Wednesday, October 5, 2011

மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கத்தின் உண்ணாப் போராட்டம்


மனித உயிர் பறிப்பது மனித நேயத்துக்கும் மானுட குல அறத்துக்கும் எதிரானது.   மனித உயிர் பறிக்க தனி மனிதருக்கோ, சமூகத்துக்கோ. அரசுக்கோ எந்த உரிமையும் இல்லை. ஆனால் மரணதண்டனையை அல்லது தூக்குத் தண்டனையை அரசே நிறைவேற்றுகிற போது அது அறமான செயலாகவும் சட்டரீதியாகவும் கருதப்படுவது எவ்வகையில் நியாயம்?  நியாயமில்லை எனப் பதில் கூறும் முகமாக மரண தண்டனையை உலகில் 135 நாடுகள் ரத்து செய்துள்ளன. காந்திதேசம் என்ற கிரீடத்தை பெருமையாகச் சூடிக் கொண்டிருக்கும் இந்தியா இதுவரை மரணதண்டனையை ரத்து செய்யவில்லை.

இப்போது ராஜிவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கி நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையிலிருந்த காலம் இருபது ஆண்டுகள். வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்தால் கூட இவர்களின் சிறைக்காலம் முடிந்து போயிருக்கும். எந்த ஒரு மனித உயிருக்கும் மரணதண்டனை வழங்க எவருக்கும் உரிமையில்லை எனும் உன்னதமான கருத்து உலகின் மனச் சாட்சியாக மேலெழுந்து வருகையில்...                                     

இந்திய அரசே , மரண தண்டனையை ரத்து செய் !


பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனையை நீக்க 


தமிழக அரசே,  அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேறுக!


என்ற கோரிக்கையை முன்வைத்து 09.10.2011 அன்று சென்னை கோயம்பேட்டில் ஒருநாள் உண்ணாப் போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்தியா அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-இல் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி தமிழக அமைச்சரவை கூடித தீர்மானம் நிறை வேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பினாலேயே இத்தூக்குத் தண்டனையை நீக்க முடியும் என்று சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள். இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னைகோயம்பேடு பேருந்துநிலையம் அருகிலுள்ள ஆட்டோ கேரேஜ்ஜில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம் சார்பில் நடைபெறவுள்ள உண்ணாப் போராட்டத்தில் பங்கேற்குமாறு படைப்பாளிகள் அனைவரையும் அழைக்கிறோம்.


பா.செயப்பிரகாசம் 

அமைப்பாளர்களுக்காக.

No comments:

Post a Comment