிப் பார்க்கலாம் பெண், ஆணுடல்களை அறிதல், உடலின் செயல்பாடுகள், உணர்வுரீதியான வேறுபாடுகள், தன் உடல் மீதான உரிமை, சமூகம் அவ்வுடல் மேல் திணிக்கும் கருத்துகள், அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் இப்படி அமைத்துக்கொண்டோமானால் சமத்துவமான சமுதாயத்தைப் பற்றி நாம் கனவு காணலாம்.

குடும்பம், சாதி, மதம், ஊடகம் வாயிலாக பெண்ணுடல் வரையறுக்கப்படுகிறது; இழிவாகவும் அருவருப்பாகவும் காட்டப்படுகிறது; வணிகப் பொருளாக, போக நுகர்வாக அறிமுகப்படுத்தப்படுகிறது. தான் கவர்ச்சிகரமானவள் என்று நம்பும் பெண் குழந்தை தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும் அழகைக் கூட்டுவதிலும் கவனம் செலுத்தி, அறிவுப் பாதையை விட்டு விலகி விடுகிறது. பெண் கவர்ச்சியானவள் என்று அறிவுறுத்தப்படும் ஆண் குழந்தை அவளை போகமாகவும் காமமாகவும் அடிமையாகவும் பார்க்கத் தொடங்குகிறது. பெண் சார்ந்த வன்முறைகளுக்கு ஊற்றுக்கண் இதுவே. இதனை மாற்றாமல் இந்தச் சிக்கல் தீரவே தீராது. இதைத்தான் இன்றைய பள்ளிக் குழந்தைகளிடம் நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். பெண் குழந்தைகள் கல்வி பயில வரும் இடத்தின் அடிப்படைக்கு மாறாகத் தன்னை அதீதமாக அலங்கரித்து வருவதும் அப்படி வருபவளை மாணவர்கள் இச்சைக்குரியவளாகக் கவனிப்பதும் அவளைக் கவர முயற்சிப்பதுமான இந்த நிகழ்வுகளில் பெண்ணே குற்றவாளியாக்கப்படுகின்றாள்; கண்டிக்கப்படுகின்றாள்.

டெல்லியில் நடந்த பாலியல் வன்புணர்விலும் வினோதினி விஷயத்திலும் இப்படி நடக்கும் பல சம்பவங்களில் குற்றம் கண்டிக்கப்பட்டாலும் கூட அந்தப் பெண்ணுக்கு இரவு 9 மணிக்குமேல் வெளியில் என்ன வேலை? ஆண் நண்பருடன் அவள் ஏன் வெளியில் செல்ல வேண்டும்? அவள் ஏன் ஆபாசமாக உடை அணிகிறாள்? ஆண்களைத் தூண்டுகிறாள்? வினோதினி அந்த ஆணை ஏமாற்றினார் தானே போன்ற பதிவுகளே மிக அதிகமாக ஊடகங்கள்வழி கிடைக்கின்றன. இதுவே சமூகத்தின் பொதுப்புத்தி. ஒரு பெண் தன் உடல்முழுவதும் நகை அணிந்து நள்ளிரவில் தெருவில் தனியாக நடக்கும்போதே உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக நம்புவேன் என்று காந்தியடிகள் சொன்னது இன்னமும் சாத்தியப்படாத சூழலில், அவளுடலில் நகைகள் இருக்க வேண்டிய அவசியமில்லை; சாதாரணமாகக்கூட அவள் நடக்க முடியாத காலத்தில்தான் இன்றும் நாம் வாழ்கிறோம். அதனை மாற்றவே பாலியல் கல்வி குறித்தும் வலியுறுத்துகிறோம். ஏமாற்றும் ஆண், பெண்ணுக்கெல்லாம் ஆசிட் வீச்சு தண்டனைதான் என்று நாம் நியாயப்படுத்தினால், இன்று பலருக்கும் வெந்தமுகம்தான் அடையாளமாக இருக்கும். பெண்ணின் உடல் கவர்ச்சிதான் காரணம் என்று குற்றம் சாட்டும் அடிப்படைவாதிகள், சீருடையில் செல்லும் சிறு குழந்தைகளும் ஓரிரு வயதுக் குழந்தைகளும் கூடப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது ஏன் என்ற கேள்விகளைத் தங்களுக்குள்ளாவது கேட்டுக்கொள்ள வேண்டும். சிறு குழந்தையின் பாலியல் உறுப்பு ஒருவனுடைய காமத்தைத் தூண்டுகிறது என்றால், நாம் கற்றதும் பெற்றதும் என்ன?

2011இல் புகார் செய்யப்பட்ட 24,206 பாலியல் வன்புணர்வுக் குற்றங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுமியரின் எண்ணிக்கை வீதம் 3.6% 10 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமியரின் எண்ணிக்கை 7% என்று தேசீயக் குற்றப் பதிவு பீரோவின் அறிக்கையொன்று கூறுகிறது. பெண்ணுடல் என்பதே ஆளப்படவேண்டியவொன்று என்று ஆணாதிக்கச்சமூகம் கட்டமைத்திருக்கும் பிரக்ஞையே இதன் அடிச்சரடு. இதற்குப் பெண்களைக் காரணமாக்குவதும் பெண் பொதுவெளிக்கு வருவதைக் குற்றம் சாட்டுவதும் உண்மையை மூடி மறைக்கும் உத்தி. தன் உடல் பற்றிய அறிவற்ற பெண்களும் இந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகி விடுகின்றனர்.  ஊடகங்களும் திரைப்படங்களும் தொடர்ந்தது பெண்ணுடலைப் பண்டப்படுததுவதை உணராமல், அதன் பாதையிலேயே பயணிக்கின்றனர். தன்னுடலைப் பாதுகாத்துக்கொள்ளத் தெரியாமல் கதாநாயகனின் உதவியை நாடும், குளிர்ப்பிரதேசத்தில் கூடக் குறைவான உடையணிவிக்கப்படும் கதாநாயகியை எந்தக் கேள்வியுமின்றி வெகு இயல்பாய் ஏற்றுக்கொள்ளும் பெண்கள் பலர் தானும் அதுவாகப் பாவித்து, அப்பண்புகளையே தங்கள் பண்பாய் ஏற்றுக்கொண்டு ஆணின் கடைப்பார்வைக்குக் காத்திருந்து இரையாகிறார்கள். 

பெண்ணுக்கு இத்தகைய வன்முறைகள், பொதுவெளியில் மட்டும்தான் நிகழ்கிறது என்று நாம் நினைத்தோமானால், அது பூனை கண்ணை மூடிக்கொள்ளும் கதையே. எத்தனை வன்மத்தைப் பெண் வெளியில் சந்திக்கிறாளோ, அதற்குச் சற்றும் குறையாமல் பாதுகாப்பான இடமென்று சொல்லப்படும் வீட்டில் உறவுகளிடமிருந்தும் பள்ளியில் ஆசிரியர்களிடமிருந்தும் கூடச் சந்திக்க நேர்கிறது. படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் சிதறக் கூடாது என்றும் தொலைத்தொடர்புச் சாதனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். குழந்தைகள் இச்சாதனங்களை மிகுதியாகவும் பயன்படுத்துகின்றனர் என்பதும் அதில் சில சிக்கல்கள் இருப்பதும் உண்மை. ஆனால், அவர்களைப் பயன்படுத்தாமல் தடுக்க முடியாது மாறாக பாதுகாப்பாக எப்படிப் பயன்படுத்துவது என்பதைத்தான் நாம் கற்றுத்தர முயற்சிக்க வேண்டும். 
பாலியல் கல்வி என்பது உடல் சார்ந்தது; அதைப் பாடத்திட்டத்தில் சேர்த்தால் மாணவர்கள் கெட்டுப் போவார்கள் என்னும் மக்களின் பொதுப்புத்தி சார்ந்த கருத்தை மாற்ற அரசு தன்னாலான முயற்சிகளைக் கைக்கொள்ள வேண்டும். அதற்குப் பிற இயக்கங்களின் உதவிகளையும் கூட நாடலாம். உடல் சார்ந்து மட்டுமல்லாமல் உணர்வு, உரிமை சார்ந்த விஷயங்களும் பேசப்பட வேண்டும். மேலும் இக்கல்விக்குத் தொடர்புடைய பயிற்சிகளைப் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் கூட அளிக்க வேண்டும். உண்மையில், அவர்களுக்குத்தான் இது அதிகமும் தேவை. அரைகுறை அறிவுடனும் தெளிவற்ற சிந்தனையோடும் அவர்கள் மாணவர்களை அணுகினால் எதிர்மறையான விளைவுகளே மிகும். அதிகமான அலங்காரத்துடனும் தலையலங்காரத்துடனும் பள்ளிக்கு வந்த ஒரு மாணவியை ஆசிரியர், “இப்படியே நீ இருந்தா, சீக்கிரம் எவன் கூடயாவது ஓடித்தான் போவே. ஒழுங்காப் படிச்சு முன்னேர்ற வழியப் பாரு” என்று திட்டிக்கொண்டிருந்ததைக் கேட்டு வருத்தப்பட்ட சம்பவமும் உண்டு. உண்மையில், அந்த மாணவி நன்றாகப் படித்து முன்னேற வேண்டுமென்று ஆசிரியர் நினைக்கிறாரெனில், இப்படிப்பட்ட மாணவிகளை மென்மையாகவும் கவனமாகவுமே கையாளவேண்டும். அன்றி நாம் எதிர்பார்க்கும் விளைவுகள் கிடைக்காது. பெற்றோரும் ஆசிரியர்களும் இப்படி வசைபாடும்போது இத்தகைய எளிய மனம் படைத்த, புரிதல் இல்லாத மாணவிகள் தவறான திசையில் வழிதவறிச் சென்று ஏமாந்து போகிறார்கள். நம் அன்பு, காப்புணர்ச்சி ஆகியவற்றின் மூலமே அவர்களைக் காக்க முடியும்.

வீட்டிலும் பெற்றோர் நல்ல நண்பர்களாக இருக்கும்போது மட்டுமே குழந்தைகள் மனம் விட்டுப் பேச முடியும். தனக்கு நேர்வதை வெளிப்படையாகப் பேசும் குழந்தைகளை நம்மால் காப்பாற்ற முடியும். சமூகத்தின் வக்கிரத்துக்கும் பலியாகி, அதைத்தன் பெற்றோரிடமும் சொல்ல முடியாமல் சுருங்கும் குழந்தைகள் பின் எப்படி மலர முடியும்? குழந்தைகளுடன் புழங்கும் ஒவ்வொருவரும் தாமும் இவ்வயதைக் கடந்தவர் என்பதை நினைவில் கொண்டு, அவ்வயதில் ஏற்படும் சலனத்தை அறிவின் துணை கொண்டு கடக்க வேண்டும். மனத்தில் ஏற்படும் பதின்பருவக் கிளர்ச்சிகளை நேர்மறையாய் மடை மாற்ற வேண்டும். ஆண்குழந்தைகளுக்குத் தான் ஆண் என்ற பிம்பத்தைச் செதுக்காமலும் ஆண்வேலை பெண்வேலை என்னும் பிரிவினையை உணர்த்தாமலும் வளர்த்தல் நலம். 

ஆண், பெண்களுக்கான தனித்தனிப் பள்ளிகளை மெல்ல மெல்ல அகற்றி, இரு பாலரும் கலந்து படிக்கும் பள்ளிகளைக் கொணரும்போது, பாலியல் கவர்ச்சி இன்றி நல்ல நண்பர்களாய்ப் பழகும் தன்மை மேலோங்கும். பெண்களை மதிக்கின்ற, பாலியல் பண்டமாகப் பார்க்காத, வன்முறையைப் பிரயோகிக்காத ஆணாய்த் தன் பிள்ளை வளர வேண்டுமென்று ஒவ்வொரு பெற்றோரும் உறுதி பூண வேண்டும்.

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ்வையம் தழைக்குமாம்”

என்று பாரதி பாடி நெடுநாட்கள் கடந்து விட்டன. அதை நனவாக்க நம்மாலான முயற்சிகளைச் செய்வோம்.

- தி.பரமேசுவரி

5 comments:

  1. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

    விசிட் : http://blogintamil.blogspot.in/2014/11/blog-post_21.html

    ReplyDelete
  2. நாளை வலைச்சரத்தில் [ http://blogintamil.blogspot.in]உங்கள் வலைத்தளத்தை அறிமுகபப்டுத்துகிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன்
    மனோ சாமிநாதன்

    ReplyDelete
  3. சிறந்த கட்டுரை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. சிறந்த கட்டுரை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. good mohamed abdul khader powerpoint poovar junction trivandrum 695525

    ReplyDelete