சமூகத்தின் சகல மட்டங்களிலும் இன்றைக்கு ஊழலும் லஞ்சமும் வேரூன்றியிருக்கிறது. மக்களால் அது சகஜமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பெரிய அளவில் செய்யப்பட்டால் ஊழல் என்றும் சிறியதாய் இருந்தால் அது லஞ்சமாகவும் கொள்ளப்பட்டு, கிட்டத்தட்ட மக்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற தன்மையைக் காண முடிகிறது. பெரிய அளவில் செய்யப்படுகின்ற ஊழல்களை பெரும்பான்மை மக்கள் தட்டிக் கேட்க முடியாத மனநிலையில், இலவசங்களுக்கு ஆட்பட்டு, தங்களுக்கு எவ்வளவு கிடைக்குமென்ற எண்ணவோட்டத்தில் சிக்கியிருக்கின்றனர். சிறிய அளவில் பேசுபவர்களும் கூட ஒரு விதமான உயிர் பயத்துடன் செயல்படக் கூடிய கொடுமையான காலத்தில் நாம் வாழ்கிறோம். மனசாட்சியற்றவர்களின் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரச் சாட்டையின் வீறல்கள் நம் எல்லோருடைய முதுகிலும் மிக அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன.
ஊழல் வெளிப்பட்டுப் பேச்சரவம் கேட்கத் தொடங்கிப் பின் மெல்ல மெல்ல மக்களின் நினைவடுக்குகளில் இருந்து அது விலகிப் பின் வேறொரு ஊழல் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. சென்ற ஆண்டு அந்த அளவுக்குக் கூட நேரமின்றிப் புற்றீசல் போல மாநில அளவிலும் தேசிய அளவிலும் ஊழல் நாகங்கள் கிளம்பிக் கொண்டேயிருந்ததில் எதைப் பற்றிப் பேசுவது, கவனிப்பது என்ற அளவில் மக்கள் குழம்பியே போயினர். ஊழல் செய்பவர்களும் கூட, இது வரையில் இந்தியாவில் ஊழலுக்காக யாரும் தண்டனை பெற்றதில்லை என்ற தைரியத்துடனும் கண்டுபிடிக்கப்பட்டால் கூட அதற்கு நிச்சயமாக ஒரு விலை உண்டு என்ற துணிச்சலுடனுமே இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தச் சீரழிவின் அடுத்த நிலை ஊழியர்கள் இதையே சிறிய அளவில் லஞ்சமாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மேல்நிலையில் இருப்பவர்களே இவர்களை ஊக்குவிப்பவர்களாகவும், ஆதரிப்பவர்களாகவும் அதே சமயத்தில் கையும் களவுமாகப் பிடித்துத் தண்டனை கொடுப்பவர்களாகவும் மண்ணுள்ளிபாம்பெனத் திரிந்து கொண்டிருக்கின்றனர். லஞ்சம் இவர்களால் தொழிற்பட்டு, சமூகமயமாக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் காவல் துறைக்கு ஆளெடுப்பதில் மிகப் பெரிய அளவில் லஞ்சம் புழங்குவதைப் பற்றிக் குறிப்பிடும் ஒரு நீதிபதி, இது இன்னும் பத்தாண்டுகளில் இந்தியாவில் பெரும் குழப்பங்களும் வன்முறையும் நிகழ்வதற்குக் காரணமாக அமையலாம் என்று தன் வருத்தத்தைப் பதிவு செய்கிறார். இது ஒன்றும் புதியதல்ல. இந்தியாவில் அனேகமாக எல்லாத் துறைகளிலுமே பணம் வாங்கிக் கொண்டு பதவிகளில் ஆட்களை நியமனம் செய்யும் வழக்கம் இருந்துதான் வருகிறது. அண்மைக்காலத்தில் அதன் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருவதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலே நீதிபதி அவர்கள் கூறிய சொற்களை நாம் சமூகத்தின் எல்லாத் துறைகளுக்கும் விரிவுபடுத்திப் பார்த்தோமானால் எள் முனையளவு கூட மனசாட்சியற்ற ஒரு கூட்டத்தால் நாம் மேய்க்கப் பட்டுக்கொண்டிருக்கிறோமென்பது விளங்கும்.
நாட்டின் நெறிமுறைகளை முன்னெடுத்துச் செல்கின்ற காவல், சட்டம் ஆகிய துறைகள் இன்று முற்றிலும் சீரழிந்து விட்டன. ஆதாரத்துறைகளான மருத்துவம், கல்வி ஆகியவை வேரின்றி நிற்கின்றன. லஞ்சம் வாங்கியே போடப்பட்ட இந்தத் துறை சார்ந்த பதவிகள் இன்று லஞ்சம் கோரி நிற்கின்றன. அடிப்படை ஒழுக்கம், மனித நேயம், தகுதிகள் என் ஏதுமற்ற கூட்டமொன்று மேலே உட்கார்ந்து கொண்டு இன்னும் இன்னும் தனக்கேற்றபடி ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் கிராமங்களில், அந்தந்த ஊரில் கற்பிக்கும் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோர் ஊரின் முக்கியப் பிரமுகர்களாக இருப்பர். அவர்களைக் கலந்துகொண்டே ஊரின் எல்லா விஷயங்களும் முடிவெடுக்கப்படும் காலமொன்று இருந்தது. ஆனால் இன்றைக்குக் காலம் மாறி விட்டது. ஆசிரியர்கள் மாணவர்களிடமிருந்தே விலகி இருக்கின்றனர். மருத்துவர்கள் புரியாத மருந்துகளும் பரிசோதனைகளும் எழுதித் தந்துவிட்டு அதன் மூலமான வருமானத்தில் அயல்நாடுகளுக்கு உல்லாசப் பயணம் செல்லக் கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். காவல் நிலையங்களே எல்லாக் குற்றங்களின் கூடாரமாகத் திகழ்கிறது. நீதிமன்ற வளாகங்களே குற்றவாளிகளை வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைக்குக் காரணமென்ன?
ஆசிரியப் பணியை ஒரு தொழிலாகக் கருதாமல் ஆர்வத்துடன் அறப் பணியாகக் கருதும் போக்கு இருந்த காலத்தில் ஆசிரியர்கள் மதிக்கப்பட்டனர். பாடம் கற்பிப்பதோடு அவர்கள் பணி நின்று விடாமல், மக்களோடு கலந்து புழங்கும் தன்மை அவர்களிடையே இருந்தது. பள்ளி நேரம் முடிந்த பிறகும் கூட மாணவனின் வீடு சென்று அவனுடைய எதிர்காலம் பற்றிப் பெற்றோருடன் விவாதிக்கும், வழிகாட்டும் தன்மையை நாம் அவர்களிடம் பார்க்கலாம். படித்து முடித்த மாணவர்கள் கூட அவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றிருக்கின்றனர். தங்கள் தங்கள் துறையில் வல்லவர்களாகவும், அறிவுத் தளத்தை விரிவுபடுத்தியபடியே அக்கால ஆசிரியர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.
இன்றைய நிலை என்னவென்று பார்த்தால், ஆசிரியர்கள் மக்கள் விரோதப் போக்கின் பாதையில் கண்மூடித்தனமான வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். மாணவர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றனர். எதற்கும் சிணுங்காத, கோபமற்றதோர் தலைமுறையை உருவாக்கியதில் இவர்களுக்கும் பெரும்பங்குண்டு. தொழிலாகப் பார்க்கும் பார்வையும் லாப நோக்கத்தோடு செயல்படும் தன்மையும் விலக்கத்தன்மையை ஏற்படுத்தி விட்டது. வகுப்பறையில் கற்பிக்காமல் மாலை நேரச் சிறப்பு வகுப்புகள் நடத்துவதும் வட்டித் தொழில் செய்வதும் இவர்களை அசுர வியாபாரிகளாகக் காட்டி நிற்கிறது.
தங்கள் துறை சார்ந்த அறிவையும் இழந்து, பணத்தை மட்டுமே கணக்கிட்டு எண்ணிக் கொண்டிருப்பதால் இவர்கள் மாணவர்களின் மரியாதையை இழந்து நிற்கின்றனர். இதைச் சற்றும் பொருட்படுத்தாத ஒரு வியாபாரக் கூட்டம் வேகமாக உருவாகிப் பெருகிக் கொண்டிருக்கிறது. லஞ்சம் கொடுத்து வந்த ஆசிரியர்கள் இன்று மாணவர்களின் ரத்தத்தைக் குடிக்கும் அட்டைப் பூச்சிகளாகி விட்டனர். அதனால்தான் நாளிதழ்களைத் திறந்தால், ஆசிரியர்களைப் பற்றிய மிக மோசமான செய்திகளை நாம் காண முடிகிறது. பள்ளியிலிருக்கும் பெற்றோர் என்று மிக உன்னதமாகக் குறிக்கப் பட்ட ஆசிரியர் இன்று பள்ளிக்குக் குடித்து விட்டு வருவதும், மாணவிகளைப் பாலியல் வன்புணர்வு செய்வதும், அருவருக்கத்தக்க மொழியைப் பயன்படுத்துவதும் என எந்தவித நெறிமுறையுமற்ற, மனசாட்சியற்ற ஒருவருமாக மாற்றம் பெற்று விட்டார் என்பது சமூகத்தின் மிக இழிந்த நிலையைச் சித்திரப் படுத்துவதாக உள்ளது.
இறைவனுக்குச் சமமாக வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் சமூகம் இன்றைக்குத் தகுதியான ஆளுமை பெற்றிருக்கிறதா என்ற கேள்வி எழும்புமானால் அதன் பதில் நாம் அனைவரும் அறிந்ததே. இம்மாற்றத்திற்குக் காரணம், ஈசலெனக் கிளம்பியிருக்கும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் அதன் வழி அரைகுறையாகப் பயிற்றுவிக்கப்படும் ஆசிரியப் பயிற்சி மாணவர்களும் பெருகியிருப்பதே. மிகுதியான மாணவர்கள் வெளிவருகையில் அவர்களுக்கான வேலை இல்லாதபோது, அதனைப் பெற எவ்வளவும் கொடுக்கத் தயாராக இருக்கின்றனர். ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கான அனுமதியும் இத்தகைய வழியில் பெறப்பட்டதே. லஞ்சம் கொடுத்துப் படித்து, லஞ்சம் கொடுத்து வேலை வாங்கும் இந்தக் கூட்டம் போட்ட முதலீட்டை எடுக்கும் முயற்சியிலேயும் சிந்தனையிலுமே திளைத்திருக்கின்றனர். எனவே அறிவை விரிவாக்குவதற்கான நேரமோ, ஆர்வமோ அவர்களிடம் இருப்பதில்லை. குறைந்தபட்ச ஒழுக்கம் கூட இல்லாத இந்த மனிதர்களால் ஆசிரியப் பணி தன் மாண்பினை இழந்து நிற்கிறது. இன்றைக்கும் எஞ்சியிருக்கும் நிஜமான நல்லாசிரியர்கள் இவர்களுக்கிடையில் சிக்கித் தவித்து எள்ளி நகையாடப்பட்டு நிற்கின்றனர். இத்தகையோரால் உருவாக்கப்படும் மற்ற எல்லாத் துறை மக்களும் பெரும்பான்மையாக சீரழிக்கப்பட்ட சிந்தனைகளுடனே உலா வருகின்றனர்.
இப்படி, சமுதாயத்தின் அடிப்படையான துறைகள் பலவற்றிற்கும் இக்கருத்தை விரிவுபடுத்திப் பார்த்தால் இன்றைய படு மோசமான நிலையின் காரணத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அதற்கான தீர்வு, நம் எல்லோரின் கையிலும் தான் உள்ளது. இனி விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கூட குற்றத்தின் எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருக்கும் நாளைய மன்னர்களை, வருங்காலத் தலைமுறையினரைக் காப்பாற்றி விடலாம்.
- தி.பரமேசுவரி
No comments:
Post a Comment