Showing posts with label கல்கி. Show all posts
Showing posts with label கல்கி. Show all posts

Monday, October 10, 2011

உள்ளங்கை குருவி

நன்றி: கல்கி

உள்ளங்கைகளில்
குருவி போன்றதொரு சிறிய பறவை
அமர்ந்திருக்கும் அந்தப் படம்
வெகுவாகக் கவர்ந்தது என்னை
இப்படியும் அப்படியுமாய் அசைக்கையில்
எழும்பும் அதன் சிறகுகள்தான்
அதை வாங்கத் தூண்டியதோ என்னவோ?
நீண்ட நேரம் விலை பேசி
கையிருப்பு முழுவதையும் செலவழித்து
வாங்கிய அந்தப் படத்துடன்
நடந்தே வீடு சேர்ந்தேன்
வாங்கிய நாளிலிருந்தே
அறைக்குள் நுழையும் போதெல்லாம்
அசைத்து அசைத்து அதன் பறத்தலுக்கான
யத்தனிப்பை ரசித்த எனக்கு
இப்போது அது அலைக்கழிப்பாக மாறியிருந்தது
இதோ இந்தக் கணத்தில்
நான் அதன் பறத்தலுக்காய்க் காத்திருக்கிறேன்.

- தி.பரமேசுவரி 

முகமூடியின் துளிகள்

நன்றி : கல்கி 





இளகத் தொடங்கும் என் முகமூடியை
இழுத்துப் பிடித்து முகத்தோடே
பொருத்திக் கொள்ளும் முயற்சியில்
மிகுந்த பிரயாசையுடன் ஈடுபட்டிருக்கிறேன்
சற்றும் செவி கொடுக்காத முகமூடி
சொட்டத் தொடங்கிற்று சிறு சிறு துளிகளென
இளகும் ஒவ்வொரு துளியும்
உன் பெயரைச் சொல்லியபடி வீழ
உரத்து ஒலிக்கும் உன் பெயரைக்
கேட்க மறுத்துக் காது பொத்த
வேகமாய் வழியும் துளிகள்
எழுதுகின்றன உன் பெயரை!

- தி.பரமேசுவரி