Thursday, November 11, 2010

உள்ளினும் உள்ளம் சுடும்

பணமென்றால் பிணமும் வாய் திறக்குமென்பது பற்றி ஓராயிரம் பழமொழிகள் உலக மொழிகளில் உண்டு. உலக உருண்டையில் தான் பணத்தைப் பெரிதாய் மதித்து, மனிதத்தை மிதிக்கும் போக்கும் நாளது வரையிலும் மாறாமல், மறையாமல்  நடக்கிறது.
 
      "தன் சோறுண்பது சுதந்திரம்
            தன் துணியணிவது சுதந்திரம்
      என்னே வறுமை வந்தாலும்
            எத்தனை துன்பம் தந்தாலும்
      பொன்சேர் போகம் மதிக்காது
            பொய்ப்புகழ் பாடித் துதிக்காது"

என்று நாமக்கல் கவிஞர் நேர்மையான வழியில் பெறப்படும் தன் வருமானத்தில், சோறுண்டு, வறுமையிலும் செம்மையாய் வாழ்வதையே சுதந்திரம் எனக் கூறுகிறார். ஆனால் பணத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் நடமாடும் பிணங்களான மனிதக்கூட்டம் மானுடத்தின் மாண்பிழந்து செல்வத்தின் பின்னால் தன் வாலை ஆட்டிக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறது.
 
இது லஞ்ச ஒழிப்பு வாரமாம். இப்படி எல்லாவற்றுக்கும் ஒரு நாளையோ அல்லது வாரத்தையோ ஒதுக்கிக் கேலிக்கூத்தாக்கும் வித்தையைக் கழைக்கூத்தாடிகளைப் போலச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வாரத்தில் லஞ்சத்தை ஒழித்து விட முடியுமென்று கூறுகிறார்களா அல்லது இந்த ஒரு வாரம் மட்டும் லஞ்சம் வாங்காமல் சமாளியுங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறார்களா? இதன் பொருள் யாமறியோம் பராபரமே! அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரம்பொருளாய் வியாபித்திருப்பது லஞ்சம் மட்டும் தானே! பகுத்தறிவாளர்கள் ஆட்சிக்கட்டில் ஏறிய பிறகு இறைவனை சற்றே விலகி இரும் பிள்ளாய் என நகர்த்தி விட, அந்த இடத்தை இன்று ஊழலும் லஞ்சமும் பிடித்துக் கொண்டு விட்டன. குழந்தை பிறந்த நொடி தொடங்கி மரணித்த பிறகும் கூட லஞ்சத்தின் நடன தரிசனம் காணக் கண்கூடு தானே. நம் தமிழின் அருமையான கொடை இதற்குக் கையூட்டு என்பது. ஆனால் இத்தகைய கேவலமான பழக்கத்தைப் பற்றி எழுதுகையில் இன்றைக்குச் சரளமாய்ப் புழங்கும் லஞ்சத்தையே நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.
 
      "வேலையின்றிக் கூலிகொள்ளும்
             வித்தைகளைக் கற்றறியோம்"

என்று குழந்தைக்குப் பாடும் தாலாட்டிலே குறிப்பிடுகின்றார் நாமக்கல்லார். பாரதியோ, நாமக்கல்லாரோ பெரியவர்களுக்கு எதையும் உணர்த்த முடியாது என்ற உறுதியோடு தான் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார்கள் போல. ஆனால் வேலையைச் செய்வதற்கு ஒரு சம்பளமும், பிறகு கிம்பளமும் வாங்கும் சாமர்த்தியத்தை நம் மக்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். அதனால்தான், நம் நீதியரசர்கள் மார்க்கண்டேய கட்ஜுவும், டி.எஸ். தாக்கூரும் ஒரு வழக்கிலே தீர்ப்பளிக்கும்போது "எல்லாத் துறைகளிலும் குறைந்த பட்சம் இந்த அளவுத் தொகையை லஞ்சமாக வாங்கலாம் என்று சட்டம் கொண்டு வந்து விடலாம்" என்று தம் வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். சட்டங்கள் எல்லா வகையிலும் உறுதியாகவும் வலிமையாகவும் இருந்தும் கூட அதைக் கையாளும் விதத்தில் சில ஓட்டைகளைக் கண்டுபிடித்துக் கோளாறு செய்யும் மனிதர்களை என்ன செய்வது? சட்டத்தாலேயே ஒன்றும் செய்ய இயலாத அவலத்தைத் தான் நீதியரசர்கள் இவ்வாறு வழிமொழிந்திருக்கிறார்கள்.
 
அரசு லஞ்சம் வாங்குகிறது; அதன் அங்கமான அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள்; அவர்களுக்குக் கீழிருக்கும் இடைநிலை - கடைநிலை ஊழியர்களும் லஞ்சம் வாங்குகிறார்கள்; லஞ்சம் வாங்காமல் இருப்போர் கூட லஞ்சம் கொடுக்காமல் இருக்க முடியாத இந்தக் கீழ்களது ஆச்சாரத்தை என்னென்பது? நேருவின் காலத்தில் தொடங்கிய இராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்கிய ஊழல் தொடங்கி, தெகல்கா ஊழல், ஆயுத பேர ஊழல் என்று இன்றைக்கு மகா, மெகா ஊழலான ஒரு லட்சம் கோடிகளுக்கு (ஒரு லட்சம் கோடிக்கு எத்தனை பூஜ்யம்???) மேல் முறைகேடு செய்திருப்பதாகக் கூறப்படும் தொலைத்தொடர்புத் துறையின் அலைக்கற்றை ஊழல் வரையிலும் அரசின், அரசு சார்ந்த அமைச்சர்களின், அவர்களின் அடிப்பொடி அரசியல்வாதிகளின் நச்சுவேலை என்றால், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும், ஆனால் ஊழலில் அவர்களுக்குச் சற்றும் குறைவில்லாத அதிகாரிகளின் கூட்டு எத்தனை? இவ்விரு பெருமக்களின் கோர தாண்டவத்தைப் பொது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குச்சீட்டை ஆயிரத்துக்கும் பட்டை சாராயத்துக்கும் விற்பவர்களாக இருக்கிறார்கள்.
 


சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் ஆட்சியும் அதிகாரமும் மக்களுக்குச் சேவை செய்ய என்று இருந்த நிலை மாறி, அரசியல்வாதிகளின் ஆட்டத்துக்குத் தக்க கூத்தாட்டம் போடும் அதிகாரிகளையே தங்களின் பக்க வாத்தியங்களாகச் சேர்த்துக் கொள்கிறார்கள். மிகக் குறுகிய கால கட்டத்தில் அறுவடை செய்யும் பயிராக அரசியலை நினைத்து விட்டார்கள் ஆட்சியாளர்கள். அதனால்தான் ஒரு தேர்தலில் காட்டும் பொய்யான சொத்துக் கணக்கிலேயே கூட அடுத்த தேர்தலின் போது பல மடங்கு அதிகரித்திருப்பதைக் கவனிக்க முடியும். என்றைக்காவது ஊழலில் சிக்கிய அமைச்சர்கள் கைது செய்ய்யப்பட்டிருக்கிறார்களா? அந்த வழக்குகள் முடிவுக்கு வந்திருக்கின்றனவா? சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப்பணம் மட்டும் சுமார் ரூ.64.56 லட்சம் கோடி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகை உலகிலுள்ள எல்லா நாடுகளின் மொத்த சுவிஸ் வங்கி சேமிப்பையும்விட அதிகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தப் பிரச்னையைப் பற்றி மக்கள் இப்போது கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
 
தமிழகத்தின் இருவேறு நல(?)த் துறை அமைச்சர்கள் மீது ஆதாரத்துடன் சுமத்தப்பட்ட, பத்திரிகைகளில் எழுதப்பட்ட லஞ்சக் குற்றச்சாட்டுகள் கூட நம் நினைவில் இருந்து அகன்று விட்டது. எதிர்க் கட்சி, மற்றும் சுயேச்சை உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குவதென்பது இன்றைக்கு எல்லாக் கட்சிகளாலும் செய்யப்படுகின்ற அங்கீகரிக்கப்பட்ட செயலாகி விட்டது. ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களும் ஆளும் கட்சிக்குத் தாவி விட்டால் அவர்கள் செய்த ஊழல்கள் ஆழக் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விடும்.
ஒரு முழு நாளில் ஒரு முறையேனும் நாம் லஞ்சத்தைத் தரிசிக்க வேண்டியவர்களாகவே இருக்கிறோம். வண்டியோட்டிப் பாருங்கள்; போக்குவரத்துக் காவலரின் இழிமையைத் தரிசிக்கலாம். 

மருத்துவமனைக்குச் செல்லுங்கள்; தலை சொறிந்து நிற்கும் ஊழியர்களைக் காணலாம். ஏதேனும் ஓர் அரசு அலுவலகத்துக்குச் செல்லுங்கள்; அவர்களின் மேசைக்கடியிலே அதன் மூளி அலங்காரத்தை முழுமையாய்ப் பார்க்கலாம்.
மின்சார வாரியம், குடிநீர் வாரியம், மாநகராட்சி, மருத்துவத் துறை, பத்திரப்பதிவுத் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, காவல் துறை என ஊழலின் ஊற்றுக்கண்களைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோ(லோ)டு முன் தோன்றிய மூத்த குடிக்கு முன்னாலேயே தோன்றிவிட்டன லஞ்சமும் ஊழலும்! மக்களின் மூச்சுக் காற்றாய் கலந்து வியாபித்து இன்றைக்கு மக்கள் இவற்றை சகித்துக் கொண்டு வாழப் பழகி விட்டார்கள். இது நம் ஜனநாயகத்தை ஊழித்தீயாய்ப் பொசுக்கக் கூடியது; ஆணி வேரோடு கெல்லி எறியக் கூடியது என்பதை அறியாமல் அதற்கும் ஒரு நியாயம் கற்பித்துக் கொண்டு கொஞ்சம் நியாயமாக வாங்குவார் என்றும் வாங்கிவிட்டால் ஒழுங்காக முடித்துக் கொடுத்து விடுவார் என்றும் புதிய கீதை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் நாம் செய்தித் தாளில் லஞ்சம் வாங்கிப் பிடிபட்டோரின் செய்திகளைப்  படங்களோடு படிக்கிறோம். பிறகு அவர்கள் என்னவானார்கள் என்று நம்மில் எவருக்கேனும் தெரியுமா? அண்மையில் பாஸ்போர்ட் அலுவலகத்தின் பெண் மேலதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கிப் பிடிபட்டதோடு அவருடைய மருத்துவக் கணவரின் கூட்டுக் களவாணித்தனமும் இதழ்களில் பக்கம் பக்கமாய் அலசப்பட்டது. லஞ்சம் வாங்கிய குற்றத்தோடு தீவிரவாதிகளுக்குப் போலி முகவரிகளில் கடவுச்சீட்டு வழங்கியதாகவும் அவர் பேரில் குற்றச்சாட்டு. மூத்த அமைச்சரின் நெருங்கிய உறவினரான அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? இப்படித்தான் நம் மூளையின் அடுக்குகளில் நாம் பதிய வைத்துக் கொள்ள வேண்டிய பல செய்திகள் நம் கவனம் பெறாமலே பதுங்கிக் கொள்கிறது. நமக்கு எந்திர்ர்ர்ரன் ஓட வேண்டும். அதற்கு அலகு குத்திக் கொள்ளலாமா? பாலாபிஷேகம் செய்யலாமா? என்னும் முக்கியமான சிந்தனைகள் மூளைக்குள் குடையும் போது இதெல்லாம் எம்மாத்திரம்?
 
அரசு தம் ஊழியர்களின் ஊதியத்திற்காகக் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது. மக்கள் பிரதிநிதிகளுக்குச் செய்யும் செலவு தனி. ஓர் உயர் அதிகாரி ஒரு மாதத்தின் ஊதியமாக ரூ. 50,000 முதல் ரூ. 80,000 வரை பெற்றுக் கொண்டும் அது போதாதென்று லஞ்சம் பெறுவது வேதனையளிக்கும் செய்தி. லஞ்ச ஒழிப்புத் துறையின் இணையதளத்திற்குச் சென்றால், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தொடங்கிக் கடைநிலை ஊழியர்கள் வரை செய்த ஊழல் வழக்குகளை வருட வாரியாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள். இந்த ஊழலுக்குத் துணை போகாதவர்கள் கொலை மிரட்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பழி சுமத்தப்பட்டு வெளியேற்றப்படுகிறார்கள். அண்மைய உதாரணங்கள்: சகாயம் ஐ.ஏ.எஸ், உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.
 
என் நண்பர் ஒருவர் சொன்ன செய்தி இது. அவரது அலுவலகத்தில் பணியாற்றிய தோழியொருவர் சென்னைக்குப் பணிமாறுதல் பெற மூன்று லட்சம் கொடுத்து மாறுதல் பெற்றிருக்கிறார். பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆன அந்தத் தோழியின் பணத்தில் எத்தனை பேருக்குப் பங்கு? இதைத்தான் பணம் பாதாளம் வரை பாயும் என்றார்கள் போலிருக்கிறது.
 
      "படிச்சவன் சூதும் வாதும் செய்தால்
            போவான் போவான் அய்யோன்னு போவான்"
 
என்று பாரதி சபித்தது தான் தாங்க மாட்டாமல் நினைவிலெழுகிறது. படித்தவன் செய்யும் சூதுக்குத் தக, படிக்காத பாமரனும் தன்னளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். லஞ்சம் வாங்கும் எண்ணம் இல்லாதவன் கூட அருகில் இருப்பவன் வாங்குவதைக் கண்டும் காணாமல் இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மேலும் உயரதிகாரிகளின் உல்லாசச் செலவுகளுக்கும் அவர்களின் குடும்பங்களின் செலவுகளுக்கும் அழுவதற்காவேனும் அவர்கள் லஞ்சம் வாங்க வற்புறுத்தப்படுகிறார்கள்.

சென்னையின் இன்றைய போக்குவரத்து நெரிசலும் அதனால் மக்கள் படும் துயரும் அனைவரும் அறிந்ததுதான். ஆனாலும் அத்தகைய இடங்களில் இருக்கும் பெரிய கடை முதலாளிகள் செய்யும் ஆக்கிரமிப்புகளை, அக்கிரமங்களை எவரேனும் கேட்கிறார்களா? அரசு அதிகாரிகளின் அறிவுரைகளுடனேதான் விதிமுறை மீறிய கட்டிடங்கள் விண்ணை முட்டி எழுகின்றன. பிறகு அதற்கு ஒரு சிறு தொகையை அபராதம் கட்டி விட்டால் அவர்கள் செய்த பிழை கருணை மிக்க அரசால் மன்னிக்கப் படுகிறது. இந்த அரசு தான் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கத் தொழிலதிபர்களுக்கு அவகாசம் அளிக்கிறது. அதே அரசுதான் தன் பசிக்கு உணவு திருடிய சிறுவனைக் கைது செய்து சிறையிலடைக்கிறது.
இந்த அரசுதான் பேருந்துகளில் குறள் எழுதி வைக்கிறது. ஆனால்,
 
      "மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தன்மை
       பீடழிய வந்த விடத்து"
 
என்ற திருக்குறளை அவர்களுக்கு யாரே நினைவூட்டுவது? அரசதிகாரத்தைக் கைப்பற்றும் எவருமே இவ்விழிநிலைக்குப் பலியாகி விடுகிறார்கள். ஜீவாவையும் கக்கனையும் காமராசரையும் மறந்து வாழும் மானம் கெட்ட சமூகம் தானே இது! ஓட்டுப் பொறுக்கி அரசியலின் ஓர் அங்கமாய் இலவசங்களைத் துரத்திக் கொண்டிருக்கும் கேடு கெட்ட சமுதாயம் தானே இது!
      
      "நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
             நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்"
 
என்று புலம்புவதோடு நின்று விடாமல் ஒவ்வொரு தனி மனிதரும் தட்டிக் கேட்கத் தொடங்கினால், நாளைய சமுதாயம் ஊழலற்ற சமுதாயமாக மலர்வதற்கான நம்பிக்கை ஒளிக் கீற்று தொலை தூரத்தில் தெரிகிறது என்றெல்லாம் போலியான பொய் நம்பிக்கைகளைச் சொல்ல முடியாது. ஏனென்றால் ஆந்திராவிலே இவ்வளவு ஊழல், கேரளத்திலே இவ்வளவு ஊழல், கர்நாடகத்திலே இவ்வளவு ஊழல், அவ்வளவு ஏன் வட மாநிலப்பட்டியலையும் இணைத்து, அதன்வழி தமிழகம் எவ்வளவு பின்னால் இருக்கிறது என்ற அறிக்கை இன்றைக்கோ நாளைக்கோ நாளிதழ்களில் வெளிவரலாம். மக்களே தயாராக இருங்கள்.

7 comments:

  1. //“நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
    நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்”//

    உண்மைதாங்க...

    ..தனி மனிதரும் தட்டிக் கேட்கத் தொடங்கினால், நாளைய சமுதாயம் ஊழலற்ற சமுதாயமாக மலர்வதற்கான நம்பிக்கை ஒளிக் கீற்று தொலை தூரத்தில் தெரிகிறது..

    உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆனால் இது சாத்தியமாவற்கு நாள் ஆகும்...

    ReplyDelete
  2. நிதர்சன் நிலை! யார் சவுக்கு எடுப்பது?

    ReplyDelete
  3. எழுத்துரு கொஞ்சம் பெரிதாக இருப்பது போல் உள்ளது. கொஞ்சம் சிறிதாக்கலாம்

    ReplyDelete
  4. பாரத நாடு என்பதற்கு பதிலாக "லஞ்ச லாவண்ய நாடு" என்று பெயர் சூட்டினால் நன்றாக இருக்கும். இது பற்றிய என்னுடைய கட்டுரை "மக்கள் மனங்களைக் கெடுக்க வேண்டும்!" என்ற தலைப்பில் www.tamilhindu.com
    என்கிற வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. அதனையும் படிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  5. தி நியு இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியான எஸ்.குருமூர்த்தியின் கட்டுரையை நான் மொழிபெயர்த்து "விஜயபாரதம்" இதழில் இந்த வாரமும் அடுத்த வாரமும் வெளியாகிறது. முடிந்தால் படிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  6. வணக்கம்,இன்றைய சூழலுக்கு மிக அவசியமான பதிவு...!!! யானும் இவ்வாறு எழுத ஆசை...என் கட்டுரை படித்து திருத்த முடியுமா....தயவுசெய்து கீழ்கண்ட விலாசத்தில் காணவும்..

    http://raisephoenix.blogspot.com/2011/01/blog-post.html

    ReplyDelete