Sunday, April 3, 2011

அன்புள்ள மாணவிக்கு ..

- தி. பரமேசுவரி

நன்றி: பூவரசி.காம்

அன்புள்ள ஹெலன்,

நலமே. நலமாகவே இருப்பாய் என நம்புகிறேன். அதிசயமாக நம் ஆசிரியர் நமக்குக் கடிதம் எழுதுகிறாரே என்று உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். பலநாள் ஆதங்கமே இன்று கடித வடிகால் தேடிக் கொள்கிறது என்பதுதான் உண்மை. வேறு யாரிடமோ சென்று புலம்புவதை விடவும் என் மாணவர்களிடமே நான் என் வருத்தங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நீ உன்னுடைய மேல்நிலைத் தேர்வுகளை முடித்து விட்ட களைப்பில் அயர்ந்திருப்பாய். கடைசித் தேர்வினை எழுதி முடிக்கையில் உன் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது மகளே. நான் தேர்வுப்பணியில் இருக்கையில் தேர்வெழுதிக் கொண்டிருந்த மாணவிகள் கடைசி நேரத்தில் எழுந்து ஓடும் யத்தனிப்பிலேயே இருந்தார்கள். தேர்வின் இறுதி மணி அடிக்கப்பட்ட உடன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பெனத் தம் இருக்கையிலிருந்து எழுந்து ஓடிய பெண்கள், சற்று நேரத்துக்கும் பின் தங்கள் சக தோழிகளைப் பார்த்த பிறகுதான் வேகம் மட்டுப்பட்டு நின்றனர். ஒரு சிலர் பேனாவில் மிச்சமிருக்கும் நீல மையினை மற்றவர்கள் மீது தெளித்துத் தங்கள் விடுமுறை தொடங்கிய ஆனந்தத்தை வெளிப்படுத்தினர். ஓ... வென்ற காதைப் பிளக்கும் ஆரவாரம் எனக்குள்ளும் மகிழ்ச்சியின் சாறைக் கொஞ்சம் ஊற்றியது பெண்ணே.

உனக்கு ஞாபகம் இருக்கிறதா ஹெலன்? பதினொன்றாம் வகுப்பின் முதல் நாளில் நம் வகுப்பில் ஆசிரியராய் நானும் மாணவர்களாகிய நீங்களும் கலந்து பேசிய அந்தத் தருணம்? நான் எப்போதும் என்னை ஆசிரியராக மட்டும் உணர்ந்ததில்லை மா. உங்கள் எல்லோருக்கும் நல்ல தோழியாகவும் இருக்க விரும்புவேன். அப்படி இருப்பதால் தானே என்னிடம் உங்கள் துயரங்களை, மகிழ்ச்சிகளை, வாழ்வைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். உங்களிடமிருந்து நான் ஒவ்வொரு நாளும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதால் நீங்கள் எனக்கு குருவாகவும் ஆகிறீர்கள்.

ஒவ்வொரு நாளும் பாடம் பற்றிப் பேசியதோடு அன்றாட நிகழ்வுகளையும் பாடத்தோடு தொடர்புடைய பிற செய்திகளையும் நாம் கலந்து பேசியிருக்கிறோம் தானே. இது மொழி ஆசிரியருக்கே கிடைக்கக் கூடிய பெரும் பேறன்றோ! எத்தனை கதைகள்? எத்தனை நகைச்சுவை? நீங்கள் கவிதை என்று கொண்டு வரும் உங்கள் கிறுக்கல்கள்? ஆனால் போட்டி என்று வந்தால் தலை தெறிக்க ஓடுவீர்களே.. அப்போது பார்க்க வேண்டும் உங்கள் ஓட்டத்தை. சிரிப்பாணிதான். சரி, இப்படிக் கலந்து பேசும்போதெல்லாம் கொண்டாட்டம்தான் உங்களுக்கு. ஆனால் உங்களில் எவரையேனும் எழுப்பிப் படிக்கச் சொன்னால், கேள்வி கேட்டால் திரு திருவென்று விழிப்பீர்களே பார்க்கணும். அதிலும் படிக்கச் சொன்னால் வேண்டாம் மிஸ். கேர்ள்ஸ் இருக்காங்க என்று மாணவர்கள் வழிவதைப் பார்க்கணுமே.

உன் அப்பா அடிப்பதை, திட்டுவதை நீ தயங்கிக் கொண்டே ஒரு நாள் சொன்னாயே, நினைவிருக்கிறதாடா? அருணாவின் தந்தை இறந்து போனவுடன் எனக்குத் தொலைபேசி அழுதாயே. ரசாக்கும் வெற்றிவேலும் அடிக்கடி சண்டையிடுவதைக் கவலையுடன் என்னிடம் முறையிட்டாயே. உன்னைத் தொடர்ந்து உன் தோழமைகளும் என்னுடன் தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றில் ஒரு சிலவற்றிற்கேனும் என்னால் சில தீர்வுகளை, ஆறுதல்களை அளிக்க முடிந்ததே அம்மா. ஒரு ஆசிரியராய் நான் பெருமை கொள்ளும் தருணங்கள் அவைதான்.

என்னைப் பொறுத்த வரையில் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவரை மேலும் படிக்கச் செய்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமில்லை. படிப்பில் சிக்கல் இருக்கக் கூடிய மாணவர்களைப் படிக்கத் தூண்டுவது, அதன் உளவியல் காரணங்களைச் சந்திப்பது இவையே என் முன்னால் இருக்கக் கூடிய சவால்கள். அப்படித் தேடியபோது தானே நன்றாகப் படித்தும் சட்டெனப் பரபரப்பாகி, படித்ததையெல்லாம் மறந்து விடக் கூடிய, எந்நேரமும் பதட்டமான கிரிதரனைக் கண்டேன். அதைப் பற்றிக் கேட்டபோது சிறுபிள்ளை போல் அவன் அழுதது இன்னும் என் கண் முன்னால் நிற்கிறது. பதறிப்போன என்னிடம் வீட்டு சூழலைச் சொல்லியபோது அதைக் கடக்கச் சில உத்திகளையாவது என்னால் கற்பிக்க முடிந்ததில் மகிழ்ச்சிதான்.

என் மாணவர்களைப் பற்றிப் பேசத்தொடங்கினால் எவ்வளவு நாட்களானாலும் தீராது. தேர்வுகளை நீ நல்ல முறையில் எழுதியிருப்பாய் என்பதில் எனக்கு ஐயம் எதுவுமில்லை. நீ எது குறித்தும் பதட்டமடையும் பெண்ணல்ல. உன் சிரித்த முகமும், டீச்சர் என்னும் உன் அழைப்பும் இன்னும் என் காதில் ஒலித்தபடி. சில சமயங்களில் எம் எதிர்பார்ப்புகளை உங்கள் மீது திணித்தபோதும் எங்கள் மீதுள்ள் அன்பின் காரணமாகப் பொறுத்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாம் உங்கள் நன்மைக்குத்தானே செய்கிறோம் என்ற முழக்கத்துடனே எங்கள் குற்ற உணர்வை ஒவ்வொரு வருடமும் கடந்து செல்கிறோம்.

இலக்கணப் பாடத்தை நான் ரசித்து, ருசித்துக் கற்பிக்க, மதிய உணவின் முட்டத்தில் நீங்கள் கண்கள் கிறங்க அரை மயக்கத்தில் இருக்க, கோபமும் சிரிப்புமாக வரும் எனக்கு. என் செய்வேன் பராபரமே! உங்கள் குழந்தைத்தனம் கொடுக்கும் மகிழ்ச்சியைப் போலவே உங்கள் வேகம் எனக்குச் சில சமயம் பயத்தைக் கொடுக்கும் மகளே. உடற்கவர்ச்சியில் காதலுறுவது, படிப்பை இழப்பது, வீட்டின் வசவுகளில் சட்டென்று அதிர்ச்சிகரமாக முடிவெடுப்பது என எத்தனை சம்பவங்கள்?

இங்கு தேர்வெழுதும் மாணவர்கள் கூட, வினாத்தாள் மிகச் சுலபமாகவே இருந்தும் சரியாக எழுதாமல் அடுத்தவர் விடைத்தாட்களைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். வருத்தமாக இருந்தது. வருடம் முழுதும் உயிரைக் கொடுத்துக் கற்பித்தும் கூட இன்றைய மாணவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வி உள்ளுக்குள் என்னைக் குத்திக் கிளறியது. ஹெலன், மாணவர்களை மட்டும் குற்றம் சாட்டுகிறேனென்று நினைக்காதே. எங்கள் பக்கத்திலும் தவறுகள் இருக்கின்றன என்றாலும் இன்று பொதுவாகவே பார்த்தால், ஊடகங்களின் தாக்கத்தால் மாணவர் கல்வியின்பால் கவனம் செலுத்துவது குறைந்தது போலவே எனக்குத் தோன்றுகிறது. சமூகம், அரசு, கல்வி நிறுவனங்கள் என எல்லோருக்கும் இதில் பங்குண்டு என்பதை உணர்ந்தே இருக்கிறேன். ஒரு பக்கம் மாணவர்கள் மதிப்பெண்ணைத் துரத்திக் கொண்டு இயந்திரங்களைப் போல ஓடுவதைப் பரிதாபத்துடன் பார்ப்பது போலவே, படிப்பை அலட்சியத்துடன் அணுகும் மக்களையும் கவனிக்கிறேன்.

அறிவுரைகள் கசக்கும் பருவமிது. நாவைத் திறந்தால் பொய் தாராளமாகப் புழங்கும். சில நேரம் எங்களுக்காகக் கேட்டுக் கொள்வதே உங்கள் மனதில் ஏதோ ரசவாதம் செய்து உள்நுழைந்து வேலையும் செய்யத் தொடங்கும். போனாப் போகுதுன்னு உங்களுக்காகப் படிக்கிறேன் டீச்சர் என்று சொன்ன தியாகராஜனை, அவன் சொன்ன தோரணையை அவ்வப்போது நினைத்துச் சிரித்துக் கொள்வேன். அக்கறை, முயற்சி இதெல்லாம் குறைந்துகொண்டு வருகிறதோ எனத் தோன்றும். தேவையற்று உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கிறீர்களோ என்ற பயம் வரும். அதிகம் யோசித்தால் எனக்குத் தான் வயதாகிக் கொண்டிருக்கிறதென்றும் நினைத்துக் கொள்வேன்.

என்ன செய்வேன் மா? தம்பி நான் ஏது செய்வேனடா என்று பாரதி கையறு நிலையில் புலம்பியதைப் போலவே எங்களில் பலரும் உங்களை நினைத்துப் புலம்புகின்றனர். உங்கள் மன நிலையில், சூழலில் நின்று பார்க்கையில் உங்களில் பலரை நினைத்தாலும் பரிதாபமாகத் தான் இருக்கிறது. என் செய்ய.

சரிம்மா. இன்றைய சூழலில் ஆண், பெண் இருவருக்குமே கல்வி அவசியம்தான். இவையெல்லாம் நாம் வகுப்பில் பேசியவைதான். கோபிதான் டீச்சர் நீங்க எப்பவுமே கேர்ள்ஸுக்குத் தான் சப்போர்ட் பண்றீங்க ன்னு சண்டைக்கு வருவான் இல்லையா? அதனால், மேலே உயர்கல்வி வாய்ப்பு பற்றி யோசித்து வைத்துக் கொள். உன் வகுப்புப் பெண்களிடமும் அது பற்றிப் பேசு. தெளிவாக முடிவெடுங்கள். அதில் உங்களுக்கு என்ன சந்தேகமென்றாலும் எப்போதும் நான் காத்திருக்கிறேன். எனக்குத் தொலைபேசுங்கள். நன்றாகப் படியுங்கள்.

என்றும் உங்கள் நலம் நாடும்

உங்கள் ஆசிரியை.

2 comments:

  1. பரமேஸ்வரி,
    தங்களின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்தவை!மாணவர்களின் போக்கை ஆசிரியரான நானும் உணர்ந்ததால் உங்கள் கடிதத்தை மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. நினைவிருக்கிறதா சகோதரி…?
    சிலப்பதிகாரத்தில், கண்ணகியோடு மதுரை செல்லும் வழியில் கிடைத்த மாதவியின் கடிதத்தைப் படித்த கோவலன், அதில் ஒரு வார்த்தையைக் கூட மாற்றாமல் அப்படியே தான் எழுதியதாகத் தன் பெற்றோர்க்கு அனுப்பிவைத்ததாக வருமே…
    அதுபோல-
    நீங்கள் உங்கள் மாணவிக்கு எழுதிய இந்தக் கடிதத்தை நான் என் மகளாக நினைக்கும் என் மாணவிக்கு எழுதியதுபோல் உணர்ந்தேன்…
    ஆசிரியராகவும் பெற்றோராகவும் இருக்கும் நான், இதன் காரணமாக,
    எனது வலையில், ‘எனக்குப் பிடித்த வலைப்பூ படைப்புகள்’ பகுதியில் இதை எடுத்துப் போட்டிருக்கிறேன்… வேறு எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.
    நன்றி வணக்கம்.
    நா.முத்து நிலவன்,
    (தமிழாசிரியர் மற்றும் துணைத் தலைமை ஆசிரியர்,
    அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி,
    புதுக்கோட்டை-622 004)
    எனது வலைப்பூ :
    http://valarumkavithai.blogspot.com/

    ReplyDelete