Tuesday, December 28, 2010

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்

காண்க : ம.பொ.சி வலைப்பூ

February 20th, 2010

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை கேணி கூட்டத்தில் தங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. தமிழ்த் தேசியம் தொடர்பாகவும் திராவிட அரசியல் தொடர்பாகவும் எனக்கு சில கேள்விகள் இருந்தன. அன்றைய சூழலில் கேட்க இயலவில்லை. இந்திய தேசியமும் தமிழ்த் தேசியமும் முரணானவை என்று நீங்கள் கருதுகிறீர்களா? மிகப் பொருத்தமான காலகட்டத்தில் எழுந்த தமிழ்த் தேசியம் குறித்த ஓர்மை, அதே சமத்தில் தோன்றிய திராவிட அரசியலால் சிதைந்து போனதா? வகுப்புவாதம் மற்றும் இனவெறுப்பை முன்னிறுத்தாமல் பண்டைய இலக்கியப் பரிச்சயங்களின் வழியாக வடித்த தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் தமிழரசுக் கழகம் என்ற கட்சியை வழிநடத்திப் பிறகு அந்நிலைப்பாட்டிலிருந்து விலகிப் போன ம.பொ.சிவஞானம் பற்றி உங்களது கருத்து என்ன?

அன்புள்ள
தி.பரமேசுவரி.

அன்புள்ள பரமேஸ்வரி அவர்களுக்கு,


ம.பொ.சிவஞானம் அவர்களைப்பற்றி என் புரிதல் அல்லது மதிப்பீட்டை நான் விரிவாகவே எழுத வேண்டும். திராவிட இயக்கம் உருவாக்கிய பிளவுப்போக்குள்ள தமிழ் தேசியத்தை எதிர்கொள்ள காங்கிரஸ் தரப்பில் இருந்து உருவான ஒருமைப்பாட்டு நோக்கமுள்ள தமிழ் தேசியத்தை அவர் முன்வைத்தார் என்று எண்ணுகிறேன். அது முக்கியமான ஒரு தரப்பு. ஆனால் காங்கிரஸ் அவரை கைவிட்டது. அதற்கு பெரும்பாலும் காமராஜ் அவர்களே காரணம். அந்தத் தரப்பின் பண்பாட்டு முக்கியத்துவத்தை உணர காமராஜ் அவர்களால் இயலவில்லை.


இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய அமைப்புக்குள் பல்வேறு மொழிவாரி உபதேசியங்கள் உள்ளன. அவை தனி நாடுகளாக தனித்தியங்க முடியாது. காரணம் இந்நாட்டின் விரிவான மக்கள் பரவல். விரிவான பண்பாட்டுப்பரவல். இந்நாடு ஒரு ஒற்றைப்பண்பாட்டு தேசியமாகவும் உள்ளது. இந்த மைய அமைப்புக்குள் ஒவ்வொரு கூறும் தன் தனித்தன்மையை தக்கவைத்துக்கொள்ளவும் வளர்க்கவும் வேணிய தேவை உள்ளது. அதற்கு பிளவுப்போக்கில்லாத, ஒருமைநோக்கு கொண்ட, ஆக்கபூர்வமான தேசிய உருவகம் தேவை. அதாவது தேசிய உருவகத்தை பாசிசமாக மாற்றும் பொக்குக்கு எதிரான நேர்நிலை தேசியம்


ஈ.எம்.எஸ் அவர்கள் கேரள தேசியம் குறித்து பேசும்போது அதைத்தான் பேசினார் என்பது என் எண்ணம். அதை ஈ.எம்.எஸ்ஸும் கேரள தேசியமும் என்ற கட்டுரையில் பேசியிருக்கிறேன். மபொசியின் அந்த தரப்பு வலுபெற்றிருந்தால் இன்றைய வெறுப்புத்தேசிய குரல்கள் இத்தனை எழுந்திருக்காது


ஒருமைப்பாட்டுக்கு, ஆக்கபூர்வமான தேசியத்திற்கு பண்பாட்டில் பயிற்சி தேவை. மொழியில் தேர்ச்சி தேவை. வெறுப்புக்கு, பாசிசத்துக்கு முச்சந்தியில் கூச்சலிடும் முரடர்களே போதும்


மபொசி தோற்கடிக்கப்பட்டது -நண்பர்களாலும் எதிரிகளாலும் அவரது தனிப்பட பலவீனங்களாலும்- ஒரு பெரிய இழப்பே.


ஜெ

28.12.10 
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். தாங்கள்  27.12.10 அன்று எழுதிய "ம.பொ.சி, காமராஜ், ராஜாஜி.." கட்டுரை படித்தேன்.

தமிழக வரலாற்றை இன்னும் எப்படியெல்லாம் திரித்து எழுத உத்தேசித்திருக்கிறார்களோ, இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறார்களோ என்றுதான் தோன்றியது. தமிழக வரலாற்றை (குறிப்பாக எல்லைப் போராட்டம்) யார் எப்படி எழுதினாலும் அதைச் சகித்துக் கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்கத் தமிழன் இத்தனைக் கால அடிமை வாழ்வில் பழக்கப்படுத்தப்பட்டுத் தானே இருக்கிறான். ஆனால் எல்லாத் தமிழர்களையும் நீங்கள் அப்படி நினைத்துவிட்டால் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே, அது உங்கள் தவறு. நான் முன்னர் எழுதிய ம.பொ.சி தொடர்பான கடிதத்திற்குத் தாங்கள் கொடுத்த பதிலை மேலே  கொடுத்திருக்கிறேன்.

"திராவிட இயக்கம் உருவாக்கிய பிளவுப்போக்குள்ள தமிழ் தேசியத்தை எதிர்கொள்ள காங்கிரஸ் தரப்பில் இருந்து உருவான ஒருமைப்பாட்டு நோக்கமுள்ள தமிழ் தேசியத்தை அவர் முன்வைத்தார் என்று எண்ணுகிறேன். அது முக்கியமான ஒரு தரப்பு. ஆனால் காங்கிரஸ் அவரை கைவிட்டது. அதற்கு பெரும்பாலும் காமராஜ் அவர்களே காரணம். அந்தத் தரப்பின் பண்பாட்டு முக்கியத்துவத்தை உணர காமராஜ் அவர்களால் இயலவில்லை." 

இப்படி எழுதிய நீங்களே தங்கள் மதிப்பீட்டை மாற்றிக்கொண்டது எவ்வாறோ? உங்கள் மொத்தக் கட்டுரையையும் படித்தால் சிரிப்புத்தான் வருகிறது.  கதை புனையும் ஆற்றலைத் தாங்கள் எப்படி யெல்லாம் பயன்படுத்துகிறீர்கள் என்று?

"தமிழரசுக்கழகம் காங்கிரஸால் உருவாக்கப்பட்டு அதன் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்டது."


"காங்கிரஸ் தன்னுடைய தேசியப்பார்வையை கைவிடாமல் தமிழ்ப்பெருமிதத்தை கையாள நினைத்தது. தமிழ்த்தேசியத்தை இந்திய தேசியத்தின் ஒரு பகுதியாக முன்வைக்க நினைத்தது. இதன் பொருட்டே ம.பொ.சியின் தமிழரசுக்கழகம் 1946ல் தொடங்கப்பட்டது."

"ஆகவே சுதந்திரத்தை ஒட்டி உருவாகிவந்த அரசியல் அதிகார ஆட்டத்தில் ஆந்திரர்களை வெல்லவேண்டிய தேவை காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கு இருந்தது. அவர்கள் தேசியவாதிகளாகையால் நேரடியாக இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான எதையும் பேச முடியாது. ஆகவே குரங்கின் கையில் குட்டியாக உருவாக்கப்பட்ட அமைப்புதான் ம.பொ.சியின் தமிழரசுக்கழகம்."


"ம.பொசி என்ற மனிதரும் அவரது இயக்கமும் தெலுங்கு ஆதிக்கத்துக்கு எதிராக சத்யமூர்த்தியாலும் பின்னர் ராஜாஜியாலும் உருவாக்கி முன்வைக்கப்பட்டவர்கள் என்பதே வரலாறு."

நீங்கள் துப்பறியும் சாம்புவா, அல்லது ஷெர்லக் ஹோம்ஸா என்று தெரியவில்லை. உங்கள் புதிய கண்டுபிடிப்புகள் மெய்சிலிர்க்கச் செய்கிறது.

எழுத்தாளர் ஜெயமோகனை வாசிக்கின்ற, அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்புத் தருகின்ற ஒரு வாசகர் கூட்டம் உங்கள் பின்னால் இருக்கும்போது உங்கள் சொற்களில் இன்னும் கவனமாக இருக்க வேண்டுமென்று கருதுகிறேன். நீங்கள் ஒட்டுமொத்தமாக எல்லைப் போராட்டத்தில் பங்குபெற்று அடியும் உதையும் வாங்கிச் சிறை சென்ற - உயிரிழந்த தியாகிகளையும், உங்கள் வார்த்தைகளை அப்படியே நம்புகின்ற வாசகர்களையும் அவமானப்படுத்துவதாகவே எண்ணுகின்றேன்.

திராவிட இயக்கங்கள் வரலாற்றைத் திரித்தும் மறைத்தும் செய்த மாயங்கள் போதாதென்று இப்போது நீங்கள் கிளம்பியிருக்கிறீர்கள் போலிருக்கிறது. மொழிவாரி மாநிலப் பிரிவினைக் கிளர்ச்சியின்போது ஆந்திர அரசியல் கட்சிகள் ஆந்திர மகா சபை என்கிற பொது அமைப்பின் கீழ் ஒன்று திரண்டபோதும் தமிழகத்தில் வழக்கமான மௌனமே நிலவியது. அப்போது பிரச்சனையை எதிர்கொண்டு, முன்னெடுத்துத் தன் கட்சியான தமிழரசுக்கழகத்தின் வாயிலாக எதிர் கொண்டவர் ம.பொ.சி. அன்றைய முதல்வராக இருந்த ராஜாஜி, சென்னை நகர மேயராக இருந்த செங்கல்வராயன் ஆகியோரும் தங்கள் பங்களிப்பினைச் செய்துள்ளனர். இவையெல்லாமே ம.பொ.சியின் எனது போராட்டம் என்ற அவருடைய வாழ்க்கை நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கெல்லைப் போரில் மங்கலங்கிழாரின் அழைப்பின் பேரில் சென்ற ம.பொ.சிக்கு நீங்கள் சொல்லும் ராஜாஜி எந்த உதவியும் செய்யவில்லை. அது மட்டுமல்லாமல் ம.பொ.சியும் அவரது தோழர்களும் ராஜாஜி அரசாலேயே இரு முறை சிறையிலடைக்கப்பட்டனர். தமிழரசுக்கழகத் தோழர்களான திருவாலங்காடு கோவிந்தசாமி, பழனி மாணிக்கம் என்ற இருவர் சிறையிலேயே உயிர் துறக்கின்றனர். ஆனால் அத்தனையும் முன் கூட்டியே  பேசித் திட்டமிட்ட நாடகம் என்கிறீர்கள் நீங்கள்.


தெற்கெல்லைப் போராட்டத்தில் அப்போதைய திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டத்தை முன்னெடுத்தபோது தமிழ்நாட்டிலிருந்து அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த ஒரே கட்சி தமிழரசுக் கழகம்தான். அதைக் குரங்குக்குட்டி என்று நீங்கள் என்ன சூத்திரத்தைக் கொண்டு அளவிட்டீர்களெனப் புரியவில்லை. இந்தப் போராட்டத்தில் அவருக்கு ஆதரவு தந்த ஒரே தலைவர் தோழர் ஜீவானந்தம்.

அப்போது அந்தப் பகுதியில் வாழ்ந்த கவிமணி, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி. கே. எஸ் சகோதரர்கள் போன்றோரும் இந்தப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பங்கு பெற்றுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பட்டம் தாணுப்பிள்ளை அரசினால் 11 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது வரலாறு.

எல்லைப் போராட்டங்களின் காரணமாகவே அவர் காங்கிரசிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியில் ம.பொ.சி. ஆல்டெர்மேனாகப் பதவி வகித்தபோதுதான் முதல் முறையாக மாநகராட்சியின் வரவு செலவுக் கணக்கினைத் தமிழில் தாக்கல் செய்தார். அதன் சின்னமாக தமிழர் அரசுகளின் சின்னமான வில், புலி, மீன் ஆகியவற்றைப் பொறிக்கச் செய்தார்.  இத்தனை வரலாற்று விரிவையும் தாங்கள் தங்கள் சொல்வன்மையினால் திரிக்கப் பார்க்கிறீர்கள்.

"பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே"

என்னும் வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது. மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களே, வரலாற்றை உங்களைப் போன்றவர்கள் எப்படி, எத்தனை முறை திரிக்க முயற்சித்தாலும் அது தன் உண்மையான வடிவைக் காட்டியே நிற்கும். தனிப்பட்ட உங்கள் காழ்ப்புணர்ச்சிகளையெல்லாம் இப்படிக் கட்டுரைகளில் கட்டுக்கதைகள் கட்டி உங்களை நம்பும் வாசகர்களையும் ஏமாற்றாதீர்கள்.

ம.பொ.சியின் பிழைபட்ட மதிப்பீடாக நான் கருதுவது, காந்திக்குப் பிறகான காங்கிரசை மொழிவழி தேசிய இனச்   சுய நிர்ணயத்தை அங்கீகரிக்குமென்று நம்பியது, தன் வழியில் முழுமையாகச் செயல்பட விடாமல் காலில் கட்டிய இரும்புக் குண்டாகக் காங்கிரஸ் பற்று/நம்பிக்கை அவரைப் பின்னிழுத்தது. இரண்டாவது, தமிழக வரலாற்றின் விழுமியங்களை அறியாத - தன் காலத்தில் அவர் முழுமையாக எதிர்த்து வந்த - தி.மு.க. வை 1967 தேர்தலில் ஆதரித்தது.

இறுதியாக ஒன்று, கட்டுரையில் ம.பொ.சி பற்றி நீங்கள் பயன்படுத்தியிருக்கும் சொற்கள் அவரை இழிவுபடுத்துவதாகவும் அவதூறு கற்பிக்கும் நோக்கத்துடனும் எழுதப்பட்டிருப்பதாக உள்ளது. உங்களுடைய எழுத்து ஆளுமைக்கு இது மரியாதை சேர்ப்பதாக இல்லை. இனியாவது அரைகுறையாக அறிந்துகொண்டு வரலாற்றை எழுதுவதைத் தவிர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

என்றும் தோழமையுடன்,

தி. பரமேசுவரி.
   
  

3 comments:

  1. சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பற்றி இன்றைய தலைமுறை அறிய வாய்ப்பில்லை. நான் ஜெயமோகனையும் சாருநிவேதிதாவையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன், இலக்கிய வியாபாரிகள்.
    ம.பொ.சி.யின் விடுதலைப் போரில் தமிழகம் படித்திருக்கிறேன்.சிறுவயதில் அவரது செங்கோல் பத்திரிகை படித்திருக்கிறேன். என் பெரியப்பா. அவரது தீவிரக வாசகர்.

    ReplyDelete
  2. நன்றி சிவகுமாரன். ம.பொ.சி. பற்றி மேலும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஜெமோ, சாரு இருவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இலக்கிய வியாபாரிகளே.

    ReplyDelete
  3. பரமேஸ்வரி அவர்களே - குறைப் பிரசவத்தில் பிறந்த வேக்காட்டு மனிதன் ஜெய மோகனுக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளீர்கள். தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரன் என்பது போல், பேனா பிடித்தவனெல்லாம் எழுத்தாளனாக தன்னை நினைத்துக் கொண்டு, மற்றவர்களை முட்டாளாக எண்ணிக்கொண்டும், தன்னை மட்டும் அறிவு ஜீவியாக -எல்லாம் தெரிந்தவனாக எண்ணிக்கொண்டு என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் பிதற்றும் பித்தன் இந்த ஜெயமோகன். ம பொ சி அவர்களின் பெயரைச் சொல்லக்கூட இந்த ஜெயமோகன் போன்ற முட்டாள்களுக்குத் தகுதியைல்லை.

    ம பொ சி
    - மதிப்பானவர்
    - பொன்னானவர்
    - சிறப்பானவர்.

    ReplyDelete