Thursday, August 19, 2010

காணத் துடிக்கும் இரு கண்

நன்றி : தடாகம்.காம்

காற்றில் மிதந்து வருகிறது தாளமும் பாடல்களும் கலந்த கலவையொலி. செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையிலுள்ள புரிசையின் காற்றிலேயே கலந்திருக்கிறது கூத்து வாசனை. புரிசை மண்ணை மிதித்து நடக்கையில் நம்மையும் அறியாமல் நாமும் ஒரு வித லயத்தோடே நடக்கத் தொடங்குகிறோமோ… அந்த இருள் சூழ்ந்த வெளியில் புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் நடத்தும் “அனுமன் கூத்து” மேடை மட்டும் ஒளி வெளிச்சத்தின் மத்தியில் தனித்துவத்துடன் வரவேற்றது.

கட்டியங்காரனின் வரவேற்போடு தொடங்கியது கூத்து. அங்கதனும்அனுமனும் ஜாம்பவானும் கடலைத் தாண்டி இலங்கை செல்வது பற்றி ஆலோசிக்கும் காட்சியில் தொடங்கி சீதையிடமிருந்து கணையாழியைப் பெற்றுக் கொண்ட அனுமன் இலங்கையைத் தீக்கிரையாக்கி விட்டுத் திரும்புவது வரையிலும் உள்ள பகுதியை உள்ளடக்கியிருந்தது அனுமன் கூத்து. மரபார்ந்த பிரதியிலிருந்து சற்றும் வழுவாமல் கூத்து தொடங்கியது. கம்பராமாயணத்தை ஒற்றி, அதன் சில பாடல்களை எளிமைப்படுத்தி, கருத்து வளம் குன்றாமல் எடுத்தாண்டது நயம். தூய அன்பிற்கும் உள்ளார்ந்த பக்திக்கும் அளப்பரிய ஆற்றலுக்கும் குறியீடாகச் சுட்டப்படும் அனுமன் சைவ, வைணவ சமயத்தாரால் போற்றப்படுபவன். எங்கெல்லாம் இராம நாமம் கேட்கிறதோ அங்கெல்லாம் அனுமன் இருப்பார் என்பது வைணவ நம்பிக்கை. சுந்தர காண்டம் முழுதும் நிறைந்திருப்பவர் அனுமன். அவருடைய சிறப்பை உணர்த்துவதே ‘அனுமன் தூதின்’ நோக்கம்.

அனுமனாக வேடம் தரித்திருந்த பார்த்திபராஜா குரங்கின் உடல் மொழியை அப்படியே கைக்கொண்டு அனுமனாகவே மாறி இருந்தார். தாளம் தப்பாத அடவுகளோடு உடல் அசைவுகளையும் சரியாக இணைத்து நல்ல குரல்வளத்தோடும் உச்சரிப்போடும் உணர்வோடும் பார்த்திபராஜா மேடையில் தோன்றுகையில் அனுமனே காட்சியளித்தார். தன்னால் கடலைத் தாண்ட முடியுமா என்ற சந்தேகத்தை, சீதையை இராவணனின் அரண்மனையில் தேடும்போது அவளைக் காண முடியாத வருத்தத்தை, கண்டவுடன் ஏற்படும் ஆனந்தத்தை, இராமனின் கணையாழியைக் கொடுக்கையில் அடையும் பரவசத்தை, அரண்மனையைக் கொளுத்தும் சீற்றத்தை உடலின் அத்தனை அங்கங்கள் வழியாகவும் பெருக்கெடுக்கச் செய்து அவ்வுணர்வுகளைப் பார்வையாளருக்கும் கடத்திச் சாதித்திருக்கிறார்.  குறிப்பாக, இலங்கிணியுடன் நடத்தும் வாக்குவாதத்திலும் பூசலிலும் அவருடைய அடவுகளும் சுழன்று சுழன்று மேடையை முழுதும் பயன்படுத்திய பாங்கும் குறிப்பிடத்தக்கவை.

இலங்கிணியாக நடித்த சரவணனுக்கும் வேடப் பொருத்தம் கச்சிதம். புடைத்த வயிறும் நெடுந்தோளும் அகன்ற கண்களும் கொண்டு அனுமனைத் துரத்தும் காட்சி அப்படியே மனப்பதிவாய் நிற்கிறது. இராவண பாத்திரம் ஏற்றிருந்த மாரி.சம்பத்குமார், “மாதேவியோ சீதேவியோ மங்கை இவள் தான் சீதையோ” என்றும் “நித்தம் நித்தமும் உருகி வாடுறேன் வைதேகி என்னை ஏற்றுக்கொள்ளத் தருணம் இன்னும் வல்லையோ கருணை உனக்கில்லையோ” என்றும் தான் சீதையின் மீது கொண்டிருந்த அளவில்லாக் காதலை   வெளிப்படுத்திப் பாடும் இராவணன் மீது இரக்கமும் வெறுப்பும் மீதூறுகிறது.

சீதையாக நடித்திருந்த, ஒன்பதாம் வகுப்பே படிக்கும் சிறுவன் முத்துக்குமாரிடம் சற்றே பதற்றம் தெரிந்தாலும் கூட இது அவருக்கு முதல் மேடை அனுபவம் எனும்போது அந்த அளவில் சிறப்பாகவே செய்திருக்கிறார் எனலாம். எனினும் இன்னும் சற்றே வயது அதிகமுள்ளவரைப் பயன்படுத்தியிருக்கலாமோ என்பது கட்டுரையாளரின் எண்ணம். “இந்த உடலும் உயிரும் இராமனுக்காகவே அடப்பாவி இராவணா” என்று பாடி இராவணனின் பிடிக்கு அகப்படாமல் விரித்த கூந்தலுடன் அவர் “இராமா இராமா” என்று சுழன்று சுழன்று வந்த போது சற்றுப் பரிதாபமாகவே இருந்தது. அசோக வனத்தில் இருக்கும் சீதை பட்டுப்புடவை, நெற்றிச்சுட்டி இன்ன பிற அலங்காரங்களுடன் காட்சியளித்தது நெருடல். வானரங்களுக்கும் கரடியான ஜாம்பவானுக்கும் வேறுபாடு தெரியாதவாறு வானரங்களுக்குரிய  வெண்ணிற ஆடையே அணிவிக்கப் பட்டிருந்தது. தவிர்த்திருக்கலாம். சீதையைக் காணச் செல்லும் அனுமன் அங்கு வரும் இராவணனின் கண்களில் அகப்படாமல் இருக்க  அங்கே இருக்கும் மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொள்வதை அப்படியே கூத்தில் செய்திருக்கிறார்கள். பார்த்திபராஜா, பக்கத்தில் இதற்காகவே செயற்கையாக நடப்பட்டிருந்த மரத்தில் ஏறிக் குரங்காட்டமிட்டது அனுமன் பாத்திரத்தோடு அவர் ஒன்றியதைச் சுட்டியது. மரத்தின் மீது அமர்ந்து சேட்டைகள் செய்த அனுமனை மக்கள் ரசித்தனர்.  எனினும் கூத்தில் உருவகமாகவே சிலவற்றைச் செய்ய வேண்டுமேயன்றி கூத்துக்களம் தவிர எந்தப் பொருளையும் பயன்படுத்துவதில்லை என்னும் மனோதர்மம் இங்கு மீறப்பட்டிருக்கிறதோ என்று தோன்றியது. மேலும் கூத்தில் மேடை கூடப் பயன்படுத்தப்படுவதில்லை என்றே நான் அறிந்திருக்கிறேன்.

இந்த அத்தனை பாத்திரங்களோடும் ஊடாடி, மிகுந்த சுதந்திரத்தோடு வசனங்களை அநாயாசமாகப் பேசி நடித்த கட்டியங்காரனைக் குறிப்பிடாமல் இருக்க இயலாது.  நகைச்சுவைப் பாத்திரம் போலத் தோன்றினாலும் அப்படி மட்டுமாக அல்லாமல், எல்லோரையும் விமர்சிக்கும், கேலி செய்யும் கட்டியங்காரனாக நடித்தவர் எஸ்.கோபால். கலைவாணரைச் சற்றே நினைவூட்டும் சாயலுடன் அவரைப் போலவே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். அனுமனாக நடித்த பார்த்திபராஜாவும் அங்கதனாக நடித்த பாலசுப்பிரமணியமும் திருப்பத்தூர் தூய இருதயக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் என்பது சிறப்பு.

ஒன்பது மணிக்குத் தொடங்கிய இந்தக் கூத்து ஒரு மணியளவில் நிறைவுற்றது. இடையில் அரைமணி நேரம் பேச்சாளர்களுக்காக ஒதுக்கப்பட்டது. திரைக்கலைஞர் ரேவதி, புதுதில்லி பல்கலைக்கழக மேனாள் நாடகத் துறைத்  தலைவர் செ.ரவீந்திரன், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி துணை முதல்வர் மரியசூசை, தமுஎகச திருவண்ணாமலை மாவட்டச் செயலர் ஆரிசன் ஆகியோர் பங்கேற்றனர்.அத்துடன் கூத்துக்கலையின் வழக்கமான ‘சுபோஜெயம்’ என்று கூறிக் கலைஞர்களுக்கு ஊரார் அன்பளிப்பு வழங்கி உற்சாகப்படுத்தும் நிகழ்வும் இடையிலேயே நீட்டித்தது நம் ஈடுபாட்டைக் குறைத்ததுடன் சற்றே சலிப்பையும் ஏற்படுத்தியது.

நம் பாரம்பரியக் கலையான கூத்து வடிவத்தை பெரும்பான்மை அதன் தன்மை மாறாமல், அண்மைய காலங்களில் அதில் புகுத்தப்பட்ட ஆபாசங்களின்றி பார்க்கும் நல்வாய்ப்பு கிடைத்ததற்கும் எந்த விதமான அங்கீகாரமுமின்றியும் கூடக் கலையின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தொடர்ந்து தெருக்கூத்து ஆடியும், புதிய தலைமுறையை உருவாக்கியும் வரும் தெருக்கூத்துக்கலைஞர்களைப் போற்றுவதே நாம் செய்ய வேண்டியது. இக்கலை அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பது சிலரின் வருத்தம். ஆனால் அரங்கத்தின் கீழே அமர்ந்திருந்த பார்த்திபராஜாவின் குழந்தை ஆதிரை பாடல்களுக்கேற்ப தன் இளங்காலெடுத்து அடவு வைத்து ஆடியது கூத்துக்கலையின் வருங்காலத்திற்குக் கட்டியம் கூறியது.
(கூத்து நாள் : 17.04.2010)

                                       

8 comments:

  1. ஆஹா சூப்பர் பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. நேர்த்தியான எழுத்து நடை . கடந்த நினைவுகளை மீண்டும் விரல் பிடித்து சென்று அறிமுகம் செய்தது உங்களின் எழுத்துக்கள் . மிகவும் அருமையான பதிவு . இன்றைய அவசர நிலையிலும் இதுபோன்று பழமைகளை மீண்டும் புதிப்பிக்கும் எண்ணம் சிலருக்கே இருக்கிறது .!வாழ்த்துக்கள் . தொடர்ந்து எழுதுங்கள் . மீண்டும் வருவேன்

    ReplyDelete
  3. நன்றி சஙகர், யாதவன்.

    ReplyDelete
  4. அனுமன் தூது பார்க்கமுடியலையே என்ற வருத்தமும்..பார்த்திபராஜா நடிப்பை காண முடியாத ஏக்கத்தையும் உங்க கட்டுரை தீர்த்துவைத்துவிட்டது..சரளமான நடை பின்னுகிறது.பொறாமையாகவும் இருக்கிறது...

    ReplyDelete
  5. நன்றி NAM. உங்கள் பாராட்டு எனக்கு மேலும் எழுதும் ஊக்கத்தை அளிக்கிறது. நன்றி.

    ReplyDelete
  6. சுவாரசியமான எழுத்துநடை!

    ReplyDelete
  7. உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்....

    http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_02.html

    நன்றி.

    ReplyDelete