Wednesday, September 1, 2010

ஜனவரி 29 - ஆவணப் பட வெளியீட்டு விழா



ஆகஸ்டு 29ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 3.30 மணியளவில் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை அரங்கில் முத்துக்குமார் குறித்த ஆவணப் பட வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக மின்னஞ்சல் பெறப்பட்டிருந்தது. பொதுவாக அவ்வரங்கில் வழக்கமாக திரையிடப்படும் படங்களுக்கெல்லாம் குறிப்பிட்ட நேரத்தில்தான் பார்வையாளர்கள் வருவார்கள். அவ்வரங்கம் முழுக்க நிறைவதும் பெரும்பாலும் நேர்வதில்லை. 'நாம்தான் மிகவும் சீக்கிரமே போய்ச் சேர்கிறோம்' என்கிற எண்ணத்தோடே பிற்பகல் 2.45 மணிக்கே சென்ற எனக்குப் பெரும் இன்ப அதிர்ச்சி. அரங்கத்தின் உள்ளும் புறமும் நிறைந்திருந்தது. பார்வையாளர்களின் வருகையைப் பதிவு செய்து அடையாள அட்டை வழங்குவதில் ஒரு தோழரும், தோழியரும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். மிகச்சரியான நேரத்தில் விழா தொடங்கியது.

70 நிமிடம் ஓடியது 'ஜனவரி-29'. முத்துக்குமாரின் பள்ளிப்பருவக் காட்சிகளையும், அவரது இளமைக் கால நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியரது ஞாபகப் பகிர்தல்கள், சென்னையில் திரைத்துறை, இதழியல் துறையில் அவரது தனித் தன்மை வாய்ந்த செயல்பாடு, 'பெண்ணே நீ' ஆசிரியர் மற்றும் 'நிழல்' திருநாவுக்கரசுஆகியோரது நினைவு கூர்தல்கள்; நெஞ்சை அதிரவைக்கும் ஈழத்துப் போர்க்களக் காட்சிகள்; முத்துக்குமாரின் இறுதி நேரத்து 'சாஸ்திரி பவன்' நிகழ்வு, இறுதி ஊர்வலம் ஆகியவை காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. சூரியா என்பவர் முத்துக்குமாராக நடித்திருந்தார்.

வழக்கறிஞர் ஏ.நல்லதுரை மற்றும் செல்வராஜ் சி.முருகையன் தயாரிப்பில் இயக்குநர் பிரகதீஸ்வரன் இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்தின்முதல் பிரதியை நடிகர் சத்தியராஜும் இயக்குநர் அமீரும் வெளியிட முத்துக்குமாரின் தந்தை குமரேசன் பெற்றுக் கொண்டார். சத்தியராஜ், அமீர், கவிஞர் அறிவுமதி, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் இந்த ஆவணப்படம் பற்றிய தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்தனர். இயக்குநர் கவுதமன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.


'வெறும் 11 பேர் மட்டுமே பாரதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அந்த எழுச்சிக்கவியின் வீரியம் இன்னும் அடங்கவில்லையே! அப்படியிருக்க இத்தனை லட்சம் பேர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு, அடக்கம் செய்யப்பட்ட முத்துக்குமாரின் லட்சியமும் உணர்வும் எளிதில் ஓய்ந்துவிடுமா?' என்று கேட்டார் அமீர்.

'எப்போ முத்துகுமாருக்குச் சிலை வைக்க இங்கே பெயப்பட ஆரம்பிச்சாங்களோ? அப்பவே முத்துக்குமார் ஜெயிச்சுட்டாரு...என் மனதில் உள்ள கோபத்தையெல்லாம் இங்கே நான் கொட்டிப் பேசினால், ஆயுளுக்கும் நான் வெளியே வர முடியாது. அப்புறம் 'இரண்டு முகம்'தான் என் கடைசிப் படம்னு ஆயிடும்' என்றார் சத்தியராஜ். 

நன்றி:  யுவபாரதி