தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளை அரசு அறிவித்து விட்டது. தங்கள் ஒரு வருட உழைப்பின் பலனை எதிர்பார்த்து மாணவர்கள் நகங்கடித்தபடி காத்திருக்கின்றனர். மூன்று மணி நேரத்திற்குள் திறமையைச் சோதித்து உணர்த்திவிடும் தேர்வுக்குழிக்குள் தம் மக்கள் இறங்கிப் பத்திரமாய் வெளியேறுவதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் பெற்றோரும் ஆசிரியரும். இலவச இணைப்பாய்ப் பயப் பந்தொன்று சுற்றிக் கொண்டிருக்கிறது நம் அனைவர் வயிற்றிலும். தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னும் பின்னுமாகத் தொடரும் தற்கொலைகளே நம்மைப் பேதலிக்கச் செய்கின்றன.
தேர்வு சரியாக எழுதவில்லை, பெற்றோர் திட்டியதால், ஆசிரியர் புண்படுத்தியதால், மதிப்பெண் குறைந்ததால் எனக் கல்வி சார்ந்து நிகழும் தற்கொலைகளின் எண்ணிக்கை பெருகி இருப்பது மிகவும் ஆபத்தானது. தேர்வு அரங்கிலேயே தேர்வுத்தாள் கடினமாக இருந்ததால் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார் ஒரு மாணவி. தற்கொலை என்பதே தவறான, எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. கிடைத்தற்கரிய மானுடப் பிறவியை எத்தகைய காரணத்துக்காகவும் நாமாகவே முடித்துக் கொள்வது சரியன்று. உடலைச் செம்மைப்படுத்துவது வீடு; உள்ளத்தைச் செம்மைப்படுத்துவது பள்ளி. ஒழுங்குபடுத்தும் பள்ளியே உயிரை எடுக்கும் இடுகாடாய் மாறுமோ? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாமென்பது சான்றோர் வாக்கு.
தேசியக் குற்றப் பதிவு ஆவணங்களின்படி, கடந்த ஆண்டு 7, 379 மாணவர்கள் தற்கொலை செய்ததாகவும் 40,000 மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளானதாகவும் தெரிய வந்துள்ளது. யூனிசெஃப் அமைப்பின் கடந்த ஆண்டு ஆய்வறிக்கை ஆசிரியர் திட்டுவதால் படிப்பைப் பாதியில் கை விடுவதாக 74% மாணவர்கள் கூறியிருப்பதாகத் தெரிவிக்கிறது. சிக்கல்களை எதிர்கொள்ளும் திறன் மாணவர்களிடம் இல்லை என்பதே இந்தப் புள்ளிவிவரம் தரும் கசப்பான உண்மை.
இன்றைய நம் கல்விமுறையும் அதன் பின்னொட்டான பாடத்திட்டமும் மாணவரின் உள்ள நலனைக் கருத்தில் கொள்ளாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பண்புகளைப் போதிக்கக் கூடிய மொழிப்பாடங்கள் இரண்டாம் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நீதி போதனைக் கல்விக்கான பாட வேளை மறுக்கப்பட்டும் ஒப்புக்கும் வைக்கப்பட்டிருக்கிறது. மனத்தைச் செம்மைப்படுத்த வேண்டிய பள்ளியே மன அழுத்தத்தை அதிகரிக்கும் இடமாக மாறிவிட்டது. அதற்கு, மேலும் எண்ணை வார்ப்பவர்களாகப் பெற்றோரும் சமூகமும் பள்ளி நிர்வாகமும் இருக்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. அரசின் தவறான கல்விக் கொள்கைகளும் மேற்கண்ட போக்குகளும் நம் கல்வியின் ஆன்மாவை அழித்து விட்டன.
தாராள மயமாக்கல், உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல் ஆகியவை மக்களை நுகர்வுக் கலாச்சாரத்தில் தள்ளித் தனிமைப்படுத்தியிருக்கிறது. பொதுத்தன்மையிலிருந்து விலகி, சமூகப் பண்பிற்கு முதன்மை கொடுக்காமல் தனக்கே அந்நியப்பட்டு ஆடம்பர வாழ்க்கைக்குப் பலியாகி இறுதியில் துயரத்தில் மூழ்குகின்றனர். இன்றைய பெற்றோர், ஓரிரு பிள்ளைகளுக்கு மேல் வேண்டாமென்று மறுதலிக்கும் அணுக்குடும்பத்தினராக இருக்கின்றனர் (Nuclear family). ஒற்றைக் குழந்தை கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்துப் பழக்கப்படுத்துவதுடன் தங்கள் ஆசைகளையும் திணித்து அவர்களின் சுயத்தை அழிக்கின்றனர். தாங்கள் செய்வது இன்னதென்று உணராமலே தங்கள் செல்வத்தைச் சிதைத்துக் கொள்கின்றனர். வீட்டில் ஒரு சின்ன ஏமாற்றத்தையும் தாங்காத மனநிலையில் வளர்க்கப்படும் குழந்தைகள், வெளியிலும் அதே சூழலை எதிர்பார்க்கின்றனர். வளரிளம் பருவத்தின் மனத்தேவைகளை உணராமல், பொருட்களை வாங்கிக் குவித்துத் திருப்திப்படுத்துவதிலேயே கவனமாக இருந்து, இழந்தபின் வருந்துவதில் என்ன பயனிருக்க முடியும்? மதிப்பெண் எடுப்பது மட்டுமே மதிப்பு என்ற மனோபாவத்துடன் மாணவரின் மற்ற திறமைகள் கவனிக்கப்படாமல் இருப்பதும் பெற்றோர் தங்கள் விருப்பங்களை அவர் மேல் திணிப்பதும் கூட மாணவர் தற்கொலைக்குக் காரணிகளாக அமைகின்றன.
ஊடகங்கள் மாணவர்களுக்குத் தேவையற்ற செய்திகளை மையப்படுத்துவதும் எதிர்மறையான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவதும் திரைப்படங்கள் விதவிதமான வழிமுறைகளைக் கற்பிப்பதும் கண்டிக்கத்தக்கது. சுற்றியிருக்கும் சமூகமும் உறவினரும் பெற்றோரும் சந்தைக் கலாச்சாரத்திற்குப் பலியாகி, மாணவரின் கல்விசார் நடவடிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குவதும் பிற மாணவருடன் ஒப்பிட்டுப் பேசுதலும் தீராத மன உளைச்சலைத் தருகிறது. அன்றாடம் செய்தித்தாளைத் திறந்தால் தற்கொலை பற்றிய செய்திகள் இல்லாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நம் சமூகம் தற்கொலைகளைக் கொண்டாடும் சமூகமாக மாற்றம் பெற்றிருக்கிறது. நம் சங்ககாலத்தின் வடக்கிருத்தல் நோன்பிலிருந்து தொடங்கிப் பேச முடியும். வாழ்வு குறித்த புரிதலின்மையும் பெற்றோரின் பேராசையுமே மாணவர்களை இத்தகைய தவறான நடவடிக்கைகளுக்குத் தூண்டுகிறது.
தனியார்மயமாக்கலுக்குப் பலியான பெற்றோரின் தவறான ஆசையே தன் நிதி மெற்றிகுலேஷன் பள்ளிகள் பெருக வழிவகுத்திருக்கிறது. ஒரு காலத்தில் மாணவர்கள் முயற்சித்துக் காப்பியடித்த நிலை மாறி, பள்ளிகளே அதனை ஊக்குவிக்கும் கீழ்மைக்குத் தரம் தாழ்ந்திருக்கின்றன. கல்வி என்பது மேன்மைகளைக் கற்பது என்பது போய் உயர்ந்த வேலை, கை நிறையச் சம்பளம், ஆடம்பர வாழ்க்கைக்கான அஸ்திவாரமென்று சிறுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. இயந்திர மயமாக்கப்பட்ட மாணவர்கள் காலை 5.30 மணி முதல் இரவு உறங்கச் செல்லும் 10.30 மணி வரை படித்துக் கொண்டே இருக்கும், கொல்லும் கல்வியாக நம் கல்வி முறை விஷமாக்கப்பட்டிருக்கிறது. வியாபாரமயமாக்கப்பட்ட கல்வி ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாக, சந்தை முயற்சியில் 100% தேர்ச்சி (இலாபம்) என்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. எதைச் செய்தாவது தேர்ச்சி பெறுதல் என்ற நேர்மையற்ற செயல் இன்று பள்ளிகளாலேயே புகட்டப்படுகிறது.
ஆபிரகாம் லிங்கன் தன் மகன் படிக்கும் வகுப்பாசிரியருக்கு எழுதிய கடிதம் மிகப் புகழ் பெற்றது. அதில் "அவனுக்குத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள். ஏமாற்றுவதை விடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதைப் பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்" என்று எழுதியிருப்பார். ஆனால் இன்றைய நம் பள்ளிகளின் நிலை இதற்குத் தலைகீழாக இருப்பதாலேதான் நம் மாணவரின் வாழ்வும் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.
வேதனை, கோபம், தன்னல வெறி, சலிப்பு, வெறுப்பு தன்முனைப்பு, பேராசை, பொறுமையின்மை, பொறாமை, மனத்திடமின்மை, விடாமுயற்சியின்மை, மடமை, இலக்கின்மை, உணர்ச்சிவசப்படுதல், தன்னம்பிக்கையின்மை, அந்நியமாதல், தனிமை எனத் தற்கொலைக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். வாழ்க்கை சிக்கல் நிறைந்ததே; அதில் சோதனைகளும் இழிவும் துன்பமும் கடந்தே தீர வேண்டியது என்பதை உணர்ந்தவர்கள் தற்கொலையைத் தீர்வாக்கிக் கொள்ள மாட்டார்கள். ஒரு ஜென் கதை நினைவிற்கு வருகிறது. இன்பத்தை மட்டுமே கைக்கொண்ட வாழ்வு சித்திக்குமா? என்று ஒரு சீடத்துறவி ஜென் குருவிடம் கேட்க, அவர் ஒரு குச்சியை எடுத்து ஒடிக்கிறார். ஒடித்த குச்சியை மறு முறையும் ஒடிக்கிறார். இப்படி அதனை ஒடிக்க முடியாதபடியான சிறு துண்டாக்கியபின் கீழே போட்டு விட்டுச் செல்கிறார். குச்சியின் இரு பக்கமும் போல வாழ்வில் இன்பமும் துன்பமும் இரு பக்கங்கள்; ஒன்றை ஒன்று நீங்காது என்பதைச் சொல்லும் கதை இது. துன்பத்தைத் தாங்க இயலாத உணர்ச்சி வயப்பட்ட நிலை, சிக்கல்களை எதிர்கொள்ளாத தப்பித்தல் மனோபாவம், அறிவிழந்த நிலை, அறியாமையின் விளைவு எனத் தற்கொலை பல சூழல்களில் நேர்கிறது. கல்வியோடு நல்ல பண்புகளையும் புகட்ட வேண்டிய கல்விக்கூடங்கள் தொழிற்சாலைகளாக மாறியதன் சீர்கெட்ட விளைவினை நம் இளைய தலைமுறை அனுபவிக்கிறது.
தொடக்கக் கல்விக்கான நேர்முகத் தேர்வு, நுழைவுத் தேர்வு, அரசு வேலைகளுக்கான தேர்வு, தனியார் வேலைக்கும் நேர்முகத் தேர்வு என்று ஒரு மாணவன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய நாளிலிருந்து போட்டிகளைச் சந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறான். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் போட்டி உலகத்தில் வாழ்ந்து கொண்டு, தோல்வியைக் கண்டு துவளும் மனம் பெற்றிருந்தால் எப்படி மன அமைதி கிட்டும்? சின்ன விஷயங்களுக்கும் மனம் சிதையும் குழந்தைகள் தம் கனவுகளைக் கானல் நீராகவே காணும். பின் கண்ணீர்க் குமுறலாகவே அது முடியும். உடலில் இருக்கும் ஊனத்தை விடவும் மிக மோசமானது மன ஊனம். நம் மாணவச் செல்வங்கள் இத்தகைய ஊனத்துக்குள் விழுந்திருப்பதைப் பற்றிக் கவலைப்படாத, கவனியாத பள்ளிகளும் அரசும் நாட்டுக்கும் கேடு விளைவிப்பவை. "ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை" என்பார் கிளெமென்ட் ஸ்டோன். இதையே நம் கவிஞர் ஈரோடு தமிழன்பன்,
"பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ?"
என்று அழகுத் தமிழில் கவிதையாக்கியிருப்பார். ஆயிரம் முறை தோற்றபிறகே தாமஸ் ஆல்வா எடிசன் விளக்கைக் கண்டுபிடித்தார். பள்ளி நுழைவுத் தேர்வில் தோல்வி கண்டவர் தான் ஐன்ஸ்டீன். அறிவியலாகப் பேசப்படும் இவர்தம் வாழ்வும் வகுப்பறையில் பேசப்பட்டால், அது மாணவருக்கு மன வலிமையைக் கொடுக்கும் மாமருந்தாக இருக்கும். மாணவர் முகத்தையே பார்க்காமல் மனனம் செய்த பாடத்தை அப்படியே சொல்லிச் செல்லும் ஆசிரியரிடம் இதை எதிர்பார்க்க முடியுமா? தோல்விக்கு வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. கோழைத்தனமே நாணுதற்குரியது என்பதை ஆசிரியரே சமயம் கிடைக்கும்போதெல்லாம் தம் பாட போதனைக்கிடையில் வலியுறுத்த முடியும். வாழப் பிறந்தவர் வீழலாமா? தோல்வியே வெற்றியின் முதற்படி என்பதே நம் சான்றோர் நமக்குக் கற்பிக்கும் முதுமொழி. வலிகளைக் கடந்து, வேதனைகளைச் சுமந்தாலும் சாதனையாக மாற்ற விடா முயற்சி வேண்டும். துவண்டு விடாமல் தோல்விகளைக் கடக்க வேண்டும். அந்தத் தோல்வி தந்த அனுபத்தையே பாடமாக்கி, அடுத்த முயற்சியில் வெற்றியடைய வேண்டும். இதுவே வாழ்க்கையின் பால பாடம். தன் பின்னடைவுக்கான காரணங்களை இனங்கண்டு, அடுத்த கட்ட நகர்வுக்கு வழி அமைத்துக் கொள்பவரே புத்திசாலி. ஏட்டுக் கல்வி கறிக்குதவாது என்று செம்மையான மனத்துக்கு உதவாத பயனற்ற கல்வியையே நம் முன்னோர் சாடியிருக்கின்றனர்.
ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கும் என்ற தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும். "பலரும் தங்களது சூழல் சரியில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ தங்களுக்கான சூழலை உருவாக்கிக் கொள்கிறார்கள்" என்பார் பெர்னாட்ஷா. இப்படியான நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்தெடுக்கப் பள்ளிகள் உதவ வேண்டும். மன நலனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். 10, 12 மதிப்பெண் அட்டைகளிலும் கூடப் பாடத்திற்குக் கொடுக்கும் முதன்மையை இசைக்கும் ஓவியத்துக்கும் விளையாட்டுக்கும் கொடுக்க வேண்டும்.
தனித் திறன் வளர்த்தல், கதை சொல்லல், பாட்டு, நீதி போதனை, விளையாட்டு, பிற கலைகள் மாணவர் மன அழுத்தத்தைப் போக்கி, அறிவைக் கூர்மைப்படுத்துபவை. இதை உணராத சில போலிக் கல்வியாளர்கள், பாட வேளைகளில் இவற்றைச் சேர்ப்பதில்லை. பாடத்திட்டத்திலும் இவை இடம் பெறுவதில்லை. இவற்றுக்கு முதன்மை கொடுப்பதுடன், தகுந்த ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும். பள்ளி நூலகங்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவதுடன் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் பயிற்சியையும் மாணவருக்கு வழங்க வேண்டும்.
கிராமப்புற மாணவர்கள் மேற்கல்விக்காக நகரத்துக்கு வரும்போது பழகும் வரையிலான இடைவெளியில் பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். ஆங்கிலம் பயமுறுத்தும் மொழியாக மாறி விடுகிறது. இதை நல்ல ஆர்வமுள்ள, திறமையான ஆசிரியர்களே மாற்ற முடியும். தொடக்க நிலையிலிருந்தே தரமான ஆசிரியர்களைக் கொண்டு மொழிப் பாடங்கள் கற்பிக்கப் படும்போதே இத்தகைய (தற்)கொலைகள் மறையும். கல்லூரிக் கல்விக் காலத்தில் வாரம் ஒரு முறை, ஒரு பாட வேளை உளவியல் நிபுணரைக் கொண்டு விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தச் செய்யலாம். வெவ்வேறு சூழலிலிருந்து வந்த மாணவர்கள் தங்கள் மனப் புழுக்கத்தை மாற்றிக் கொள்ளவும் வலிமை பெறவும் இது உதவும்.
ஒவ்வொரு முறையும் இத்தகைய அவலத்தைச் சந்திக்கும்போதெல்லாம் கூடிப் பிதற்றிக் கலையாமல் உறுதியாகச் செய்ய வேண்டியவற்றை ஆராய்ந்து, 'தோல்வி என்பது பயமுறுத்துவது போல் வந்தாலும் அது கால் வருடிச் செல்லும் அலை போன்றதே. மீண்டும் மீண்டும் வந்தாலும் திகைக்காமல் செயல்பட்டால் மீளலாம் என்பதை இளம் மாணவர்களின் மனத்தில் விதைக்கும் வழிகளைச் செயல்படுத்துவதொன்றே இதற்குத் தீர்வாக முடியும்.
_
No comments:
Post a Comment