Thursday, June 23, 2011

பேரோலமென எழும்பும் கலகக் குரல்கள்

நன்றி: தீராநதி

கலை எந்த வடிவத்தில் இருந்தாலும் வாழ்க்கையைப் பேசுவதாகவும் கேள்விக்குட்படுத்துவதாகவுமே இருக்கும். எழுத்தும் சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை என வகைமையால் வேறுபட்டாலும் அதன் தேடல் மானுட தரிசனத்தையே யாசித்து நிற்கும். காலங்காலமாக நடந்துகொண்டிருக்கும் இந்த வேள்வி இன்றைக்கு நீறு பூத்துக் காணப்படினும் கீரனூர் ஜாகிர்ராஜா போன்ற படைப்பாளர்களால் அது மீண்டும் மீண்டும் மூட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். இத்தகைய படைப்பாளிகளைக் காலம் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை எனத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கீரனூர் ஜாகிர் ராஜாவின் ஐந்தாவது நாவல் மீன்குகைவாசிகள். இவர் மீன்காரத்தெரு நாவல் மூலமாகப் பரவலான கவனம் பெற்றவர். குழந்தைமையிலிருந்து தான் வளர்ந்த நிலத்தில் நடக்கும் நிகழ்வுகளின் பாதிப்பு, தன் மக்கள் ஒதுக்கப்படுவது குறித்த கேள்வி, கொதிப்பு எனத் தான் உள் வாங்கிய வலிகளைப் படைப்பு மனத்தின் செழுமையுடன் வெளிக்காட்டுகிறார் ஜாகிர். இஸ்லாமிய சமூகத்தின் மறைக்கப்பட்ட வாழ்க்கை நிதர்சனங்களை, மூடுண்ட திரை கிழித்துத் தன் எழுத்தின் வலிமையால் மக்கள் முன் பரத்துகிறார்.

மீன்காரத்தெரு x பங்களாத் தெரு என்ற இரு தெருக்களின் முரண்களைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் சமூகம், மதம், சாதி, வர்க்கம், பால் எனத் தன்முன் பரந்து கிடக்கும் பேதங்களின் மீதெல்லாம் சவுக்கினைச் சுழற்றுகிறார். 185 பக்கமே உள்ள இந்த நாவல் பசி, வறுமை, நட்பு, மனிதம், அலட்சியப்படுத்தப்படும் விழுமியங்கள், அலைக்கழிக்கப்படும் வாழ்க்கை, தோல்வி, அவமானம், மேலாதிக்க ஒடுக்குமுறை எனச் சகலத்தையும் பேசுகிறது.

குளத்தில் மீன் பிடித்து விற்றும் வீடுகளில் வேலை பார்த்தும் வயிற்றுக்கு உணவு தேடும் விளிம்பு நிலை மனிதர்களான மீன்காரத் தெரு மக்கள், உயர்சாதி இஸ்லாமியர்களிடம் வேலை செய்பவர்கள்; அதனாலேயே பாலியல் சுரண்டலுக்கும் மத சாதீய ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகிறவர்கள். கட்டற்ற வன்முறையும் மரபுமீறல்களும் கொண்ட இவர்களே ஜாகிரின் படைப்புமனத்தைக் கூர்தீட்டுபவர்கள். ஒட்டுமொத்த மானுட தரிசனத்தை இங்கிருந்தே அவர் பெறுகிறார். தனது தொடர்ந்த தேடலில் கிடைத்த வாழ்வு குறித்த மதிப்பீடுகளை, தன் சமூகம் சார்ந்த சிக்கல்களை, அனுபவங்களை அசை போடும், சொல்லின் ருசியறிந்த கவிமனம் தேர்ந்தெடுத்த சொற்கள் மூலம் கதைப்போக்கை விவரித்துச் செல்கிறது.

துளியும் மிகையின்றி, தேவையற்ற வருணனைகளின்றி வண்ணங்கள் தவிர்த்துக் கோட்டோவியம் போலத் தன் மனிதர்களைச் சித்திரப்படுத்தியிருக்கிறார். பொதுமனத்தின் கவனம் பெறாத, பொது வெளியில் புழங்காத இஸ்லாமியப் பேச்சுவழக்கு கூடுதல் கனமும் கவனமும் பெற்றுத் தருகிறது. தன் அனுபவங்களின் ஊற்றெடுப்பை, தான் அவதானித்த ஒரு தெருவின் கதையை, இப்படியானதொரு உலகம் இருப்பதான துளி அறிதலுமின்றி வாழும் மனிதர்களின் கைப்பிடித்து அழைத்து வந்து காட்டும் நட்பூறிய எழுத்து ஜாகிருடையது.

எளிமையான ஆனால் அழுத்தமான மொழி அவருக்குக் கைவரப் பெற்றிருக்கிறது. வட்டார வழக்கும் இஸ்லாமியச் சொல்லாடல்களும் நாவலின் பலம். இஸ்லாமியச் சடங்குகள், மரபுகள், நம்பிக்கைகளைத் துருத்தலின்றி இயல்பாகச் சொல்லிச் செல்கிறார்.

நாளதுவரையிலும் பதிவே பெறாத, தமிழ் இலக்கியச் சூழலுக்கு முற்றிலும் புதியதான தலித் முஸ்லீம் மக்களின் வாழ்வில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், உறவுச் சிக்கல்கள், பாலியல் வேட்கை போன்றவற்றை நுட்பமான மானுட உணர்வுகளின் புரிதல்வழி மிகுந்த வலியுடன் பேசுகிறது இந்நாவல். நாவலில் வாழுகின்ற மனிதர்கள் ஆமினா, நைனா, சண்முகம், ஷேக்கா, சுபைதா, ரஜியா, காசீம், லியாக், நூர்தீன், நசீர் என ஒவ்வொருவரும் அவரவரளவில் தனித்தனி உலகமாக விரிந்து, விகசித்து நிற்கின்றனர்.

அழுக்கும் வன்முறையும் வறுமையும் கொண்ட தெருவாகப் பங்களாத்தெருவாசிகளால் பார்க்கப்படுகின்ற மீன்காரத்தெரு மக்களின் நுண்மையான அகமன வெளிப்பாடுகளும் கலகங்களுமே கதையாக விரிகிறது. அழகும் பொலிவும் நிறைந்த பங்களாத்தெரு மக்கள் இவர்களை பொருளியல்/மத/பாலியல் ரீதியாகச் சுரண்டி வாழ்வதை, ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்குள் உணரும் சுய இழிவை, அவர்களை அவர்களே செய்துகொள்ளும் பகடியை, விமர்சனத்தை சமரசமின்றிப் பதிவு செய்கிறது இந்நாவல்.

வாழ்வில் நாம் பெறும் துன்பம் சாதாரண மனிதனைக் காயப்படுத்தி ஒதுங்கச் செய்கிறது. படைப்பாளனைச் சவாலிட்டு எழுதத் தூண்டுகிறது. பிற உயிரின் வலி கண்டு கசியும் படைப்பாளியின் மனத்திலிருந்து பெருக்கெடுக்கும் அன்பின் ஊற்றில் சகலமும் நனைந்து நெக்குருகுகிறது. தேர்ந்த படைப்பாளி தன் அன்பையும் வலியையும் படிப்பவருக்குள் கடத்தி விடுகிறான்.

மீன்காரத் தெருவின் வருணனையோடு தொடங்கும் நாவலில் தெருவின் விசேஷமான வெயில், காற்றின் பிரத்தியேகமான வாசம் ஆகியவை அம்மக்களின் பிம்பமாகப் பதிவு செய்யப்படுகிறது. இவர்தம் வாழ்வு, நிகழ்வு, சொற்களைக் கொண்டே பங்களாத்தெரு பதியப்படுகிறது. "லே லம்மா ... லம்மா லே" என்னும் வாஞ்சையான அன்புக்குரல் நம்முள் கிளர்த்தும் உணர்வுகளை வார்த்தையால் வடிக்க இயலாது.

"வத்தும். வரளும் ..... நம்மளக் கைவிட்றாதுல" என்று குளத்தைப் பற்றிப் பேசும் காதர்ஷா குளத்தைப் பற்றி மட்டும் கூறவில்லை. தன் தெருச் சனங்களையும் குளத்தோடு ஒப்பிடுகிறார். "நெடிது உயர்ந்த மாளிகைகளை இருமருங்கிலும் பார்த்து வியந்தபடி ஒரு ஓலைக்குடிசை நகர்ந்து போவதைப் போல ஆமினா போய்க் கொண்டிருந்தாள்" என்று சொல்கையில் வருணனைகளும் உவமைகளும் வெற்று அழகாய், விவரணையாய் நிற்காமல் நாவலின் மையத்தை, உயிர்ப்பை விளக்குவதாகிறது.

நிகழ்வுகளில் மனிதர் செயல்படும்தன்மை, அவர்தம் இயல்பு ஆகியவற்றின் மூலம் காட்சி உருவமாக அவர்களை நம் கண்முன் நிறுத்துவதில் ஆசிரியர் வெற்றியடைகிறார். நசீரின் காட்சிகள் போல் நாவலைப் படிப்போரின் கண்முன்னால் நாவல், காட்சி ஊடகமாகிறது. அந்த அளவுக்குத் தனித்தன்மையான மொழியில் நாவலில் உலவும் மனிதர்களை நம் கண் முன்னால் நிறுத்துகிறார். ஆமினாவின் கண்ணீர்ச் சித்திரம், சுபைதாவின் பொறுப்பற்ற போக்கிரித்தனம், ரஜியாவின் தன்மானம், ஷேக்காவின் கையறுநிலை, நைனாவின் கலகப்போக்கு என நாவல் மனிதர்களைக் காட்சிப்படுத்துகிறது; அதன்வழி வாழ்வை விசாரணைக்குள்ளாக்குகிறது.

நாவலில் உள்ள கையளவு மனிதர்களிலும் பெரும்பான்மையாகப் பெண்களே பேசப்படுகின்றனர். குளத்தை அம்மாவாக உருவகப்படுத்தும், நேசிக்கும் ஆமினா, தன் துக்கத்தையெல்லாம் அவளிடமே கொட்டுகிறாள். அவள் துன்பத்தை மறக்கும் இடமாகிறது குளம். நசீரின் வீட்டில் இருக்கும்போது கூட இந்நேரம் குளத்தில் மீன்கள் என்ன செய்து கொண்டிருக்கும் என்று யோசிப்பாள். அவளும் குளமும் ஒன்றுக்குள் ஒன்றாய்க் கலக்கும் அபூர்வ தருணமது.

வாயாடிக் கொண்டு ஊர்சுற்றி வரும் சுபைதா, குல்உ கொடுத்துப் புரட்சி செய்த மும்தாஜ், ஆறோடு பிறந்து ஆறோடு வளர்ந்து ஆற்றுச்சுழலில் சிக்கி மூச்சை நிறுத்திக் கொண்ட வள்ளி, கருணையே இல்லாத அன்பம்மா, ரமீஜா என்கிற ராஜாளி, வறுமையிலும் செம்மையுடன் வாழும் ரஜியா, லைலா, நர்கீஸ், பெற்ற பிள்ளையை நான்கே நாட்களில் விட்டுப் பிரிந்த நசீரின் தாய் என ஏராளமான பெண் மாந்தர்கள்; அவர்கள் உணர்த்தும் வாழ்வின் பரிமாணங்கள்; கண்ணுக்குப் புலப்படாத சூட்சுமங்கள்.

சுபைதா கலியனைப் பார்க்க விரும்புதல், சுப்பிரமணியச் சாணானின் இரட்டை அர்த்தப் பேச்சுகள்  எனப் பாலியல் வேட்கைகளும் நாவலில் விரவிக் கிடக்கும் பாலியல் ஏச்சுகளும் பழமொழிகளும் மீன்காரத்தெரு மக்களின் கட்டற்ற தன்மையைச் சுட்டுகிறது.

"கல்மனம் கரையக் கூடும். காசுமனம் கரையவே கரையாது."

"அவமானங்களில் உழன்றவனுக்கு வைராக்கியம் பிடித்தால் முடிவு வேறுமாதிரி இருக்கும்"

என நாவலாசிரியரின் அனுபவத் தெறிப்புகள் ஆங்காங்கே வெளிப்படுகின்றன.

சமயம் வாய்க்கும்போதெல்லாம் தான் சார்ந்த சமூகம் குறித்த, அதன் ஏற்றத்தாழ்வு பார்க்கும் இழிதன்மை குறித்த கேள்விகளை எடுத்துவைக்கிறார். சோழியப் பறச்சி என சாதீயம் பேசுதல், தோளோடு தோள் உரசித் தொழுகை செய்யும்போதும் மய்யித்துகளைக் குளிப்பாட்டுகையிலும் வெளிப்படும் ஏற்றத்தாழ்வு, மீங்காரத் தெருவுக்குள் வேறு யாரும் நுழைவதில்லை என்பதான பதிவு ஆகியவற்றின் மூலம் மறைக்கப்பட்ட செய்திகளைப் பகிரங்கப்படுத்துவதுடன் கடைமயிர் நீக்கச் சொன்ன பூசாரியின் குறியறுத்தல் என்பதான கலகம், கலை மறுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இணைவைத்தல் மூலம் கேள்வி கேட்டல், நசீர் மூலம் குரானைக் காட்சிப்படுத்துதல்,  ஈருசுருக்காரி தர்கா என்ற பெயரில் பாரம்பரியமான தர்கா கலாச்சாரத்தை மறுப்பவர்களுக்குக் குட்டு வைத்தல் எனத் தன் விமர்சனங்களைத் துருத்தாமல் கதைப் போக்கிலேயே சொல்லிச் செல்கிறார்.
கைகளைக் குவித்துக் குளத்தை வணங்க முற்படுவதும், மண்ணை வாரித் தூற்றுவதும் எனச் சில இடங்களில் நூற்றாண்டுகள் தாண்டிய முந்தை மன வெளிப்பாடுகள் வெளிச்சம் காட்டுகின்றன. தன் கேள்விகளை, விமர்சனங்களை வெவ்வேறு உத்திகளை, வடிவ முறைகளைப் பயன்படுத்திக் கதையாடலில் பரீட்சார்த்தமாகக் கையாள்கிறார். சண்முகம் தன் வீட்டிற்கு மின்சாரம் கொண்டு வர முயற்சிக்க, அவன் தந்தை துருத்தி பாரம்பரிய மனத்துடன் ஒடுங்கி, பயந்து காணும் கனவு மூலம் சாதீயத்தை வெளிக்காட்டிக் கொதிக்கிறார்.

வள்ளி x நைனா, நர்கீஸ் x சண்முகம், மாரியம்மாள் x சேட்டு என்ற மதம் கடந்த திருமணங்களைக் காட்டுவதன் மூலம் மதங்களைத் தாண்டி நிற்கும் அன்பு, பற்று, பிடிமானம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார். ஆனால், சேட்டுவிடம் சுமை தூக்கச் சொல்லும் உரையாடலின் இறுதியில், இளப்பமெல்லாம் ஆகாது. நீ சுமப்பவன். நான் அதற்குரிய கூலியைக் கொடுப்பவன். மரியாதைக்கு நட என்று சொல்லாமல் சொல்லுமிடத்தில் வர்க்கத்தை முன்வைத்து விசாரணை நடக்கிறது.

மனிதன் நகர நாகரீகத்திற்கு ஆட்படுகையில் அது அவனிடம் ஏற்படுத்தும் மாற்றம், வெற்று ஆடம்பரம், தேவையற்ற பகட்டும் பவிசும் என சண்முகம் வாழ்க்கையின் மூலம் நம் மனத்தில் அலைகளை எழுப்புகிறார் ஆசிரியர். இஸ்லாத்தில் சாதி இழிவுகள் இல்லை என்று பொதுவெளியில் நின்று கொண்டு கதைத்துக் கொண்டிருக்கும் அடிப்படைவாதிகளின் முன்னால், "நீ நாசுவண்டா நாசுவந்தே பறயண்டா பறயந்தேம். சும்மா பேர மாத்தி வச்சுக்குட்டா துளுக்கனா நல்ல ஜாதிமானாயற முடியாது" என்று சொல்லும் அவர்கள் முகமூடிகளைக் கிழித்தெறிகிறார். உருது முஸ்லீம் x தமிழ் முஸ்லீம் இடையிலான சிக்கலும் பெரும்பான்மை எண்ணிக்கையே மரியாதையை நிச்சயப்படுத்துவதையும் கோடி காட்டிச் செல்கிறார்.

நாவலின் சில உள்தலைப்புகளே கலகத்தின் குறியீடாகவும் கவிதைத் தன்மையுடனும் உள்ளது நல்ல ரசனையாகவும் ஆசிரியரின் கவிதை மொழியை இனங்காட்டுவதாகவும் உள்ளது. குறைவான பக்கங்கள் கொண்டிருக்கும் இந்த நாவல் இழுத்து இறுகக் கட்டப்பட்டிருக்கும் அம்பறாத்தூணியை நினைவூட்டுகிறது. மனித மனத்தின், சமூகத்தின், மதத்தின் அழுக்குகள் மீது போர் தொடுக்கும் போராளியாகவே இருக்கிறார் கீரனூர் ஜாகிர் ராஜா.

பால்ராசு நாச்சம்மாள் கதை ஒரு தனித்த சிறுகதையின் தன்மையில் நின்று நாவலின் போக்கோடு ஒட்டாமல் செல்கிறது. நாவலாசிரியர் முன் பின்னாக மாற்றிக் கதை சொல்லுதல் சில இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சண்முகத்தின் கதையை இன்னும் இறுகப் பிணைத்திருக்கலாமோ என்னும் கேள்வி எழுகிறது. வாசகனுக்கான இடைவெளிகளே சில இடங்களில் பள்ளங்களாகிச் சங்கடப்படுத்துகிறது. மிகுந்த ரசனையுடன் நாவலை எழுதிச் செல்லும் ஆசிரியர் சட்டென்று முடியாத பாவனையில் நிறுத்திவிடுவது ஏமாற்றத்தைத் தருகிறது.

"விரிவாகக் கனராகம் ஒன்றைக்கட்டி எழுப்ப வாய்ப்பிருக்கும்போது வித்தைக்கும், ஞானத்துக்கும் குறைவில்லாதபோது பாடகர் எதற்காகத் தனது எல்லைகளைத் தானே தீர்மானித்துக் குறுக்கி வரையறுத்துக்கொள்கிறான்"

என்றொரு கேள்வியை துருக்கித் தொப்பி நாவலுக்கு முன்னுரை எழுதிய மரியாதைக்குரிய எழுத்தாளர் நாஞ்சில்நாடன் முன்வைத்திருப்பார். மறக்கமுடியாத பாத்திரப் படைப்புகள், இயல்பான உரையாடல்கள், ஊடே தலையசைக்கும் கவிதைமொழி, வடிவம் குறித்த புரிதல் என அத்தனையும் வாய்க்கப் பெற்றிருக்கும் ஜாகிர்ராஜாவிடம் அதே கேள்வியை முன் வைக்கிறேன்.

கடந்தகால மதிப்பீடுகளை இன்னும் அழுத்தமாய்ப் பற்றிக் கொண்டு காலத்துக்குத் தக்க மாற்றம் பெறாமல், தங்களுக்குத் தேவையானதில் மட்டும் மாற்றம் விரும்பும் ஒழுங்கீன மனிதர்களை ஆசிரியரின் முந்தைய நாவல்களைப் போலவே இந்த நாவலும் முதுகு பற்றிக் கேள்வி கேட்கிறது. ஒடுக்குமுறைக்கு எதிரான தொடர்ந்த பயணத்தில் கலகக் குரல் எழுப்புகிறது. மனித மனத்தின் பரப்பும் சூட்சுமமும் கண்டு மானுடத்தின் ஒழுங்கமைவைக் கலைத்துப் போடுகிறது.

2 comments:

  1. நிச்சயம் படிக்க வேண்டும் இந்நாவலை...

    ReplyDelete
  2. சங்கவி, எப்படி இருக்கீங்க? ஜாகிரோட எல்லா நாவலையுமே நீங்க தேடிப் படிக்கலாம். இன்றைக்கு எழுதும் முக்கியமான நாவல் எழுத்தாளர்களுள் ஒருவர்.

    ReplyDelete