Tuesday, February 22, 2011

கலைமாமணி எனும் விலைமாமணி!

கலைமாமணி விருது ஆண்டுதோறும் தமிழக அரசால் கலை, பண்பாடு ஆகியவற்றைப் பேண, வளர்த்தெடுக்க உதவும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதல்வரால் தங்கப் பதக்கமும் சான்றிதழும் கொண்ட இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது 1959இலிருந்து வழங்கப்பட்டாலும் தொடங்கிய ஆண்டுகளில் சில தேர்வுமுறைகள், விதிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தொடக்க காலத்தில் விருது பெற்றவர்களோடு ஒப்பிடும்போது இந்தத் தரம் நம் கண்களுக்கு வெள்ளிடைமலையென விளங்கும்.
 
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடிகை குஷ்பூவுக்கும் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கும் ஒருங்கே இந்த விருது வழங்கப்பட்டபோது, "கலைத் துறையில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்த குஷ்பூ போன்றவர்களுடன் என்னைப் போன்ற சாதாரணமான நபர்களுக்கு எல்லாம் விருது வழங்கினால் அவர்கள் வருத்தப்படுவார்கள். அவர்கள் மனம் புண்படும். ஆதலால் அந்த விருது எனக்கு வேண்டாம்" என்று செம்மாந்து மறுத்தார் இந்திரா பார்த்தசாரதி.
 
தான் ஏற்கெனவே பெற்ற கலைமாமணி விருதை, ஈழத்தைக் கண்டிக்காத, இரட்டை வேடம் போடுகின்ற தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து, அந்த விருது தன்னிடம் இருப்பது முள்ளாய் இருப்பதாக அறிவித்துத் திருப்பியளித்தவர் கவிஞர் இன்குலாப்.

இந்த விருதினைப் பெற்றவர்கள் பட்டியலைக் கண்ணுற்றால் கும்பி கொதிக்கிறது. தமிழனுக்கு மானமென்று ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியும் நெஞ்சிலே கனலுகிறது. 2006 இல் நடிகர் கஞ்சாகருப்பு, சிலம்பரசன், நடிகைகள் திரிஷா, நவ்யா நாயர் ஆகியோருக்கும் 2007 இல் சின்னத் திரை நடிகைகள் தேவிப்பிரியா, அனு ஹாசன், நடிகர் பரத், வையாபுரி, நடிகைகள் நயன்தாரா, அசின் நடனத்துக்குச் செய்த தொண்டுக்காக ஐஸ்வர்யா தனுஷ், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷிணி போன்றோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இப்படியே இவர்களது கலைத்தொண்டு இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 2008, 2009, 2010 ஆன்டுகளுக்கான விருதுகளிலும் எதிரொலித்திருப்பதைக் கண்டுப் பச்சைத் தமிழன் ஆனந்தக் கண்ணீர் வடித்துத் தமிழக அரசுக்கு நன்றி பாராட்டுகிறான். இலவச அரிசி, வேட்டி சேலை, வீடு ஆகியவற்றை விடவும் அரசின் இந்த, இந்தக் கலைத் தாகமே அவனைப் பரவசப்படுத்துகிறது என்றால் அதில் மிகையில்லை.

நடிகர் ஆர்யா, சின்னி ஜெயந்த், கருணாஸ் நடிகைகள் தமன்னா, அனுஷ்கா, மாளவிகா, ஒரு காலத்தில் அறிவுத் தீக்கொளுத்திய பட்டிமன்றத்துக்கு வேட்டு வைத்த பலரில் முக்கியமானவரான பட்டிமன்றப்புகழ் திண்டுக்கல் ஐ. லியோனி இவர்களோடு நாம் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடனும் சா.கந்தசாமியும் கலைமாமணி விருது வாங்கியதைத் தவப்பயன் என்று கூற முடியுமா?

ஊடக அரசியலையும் இங்கே சற்றுச் சொல்லியாக வேண்டும். தொலைக்காட்சிகள் செய்யும் சிறுமை போதாதென்று இதழ்களும் கூட விருது வழங்கப்பட்ட இசை வல்லுநர்களை, நடன மேதைகளை,  படைப்பாளர்களை, நாட்டுப்புறக் கலைஞர்களை ஒதுக்கி விட்டு வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கே முதன்மை  கொடுத்துச் செய்திகளை வெளியிட்டன. தமிழக அரசு விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிட்டவுடனே அவர்களுடைய வண்ணப்படங்களைப் பதித்து, முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டதோடு நின்று விடாமல் வழங்கப்பட்ட அன்றும் செய்திகளில் நடிகர், நடிகைகளையே மேலும் வெளிச்சமிட்டுக் காட்டி  வண்ணப் புகைப்படங்களை வெளியிட்டு, குறிப்பாக நடிகைகள் நின்று கொண்டிருக்கும் முழு வடிவப் படங்களை வெளியிட்டுச் செய்திகளை முந்தித் தந்தன நாளிதழ்கள். பின்பற்றின பிற இதழ்களும். பிற கலைஞர்களைக் கவனித்துச் செய்தியாக்கியது மிகச் சில இதழ்களே. கேட்டால் அப்போதுதான் விற்பனை பிச்சிக்கும் என்பார்கள். தமிழ்நாட்டவரை மிகச் சரியாகக் கணித்திருப்பவர்கள் அவர்கள் தானே!

அதிலும் ஆர்யாவுக்கு விருது வழங்கியிருப்பது தனிச்சிறப்பும் சரித்திரத் தன்மையும் வாய்ந்ததாகும். மலையாள நாட்டைச் சேர்ந்தவராய் இருந்தாலும் தமிழ்நாட்டில் காலூன்றிக்கொண்டு நாம் போடும் காசில் வயிறு வளர்த்துக் கொண்டு அந்த நாட்டில் போய் நம் தமிழ் நடிகர்களையும் தமிழ்த் திரையையும் கொச்சைப்படுத்திப் பேட்டி தந்த ஆர்யாவுக்கு விருது கொடுத்தது சாலத் தகுந்தது. பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டியது. நாமக்கல்லாரே, தமிழனுக்குத் தனிக்குணமென்று ஒன்று உண்டு என்று சொன்ன நீர் தீர்க்கதரிசி தானைய்யா!

இதில் நடிகை குஷ்பூவுக்குத் தனி ஆதங்கம்; ஆவேசம். பின் என்ன? தேர்தல் நெருங்குகிறதே. மேலவையும் இல்லை என்கிறார்கள். வேறு எதற்காவது இப்போதே துண்டு போட்டு வைத்தால்தானே! அப்படி இவர்கள் வருந்தி அழைத்து விரு(ந்)து தந்தவர்கள் பெற்றுக் கொண்டவுடன் கம்பி நீட்டி விட்டார்கள். இதற்குக் குஷ்பூ சாமியாடி என்ன பயன்?

 படைப்பாளர்கள் விருதினை ஏற்றுக்கொண்டது சரி என்று வாதிடுவோருக்கு ஒரு கேள்வி. 2007லேயே கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷிணி இந்த விருதை இலக்கியம் சார்ந்து பெற்று விட்டார். அதே தகுதியில் இன்று நம் எழுத்தாளர்களும் இந்த விருதினைப் பெறுகிறார்கள் என்பது எந்த வகையில் ஏற்றதாகவோ, அல்லது நியாயமானதாகவோ இருக்க முடியும்?

அட, நம்ம நடிகர் விவேக் பத்மஸ்ரீ விருதுக்கே தகுதி அடைந்து விட்டார். ஆனால் நம் இலக்கியவாதிகளின் நிலையைப் பார்த்தீர்களா? இந்த ஆண்டிலேயே கலைமாமணியையும் சாகித்திய அகாதெமியையும் ஒன்றாகப் பெறுகிறார் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் என்பது பெரிய நகைமுரண். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி போல நாஞ்சில்நாடனும் சா.கந்தசாமியும் இந்த விருதைப் புறக்கணித்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற வருத்தத்துடன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நம் பெருமைமிகு படைப்பாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் வலைப்பூவில் முத்து என்னும் வாசகர் இட்ட பின்னூட்டத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
  
"எழுத்தாளன் எதிர்பார்ப்பது அங்கீகாரத்தை மட்டுமே என்னும் நாஞ்சிலாரின் மேற்கோள் சரிதான். ஆனால் யாரிடமிருந்து? எந்த வரிசையில் நின்று? என்ற கேள்வி வருகிறதே?

சிங்கம் நாய்தரக் கொள்ளுமோ நல்லரசாட்சியை??

நாஞ்சில் புறக்கணியுங்கள் - அதுவும் இடக்கையால் என்பதே என் பணிவான விண்ணப்பம்"

நாஞ்சில்நாடனுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தினரால் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் எழுத்தாளர் கண்மணி குணசேகரன், விருது பெறும் படைப்பாளர்களை நம் அரசு நடத்தும் முறை பற்றி வருத்தப்பட்டும் நடத்த வேண்டிய முறை பற்றி அங்கதத்தோடும் சொன்னதையும் இங்கு குறிப்பிடாமல் விட முடியவில்லை.

"இந்த மாதிரி சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளருங்க பேருந்துகள்ல, ட்ரெயின்ல இலவசமாகப் பயணம் செய்யறதுக்கு அரசு ஏற்பாடு செய்யக் கூடாதா?"

"எவன் எவனுக்கோ வூடு கட்டிக் குடுக்கிறாகளே... இம்மாம் பாடுபடுற எழுத்தாளனுகளுக்கு அரசாங்கம் வூடு கட்டிக் கொடுக்கக் கூடாதா? "  
(நண்பர்களே, இங்கு மீண்டும் தவிர்க்க முடியாமல் எழுத்தாளர் பிரபஞ்சன் அரசு வழங்கிய ஒரு குடியிருப்பின் மூன்றாவது மாடியில் ஒழுகும் கூரைக்குக் கீழே வாழ்ந்து கொண்டிருப்பதைச் சொல்லாமல் விட முடியவில்லை.)

"அப்புறமாட்டு.. சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாஞ்சில்நாடன் சட்டமன்றக் கூட்டத் தொடரில் உரையாற்றுவார் அப்படீன்னு அறிவிக்கக் கூடாதா?"

"செத்தப்புறம் படைப்புகளை அரசுடைமையாக்கி அவங்க வாரிசுகளுக்குப் பணம் கொடுக்கிறாங்களே.. எழுத்தாளர்கள் உசிரோட இருக்குறப்பவே அவங்க படைப்பை அரசுடைமையாக்கி 50 இலட்ச ரூபாய் அப்டீன்னு குடுக்கக் கூடாதா?"

கண்மணியால் கேட்கப்பட்ட கேள்விகள், கேள்விகளாகவே தமிழகத்தைச் சுற்றி வருகின்றது. இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் நாளில் தமிழனுக்கும் கதிமோட்சம் கிடைக்குமென்று நம்பலாம். கோலோச்சுபர்களின் தடிகளைத் தாங்கிப் பிடிக்கப் போட்டியிடும் பல இலக்கியவியாதிகள் இருக்கும் வரையிலும் அது சாத்தியப்படாது என்றுதான் தோன்றுகிறது.

- தி. பரமேசுவரி.

5 comments:

  1. விருதுகளுக்கே பெருமை கிடைக்கிறது - சிலருக்கு விருது வழங்கும் போது. அதே விருது, தகுதியற்றவர்களுக்கு தரப்படும் போது சிறுமைப்படுகிறது.

    ReplyDelete
  2. ..இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் நாளில் தமிழனுக்கும் கதிமோட்சம் கிடைக்குமென்று நம்பலாம்...


    நிச்சயம்...

    ReplyDelete
  3. உங்களது எழுத்தும் கோபமும் நியாயமானதே.. ஆனாலும் உங்களைப்போலத்தான் சிறுமைகளை எதிர்த்து கடுமையாக கட்டுரைகளை எழுதி தள்ளினார்.. நாஞ்சில் நாடன் அவர்கள்.. கடைசியில் முடிவுரையை கலைமாமாணி விருதை பெற்றுக்கொண்டு வாசகனான எனது எண்ணத்தில் மண்ணை அள்ளிப்போட்டார். எனது பயமெல்லாம் எழுத்தாளர்களின்(கவிஞர்களும் தான்) எழுத்துக்கு பெரும் மரியாதை கொடுத்து பெரும் சித்திரங்களை கொண்டிருந்தால் கடைசியில் அவர்கள் வாசகனை முட்டாளக்கிவிடுகிறார்கள். ஜெமோ. அருந்ததி ராயை குருவிமண்டை என்று எழுதுகிறார். உடல் ரீதியாக ஒரு பெண்ணை (ஆணாக கூட இருக்கட்டும்) மலினப்படுத்துபவன் எப்படி எழுத்தாளனாக இருக்கமுடியும்...? எனக்கு எழுத்தாளர்கள் மேல் வைத்த எல்லா நம்பிக்கைகளும் வற்றிவிட்டது. இலக்கியம் என்பது வெறும் தொழிட்நுட்பமோ.. எனும் எண்ணத்திற்கு வந்துவிட்டேன். பார்க்கலாம் சிறுமைக்கு எதிரான உங்களது கோபம் .....?

    ReplyDelete
  4. //விருதுகளுக்கே பெருமை கிடைக்கிறது - சிலருக்கு விருது வழங்கும் போது. அதே விருது, தகுதியற்றவர்களுக்கு தரப்படும் போது சிறுமைப்படுகிறது. //

    100% Correct.

    ReplyDelete
  5. //ஜெமோ. அருந்ததி ராயை குருவிமண்டை என்று எழுதுகிறார். உடல் ரீதியாக ஒரு பெண்ணை (ஆணாக கூட இருக்கட்டும்) மலினப்படுத்துபவன் எப்படி எழுத்தாளனாக இருக்கமுடியும்...?//

    எல்லோரும் சராசரி மனிதர்கள்தான் போல :(

    ReplyDelete