Tuesday, September 27, 2011

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்கள் பலி: உண்மை அறியும் குழு அறிக்கை

21.09.2011

மதுரை

கடந்த செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடி ஐந்து முக்குச்சாலையில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 6 தலித்கள் கொல்லப்பட்டும், சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றும் உள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்பினரும் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கொண்ட உண்மை அறியும் குழு  ஒன்று கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.

 உறுப்பினர்கள்

1. பேரா.அ.மார்க்ஸ் - மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.

2. கோ.சுகுமாரன் - மக்கள் உரிமை கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி

3. வழக்குரைஞர் ஏ. முஹம்மது யூசுப், NCHRO ௭ தமிழ்நாடு

4.வழக்குரைஞர் ரஜினி, PUHR, மதுரை

5. பேரா. ஜி.கே.ராமசாமி  மக்கள் ஜனநாயக மன்றம் (PDF), கர்நாடகா

6. வழக்குரைஞர் கார்த்திக் நவயான் - தேசிய தலித் முன்னணி  (NDF), ஆந்திர மாநிலம்

7. ரெனி அய்லின்,  தேசிய ஒருங்கிணைப்பாளர், NCHRO,

கேரளம்

8. பேரா.பிரபா.கல்விமணி - மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம்

9. பி.எஸ்.ஹமீது - SDPI, தமிழ்நாடு

10. பேரா.சே.கோச்சடை - மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி

11. ஏ. சையது ஹாலித் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இராமநாதபுரம்

12. மு.சிவகுருநாதன் - PUHR, திருவாரூர்

13. கவிஞர் குட்டி ரேவதி - ஆவணப்பட இயக்குநர், சென்னை

14. முனைவர் தி.பரமேஸ்வரி - கவிஞர், காஞ்சிபுரம்

15. கு.பழனிச்சாமி ௭ PUHR, மதுரை

16. வழக்குரைஞர் முஹம்மது சுஹைப் செரீஃப் ௭ NCHRO,கர்நாடகம்

17. வழக்குரைஞர் தய்.கந்தசாமி ௭ தலித் பண்பாட்டுப் பேரவை,  திருத்துறைப்பூண்டி

18. தகட்டூர் ரவி - PUHR, கல்பாக்கம்

இக்குழு செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் பரமக்குடி, சுற்றுவட்ட கிராமங்கள், இராமநாதபுரம், மதுரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களையும், அரசு அதிகாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து, விரிவாக அவர்களிடம் பேசி அவற்றை ஒலி - ஒலி நாடாக்களில் பதிவு செய்து கொண்டது. முதல் தகவல் அறிக்கைகள், காவலில் வைக்கப்பட்டோருடைய விவரங்கள் ஆகியவற்றையும் தொகுத்துக் கொண்டது.

பின்னணி

பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம் முதலானவை சாதி முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள பகுதிகள். கடந்த 50 ஆண்டுகளாகவே இங்கு பல கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. 1957ல் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரம் அனைவரும் அறிந்த ஒன்று. அப்போது கொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரன் அப்பகுதி தேவேந்திரகுல வேளாளர்களின் வணக்கத்திற்குரிய பெருந்தலைவராக (icon) உருப்பெற்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் எப்படி தேவர்கள் மத்தியில் ஒரு திருஉருவாக உருப்பெற்றுள்ளாரோ அதே வடிவில் தேவேந்திரர்களுக்கு இம்மானுவேல் சேகரன் உருவாகியுள்ளார்.

முத்துராமலிங்கத் தேவருடைய குருபூஜை அவர்களது சமூகத்தவர்களால் அவரது பிறந்த நாளன்று பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. தெய்வத்திருமகனார் என அவர் வழிபடப்படுகிறார்.

இப்பகுதியில்  குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில்   தேவேந்திரர்கள் வசிக்கின்றனர்.  கல்வி முதலிய வளர்ச்சிகளின் விளைவாக இம்மானுவேல் சேகரனின் காலம் தொடங்கி அமைப்பு ரீதியாக  ஒருங்கு திரளும் போக்கு இவர்கள் மத்தியில்  உருவாகியுள்ளது. ஒடுக்குமுறையை ஏற்காத மனநிலையும், அடையாளத்தை உறுதி செய்துகொள்ளும் சுயமரியாதைப் போக்கும், அதற்குரிய வகையில் வரலாற்று உருவாக்கமும்  நடைபெற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை இதுகாறும் ஆதிக்கம் செய்து வந்த சாதியினரும், அரசு எந்திரமும் சகித்துக்கொள்ளாத நிலையின் விளைவாக சமூக முரண்கள் கூர்மையடைகின்றன.

கல்வி மற்றும் ஜனநாயக உணர்வுகள் வளர்வதன் ஊடாக மேலெழும் அடித்தள மக்களின் அடையாள உறுதிப்பாட்டை ஆதிக்க சமூகமும், ஆதிக்க சமூகத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அரசும் ஏற்காததன் உச்சகட்ட வெளிப்படையாகவே இன்று இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

1987 முதல் பூ. சந்திரபோஸ் அவர்களின் தலைமையிலான தியாகி இம்மானுவேல் பேரவை என்கிற அமைப்பு இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை (செப்டம்பர் 11) கொண்டாடத் தொடங்குகிறது. ஆண்டுக்காண்டு கூடுகின்ற கூட்டத்தின் அளவும் அதிகரிக்கிறது. 1995 - 97ல் தென்மாவட்ட சாதிக்கலவரங்கள் ஏற்படுகின்றன. புதிய தமிழகம் கட்சியும் இங்கே வேர் பதித்துச் செயல்படத் தொடங்குகிறது. இப்பகுதியில் தேவேந்திரர்களின் முக்கியத் தலைவர்களாக ஜான்பாண்டியன் முதலானோர் உருப்பெறுகின்றனர்.

இதே காலகட்டத்தில் தேவர் குருபூஜை, அரசே பங்கேற்று நடத்தக்கூடிய விழாவாக மாறுகிறது. 2007ல் தேவருடைய மறைவின் 50வது நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்திற்கு அருகில் வசித்துக் கொண்டிருந்த சுமார் 100 தேவேந்திரர்களின் குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. அரசே முன்னின்று இதைச் செய்தது.

இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளும் இதேபோல பெரிய அளவில் கொண்டாடப்படுவதை ஆதிக்க மனங்கள் ஏற்க மறுத்தன. தங்களைப் போலவே தேவேந்திர குலத்தினரும் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை  குருபூஜை என அழைப்பதையும் அவர்கள் ஏற்கவில்லை. 2007 தொடங்கி ஆகஸ்ட் - செப்டம்பர் - அக்டோபர் ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு வன்முறையை தேவேந்திரர்கள் மீது ஏவும் போக்கு இருந்துள்ளது. 2007ல் வின்சென்ட் என்பவரும் 2009ல் அறிவழகன் என்பவரும், சென்ற ஆண்டு (2010 ஆகஸ்ட் 30 ) குருபூஜைக்கு அணி திரள்வீர் என சுவரெழுத்துக்கள் எழுதிய கொந்தகை அரிகிருஷ்ணனும் ஆதிக்கச் சாதியினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேவேந்திரர்களின் அரசியல் கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ள புதிய தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாள் சிறையிலிருந்த ஜான்பாண்டியனும் விடுதலையடைந்தார். இவையெல்லாம் தேவேந்திரர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை வேறெப்போதைக் காட்டிலும் அதிகமாக ஏற்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டு (2010) இம்மானுவேல் சேகரனின் குரு பூஜையில் பங்கேற்ற அ.இ.அ.தி.மு.க தலைவர் நயினார் நாகேந்திரன் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக நடத்துவோம் என அறிவித்ததும், 2010 அக்டோபர் 9 அன்று இம்மானுவேல் சேகரனின் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டதும் தேவேந்திரர்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும் நிறைந்த எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. ஆதிக்க சாதியினர் இதை மிகவும் வெறுப்புடன் பார்த்து வந்தனர். ஆப்ப நாடு மறவர்  சங்கம் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் இவ்வாறு இம்மானுவேல் சேகரனின் குருபூஜை முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்குச் சமமாக மேலெழுந்து வருவதைத் தடுக்க வேண்டுமென கூறப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

பூலித்தேவனுக்குச் சமமான மன்னராக ஒண்டி வீரனை அருந்ததியர்கள் முன்னிறுத்துவதை நடராஜன் (சசிகலா) முதலானோர் கண்டித்து வருவது இத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.

இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 9ம் தேதியன்று கமுதிக்கு அருகில் உள்ள மண்டல மாணிக்கம் கிராமத்தை ஒட்டிய பள்ளப்பச்சேரி எனும் தலித் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்கிற 16 வயது தேவேந்திரர் குலச் சிறுவன் கொடுமையாக வெட்டிக் கொல்லப்பட்டான். இது தொடர்பாக தேவர் சாதியைச்  சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜான்பாண்டியன் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டார்.

இதே நேரத்தில் (செப்டம்பர் 7 ) அரசுப் போக்குவரத்து கழக பட்டியல் சாதித் தொழிற்சங்கத்தினர் தேசியத் தலைவர் தெய்வத் திருமகனார் என இம்மானுவேல் சேகரனை விளித்து, பிளக்ஸ் போர்டு ஒன்றை பரமக்குடி நகரத்தில் வைத்தனர். உடனடியாக இதனை எதிர்த்து மறத்தமிழர் சேனை என்கிற அமைப்பும் தேவர் சாதியைச் சேர்ந்த வழக்குரைஞர்களும்  களம் இறங்கினர். காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு அழுத்தம் கொடுத்தனர்.தெய்வத்திருமகனார் என்கிற அடைமொழியைத் தேவருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இம்மானுவேல் சேகரனுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் புகார் செய்தனர்.

இது பட்டியல் சாதியினரின் சட்டப்பூர்வமான உரிமை என்று கூறி பாதுகாப்பளித்திருக்க வேண்டிய ரெவின்யூ நிர்வாகமும், காவல் துறையும் பட்டியல் சாதி அமைப்பினரை வரவழைத்து, அந்த ஃப்ளக்ஸ் போர்டிலுள்ள  இவ்வார்த்தைகளை நீக்க வேண்டுமென வற்புறுத்தின. அவர்களும் பணிந்து அச்சொற்களை நீக்கினர். இது தேவேந்திரர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தவே தெய்வத் திருமகனார் என இம்மானுவேல் சேகரனை விளித்து பல பிளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் நிறுவினர். இதைக் கண்டு இப்போது ஆதிக்க சாதியினர் மட்டுமல்ல, காவல் துறையும் அரசு நிர்வாகமும் சேர்ந்து ஆத்திரமடைந்தது.  பரமக்குடியிலுள்ள எந்த ஃப்ளக்ஸ் போர்டு அச்சகமும் இதுபோன்ற ஃப்ளக்ஸ் போர்டுகளை அச்சிடக் கூடாதென  காவல்துறை மிரட்டியது.

இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 11 அன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கும் காவல் துறைக்கும் இடையில் முரண்பாடு எழுந்து, துப்பாக்கிச் சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பலியாகவும், ஏராளமானோர் படுகாயமடையவும் நேரிட்டது.

செப்டம்பர் 11 துப்பாக்கிச் சூடு குறித்து நாங்கள் அறிந்த உண்மைகள்

1. துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி துப்பாக்கிச் சூட்டை விடவும் கொடுமையான மொழியில் சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா இரண்டு தவறான தகவல்களைக் கூறியுள்ளார். அவை:

(அ) முத்துராமலிங்கத் தேவரை இழிவு செய்து மண்டல மாணிக்கம் கிராமச் சுவற்றில் எழுதியதாலேயே பழனிக்குமார் கொல்லப்பட்டான் என்றது. இது உண்மையல்ல. மண்டல மாணிக்கம் தேவர் சாதி ஆதிக்கம் உச்சமாக உள்ள ஒரு ஊர். இதன் காரணமகவே  இந்த கிராமத்தில் உள்ள  அரசுப் பள்ளியில் பயில்கிற தேவேந்திரர் குலப் பிள்ளைகள்  மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்கின்றனர். 2010-11 கல்வியாண்டில் மண்டல மாணிக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 28 தலித் பிள்ளைகளில் இவ்வாண்டு 23 பேர்  இவ்வாறு டி.சி. பெற்றுச் சென்றுள்ளனர். இக்கிராமத்திற்குள் தலித் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக  உலவக்கூட முடியாத நிலையில் வேற்றூரில் படிக்கக்கூடிய 16 வயது சிறுவன் பழனிக்குமார் அங்கு சென்று ஏழரை அடி உயரமுள்ள ஒரு சுவற்றில் தேவரை இழிவு செய்து எழுதினான் என்று சொல்வதை யாரும் ஏற்க இயலாது.

(ஆ) ஜான் பாண்டியன் இந்த கிராமத்திற்கு படை திரட்டிச் சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வந்தது என்பது முதல்வர் சொன்ன  இரண்டாவது பொய். ஜான் பாண்டியனைப் பொருத்தமட்டில் அன்று தூத்துகுடியில் நடைபெற்ற ஒரு பூப்பு நீராட்டு விழாவிற்கு வருகிறார்.  இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அவர் செல்லக்கூடாதென இராமநாதபுரம் ஆட்சியர் தடையுத்தரவு இட்டதை அறிந்து அவர் திரும்பவும் திருநெல்வேலி செல்கிறார். அப்போது அவர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சிப் பள்ளியில் வைக்கப்படுகிறார். எவ்வகையிலும் நிர்வாகம் மற்றும் காவல் துறையின் உத்தரவுகளை மீறுவது என்கிற முனைப்பு ஜான்பாண்டியனிடம்  இருக்கவில்லை என்பதே உண்மை. தடையை மீறி அவர் படைதிரட்டிச் சென்றதாக முதல்வர் கூறியுள்ளது, அதிகாரிகளின் கூற்றை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டதையே காட்டுகிறது.

2. செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு முழுக்க முழுக்கக் காவல் துறையின் திட்டமிட்ட செயலாகத் தெரிகிறது. தேவேந்திரர்களின் ஓர் அடையாளத் திருவிழாவாக மாறிப்போன ஒரு நாளில், அஞ்சலி செலுத்த வந்த அவ்வினத் தலைவர் ஒருவரைத் தடுத்தது ஒரு முட்டாள்தனமான செயல் மட்டுமல்ல; கலவரத்தைத் தூண்டக்கூடிய செயலும் கூட. தவிரவும், தடுத்தவுடன் பணிந்து திருப்பியவரைக் கைது செய்து, இது குறித்த செய்தி அஞ்சலி செலுத்த வந்த மக்கள் மத்தியில் பரவக் காரணமாக இருந்தது இன்னொரு மிகப்பெரிய வன்முறையைத் தூண்டும் செயலாக அன்று அமைந்துள்ளது.

3. டி.ஐ.ஜி சந்தீப் மிட்டல், ஐந்து முக்கில் பொறுப்பாக நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை அடையாறு காவல் துறை ஆணையர் செந்தில்வேலன், பரமக்குடி நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் அன்று தேவேந்திரர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பாடம் புகட்டியே தீரவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் வந்து நின்றதாகவே தெரிகிறது. தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவைத் தலைவர் பூ.சந்திரபோஸ் அவர்கள் மிகுந்த நல்லெண்ணத்துடன் அதிகாரிகளை அணுகி  ஜான் பாண்டியனை அன்று கைது செய்தது நல்லதல்ல எனவும், அவரை விடுதலை செய்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிய போது, சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேச வேண்டாம்; முதலில் அவர்களைக் கலைந்து போகச் சொல்லுங்கள் என சந்தீப் மிட்டல் கூறி எந்தவித சமாதானத்திற்கும் வாய்ப்பளிக்காமல் நடந்துள்ளார்.

4. , ஐந்து முக்கில் அன்று குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினரின் எண்ணிக்கை சுமார் 2000 என நேரில் பார்த்த பலரும் எங்களிடம் கூறினர். சாலை மறியலுக்கு அமர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 50 தொடங்கி அதிகபட்சமாக 200 அல்லது 300 என்ற அளவிலேயே இருந்துள்ளது. கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்த்து அவ்வழியே போக்குவரத்து முன்னதாகவே தடை செய்யப்பட்டது என்பதை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராயே எங்களிடம் ஒத்துக்கொண்டார். தவிரவும் அவ்வழியே இதர மக்கள் சென்று அஞ்சலி செலுத்தி வரவும் அவ்வழியே வந்த வாகனங்கள் சென்று வரவும் சாலை மறியலால் எவ்விதத் தடையும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் 2000 ஆயுதம் தாங்கிய காவல் துறையினர் கூடியிருந்த 200 மக்களை, அவர்கள் உண்மையிலேயே கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டிருந்தால் கூட இலேசான தடியடி அல்லது கண்ணீர்ப்புகையைப் பிரயோகித்துக் கலைத்திருக்க முடியும். ஆனால் எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி துப்பாக்கிச்சூட்டை நடத்தி 6 பேரைக் கொன்றுள்ளனர் சந்தீப் மிட்டல், செந்தில்வேலன், சிவக்குமார் ஆகியோர் தலைமையில் இருந்த காவல் துறையினர்.

5. செந்தில் வேலன் ஐ.பி.எஸ் ஏற்கனவே இதே பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தவர். அவர் இங்கு பணியாற்றியபோது இதேபோல இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களை நியாயமற்ற முறையில் கைது செய்து (2008 செப்டம்பர் 11) தலித் விரோத அதிகாரி என்கிற பெயரை ஈட்டியவர். இவரை அடையாறில் இருந்து  இங்கு கொண்டு வந்து அன்றைய தினத்தில் ஐந்து முக்கில் நிறுத்தியதும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட செயலாகவே தெரிகிறது.

6. காவல் துறையின் வஜ்ரா வாகனத்தைக் கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வதையும் நம்ப இயலவில்லை. ஐந்து முக்கில் சாலை மறியல் செய்து கொண்டிருந்தவர்களைக் கலைப்பதற்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட காவல் துறையினர் மதுரை- இராமநாதபுரம் சாலையில் நீளவாக்கில் நின்றிருந்தனர். தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டவுடன் மக்கள் எதிரே உள்ள முதுகுளத்தூர் சாலையில் ஓடுவது மட்டுமே அன்று சாத்தியமாக இருந்தது. இந்நிலையில் காவல் துறை அணிவகுப்பிற்குப் பின்னால் வந்து நின்ற வஜ்ரா வாகனத்தை கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வது ஏற்கத்தக்கதாக இல்லை.

7. துப்பாக்கிச் சூட்டின்போது அங்கு நின்று நெற்றிப்பொட்டில் குண்டடிபட்டு, இன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணிக்கம், குண்டடிபட்டு இறந்த ஒருவரை தூக்கிச் சென்று காப்பாற்ற முயன்ற மணிநகர் அம்பேத்கர் இளைஞர் மன்றச் செயலாளர் சுரேஷ், கடுமையாக அடிக்கப்பட்டு இன்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்  வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலரும் எம்மிடம் நேரில் கூறியதிலிருந்து, அன்று எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி தண்ணீர் பீய்ச்சியடித்தல், கண்ணீர்ப்புகை பிரயோகம் முதலிய முன் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் திடீரென்று துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். அதே நாளில் மதுரை சிந்தாமணி அருகே  நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து இன்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்களால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 19 வயதான டி.ஜெயபிரசாந்தும் அவ்வாறே கூறினார். துப்பாக்கிச்சூடு நடந்து ரொம்ப நேரத்திற்கு பிறகு உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த செய்தி மூலமாகவே தான் அதைத் தெரிந்து கொண்டதாக மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல நிமிடங்கள் கழித்தே தானும் தெரிந்து கொண்டதாகத்தான் இராமநாதபுர மாவட்ட ஆட்சியரும் எங்களிடம் தெரிவித்தார்.

 8. துப்பாக்கிச் சூட்டையும் தடியடியையும் மேற்கொண்ட காவல் துறையினரும் அதிகாரிகளும் கடும் தலித் விரோதப் போக்குடன் இருந்துள்ளனர். சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய வண்ணமே அவர்களை அடித்தும் சுட்டும் வீழ்த்தியுள்ளது பற்றி எம்மிடம் பலரும் முறையிட்டனர். இது அரசு நிர்வாகத்தின் மேல்சாதி ஆதரவு மனப்பான்மை, தலித் விரோதப் போக்கு, தலித்கள் என்றாலே கலவரம் செய்யக்கூடியவர்கள் என்கிற எண்ணத்துடன் அவர்கள் செயல்படுவது ஆகியவற்றிற்குச் சான்றாக உள்ளது.

9. துப்பாக்கிச் சூட்டில்  பல்லவராயனேந்தல் கணேசன் ( 55),  வீராம்பலைச் சேர்ந்த பன்னீர் செல்வம் ( 50),  மஞ்சூரைச் சேர்ந்த ஜெயபால் ( 19),  கீழ்க்கொடுமாநல்லூர் தீர்ப்புக்கனி ( 25),  காட்டுப் பரமக்குடியைச் சேர்ந்த முத்துகுமார் ( 25),  காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ( 55) ஆகிய ஆறு பேர்கள்  கொல்லப்பட்டுள்ளனர். கணேசன், வெள்ளைச்சாமி, ஜெயபால் ஆகிய மூவரின் இல்லங்களுக்கும் சென்று அவர்களது உறவினர்களைச் சந்தித்தோம். இவர்கள் அனைவருமே அந்த நேரத்தில் அங்கு வந்து சிக்கிக் கொண்டவர்களே அன்றி, அஞ்சலி செலுத்தும் நோக்குடன் வந்தவர்களோ ஜான் பாண்டியனின் அமைப்பைச் சேர்ந்தவர்களோ அல்ல. கணேசன் தன் மகளின் திருமண அழைப்பிதழை விநியோகிக்கச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைக் கலகம் செய்ய வந்தவர்கள் என காவல் துறை கூறுவதை ஏற்க இயலாது. பெரும்பாலான துப்பாக்கிச் சூடு இடுப்புக்கு மேலேயே நடத்தப்பட்டுள்ளது. மாணிக்கம் நெற்றிப்பொட்டில் சுடப்பட்டுள்ளார். 

10. சுடப்பட்டவர்களில் சிலர் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இன்று இறந்து போயுள்ள தீர்ப்புக்கனி உயிரிருக்கும் போதே பிணவறையில் கொண்டுவந்து போடப்பட்டுள்ளார். பிணவறையில் உயிருடன் ஆட்கள் இருப்பதை அறிந்து புகார் செய்தபின் உயிருடன் இருந்த குமார் என்பவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.  அதற்குள் தீர்ப்புக்கனி இறந்துள்ளார். தவிரவும் கொல்லப்பட்டவர்களில் குறைந்தபட்சம் இரண்டு பேரேனும் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டுப்  பின்னர் சுடப்பட்டுள்ளனர் என்ற ஐயம் பலருக்கும் உள்ளது. வெள்ளைச்சாமியின் உடலைக் கொண்டு வந்த காவல் துறையினர் அவரின் உடலை விரைவாக எரிக்கச் சொல்லி உறவினர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களும் அச்சத்தில் அவ்வாறே செய்துள்ளனர். அவரின் உடலில் குண்டுக்காயம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை எனவும் அவருடைய உறவினர்கள் எம்மிடம் தெரிவித்தனர். இறந்துபோன ஜெயபாலின் காலிலும் கூட துப்பாக்கிக் கட்டையால் அடித்து உடைத்தது போன்ற காயம் இருந்ததாக அவரது மாமியார் குறிப்பிட்டார். இவையெல்லாம் மக்களின் சந்தேகத்தில் உண்மை இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

11. குண்டடிபட்டு இறந்துபோன ஜெயபால் மற்றும் அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயபிரசாந்த் ஆகியோருக்கு குண்டுகாயம் முதுகுப்புறத்திலிருந்தே தொடங்குகிறது. அவர்கள் தப்பி ஓடும்போது காவல் துறையினர் சுட்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது.

12. காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. நெற்றியில் குண்டடிபட்ட மாணிக்கம், ஜெயபிரசாந்த் ஆகியோர் இதை எம்மிடம் கூறினார். ஸ்கேன் எடுப்பது முதலான ஒவ்வொன்றிற்கும்  ஜெயபிரசாந்த்திடம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. வைகோ அய்யா தான் என் மகனின் உயிரைக் காப்பாற்றினார் என்று அவரது பெற்றோரக்ள் எம்மிடம் புலம்பினர். நீதிமன்றத்தை அணுகி இன்று மாணிக்கம், கார்த்திக் ராஜா ஆகிய இருவரும் மதுரை அப்பல்லோவில் சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்...

1. சுமார் 10 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாரை வேண்டுமானாலும் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யத்தக்கதாக இந்த முதல் தகவல் அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. 1500 பேருக்கு மேல் கைது செய்ய இருப்பதாக காவல் துறை திட்டமிட்டுச் செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஊட்டுகிறது. தவிரவும், அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்று பேருந்து முதலிய பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்காக கைது செய்ய ஆட்களைக் கொடுங்கள் எனவும் காவல் துறையினர் மிரட்டுகின்றனர். பரளை என்ற கிராமத்திலிருந்து வந்த நாகவல்லி, ரேணுகாதேவி உள்ளிட்ட பெண்கள் செப்டம்பர் 18ம் தேதியன்று ஒரு போலிஸ் வேனில் வந்த காவல் துறையினர் இவ்வாறு மிரட்டியதை எம்மிடம் குறிப்பிட்டனர். தவிரவும், சாதாரண உடையில் வந்த போலிசார் சீருடையில் இருந்த போலிசாரை நோக்கிக் கற்களை வீசித்தாக்குவது போல பாவனை செய்து வீடியோ படம் எடுத்ததாகவும் எம்மிடம் குறிப்பிட்டனர். நயினார்கோயில், பரமக்குடி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் இரவில் ஆண்கள் பயந்து வீட்டில் தங்காத நிலை இன்று உள்ளது. எஸ்.காவனூர் என்கிற ஊரில் இருந்த அடிப்பட்ட ஒருவரைக் காண இரவு 8 மணி வாக்கில் நாங்கள் வாகனங்களில் சென்றதைக் கண்ட அக்கிராமத்திலுள்ள அத்தனை ஆண்களும், வருவது காவல்துறையோ என அஞ்சி ஓடியதை நாங்கள் நேரில் கண்டோம்.

2. தொடக்கத்தில் இரவு நேரத்தில் இவ்வாறு கிராமங்களுக்குச் சென்று மிரட்டினோம் எனவும், பின்னர் அதை நிறுத்திக் கொண்டதாகவும் எம்மிடம் விரிவாகப் பேசிய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண்ராய் கூறினார். ஆனால் மறுபடியும் பேருந்துகள்மீது கல்வீச்சுகள் நடந்ததால் அப்படிச் செய்ய வேண்டி இருந்தது எனவும், இனி அப்படி நடக்காது எனவும் அவர் எங்களிடம் குறிப்பிட்டார்.

3. 21 பேர் இன்று ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேறு யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் பலர் பிடித்துச் செல்லப்பட்டு, அடித்துப் பின்னர் விடப்பட்டுள்ளனர். மற்றபடி நகர்ப்புறங்களில் 144 தடை உத்தரவு  இருந்த போதிலும் பெரிய கெடுபிடிகள் இல்லை. எங்கள் குழு சென்று வருவதற்கும், மக்களைச் சந்திப்பதற்கும் பெரிய தடை எதுவும் இருக்கவில்லை. எனினும், பெரிய அளவில் பரமக்குடி பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருப்பது, வருவோர் போவோர் அனைவரும் வீடியோவில் பதிவு செய்யப்படுவது முதலான நிகழ்வுகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது.

4. இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 இலட்சம் மட்டும் அரசால் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000 கொடுக்கப்பட்டுள்ளது. பலர், அந்தத் தொகை இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை என எங்களிடம் குறிப்பிட்டனர். இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க சார்பாக 1 இலட்சமும், காங்கிரஸ் கட்சி  சார்பாக ரூ. 50,000மும் கொடுக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்

1.  சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்திப்  பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடும் தலித் விரோதப்போக்குடனும், உயர்சாதி ஆதிக்க ஆதரவுப் போக்குடனும் அது வெளிப்பட்டுள்ளது.  இது தலித் மக்கள் மத்தியில் தமக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்காது  என அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. முதல்வர் தம் பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து, அதைத் திரும்பப் பெற வேண்டும். பாதிக்கப் பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்த இது உதவும்.

2. துப்பாக்கிச் சூடு குறித்து அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை வெறும் கண்துடைப்பே. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. பணியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில்  விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

3. தாக்குதல் நடத்திய போலிஸ் அதிகாரிகளிடமே புலன் விசாரணையை அளித்திருப்பது கேலிக்குரியது. சி.பி.ஐ விசாரணை ஒன்று உயர்நீதிமன்ற மேற்பார்வையின்கீழ் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

4. சந்தீப் மிட்டல், செந்தில் வேலன், சிவக்குமார் ஆகிய காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட வேண்டும்.

5. இறந்தவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வெறும் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு கேலிக்கூத்தாக உள்ளதை அரசியல் தலைவர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த இழப்பீட்டுத் தொகையை 10 இலட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். அது, சத்துணவு உதவியாளர் என்பது போன்ற வேலைகளாக அல்லாமல் வேறு உயர்ந்த வேலைகள் அளிக்கப்பட வேண்டும்.

6. காயமடைந்தவர்களுக்கு அவர்களது காயத்திற்குத் தகுந்தாற்போல, குறைந்தபட்சம் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

7. தலித் கிராமங்கள் பலவும் கடுமையாக அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ள  நிலையை நாங்கள் நேரில் கண்டோம். எடுத்துக்காட்டாக,  கொல்லப்பட்ட பழனிகுமாரின் பள்ளப்பச்சேரி கிராமத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி ஏதுமில்லை. சாதி இறுக்கம் மிகுந்த மண்டல மாணிக்கம் ஊரின் வழியாகவே வெளியூர் செல்லக்கூடிய நிலை மாற்றப்பட்டு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. அரசு இவற்றில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

8. மண்டல மாணிக்கம் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தலித் குழந்தைகள் மாற்றுச் சான்றிதழ் பெற்று வெளியேறுவது மிகவும் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது. இது குறித்த விசாரணை ஒன்றை மாவட்டக் கல்வி அலுவலரும், ஆதி திராவிட நலத்துறையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

9. பரமக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, உளவுத்துறை ஆகியவற்றிலுள்ள அதிகாரிகளில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர், தலித்கள் எவ்வளவு பேர்  என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும். இந்தத் துறைகள் ஒவ்வொன்றிலும் போதிய அளவில் இப்பகுதிகளில் தலித் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

10. இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அல்லது பிறந்த நாளை அரசு அங்கீகரித்து விழா எடுக்க வேண்டும். இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் உள்ள சாலை அகலப்படுத்தித் தூய்மை செய்யப்பட வேண்டும்.

11. அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் மத்தியில் தலித் விரோத மன நிலையும், ஆதிக்கச் சாதி ஆதரவுப் போக்கும் உள்ள நிலைக்கு எதிராக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். திருமதி. சிவகாமி ஐ.ஏ.எஸ். ஆதிதிராவிட நலத்துறைச் செயலாளராக இருந்தபோது, அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தலித் பிரச்சனைகளில் உணர்வூட்டுதல் என்ற பயிற்சியைத் தொடங்கினார். எனினும், அது விரைவில் நிறுத்தப்பட்டு விட்டது. அரசு இதைத் தொடர வேண்டும். அருண்ராய் போன்ற இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமே தலித் தலைவர்கள் என்றால் ரவுடிகள் என்பது போன்ற ஒரு பார்வையும், ஆதிக்கச் சாதிக்குச் சமமாக அடித்தள மக்கள் உரிமை கோரும்போது, அது சட்டப்பூர்வமானதாக இருப்பினும் பொறுப்பற்ற செயல் என்பதாகக் கருதும் போக்கும் இருப்பது கவலையளிக்கிறது.

12. துப்பாக்கிச் சூட்டை அரசியல் கட்சிகள் பலவும் கண்டித்துள்ளன. சாதிக் கட்சிகள், குறிப்பாக முக்குலத்தோர் சார்ந்த சாதிக் கட்சிகள் கண்டிக்காதது வருந்தத்தக்கது. துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துள்ள அரசியல் கட்சிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த அழுத்தத்தைத் தொடர்ந்து அரசுக்கு அளிக்க வேண்டும்.

 13. பாதிக்கப்பட்டோருக்காக நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிவரும் வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், பசுமலை, ரஜினி ஆகியோரை இக்குழு பாராட்டுகின்றது.

தொடர்பு முகவரி:

பேரா. அ.மார்க்ஸ்

3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர்

அடையாறு, சென்னை - 600 020. செல்: 94441 20582



வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுப்

142, வடக்கு வெளி வீதி, 2வது மாடி, யானைக்கல்

மதுரை - 625 001. செல்: 94898 71185

1 comment:

  1. அரசு தன கோர முகத்தை முகமூடி கிழித்து காட்டிய நாள்... உள்துறை அமைச்சகத்தின் மந்திரியை கேள்வி கேட்க்க முடியாத ரௌத்திரம் பழகாத மனிதர்கள், மனசாட்சியை அடகு வைத்த தலைவர்கள்.. உள்ளக் குமுறல் அடங்கி விடவில்லை, விரைவில் அனைவரும் ரௌத்திரம் பழகுவோம்... அன்று தெரியும் அடங்கி கிடந்த எரிமலையை வெடிக்கும் பொழுது அடக்க முடியாது என்பதை...

    ReplyDelete