Wednesday, January 6, 2010

உதிர்ந்து விழும் பூச்சுகள்

(தி.பரமேசுவரியின் இக்கட்டுரை பிப்ரவரி 2009 ‘புதிய பூங்குயில்’ இதழில் வெளியானது.)

பெண் எழுதும் காலம் இது; பெண் உரக்கப் பேசும் நேரம் இது. இத்துணைக் காலம் பேசா மடந்தையாய் மாற்றப்பட்டு இருந்த பெண்கள் தங்கள் அருவச் சிறைகளை உடைத்து வெளியேறி முழக்கம் செய்யும் காலம். சமையலறை தவிர்த்து, சகலமும் ஆண்களுடையதாய்இருந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு, பெண்கள் இயங்குவதை வரவேற்கும், எதிர்க்கும் எதிர்ப்பாலினர் எண்ணற்றோர். இன்று இந்நிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, பெண் இயக்கத்தை இயல்பாய் ஏற்றுக்கொள்ளும் மன்நிலையைப் பெரும்பாலோர் பெற்றுவிட்டனர் என்று எண்ணும் வேளையில் ஒரு சிறு தடுமாற்றம். தங்கள் வீட்டுப் பெண்களை இலக்கிய நிகழ்வுகளுக்கு அழைத்து வருவதைத் தவிர்க்கும் சக பாலினர், பெண் படைப்பாளர்களை அழைத்து நிகழ்வுகளும் கவியரங்குகளும் கருத்தரங்குகளும் விவாதங்களும் நடத்துவதை நாகரிகமாக்கி வருகின்றனர்.

உள்ளார்ந்து வெளிப்படாத மேலோட்டுப் பூச்சாய்ப் பெண்ணியத்தைப் பேசிவரும் இத்தகையோர் ஒடுக்கப்பட்டோரைப் பற்றிய கருத்தாக்கங்கள் ஸ்ற்றும் அற்றவரே. இத்தகைய மேல்பூச்சுகள், லேசான தட்டலில் உதிர்ந்துவிழும் காரையென இவர்தம் முகமூடிகள் சற்றும் எதிர்பாராத தருணங்களில் கழன்று விழுந்து அவர்களைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. பெண்ணின் உடலைப் பொருளாய்ப் பார்க்கும் வணிக ஊடகங்கள் ஒரு பக்கம் இழிவுபடுத்தியபடி இருக்கின்றன. மற்றொரு பக்கம் தங்கள் தனிப்பட்ட விளம்பரத்துக்கும் பெருமைக்கும் சமூகத்தின் கவன ஈர்ப்புக்கும் பெண் படைப்பாளர்களை அழைத்து நிகழ்வுகளை நடத்துவதைச் சிலர் வாடிக்கையாய் வைத்திருக்கின்றனர். பெண்கலின் இயங்குதலைச் சுரண்டிப் பிழைய்க்கும் இந்த பயன்பாட்டுவாதிகள், வணிக ஊடகங்களுக்குச் சற்றும் குறைவில்லாத பயங்கரவாதிகளே.

இன்றைக்குப் பெண்ணியம் பேசுவது என்பது நாகரிகமாய் மாறிவிட்ட நிலையில் இவர்கள் நாய்வேஷம் போட்டுக் குரைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கங்கே பெண்ணியம் பற்றிய நிகழ்வு நட்த்திப் பெண் படைப்பாளிகளை வரச் செய்து பரபரப்பாக்குகிறார்கள். ஆனால் நிகழ்வு சிறப்பாய் நடந்ததா என்றால் இல்லை என்பதே பதிலாய் அமையும்.

உண்மையாய் இத்தகைய அரங்குகளைத் தொடர்ச்சியாய்க் கவனித்து வருவோருக்கும் பெண் படைப்பாளர்களுக்கும் இது பெரும் ஏமாற்றமாக அமைகின்றன என்பதே கசப்பான உண்மை. அண்மையில் நடைபெற்ற சில நிகழ்வுகளும் இதை வெளிக்காட்டின. கருத்தரங்க நிகழ்வுகளுக்கு வரும் சில பெண் படைப்பாளர்களுக்குள் ஏற்படும் கருத்து முரண்பாடுகளைக் காசாக்குவதும் முதன்மையான நிகழ்வுகளுக்கும் கருத்தாங்களுக்கும் முன்னிலை கொடுப்பதை மறுதலிப்பதுமே இவர்களின் போக்காக உள்ளது. மேலும் சில கருத்தரங்குகளில் படைப்பாளர்களின் கருத்துகளைப் பதிவு செய்யவிடாமல் தடுப்பதும் எதிர்க் கூச்சலிடுவதும் வேகமாய் முடிக்கும்படி ஆணையிடுவதும் என ஆணாதிக்கத்தின் படுகோர முகத்தை அங்கிங்கெனாதபடி எங்கும் பார்க்க முடிகிறது.

எனவே தயவுசெய்து பெண்ணியம் பேச விரும்புவோர், கருத்தரங்குகள் நடத்துவோர், னட்த்தும் நிகழ்வுக்கு உண்மையாய் இருத்தல் வேண்டும். பெண் படைப்பாளர்கள் தொடர்ந்து பல்வேறு வகையில் அவமானப்படுத்தப்படுவது நிறுத்தப்படவேண்டும். இத்தகைய குரூர மனிதர்களை அடையாளங் கண்ட பெண் படைப்பாளர்கள் இவர்களது நிகழ்வுகளைப் புறக்கணிக்க வேண்டும்; பிறருக்கும் அடையாளங் காட்டவேண்டும்.

No comments:

Post a Comment