Friday, December 24, 2010

பன்மொழித் திட்டமும் திராவிடத் தந்திரங்களும்

'சிறுபான்மை மொழிச் சங்கங்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநாட்டுக் (டிச.11) கோரிக்கைகளைப் பரிவுடன் பரிசீலித்து, பள்ளிகளுக்கான சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டத்தில், உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற சிறுபான்மை மொழிகளையும் கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும் மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்படும். சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும். மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான மதிப்பெண்கள் இடம்பெறும் என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்' என்பது 16.12.2010இல் வெளி வந்த செய்தி.

இந்த அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் செறிவாக வசிக்கும் பகுதிகளில் உள்ள  அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், என்று யோசித்தாலே நெஞ்சில் கனலேறுகிறது. இத்திட்டத்தின் நடைமுறைச் சாத்தியம் என்ன? நடைமுறைப் படுத்தப்பட்டாலும் இதன் விளைவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நாம் நிச்சயமாக ஆராய வேண்டும். இது வரையிலும் இத்திட்டம் பற்றி இன்றைக்குத் தமிழறிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிடமிருந்து கூட ஒரு எதிர்ப்பும் வரவில்லை என்பது நாம் கவனிக்க வேண்டிய செய்தியாகும்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல எனக்குத் தெரிந்த வரையில் மாநில எல்லையோரப் பகுதிகள் எல்லாவற்றிலுமே சிறுபான்மை மொழியினரின் பாடங்கள் ஏற்கெனவே கற்பிக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை. உதாரணமாக, கன்னியாகுமரியில் உள்ள மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் மலையாள மொழி பயிலவும் கேரள எல்லையில் உள்ள தமிழர்கள் தமிழ் கற்கவும் வாய்ப்புள்ளது போன்று கர்நாடக, ஆந்திர எல்லையில் உள்ள மக்களுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. வட சென்னையில் கூடத் தெலுங்கு பேசும் மாணவர்கள் தெலுங்கு கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புள்ளதாகவே அறிகிறோம்.

நிலை இவ்வாறிருக்க, திடீரென்று திராவிடத் தலைவர் இத்திட்டத்தைத் தமிழ்நாடு முழுதும் கொண்டுவர வேண்டும் என்று துடிப்பதன் அடிப்படை நோக்கம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தேர்தல் நெருங்கி வருகிறது. சிறுபான்மையினரின் ஓட்டுகளை யார் பறிப்பது என்பதில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் போட்டி. இவர்களுடைய விளையாட்டுக் களம், சோதனைக் கூடம் தமிழகம். இது தான் இன்றைய தமிழகத்தின் நிலை.

சிறுபான்மையினருக்கான மொழித்திட்டம் முன்னர் இருந்தபடி இருப்பதே சரியா? என்பது கேள்விக்குறிதான். தமிழ்நாடு தவிர மற்ற தென்மாநிலங்களில் மும்மொழித்திட்டம் நடைமுறையிலுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  இந்தத் திடீர் அறிவிப்பின் விளைவுகளை, தமிழகத்தின் எதிர்காலம், அதன் பொருளாதாரம், மாணவர்களின் உழைப்பு, உளவியல் எனப் பல கோணத்தில் ஆராயலாம்.

தமிழகத்தில் இன்று தனியார் பள்ளிகள் தமிழர்களைச் சுரண்டுமளவுக்கு வளம் கொழிக்கச் செய்ததுடன், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் புற்றீசல் போல, ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கித் தமிழ் இன உணர்வை, மொழி உணர்வை மழுங்கச் செய்து விட்டார்கள். பெரும்பாலும் இப்பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்பதோடு தமிழை ஒரு மொழியாகக் கூடக் கற்பிக்காத அவமானமான சூழலில்தான் தமிழ்நாடு இருக்கிறது; தமிழை, தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கான பகடைக்காயாக மட்டுமே பயன்படுத்திக் கொண்ட திராவிடத் தந்திரங்களில் இதுவும் ஒன்று.

எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதைத் தோழர்கள் உணரவேண்டும். மற்றெதற்கு என்றால், ஆங்கிலமே பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக, தமிழன் வீட்டுமொழியாக ஆகவேண்டும் என்பதற்காகவேயாகும்

ஆகையால் தமிழர் தோழர்களே! உங்கள் வீட்டில் மனைவியுடன், குழந்தைகளுடன், வேலைக்காரிகளுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்; பேசப் பழகுங்கள்; பேச முயலுங்கள். தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள்.
  
 [ விடுதலை - அறிக்கை 27.1.1969]

(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் - 2, வே.ஆனைமுத்து, சிந்தனையாளர் கழகம், 1974)

இதைத்தான் பெரியார் வழி வந்த திராவிட இயக்கங்கள் கடந்த நாற்பதாண்டு ஆட்சிக் காலத்தில் சாதித்துக் காட்டியிருக்கின்றன.

தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் நம் தாய்மொழியாம் தமிழ்மொழி படும் துன்பம் பிறிதொரு இடத்தில் விரித்துப் பேசவேண்டிய ஒன்று. பாட வேளைகளைப் பொருத்த வரையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு வாரத்திற்கு ஏழு பாட வேளைகளும் சமூக அறிவியலுக்கு மட்டும் ஐந்து பாட வேளையும் ஓவியம், விளையாட்டு, தையல், அறிவியல் தமிழ், விழுமியக் கல்வி, இசை ஆகியவற்றிற்கு ஏழு பாட வேளைகளுமாக மாணவர்களின் பாடவேளைத் திட்டம் பிரிக்கப் பட்டுள்ளது; ஒரு நாளுக்கு நாற்பது நிமிடங்கள், எட்டு பாட வேளை.

முதல்வரின் இந்த அறிவிப்பு சொல்வது என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினர் இனி ஒரு பாடமாகக் கூடத் தமிழைப் படிக்க வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, தமிழகத்தின் வளங்களில் வாழ்ந்து கொண்டு அவரவர் தாய்மொழியில் படிக்கலாம் என்பதே. அல்லது இதனை மூன்றாம் மொழியாகப் படிக்கலாம் என்று பொருள் கொண்டாலும் ஏற்கெனவே பாடச்சுமை அதிகம் உள்ள மாணவர்களுக்கு இது மற்றொரு சுமையாகவே முடியும். மட்டுமின்றி பாகுபாடின்றிப் பழகும் மாணவப் பருவத்திலேயே அவர்களுக்குள் மொழி, இனப் பிரிவினைகளைத் தூண்டி, பிரிவினைச் சக்திகள் குளிர் காய்வதற்கும் இத்திட்டம் மறைமுகமாக வழியேற்படுத்திக் கொடுக்கிறது. இன்று கல்லூரிகளில் அரசியல் கட்சிகள் நுழைந்து கொண்டு படுத்தும் பாட்டினை நாம் சற்றே நினைவு கூர வேண்டும்.

முன்னதின்படி பார்த்தால் இப்போதே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலானோருக்குத் தமிழ் தெரியவில்லை என்பதும் தமிழ் தெரியாமலே தமிழ்நாட்டில் உயர் கல்வி வரை படிக்கவும் உயர் பதவிகளை வகிக்கவும் அரசுப் பணிகளில் பணியாற்றவும் முடியும் என்பதும் உண்மை. இனி இந்தத் திட்டத்திற்குப் பிறகு இந்த எண்ணிக்கை பெருமளவில் கூடும். இவர்கள் வாழ்விடம் தமிழகம் என்பது தவிர இவர்களுக்கும் இந்த மண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்பதே நிதர்சனம்.

மூன்றாம் மொழியாகப் படிக்கச் செய்யப் போகிறார்களெனில் அதற்கான பாடத்திட்டம் பற்றியும் புகுத்தும் வழிமுறை பற்றியும் எந்தக் கல்வியாளரிடமும் ஆலோசிக்காமல் தான்தோன்றித்தனமாக இவ்வறிவிப்பு வெளியாகியிருப்பதாகவே கருத வாய்ப்புள்ளது. மாணவர்களின் பாடவேளை, பாடச் சுமை, இதன் உளவியல் ஆகியவை கருத்தில் கொள்ளப்படவில்லை.

இனி இதற்காக இந்த மொழியாசிரியர்கள், இந்த மொழிவழி கற்பிக்கக் கூடிய பாட ஆசிரியர்கள் அரசால் பணியமர்த்தப்படுவார்களெனில்  வேற்று மொழியாளர்களின் வேட்டைக்காடாய் ஏற்கெனவே மாற்றப்பட்டு விட்ட தமிழகத்தில் தமிழர்கள் அன்னியப்பட்டுப் போகக் கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை உறுதியாகவே கூறலாம். தமிழ் படித்தவர்களுக்குத் தமிழ்நாட்டில் வேலை இல்லை. காலியாக உள்ள  தமிழாசிரியர் பணியிடங்களும் இன்னும் நிரப்பப்படாமல், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழாசிரியர் இன்றியோ, தகுதி குறைந்த ஆசிரியரைக் கொண்டோ தமிழ் பயிலும் இழிநிலை தான் உள்ளது.


அதிலும் குறிப்பாக, மேல்நிலை வகுப்புகளை எடுத்துக் கொண்டால் தமிழாசிரியர்களின் பணிச்சுமை மிக அதிகம். எத்தனை மாணவர்கள் எண்ணிக்கையில் இருந்தாலும் ஒரே மொழி ஆசிரியர்தான். பத்தாவது வரை ஏழு பாடவேளை கற்பிக்கப்பட்ட தமிழ், இதற்குப் பிறகு நான்கு பாடவேளையாகக் குறைக்கப்படுகிறது. இந்த நான்கு பாட வேளையில்தான் மொழியாசிரியர் செய்யுள், உரைநடை, இலக்கணம், துணைப்பாடம் ஆகியவற்றைக் கற்பிக்க வேண்டும். ஏனைய நான்கு பாடங்களுக்கு மட்டும் ஏழு பாட வேளை. இதென்ன அநியாயக் கணக்கு என்று பொருமிக் கொண்டிருக்கும் வேளையில்தான் இப்படி ஒரு அறிவிப்பு. தமிழ்நாட்டில் தமிழுக்கும் நான்கு பாட வேளை, பிற மொழிகளுக்கும் அதே நான்கு பாடவேளை என்பது எப்ப்டி நியாயமாக இருக்க முடியும்? மானமுள்ள தமிழர்கள் மட்டுமாவது சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழாசிரியர்களைப் பணியமர்த்தாமல் பொருளாதாரக் கணக்கு பார்க்கும் வக்கில்லாத அரசாங்கம்தான் பிற மொழியாசிரியர்களைப் பணியமர்த்தத் திட்டமிடுகிறது.

அதிலும் இந்தி, சமஸ்கிருதத்தைக் கவனமாக ஒதுக்கிப் பிற மொழிகளுக்கு இங்கு இடத்தை வலுவாக அமைத்துக் கொடுக்கும் முயற்சி இது. இந்த மொழிகளை மட்டும் ஏன் விலக்க வேண்டும்? பிற மொழிகளை உள்ளே நுழைக்க வேண்டும் என்று திட்டமிட்ட பிறகு, நம் மாநிலத்தில் கணிசமான அளவில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டு  வாழும் மக்களையும் மகிழ்ச்சிப்படுத்த இந்தியையும் கற்பிக்கலாம். இஸ்லாமியர்களின் புனித மொழி என்பது தவிரப் பேச்சு மொழியாக அல்லாத அரபி கற்பிக்கப்படுமெனும் போது இந்துத்துவா சக்திகள் திரண்டெழுந்து சமஸ்கிருத்தையும் அரசு கற்பிக்கக் கோருமே. ஆவன செய்யுமா திராவிட அரசு? நியாயம் என்பது எல்லோருக்கும் ஒன்று தானே.

தமிழ்நாட்டில் ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் தமிழர்களை விடவும் பிற மொழியாளர்கள் அதிகம் இருப்பார்களோ என்று ஐயுறும் நிலையில் அரசின் இந்த மொழித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பிறமொழியாளர் எண்ணிக்கையில் பெருகி, தமிழ்நாட்டில் தமிழர் அந்நியப்படும் சூழல் உருவாகும். வளரும் தமிழ்த் தலைமுறையும் மொழியுணர்வோ, இனவுணர்வோ இன்றி, தன் இன வரலாறு அறியாத வெற்றுக் கூட்டமாக மாறி வரும் நிலையில் திராவிட நாடு உருவாக்க வேண்டுமென்று பேச்சளவில் மட்டுமே, அதுவும் தமிழகத்தில் மட்டுமே செயல்பட்டு மூக்குடைபட்ட திராவிட இயக்கம் இன்று தமிழகத்தை மட்டுமேனும் திராவிட நாடாக்கச் செய்யும் திராவிடத் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றோ என்ற ஐயமும் தவிர்க்க முடியாமல் மேலெழுகிறது. அல்லது தமிழ்நாடே சில, பல பகுதிகளாகச் சிதறுண்டு கர்நாடக, ஆந்திர, கேரள மாநிலங்களோடு ஒன்றிப் போய் 'நாளை தமிழ்நாடு என்ற நிலப்பகுதி ஒன்று ஒரு காலத்தில் இருந்தது' என்ற வரலாறும் இயற்றப் படலாம். நீள்துயிலாய் உறங்கும் தமிழர் கூட்டமே, உன் உடையைக் கழற்றும் முயற்சி நடக்கிறது.இப்போதேனும் துயில் கலைந்து  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய உன் உடைவாளை உறையில் இருந்து கழற்றுவாய் என்று எதிர்பார்க்கலாமா?        

No comments:

Post a Comment