Wednesday, September 7, 2011

விழித்தெழுவாய் தமிழா!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை நிறுத்தும்படியும் ஆயுள் தண்டனையைக் குறைக்க வேண்டியும் பல்வேறு அமைப்புகளும் தமிழின உணர்வாளர்களும் ஆர்ப்பாட்டம், அடையாள உண்ணாவிரதம் போன்ற வழிமுறைகளில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

வழக்கறிஞர்களான அங்கயற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதா ஆகியோர் ஐந்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். மக்களின் உணர்வை மதித்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரின் கருணை மனுக்களை மீண்டும் பரிசீலிக்குமாறு குடியரசுத்தலைவரை வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்குத் தடை விதிக்கக் கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாகத் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி. நாகப்பன், எம். சத்திய நாராயணன் இருவரும் இம்மூவருக்குமான தூக்கு தண்டனைக்கு எட்டு வாரம் இடைக்காலத் தடை விதித்தனர். செவ்வாய்க் கிழமை நடைபெற்ற இந்நிகழ்வுகள், உலகெங்கிலுமிருக்கும் தமிழ் மக்களை உணர்வுபூர்வமாக ஒன்று திரட்டியது. ஆனால் இத்தகைய உணர்வுவயப்பட்ட போராட்டங்களும் அதற்கான மக்களின் ஆதரவும் தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமென்னும் கருத்தைச் சிலர் வலியுறுத்துகின்றனர். முன்னர் ஒரு தீர்ப்பில், தலைவர்களின் அளவுக்கு மீறிய பாதுகாப்புச் செலவினங்களும் அணுக முடியாத் தன்மையும் மக்களிடம் இருந்து விலகி இருக்கும் போக்கும் பற்றி ஒரு நீதிபதி விமர்சித்திருப்பதே நம் நினைவுக்கு வருகிறது.

இதற்கிடையில் நடுவணரசின் சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது. அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று நாங்கள் அறிவோம் என்று பத்திரிகையாளர்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர் மற்றும் மன்ற உறுப்பினர்களால் ஒரு மனதாக நிறைவேற்றப்படும் தீர்மானமென்பது தமிழக மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப் படுத்துவதாகும். அமைச்சருடைய ஆணவமான பேச்சு நடுவணரசின் முற்றதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது. சுய நிர்ணய உரிமை பற்றி அழுத்தமாகப் பேச வேண்டியதன் அவசியத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களாட்சியின் கருத்தை அலட்சியப்படுத்தும் இத்தகைய கருத்துகளை நாம் உடனுக்குடன் கண்டித்தாக வேண்டும். ஏழு கோடித் தமிழர்களின் உணர்வும் கொந்தளிப்பும் அவர்களைக் கட்டுப்படுத்தாதெனில் அவர்களது அரசும் அதிகாரமும் நம்மைக் கட்டுப்படுத்துவதையும் நாம் அனுமதிக்கக் கூடாது.

முன்னரே, இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும் ராஜபக்ஷ மீது ஐ.நா அறிக்கையின்படி போர்க் குற்ற விசாரனை நடத்தித் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் முதல் சட்ட மன்றக் கூட்டத் தொடரிலேயே இரு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள் மன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானங்களையும் தமிழக முதல்வரையும் இழிவுபடுத்தி, கோத்தபய ராஜபக்ஷ பேசிய பேச்சுகளை நடுவணரசு கண்டிக்காமல் கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் சட்டத்துறை அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு எதிர் விளைவுகளையே உருவாக்கும். இந்தியத் துணைக் கண்டத்தின் எல்லைப் புறங்களெல்லாம் அமைதியற்றிருக்கும் இச்சூழலில் மாநில அரசுகள் தம் உரிமைகள் குறித்தும் மாநில கௌரவத்தைப் பாதுகாத்தல் சார்ந்தும் விரிவாகச் சிந்திக்கவும் குரலெழுப்பவும் வேண்டிய தருணமிது.

மட்டுமன்றி, தமிழர்களுக்கு இத்தகைய அவமானங்கள் ஒன்றும் புதிதல்ல; இதற்குப் பல உதாரணங்கள் கொடுக்க முடியும். சென்னையில் இருக்கும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவர்களிடையே 12.08.2011 அன்று பேசிய அமெரிக்கத் துணைத் தூதர் மௌரீன் ச்சாவ் (Maureen chao)  இருபதாண்டுகளுக்கு முன்னர், தான் ஒரு மாணவியாக இருந்தபோது தில்லியிலிருந்து ஒரிசாவுக்குப் பயணம் செய்ய நேர்ந்தபோது 24 மணி நேரத்தில் போய்ச் சேர வேண்டிய புகைவண்டி, 72 மணி நேரம் ஆகியும் போய்ச் சேரவில்லை என்று சொன்னதோடு அந்தப் பயணம், தமிழர்களைப் போல கருப்பாகவும் அசிங்கமாகவும் தன்னை மாற்றி விட்டதாகப் பேசினார். அமெரிக்கத் துணைத்தூதரின் இந்த அடாவடிப் பேச்சுக்கு சில அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தபிறகு அமெரிக்கத் தூதரகம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது என்றாலும் பேசிய அம்மணி இன்று வரையிலும் மன்னிப்புக் கேட்கவில்லை. அவர் பேசிய தினத்தன்று அக்கல்லூரியில் இருந்த தமிழரான ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏன் அந்த ரோஷம் பிறக்கவில்லை என்பது நாம் ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய ஆய்வு.  அன்று  பொறுத்தார் பூமி ஆள்வார் என்று உலகுக்குச் சொன்ன இந்த மண் என்றைக்கு ரௌத்ரம் பழகுகிறதோ, அன்றைக்கே தமிழனுக்கு விடிவு காலம் பிறக்கும். இல்லையென்றால் குட்டக் குட்டக் குனியும் உன் முதுகினை இன்னும் விரிவாக்கிக் கொள் தமிழா.. நீ வாங்கவேண்டியவை இன்னும் ஏராளமாக வரிசையில் இருக்கின்றன.

5 comments:

  1. என் கன்னத்தில் ”பளார்” என விழுந்தது.

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை தோழி. நடுவண் மற்றும் மாநில அரசுகள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டாட்சி முறை நிலவவில்லை இத் துணைக் கண்டத்தில். ஸ்டேட் என்றால் நாடுதான். அரசுதான். (சான்று: யு.எஸ்.ஏ. என்பதற்கான விரிவு) ஆனால் இங்கு அது மாகாணம் என்ற வகையிலேயே மாநிலம் என்று மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தில்லியிடம் தமிழன் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

    ReplyDelete
  3. அன்று பொறுத்தார் பூமி ஆள்வார் என்று உலகுக்குச் சொன்ன இந்த மண் என்றைக்கு ரௌத்ரம் பழகுகிறதோ, அன்றைக்கே தமிழனுக்கு விடிவு காலம் பிறக்கும். இல்லையென்றால் குட்டக் குட்டக் குனியும் உன் முதுகினை இன்னும் விரிவாக்கிக் கொள் தமிழா.. நீ வாங்கவேண்டியவை இன்னும் ஏராளமாக வரிசையில் இருக்கின்றன.//

    வரிசையில் நின்று ஏராளமாக வாங்கிக்கொண்டு தானிருக்கிறோம்... ரௌத்திரம் பழகினால் தான் விடிவு பிறக்கும் உண்மை தான்....

    ReplyDelete
  4. என் குடும்பம் என் வீடு என்று செல்பவர்கள் காதில் விழப் போவதில்லை.. தமிழன் உப்பு போடாமல் தின்று நெடு நாட்களாகிறது தோழி.

    ReplyDelete
  5. சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள்,சுரணை வரட்டும் என்று,வரவேண்டும்.பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete