Thursday, October 20, 2011

தன்பதத்தான் தானே கெடும்


- திபரமேசுவரி

 நன்றி:பூவரசி.காம் 


 " சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
 தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் "

என்று பாடிய பாரதியின் நினைவு நாள் செப்டெம்பர் 11. மக்கள் ஒன்றிணைந்து சாதிப்பேயை ஓட்டி, சமத்துவத்தை நிலைநாட்டுவது பற்றிய சிந்தனையில், செயல்பாட்டில் ஈடுபட வேண்டிய நாள். 1957இல் பாரதியின் நினைவுகளைப் பேசிப் பகிர்ந்து திரும்பிய தோழர் இம்மானுவேல் சேகரனை சாதி வெறியர்கள் வெட்டிக் கொலை செய்ததும் அவர் நினைவாக, தலித் மக்கள் குரு பூஜை கொண்டாடுவதும் இதே நாளில்தான்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியதற்காகத் தனது முப்பத்துமூன்றாம் வயதில் கொல்லப்பட்ட இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளான 11.09.2011 அன்று பரமக்குடியில் நடந்த அரச பயங்கரவாதமும் படுகொலைகளும் மிகத் துரதிர்ஷ்டவசமானது மட்டுமின்றி நடுநிலை உணர்வு கொண்ட மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும். அன்றைய தினம் நடந்த கலவரத்தில் ஆறு உயிர்கள் பலியாக்கப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் காயம்பட்டுள்ளனர். இந்தக் கலவரம் திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளது என்பதைத் தொடர்ந்த நிகழ்வுகளைக் கவனிப்பதன் மூலம் யாருமே உணர முடியும். ஆனால் தமிழக முதல்வர், நடந்த உண்மை என்னவென்றால், அந்தக் கிராமத்தில் ஒரு சுவரில் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி இழிவான சில வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்துதான் இந்த மாணவர் பழனிக்குமாரின் கொலை நடந்திருக்கிறது; ஜான் பாண்டியன் அங்கே படையெடுத்துப் புறப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்துதான் இந்தக் கலவரங்கள் எல்லாம் நடைபெற்று இருக்கின்றன  என்று சொல்லிக் காலங்காலமாக நடக்கும் கொடுமையை மூடி மறைத்துப் பேசுகிறார். அன்றைய தாக்குதலில்,

1.    பல்லவராயனேந்தலைச் சேர்ந்த கணேசன் (55)
2.    வீராம்பலைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (50)
3.    மஞ்சூரைச் சேர்ந்த ஜெயபால் (19)
4.    கீழ்க்கொடுமாநல்லூரைச் சேர்ந்த தீர்ப்புக்கனி (25)
5.    காட்டுப் பரமக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் (25)
6.    காக்கனேந்தலைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (55)
ஆகிய ஆறு பேர் அதிகார சக்திகளுக்குப் பலியாகியுள்ளனர்.

தமிழக முதல்வரின் கூற்றின்படி இது ஏதோ, ஒரு சம்பவத்தைப் பின்பற்றி நிகழ்ந்த நிகழ்வல்லஒடுக்குமுறையை ஏற்காத அவர்களின் மனநிலையும் தன்னடையாளத்தை உறுதி செய்துகொள்ளும் போக்கும் வளர்ச்சி பெற்று வந்துள்ளதையே காட்டுகிறது. 1957 இல் முதுகுளத்தூர் கலவரத்திற்குப் பிறகு தீவிரப்பட்ட ஆதிக்க சாதிகளுக்கு எதிரான எதிர்ப்பு நிலை தொடர்ந்த போக்காக நின்று, கூர்மைப்பட்டு, இன்றைக்கு ஆண்டுதோறுமான பதட்டத்தை ஏற்படுத்தி வருவதைக் கணக்கிலெடுக்காமல் பேசுவது அம்மக்களுக்கு நன்மையைச் செய்வதாகாது. பூலித்தேவனுக்குச் சமமாக ஒண்டிவீரனை நிறுத்திப் பேசுவதும் வரலாற்றின் புதைபக்கங்களைத் திருப்பி ஒண்டிவீரனை மன்னரென நிலைநிறுத்துவதும் அந்தப் பகுதியின் ஆதிக்க சாதியினரைக் கோபமூட்டுகிறது. இதனை ஊதிப் பெரிதாக்கி, மக்களுக்கிடையிலிருக்கும் பகைமனநிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சியில் அதிகார சக்திகள் இயங்குவதையும் கவனத்திலெடுக்க வேண்டும்.

கல்வி மற்றும் ஜனநாயக உணர்வுகளின் ஊடாக மேலெழும் அடித்தள மக்களின் அடையாள உறுதிப்பாட்டை ஏற்க மறுக்கும் ஆதிக்க சமூகத்தின் மனநிலையைப் பரமக்குடியில் தெளிவாக அடையாளம் காண முடிகிறது. தேவேந்திரர்கள் இம்மானுவேல் சேகரனைத் தங்களின் திருவுருவாக மாற்றுவதையும் அவர் கொல்லப்பட்ட நாளைக் குருபூஜையாகக் கொண்டாடுவதையும் ஆதிக்க மனங்கள் சகித்துக் கொள்ள முடியாத நிலையில் அதற்கு முன்னர் ஏதேனும் ஒரு வன்முறையை நிகழ்த்துவதை, நாம் கடந்த கால வரலாற்றின் மூலம் அறிய முடியும். 2007இல் வின்சென்ட், 2009 இல் அறிவழகன், 2010இல் கொந்தகை அரிகிருஷ்ணன் எனக் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் நீளுகிறது. முத்துராமலிங்கத் தேவருக்கு இணையாக இம்மானுவேல் சேகரன் பேசப்படுவதும் முன்னிறுத்தப்படுவதும் அவருடைய குருபூஜைக்கு மக்கள் பெருந்திரளாகக் கூடுவதும் அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் விழாவுக்கு வரத் தொடங்குவதும் அங்கு ஆதிக்க சாதியினராக இருப்பர்களை எரிச்சலுறுத்துகிறதுகடந்த ஆண்டு நடுவணரசு இம்மானுவேல் சேகரனின் அஞ்சல்தலை வெளியிட்டதும் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவருடைய நினைவுநாளை அரசுவிழாவாக நடத்துவோம் என்று .தி.மு. வைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை அவர்கள் அரசுக்கு அளித்ததையும் விரும்பாத ஆதிக்க சாதியினர் தங்கள் அதிகார பலம் கொண்டு சாதித்துக் கொண்டதே பரமக்குடிக் கலவரமும் படுகொலைகளும். இதன்மூலம் அரசு விழா எடுப்பதைத் தடுப்பதும் அடுத்த ஆண்டு விழாவுக்கு அனுமதி மறுப்புமே அவர்தம் நோக்கம். அதனை உடனடி அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள காவல்துறையின் உதவியோடு நிறைவேற்றிக் கொண்டுள்ளனர். செப்டெம்பர் 7ஆம் தேதி அரசு போக்குவரத்துக் கழகப் பட்டியல் சாதித் தொழிற்சங்கத்தினர் தேசியத் தலைவர் தெய்வத் திருமகனார் இம்மானுவேல் சேகரன் என்று விளித்துத் தட்டி (Flex board) வைக்கின்றனர். இதனை எதிர்க்கும் மறத்தமிழர் சேனை என்னும் அமைப்பு காவல் துறையிடம் புகார் அளித்ததுடன் மாவட்ட ஆட்சியரிடமும் மனுக் கொடுக்கின்றனர். தங்கள் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிகாரிகளுக்கு அழுத்தம் தருகின்றனர்தெய்வத் திருமகனார் என்ற அடைமொழி தேவருக்கு மட்டுமே உரித்தானது; அதை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்பது அவர்களுடைய வாதம். தெய்வத் திருமகன் என்ற படத் தலைப்புக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் இங்கே கவனப்படுத்தலாம். பாதுகாப்பளித்திருக்க வேண்டிய காவல் துறையினர் தட்டியை நீக்க வேண்டுமென வற்புறுத்த, அவர்களின் மிரட்டலுக்குப் பணிந்து தொழிற்சங்கத்தினர் அந்தச் சொற்களை நீக்கி விட்டனர். ஆனால் அடுத்த நாள் ஊரெங்கும் முளைத்தன புதிய, புதிய தட்டிகள்ஆதிக்கத்துக்கு அடங்க மறுக்கும் மக்கள் கூட்டத்தைத் தூண்டிவிட்டது காவல்துறையின் முட்டாள்தனம்.

இந்த ஆண்டுக்கான பலியாக செப் 9 ஆம் தேதி கொல்லப்பட்ட பள்ளப்பச்சேரி என்னும் தலித் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்ற சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனைச் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற காரணத்தைச் சொல்லி வல்ல நாட்டுக்கருகில் கைது செய்தது காவல்துறை. ஆனால் அவரைக் கைது செய்ததன் மூலமாகவே கலவரம் ஏற்பட்டதுதான் முரண்நகை. தொடர்ந்த ஒடுக்குமுறை, இழிவு செய்தல், போன்ற செயல்களால் கூர்மை பெற்றிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் மனம் எழுச்சியுறுவதைப் பொறுக்காத ஆதிக்க சமூகத்தைச் சார்ந்திருக்கும் அரசும் அதன் அதிகாரக் கையாட்களான காவல்துறையும் திட்டமிட்டு நடத்திய வன்முறையே பரமக்குடிப் படுகொலைகள். போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த ஐந்து முக்கு சாலையில்  மறியல் செய்தவர்களின் எண்ணிக்கை 50 லிருந்து 300 வரையே இருந்திருக்கிறது. பேச்சுவார்த்தை பலனளிக்காத பட்சத்தில், சாலை மறியல் செய்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டிருந்தாலும் கூட தொடக்க நிலையிலேயே லேசான தடியடி, தண்ணீர், கண்ணீர்ப்புகையைப் பிரயோகித்துக் கலைத்திருக்க முடியும். ஆனால் அறிவிக்காமலே துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர். துப்பாக்கியால் சுடுவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும், கால்களில் சுட வேண்டும் என்ற எந்த விதிகளையும் பின்பற்றாமல் சுட்டிருக்கின்றனர். காயம் பட்டவர்களின் குண்டுக் காயங்கள் அனைத்துமே நெஞ்சிலும் நெற்றியிலும் இருப்பது காவல்துறையினரின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது. வேடிக்கை பார்க்க வந்த அப்பாவி மக்கள் சுடப்பட்டிருப்பது, மாணிக்கம் நெற்றிப் பொட்டில் சுடப்பட்டிருப்பது, தீர்ப்புக்கனி உயிரோடு இருக்கும்போதே சவக்கிடங்கில் போடப்பட்டது, இறந்தவர்களும் காயம் பட்டவர்களும் காவல்துறையினரின் தடிகளாலும் துப்பாக்கியின் பின்புறத்தாலும் மிக மோசமாகத் தாக்கப்பட்டது, மறியல் செய்தவர்களை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசியிருப்பது ஆகியவை காவல்துறையினரின் தலித் விரோதப் போக்கையும் மேற்சாதி ஆதரவு மனப்பான்மையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

இந்தக் கலவரத்தில் காயம்பட்ட போலீசார் தனியார் மருத்துவமனைகளில் வசதி வாய்ப்புகளோடு சிகிச்சை செய்து கொள்வதும் அப்பாவி மக்கள் சரியான சிகிச்சை மறுக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் தரையில் கிடப்பதும் கண்டிக்கத்தக்கது. பெண் போலீஸ் டெய்சி தாக்கப்பட்ட செய்தியில் முதல் தகவல் அறிக்கை தெளிவாக இல்லாமல் இருப்பதும் மாவட்ட ஆட்சியர் அதைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டதும் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது போன்ற துயரச் சம்பவங்கள் நடந்தபிறகு, ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் கமிஷன் அமைப்பது என்பதும் ஒரு சடங்காக, சம்பிரதாயமாக மாறி விட்டது. இதற்கு முன்னர் நடந்த கொடியங்குளம், தாமிரபரணிச் சம்பவங்களுக்காகப் போடப்பட்ட கமிஷன்களின் அறிக்கைகளில் சிலவாயினும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் பரமக்குடிச் சம்பவம் நடந்திருக்காதுஎனவே மேலும் மேலும் இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுத்து முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அரசு ஏற்படுத்தவுள்ள அமைதிக் குழுக்கள் முரண்பட்ட இரு சமூகங்களுக்கிடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து சமநிலை பெறவும், அம்மக்கள் வாழும் ஊர்களில் பதற்றமின்றி இயல்பு நிலை திரும்ப வழிவகுக்க வேண்டும். தன் மக்களை எந்த விதமான பாரபட்சமுமின்றிக் காக்க வேண்டிய அரசு, உயர்சாதி ஆதரவுப்போக்கைக் கைக்கொள்வதுடன் தலித் மக்களுக்கு எந்த விதமான நம்பிக்கையையும் அளிக்காமல் இருப்பது நாட்டுக்கு நன்மை பயக்காது.

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்

என்ற குறளை, பேரவையில் அன்றாடம் குறள் சொல்லும் பேரவைத் தலைவர் முதல்வருக்கு எடுத்துச் சொன்னால் நல்லது

2 comments:

  1. எடுத்துச் சொன்னால் நல்லது தான்.

    பேரவையில் இருக்கும் வேட்டி கட்டிய பெண்ணுக்கு அவ்வளவு தைரியமெல்லாம் இல்லைங்க.

    ReplyDelete
  2. தயவு செய்து சம்பவங்களை முழுவதும் அறிந்து கொண்டு பதிவு இடுங்கள் சகோதரி இம்மானுவேல் சேகரனின் உண்மையான வரலாற்றை அல்லது அவர் சமகால மனிதர்களிடம் பேசி அறிந்து கொள்ளுங்கள் தெய்வ திருமகன் என தேவரை பல்லாண்டு காலமாக அழைப்பது தெரிந்தும் அதை இன்னொருவருக்கு வைக்க வேண்டிய அவசியமென்ன தேவருக்கு மட்டுமே மிக பிரமாண்டமான குருபோஜை நடப்பது நிஜம் அதன் கரணம் தேவர் ஒரு ஆன்மீக ஞானி அரசியலுக்கு அப்பாற்பட்டு மிக சிறந்த தேசியவாதி அவருக்கு மரியாதை தவறு என கூறுகிறீர்களா

    ReplyDelete