நன்றி : பாவையர் மலர்
காலையில் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் பள்ளிக்குக் கிளம்பி வந்து விடுகின்றனர் மாணவர்கள். அவர்கள் பெரும்பாலும் வீட்டின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் வராதவர்கள். இப்படியும் ஒரு வாழ்க்கை இருக்கிறதா என்று தனியார் பள்ளி மாணவர்கள் பொறாமைப்படக் கூடிய அளவுக்கு வாழ்பவர்கள். ஆனால் இதுவும் சரியா என்பது உங்கள் முன் வைக்கப்படும் கேள்வி. பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டே இருப்பார்கள். காலையில் நடக்கும் சிறப்பு வகுப்புக்கு வர மாட்டார்கள். ஆனால் பள்ளி வளாகத்துக்குள்ளேயே விளையாடியபடி இருப்பார்கள். வழிபாட்டுக்கான முதல் மணி அடித்த பின்னர், நிதானமாகக் கிளம்பி, வீட்டுக்குச் சென்று குளித்தும் குளிக்காமல் புத்தகப் பையை எடுத்து வருவார்கள். வழிபாடு முடிந்து, வருகைப் பதிவேட்டையும் முடிக்கும் நேரத்தில் ஓர் அசட்டுச் சிரிப்போடு வகுப்பு வாசலில் வந்து நிற்பார்கள். அவர்களுக்கு வருகை பதியலாமா, வேண்டாமா என்பதே பெரும் சந்தேகமாக இருக்கும். மீண்டும் சில மணி நேர இடைவெளியில் பையை வகுப்பறையிலேயே வைத்துவிட்டுச் சுவரேறிக் குதித்துக் கிளம்பி விடுவார்கள். அவர்கள் திரும்ப வந்துவிட வேண்டுமே என்பதே பெரும்பாலான ஆசிரியர்களின் பிரார்த்தனையாக இருக்கும். எங்கள் பிரார்த்தனை நேரமென்பது அதுதான்.
இப்படியான சில மாணவர்களையும் இங்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இதே பூங்குழலிகளும் அபிராமிகளும் படிக்கும் பள்ளிகளில்தான் இவர்களும் படிக்கிறார்கள். இந்தப் பெண்கள் கொண்டுவரும் மதிய உணவு காலையிலேயே இவர்களால் ஸ்வாஹா செய்யப்படும். வகுப்புகள் நடைபெறும் நேரத்திலும் அவர்கள் கொண்டு வரும் வேர்க்கடலை, பிஸ்கட்டுகள், மாங்காய், மிக்சர் என வகைதொகையில்லாமல் எல்லாவற்றையும் பேரோசையுடன் நொறுக்கித் தள்ளுவார்கள். ஆசிரியர் இதைக் கண்டுகொள்ளாமல் பரப்பிரம்மமாய்ப் பாடம் எடுக்க வேண்டுமென்பது அவருடைய தலையெழுத்து. ஏனென்றால் எல்லாமே இன்றைக்கு மாணவர் நலன் கருதி நடத்தப்படுகிறது.
முன்பெல்லாம் கடைசி பென்ச் மாணவர்கள் என்றே ஓர் அணி புகழ் பெற்றிருக்கும். இப்போதெல்லாம் முதல் தொடங்கி கடைசி பென்ச் வரை ஒரே அணிதான். ஓரிரு மாணவர்களே படிக்கும் ஆர்வத்துடன் கவனிப்பவர்கள். அவர்களில் எவரேனும் ஆர்வக்கோளாறில் எழுந்து சந்தேகம் கேட்டு விட்டாலோ, தேர்வு நேரங்களில் ஒரு விடைத்தாள் அதிகம் வாங்கி விட்டாலோ தீர்ந்தார்கள். அங்கேயே கேலி பேசுவதும், தாளை வாங்கிக்கொண்டு தன் இடம் அமரும் வரை ஊளையிடுவதும் அவன் எழுதிய விடைத்தாளைக் கேட்டுத் தொந்தரவு செய்வதும் எனத் தீராத விளையாட்டுப் பிள்ளைகளாகி விடுவார்கள். பொதுத் தேர்வுகளில் கூட சில இடங்களில் இப்படித்தான் நடக்கிறது என்று சொன்னால் நம்புங்கள் நண்பர்களே..
வகுப்பறைக்குள் குடித்து விட்டு வருவது, புகை பிடிப்பது, ஆசிரியரையும் சக மாணவிகளையும் கேலி பேசுவது, அலைபேசி எடுத்துவந்து பெண்களைப் (ஆசிரியைகளையும் சேர்த்தேதான் சொல்கிறேன்) படம் எடுப்பது, காதல் கடிதம் கொடுப்பது (இதுவும் இருவருக்கும்தான்) என இவர்களின் அலப்பறை சொல்லில் அடக்க முடியாது. அவர்களின் பெற்றோரை வரவழைக்கலாமென்றால் ஒரு நாள் வேலையை விட்டு வந்தால் கூலியை இழப்போமென்ற நிலையில் இருப்பவர்கள், தங்கள் பிள்ளையை நன்கு அறிந்தவர்கள், எனவே எங்கள் கூக்குரல்களைப் பொருட்படுத்துவதேயில்லை. அப்படியே தப்பித்தவறி வந்தாலும் அவர்களுடைய கண்ணீரும் கையாலாகாத்தனமும் எங்களையே குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கும். இப்படிக் கேட்க ஆளின்றி வளரும் பெரும்பான்மை இளைய தலைமுறை திரைப்படங்களையும் ஊடகங்களின் சீரியல்களையும் பார்த்தே தங்களை வடிவமைத்துக் கொள்கிறார்கள். அவற்றுள் இருக்கும் வன்மமும் வெறியும் பழித்தலும் எள்ளலும் சற்றும் குறையாமல் உள்வாங்கிக்கொள்கிறார்கள். காட்சித் திரையின் படையெடுப்பில் வலிவிழந்து அடிமைகளாகி விடுகின்றனர். இதற்குப் பெரிய உதாரணம், பாலாஜி.
ஹீரோ போலத் தோற்றமளிக்கும் பாலாஜியின் ஒற்றை அறை வீட்டுக்கு நான் சென்றிருக்கிறேன். பள்ளி இல்லாத நேரத்தில் அருகிலுள்ள தொழிற்சாலையில் வேலை பார்ப்பான். ஒரு நாள் முழுக்கூலி 300 ரூபாய் என்று சொல்லி இருக்கிறான். அந்தப் பணத்தில் உடற்பயிற்சிக்கூடத்துக்குச் சென்று தன் உடலை சிக்ஸ் பேக் ஆக முயற்சிப்பவன். நடிகர் சூர்யாவின் பரம ரசிகன். நீங்க புத்தகத்துல லாம் எழுதி என்ன பிரயோஜனம் டீச்சர்? சூர்யாவை நம்ம ஸ்கூலுக்குக் கூட்டிட்டு வருவீங்களா? என்று என்னை எப்போதும் கேள்வி கேட்பவன். அண்மையில் வெளிவந்த சூர்யாவின் படத்தைப் பள்ளிக்கு வராமல் முதல் நாள் முதல் காட்சிக்குப் போய் விட்டு வந்து மாலையில் நடக்கும் சிறப்பு வகுப்புக்கு நல்ல பிள்ளை போல வந்து உட்கார்ந்தான். காலையில் 9 மணியிலிருந்து பார்க்காதவனை மாலை 4 மணிக்குப் பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டேன். ஓர் அசட்டுச் சிரிப்புடன் "சூர்யா படம் இன்னைக்கு ரிலீஸ் டீச்சர்" என்றான். தனியாகவும் அவனுடைய அம்மாவை அழைத்தும் அக்கா, மாமா எனக் குடும்பத்தையே அழைத்துப் பேசியும் அவனிடம் ஒரு மாற்றமுமில்லை. வகுப்பில் பாடம் நடக்கையிலேயே சரசரவெனும் சத்தத்துடன் பிஸ்கட்டைக் கரக் முரக் எனக் கடித்துச் சாப்பிடுவது, கொண்டுவந்த முறுக்கைத் தான் மட்டும் தின்னாத நல்லவனாய்த் தன் நண்பர்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்க, வகுப்பு முழுவதும் அவர்களின் கரக் முரக். மாணவிகளின் கலீர் சிரிப்பொலி. ஆசிரியரின் சிவந்த கண்கள். இப்படியான வகுப்புகளைத்தான் திரைப்படங்கள் அவனுக்குக் காட்டுகின்றன. இவனைப் பார்க்கும் இன்னும் பல மாணவர்கள், அவனையே தங்கள் தலைவனாய் வரித்துக்கொண்டு தட்டிக் கேட்கும் ஆசிரியர்களிடம் சண்டை போடுவது, அவர்களிடம் வம்பிழுப்பது, மற்ற வகுப்புகளிலுள்ள மாணவிகளையும் கேலி செய்வது என்று அமர்க்களம் செய்வார்கள்.
விஜய், தன் படத்தில் குட்டிச் சட்டை போடுவது போலவே மாணவர்களும் கையைத் தூக்கினாலே இடுப்பு தெரியும் சட்டைகளையும் தரையில் உட்கார முடியாதபடியான டைட்டான பேண்டுகளையும் கழுத்திலும் கையிலும் விதவிதமான மணிகளையும் காதில் கடுக்கனையும் போட்டுக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர்.
இதே தாக்கம் மாணவிகளிடத்திலும் பார்க்க முடியும். ஆனால், பெண்களைச் சமூகம் இன்னும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலும் அவளுக்கு இருக்கும் ஆபத்துகளாலும் ஓரளவுக்கு மேல் அவர்களால் இப்படிப்பட்ட செய்கைகளில் மனமிருந்தாலும் ஈடுபட முடிவதில்லை. மட்டுமல்லாமல், படித்தால் மட்டுமே வீட்டில் இருக்க முடியும்; இல்லாவிட்டால் திருமணம் செய்து விடுவார்கள் என்ற பயத்திலும் இன்றைக்குப் பெண்கள் வகுப்புகளைக் கவனித்தல், விவாதித்தல் போன்ற ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுகின்றனர். தங்களை முன்னேற்றிக்கொள்ள வேண்டுமென்ற விழிப்புணர்வு பெண்களிடம் வந்திருப்பதையும் மறுக்க முடியாது.
மாணவர்களுக்கு, தடையற்ற சுதந்திரம், ஆண் என்னும் அதிகாரம், வீட்டினரின் செல்லம், பொருளாதாரச் சுதந்திரம் போன்றவை ஆக்கமாய்ச் செயல்பட வைக்காமல், தவறான வழியில் செலுத்தும் தூண்டுகோல்களாய்க் காட்சித் திரையும் ஊடகமும் இருக்கின்றன. மட்டுமின்றி, இருபக்கத் தவறுகளையும் பேசாமல் மாணவர்கள் படும் துயரத்தையும் துன்புறுத்தல்களையும் மட்டுமே ஊடகங்கள் காட்சிப்படுத்துகின்றன. தவறான வழியில் வரும் ஆசிரியர்களிடம் நல்லாசிரியத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? அது ஒரு பண்பல்லவா? மேலும் அரசு, பெற்றோர், ஊர் மக்கள் எனப் பிற காரணிகள் விடுபட்டு கண்ணுக்குப் புலனாகக் கூடிய ஆசிரியர்கள் மட்டுமே குற்றவாளிகளாக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட ஆசிரியர்களால், இன்றைக்கு எவருமே மாணவச் சமூகத்தைக் கேள்வி கேட்க முடியாத நிலையில் நிற்கிறோம்.
விஜய் என்றொரு மாணவன். வகுப்புக்கே ஒழுங்காக வர மாட்டான். பெற்றோரை அழைத்துப் பேசியபோதும் தீர்வு கிடைக்கவில்லை. வீட்டிலிருந்து சரியான நேரத்துக்குக் கிளம்புபவன், பள்ளிக்கு வராமல் ஊர் சுற்றியபடி இருப்பான். காலையில் வருவான்; மதியம் இருக்க மாட்டான். பாதி வகுப்பிலேயே தலை வலிக்கிறது, வயிறு வலிக்கிறது என்று பொய்கள் பல சொல்லி, அந்த வகுப்பையே எடுக்க விடாமல் செய்வான். ஆனால் தேர்வுகளுக்கு மட்டும் மிகச் சரியாக வந்து விடுவான். மாணவர்கள் கட்டாயம் வர வேண்டிய தேவை இருக்கக்கூடிய நாட்களில், எப்படித்தான் செய்தி தெரியுமோ, மிகச் சரியாக வந்துவிடுவான். வகுப்பைக் கவனிக்காத, வகுப்புகளுக்கே ஒழுங்காக வராத இப்படிப்பட்ட மாணவர்களை எப்படித் தேர்ச்சி பெற வைக்க முடியும்? எப்படிப்பட்ட மாணவர்களாயினும் அவர்களைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நல்லெண்ணத்துடன் ஒரு விதிமுறை வைத்துள்ளது.
மிதி வண்டிக்காகவும் இலவச கணிணிக்காகவும் சேரும் மாணவர்கள் இருக்கிறார்கள். பள்ளிக்குள்ளேயே விடுதி இருக்கக்கூடிய சூழ்நிலை மிக நல்லதே. ஆனால், அங்கும் மாணவர்கள் ஒரு வகுப்புக்கும் அடுத்த வகுப்புக்குமான இடைவெளியில் விடுதிக்குச் சென்று சிகரெட் பிடித்து விட்டு வருவது, மது அருந்திவிட்டு வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் திருட்டுத்தனமாகக் கொண்டுவரும் அலைபேசிகளில் மிக மோசமான படங்களைத் தரவிறக்கம் செய்து சக மாணவர்களிடமும் தங்கள் தோழிகளிடமும் அதைக் காட்டி மிக மோசமாகத் தூண்டுகின்றனர். இப்படிப்பட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் கூட மாணவர்கள் என்ற காரணத்தாலேயே கடும் தண்டனைக்குள்ளாக்க முடிவதில்லை.
அண்மையில், சென்னைக்கு மிக அருகிலிருக்கும் ஒரு மேல்நிலைப் பள்ளியில் மாணவனொருவன் தலைமை ஆசிரியரின் அலைபேசியைத் திருடி, அவருடைய பேசியிலிருந்த ஒரு பெண் ஆசிரியரின் பேசிக்குத் தவறான தொனியில் குறுஞ்செய்திகளை அனுப்பித் தொந்தரவு செய்திருக்கிறான். மற்றொரு பள்ளியில் இயற்பியல் ஆசிரியரின் பேசியை எடுத்துத் தலைமை ஆசிரியரை அழைத்துக் கண்டபடி திட்டியிருக்கிறார்கள். இன்னும் ஒரு பள்ளியில் வேதியியல் ஆசிரியையின் அலைபேசி திருட்டுப் போனது. காவல் துறையில் புகார் கொடுத்தபோது குற்றவாளிகளான மாணவர்கள் பிடிபட்டனர். ஆனால், மாணவர்களாயிற்றே என்ற கருணையோடு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நெகிழ்ச்சித்தன்மை அவர்களுக்கு நன்மை செய்யாது. இத்தகைய குற்றச் செயல்களுக்கு மாணவர்களை மட்டும் நான் பொறுப்பாக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு அளிக்கப்படும் தவறான சுதந்திரமும் காட்சி ஊடகங்களின் பிழையான வழிகாட்டுதல்களும் செலுத்தும் வழிகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்.
இப்படிப்பட்ட மாணவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். ஆனால் அதன் விகிதாச்சாரம் தலைகீழாய் மாறி இருப்பதே அதிர்ச்சி தரக்கூடியதாகவும் நாளைய தலைமுறை குறித்த கவலையே ஏற்படுத்துவதாகவும் உள்ளது. தன்னுடன் படித்த 9ஆம் வகுப்புப் பள்ளி மாணவியிடம் பழகி, அது குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவுக்குப் போய்ப் பிறகு பெற்றோர் தலையிட்டுத் திருமணம் செய்து கொண்டு பள்ளிக்கு வந்த 12 ஆம் வகுப்பு மாணவனை எனக்குத் தெரியும். அவனால் தொடர்ச்சியாக பிற மாணவர்களின் கிண்டல்களைச் சகித்துக் கொள்ள முடியாமல் பள்ளியை விட்டு நின்றவன், தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இன்றைக்கு மீன்பாடி வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறான். அவனுடைய வயது 22. நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டுமென்று நினைத்துப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து, கவனச் சிதறல்களால் வாழ்க்கையை இழக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகுதியாகி வருவது கண்ணுக்குத் தெரியாமல் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு வழியாக அரசும் பெற்றோரும் கண்விழிக்கும்போது ஒரு தலைமுறையை நாம் இழந்திருப்போம்.
இங்கிருந்துதான் பெரும்பாலும் சமூக விரோத சக்திகளும் அரசியல் கட்சித் தொண்டர்களும் திரை நடிகர்களுக்கு அடிப்பொடியாய் இருக்கும் ரசிகக்கூட்டமும் உருவாகிறது. இங்கிருந்தே தான் தேர்ந்த கலை ரசனையுடன், சிந்திக்கும் ஆற்றலுடன் மாணவர்கள் உருவானார்கள். அந்தச் சூழல் மாறி மெல்லக் கவனித்தலின்றி அழுகும் பழத்தைப் போல மாணவச் சமூகம் அழுகிக்கொண்டிருக்கிறது. இதையே தேர்வு முடிவுகள் ஒவ்வொரு வருடமும் காட்டுகின்றன. இதை நாம் கவனிக்காமல் போனோமானல் நாளைய சமுதாயத்தை இழந்துவிடுவோம். கல்விக்கும் மாணவ சமூகத்துக்கும் முதன்மை தராத அரசு, அவர்கள் சமூக விரோத சக்திகளாக மாறி அச்சுறுத்தும்போது அவர்களைக் கண்டு பயப்படும்; சிறையில் தள்ளும். பெற்றோர் எப்போதும் போலக் கண் கெட்ட பிறகு வருந்திப் புலம்புவர். எது எப்படியாயினும் இழந்ததை என்றைக்கும் பெற முடியாது என்பதை உணர்ந்து விழித்துக் கொள்வதே நமக்கும் சமூகத்துக்கும் நன்மை தரும். இன்றைய பாலியல் சிக்கல்கள் போன்ற சமூகத்தின் பெரும்பான்மைப் பிரச்சனைகள் அந்தப் பருவத்திலிருந்தே தொடங்குகின்றன என்பதை நாம் மனத்தில் இருத்தியபடி அவர்களை அணுகும்போதுதான் நோயற்ற சமூகத்தை உருவாக்க முடியும்.
முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வந்தேன். இனி தொடர்வேன். வாய்ப்பிருக்கும் பொழுது எனது தளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
ReplyDeletehttp://karanthaijayakumar.blogspot.com/
வணக்கம்.நான் புதுக்கோட்டையில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன்.என் மனதில் உள்ளக் கருத்துக்களை உங்கள் கட்டுரையில் கண்டேன்.சமூக அக்கறை உள்ள ஆசிரியரை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.மாணவர்கள் நலன் விரும்பும் சமுதாயம் இல்லை தற்போது திரைபடங்களும் ஊடகங்களும் மதுக்கடைகளும் அவர்களை சீரழிக்கவே துணை செய்கின்றன.அவர்களை நல்வழிப்படுத்த நினைக்கும் ஆசிரியர்களையும் குற்றவாளிகளாகவே ஊடகங்கள் காட்டுகின்றன.கண்ணுக்கு முன் ஒரு தலைமுறை அழிவுப் பாதையில் செல்கின்றது.என்ன சொல்வது?
ReplyDeleteஇப்படிப்பட்ட மாணவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். ஆனால் அதன் விகிதாச்சாரம் தலைகீழாய் மாறி இருப்பதே அதிர்ச்சி தரக்கூடியதாகவும் நாளைய தலைமுறை குறித்த கவலையே ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
ReplyDeleteஉண்மைதான் 1990ல் என் வகுப்பிலும் இப்படி சிலர் இருந்தனர். என்னையும் சேர்த்தேதான். ஆனால் எங்கள் வகுப்பாசிரியரின் தொடர் அக்கறையாலும், கவனிப்பாலும் அடுத்த ஆண்டே அவற்றை எல்லாம் கடந்து 12 ஆம்வகுப்பு நல்ல முறையில் தேர்ந்து கல்லூரியிலும் கால் பதித்தேன். ஆசிரியப்பணி போற்றக்கூடியது. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதை என் குழந்தைகள் அ ஆ இ ஈ எழுதும்போதுதான் முழுமையாய் உணர்ந்தேன். உங்கள் பணிக்கு என் தலைதாழ்ந்த வணக்கங்கள்.
பரமேஸ்வரி மேடம் ... முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வந்தேன். இனி தொடர்வேன்.
ReplyDeleteதாங்கள் எழுதிய பெரியாரின் பெண்ணியம் - பாட பேதமும், இயந்திரத்தனமும் - பதிவை இந்த தளத்தில் வெளியிடும்படி கேட்டு கொள்கிறேன்...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.
http://blogintamil.blogspot.com/2015/01/1_20.html?showComment=1421714790870#c142186046049912880
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
திருமதி மனோ சாமிநாதன் தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதையறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.com
www.ponnibuddha.blogspot.com
இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு
திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
படைப்புகள் யாவும்.
நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.com