Thursday, March 18, 2010

தமிழ்த் தேசியப் போராளி ம.பொ.சிவஞானம் சென்னை மீட்ட வரலாறு


- தி.பரமேசுவரி
நன்றி : மண்மொழி ஜனவரி10


ஆயிரம் விளக்கின் சால்வான் குப்பத்தில் எளிய குடியில் பிறந்தாலும், அயராத உழைப்பால் ஆற்றலால், ஏற்றம் பெறலாம் என்பதை உணர்த்தியவர் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம். கொடிது கொடிது இளமையில் வறுமை! மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத வறுமை நிலையிலும் தன் முயற்சியில் கற்றார்.


சிற்றாள், நெசவுத் தொழிலாளி, அச்சுத் தொழிலாளி என வாழ்வியல் நிமித்தம் பல்வேறு தொழில்களைச் செய்தார். பி. வரதராஜுலு நாயுடு நடத்திய ‘தமிழ்நாடு’ நாளிதழில் அச்சுக் கோப்பாளராகப் பணியாற் றியபோது குறித்த தேதியில் சம்பளம் கொடுக்கக் கோரித் தொழிலாளர்கள் செய்த வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தியபோது அவருடைய போராட்ட குணம் வெளிப்பட்டது.


பின்னர் காந்தியத்தின்பால் ஈர்க்கப்பட்டு, 1927ஆம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்தார். உப்புச் சத்தியா கிரகம், சட்ட மறுப்பு இயக்கம் போன்ற போராட்டங்களிலும் ஈடு பட்டார். கள் இறக்கு தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தாலும் சென்னைப் பெருநகர மது விலக்குக் குழுச் செயலாளராகப் பொறுப்பேற்று தீவிர மதுவிலக்குப் பிரச்சாரம் செய்த காரணத்தால் தன் சாதி மக்களின் பகையைத் தேடிக் கொண்டார்.


கட்சி ஊழியராகப் பணியைத் தொடங்கிய ம.பொ.சி., அச்சமின்றி சோர்வு தவிர்த்துத் தன் கடும் உழைப் பால் தலைவர்களின் நன் மதிப்பைப் பெற்று சென்னை மாவட்டக் காங் கிரஸ் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆகஸ்டுக் கிளர்ச்சி துவங்கி, ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கம் நாடு முழுவதும் ஒலிக்கத் துவங்கிய காலம். மா.பொ.சி.யும் போராட்டத்தில் ஈடுபட்டு, 1942ஆம் ஆண்டு ஆகஸ்டு 13ஆம் நாள் கைதாகி, இரண்டாண்டுக் கடுங்காவல் தண் டனை பெற்று, வேலூர் சிறையில் வைக்கப்பட்டார். பின்னர் ஆகஸ்டு 30ஆம் நாள் மத்தியப் பிரதேசத் திலுள்ள அமராவதி சிறையில் வி.வி.கிரி, கு. காமராசர், முத்துரங்க முதலியார், சத்தியமூர்த்தி, சஞ்சீவி ரெட்டி போன்ற தலைவர்களுடன் அடைக்கப்பட்டார். கடும் நோய் வாய்ப்பட்டு 1944இல் எலும்புக் கூடாக வெளியே வந்த ம.பொ.சி., இந்தியப் பெருநாட்டின் விடுதலைக் காலம் நெருங்குவதை உணர்ந்து, அதன் அடுத்த கட்டம் நோக்கிச் சிந்தித்தார்.


சிறை வாழ்க்கையில் இலக்கியம் பயின்று, அதன்வழி தன் அரசியல் சிந்தனைகளைச் செம்மையாக வளர்த் தெடுத்தவரின் உள்ளம் இந்திய விடு தலையோடு இன உணர்வையும் இணைத்துப் பார்த்தது. சங்க இலக் கியங்களும் சிலப்பதிகாரமும் பாரதி பாடல்களும் அவர்க்குத் துணை நின்றன. புதிய தமிழகம் படைக்கும் எழுச்சியுடன் 1946ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் தமிழரசுக் கழகத்தைக் காங்கிரசுக்குள் இருந்த படியே ஒரு கலாச்சார இயக்கமாகத் தோற்றுவித்தார். 1947இல் இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இனங் களும் கிளர்ந்தெழுந்த கால கட்டத்தில், இந்தியாவில் இருந்த பிற மொழி வழி இனத் தலைவர்கள் தங்களுக்கென இன, மொழி வளர்ச்சிக்காகத் தனி மாநிலக் கோரிக்கைகளை முன் வைத்துப் போராட்டங்களைத் தொடங்கினர்.


ஆந்திர மக்கள் ‘விசால ஆந்திரம்’ கோரி ‘ஆந்திர மஹா சபை’ என்ற பேரியக்கத்தின் கீழ் போராடினர். கர்நாடக மக்களும் ‘சம்யுக்த கர் நாடகத்திற்காகப்’ போராடினர். பம்பாய் மாநிலத்திலிருந்க கன்னடப் பகுதிகளையும் ஹைதராபாத் சமஸ் தானத்தைச் சேர்ந்த கன்னடப் பகுதி களையும் இணைத்துப் புதிய மாநிலம் அமைக்க வேண்டும் என்பது அவர் களது கோரிக்கை. கேரள மாநிலத் தவரும் சென்னையுடன் இணைந் திருந்த கேரளப் பகுதிகளைப் பிரித்து ‘ஐக்கிய கேரளம்’ அமையப் போராடி னர். குஜராத் மாநிலத்தவரும் மகா ராஷ்டிர மாநிலத்திலிருந்து பிரிந்து ‘தனி குஜராத்’ மாநிலம் அமைய ‘மஹா குஜராத் ஜனதா பரிஷத்’ என்னும் இயக்கத்தைக் கண்டனர். மகாராஷ் டிர மக்களும் தங்கள் மாநிலம் தனியாக அமையப் போராட என்றே ‘சம்யுக்த மஹாராஷ்டிர சமிதி’ என்னும் அமைப்பை உருவாக்கினர்.


ஆனால் தமிழகத்தில் மொழி வாரித் தனியரசு கோர ஓர் இயக்க மில்லை. எல்லைப் பகுதிகளைக் காக்க வும் மீட்கவும் எந்தத் தலைவரும் முயற் சிக்கவும் இல்லை. திராவிடத் தனி நாடு கோரியவர்களும் கூட அதற் கென எந்த முயற்சிகளையும் முன் னெடுக்காத வேளையில், தமிழ் இன உணர்வாளர்களும் தேசிய வாதிகளும் பிளவுபட்டிருந்த நேரத்தில் தமிழின உணர்வும் உரிமையும் இந்திய ஒருமைப் பாடும் வேறு வேறல்ல என்பதைத் தலைவர்களுக்கும் பிரிவினைக் கோருபவர்களுக்கும் உணர்த்தும் வகையில் ‘உரிமைக்கு எல்லை வேங்கடம், உறவுக்கு எல்லை இமயம்’ என்று முழங்கித் தேசிய இன உணர்ச்சி, மொழி உணர்ச்சி என்ற இரண்டையும் வளர்த்தெடுத்தார். ம.பொ.சி.யின் இந்த முழக்கமே எல்லைப் போர், மொழியுரிமைப் போர், மாநில சுயாட்சிப் போர் என்ற எல்லா வற்றுக்குமான சூத்திரம். இதையே ‘சுயாட்சித் தமிழகம்’ படைக்கும் தேவைக்கான கொள்கையாகவும் எடுத்துரைத்தார்.


பிற மாநிலத்தில் இருந்த காங்கிர சார் மொழி வழி உணர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துப் போராடிய காலத்தில், தமிழ்நாட்டின் நிலை தலைகீழாக இருந்தது. இந்நிலையில் தான், ம.பொ.சி., தமிழரசுக் கழகத்தை முற்று முழுதாகத் தேசிய இனத்தின் இயக்கமாக நடத்தினார். மொழி வாரி மாநிலம் அமைய வேண்டும். தமி ழகத்தின் எல்லைகளைக் காக்க வேண்டும் என்பதையே கழகத்தின் கொள்கையாகக் கொண்டு இயங்கியது தமிழரசுக் கழகம்.


1948ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்க அன்றைய பாரதப் பிரதமர் நேரு, நீதிபதி தார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். மீண்டும் 1954ஆம் ஆண்டில் பசல் அலி தலைமையில் குழு அமைந்தது. 1956 நவம்பர் முதல் நாள் தமிழகம் தனி மாநிலமானது. ஆனால் அப்போது ஏற்பட்ட தமிழக- ஆந்திர எல்லைச் சிக்கலைத் தீர்க்க, மத்திய சட்டத் துறை அமைச்சர் எச்.வி.படஸ்கர் தலைமை யில் குழு அமைக்கப் பட்டது.
முன்னதாக, பொட்டி ஸ்ரீராமுலு என்கின்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் உண்ணாவிரதம் இருந்து ஆந்திரப் பிரிவினையைக் கோரினார். சென்னையில் இராயப் பேட்டை நெடுஞ்சாலையில் இருந்த புலுசு சாம்பமூர்த்தி என்ற ஆந்திரத் தலைவரின் இல்லத்தில் தனது உண்ணாவிரதத்தை 1952ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் தொடங் கினார். ஆந்திரத் தலைவர்களான பிரகாசம், புலுசு சாம்பமூர்த்தி போன் றோர் அவரை ஆதரித்தனர். சென் னையைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் அமைய வேண்டும் என்பதே அவர்தம் கோரிக்கை. ‘மதராஸ் மனதே’ என்பதே அவர்களது முழக்கமாக இருந்தது.


பட்டினி கிடந்த ஸ்ரீராமுலுவைக் காணச் சென்ற ம.பொ.சி.யிடம், பிரகாசம், ஸ்ரீராமுலுவின் உயிரைக் காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்று கோர, அதற்கு ம.பொ.சி. “சென்னை நகர் மீது உரிமை கொண் டாடுவதை விட்டு ஆந்திர மாநிலம் கோரினால், தமிழரசுக் கழகம் ஆந்திரர் களுடன் பூரணமாக ஒத்துழைக்கும்” என்று பதிலுறுத்தார். பிரகாசம் விடாமல், “ஆந்திர அரசு தற்காலிக மாகவேனும் சென்னையிலிருக்க அனுமதித்தாலும் போதும், விசால ஆந்திரம் அமையும் போது எங்களுக்கு ஐதராபாத் கிடைத்து விட்டால் நாங்கள் போய் விடுவோம், இதற்கு நீங்கள் இசைந்து விட்டால் மற்ற வர்கள் எதிர்க்க மாட்டார்கள்” என்று கூறிய போதும் ம.பொ.சி. பிடிவாத மாய் “ஆந்திர அரசுக்கு தற்காலிகமாகச் சென்னையில் இடமளிக்க மற்றவர்கள் இசைந்தாலும், நான் இசைய மாட் டேன்” என்று உறுதியாகக் கூறி விட்டுத் திரும்பினார்.


1952 டிசம்பர் 15ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்த நிலையிலேயே உயிர் துறந்தார். அப்போது ஆந்திராவில் ஏற் பட்ட கலவரம் தொடர்ந்து மூன்று நாட்கள் நீடித்தது நிலைமை மேலும் மோச மாகுமென்ற அச்சத்தால், ஆந்திர மாநிலம் 2.10.1953 அன்று பிரிக்கப் படும் என்று நாடாளு மன்றத்தில் நேரு அவரசமாக அறிக்கை வெளியிட்டார். சென்னை நகரம் அல்லாத - தகராறுக்கு இடமில்லாத, தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு - சித்தூர் மாவட்டம் முழுவதையும் சேர்த்து ஆந்திர மாநிலம் அமையும் என்றும் தலைநகர் பற்றிப் பின்னர் அறிவிக்கப் படும்’ என்றும் நேரு தம் அறிவிப்பில் விளக்கியிருந்தார்.


சித்தூர் மாவட்டத்தின் தெற்கே யுள்ள பகுதிகள் தமிழகத்தில் சேர்க்கப் பட வேண்டும் என்று ஏற்கெனவே தமிழரசுக் கழகம் கோரி வந்த நிலை யில் சித்தூர் ஆந்திராவில் சேர்க்கப் படுவதாக அறிவிக்கப்பட்டதும், பிரகாசம் மீண்டும் ‘சென்னையை இரு பகுதியாகப் பிரித்துக் கூவத்தை நடுவில் வைத்து வடசென்னையை ஆந்திரத் துக்கும் தென்சென்னையைத் தமிழ் நாட்டுக்குமாகப் பங்கு போட வேண் டும் அல்லது சென்னை நகரம் ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் பொது நகராகச் செய்ய வேண்டும்’ என்று அறிக்கை விட்டதும் தமிழகத்தின் நிலையைக் கேள்விக்குள்ளாக்கியது.


அப்போது சென்னை மாநக ராட்சியின் ஆல்டர்மேனாக இருந்த ம.பொ.சி. தமிழரசுக் கழகத் தொண் டர்களுடனும், ‘தலையைக் கொடுத் தேனும் தலைநகரைக் காப்போம்’ என்ற முழக்கத்துடனும் பெரும் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போதைய சென்னை மேயர் செங்கல்வராயனின் உதவி யுடனும் தமிழக முதல்வர் இராஜாஜியின் ஆதரவுடனும் திருவலலிக்கேணிக் கடற்கரையில் கட்சிச் சார்பற்ற நிலையில் அனைத்துத் தலைவர் களையும் அழைத்து ஒரு பொதுக்கூட் டத்தையும் நடத்தினர். இராஜாஜி, பெரியார், எஸ்.எஸ். கரையாளர், பக்தவசலம் போன்ற தலைவர்களுடன் ம.பொ.சியும் அக்கூட்டத்தில் பேசினார்.


அத்துடன் நில்லாமல், உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரிக்குத் தமிழ்நாடு முழுவதுமிருந்து தந்திகள் அனுப்பவும் ஏற்பாடு செய்தார். மேலும் மாநகராட்சியின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டச் செய்து ‘தலை நகரம் தமிழர்க்கே’ என்பது பற்றிய தீர்மானத்தையும் கொணர்ந்தார். நீண்ட விவாதத்திற்குப் பின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது தந்தி வடி வில் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், சென்னை மாநில முதல்வர் ஆகியோருக்கு மேயரால் அனுப்பப்பட்டது. இறுதியாக 25.3.1953இல் தில்லி நாடாளு மன்றத்தில் நேரு, மத்திய அரசின் சார்பில் அதிகார பூர்வமான பிரகடன மொன்றை வெளியிடுகையில் ‘ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர நாட்டின் எல்லைக்குள்ளேயே இருக்கும்’ என்று அறிவித்தார்.


தலைநகர் காப்பாற்றப்பட்ட போதும் மாநிலம் பிரிப்பதில் எல்லைச் சிக்கல் நீடித்தது. திருத்தணி போராட்ட வீரர் மங்கலங்கிழாரின் அழைப்பின் பேரில் தமிழகத்தின் வடக்கெல்லைப் பகுதிக்குச் சென்ற ம.பொ.சி. சித்தூர் மாவட்டதின் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து மக்களைக் கிளர்ச் சிக்குத் தூண்டினார். தலைநகர்ப் போரில் கை கொடுத்த தலைவர்கள் கூட, வடக்கெல்லைக் கிளர்ச்சியில் ம.பொ.சிக்கு ஆதரவாக இல்லை, இராஜாஜி உள்பட.


ஆனால் ம.பொ.சி. அந்தப் பகுதிவாழ் தமிழ் மக்களின் துணை யுடன் தொடர்ந்து 15 நாட்கள் மறியல் போராட்டம் நடத்தினர். 144 தடை யுத்தரவை மீறிய குற்றத்திற்காக ஆறு வாரக் கடுங்காவல் தண்டனை பெற்றார். இதைத் தொடர்ந்து ரெயில் நிறுத்தம். சட்டப் பேரவை முன்பு ஆர்ப்பாட்டம் அமைச்சர்கள் எதிரே கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என்று போராட்டம் எழுச்சி பெறத் தொடங்கியது. இறுதியில் இதற்காக அமைக்கப்பெற்ற படங்கர் தலைமை யிலான குழு, திருத்தணியைத் தமிழ் நாட்டுடனும் திருப்பதியை ஆந்திரத் துடனும் இணைத்துப் பரிந்துரைத்தது. இதன் மூலமாக, வள்ளிமலை, திரு வாலங்காடு, திருத்தணி, ஓசுர், சித்தூரின் முப்பது கிராமங்கள் அகியவன தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டன. 1957இன் இறுதியில் பரிந்துரைக்கப் பட்டும் 1960 ஏப்ரல் 1இல் தான் இது சட்டரீதியாக நடைமுறைக்கு வந்தது.
இத்துடன் அன்றி, தமிழகத்தின் தெற்கெல்லையைப் பாதுகாத்ததிலும் ம.பொ.சிக்குப் பங்குண்டு. ‘தமிழ் நாடு’ என்ற பெயர் சுட்டவும் அறப் போர் நடத்தினர். பயிற்சி மொழி யாகத் தாய்மொழியாம் தமிழ் மொழியே இருக்கவேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து அதனை இலக்காக்கினார். ஆல்டர்மேனர்க இருந்தபோது ஆங்கிலேயர் வடிவ மைத்திருந்த சென்னை மாநகராட்சி யின் கொடியை மாற்றி சேர, சோழ, பாண்டியரின் சின்னமான வில், புலி, மீன் ஆகியவற்றைக் கொண்டு மாற்றியமைத்தார், மாநகராட்சியின் வரவு - செலவுக் கணக்கையும் தமிழிலே தாக்கல் செய்து முன் மாதிரி யானார். இது பற்றிக் குறிப்பிடும் தமிழரசுக் கழகத் தொண்டர்கள் ‘ரிப்பன் மாளிகையில்’ அவர் ஆற்றிய பங்கை மதித்து அம் மாளிகைக்கு, ம.பொ.சி. மாளிகை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றன.


தமிழ் எழுத்தாளர் சங்கத் தலை வராகவும் சட்ட மேலவை உறுப்பின ராகவும், சட்ட மன்ற உறுப்பினராக வும் சட்ட மேலவைத் தலைவராகவும், நூலக ஆணைக் குழுவின் தலைவராக வும் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் செனட் உறுப்பினராகவும் தமிழ் வளர்ச்சி உயர்மட்டக் குழுத் தலைவ ராகவும் பணியாற்றி அனைத்திலும் செம்மையாய் நின்றவர் அவர். மூன் றாம் வகுப்பே படித்த ஒருவர் அறிஞர் நிறைந்த மேலவைக்குத் தலைமை தாங்கி அவைத்தலைவராய் இருந்த பெருமை அவர் ஒருவரையே சாரும்.
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, தமிழகத்தில் பிற மொழியினர், விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு, தமிழ் இலக்கியத்தில் இனவுணர்ச்சி, ஆங்கிலம் வளர்த்த மூட நம்பிக்கைகள், எனது போராட் டம், விடுதலைப் போரில் தமிழகம் உள்ளிட்ட 150 நூல்களை எழுதி யிருக்கும் ம.பொ.சி. ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ நூலுக்காக 1966இல் சாகித்ய அகாதெமியின் பரிசினையும் பெற்றார். வாழும் போதே அவ ருடைய நுலான ‘விடுதலைப் போரில் தமிழகம்’ அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் நாட்டுடைமை யாக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாயும் வழங்கப்பட்டது. ம.பொ.சி. யின் நூற்றாண்டு விழா நடைபெற்ற 2006இல் அவரது நுல்கள் அனைத்தும் நாட்டுடமை யாக்கப்பட்டு, முதல்வர் கருணா நிதியால் இருபது லட்ச ரூபாய் அவருடைய சந்ததியினர்க்கு வழங்கப் பட்டது.


அரசியலும் இலக்கியமும் தம் இரு கண்களெனக் கொண்ட ம.பொ.சி. இலக்கியத்துகுச் செய்த பங்களிப்பும் மகத்தானதே. சிலப்பதி காரத்தை உயிர்ப்பித்துக் கொடுத்த உ.வே. சாவின் வழி நின்று சிலம்பை அனைவரிடத்திலும் கொண்டு சென்று புத்துயிரூட்டினார். கட்ட பொம் மனை, கப்பலோட்டிய தமிழனை, மருது பாண்டியனை, தமிழருக்கு நினைவூட்டி, நிலைநாட்டி வரலாறாக் கியவர் ம.பொ.சி. வள்ளலாரின் ஆன்மநேய ஒருமைப் பாட்டை எளிமைப்படுத்தி விளக்கினார். மேலும் விரிக்கின் பெருகும் வர லாற்றை உடையவர். தமிழக வரலாற் றின் ஒரு பகுதியைத் தம் வரலாறாகவும் பெறும் பேறு பெற்றவர் தமிழால் உயர்ந்தவர்; தமிழுக்கும் வளம் சேர்த்தவர். சிந்தை - சொல் - செயல் என்ற மூன்றாலும் தமிழுக்கும் தமி ழினத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் ஆக்கம் பயந்தவர். இத்தகைய சிறப்பு கள் பெற்ற பெருமகனார்க்கும் தலை நகராம் சென்னையில் சிலை அமைக் கவும் அஞ்சல்தலை வெளியிடவும் ஆவன செய்வதாக உறுதியளித்து அன்னாரின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆகஸ்டு 15, 2006இல் அஞ்சல் தலை முதல்வரின் கரங்களாலேயே தலைமைச் செயலகத்தில் வெளியிடப் பட்டது. ஆனால் ‘சிலை’ அறிவிப்பு அளவிலேயே நின்று விட்டது.


இதே போராட்டத்தை முன் வைத்து நின்ற பொட்டி ஸ்ரீராமு லுவுக்கு ஆந்திரத்தில் உள்ள மரியாதை என்னவென்று நோக்கினால், அவர் உண்ணாவிரதம் இருந்த இராயப் பேட்டை நெடுஞசாலையில் உள்ள புலுசு சாம்பமூர்த்தியின் இல்லம் ஆந்திர அஞ்சல் நினைவிடமாகப் பாதுகாக்கப்படுகிறது. ‘அமர ஜீவி’ என்று ஆந்திர மக்களால் இன்றளவும் போற்றப்படுகிறார். 2000ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் நாள் அவர் நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட் டுள்ளது, அவர் பெயரால் ஹைதரா பாத்தில் பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக் கழகம் நிறுவப்பட்டுள்ளது. அவர் நினைவாக 2008 ஜுனில் நெல்லூர் மாவட்டத்தை ‘ஸ்ரீ பொட்டி ஸ்ரீராமுலு நெல்லூர் மாவட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர்.


இப்போராட்டத்தில் அவருக்கு ஆதரவாக நின்ற பிரகாசம் அவர்களின் பெயராலும் ஆந்திராவில் மாவட்டம் உள்ளது. அவருக்கு பாராளு மன்றத் தில் சிலை அமைத்துள்ளனர். ‘பிர காசம் சாலை’ என்று சென்னையின் முக்கியமான பகுதியிலே ஒரு சாலை உள்ளதோடு, பொட்டி ஸ்ரீராமுலு பிரகாசம் இருவருக்கும் சென்னையின் முக்கியமான பகுதியிலே சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.


ஆனால், சென்னையைத் தமி ழர்க்கு மீட்டுக் கொடுத்த ம.பொ.சி க்குச் சென்னையில் சிலை இல்லை. இந்தக் குறையைப் போக்க தமிழக முதல்வர் தாம் அறிவித்தபடி சென்னை யின் மையப் பகுதியில் ம.பொ.சி.க்கு சிலை நிறுவவேண்டும். இது தாமத மாகிக் கொண்டே போவது, ம.பொ.சி.யின் மணி விழாவில் ம.பொ.சி. பற்றி அண்ணா குறிப்பிட் டதைத்தான் தவிர்க்க முடியாமல் நினைவில் எழுப்புகிறது. “நாம் உழுது கொண்டேயிருப்போம். யாராவது அறுவடை செய்து கொண்டே போகட்டும். மிச்சம் மீதி என்றேனும் நாட்டுக்குக் கிடைக்கும். அதுவரை நாம் உழுது கொண்டே இருப்போம் என்றெண்ணி அவர் உழவராகவே வாழ்ந்து வருகிறார்.”


குறிப்பு : ம.பொ.சி.யின் நூல்கள் அனைத்தையும் மயிலாப்பூர் பூங் கொடி பதிப்பகம் மக்கள் பதிப்பாக வெளியிட்டுள்ளது. ம.பொ.சி. பற்றி மேலும் அறிய விரும்புவோர், ம.பொ.சி.யின் சிந்தகைளை கற்க விரும்புவோர், இந்தப் பதிப்பகத்தில் உள்ள நூல்களை வாங்கிப் படித்துப் பயன் பெறலாம்.


பூங்கொடி பதிப்பகம்,
14, சித்திரைக்குளம் மேற்குத் தெரு,
மயிலாப்பூர், சென்னை - 600 004.

No comments:

Post a Comment