அம்பேத்கர் படம் தமிழில் வெளியாகிறது என்று கேள்விப்பட்டவுடனே பார்க்க வேண்டுமென்று மிக மகிழ்ச்சியாக மனத்துள் குறித்து வைத்துக் கொண்டேன். 1997 இல் தொடங்கிய திரைப்பட வேலைகள் 1998 லேயே முடிந்து விட்டது. ஜாபர் பட்டேல் என்ற மராத்தி இயக்குநர் இயக்கியுள்ளார். பலவிதமான இடையூறுகளைத் தாண்டி இப்படம் இப்போதுதான் தமிழில் வெளியாகிறது என்பது கவனிக்க வேண்டிய செய்தி. தமிழ் தவிர மற்ற மொழிகளில் இப்படம் எப்போதோ வெளி வந்து விட்டது. தமிழ் நாட்டின் வழக்கமான திராவிடத் தந்திரங்கள், பார்ப்பனீயக் குறுக்கீடுகள் இவற்றைத் தாண்டிப் படம் ஒரு வழியாக இந்த மாதம் 3ஆம் தேதி தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட இடங்களில் வெளியிடப்பட்டது. அன்று நான் வெளியூரில் இருந்தேன். எப்படியும் ஒரு வாரமாவது படம் ஓடுமென்கிற அதீத நம்பிக்கை வேறு.
பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் 6ஆம் தேதி மாலை காஞ்சிபுரத்தில் உள்ள நாராயணமூர்த்தி திரையரங்கிற்குச் சென்ற போது 'நான்கு வேளைக் காட்சி என்பது, கூட்டம் இல்லாத காரணத்தால் ஒரு வேளையாக்கப்பட்டு விட்டது, காலைக் காட்சி மட்டும்தான்' என்று சொன்னார்கள். காலைக்காட்சி எப்படிப் போக முடியும்? எல்லா விடுமுறைகளையும் எடுத்தாகி விட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டே வீடு வந்து சேர்ந்தபோது, மழை காரணமாக 7ஆம் தேதியும் அரசு விடுமுறை என்ற அந்த நல்ல செய்தியைத் தொலைக்காட்சி சொன்னது. மனத்துள் என் அதிர்ஷ்டத்தை எண்ணி மகிழ்ச்சியடைந்தபடி, அடுத்த நாள் மறுபடியும் நான் வசிக்கும் ஊரிலிருந்து 30 கி.மீ தள்ளியுள்ள காஞ்சிபுரத்திற்குக் கஜினி முகமது படையெடுத்தது போல் காலை எட்டுமணிக்கே ஒரு நண்பரோடு கிளம்பிப் பத்து மணிக்குத் திரையரங்கிற்கு சென்றால், அம்பேத்கர் படத்தின் தட்டியை இரு திரையரங்கு ஊழியர்கள் தரையில் விரித்து மடித்துக் கொண்டிருந்தனர். என்ன என்று அதிர்ச்சியோடு கேட்டால், 'பத்து பேருக்காக எப்படிப் படம் ஓட்ட முடியும்?' என்று நம்மையே திருப்பிக் கேட்டு விட்டு, சிரித்துக் கொண்டே சென்று விட்டார்கள்.எத்தனை இலக்கிய, சமூக, அரசியல் அமைப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன, அவையெல்லாம் இப்படிப்பட்ட ஒரு மகத்தான தலைவனின் வரலாற்றுப் படத்துக்கு ஆதரவு அளித்திருக்கலாமே, தலித் தலைவராக அவரைக் குறுக்கிப் பார்க்காவிட்டாலும் தலித் அமைப்புகளாவது படம் திரையிடப்படுவதில் அக்கறை காட்டியிருக்கலாமே என்று யோசித்தேன். அரசு தன் சின்னப்புத்தியை எல்லாம் ஒதுக்கி விட்டு, அதிகாரக் குரலைச் சுருட்டிக் கொண்டு இந்தப் படத்திற்கு ஆதரவளித்திருக்க வேண்டுமென்று நினைத்தேன். 10 லட்சம் பணம் மட்டும் கொடுத்தால் போதுமா? மூன்று நாளில் தியேட்டரை விட்டு எடுக்கப்பட்ட படத்துக்கு ரூபாயைக் கொடுத்து எதைச் சரிக்கட்ட நினைக்கிறது இந்த அரசு? வானளாவிய அதிகாரத்தைக் கொண்டிருக்கும் அரசு இயந்திரம் நினைத்தால், மாணவர்களுக்கெல்லாம் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ இப்படத்தைத் திரையிட முடியும். ஆனால் யாரும் எதுவும் செய்யாமல் கை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
அம்பேத்கர் நம் நாட்டின் அரசியல் சாசன வரைவுக்குழுவின் தலைவர். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர். பல்வேறு துறைகளில் ஆய்வு செய்து பல முனைவர் பட்டங்களைப் பெற்ற சீரிய சிந்தனையாளர். ஒடுக்கப்பட்ட சமூகத்தில், பொருளாதார நிலையில் பின் தங்கிய இடத்தில் பிறந்தாலும் முயற்சி இருந்தால் முன்னேற முடியும் என்று உலகுக்கு உணர்த்தியவர். அவரது வாழ்க்கை வரலாற்றை, ஒரு சமூக முன்னகர்வின் வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிய வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தும், அது தங்களுக்கு எதிர்மறையான விளைவுகளைத் தரும் என்பதற்காக இன்றைய தலைவர்கள் மூடி மறைக்கப் பார்ப்பதும் அதற்கு அம்பேத்கர் பேரைச் சொல்லி அரசியல் செய்பவர்கள் கூடக் கூட்டாக இருப்பதும் மிக இழிவானது. தமிழகத்தில் சிறுத்தையின் உறுமல் பூனையின் 'மியாவ்' ஆக மாறிப் பல காலம் ஆகி விட்டது.
படம் திரையரங்கை விட்டு எடுக்கப்பட்ட சோகத்தையும், பார்க்க முடியாத வருத்தத்தையும் மனத்தில் சுமந்தபடி திரையரங்கை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தேன். வாசலில் ஒரு தலித் அமைப்பின் குட்டித் தலைவர் உயரமாக நின்று சிரித்தபடி அம்பேத்கர் படம் திரையிடப்பட்டதற்கான தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். மற்றொரு பக்கம், வெற்றிகரமான அரங்கம் நிரம்பிய 20ஆவது நாளுக்கான தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி, நகரம் பட சுவரொட்டியில் தமிழ் மக்களுக்கு நன்றி பாராட்டிக் கொண்டிருந்தார் சுந்தர்.சி. வாழ்க தமிழர், வாழ்க தமிழ்நாடு, நாமதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்.
உங்கள் ஆதங்கம் புரிகிறது.ஆனால் இது தான் நம் தமிழ் மக்கள்.மாற்றம் இல்லாமலா போய்விடும்?!
ReplyDeleteமிக்க வருத்தப் படவேண்டிய மடல் கண்டேன். ஒரு எந்திரன் படத்திற்கு தேரிழுத்த தமிழனுக்கு அம்பேத்கர் எப்படி இப்படி சிறுத்து போய்விட்டார் தெரியவில்லை.
ReplyDeleteஉங்கள் கவலை நீக்கும் முகமாக இங்கு குவைத்தில் குறுந்தட்டு வந்ததும் இலவசமாக எண்ணற்றோருக்கு குறைந்தளவு ஒரு பத்திருபது பேருக்காவது இலவச குறுந்தட்டு வழங்கி பார்க்க வலியுறுத்துகிறேன்..
மனிதர்கள் எபப்டியோ இருந்து போகட்டும், நாம் நாமாகவே இருப்போம்.
நன்றி. வணக்கம்.
வித்யாசாகர்
உங்கள் ஆதங்கம் சரி!
ReplyDelete// அரசு தன் சின்னப்புத்தியை எல்லாம் ஒதுக்கி விட்டு, அதிகாரக் குரலைச் சுருட்டிக் கொண்டு இந்தப் படத்திற்கு ஆதரவளித்திருக்க வேண்டுமென்று நினைத்தேன். 10 லட்சம் பணம் மட்டும் கொடுத்தால் போதுமா? மூன்று நாளில் தியேட்டரை விட்டு எடுக்கப்பட்ட படத்துக்கு ரூபாயைக் கொடுத்து எதைச் சரிக்கட்ட நினைக்கிறது இந்த அரசு? வானளாவிய அதிகாரத்தைக் கொண்டிருக்கும் அரசு இயந்திரம் நினைத்தால், மாணவர்களுக்கெல்லாம் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ இப்படத்தைத் திரையிட முடியும். ஆனால் யாரும் எதுவும் செய்யாமல் கை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.//
கொஞ்சம் அவசரப்படுகிறீர்கள்... வணிக ரீதியாக எல்லா இடங்களிலும் திரையிடப்பட்ட பின்னர், மானவர்களுக்கென்று சலுகைக் கட்டணத்தில் திரையிடுவது இரண்டாம் கட்டத்தில் தான் நடக்கும். ஏற்கெனவே பெரியார் திரைப்படத்திற்கும் இப்படித் தான் செய்யப்பட்டது. காந்தி படத்திற்கும் அவ்வாறே நடைபெற்றதாக அறிகிறேன். முதல் கட்டமாக வணிகத் திரையிடலோடு இது சேராது.
அருள்கூர்ந்து உங்கள் திராவிட வெறுப்பைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு நடப்பில் இதற்கு ஆவன செய்யவும் பரப்பவும் உதவுங்கள்!