Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Saturday, January 8, 2011

ஊழலும் கல்வியும்

சமூகத்தின் சகல மட்டங்களிலும் இன்றைக்கு ஊழலும் லஞ்சமும் வேரூன்றியிருக்கிறது. மக்களால் அது சகஜமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பெரிய அளவில் செய்யப்பட்டால் ஊழல் என்றும் சிறியதாய் இருந்தால் அது லஞ்சமாகவும் கொள்ளப்பட்டு, கிட்டத்தட்ட மக்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற தன்மையைக் காண முடிகிறது. பெரிய அளவில் செய்யப்படுகின்ற ஊழல்களை பெரும்பான்மை மக்கள் தட்டிக் கேட்க முடியாத மனநிலையில், இலவசங்களுக்கு ஆட்பட்டு, தங்களுக்கு எவ்வளவு கிடைக்குமென்ற எண்ணவோட்டத்தில் சிக்கியிருக்கின்றனர். சிறிய அளவில் பேசுபவர்களும் கூட ஒரு விதமான உயிர் பயத்துடன் செயல்படக் கூடிய கொடுமையான காலத்தில் நாம் வாழ்கிறோம். மனசாட்சியற்றவர்களின் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரச் சாட்டையின் வீறல்கள் நம் எல்லோருடைய முதுகிலும் மிக அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன.

ஊழல் வெளிப்பட்டுப் பேச்சரவம் கேட்கத் தொடங்கிப் பின் மெல்ல மெல்ல மக்களின் நினைவடுக்குகளில் இருந்து அது விலகிப் பின் வேறொரு ஊழல் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. சென்ற ஆண்டு அந்த அளவுக்குக் கூட நேரமின்றிப் புற்றீசல் போல மாநில அளவிலும் தேசிய அளவிலும் ஊழல் நாகங்கள் கிளம்பிக் கொண்டேயிருந்ததில் எதைப் பற்றிப் பேசுவது, கவனிப்பது என்ற அளவில் மக்கள் குழம்பியே போயினர். ஊழல் செய்பவர்களும் கூட, இது வரையில் இந்தியாவில் ஊழலுக்காக யாரும் தண்டனை பெற்றதில்லை என்ற தைரியத்துடனும் கண்டுபிடிக்கப்பட்டால் கூட அதற்கு நிச்சயமாக ஒரு விலை உண்டு என்ற துணிச்சலுடனுமே இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சீரழிவின் அடுத்த நிலை ஊழியர்கள் இதையே சிறிய அளவில் லஞ்சமாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மேல்நிலையில் இருப்பவர்களே இவர்களை ஊக்குவிப்பவர்களாகவும், ஆதரிப்பவர்களாகவும் அதே சமயத்தில் கையும் களவுமாகப் பிடித்துத் தண்டனை கொடுப்பவர்களாகவும் மண்ணுள்ளிபாம்பெனத் திரிந்து கொண்டிருக்கின்றனர். லஞ்சம் இவர்களால் தொழிற்பட்டு, சமூகமயமாக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் காவல் துறைக்கு ஆளெடுப்பதில் மிகப் பெரிய அளவில் லஞ்சம் புழங்குவதைப் பற்றிக் குறிப்பிடும் ஒரு நீதிபதி, இது இன்னும் பத்தாண்டுகளில் இந்தியாவில் பெரும் குழப்பங்களும் வன்முறையும் நிகழ்வதற்குக் காரணமாக அமையலாம் என்று தன் வருத்தத்தைப் பதிவு செய்கிறார். இது ஒன்றும் புதியதல்ல. இந்தியாவில் அனேகமாக எல்லாத் துறைகளிலுமே பணம் வாங்கிக் கொண்டு பதவிகளில் ஆட்களை நியமனம் செய்யும் வழக்கம் இருந்துதான் வருகிறது. அண்மைக்காலத்தில் அதன் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருவதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலே நீதிபதி அவர்கள் கூறிய சொற்களை நாம் சமூகத்தின் எல்லாத் துறைகளுக்கும் விரிவுபடுத்திப் பார்த்தோமானால் எள் முனையளவு கூட மனசாட்சியற்ற ஒரு கூட்டத்தால் நாம் மேய்க்கப் பட்டுக்கொண்டிருக்கிறோமென்பது விளங்கும்.

நாட்டின் நெறிமுறைகளை முன்னெடுத்துச் செல்கின்ற காவல், சட்டம் ஆகிய துறைகள் இன்று முற்றிலும் சீரழிந்து விட்டன. ஆதாரத்துறைகளான மருத்துவம், கல்வி ஆகியவை வேரின்றி நிற்கின்றன. லஞ்சம் வாங்கியே போடப்பட்ட இந்தத் துறை சார்ந்த பதவிகள் இன்று லஞ்சம் கோரி நிற்கின்றன. அடிப்படை ஒழுக்கம், மனித நேயம், தகுதிகள் என் ஏதுமற்ற கூட்டமொன்று மேலே உட்கார்ந்து கொண்டு இன்னும் இன்னும் தனக்கேற்றபடி ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் கிராமங்களில், அந்தந்த ஊரில் கற்பிக்கும் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோர் ஊரின் முக்கியப் பிரமுகர்களாக இருப்பர். அவர்களைக் கலந்துகொண்டே ஊரின் எல்லா விஷயங்களும் முடிவெடுக்கப்படும் காலமொன்று இருந்தது. ஆனால் இன்றைக்குக் காலம் மாறி விட்டது. ஆசிரியர்கள் மாணவர்களிடமிருந்தே விலகி இருக்கின்றனர். மருத்துவர்கள் புரியாத மருந்துகளும் பரிசோதனைகளும் எழுதித் தந்துவிட்டு அதன் மூலமான வருமானத்தில் அயல்நாடுகளுக்கு உல்லாசப் பயணம் செல்லக் கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். காவல் நிலையங்களே எல்லாக் குற்றங்களின் கூடாரமாகத் திகழ்கிறது. நீதிமன்ற வளாகங்களே குற்றவாளிகளை வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைக்குக் காரணமென்ன?

ஆசிரியப் பணியை ஒரு தொழிலாகக் கருதாமல் ஆர்வத்துடன் அறப் பணியாகக் கருதும் போக்கு இருந்த காலத்தில் ஆசிரியர்கள் மதிக்கப்பட்டனர். பாடம் கற்பிப்பதோடு அவர்கள் பணி நின்று விடாமல், மக்களோடு கலந்து புழங்கும் தன்மை அவர்களிடையே இருந்தது. பள்ளி நேரம் முடிந்த பிறகும் கூட மாணவனின் வீடு சென்று அவனுடைய எதிர்காலம் பற்றிப் பெற்றோருடன் விவாதிக்கும், வழிகாட்டும் தன்மையை நாம் அவர்களிடம் பார்க்கலாம். படித்து முடித்த மாணவர்கள் கூட அவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றிருக்கின்றனர். தங்கள் தங்கள் துறையில் வல்லவர்களாகவும், அறிவுத் தளத்தை விரிவுபடுத்தியபடியே அக்கால ஆசிரியர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.

இன்றைய நிலை என்னவென்று பார்த்தால், ஆசிரியர்கள் மக்கள் விரோதப் போக்கின் பாதையில் கண்மூடித்தனமான வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். மாணவர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றனர். எதற்கும் சிணுங்காத, கோபமற்றதோர் தலைமுறையை உருவாக்கியதில் இவர்களுக்கும் பெரும்பங்குண்டு. தொழிலாகப் பார்க்கும் பார்வையும் லாப நோக்கத்தோடு செயல்படும் தன்மையும் விலக்கத்தன்மையை ஏற்படுத்தி விட்டது. வகுப்பறையில் கற்பிக்காமல் மாலை நேரச் சிறப்பு வகுப்புகள் நடத்துவதும் வட்டித் தொழில் செய்வதும் இவர்களை அசுர வியாபாரிகளாகக் காட்டி நிற்கிறது.

தங்கள் துறை சார்ந்த அறிவையும் இழந்து, பணத்தை மட்டுமே கணக்கிட்டு எண்ணிக் கொண்டிருப்பதால் இவர்கள் மாணவர்களின் மரியாதையை இழந்து நிற்கின்றனர். இதைச் சற்றும் பொருட்படுத்தாத ஒரு வியாபாரக் கூட்டம் வேகமாக உருவாகிப் பெருகிக் கொண்டிருக்கிறது. லஞ்சம் கொடுத்து வந்த ஆசிரியர்கள் இன்று மாணவர்களின் ரத்தத்தைக் குடிக்கும் அட்டைப் பூச்சிகளாகி விட்டனர். அதனால்தான் நாளிதழ்களைத் திறந்தால், ஆசிரியர்களைப் பற்றிய மிக மோசமான செய்திகளை நாம் காண முடிகிறது. பள்ளியிலிருக்கும் பெற்றோர் என்று மிக உன்னதமாகக் குறிக்கப் பட்ட ஆசிரியர் இன்று பள்ளிக்குக் குடித்து விட்டு வருவதும், மாணவிகளைப் பாலியல் வன்புணர்வு செய்வதும், அருவருக்கத்தக்க மொழியைப் பயன்படுத்துவதும் என எந்தவித நெறிமுறையுமற்ற, மனசாட்சியற்ற ஒருவருமாக மாற்றம் பெற்று விட்டார் என்பது சமூகத்தின் மிக இழிந்த நிலையைச் சித்திரப் படுத்துவதாக உள்ளது.

இறைவனுக்குச் சமமாக வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் சமூகம் இன்றைக்குத் தகுதியான ஆளுமை பெற்றிருக்கிறதா என்ற கேள்வி எழும்புமானால் அதன் பதில் நாம் அனைவரும் அறிந்ததே. இம்மாற்றத்திற்குக் காரணம், ஈசலெனக் கிளம்பியிருக்கும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் அதன் வழி அரைகுறையாகப் பயிற்றுவிக்கப்படும் ஆசிரியப் பயிற்சி மாணவர்களும் பெருகியிருப்பதே. மிகுதியான மாணவர்கள் வெளிவருகையில் அவர்களுக்கான வேலை இல்லாதபோது, அதனைப் பெற எவ்வளவும் கொடுக்கத் தயாராக இருக்கின்றனர். ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கான அனுமதியும் இத்தகைய வழியில் பெறப்பட்டதே. லஞ்சம் கொடுத்துப் படித்து, லஞ்சம் கொடுத்து வேலை வாங்கும் இந்தக் கூட்டம் போட்ட முதலீட்டை எடுக்கும் முயற்சியிலேயும் சிந்தனையிலுமே திளைத்திருக்கின்றனர். எனவே அறிவை விரிவாக்குவதற்கான நேரமோ, ஆர்வமோ அவர்களிடம் இருப்பதில்லை. குறைந்தபட்ச ஒழுக்கம் கூட இல்லாத இந்த மனிதர்களால் ஆசிரியப் பணி தன் மாண்பினை இழந்து நிற்கிறது. இன்றைக்கும் எஞ்சியிருக்கும் நிஜமான நல்லாசிரியர்கள் இவர்களுக்கிடையில் சிக்கித் தவித்து எள்ளி நகையாடப்பட்டு நிற்கின்றனர். இத்தகையோரால் உருவாக்கப்படும் மற்ற எல்லாத் துறை மக்களும் பெரும்பான்மையாக சீரழிக்கப்பட்ட சிந்தனைகளுடனே உலா வருகின்றனர்.

இப்படி, சமுதாயத்தின் அடிப்படையான துறைகள் பலவற்றிற்கும் இக்கருத்தை விரிவுபடுத்திப் பார்த்தால் இன்றைய படு மோசமான நிலையின் காரணத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அதற்கான தீர்வு, நம் எல்லோரின் கையிலும் தான் உள்ளது. இனி விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கூட குற்றத்தின் எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருக்கும் நாளைய மன்னர்களை, வருங்காலத் தலைமுறையினரைக் காப்பாற்றி விடலாம்.

- தி.பரமேசுவரி

Tuesday, December 7, 2010

காஞ்சியில் 'அம்பேத்கர்'

அம்பேத்கர் படம் தமிழில் வெளியாகிறது என்று கேள்விப்பட்டவுடனே பார்க்க வேண்டுமென்று மிக மகிழ்ச்சியாக மனத்துள் குறித்து வைத்துக் கொண்டேன். 1997 இல் தொடங்கிய திரைப்பட வேலைகள் 1998 லேயே முடிந்து விட்டது. ஜாபர் பட்டேல் என்ற மராத்தி இயக்குநர் இயக்கியுள்ளார். பலவிதமான இடையூறுகளைத் தாண்டி இப்படம் இப்போதுதான் தமிழில் வெளியாகிறது என்பது கவனிக்க வேண்டிய செய்தி. தமிழ் தவிர மற்ற மொழிகளில் இப்படம் எப்போதோ வெளி வந்து விட்டது. தமிழ் நாட்டின் வழக்கமான திராவிடத் தந்திரங்கள், பார்ப்பனீயக் குறுக்கீடுகள் இவற்றைத் தாண்டிப் படம் ஒரு வழியாக இந்த மாதம் 3ஆம் தேதி தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட இடங்களில் வெளியிடப்பட்டது. அன்று நான் வெளியூரில் இருந்தேன். எப்படியும் ஒரு வாரமாவது படம் ஓடுமென்கிற அதீத நம்பிக்கை வேறு.

பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் 6ஆம் தேதி மாலை காஞ்சிபுரத்தில் உள்ள நாராயணமூர்த்தி திரையரங்கிற்குச் சென்ற போது 'நான்கு வேளைக் காட்சி என்பது, கூட்டம் இல்லாத காரணத்தால் ஒரு வேளையாக்கப்பட்டு விட்டது, காலைக் காட்சி மட்டும்தான்' என்று சொன்னார்கள். காலைக்காட்சி எப்படிப் போக முடியும்? எல்லா விடுமுறைகளையும் எடுத்தாகி விட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டே வீடு வந்து சேர்ந்தபோது, மழை காரணமாக 7ஆம் தேதியும் அரசு விடுமுறை  என்ற அந்த நல்ல செய்தியைத் தொலைக்காட்சி சொன்னது. மனத்துள் என் அதிர்ஷ்டத்தை எண்ணி மகிழ்ச்சியடைந்தபடி, அடுத்த நாள் மறுபடியும் நான் வசிக்கும் ஊரிலிருந்து 30 கி.மீ தள்ளியுள்ள காஞ்சிபுரத்திற்குக் கஜினி முகமது படையெடுத்தது போல் காலை எட்டுமணிக்கே ஒரு நண்பரோடு கிளம்பிப் பத்து மணிக்குத் திரையரங்கிற்கு சென்றால், அம்பேத்கர் படத்தின் தட்டியை இரு திரையரங்கு ஊழியர்கள் தரையில் விரித்து மடித்துக் கொண்டிருந்தனர். என்ன என்று அதிர்ச்சியோடு கேட்டால், 'பத்து பேருக்காக எப்படிப் படம் ஓட்ட முடியும்?' என்று நம்மையே திருப்பிக் கேட்டு விட்டு, சிரித்துக் கொண்டே சென்று விட்டார்கள்.எத்தனை இலக்கிய, சமூக, அரசியல் அமைப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன, அவையெல்லாம் இப்படிப்பட்ட ஒரு மகத்தான தலைவனின் வரலாற்றுப் படத்துக்கு ஆதரவு அளித்திருக்கலாமே, தலித் தலைவராக அவரைக் குறுக்கிப் பார்க்காவிட்டாலும் தலித் அமைப்புகளாவது படம் திரையிடப்படுவதில் அக்கறை காட்டியிருக்கலாமே என்று யோசித்தேன். அரசு தன் சின்னப்புத்தியை எல்லாம் ஒதுக்கி விட்டு, அதிகாரக் குரலைச் சுருட்டிக் கொண்டு இந்தப் படத்திற்கு ஆதரவளித்திருக்க வேண்டுமென்று நினைத்தேன். 10 லட்சம் பணம் மட்டும் கொடுத்தால் போதுமா? மூன்று நாளில் தியேட்டரை விட்டு எடுக்கப்பட்ட படத்துக்கு ரூபாயைக் கொடுத்து எதைச் சரிக்கட்ட நினைக்கிறது இந்த அரசு? வானளாவிய அதிகாரத்தைக் கொண்டிருக்கும் அரசு இயந்திரம் நினைத்தால், மாணவர்களுக்கெல்லாம் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ இப்படத்தைத் திரையிட முடியும். ஆனால் யாரும் எதுவும் செய்யாமல் கை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

அம்பேத்கர் நம் நாட்டின் அரசியல் சாசன வரைவுக்குழுவின் தலைவர். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர். பல்வேறு துறைகளில் ஆய்வு செய்து பல முனைவர் பட்டங்களைப்    பெற்ற சீரிய சிந்தனையாளர். ஒடுக்கப்பட்ட சமூகத்தில், பொருளாதார நிலையில் பின் தங்கிய இடத்தில் பிறந்தாலும் முயற்சி இருந்தால் முன்னேற முடியும் என்று உலகுக்கு உணர்த்தியவர். அவரது வாழ்க்கை வரலாற்றை, ஒரு சமூக முன்னகர்வின் வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிய வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தும், அது தங்களுக்கு எதிர்மறையான விளைவுகளைத் தரும் என்பதற்காக இன்றைய தலைவர்கள் மூடி மறைக்கப் பார்ப்பதும் அதற்கு அம்பேத்கர் பேரைச் சொல்லி அரசியல் செய்பவர்கள் கூடக் கூட்டாக இருப்பதும் மிக இழிவானது. தமிழகத்தில் சிறுத்தையின் உறுமல் பூனையின் 'மியாவ்' ஆக மாறிப் பல காலம் ஆகி விட்டது.
  
படம் திரையரங்கை விட்டு எடுக்கப்பட்ட சோகத்தையும், பார்க்க முடியாத வருத்தத்தையும் மனத்தில் சுமந்தபடி திரையரங்கை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தேன். வாசலில் ஒரு தலித் அமைப்பின் குட்டித் தலைவர் உயரமாக நின்று சிரித்தபடி அம்பேத்கர் படம் திரையிடப்பட்டதற்கான தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். மற்றொரு பக்கம், வெற்றிகரமான அரங்கம் நிரம்பிய 20ஆவது நாளுக்கான தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி, நகரம் பட சுவரொட்டியில் தமிழ் மக்களுக்கு நன்றி பாராட்டிக் கொண்டிருந்தார் சுந்தர்.சி. வாழ்க தமிழர், வாழ்க தமிழ்நாடு, நாமதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்.