சங்க இலக்கியக் காலம் தொட்டே தமிழர் வாழ்வு அகம், புறம் என்றே பகுக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை வெளிப்பாடாக விளங்கும் இத்தகு நெறிமுறையைப் பின்பற்றி நெய்தல் நில மக்களான கானலங்குடிப் பரதவர் வாழ்வை, நெறிமுறையை இவ்விரு வகையிலேயே பகுத்துக் கொள்கிறேன்.
கடல் போன்ற இப்பரந்த தலைப்பில் பரதவர் அக வாழ்வு, பொருளாதாரம், மொழி, சமயம், சாதி, புறவாழ்வு என பல்வேறு விஷயங்களைப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளது. ஆழமும் அகலமும் நிறைந்த இப்பரதவர் குடியின் தொன்மை நான் சொல்லாமலே விளங்கும். இதனாலேயே ‘மீனவர்’ என்ற சொல்லைத் தவிர்த்து சங்க இலக்கியச் சொல்லாடலான ‘பரதவர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். மருதம் வளம் பெற்று அதிகாரத்துடன் ஆட்சி செய்யும் இந்நாளில் குறிஞ்சி வாழ்ப் பழங்குடி மக்களும் நெய்தல் வாழ்ப் பரதவருமே தங்கள் தொன்மையை இழக்காமல் பண்பாட்டைச் சமரசம் செய்து கொள்ளாமல், கால ஓட்டத்தை எதிர்த்து நிற்கின்றனர். அதனாலேயே இவ்விருவரும் பல்வேறு தொல்லைகளுக்கும் ஆட்பட்டு வருகின்றனர். அவர்தம் நிலப்பகுதிகளும் சூறையாடப்பட்டு, வாழ்விடங்களில் இருந்தே வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தனி மனிதத் துயரம் விரிவு பெற்று வாழ்க்கையின் மனித உறவுகள் சார்ந்த கேள்விகளாக மாற்றம் பெற்று வாழ்வு தொடர்பான தேடலாகப் பரிணமிப்பதே இலக்கிய வகைமைகளாகும். அதிலும் நாவல் வடிவம் இவ்விரிவான தேடலுக்குத் துணை நிற்பதால் வாழ்வின் தரிசனத்தை விவாதங்களுடன், உயிர்ப்புடன் நம் முன் பரத்துகிறது. கடலுக்கும் கரைக்குமான இடையறாத பயணமாகத் தம் வாழ்வைக் கொண்டிருக்கும் பரதவரின் பல நூற்றாண்டுப் பயணத்தைத் தம் இரு கைகளாலும் அள்ள முயற்சித்திருக்கிறார் ஜோ டி குருஸ்.
“நாவாயின் அணியத்திலிருந்து கடலிறங்கிய நங்கூரக் கயிற்றைச் சுற்றியபடி போக்குக் காட்டிய கெழித்தி மீன் கூட்டம்.... பொருனையின் காயல், குச்சு குச்சாய்ப் பனைமரங்கள், உடங்காடுகள்... வட துறை உப்பு வயல்கள், பரதவரின் அம்பா ஓசை, களியல் கழியாட்டம்” (கொ: பக் 15) என நெய்தல் நில வருணனையோடே நாவல் தொடங்குகிறது.
“கானலம் சிறுகுடிக் கடல்மேம் பரதவர்
நீல்நிறப்புன்னைக் கொழு நிழல் அசைஇ,
தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி,
அம்கண் அரில்வலை உணக்கும் துறைவனோடு”
என்று நற்றிணையில் அம்மூவனாரால் பாடப்படும் முந்நீர்ப் பழமையும் பெருமையும் வளமும் செறிந்தது. கடல் வளம் மட்டுமல்லாது கடற்கரை மணலும் இல்மனைட் போன்ற தாதுக்களும் நிறைந்தது. பனையும் தென்னையும் பாக்கும் ஞாழலும் அடர்ந்தது. கட்டுமரமும் வத்தையும் வள்ளமும் தோணியும் கப்பலும் கொண்டு கடலை ஆளும் இப்பரதவர் புற வாழ்வியல் சார்ந்து நோக்கையில், அவர் தம் வீரம், வாழ்வை எதிர்த்து நிற்கும் ஆற்றல், கடலெறிந்து மேற்செல்லும் துணிச்சல், இன்ன பிற பண்புகள் வெளிப்படக் காணலாம். கடல் மேற் செல்கையில் அவர்க்குக் கிடைக்கும் நம்ப முடியாத அனுபவங்களும் திருப்பங்களும் அவர் தம் வாழ்விலும் பிரதிபலிக்கக் காணலாம்.
‘கொற்கை’யில் லொஞ்சியின் தண்டலாகச் செல்லும் தோணியைக் கொள்ளையடிக்கக் கடற்கொள்ளைக்காரர்கள் நெருங்குகையில் தோணியிலிருந்த குந்திருக்கத்தையும் மெழுகையும் அண்டாவில் கொதிக்க வைத்து அவர்கள் மேல் ஊற்றி எந்தச் சேதாரமுமின்றி அவர்களிடமிருந்து தப்பிப்பது அவர் தம் நுண்ணறிவை வெளிப்படுத்துகின்றது. உணவு தீர்ந்து போய்ச் சில நாட்கள் கடலுக்குள் இருக்க நேர்கையிலும் உப்பு நீரையும் பச்சை மீனையுமே புசித்து அச்சமின்றி அந்நிலையை எதிர்த்துப் போராடுவதை ‘ஆழி சூழ் உலகி’ல் சிலுவை, சூசை, கோத்ரா ஆகியோர் வாயிலாகச் சித்திரப்படுத்தியிருப்பார். ஆமந்துறை அந்தோணியார் திருவிழா நாட்களில் தம் ஊருக்கு வரும் மக்களை பரதவர் உள்ளன்போடு தங்கள் வீட்டிலேயே தங்க வைத்து உபசரிப்பதன் மூலம் அவர் தம் விருந்தோம்பல் பண்பு வெளிப்படுகிறது. நுண்ணறிவும் வீரமும் மனத்திடமும் கொண்ட இந்த மக்களிடம் மூடக் கோபமும் போலிப் பெருமையும் ஒற்றுமையின்மையும் இருந்த காரணத்தாலேயே “மீன் வேட்டுவர்” என்று அக நானூறால் பெருமைப்படுத்தப்பட்ட இம்மக்கள் வாழ்வியல் தரத்தில் சமூகத்தின்அடியாழத்தில் கிடக்கின்றனர்.
சுறாப்பாறுப் பயணம் என்று சொல்லப்படுகின்ற சுறாமீன் வேட்டைக்குச் செல்லும் வீரம் கொண்ட இவர்கள் குடியின் காரணமாக அழிவதை, வறுமையில் வாடுவதை இரு நாவலிலுமே காட்சிப்படுத்தி இருப்பார் குருஸ். வேலைச் சுமை, மரணத்தை எதிர் நோக்கிய அவர் தம் அன்றாட வாழ்வு, உறுப்புகளை இழத்தல், பாடு கிடைக்காமல் வெறுங்கையாய்த் திரும்புதல், சம்மாட்டிமாரின் ஏமாற்றுதல்கள், கடன் வாங்கி மீளவே முடியாமல் வாழ்விழத்தல் எனக் கடல் வாழ் பரதவர் படும் பாடு கடலின் சீற்றம், அலை படும் வேகம், ஓங்காரம் ஆகியவற்றை ஒத்ததே. பருவத்தின் போக்கிற்கேற்ப மாறும் வாழ்வின் நிச்சயமின்மை, அவர்களை மூர்க்கமானவர்களாகவும் அன்றன்றைய பொழுதை வாழும் தீவிரமிக்கவர்களாகவும் மாற்றியுள்ளதைக் காணலாம். இவ்வகப் பண்புகளே இரு நாவல்களின் போக்கையும் தீர்மானிக்கும் உந்து சக்தியாக விளங்குகிறது. “நமக்குத்தான் தலையெழுத்து இந்த மாரி மழைக்கிலயும் காது வெடிக்கிற கூதலுக்குள்ளயும் கெடந்து சாவணுமின்னு” (கொற்கை ப. 325) என்னும் சவரியாப்பிச்சை - லொஞ்சியின் உரையாடல் பரதவர் வாழ்வின் துன்பியலை உணர்த்தும்.
கலப்பு மிகக் குறைவாக இருக்கின்ற, நூற்றாண்டுகளின் கால ஓட்டத்திலும் கூடப் பெரும் மாறுதலில்லாத, தனித்த பண்பாட்டுக் கூறுடையவர்களாய் விளங்கும் தொல்குடியினரான நெய்தல் நிலப் பரதவர் நானூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் போர்த்துக்கீசியர்களால் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்ட இனக்குழுவினர். பர்னாந்துமார் என்றழைக்கப்படும் இக்கிறிஸ்தவர்கள் கம்மரர், மெனக்கெடன்மார், மேசைமார், கோட்டு போட்டவம் எனப் பல்வேறு வகையாக ஒரு சாதிக்குள்ளேயே பிரிந்து நின்று தன் சாதிக்குள்ளேயே ஏற்றத்தாழ்வு பார்த்துப் பழகுவதும் வர்க்க பேதம் பார்த்து உதவி செய்வதும் செய்யாமல் கடப்பதும் தங்களுக்குள்ளேயே வெற்றாய்ச் சினம் கொண்டு ஒருவரை ஒருவர் பழி வாங்கிக் கொள்வதும், அதற்கான தருணம் பார்த்திருப்பதும் பரதவ மகா சமூகம் முன்னேறாததன் காரணங்கள் என்று ஆசிரியர் பதிவு செய்திருப்பதன் வழி அச்சமூகத்தாரின் அகப் பண்புகள் சிலவற்றை நமக்குக் காட்டி நிற்கும். தங்களுக்குள் ஊர் முன்னேற்றத்திற்கான கமிட்டிகளை அமைத்தல், பிறகு அற்பக் காரணங்களுக்காக உடைத்தல் என்று இன்னும் இதனை விரிவாகக் கூறலாம்.
“இந்தச் சமுதாயம் பிந்தங்கி இருக்குறதுக்குக் காரணம் என்னென்னு நெனக்கிறிய...
சரி சொல்லு.
வீண் பெருமை. இவன்வள மாரி பெருமையும் பீத்தக் கலயமுமா எவனும் இருக்க மாட்டானுவ”
ஆழி சூழ் உலகு நாவலில் சிலுவையும் சப்பாணியாரும் இப்படிப் பேசிக் கொள்ளும் போதும் மேலும் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலும் ஆற்றல் நிறைந்த அச்சமூகம் சீரழியும் அவலத்தைப் பதிவு செய்திருப்பார் குருஸ்.
அன்றைய வாழ்வை அன்றே வாழ்ந்து முடிக்கும் தனித்த பண்பு கொண்டமையால் இச்சமூகம் பாலியல் சுதந்திரத்துடன் இயங்குவதுடன் அதனை ஒழுங்கீனமாகக் காணும் போக்கை மிதமாகவே கொண்டு இலங்குகின்றது. அந்தரங்க உறுப்புகள் சார்ந்த சொற்கள் மிகச் சாதாரணமாக அவர்களின் உரையாடலில் கலந்திருப்பதை நாவலில் பார்க்க முடிகிறது. இப்படிக் கையாளுகின்ற அதே சமயத்தில் அச்சொற்களை மிகுந்த வன்மத்துடன் வசவுச் சொற்களாகப் பிரயோகிப்பதையும் இந்நாவலே காட்டி நிற்கிறது. நாவலின் முதன்மைப் பாத்திரங்களாக காலத்தையும் மரணத்தையும் காமத்தையும் சொல்லலாம்.
அகப் பண்பாட்டின் இன்றியமையா ஒழுக்கங்களான களவு, கற்பு இரண்டுமே பரதவர் வாழ்வியலில் இடம் பெற்றிருப்பதைக் காண முடியும். மனிதன் தோன்றிய காலம் தொட்டு அவனை இழுத்துச் செல்லும் கட்டுப்படுத்த இயலாக் காம இச்சையே இரு நாவல்களையும் முன்னகர்த்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது எனலாம். ரஞ்சிதம், அல்வாரிஸ் பபிலோன் பாதிரி, தெரேசா, வலேரியா (கொற்கை) வசந்தா, ஜஸ்டின், சூசை, சுந்தரி டீச்சர் (ஆழி சூழ் உலகு) என நாவல் முழுதும் கிளர்ந்தெழும் காமத்தால் அலைக்கழிக்கப்படும், வதைபடும் கதை மாந்தர் அனேகர். இளம் வயதில் விதவைகளாவோர் அதிகரிக்கையில் அச்சமூகம் மேலும் பல அவலங்களைச் சந்திக்கும் என்று அறிந்திருந்ததாலே தான் காகுச் சாமியார் விதவைத் திருமணங்களை நடத்தி வைத்தார். என்றாலும் சமூகத்தால் முறையற்றது என்று சொல்லப்படும் அளவிலான காமம் கூட இந்நாவலில் பதிக்கப் பெற்றிருக்கிறது. இதனை அச்சமூகத்தின் பாலியல் சுதந்திரத்தின் ஒரு தன்மையாகக் கொள்ளலாம்.
விதவைகள் எல்லாச் சமூகங்கள் போல, இங்கும் ஒதுக்கி வைக்கப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். பிலிப், சந்தக்குருஸின் விதவையான சலோமியை மணக்க நினைக்கையில் அவன் தாய் லூர்து அவளை ‘அறுதலி’ என்று மறுதலிப்பதையும் (கொற்கை) மடுத்தீனை இழந்த அமலோற்பவத்தின் துயரத்தையும் (ஆழி சூழ் உலகு) வெளிப்படுத்துகையில் இதை அறிய முடிகிறது. கணவனை இழந்த கைம்பெண்கள் வெள்ளைச் சீலை உடுத்திப் பிறர் பார்வையில் படாமல் வாழ நேரும் அவலத்தை, பூவும் பொட்டும் அவர்களுக்கு மறுக்கப்படுவதை பிலிப் வாயிலாகவும் பேசுகிறார் ஆசிரியர்.

அகப் பண்பாடு பற்றிப் பரதவர் வாழ்வியல் சார்ந்து சில செய்திகளைச் சொல்லிச் செல்லும் குருஸின் படைப்புகள் பரதவர் வாழ்வில் அவர் தம் தொன்மம், திருமணம், மரணம், அது சார்ந்த சடங்குகள், இறை நம்பிக்கை, மாந்திரீகம், தோணி சார் நம்புதல்கள், உணவு முறை எனப் பல்வேறு செய்திகளை வெளிப்படுத்துகின்றன. பரதவர்களின் அம்பாப்பாட்டு, தாலாட்டு, பட்டமேற்கையில் பாடும் பாடல், மரியைத் துதித்து பாடும் பாடல்கள் படைப்புகளினிடையில் சரியாகச் செருகப்பட்டு கூடுதல் பலம் சேர்ப்பதுடன் அவர் தம் வாழ்வியல் பதிவாகவும் அமைகிறது.
மனிதன் நம்பிக்கைகளாலானவன். அது பற்றியே ஏராளமான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நாளது வரையிலும் பின்பற்றி வருகிறான். காரணத்தோடும் காரணமின்றியும் பல்வேறு நம்பிக்கைகள் நம்மிடையே வழங்கி வருகின்றன. தோணி தன் பயணத்தைத் தொடங்கும் சமயத்தில் “அணியத்து ஏராக்கட்டையின் முனையைக் கழுவி, முதலில் கோவிலைப் பார்க்கும்படி வரச் செய்து, பூமாலையை ஏராக்கட்டையின் முனையில் மாட்டி ஊதுபத்தி பற்ற வைத்து இறை வழிபாடு” (கொற்கை ப. 380) செய்யும் சடங்கு பரதவர் சமுதாயத்தில் இருப்பதை அறிய முடிகிறது. மனிதன் தோன்றிய பிறகு தோன்றிய சாதியும் மதமும் அது சார்ந்த சடங்குகளுக்கும் அவன் அளிக்கும் முக்கியத்துவத்தை, அதன் நம்பிக்கைகளை இதன் மூலம் அறியலாம். கடல் சார் நம்பிக்கைகள், நிலம் சார் நம்பிக்கைகள் என்றும் இவற்றைப் பகுக்கலாம். கடல் சார்ந்தவைகளில், வலம்புரிச் சங்கை ‘இராஜ சங்கு’ என்று அழைத்து அதைக் கண்டாலே யோகம் என்றும் மூழ்கி அச்சங்கை எடுப்பவனுக்கு யோகம் என்றும் பலபடக் கூறுவர். சந்தக்குருஸ் கடலில் மூழ்கிச் சங்கெடுக்கையில் அது பற்றிய ஏராளமான தகவல்களைத் தம் கொற்கை நாவலில் ஜோ டி குருஸ் தந்திருப்பார்.
மீன்கள் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவை, கடலில் பாடு செல்லும் போது ஓங்கல்கள் எதிரில் தென்பட்டால் நல்லது, கடலுக்குள் சிறு பிள்ளைகள் அழுவது போலக் கேட்டால் அபசகுனம் போன்ற செய்திகளையும் இந்நாவல் பதிவு செய்துள்ளது. இயற்கையின் பிரம்மாண்டத்திற்கு முன்னால் நிற்க முடியாத தன் தோல்வியை, பிரமிப்பை அதை வழிபடுவதன் மூலம் மனிதன் காட்டி நிற்கிறான். நெருப்பு, பாம்பு, மழை, கடல் என அனைத்தும் அவ்வகையில் அவன் வழிபடும் தெய்வங்களாயின. பிறகு இதுவே தாய்த் தெய்வ வழிபாட்டின் தொடக்கமாகவும் அமைந்ததெனலாம்.
பரதவப் பழங்குடியினர் மிகவும் தொன்மை வாய்ந்த பழங்குடியினர்; அதிகம் மாற்றத்துக்குள்ளாகாதவர் என்பதை இன்றைக்கும் அவர்களிடம் இருக்கும் தாய்த் தெய்வ வழிபாட்டு முறை மூலம் நாம் அறியலாம். ஆதியில் குமரி அன்னையை வணங்கியவர்கள் மத மாற்றம் நிகழ்ந்த பின்பு மரியன்னையை வழி படுகின்றனர். தோணிகளில் ஜெபமாலை படிப்பது அந்த நாளிலிருந்தே பழக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இந்து மதத்தை விட்டுக் கிறித்துவ மதத்திற்கு மாறிய பின்பும் அவர்களிடம் ஆதிக்கம் செலுத்திய இந்து மதச் சடங்குகளை அவர்கள் கை விடவில்லை. திருமணம், மரணம் எங்கும் இந்துச் சடங்குகளே விரவி நிற்கின்றன. அது மட்டுமல்லாமல், கிறித்துவப் பாதிரிமார் பல முறை கண்டித்தபோதும் கூட, அவர்கள் முன்னர் பூசித்து வந்த இந்துமதத் தெய்வங்களை வழிபடுவதையும் அவர்கள் நிறுத்தவில்லை. தோணிகளில் பயணம் செல்கையில் துன்பம் நேரும்போது ‘தேவ தாயே’, சித்தாந்திரத் தாயே’ என்று ஓலமிடுவது போலவே ‘சந்தன மாரி’யையும் அழைத்து வணங்குகிறார்கள். கிறித்துவ மதத்தில் இருந்தபடியே சந்தன மாரியை அவள் கோயிலில் சென்று வழிபடுவதும் விளக்குப் போடுவதும் கொடை செலுத்துவதையும் செய்து கொண்டிருக்கிறார்கள். சலோமி, தன் கணவன் பிலிப் தோணி வாங்கினால் சந்தன மாரிக்கு வெள்ளிக் காப்பு செய்து போடுவதாக வேண்டிக் கொள்கிறாள் (கொற்கை ப. 579). இன்றைக்கும் தோணியில் செல்கையில் குமரி முனை தாண்டும்போது ஆத்தாளுக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம் அவர்களிடையே இருப்பதை குருஸ் கொற்கை நாவலில் பதிவு செய்திருப்பார். பரதவர் பாடும் அம்பாப் பாட்டில் மாதாவைப் பற்றி இருப்பது போலவே பரத்தி மகள் தெய்வானை பற்றியும், அவளை மணந்து கொண்ட முருகனைப் பற்றியும் கதைகள் இருப்பதைப் பாடல்கள் புலப்படுத்துகின்றன. அத்துடன் நில்லாமல், நாட்டுப்புறத் தெய்வமான ஒத்தப்பனை முனுசாமி கோயில் பற்றிய அவர் தம் நம்பிக்கைகள் தண்டல் தோமாஸ், பிச்சையா வாயிலாக வெளிப்படுத்தப்படுகிறது.
பரதவர் குலத் தலைவரான பாண்டியபதியும் கூட வருடா வருடம் மகுடமேற்ற நாளில் கன்னியாகுமரி, மதுரை மீனாட்சி, திரு உத்திரகோச மங்கை, கொற்கை சந்தன மாரி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து கொடை கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது, சந்தன மாரி கோயிலுக்குச் சென்று குறி கேட்டல், முத்தாரம்மன் கோயில் சென்று அவளுக்கு, வாழைக்குலையும் அரிசி மாவும் இடித்துப் படைக்கும் பழக்கம் பற்றி தொம்மந்திரையார் மூலம் அறிய முடிகிறது. போர்ச்சுக்கீசியர்களின் உதவிக்காக மதம் மாற ஒப்புக் கொண்ட பரதவர் சமுதாயம் தம் பழக்க வழக்கங்களையும் கோவில் வழிபாடுகளையும் மாற்றிக் கொள்ளவேயில்லை. அது மட்டுமின்றி அச்சடங்குகளைக் கிறித்துவ மதத்திலும் புகுத்தி விட்டனர்.
அம்மக்களிடையே வெகு விமரிசையாக நடக்கும் முயல் தீவு அந்தோணியார் திருவிழா, ஆமந்துறை அந்தோனியார் திருவிழா, ஸ்ரீவைகுண்டம் திருவிழா போன்ற திருவிழாக்கள் பற்றியும் குருஸின் நாவல்கள் விரிவாகப் பேசுகின்றன. இறை சார்ந்த நம்பிக்கைகளாக, மாதா கன்னத்தில் கருப்பாக இருந்ததை அழிக்க முயன்றும் முடியவில்லை என்றும் அதனால் கொற்ற்கைக்குக் கெட்ட காலம் தொடங்குகிறது என்றும் நம்பிக்கை கொண்டனர். யேசுநாதர் சிலுவையில் பாடுபட்டு உயிரை ஒப்புக் கொடுத்த நேரம் வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்குமென்பதையும் கொற்கை பதிவு செய்கிறது.
பரதவர் தொன்மம் சார்ந்த செய்திகளாக, மறவர் குலத் தெய்வம் முருகன், அங்கே தாய் வழிப் பாசம் மற்றும் தெய்வானை பரத்தி பற்றிய தொன்மம், நரியைப் பரியாக்கியதால் நரிப்பையூர் என்றும் சூர்ப்பனகை மூக்கை அரிந்ததால் மூக்கையூர் என்றும் பெயர் பெற்றதாகத் தொன்மச் செய்திகள் கூறுகின்றன. அதிக விசை தேவைப்படும்போதெல்லாம் பரதவர் மந்திரச் சொல்லாக ‘மரியே’, ‘மாதாவே’, ‘தாயே’ ஆகிய சொற்களையே பயன்படுத்துகின்றனர்.
மாந்திரீகம் சார்ந்த பரதவர் நம்பிக்கைகளாகப் பல செய்திகள் இரு நாவலிலும் சொல்லப்பட்டுள்ளன. பாண்டியபதி அரண்மணையில் இருந்ததாகச் சொல்லப்படும் பேயலசு, அதைப் பற்றிய கதைகள் கொற்ற்கை முழுதும் பரவி இருப்பதையும் நாவல் பதிவு செய்கிறது. உலகம் முழுதும் உள்ள பல்வேறு மதங்களிலும் மாந்திரீகம் (Black Magic) தொடர்பான நம்பிக்கைகள் பல உள்ளன. அப்படி, ‘ஆழி சூழ் உலகு’ புதினத்தில் இருட்டியார் என்னும் பாத்திரம் தொள்ளாளியாகத் தொழில் செய்கிறார். பரதவருக்கே உரித்தான சொற்ற்களில் ஒன்றான ‘தொள்ளாளி’ என்ற சொல்லுக்கு மாந்திரீகம் செய்பவன் என்பதே பொருளாகும். இருட்டியார் மாந்திரீகம் செய்து கடலை வறண்டு போகச் செய்வதால் பாடின்றி மக்கள் வறுமைப்படுவதையும் மீறிச் செல்லும் மக்கள் கை முறிந்து கால் முறிந்து வந்ததையும் அதனால் கோபாவேசம் கொண்ட மக்கள் இருட்டியாரைத் தாக்கச் செல்ல மக்களுக்குப் பயந்து அவர் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதையும் ஒரு அத்தியாயம் முழுதும் விவரித்திருப்பார் குருஸ். அது மட்டுமல்லாமல், யாரோ வைத்த செய்வினை யினால் தான் மடுத்தீன் இறந்ததாக இருட்டியார் மூலமாகப் பதிவு செய்கிறார் ஆசிரியர். ‘பேவெள்ளி’ பற்றி வரும் குறிப்பில் கூட அது அமாவாசை இருட்டில் தான் வரும், அதனை அம்மணமாக ஏறி வெளக்குமாற்றால் அடித்தால் அது போய் விடும் என்றும் அது சார்ந்த நம்பிக்கையை நாவலில் கூறுகிறார். அமுதனின் அக்கா சுமதியின் கணவர் வெளிநாட்டில் இறந்து அவர் ஆவி கொற்ற்கை வருவதாகவும் கதையை விரித்திருப்பார். இப்படி மாந்திரீகம், பேய், ஆவி சார்ந்த நம்பிக்கைகளை குருஸின் படைப்புகள் வெளிப்டுத்துகின்றன. என்னதான் கிறித்துவ விசுவாசத்தில் இருந்தாலும் இன்னும் பேய் விளையாட்டுகளிலும் செய்வினைகளிலும் நம்பிக்கையும் பயமும் அவர்களை ஆட்டிப்படைக்கத் தான் செய்கிறது என்று ஆழி சூழ் உலகில் ஆசிரியர் பதிவு செய்திருப்பதே அம்மக்களின் இது சார்ந்த அதீத நம்பிக்கைகளைக் காட்டி நிற்கும்.
பரதவர் திருமண முறை அல்லது மரணச் சடங்குகளில் கூட இந்து மதத்தின் தாக்கத்தை வெகுவாகக் காண முடியும். வழிபடும் இறைவடிவம் மாறியதே அன்றி வழிபாட்டு முறைகளிலும் சடங்குகளிலும் பெரும் மாற்றத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவேயில்லை. விதவைத் திருமணம், வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுதல் போன்றவை இச்சமூகத்தில் இயல்பானதாக இருக்கின்றன. மணமக்கள் ஊர்வலம் செல்லும்போது ஊரில் எத்தனை தெருக்கள் இருக்கின்றதோ, ஒவ்வொரு தெருவுக்கும் வெற்றிலைப் பெட்டி வைக்க வேண்டும், திருமணத்தன்று மாப்பிள்ளை பாண்டியபதி ராஜாவாகக் கருதப்பட்டு அன்றைய தினம் மாப்பிள்ளைக்குக் குடை பாவாடை பிடித்து, கட்டியம் கூறி, நடை விரிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஊர்த்தலைவர் மாப்பிள்ளைக்குப் பாரம்பரியத் தொப்பியை மாட்டி ஊர்வலம் வந்த பிறகு மஞ்சள், குங்குமம் கரைத்து சூடம் கொளுத்தி ஆரத்தி எடுக்கும் பழக்கமும் இன்றைக்கும் இருந்து வருகிறது.
சிலுவைக் கலியாணம் என்பது அவர்களின் திருமண முறைகளில் ஒன்று. பெற்றோர் சம்மதமின்றிக் காதலித்துத் திருமணம் செய்வோர் தேவாலயத்தில் பாதிரியார் முன்பு இருவர் சாட்சிக் கையெழுத்திடத் திருமணம் செய்வதே சிலுவைக் கலியாணமாகும். கோயில் மணி அடிப்பதில் கூட பரதவரின் தனி வழக்கம் வெளிப்படுகிறதை நாவல் சொல்கிறது. அஸ்திவார மணி, துக்க மணி என ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையில் அடிக்கப்பட்டு வருகிறது.
மரணச் சடங்குகளில் இறந்தவர் உடலைப் பெட்டியில் வைத்து அடக்கம் செய்கையில் பிடிமண் போடுதல், பால் ஊற்றுதல் ஆகிய இந்துமதச் சடங்குகள் காணக் கிடைக்கின்றன. இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்படும் மையவாடிக்குச் சென்றவர்கள் கடலில் கால் நனைத்துப் பின் வீடு திரும்புவது அவர் தம் வழக்கம். காரணம், புனிதமான கடல் நீர் படுகையில் அசுத்த ஆவிகள் விலகி ஓடுமென்பது நம்பிக்கை. கடற்துறைகளில் இறந்த உறவினர்களை வருடத்திற்கு ஒரு முறை நினைவு கூர்ந்து அவர்களுக்காகப் பலி பூசை கொடுக்கும் முறை உண்டு. பூசை முடிந்த பிறகு கல்லறைக்குச் சென்று மெழுகுவர்த்தி கொளுத்தி, மலர் மாலைகள் சார்த்தி பிரார்த்தனை நடக்கும்.
பரதவரின் தொழில் பற்றிப் பேசுகையில் கடலில் சென்று மீன் பிடித்தல், சங்கு குளித்தல், முத்தெடுத்தல் ஆகியவை அவர்களின் பிரதானத் தொழிலாக உள்ளன. அதனாலேயே இந்நாவல்களில், கட்டுமரம் பற்றியும் தோணி கட்டும் முறை பற்றியும் மிக விரிவாக விளக்கி நிற்பார் ஜோ டி குருஸ். அது போலவே முத்து விளைச்சல் இருக்குமிடம் பற்றியும் ஆணி முத்து, சுண்டு முத்து போன்ற வகை வகையான் முத்துக்களைப் பற்றியும் மூச்சடக்கி முத்து மற்றும் சங்கு எடுத்தலைப் பற்றியும் பேசியிருக்கின்றார்.
பரதவரின் உணவு பெரும்பாலும் கடல் சார்ந்தே அமைந்திருப்பதில் வியப்பொன்றும் இருக்க முடியாது. வார முழுதும் மீன் குழம்பு, கருவாட்டுக் குழம்பும் அவர்கள் பிரதான உணவாகவும் ஆட்டுக்கறி எடுத்து சமைத்தல் என்பது விசேஷமாகவும் சொல்லப்பட்டுள்ளது. இவ்விரு நாவல்களில் அவர்களின் பிரத்தியேக உணவு முறைகள் பற்றியும் சிலவற்றின் செய்முறையும் கூடக் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு. சங்கு சதையை எடுத்துத் தூய்மை செய்து காய வைத்து அவிச்சுத் தின்றால் அபார ருசியாக இருக்குமெங்கிறார் குருஸ். கொட்டப்புளி கரைத்து, மசாலா சேர்த்து, பதம் விடாமல், வெங்காயம் உரிச்சி, ஒரு பச்ச மொளகாயும் நசுக்கிப் போட்டுக் கொதிக்க வைத்து இறக்கினால் காரப்பொடி மீன் வாசம் தூக்கும், இன்னும் வேளா முட்டைப் பணியாரம், திருக்கைக் குடல் வறட்டி என்று வெவ்வேறு வகையான அவர்களுக்கே உரிய உணவு வகைகளைக் கூட விட்டு வைக்காமல் இந்த இரு நாவல்களிலும் சொல்லியிருக்கிறார்.
பெருங்குடிப் பரதவரின் வாழ்வியல் சார்ந்த நெறிமுறைகளை ஜோ டி குருசின் இரு நாவல்களுமே விரிவாகப் பதிவு செய்கின்றன. ‘ஆழி சூழ் உலகு’ கட்டுமரம் ஏறி மீன் பிடிக்கச் செல்பவர் பற்றியும் ‘கொற்கை’ தோணியேறிக் கடல் பயணம் செல்பவர் பற்றியும் பதிவு செய்கின்றன. இரண்டுக்கும் பரதவர் வாழ்க்கையே களமாக அமைகின்றன. நமக்கு மிகக் குறைவாகவே இலக்கியவடிவம் பெற்றிருக்கக் கூடிய நெய்தல் நிலம் சார்ந்த பரதவர் வாழ்வை இவ்விரு நாவல்களும் விரிவாகப் பேசி மேலும் பல தகவல்களை, நம்பிக்கைகளை, வாழ்வு சார்ந்த துயரங்களை, அவர் தம் பாடுகளை, போராட்ட வாழ்வை, கடலே வாழ்வாய் வாழ்வே கடலாய் இருக்கு நிலையைத் தீவிரமாக வெளிப்படுத்துகிறது ஜோ டி குருஸின் படைப்புலகு.
மிக அழகான ஆழமான பதிவு.. இரு நெய்தல் நாவலையும் ஆணிவேரா பிய்த்து பதிவிட்டு உள்ளீர்கள்... அருமை.
ReplyDeletevery good review and analysis about both the books .
ReplyDeletenamathu parumaiyai alagaga sonnirgal
ReplyDeleteவீண் பெருமை. இவன்வள மாரி பெருமையும் பீத்தக் கலயமுமா எவனும் இருக்க மாட்டானுவ”
ReplyDelete