Wednesday, August 25, 2010

 சென்னையை மீட்கப் போராடியவருக்கு சென்னையில் சிலை எப்போது

நன்றி: மண்மொழி,ஆகஸ்டு10


1968 ஆம் ஆண்டு சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது  கடற்கரையில், பல்வேறு தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், நாயக, நாயகிகளுக்கு சிலைகள் வைக்கப்பட்டன. அதற்கு முன்பும் பின்பும் கூட சென்னை மாநகரில் முக்கிய அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளன. எனில், சென்னை மாநகர் இன்று தமிழர் களுக்கு, தமிழகத்துக்கு சொந்தமாக இருக்கக் காரணமான, அதற்காக போராடிய அரிய மனிதர் ம.பொ.சி.க்கு மட்டும் சென்னையில் சிலை இல்லை. சிலை வைக்க இடமில்லையா, இல்லை ஆட்சியாளர்களுக்கு மனம்தான் இல்லை.

ம.பொ.சி.மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரியாத, ஆட்சியாளர்கள் தெரிவிக்க விரும்பாத ஒரு பெயர். திராவிட கோட்பாட்டை எதிர்த்து தமிழ் தேசிய கருத்தாக்கத்தை நிறுவி, அதற்காகவே நாளெல்லாம் பேசியும் எழுதியும் வந்த ஒரு மாபெரும் ஆளுமை அவர்.

இந்தியத் தேசியத்தையும்  திராவிட நாட்டையும் பேசி   வந்த தமிழகத் தலைவர்கள் மத்தியில் இந்தியாவிற்குள் அடங்கிய தமிழ் அடையாளம் பற்றி முதலில் பேசியவர் ம.பொ.சி. விடுதலைப்போரில் ஈடுபட்ட காலத்திலேயே ம.பொ.சி யிடம் மொழி வழி இனவுணர்வு, இந்தியா தேசிய ஒருமைப்பாட்டுணர்வு பற்றிய சிந்தனைகள் தோன்றி விட்டன. பாரதியும் திரு.வி.க வும் வளர்த்தெடுத்த வரலாறு தமிழகத்தில் தேக்கமுற்ற நிலையில் ம.பொ.சி தமிழ் இலக்கிய வழி வந்த தமிழடை யாளத்தை கையில் எடுத்தார். அவரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழரசுக் கழகத்தின் கொடியில் வில்-புலி-மீன் ஆகிய தமிழ் மூவேந்தர் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவர் மாநகராட்சியில் பணியாற்றிய காலத் தில்தான் சென்னை மாநகராட்சியின் கொடியிலும் வில்-புலி-மீன் ஆகிய சின்னங்களை பொறிக்கச் செய்தார். உறவுக்குச் சின்னம் தேசியக் கொடி (மூவண்ணக்கொடி) உரிமைக்குச் சின்னம் தமிழ்க் கொடி இதை மறத்தல் கூடாதுஎன்று ம.பொ.சி. 01.11.1947ல் தமிழ் முரசுஇதழில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1945ல் ஜூன் 26இல் திருச்சி மலைக்கோட்டையில் நடந்த இலக்கிய கூட்டத்தில்தான் முதன் முதலில் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சிஎன்ற  தன் இலட்சிய முழக்கத்தை வெளியிட்டார் ம.பொ.சி. விடுதலை பெறுவ தற்கு முன்னரே அதற்கான பேச்சுகள் தொடங்கிய நிலையில் தொலை நோக்கோடு புதிய தமிழகத்தைப் பற்றி சிந்தித்து அதன் எல்லைகளை விவரித்து சுய நிர்ணய சுதந்திர சோசலிச தமிழ்க் குடியரசு அமைக்கக் கனவு கண்டார். அதற்கான முயற்சிகளையும் தன் இயக்கத்தின் வாயிலாக முன் னெடுத்தார்.

ஆந்திரர்கள் விசால ஆந்திரம்என்றும் கேரளர்கள் ஐக்கிய கேரளம்என்றும் கூறி வந்த காலத்தில் மா.பொ.சி. புதிய தமிழகத்தைமுன் வைத்தார். தமிழ் முரசு முதல் இதழில் (1946மே)சுதந்திர இந்தியாவில் சுதந்திர தமிழ் அரசு, சுதந்திர அரசியலை நிர்ணையிக்கும் உரிமை பெற்றி ருக்க வேண்டும். மேற்சொன்ன சுய நிர்ணய உரிமை இந்தி யாவிலுள்ள சகல தேசிய இனங்களுக்கும் உண்டு என்பதே நமது கொள்கைஎன்று தெளிவு படுத்தியுள்ளார்.

இந்திய தேசியம்திராவிடத்  தேசியம், போன்ற வறட்டு வாதங்கள் தமிழகத்தை சூழ்ந்திருந்த நிலையில் தமிழ் தேசியம் குறித்த ஓர்மையைத் தமிழக மக்களிடம் ஏற்படுத்தினார். தமிழ கத்தின் வடக்கெல்லையின் சில பகுதிகளையும் தெற்கெல்லையும் பறி போகாமல் காத்தார். அப்போதிருந்த தலைவர்களின் உறுதுணை இருந்தி ருந்தால் பறிகொடுத்த பகுதிகளில் சிலவற்றை மீட்டெடுத்திருக்க முடியும். ஆனால் கெடு வாய்ப்பாக திராவிட வறட்டுவாதம் பேசியும் இந்திய தேசியத்தை மட்டுமே வலியுறுத்தியும் வந்த தலைவர்களால் தமிழகம் சில பகுதிகளையும் இழக்க நேர்ந்தது.

அளவில் சிறியதாயினும் சாதனை பல புரிந்த தமிழரசுக் கழகத்தின் பங்களிப்பாக பலதைக் கூறலாம். இவற்றுள் 1.சுயநிர்ணய  சுதந்திர சோஷலிசத் தமிழ் குடியரசுத் தத்துவத்தைப் படைத்தது 2.எல்லைகளைக் காக்கப் பல போராட்டங்கள் புரிந்து ஒரளவேனும் எல்லைகளைக் காத்  தது 3. மாநில சுயாட்சித் தத்துவத்தை உருவாக்கியது 4. தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையைப் பாதுகாத்து மீட்டது 5. திராவிட இயக்க எதிர்ப்பில் ஈடுபட்டது. 6.தமிழ் பயிற்று மொழி அமையவேண்டும் என்று பாடு பட்டது 7.ஆங்கில இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தியது 8.தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான முயற்சியை முன் னெடுத்தது. 9.தமிழ் நாட்டில் அயலவர் ஆதிக்கத்தை எதிர்த்தது 10. தமிழ் அடையாளத் துடன் இளங்கோவடிகள் விழா, பாரதி விழா, வ.உ.சி.விழா, தமிழர் திருநாள், சிலப்பதிகார மாநாடு போன்றவற்றைக் கொண்டாட வழி வகுத்தது ஆகியனவற்றைக் குறிப் பிட்டுச் சொல்லலாம்.   

"மதராஸ் மனதே" என்று ஆந்திரர் முழங்கிய.காலத்தில் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்என்று எழுந்த ஒற்றைக்குரல் ம.பொ.சி யுடையது. நாயக்க மன்னர் ஆட்சிக் காலத்திலும் ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலும் சென்னையில் குடியேறிய தெலுங்கர்கள் சில நூற்றாண்டுகள் இங்கு வாழ்ந்த துணிவில் சென்னைக்கு உரிமை கொண்டாடினர். பொட்டி ஸ்ரீராமுலு சென்னையை ஆந்திராவின் தலைநகராக்க வேண்டி உண்ணாவிரதம் தொடங்கினார். அதற்கு ஆந்திர கேசரி என்று போற்றப்படும் பிரகாசம் பந்துலு ஆதரவளித்தார். தொடர்ந்து 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபின்  1952 டிசம்பர் மூன்றாவது வாரத்தில் பொட்டி ஸ்ரீராமுலு உயிர் நீத்தார் ஸ்ரீராமுலுவின் இந்த உயிர்த் தியாகம் ஆந்திரர்களின் ஆத்திரத்தைத் தூண்டி விட்டது. அதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த மிகப் பெரிய கலவரத்தில் அரசு அலுவலகங்கள் தீக்கரையாக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு அடியோடு குலைந்தது.

இப்படிப்பட்ட சூழலில் ம.பொ.சி. தீரத்துடன் போராடிச் சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றல், சென்னையிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தந்திகளை அனுப்பி எதிர்ப்பைப் பதிவு செய்தல், போன்ற போராட்ட முறைகள் மூலமாகச் சென்னையைக் காத்தார். அப்போது  தமிழக முதல்வராயிருந்தவர் ராஜாஜி. அவர் முதல்வர் பதவியை இழந்தாலும் இழப்பேனே தவிர சென்னையை இழக்க மாட்டேன் என சென்னையைக் காக்க உறுதியோடு நின்று  விடுத்த எச்சரிக்கையும் இதற்குத் துணை நின்றது. இதையட்டி ஆந்திரப் தேசம் காவாலஅரவ ராஜாஜி சாவாலஎன்ற முழக்கம் ஆந்திரமெங்கும் எழுந்தது  சென்னையைக் காக்க இவர்கள் போராடிய காலகட்டத்தில் திராவிடத் தலைவர்கள் சென்னை திராவிட நாட்டில்தானே உள்ளது என்று சமாதானம் கூறினார்கள். தமிழகக் காங்கிரஸ் தலைமையும் நடுவணரசுக்குச் சங்கடம் ஏற்படுத்த விரும்பாமல் அமைதி காத்தது.

இவ்வாறு ம.பொ.சி. உருவாக்கிய தமிழரசுக் கழகம் அன்றைக்கு நடத்திய போராட்டங்கள் ஒவ்வொன்றையும் விரிக்கின் செய்திகள் பெருகும் இப்படிப்பட்ட தமிழகத்தின் தந்தையாக நாம் போற்றியிருக்க வேண்டிய ம.பொ.சி.க் குத்தான் சென்னையில் ஒரு சிலைகூட இல்லை.  

வந்தாரை வாழ  வைக்கும் தமிழர்க்கு, தமிழுக்காக போராடியவர்களை. தமிழர்க்காகக் குரல் கொடுத்தவர்களை, தமிழ் நாட்டுக்காகத் தங்கள் இன்னுயிர் ஈந்தவர்களை நினைவிருப்பதில்லை. தமிழகத்தின் இன்றைய சீரழிந்த நிலைக்கு காரணகர்த்தாக்களாய் விளங்கும் தலைமைகளுக்கு மூலை முடுக்கெல் லாம் சிலை; பட்டி தொட்டியெல்லாம் நினைவிடங்கள்; ஒட்டு அரசியலுக்காக சாதி மக்களின் தலைகளை எண்ணி எண்ணி, தலைவர்கள் பெரும்பான்மைச் சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு சிலை அமைப்பதும் தமிழினப் பண்பாட்டை நிலை நிறுத்திய தனிமனித முயற்சிகளின் மூலமே சாதித்த ம.பொ.சி., ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர், போன்ற உண்மை உணர்வாளர்களுக்கு சிலை ஏதும் அமைக்கா திருப்பதும் தமிழகத்தின் சீரழிந்த நிலையைக் காட்டி நிற்கிறது.  

திராவிடக் கலாச்சாரத் தின் சவலைக் குஞ்சுகளாம் இன்றைய தமிழ்த் தலைமுறையினர்க்கு இத்தகைய தியாகத் தலைவர்களின் பெயர் கூடத் தெரியாத இழிநிலைதான்  எங்கும் நிலவுகிறது. தமிழுக்காக தமிழருக்காக தமிழ்நாட்டுக்காகப் பாடுபட்ட தமிழ்த் தலைவர்கள் மறக்கடிக்கப்பட்டு. அந்நிய மொழிபேசும் அண்டை மாநிலத்தாரே முன்னூறு ஆண்டு களாய் ஆட்சி செய்ததில் தமிழன் சுரணை இன்றி உறக்கத்தில் இருக்கிறான். ‘‘தமிழன் என்றோர் இன முண்டு தனியே அவர்க்கொரு குண முண்டுஎன்று இந்த நிலையைத்தான் நாமக்கல்லார் அன்றைக்கே பாடிச் சென்றார் போலும்.

தமிழ்த் தலைவர்களுக்குச் சிலை வைத்தல் என்பது வெறுமனே அவர் களைத் திருவுருவாக்கும் முயற்சியன்று தமிழ்த் தேசியம் குறித்த. தமிழர் அடையாளம் குறித்த சிந்தனைகளை இன்றைய தலைமுறையினர் எண் ணத்தில் விதைப்பதற்கான விதை களாகவே இவர்களின் சிலைகள் இருக்கும். தமிழுக்காகவே உண்மை யாகப் பாடுபட்ட தலைவர்களை அறியும்போது, அவர்தம் வரலாற்றை உணரும்போதுதான் இன்றைய தலைமுறை, தமிழ் உணர்வும், இனவுணர்வும் பெற்றுப் புத்தாக்கம் பெறும்.

நம் அண்டை மாநிலமான ஆந்திராவில், உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலுவின் பெயரால் பல்கலைக்கழகம். மாவட்டம் இயங்கிக் கொண்டிருக்கிறது அவருக்கு ஆந்திராவில் மட்டுமல்ல சென்னை யிலும் அவருக்கு சிலை வைக்கப் பட்டிருக்கிறது. அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சென்னையில் உள்ள இல்லம் இன்றைக்கும்  ஆந்திர அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

ஆனால் நம்முடைய மாநிலம் உருவான  வரலாறு, அதற்காக நடத்தப் பட்ட போராட்டங்கள், பாடுபட்ட தலைவர்கள் பற்றிய அறிவு கிஞ்சித்து மின்றி உணர்வற்ற பிண்டங்களாய் நம் தமிழ்க் குழந்தைகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். ஆட்சியாளர்கள் அப்படி நடமாட விட்டுள்ளனர்.  

தமிழுக்காகப் பாடுபட்டவர்கள் தனிப்பெரும் ஆளுமைகளாகக் கட்டமைக்கப்படாமல் திராவிடவாதம் முட்டுக்கட்டை போட்டு தமிழர்களை அறியாமை இருளில் கிடத்தி அரசியல் வணிகத்தில் இலாபம் ஈட்டிக்கொண்டிருக்கிறது. அந்நாளையத் தமிழ்ச்சான்றோர் விதைத்தவற்றின் பயனையெல்லாம் தான் மட்டுமே அறுவடை செய்து கொழுத்துக் கிடக்கின்றது. 

தமிழ்நாட்டின் மாபெரும் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவரான, நாம் என்றைக்கும் நினைவுகூர வேண்டியவரான ம.பொ.சியின் நூற்றாண்டு விழாவில் அவருக்குச் சிலைவைக்கவும் நினைவு அஞ்சல் தலை வெளியிடவும் அவரது நூல்களை நாட்டுடமையாக்கவும் உத்திரவிடுவதாக. தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் விழா மேடை யிலேயே அறிவித்தார். 

அஞ்சல் தலை வெளியிடப்பட்டது, நூல்களும் நாட்டுடமையாக்கப் பட்டன. தமிழக மக்களுக்கு எந்நாளும் தமிழ்த் தேசியத்தை அடையாளம் காட்டும் ம.பொ.சியின் சிலை அமைப்பதாக 2006-ல் செய்த அறிவிப்பு மட்டும் இன்றுவரையிலும் அறிவிப்பாகவேஇருந்து வருகிறது. 

சிலை அறிவிப்பை அடுத்து சிற்பி மணிநாகப்பாவின் சிற்ப அரங்கில் ம.பொ.சி.யின் ஆளுயரச் சிலையும் தயாராகிவிட்டது. ஆனால் அந்தச் சிலையை நிறுவுவதுபற்றி ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சிலை வைக்கும் எண்ணமே கிடப்பில் போடப்பட்டது போன்று மௌனமாகிவிட்டது. தமிழக அரசு. ம.பொ.சி.யின் திருவுருவச் சிலையைச் சிற்பியின் வலைதளத்திலே எவரும் பார்வையிடலாம். 

பல்வேறு அமைப்புகளிலிருந்து ஊதப்பட்ட சங்குகளுக்குப் பிறகு அரசின் காது சிறிது அசைந்து கொடுத்தது ம.பொ.சி.யின் இல்லம் இருக்கும் இருசப்ப கிராமணித் தெரு முனையில், என்.கே.டி. மேல்நிலைப் பள்ளி அருகில் ம.பொ.சி.யின் சிலைவைக்கத் தீர்மானித்து சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணை முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் பரிதி இளம்வழுதியும் சிலைவைக்கப்பட இருந்தஇடத்தைப் பார்வையிட்டுச் சென்றதாகவும் அறியப்படுகிறது செம்மொழி மாநாட்டையட்டி ம.பொ.சி.யின் சிலை திறக்கப்படும் என்ற நப்பாசையில் இருந்த தமிழார்வலர்களுக்கு மீண்டும் ஏமாற்றம். மறுகடியும்தமிழக அரசிடம் பெருத்த மௌனம்! 

மலினப்பட்டுப்போன திராவிட அரசியலின் வழமையான போக்கு, சிலை அமைக்கும் முயற்சியைத் தள்ளிப் போடு கிறதா? வாக்கு வங்கி அரசியல் நடத்தியும் சாதி ஓட்டுக ளுக்காகக் கூழை கும்பிடு போட்டும் பதவி வேட்டை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட அரசியல் சூழலில் வெறுத்துபோய் இருக்கின்ற தமிழக மக்களுக்கு இப்பெருத்தலைவரின் சிலை மீண்டும் தமிழ்த் தேசியம் குறித்த ஓர்மையை  ஏற்படுத்திவிடுமோ. தமிழ் அடையாளம் குறித்த சிந்தனை கிளர்ந்துவிடுமோ என்று அச்சமுறுகிறதா தமிழக அரசு? தமிழக அரசின் இச்செய்கை தமிழக மக்களுக்கு நிச்சயமாக நன்மையைத் தராது.

மறக்கடிக்கப்பட்ட தமிழ் ஆளுமைகளின் சிலைகள் தமிழகம் முழுவதும் நிறுவப்படவேண்டும். தலைவர்களைச் சாதிச் சிமிழுக்குள் அடைத்து அதன் அளவில் அவர்களை முடக்கிப் போடாமல் அவர்களது  வரலாற்றைப் பாடப் பத்தகத்தில் வைத்து அவர்களைத் தமிழ்த் தேசியத் தலை வர்களாக அடையாளம் காட்ட வேண்டும். தூய தமிழ்ச் சிந்த¬னையாளர்களின் வாழ்க்கை வரலாறுகள் வளரும் இளம் தலைமுறையாம் மாணவர்களுக்குவழி காட்டு தலா கவும்   வளமூட்டுவதாகவும் அமைய அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நோக்கில் ம பொ சி யின் சிலையை  சென்னை மாநகரின் மையப்பகுதியில் அரசு உடனடியாக நிறுவ  அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

6 comments:

  1. தீவிரமான அலசலுடன் கூடிய கட்டுரை ... நியாயமான கேள்வியும் கூட..

    ஆனால் தமிழ் நான்தான் என்று முழங்கும் ஆளும் தலைவர் இவருக்கு சிலை வடிக்க மாட்டார்...

    ReplyDelete
  2. உண்மை தான். ஆனால் இந்தக் கேள்வி ஆயிரம் ஆயிரம் எதிரொலிகளுடன் உங்களைப் போன்ற நண்பர்களாலும் கேட்கப்படும்போது கட்டாயமாக விடை கிடைக்கும் நண்பரே.

    ReplyDelete
  3. சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலயில் உள்ளது அஞ்சல் தணிக்கை வளாகம். என்றும் தமிழாய் வாழும் ம.பொ.சி. என்ற்தோர் தலைப்பில் இரங்கற் கூட்டம். எழுத்தாளர் சு.சமுத்திரம், கோடம்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பல்ளித் தமிழாசிரியர் இ.கோமதிநாயகம், ஆசிரியர் யுனெஸ்கோ கழக நிர்வாகி இரா.முத்துகுமாரசாமி ஆகியோர் பங்கேற்கச் செய்து நிகழ்த்தியது நினைவுக்கு வருகின்றது. இன்று இந்தக் கட்டுரையை அப்படியே admin@mkstalin.net முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியாய் விட்டது. ஊதுகின்ற சங்கை ஊதிவைப்போம். துணை முதல்வர் மனம் வைப்பார் என்று எதிர்பார்ப்போம். ஏதோ ஒருவகையில் சிறு முயற்சி. அன்பு-ச.இராமசாமி.

    ReplyDelete
  4. தோழருக்கு வணக்கம் .
    உங்கள் ஆதங்கம் புரிகிறது. ம.பொ.சி வழியில் நீங்களும் தமிழ்த் தேசியவாதியாக இருப்பதை வரவேற்கிறேன். தமிழர்களாகிய நாம் இணைந்து போராடி தமிழ்த் தேசியத்தையும், ம.பொ.சி.யின் மறைக்கப்பட்ட தியாகத்தையும் வெளிக்கொணர்வோம்..
    நன்றி

    வேலு.வெற்றிவேல்
    செய்தியாளர்....

    ReplyDelete
  5. //ஆனால் நம்முடைய மாநிலம் உருவான வரலாறு, அதற்காக நடத்தப் பட்ட போராட்டங்கள், பாடுபட்ட தலைவர்கள் பற்றிய அறிவு கிஞ்சித்து மின்றி உணர்வற்ற பிண்டங்களாய் நம் தமிழ்க் குழந்தைகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். ஆட்சியாளர்கள் அப்படி நடமாட விட்டுள்ளனர். //
    உண்மைதான். ஆனால் இக்கீழ்மையை களைய வேண்டிய முயற்சிகள் பள்ளிகளிலிருந்துதானே தொடங்கப்படவேண்டும்? என் அறியாமையை தங்களின் இக்கட்டுரை ஓரளவுக்கேனும் களைந்திருக்கிறது என்றே உணர்கிறேன். நன்றிகளும், வாழ்த்துகளும். தமிழ் கற்க தீராத பற்றுடையவனான எனக்கு தங்கள் வலையை அறிமுகம் செய்தமைக்கும் நன்றிகள். நல்ல தமிழை படிக்கும் வாய்ப்புகள் பெற்றிருந்தும், நல்ல விஷயங்களையும், வரலாற்று உண்மைகளையும் நல்ல தமிழில் அறிந்துகொள்ளும் வாய்ப்பை இந்த வலை எனக்கு வழங்குகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை! செவ்வனே தொடரட்டும் உங்கள் சேவை....
    பத்மஹரி,
    http://padmahari.wordpress.com

    ReplyDelete
  6. என் அறியாமையை தங்களின் இக்கட்டுரை ஓரளவுக்கேனும் களைந்திருக்கிறது என்றே உணர்கிறேன். நன்றிகளும், வாழ்த்துகளும்.

    ReplyDelete