Showing posts with label தி.பரமேசுவரி. Show all posts
Showing posts with label தி.பரமேசுவரி. Show all posts

Monday, May 13, 2013

சித்ராவும் கடவுளும் தனிமையும்



நன்றி: தினமலர் பெண்கள் மலர்.


கைகள் மேசையில் இருந்த கோப்புகளை அடுக்கிக் கொண்டிருந்தாலும் சித்ராவின் கண்கள் கடிகாரத்துக்குச் சென்று மீண்டது. மணி 5.30 ஆச்சா.. அப்ப எல்லாத்தையும் எடுத்து வைக்க வேண்டியதுதான் மனசுக்குள் நினைத்துக்கொண்டே அந்த அலுவலகத்தின் கழிவறைக்குப் போனாள். அவளைப் போலவே இன்னும் பலர் நிற்பதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள். மனசுக்குள், செய்ய வேண்டிய வேலைகள் ஒரு முறை வந்து போனது.

துணி துவைக்கணும்.. மூணு நாள் துணி, சேர்ந்து போயிருக்கு. போகும்போதே காய்கறி பால் எல்லாம் வாங்கிட்டுப் போகணும். காலையில் இஸ்திரி போடக் கொடுத்த துணியை வாங்கி வைக்கணும்.. தையல்காரர் ஜாக்கெட் தைச்சி முடிச்சிருந்தா அதிர்ஷ்டம்.. நாளைக்கு வெள்ளிக்கிழமை.. புதுப்புடவை கட்டிட்டுப் போகலாம் மனத்தின் அலைவரிசையில் எண்ணங்கள் ஒரு பக்கம் ஊர்வலம் போய்க்கொண்டிருக்க, தெரிந்த முகங்களுக்கு ஒரு புன்னகையைப் பரிசளித்து, முகம் கழுவிக்கொண்டு தன் இருக்கைக்கு வந்தாள். பையை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாகப் பேருந்து நிலையத்திற்குப் போனாள். திரும்பிப் திரும்பிப் பார்த்துத் தன் பேருந்துத் தோழி சுபாவைத் தேடிக்கொண்டிருக்கும்போதே, PP66 மூச்சுத் திணறலின் முனகல் சப்தத்தை வெளியிட்டபடி வந்து நின்றது.

இரு புறமும் பேருந்துகள் நிறையத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இவ்வளவுநேரம் இந்தக் கூட்டம் எங்கேதான் இருந்ததோ என்று புலம்புமளவுக்கு முட்டித்தள்ளிக்கொண்டு ஏறினர். சித்ராவுக்குச் சற்றே படபடப்பாக இருந்தது என்றாலும் எப்படியோ முண்டித்தள்ளி ஏறி, ஒரு இருக்கையைப் பிடித்து உட்கார்ந்தாள். கடவுளின் ஆசீர்வாதம் அன்றைக்கு முழுமையாக இருந்தது என்று நினைத்தாள்; அது ஜன்னலோர இருக்கை. படபடப்பு குறைந்து, காதில் வாக்மேனைச் செருகினாள். சுதா ரகுநாதனின் குறையொன்றுமில்லை மனத்தை மெல்ல இயல்புக்குக் கொண்டு வருவதை உணர்ந்தபடியே குறையொன்றுமில்லைன்னு சொல்லியேதான் நம் குறைகளை மறக்கணும்போல என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

நடத்துநர் கிட்டே வந்து விட்டிருந்தார். பூந்தமல்லி என்று சொல்லிச் சில்லறை கொடுத்தாள். அவ்வப்போது பார்ப்பதால் ஏற்பட்ட பரிச்சயத்தில் அவள் சொல்லுமுன்னாலேயே சீட்டைக் கிழித்துக் கையில் கொடுத்துவிட்டுச் சில்லறையைப் பையில் போட்டபடியே கூட்டத்தைப் பொருட்படுட்தாமல் முன்னால் நகர்ந்தார்.

காது பாட்டுக்குள் ஆழ்ந்துபோக, குளத்தில் எழும் வட்ட வட்ட அலைகளைப் போல மீண்டும் மனத்துள் வீட்டு வேலைகள் நினைவுக்கு வர, முதலாவது அடுத்தது என்று வரிசைப்படுத்தத் துவங்கினாள். நிறுத்தம் வருவதற்குச் சற்று முன்னரே எழுந்து மெல்ல மெல்ல நகர்ந்து படிக்கட்டுக்கருகே உள்ள கம்பியைப் பிடித்து நின்றாள். ஒரு குலுங்கலுடன் நின்ற பேருந்திலிருந்து மலர் உதிர்வது போல இறங்கினாள். ரொம்பக் களைப்பாக இருந்தது. கைப்பையை எடுத்துத் திரும்பி மாட்டிக்கொண்டு, கையிலிருந்த பெரிய பையில் இருந்த அலுவலகக் கோப்புகள் சிலவற்றை ஓரமாக நகர்த்திவிட்டுக் கீழே காய்கறி வாங்க வைத்திருந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து மேலே வைத்தபடி நகர்ந்தாள்.
சித்ராவின் உடலில் இரும்புக்குண்டு வைத்துக் கட்டியதுபோல வலித்தது. பை கனத்தது. வீட்டுக்குப் போக ஆட்டோ வைத்துக் கொள்ளலாமா என்ற யோசனையை உடனே புறந்தள்ளியவளாய்க் களைத்துப்போன கால்களை மெல்ல அடியெடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தாள். சூரியன் விழுந்துவிட்டது. பத்து நிமிட நடையில் வீடு என்றாலும் நடக்க நடக்க வீடு இன்னும் தள்ளித் தள்ளிச் செல்வதுபோலத் தோன்றியது. மூச்சு வாங்கியது. நாக்கு வறண்டது. உடலெங்கும் வியர்வைக் கசகசப்பு. காய்கறிக் கடையில் சுமைப்பையை இறக்கி வைத்து ஆசுவாசத்துடன் அடுத்தநாள் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை மட்டும் வாங்கிக்கொண்டாள். அடுத்த ஐந்துநிமிட நடையில் ஆவின் பால்கடை. பெரியவருக்கு அவள் மேல் கொஞ்சம் கரிசனம். வாடிய முகத்துடன் வரும் அவளிடம் கனிவுடன் விசாரிப்பார். பால் வாங்கிக்கொண்டு மெதுவாக நடையைத் தொடர்ந்தாள். இதோ ஆரஞ்சு வீடு.. இன்னும் கொஞ்சதூரம்தான்.. நாடார் கடையும் வ்ந்துருச்சு.. தனக்குத்தானே ஆறுதல் சொல்லியவளாய்த் தான் குடியிருக்கும் நீல வண்ண வீட்டைக் கண்டதும் அப்பாடா, கொஞ்சசேரம் தரையில் அப்படியே படுத்துரணும் என்று நினைத்தபடி படியேறினாள். பையில் எப்போதும் சாவிகள் வைத்திருக்கும் ஜிப்பைத் திறந்து கை விட்டாள். அடிவயிறு சிலீரென்றது. சாவியைக் காணோம். எப்பவும் இங்கதானே வைப்போம்.. பரபரப்பாய்த் தேடத் தொடங்கினாள். பூட்டியிருந்த வீடு அவளுடைய களைப்பை இன்னும் அதிகப்படுத்தியது. பை முழுக்கத் தேடியும் இல்லை என்று உறுதிப்படுத்தியபிறகு என்ன செய்வது என்ற கேள்விஎழுந்தது.

இரண்டு மூன்று தெரு தள்ளி அகிலா மிஸ் வீடு இருந்தது. தெரிந்தவர்தான். அவர் வீட்டுக்குப் போவோமா? அவ்வளவுதூரம் நடக்கக்கூடத் தெம்பே இல்லையே. யாரிடம் எரிச்சல் கொள்வதெனத் தெரியாமல் தன்னையே திட்டிக் கொண்டாள். பையில் வைத்த சாவி எப்படிக் காணாமல் போகும்? தன்னையே சபித்துக்கொண்டு காலையிலிருந்து நடந்ததை மனத்துக்குள் அசை போட்டாள். எப்போதும் சித்ராதான் வீட்டைப் பூட்டிவிட்டு இறங்குவாள். சித்ரா, பிரகாஷ் இருவருமே ஆளுக்கொரு சாவி வைத்திருந்தனர். சித்ராதான் முதலில் வருவாள். அதற்கே 6.30, 7 ஆகி விடும். மின்சாரம் இருக்கும்போதே அரைக்க வேண்டியதை எல்லாம் முடித்து விடுவாள். வீடு பெர்க்கி, சாமி விளக்கேற்றி, துணி துவைக்க வேண்டியிருந்தால் இயந்திரத்தில் போட்டு எடுத்து அக்கடா என்று உட்காரும்போது மின்சாரம் போய்விடும். அப்போதுதான் பிரகாஷ் வந்து சேருவான்.

சென்னையின் மையப்பகுதியில் உள்ள அரசு அலுவலகத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்களில் அவனும் ஒருவன். காலை இருவருமே அவசர அவசரமாகக் கிளம்பி அலுவலகத்துக்கு விரையும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். இவளை நிறுத்தத்தில் இறக்கிவிட்டுப் பாதி வழி தன் வண்டியில்போத் தெரிந்தவர் ஒருவரின் கடையில் நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்து பிடித்துத் ட்ஹன் அலுவலகத்துக்கு விரைவான். காலை அவசரத்தில் பிரகாஷ் அவள் கையிலிருந்த சாவியைப் பிடுங்கிப் பூட்டியது சித்ராவுக்கு நினைவுக்கு வந்தது. அச்சச்சோ.. அவன் சாவியைத் திருப்பித் தரவே இல்லையோ.. வீட்டு வாசலில் நின்று தன் தலையில் அடித்துக் கொண்டாள். அமைதி என்று பதற்றமடையும் மனத்துக்கும் துவளும் தன் கால்களுக்கும் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டாள்.

நேற்று இரவே உப்புச்சப்பில்லாத ஒரு விஷயத்துக்கு இருவரும் கடுமையாகச் சண்டையிட்டுக்கொண்டது நினைவுக்கு வந்தது. தனக்குத் தானே ஆயிரம் அறிவுரைகளைச் சொல்லியபடி தன் பதற்றத்தை வெளிக்காட்டாமல் பிரகாஷுக்குத் தொலைபேசினாள். பிரகாஷும் இரவுச் சண்டையை நினைவுகூர்ந்தவனாய், எரிச்சலுடன், சாவியை ஞாபகமா வாங்கி இருக்கலாம்ல என்று கேட்டபோது தன் அறிவுரைகளை எல்லாம் ஒரு கணத்தில் கைவிட்டவளாய், நீங்கதான் கொடுத்திருக்கலாம்ல என்று வெடித்து விட்டுப் பின் நாக்கைக் கடித்துக்கொண்டே, ஒண்ணும் பிரச்சனையில்லே. நீங்க வர்றவரைக்கும் நான் அகிலா மிஸ் வீட்ல இருக்கேன். நீங்க பதற்றப்பட்டு வேகமால்லாம் வண்டிய ஓட்டிக்கிட்டு ஓடி வர வேணாம். நிதானமா வாங்க என்று சொல்லிவிட்டுக் கைபேசியை அணைத்தாள்.
அகிலா மிஸ் வீட்டில் இருப்பார்களா என்று தெரியவில்லை. எதற்கும் பேசிவிட்டுப் போவோமென்று நினைத்து அகிலாவுக்குப் பேசிய சித்ராவுக்கு ஏமாற்றம்தான். யாரும் எடுக்காமல் ஒரு இனிமையான பாடலைப் பாடியபடி நின்றுபோனது. பாடலை ரசிக்கவும் மனமின்றி என்ன செய்வது என்ற யோசனையுடன் நின்றவளுக்குத் தான் வெகுநேரமாக வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருப்பது உறைத்தது. பக்கத்து வீட்டில் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று நினைக்கும்போதே தெருவில் யாரோ இருவர் பேசிக்கொண்டுபோன குரல் கலைத்தது. அதில் கோயில் என்ற சொல்லைச் சித்ரா கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். ஆமாம், யாரையுமே தொந்தரவும் செய்ய வேண்டாமே, பக்கத்தில் இருக்கிற ஏதாவது ஒரு கோயிலில் போய் உட்காரலாம். பிறகு கடவுள் விட்ட வழி என்று நினைத்தவளாய் இரண்டு சந்து தள்ளியிருந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றாள்.

நல்லவேளை கருவறை பூட்டியிருந்தாலும் வெளிக்கதவு திறந்திருந்தபடியால் உள்ளே நுழைந்து அமர்ந்தாயிற்று. கொஞ்சநேரம் அமைதியாய் உட்கார்ந்தாள். யாருமற்ற அந்தக் கோயிலில் தானும் கடவுள்களுமாக உட்கார்ந்திருப்பது சற்றே வித்தியாசமாக இருப்பதாகப் பட்டது. பக்கத்தில்தான் இருந்தும் இதுவரையில் அந்தக் கோயிலுக்கே வந்ததில்லையென்பதும் அசந்தர்ப்பமாய் நினைவுக்கு வந்தது. பையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, எழுந்து கோயிலை ஒரு முறை சுற்றி வந்தாள். ரொம்பச் சின்னதாகவுமில்லாமல், பெரியதாகவுமில்லாமல் இருந்தது. ஒரு சிறிய கிணறும் ஒழுங்கில்லாமல் வளர்ந்திருக்கும் மலர்ச்செடிகளும் சிறிய பிரகாரமும் அதில் உள்ள தேவதைகளுமாக எல்லாமே மனத்துக்கு இதம் தந்தது. சுற்றிவிட்டு வந்து அமர்ந்துகொண்டாள். கைபேசியை எடுத்துத் தான் கோயிலிலிருப்பதையும் சண்டைபோடும் மனநிலையில் இல்லை என்பதையும் ஒரு குறுஞ்செய்தியாக அவனுக்குத் தட்டிவிட்டு, பாட்டியுடன் வரும் இரு குழந்தைகளை வேடிக்கை பார்க்கத் துவங்கினாள்.


கொசுக்கள் நடமாட்டம் தாங்க முடியவில்லை. புடவையை எடுத்துத் தன் உடலைப் போர்த்திக் கொண்டாள். அப்போதும் வெளிப்பட்டிருக்கும் உடலின் மிகச் சில இடங்களைத் தேடிக் கண்டுபிடித்து இப்போ என்ன செய்வீங்க என்று பாடிக் கொண்டிருந்தன கொசுக்கள். அதைத் தன் இரு கரங்களாலும் தட்டித்தட்டி வரவேற்றவளைத் தன் இனிய கீதத்தால் அவை மகிழ்வித்தன. பாட்டியும் ஒரு பெருமூச்சுடன் அவளைப் பார்த்தபடி அமர்ந்தாள். குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடத் தொடங்கின. சிறிது நேரம் அதை வேடிக்கை பார்த்தபடி இருந்தவள், அலுவலகத்துக் கோப்புகளை எடுத்து வைத்து விட்ட வேலையைத் தொடர ஆரம்பித்தாள்.  ஒரு வழியாகக் குருக்களும் அவருடைய மகனும் குடம், நைவேத்தியம் சகிதமாக வந்து சேர்ந்தனர். இன்னும் ஒரு பெண், தன் சிறு குழந்தைகளுடன் வந்து சேர்ந்தாள். அவள் குருக்களுக்கு முன்னரே அறிமுகமானவள் போல.. அவளை வாழ்க வளமுடன் என்று வரவேற்றவராய்க் குழந்தைகளைக் கொஞ்சினார். வாய் வருபவர்களிடமெல்லாம் பேசிக்கொண்டிருக்க, தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருந்தார். பூட்டியிருந்த கதவைத் திறந்து உணவை உள்ளே வைத்தார். சிறுவன், குடத்தை எடுத்துப்போய்க் கிணற்றிலிருந்து நீரெடுத்து வந்து கொடுக்க, உள்ளே இறைவனுக்கு நீராபிஷேகம்.. பூ அலங்காரம்.. புரியாத மொழியில் பூசை.. கொண்டு வந்திருந்த ஒரே தட்டு உணவை மூலவருக்கும் பிரகாரத்தில் உள்ள தேவதைகளுக்கும் சுற்றிக் காண்பித்துவிட்டு மீண்டும் பத்திரமாகத் தான் கொண்டு வந்திருந்த கூடையில் எடுத்து வைத்துக் கொண்டார். வேடிக்கையாக இருந்தது சித்ராவுக்கு. சிரிப்பும் வந்தது. கோப்புகளை ஓரமாக வைத்துவிட்டு, எழுந்து நின்று பூசையில் கலந்து கொண்டு, கற்பூர ஆரத்தியைக் கண்களில் ஒத்திகொண்டு நின்றாள். அந்தக் குழந்தைகள் கம்பியின்மீதேறி விளையாடிக் கொண்டிருந்தன. பெண் குழந்தையின் முட்டியில் கட்டுப் போடப்பட்டிருந்ததைக் குருக்கள் விசாரித்துக் கொண்டிருந்தார். சித்ராவும் அப்போதுதான் அதைக் கவனித்தாள். அந்த அம்மாவுக்குக் கண்களில் கண்ணீர் துளிர்த்து விட்டது. குழந்தைக்கு இன்றைக்குப் பிறந்தநாளென்றும் கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டாளென்றும் குருக்களிடம் குறைபட்டுக் கொண்டவளாய், குழந்தைகளின் பேரில் அருச்சனை செய்யச் சொன்னாள்.
மீண்டுமொருமுறை வாழ்க வளமுடன் என்று அவளுக்கு ஆறுதல் சொன்னவராய் அருச்சனை செய்து குழந்தையின் நெற்றியில் குங்குமம் வைத்துத் தன் வாழ்த்துகளைச் சொன்னார். சித்ரா தூணோரம் அமர்ந்தவளாய்க் குருக்களையே கவனித்துக் கொண்டிருந்தாள். மணி எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது. இடையில் வரும் ஒவ்வொருவரிடமும் வாழ்க வளமுடன் என்று சொல்லிக்கொண்டே தெரிந்தவர்களைப் பெயர் சொல்லி அழைத்தும் விசாரித்தும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். அவருடைய மகன் தண்ணீர் எடுத்துக் கொடுத்து விட்டு ஓடி விட்டிருந்தான். கோயிலின் ஒரு ஓரத்திலிருந்த ஒற்றை அறைக்குள் சென்று ஏதோ செய்து கொண்டிருந்தார். மின்சாரம் வந்த ஒரு அரைமணி நேரம் பக்திப் பாடல்களை மைக் மூலமாகப் போட்டிருந்தது கூட அந்த நேரம் இதமாகவே இருந்தது. இப்போதெல்லாம் எல்லாக் கோயில்களிலும் மின்சாரத்தின்மூலமாகவே இயங்கும் மேளங்கள் இங்கும் இருந்ததைக் கவனித்தாள்.

கூட்டம் மெல்ல மெல்லக் குறைந்தது. இடையில் வந்த ஒரு அலைபேசி அழைப்பைத் தவிர்க்க முடியாமல், கோயிலில் நிற்கும் சங்கடத்துடனே பேசி வைத்தாள். குருக்கள் கிளம்பிடுவாரோ என்ற எண்ணம் எழுந்ததும் பகீரென்றது. கோயிலைப் பூட்டினால், இப்போது எங்கே போவது என்று பயந்தாள். படியில் அமர்ந்திருந்த குருக்களிடம் சென்று கோயில் நடை சாத்தும் நேரத்தை விசாரித்தாள். ஒன்பதாகி விடுமென்ற அவருடைய பதில் சில்லென்று அவளுடைய வயிற்றில் இறங்கியது. சாவி கணவரிடம் சிக்கிக் கொண்ட கதையை அவரிடம் சொல்லி, அவர் வரும்வரையில் அவளுக்குப் போக்கிடமில்லையென்பதையும் உணர்த்திவிட்டு மீண்டும் தான் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தாள். அலுவலகக் கோப்புகளைக் கையிலெடுத்து அமைதியாகத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். இடையில் ஓரிருவர் கோயிலுக்கு வந்து போயினர். பிரகாஷ் ஒரு முறை பேசினான். பேருந்து ஊர்ந்து கொண்டிருப்பதைச் சொல்லித் தவித்தான். பாவமாக இருந்தது. தான் ஒரு குறையுமில்லாமல் கோயிலுக்குள் உட்கார்ந்திருப்பதைச் சொல்லித் தாமதமானாலும் பரவாயில்லையென்றாள்.

அகிலா மிஸ்ஸின் வீட்டுக்காரர் மற்றொருவருடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். அவளைப் பார்த்ததும் சற்றே ஆச்சரியமாகப் புன்னகைத்தபடி விசாரித்தார். அவள், சற்றே சங்கோதத்துடன் மீண்டும் தன் சாவிக் கதையைச் சொல்லிவிட்டுக் கோப்புக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். தெரிஞ்சவாளா என்று அவரிடம் என்னைப் பற்றி விசாரித்தார் குருக்கள். பிறகு அவர் கொண்டு வந்திருந்த ஜாதகம் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். எதையும் காதில் வாங்காதவளாய்த் தன் வேலையில் மூழ்கி அதையும் ஒரு வழியாய் முடித்தவளை மறுபடியும் அலைபேசி சிணுங்கி அழைத்தது. பிரகாஷ்தான். வந்துவிட்டிருப்பானென்று பரபரத்தவளை வண்டி பங்க்சர் என்ற அவனுடைய தவித்த சொற்கள் காலி செய்தது. மீண்டும் தன்னை நிதானித்துக்கொண்டவளாய், ஒன்றும் அவசரமில்லை. நான் இங்கேதான் இருக்கேன். பசியில்லை. குருக்கள் இருக்கார்.. சாமியெல்லாம் கூட துணைக்கு இருக்காங்க.. மின்விசிறி கூட இப்போ சுத்த ஆரம்பிச்சுடுச்சு என்று தான் இயல்பாய் இருப்பதை அவனுக்குத் தெரிவித்து, வேலையை முடித்துக் கொண்டு வரச் சொன்னாள். 
அகிலா மிஸ்ஸின் வீட்டுக்காரர் ஏதோ ஒரு உறவினரின் மகன் திருமணம் தள்ளிப் போவதைப் பற்றிச் சொல்லிக் குருக்களிடம் கவலைப்பட்டார். பிரகாஷின் வண்டி ஓசை கேட்டது. சித்ரா அயர்ச்சியில்லாமல் மெதுவாக எழுந்து நின்றாள். வீட்டிலிருந்தால் கூட இவ்வளவு ஓய்வாக இருந்திருக்க மாட்டோமென்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள். பிரகாஷ் பயந்தவனாய், அகிலா மிஸ்ஸின் வீட்டுக்காரரைப் பார்த்துச் சிரித்துக் கை குலுக்கி, நலம் விசாரித்துவிட்டு, போகலாமா? என்றான். இருவருமாக கோயிலைச் சுற்றி வந்து வணங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டு, கீழே விழுந்து வணங்கி விட்டு, சாஸ்திரத்துக்கு அமர்ந்து எழுந்தனர். பிரகாஷ் அவளுடைய கனத்த பையைத் தன் கையில் வாங்கிக் கொண்டு வண்டியை நோக்கி நடந்தான்.

குருக்கள் மீண்டும் அந்தப் படியில்போய் அமர்ந்து கொண்டார். கோயிலில் யாருமேயில்லை. குருக்களுடைய மகன் வந்து பிரகாரத்துக் கதவுகளைப் பூட்டத் தொடங்கினான். கருவறையில் இருந்த கடவுளைப் பார்த்தபடியே வெளியே வந்த சித்ரா மெல்ல வண்டியில் ஏறி அமர்ந்தாள். ஏனோ  கடவுளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. திரும்பிப் பார்த்தபடியே சென்றாள். பிரகாஷ் அன்று பார்த்து வண்டி பங்க்சர் ஆன கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான். காதில் வாங்கியும் வாங்காமலும் கேட்டுக் கொண்டிருந்தவளைசமைக்க வேண்டாம்; நான் வாங்கிக்கிட்டு வந்துடுறேன் என்ற குரல் கை பிடித்து இழுத்தது.  ஒரே சமயத்தில் லேசாகவும் வருத்தமாகவும் இருக்கும் தன் மனத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.    

Friday, December 16, 2011

யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம், எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்


- தி. பரமேசுவரி 

"எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்" 

இது பாரதிதாசனுடைய கவிதை வரிகள். படைப்பாளர் என்பவர் அந்தர வெளியிலே சஞ்சரித்தபடி மண்ணிலே கால் பாவாமல் வாழ்பவர் அல்லர். மண்ணின் விஷயங்கள் எவரைப் பாதிக்கின்றனவோ, எவரைச் செயல்படத் தூண்டுகிறதோ அவரே நல்ல படைப்பாளி என்பது என்னுடைய மிகத் தாழ்மையான கருத்து. இங்குச் செயல்படுதல் என்னும் சொல்லின் மூலம் யாரையும் கத்தி எடுத்துப் போரிடச் சொல்லவில்லை. இன்றைக்கு நாம் அட்டைக் கத்திக்கும் வக்கில்லாதவர்களாகத்தான் ஆகிக் கொண்டிருக்கிறோம்.

"  மன்னவனும் நீயோ வள நாடும் உனதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்"

என்று அறம் பாடிய மண் இது. இங்குதான் இன்றைக்குப் படைப்பாளர்கள் மிக அழுத்தமாகத் தன் வாயை ஃபெவிகால் போட்டு ஒட்டிக் கொண்டிருக்கும் அவலமும் நடந்து கொண்டிருக்கிறது. 'பரமக்குடியா? அது எங்கே இருக்கிறது?', 'கூடங்குளமா? எனக்கு ஒன்றும் தெரியாது'. அட, இதற்கெல்லாம் வாய் திறக்காத எழுத்தாளர் இருக்கலாம். ஆனால் அவரையும் நேரடியாகவே பாதிக்கும் நூலக மாற்றத்திற்காவது குரல் கொடுத்திருக்க வேண்டும். ம்ஹூம் எதற்கும் வாய் திறக்காத அழுத்தக்காரர்கள்தான் உலக மகா இலக்கியங்களைப் பற்றியெல்லாம் வாய் கிழியப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உலகப் புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது கூட, அதைப் பாதுகாத்து நமக்குக் கையளிக்கின்ற நூலகம் இட மாற்றம் செய்யப்படும் கொடுமையைக் கோடி காட்டியிருக்கலாமே!

எஸ். இராமகிருஷ்ணன்
நேற்று சென்னையில் நடந்த பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் நூல் வெளியீட்டு விழாக் கூட்டம். எஸ். இராமகிருஷ்ணன் பேசுகிறார். அருமையாக, அற்புதமாகப் பேசுகிறார். கிணறு பற்றிய ஒரு கதையைப் பேசத் தொடங்கி கிணற்றின் வகைகள், நீராதாரம் கண்டுபிடிப்பவர் பற்றிய தகவல்கள், கிணறு நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள தன்மை தொட்டு நீரைப் பற்றி உரை நீள்கிறது. நீர் குளிர்ச்சி; தண்மை; நீரோடான நம் வாழ்வின் பிணைப்பு; இறப்பு வீட்டில் துக்கம் கேட்க, நீரைத் தொட்டுத் துக்கத்தில் உள்ளவரின் கைகளில் விடும் மரபு என்றெல்லாம் சொல்லி நீர் நம்மைச் சாந்தப்படுத்தும், அமைதிப்படுத்துமென்று முடிக்கிறார். நீர் பற்றிய பேச்சு வந்தவுடனே மனத்திலே முல்லைப் பெரியாறு நிழலாடுகிறது. நீர் அமைதிப்படுத்தும் என்று அவர் சொல்கையில், நீரின்றி அமையாத இவ்வுலகில் நீராலாலான நம் சிக்கல்கள் வெளிக்கிளம்பி நிற்கையில், அப்பிரச்சனையை அவர் தொடுவார் என்று நினைக்கையில் தன் வழக்கமான புன்னகையுடன் உரையை முடித்துக் கொண்டார்.

அவருக்குப் பின்னால் பேசிய பாரதி கிருஷ்ணகுமார் இலவசங்களை ஒரு வாங்கு வாங்கி, போன ஆட்சியில் போட்ட சட்டங்கள் செல்லாது என்று ஒரு இடி இடித்து, கும்பகோணம் குழந்தைகளைப் பற்றியும் வாச்சாத்தி கொடுமையைப் பற்றியும் பதிவு செய்கிறார்.

"தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை "என்கிறார் ருஷியக் கவிஞர் ரசூல் கம்சதோவ். உணர்வற்ற அறிவினால் ஏதேனும் பயனுண்டா?  

Monday, October 10, 2011

உள்ளங்கை குருவி

நன்றி: கல்கி

உள்ளங்கைகளில்
குருவி போன்றதொரு சிறிய பறவை
அமர்ந்திருக்கும் அந்தப் படம்
வெகுவாகக் கவர்ந்தது என்னை
இப்படியும் அப்படியுமாய் அசைக்கையில்
எழும்பும் அதன் சிறகுகள்தான்
அதை வாங்கத் தூண்டியதோ என்னவோ?
நீண்ட நேரம் விலை பேசி
கையிருப்பு முழுவதையும் செலவழித்து
வாங்கிய அந்தப் படத்துடன்
நடந்தே வீடு சேர்ந்தேன்
வாங்கிய நாளிலிருந்தே
அறைக்குள் நுழையும் போதெல்லாம்
அசைத்து அசைத்து அதன் பறத்தலுக்கான
யத்தனிப்பை ரசித்த எனக்கு
இப்போது அது அலைக்கழிப்பாக மாறியிருந்தது
இதோ இந்தக் கணத்தில்
நான் அதன் பறத்தலுக்காய்க் காத்திருக்கிறேன்.

- தி.பரமேசுவரி 

முகமூடியின் துளிகள்

நன்றி : கல்கி 





இளகத் தொடங்கும் என் முகமூடியை
இழுத்துப் பிடித்து முகத்தோடே
பொருத்திக் கொள்ளும் முயற்சியில்
மிகுந்த பிரயாசையுடன் ஈடுபட்டிருக்கிறேன்
சற்றும் செவி கொடுக்காத முகமூடி
சொட்டத் தொடங்கிற்று சிறு சிறு துளிகளென
இளகும் ஒவ்வொரு துளியும்
உன் பெயரைச் சொல்லியபடி வீழ
உரத்து ஒலிக்கும் உன் பெயரைக்
கேட்க மறுத்துக் காது பொத்த
வேகமாய் வழியும் துளிகள்
எழுதுகின்றன உன் பெயரை!

- தி.பரமேசுவரி 






Wednesday, October 5, 2011

மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கத்தின் உண்ணாப் போராட்டம்


மனித உயிர் பறிப்பது மனித நேயத்துக்கும் மானுட குல அறத்துக்கும் எதிரானது.   மனித உயிர் பறிக்க தனி மனிதருக்கோ, சமூகத்துக்கோ. அரசுக்கோ எந்த உரிமையும் இல்லை. ஆனால் மரணதண்டனையை அல்லது தூக்குத் தண்டனையை அரசே நிறைவேற்றுகிற போது அது அறமான செயலாகவும் சட்டரீதியாகவும் கருதப்படுவது எவ்வகையில் நியாயம்?  நியாயமில்லை எனப் பதில் கூறும் முகமாக மரண தண்டனையை உலகில் 135 நாடுகள் ரத்து செய்துள்ளன. காந்திதேசம் என்ற கிரீடத்தை பெருமையாகச் சூடிக் கொண்டிருக்கும் இந்தியா இதுவரை மரணதண்டனையை ரத்து செய்யவில்லை.

இப்போது ராஜிவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கி நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையிலிருந்த காலம் இருபது ஆண்டுகள். வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்தால் கூட இவர்களின் சிறைக்காலம் முடிந்து போயிருக்கும். எந்த ஒரு மனித உயிருக்கும் மரணதண்டனை வழங்க எவருக்கும் உரிமையில்லை எனும் உன்னதமான கருத்து உலகின் மனச் சாட்சியாக மேலெழுந்து வருகையில்...                                     

இந்திய அரசே , மரண தண்டனையை ரத்து செய் !


பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனையை நீக்க 


தமிழக அரசே,  அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேறுக!


என்ற கோரிக்கையை முன்வைத்து 09.10.2011 அன்று சென்னை கோயம்பேட்டில் ஒருநாள் உண்ணாப் போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்தியா அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-இல் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி தமிழக அமைச்சரவை கூடித தீர்மானம் நிறை வேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பினாலேயே இத்தூக்குத் தண்டனையை நீக்க முடியும் என்று சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள். இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னைகோயம்பேடு பேருந்துநிலையம் அருகிலுள்ள ஆட்டோ கேரேஜ்ஜில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம் சார்பில் நடைபெறவுள்ள உண்ணாப் போராட்டத்தில் பங்கேற்குமாறு படைப்பாளிகள் அனைவரையும் அழைக்கிறோம்.


பா.செயப்பிரகாசம் 

அமைப்பாளர்களுக்காக.

Tuesday, October 4, 2011

ம.பொ.சி.யின் 16-வது நினைவு நாள் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா - ஒலிப்பதிவு




03.10.2011 அன்று சென்னை மயிலாப்பூர் லேடி சிவசாமி கலாலயா அரங்கில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் 16-வது நினைவு நாள் விழா மற்றும் அவரது ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் மூத்த வழக்கறிஞருமான எஸ்.கே.பாலசுப்பிரமணியன்  தலைமை தாங்கினார். வள்ளலார் நெறி பரப்புநர் ஊரன் அடிகள், சென்னை வானொலி நிலைய மேனாள் இயக்குனர் ஏ. நடராஜன், பொற்றாமரை இலக்கிய அமைப்பின் இல.கணேசன், பாரதியியல் ஆய்வறிஞர் பெ.சு.மணி ஆகியோர் பேசினர். கலவை கோபாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.


இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ம.பொ.சி.யின் பெயரன் தி.ஞானசிவம் செய்திருந்தார். விழாவைக் கவிஞரும் ம.பொ.சி.யின் பெயர்த்தியுமான தி.பரமேசுவரி தொகுத்து வழங்கினார்.

இவ்விழாவின் ஒலிப்பதிவு இது. 




ஒலிப்பதிவு - யுவபாரதி 

Wednesday, January 19, 2011

சிறகுகள் கோதும் சாளரம்

                                            மேலும் தீட்டிக் கூராக்குகிறது

                                            சிறிய மூக்கை

                                            தொட்டி நீரில் அமிழ்த்திக்

                                            கோதுகிறது சிறகுகளை

                                            தானியங்களைக் கொத்தியும்

                                            நீர் குடித்தும் பறந்தும்

                                            எழுந்தும் அணைத்தும்

                                            செய்யும் சில்மிஷங்கள்

                                            குஞ்சுப் பறவையின் சேட்டைகளைச்

                                            செல்லமாய்க் கண்டிக்கும் தாய்ப்பறவை



                                            சன்னலில் பதித்த முகத்தில்

                                            பதியும் கோடுகள்

                                            வலிக்க வலிக்க

                                            ரசித்துக் கொண்டிருக்கிறாள்.

Saturday, January 8, 2011

ஊழலும் கல்வியும்

சமூகத்தின் சகல மட்டங்களிலும் இன்றைக்கு ஊழலும் லஞ்சமும் வேரூன்றியிருக்கிறது. மக்களால் அது சகஜமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பெரிய அளவில் செய்யப்பட்டால் ஊழல் என்றும் சிறியதாய் இருந்தால் அது லஞ்சமாகவும் கொள்ளப்பட்டு, கிட்டத்தட்ட மக்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற தன்மையைக் காண முடிகிறது. பெரிய அளவில் செய்யப்படுகின்ற ஊழல்களை பெரும்பான்மை மக்கள் தட்டிக் கேட்க முடியாத மனநிலையில், இலவசங்களுக்கு ஆட்பட்டு, தங்களுக்கு எவ்வளவு கிடைக்குமென்ற எண்ணவோட்டத்தில் சிக்கியிருக்கின்றனர். சிறிய அளவில் பேசுபவர்களும் கூட ஒரு விதமான உயிர் பயத்துடன் செயல்படக் கூடிய கொடுமையான காலத்தில் நாம் வாழ்கிறோம். மனசாட்சியற்றவர்களின் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரச் சாட்டையின் வீறல்கள் நம் எல்லோருடைய முதுகிலும் மிக அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன.

ஊழல் வெளிப்பட்டுப் பேச்சரவம் கேட்கத் தொடங்கிப் பின் மெல்ல மெல்ல மக்களின் நினைவடுக்குகளில் இருந்து அது விலகிப் பின் வேறொரு ஊழல் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. சென்ற ஆண்டு அந்த அளவுக்குக் கூட நேரமின்றிப் புற்றீசல் போல மாநில அளவிலும் தேசிய அளவிலும் ஊழல் நாகங்கள் கிளம்பிக் கொண்டேயிருந்ததில் எதைப் பற்றிப் பேசுவது, கவனிப்பது என்ற அளவில் மக்கள் குழம்பியே போயினர். ஊழல் செய்பவர்களும் கூட, இது வரையில் இந்தியாவில் ஊழலுக்காக யாரும் தண்டனை பெற்றதில்லை என்ற தைரியத்துடனும் கண்டுபிடிக்கப்பட்டால் கூட அதற்கு நிச்சயமாக ஒரு விலை உண்டு என்ற துணிச்சலுடனுமே இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சீரழிவின் அடுத்த நிலை ஊழியர்கள் இதையே சிறிய அளவில் லஞ்சமாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மேல்நிலையில் இருப்பவர்களே இவர்களை ஊக்குவிப்பவர்களாகவும், ஆதரிப்பவர்களாகவும் அதே சமயத்தில் கையும் களவுமாகப் பிடித்துத் தண்டனை கொடுப்பவர்களாகவும் மண்ணுள்ளிபாம்பெனத் திரிந்து கொண்டிருக்கின்றனர். லஞ்சம் இவர்களால் தொழிற்பட்டு, சமூகமயமாக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் காவல் துறைக்கு ஆளெடுப்பதில் மிகப் பெரிய அளவில் லஞ்சம் புழங்குவதைப் பற்றிக் குறிப்பிடும் ஒரு நீதிபதி, இது இன்னும் பத்தாண்டுகளில் இந்தியாவில் பெரும் குழப்பங்களும் வன்முறையும் நிகழ்வதற்குக் காரணமாக அமையலாம் என்று தன் வருத்தத்தைப் பதிவு செய்கிறார். இது ஒன்றும் புதியதல்ல. இந்தியாவில் அனேகமாக எல்லாத் துறைகளிலுமே பணம் வாங்கிக் கொண்டு பதவிகளில் ஆட்களை நியமனம் செய்யும் வழக்கம் இருந்துதான் வருகிறது. அண்மைக்காலத்தில் அதன் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருவதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலே நீதிபதி அவர்கள் கூறிய சொற்களை நாம் சமூகத்தின் எல்லாத் துறைகளுக்கும் விரிவுபடுத்திப் பார்த்தோமானால் எள் முனையளவு கூட மனசாட்சியற்ற ஒரு கூட்டத்தால் நாம் மேய்க்கப் பட்டுக்கொண்டிருக்கிறோமென்பது விளங்கும்.

நாட்டின் நெறிமுறைகளை முன்னெடுத்துச் செல்கின்ற காவல், சட்டம் ஆகிய துறைகள் இன்று முற்றிலும் சீரழிந்து விட்டன. ஆதாரத்துறைகளான மருத்துவம், கல்வி ஆகியவை வேரின்றி நிற்கின்றன. லஞ்சம் வாங்கியே போடப்பட்ட இந்தத் துறை சார்ந்த பதவிகள் இன்று லஞ்சம் கோரி நிற்கின்றன. அடிப்படை ஒழுக்கம், மனித நேயம், தகுதிகள் என் ஏதுமற்ற கூட்டமொன்று மேலே உட்கார்ந்து கொண்டு இன்னும் இன்னும் தனக்கேற்றபடி ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் கிராமங்களில், அந்தந்த ஊரில் கற்பிக்கும் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோர் ஊரின் முக்கியப் பிரமுகர்களாக இருப்பர். அவர்களைக் கலந்துகொண்டே ஊரின் எல்லா விஷயங்களும் முடிவெடுக்கப்படும் காலமொன்று இருந்தது. ஆனால் இன்றைக்குக் காலம் மாறி விட்டது. ஆசிரியர்கள் மாணவர்களிடமிருந்தே விலகி இருக்கின்றனர். மருத்துவர்கள் புரியாத மருந்துகளும் பரிசோதனைகளும் எழுதித் தந்துவிட்டு அதன் மூலமான வருமானத்தில் அயல்நாடுகளுக்கு உல்லாசப் பயணம் செல்லக் கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். காவல் நிலையங்களே எல்லாக் குற்றங்களின் கூடாரமாகத் திகழ்கிறது. நீதிமன்ற வளாகங்களே குற்றவாளிகளை வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைக்குக் காரணமென்ன?

ஆசிரியப் பணியை ஒரு தொழிலாகக் கருதாமல் ஆர்வத்துடன் அறப் பணியாகக் கருதும் போக்கு இருந்த காலத்தில் ஆசிரியர்கள் மதிக்கப்பட்டனர். பாடம் கற்பிப்பதோடு அவர்கள் பணி நின்று விடாமல், மக்களோடு கலந்து புழங்கும் தன்மை அவர்களிடையே இருந்தது. பள்ளி நேரம் முடிந்த பிறகும் கூட மாணவனின் வீடு சென்று அவனுடைய எதிர்காலம் பற்றிப் பெற்றோருடன் விவாதிக்கும், வழிகாட்டும் தன்மையை நாம் அவர்களிடம் பார்க்கலாம். படித்து முடித்த மாணவர்கள் கூட அவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றிருக்கின்றனர். தங்கள் தங்கள் துறையில் வல்லவர்களாகவும், அறிவுத் தளத்தை விரிவுபடுத்தியபடியே அக்கால ஆசிரியர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.

இன்றைய நிலை என்னவென்று பார்த்தால், ஆசிரியர்கள் மக்கள் விரோதப் போக்கின் பாதையில் கண்மூடித்தனமான வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். மாணவர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றனர். எதற்கும் சிணுங்காத, கோபமற்றதோர் தலைமுறையை உருவாக்கியதில் இவர்களுக்கும் பெரும்பங்குண்டு. தொழிலாகப் பார்க்கும் பார்வையும் லாப நோக்கத்தோடு செயல்படும் தன்மையும் விலக்கத்தன்மையை ஏற்படுத்தி விட்டது. வகுப்பறையில் கற்பிக்காமல் மாலை நேரச் சிறப்பு வகுப்புகள் நடத்துவதும் வட்டித் தொழில் செய்வதும் இவர்களை அசுர வியாபாரிகளாகக் காட்டி நிற்கிறது.

தங்கள் துறை சார்ந்த அறிவையும் இழந்து, பணத்தை மட்டுமே கணக்கிட்டு எண்ணிக் கொண்டிருப்பதால் இவர்கள் மாணவர்களின் மரியாதையை இழந்து நிற்கின்றனர். இதைச் சற்றும் பொருட்படுத்தாத ஒரு வியாபாரக் கூட்டம் வேகமாக உருவாகிப் பெருகிக் கொண்டிருக்கிறது. லஞ்சம் கொடுத்து வந்த ஆசிரியர்கள் இன்று மாணவர்களின் ரத்தத்தைக் குடிக்கும் அட்டைப் பூச்சிகளாகி விட்டனர். அதனால்தான் நாளிதழ்களைத் திறந்தால், ஆசிரியர்களைப் பற்றிய மிக மோசமான செய்திகளை நாம் காண முடிகிறது. பள்ளியிலிருக்கும் பெற்றோர் என்று மிக உன்னதமாகக் குறிக்கப் பட்ட ஆசிரியர் இன்று பள்ளிக்குக் குடித்து விட்டு வருவதும், மாணவிகளைப் பாலியல் வன்புணர்வு செய்வதும், அருவருக்கத்தக்க மொழியைப் பயன்படுத்துவதும் என எந்தவித நெறிமுறையுமற்ற, மனசாட்சியற்ற ஒருவருமாக மாற்றம் பெற்று விட்டார் என்பது சமூகத்தின் மிக இழிந்த நிலையைச் சித்திரப் படுத்துவதாக உள்ளது.

இறைவனுக்குச் சமமாக வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் சமூகம் இன்றைக்குத் தகுதியான ஆளுமை பெற்றிருக்கிறதா என்ற கேள்வி எழும்புமானால் அதன் பதில் நாம் அனைவரும் அறிந்ததே. இம்மாற்றத்திற்குக் காரணம், ஈசலெனக் கிளம்பியிருக்கும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் அதன் வழி அரைகுறையாகப் பயிற்றுவிக்கப்படும் ஆசிரியப் பயிற்சி மாணவர்களும் பெருகியிருப்பதே. மிகுதியான மாணவர்கள் வெளிவருகையில் அவர்களுக்கான வேலை இல்லாதபோது, அதனைப் பெற எவ்வளவும் கொடுக்கத் தயாராக இருக்கின்றனர். ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கான அனுமதியும் இத்தகைய வழியில் பெறப்பட்டதே. லஞ்சம் கொடுத்துப் படித்து, லஞ்சம் கொடுத்து வேலை வாங்கும் இந்தக் கூட்டம் போட்ட முதலீட்டை எடுக்கும் முயற்சியிலேயும் சிந்தனையிலுமே திளைத்திருக்கின்றனர். எனவே அறிவை விரிவாக்குவதற்கான நேரமோ, ஆர்வமோ அவர்களிடம் இருப்பதில்லை. குறைந்தபட்ச ஒழுக்கம் கூட இல்லாத இந்த மனிதர்களால் ஆசிரியப் பணி தன் மாண்பினை இழந்து நிற்கிறது. இன்றைக்கும் எஞ்சியிருக்கும் நிஜமான நல்லாசிரியர்கள் இவர்களுக்கிடையில் சிக்கித் தவித்து எள்ளி நகையாடப்பட்டு நிற்கின்றனர். இத்தகையோரால் உருவாக்கப்படும் மற்ற எல்லாத் துறை மக்களும் பெரும்பான்மையாக சீரழிக்கப்பட்ட சிந்தனைகளுடனே உலா வருகின்றனர்.

இப்படி, சமுதாயத்தின் அடிப்படையான துறைகள் பலவற்றிற்கும் இக்கருத்தை விரிவுபடுத்திப் பார்த்தால் இன்றைய படு மோசமான நிலையின் காரணத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அதற்கான தீர்வு, நம் எல்லோரின் கையிலும் தான் உள்ளது. இனி விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கூட குற்றத்தின் எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருக்கும் நாளைய மன்னர்களை, வருங்காலத் தலைமுறையினரைக் காப்பாற்றி விடலாம்.

- தி.பரமேசுவரி

Tuesday, November 16, 2010

ஞாயிற்றின் மகள்

ஞாயிற்றின் மகள் நான்
என் உடலில் இருந்து
வெப்பத் திவலைகள் வெளியேறுகின்றன
நிலவின் மகனை
அருகழைத்து அணைக்கிறேன்
குளிர்தரு நிழல் அடைய

என் வெப்பம் அவனைப் பற்ற
நட்சத்திரங்களை அரவணைக்கிறான்
என் உடலுதிர்க்கும் கங்குகளே
நட்சத்திரங்களாகும்
என உணராமல்

சிறு சிறு கங்குகளாய்
எனை உதிர்த்துச்
சேர்கிறேன் உன் நிழலில்
வெப்பம் சற்றே தணிந்ததொரு தருணத்தில்
மீண்டும் கங்குகள் சேர்த்து
உருப்பெறுவேன்.

Thursday, November 11, 2010

உள்ளினும் உள்ளம் சுடும்

பணமென்றால் பிணமும் வாய் திறக்குமென்பது பற்றி ஓராயிரம் பழமொழிகள் உலக மொழிகளில் உண்டு. உலக உருண்டையில் தான் பணத்தைப் பெரிதாய் மதித்து, மனிதத்தை மிதிக்கும் போக்கும் நாளது வரையிலும் மாறாமல், மறையாமல்  நடக்கிறது.
 
      "தன் சோறுண்பது சுதந்திரம்
            தன் துணியணிவது சுதந்திரம்
      என்னே வறுமை வந்தாலும்
            எத்தனை துன்பம் தந்தாலும்
      பொன்சேர் போகம் மதிக்காது
            பொய்ப்புகழ் பாடித் துதிக்காது"

என்று நாமக்கல் கவிஞர் நேர்மையான வழியில் பெறப்படும் தன் வருமானத்தில், சோறுண்டு, வறுமையிலும் செம்மையாய் வாழ்வதையே சுதந்திரம் எனக் கூறுகிறார். ஆனால் பணத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் நடமாடும் பிணங்களான மனிதக்கூட்டம் மானுடத்தின் மாண்பிழந்து செல்வத்தின் பின்னால் தன் வாலை ஆட்டிக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறது.
 
இது லஞ்ச ஒழிப்பு வாரமாம். இப்படி எல்லாவற்றுக்கும் ஒரு நாளையோ அல்லது வாரத்தையோ ஒதுக்கிக் கேலிக்கூத்தாக்கும் வித்தையைக் கழைக்கூத்தாடிகளைப் போலச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வாரத்தில் லஞ்சத்தை ஒழித்து விட முடியுமென்று கூறுகிறார்களா அல்லது இந்த ஒரு வாரம் மட்டும் லஞ்சம் வாங்காமல் சமாளியுங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறார்களா? இதன் பொருள் யாமறியோம் பராபரமே! அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரம்பொருளாய் வியாபித்திருப்பது லஞ்சம் மட்டும் தானே! பகுத்தறிவாளர்கள் ஆட்சிக்கட்டில் ஏறிய பிறகு இறைவனை சற்றே விலகி இரும் பிள்ளாய் என நகர்த்தி விட, அந்த இடத்தை இன்று ஊழலும் லஞ்சமும் பிடித்துக் கொண்டு விட்டன. குழந்தை பிறந்த நொடி தொடங்கி மரணித்த பிறகும் கூட லஞ்சத்தின் நடன தரிசனம் காணக் கண்கூடு தானே. நம் தமிழின் அருமையான கொடை இதற்குக் கையூட்டு என்பது. ஆனால் இத்தகைய கேவலமான பழக்கத்தைப் பற்றி எழுதுகையில் இன்றைக்குச் சரளமாய்ப் புழங்கும் லஞ்சத்தையே நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.
 
      "வேலையின்றிக் கூலிகொள்ளும்
             வித்தைகளைக் கற்றறியோம்"

என்று குழந்தைக்குப் பாடும் தாலாட்டிலே குறிப்பிடுகின்றார் நாமக்கல்லார். பாரதியோ, நாமக்கல்லாரோ பெரியவர்களுக்கு எதையும் உணர்த்த முடியாது என்ற உறுதியோடு தான் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார்கள் போல. ஆனால் வேலையைச் செய்வதற்கு ஒரு சம்பளமும், பிறகு கிம்பளமும் வாங்கும் சாமர்த்தியத்தை நம் மக்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். அதனால்தான், நம் நீதியரசர்கள் மார்க்கண்டேய கட்ஜுவும், டி.எஸ். தாக்கூரும் ஒரு வழக்கிலே தீர்ப்பளிக்கும்போது "எல்லாத் துறைகளிலும் குறைந்த பட்சம் இந்த அளவுத் தொகையை லஞ்சமாக வாங்கலாம் என்று சட்டம் கொண்டு வந்து விடலாம்" என்று தம் வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். சட்டங்கள் எல்லா வகையிலும் உறுதியாகவும் வலிமையாகவும் இருந்தும் கூட அதைக் கையாளும் விதத்தில் சில ஓட்டைகளைக் கண்டுபிடித்துக் கோளாறு செய்யும் மனிதர்களை என்ன செய்வது? சட்டத்தாலேயே ஒன்றும் செய்ய இயலாத அவலத்தைத் தான் நீதியரசர்கள் இவ்வாறு வழிமொழிந்திருக்கிறார்கள்.
 
அரசு லஞ்சம் வாங்குகிறது; அதன் அங்கமான அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள்; அவர்களுக்குக் கீழிருக்கும் இடைநிலை - கடைநிலை ஊழியர்களும் லஞ்சம் வாங்குகிறார்கள்; லஞ்சம் வாங்காமல் இருப்போர் கூட லஞ்சம் கொடுக்காமல் இருக்க முடியாத இந்தக் கீழ்களது ஆச்சாரத்தை என்னென்பது? நேருவின் காலத்தில் தொடங்கிய இராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்கிய ஊழல் தொடங்கி, தெகல்கா ஊழல், ஆயுத பேர ஊழல் என்று இன்றைக்கு மகா, மெகா ஊழலான ஒரு லட்சம் கோடிகளுக்கு (ஒரு லட்சம் கோடிக்கு எத்தனை பூஜ்யம்???) மேல் முறைகேடு செய்திருப்பதாகக் கூறப்படும் தொலைத்தொடர்புத் துறையின் அலைக்கற்றை ஊழல் வரையிலும் அரசின், அரசு சார்ந்த அமைச்சர்களின், அவர்களின் அடிப்பொடி அரசியல்வாதிகளின் நச்சுவேலை என்றால், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும், ஆனால் ஊழலில் அவர்களுக்குச் சற்றும் குறைவில்லாத அதிகாரிகளின் கூட்டு எத்தனை? இவ்விரு பெருமக்களின் கோர தாண்டவத்தைப் பொது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குச்சீட்டை ஆயிரத்துக்கும் பட்டை சாராயத்துக்கும் விற்பவர்களாக இருக்கிறார்கள்.
 


சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் ஆட்சியும் அதிகாரமும் மக்களுக்குச் சேவை செய்ய என்று இருந்த நிலை மாறி, அரசியல்வாதிகளின் ஆட்டத்துக்குத் தக்க கூத்தாட்டம் போடும் அதிகாரிகளையே தங்களின் பக்க வாத்தியங்களாகச் சேர்த்துக் கொள்கிறார்கள். மிகக் குறுகிய கால கட்டத்தில் அறுவடை செய்யும் பயிராக அரசியலை நினைத்து விட்டார்கள் ஆட்சியாளர்கள். அதனால்தான் ஒரு தேர்தலில் காட்டும் பொய்யான சொத்துக் கணக்கிலேயே கூட அடுத்த தேர்தலின் போது பல மடங்கு அதிகரித்திருப்பதைக் கவனிக்க முடியும். என்றைக்காவது ஊழலில் சிக்கிய அமைச்சர்கள் கைது செய்ய்யப்பட்டிருக்கிறார்களா? அந்த வழக்குகள் முடிவுக்கு வந்திருக்கின்றனவா? சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப்பணம் மட்டும் சுமார் ரூ.64.56 லட்சம் கோடி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகை உலகிலுள்ள எல்லா நாடுகளின் மொத்த சுவிஸ் வங்கி சேமிப்பையும்விட அதிகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தப் பிரச்னையைப் பற்றி மக்கள் இப்போது கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
 
தமிழகத்தின் இருவேறு நல(?)த் துறை அமைச்சர்கள் மீது ஆதாரத்துடன் சுமத்தப்பட்ட, பத்திரிகைகளில் எழுதப்பட்ட லஞ்சக் குற்றச்சாட்டுகள் கூட நம் நினைவில் இருந்து அகன்று விட்டது. எதிர்க் கட்சி, மற்றும் சுயேச்சை உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குவதென்பது இன்றைக்கு எல்லாக் கட்சிகளாலும் செய்யப்படுகின்ற அங்கீகரிக்கப்பட்ட செயலாகி விட்டது. ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களும் ஆளும் கட்சிக்குத் தாவி விட்டால் அவர்கள் செய்த ஊழல்கள் ஆழக் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விடும்.
ஒரு முழு நாளில் ஒரு முறையேனும் நாம் லஞ்சத்தைத் தரிசிக்க வேண்டியவர்களாகவே இருக்கிறோம். வண்டியோட்டிப் பாருங்கள்; போக்குவரத்துக் காவலரின் இழிமையைத் தரிசிக்கலாம். 

மருத்துவமனைக்குச் செல்லுங்கள்; தலை சொறிந்து நிற்கும் ஊழியர்களைக் காணலாம். ஏதேனும் ஓர் அரசு அலுவலகத்துக்குச் செல்லுங்கள்; அவர்களின் மேசைக்கடியிலே அதன் மூளி அலங்காரத்தை முழுமையாய்ப் பார்க்கலாம்.
மின்சார வாரியம், குடிநீர் வாரியம், மாநகராட்சி, மருத்துவத் துறை, பத்திரப்பதிவுத் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, காவல் துறை என ஊழலின் ஊற்றுக்கண்களைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோ(லோ)டு முன் தோன்றிய மூத்த குடிக்கு முன்னாலேயே தோன்றிவிட்டன லஞ்சமும் ஊழலும்! மக்களின் மூச்சுக் காற்றாய் கலந்து வியாபித்து இன்றைக்கு மக்கள் இவற்றை சகித்துக் கொண்டு வாழப் பழகி விட்டார்கள். இது நம் ஜனநாயகத்தை ஊழித்தீயாய்ப் பொசுக்கக் கூடியது; ஆணி வேரோடு கெல்லி எறியக் கூடியது என்பதை அறியாமல் அதற்கும் ஒரு நியாயம் கற்பித்துக் கொண்டு கொஞ்சம் நியாயமாக வாங்குவார் என்றும் வாங்கிவிட்டால் ஒழுங்காக முடித்துக் கொடுத்து விடுவார் என்றும் புதிய கீதை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் நாம் செய்தித் தாளில் லஞ்சம் வாங்கிப் பிடிபட்டோரின் செய்திகளைப்  படங்களோடு படிக்கிறோம். பிறகு அவர்கள் என்னவானார்கள் என்று நம்மில் எவருக்கேனும் தெரியுமா? அண்மையில் பாஸ்போர்ட் அலுவலகத்தின் பெண் மேலதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கிப் பிடிபட்டதோடு அவருடைய மருத்துவக் கணவரின் கூட்டுக் களவாணித்தனமும் இதழ்களில் பக்கம் பக்கமாய் அலசப்பட்டது. லஞ்சம் வாங்கிய குற்றத்தோடு தீவிரவாதிகளுக்குப் போலி முகவரிகளில் கடவுச்சீட்டு வழங்கியதாகவும் அவர் பேரில் குற்றச்சாட்டு. மூத்த அமைச்சரின் நெருங்கிய உறவினரான அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? இப்படித்தான் நம் மூளையின் அடுக்குகளில் நாம் பதிய வைத்துக் கொள்ள வேண்டிய பல செய்திகள் நம் கவனம் பெறாமலே பதுங்கிக் கொள்கிறது. நமக்கு எந்திர்ர்ர்ரன் ஓட வேண்டும். அதற்கு அலகு குத்திக் கொள்ளலாமா? பாலாபிஷேகம் செய்யலாமா? என்னும் முக்கியமான சிந்தனைகள் மூளைக்குள் குடையும் போது இதெல்லாம் எம்மாத்திரம்?
 
அரசு தம் ஊழியர்களின் ஊதியத்திற்காகக் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது. மக்கள் பிரதிநிதிகளுக்குச் செய்யும் செலவு தனி. ஓர் உயர் அதிகாரி ஒரு மாதத்தின் ஊதியமாக ரூ. 50,000 முதல் ரூ. 80,000 வரை பெற்றுக் கொண்டும் அது போதாதென்று லஞ்சம் பெறுவது வேதனையளிக்கும் செய்தி. லஞ்ச ஒழிப்புத் துறையின் இணையதளத்திற்குச் சென்றால், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தொடங்கிக் கடைநிலை ஊழியர்கள் வரை செய்த ஊழல் வழக்குகளை வருட வாரியாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள். இந்த ஊழலுக்குத் துணை போகாதவர்கள் கொலை மிரட்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பழி சுமத்தப்பட்டு வெளியேற்றப்படுகிறார்கள். அண்மைய உதாரணங்கள்: சகாயம் ஐ.ஏ.எஸ், உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.
 
என் நண்பர் ஒருவர் சொன்ன செய்தி இது. அவரது அலுவலகத்தில் பணியாற்றிய தோழியொருவர் சென்னைக்குப் பணிமாறுதல் பெற மூன்று லட்சம் கொடுத்து மாறுதல் பெற்றிருக்கிறார். பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆன அந்தத் தோழியின் பணத்தில் எத்தனை பேருக்குப் பங்கு? இதைத்தான் பணம் பாதாளம் வரை பாயும் என்றார்கள் போலிருக்கிறது.
 
      "படிச்சவன் சூதும் வாதும் செய்தால்
            போவான் போவான் அய்யோன்னு போவான்"
 
என்று பாரதி சபித்தது தான் தாங்க மாட்டாமல் நினைவிலெழுகிறது. படித்தவன் செய்யும் சூதுக்குத் தக, படிக்காத பாமரனும் தன்னளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். லஞ்சம் வாங்கும் எண்ணம் இல்லாதவன் கூட அருகில் இருப்பவன் வாங்குவதைக் கண்டும் காணாமல் இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மேலும் உயரதிகாரிகளின் உல்லாசச் செலவுகளுக்கும் அவர்களின் குடும்பங்களின் செலவுகளுக்கும் அழுவதற்காவேனும் அவர்கள் லஞ்சம் வாங்க வற்புறுத்தப்படுகிறார்கள்.

சென்னையின் இன்றைய போக்குவரத்து நெரிசலும் அதனால் மக்கள் படும் துயரும் அனைவரும் அறிந்ததுதான். ஆனாலும் அத்தகைய இடங்களில் இருக்கும் பெரிய கடை முதலாளிகள் செய்யும் ஆக்கிரமிப்புகளை, அக்கிரமங்களை எவரேனும் கேட்கிறார்களா? அரசு அதிகாரிகளின் அறிவுரைகளுடனேதான் விதிமுறை மீறிய கட்டிடங்கள் விண்ணை முட்டி எழுகின்றன. பிறகு அதற்கு ஒரு சிறு தொகையை அபராதம் கட்டி விட்டால் அவர்கள் செய்த பிழை கருணை மிக்க அரசால் மன்னிக்கப் படுகிறது. இந்த அரசு தான் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கத் தொழிலதிபர்களுக்கு அவகாசம் அளிக்கிறது. அதே அரசுதான் தன் பசிக்கு உணவு திருடிய சிறுவனைக் கைது செய்து சிறையிலடைக்கிறது.
இந்த அரசுதான் பேருந்துகளில் குறள் எழுதி வைக்கிறது. ஆனால்,
 
      "மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தன்மை
       பீடழிய வந்த விடத்து"
 
என்ற திருக்குறளை அவர்களுக்கு யாரே நினைவூட்டுவது? அரசதிகாரத்தைக் கைப்பற்றும் எவருமே இவ்விழிநிலைக்குப் பலியாகி விடுகிறார்கள். ஜீவாவையும் கக்கனையும் காமராசரையும் மறந்து வாழும் மானம் கெட்ட சமூகம் தானே இது! ஓட்டுப் பொறுக்கி அரசியலின் ஓர் அங்கமாய் இலவசங்களைத் துரத்திக் கொண்டிருக்கும் கேடு கெட்ட சமுதாயம் தானே இது!
      
      "நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
             நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்"
 
என்று புலம்புவதோடு நின்று விடாமல் ஒவ்வொரு தனி மனிதரும் தட்டிக் கேட்கத் தொடங்கினால், நாளைய சமுதாயம் ஊழலற்ற சமுதாயமாக மலர்வதற்கான நம்பிக்கை ஒளிக் கீற்று தொலை தூரத்தில் தெரிகிறது என்றெல்லாம் போலியான பொய் நம்பிக்கைகளைச் சொல்ல முடியாது. ஏனென்றால் ஆந்திராவிலே இவ்வளவு ஊழல், கேரளத்திலே இவ்வளவு ஊழல், கர்நாடகத்திலே இவ்வளவு ஊழல், அவ்வளவு ஏன் வட மாநிலப்பட்டியலையும் இணைத்து, அதன்வழி தமிழகம் எவ்வளவு பின்னால் இருக்கிறது என்ற அறிக்கை இன்றைக்கோ நாளைக்கோ நாளிதழ்களில் வெளிவரலாம். மக்களே தயாராக இருங்கள்.

Tuesday, November 2, 2010

தீபாவளி நல்வாழ்த்துகள்


அல்லவை தேய
நல்லவை வாழ
நல்லாட்சி தோன்றி
புதிய தமிழகம் மலர
தமிழ் ஈழம் உருவாக
தன்மானம் வளர
திக்கெட்டும் பரவட்டும்
தீப ஒளி ஒளிரட்டும்!


பதிவுலக நண்பர்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Wednesday, October 27, 2010

அல்லவை செய்தொழுகும் வேந்து !

 




நான் வாழும் ஊரில் 6 மணி முதல் 8 மணி வரை, மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மின்வசதி நிறுத்தப்படுகிறது. இப்படி மாநிலம் முழுவதும் பல மணி நேரம் நிறுத்தப்படும் மின்சாரத்தின் காரணமாக திருப்பூர் போன்ற தொழில் நகரங்களும் மற்ற பல நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளும் முடங்கி இருக்கின்றன. தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில்கள் முடங்கியுள்ளன. தமிழ்நாட்டின் பொருளாதாரமே தேங்கி இருக்கிறது.
ஆனால் தமிழகத்தின் தலைநகராம் தருமமிகு சென்னையில், மன்னரும் மன்னரின் வாரிசுகளும் அவர்களின் பல்வேறு வகைப்பட்ட உறவுகளும் வசிக்கக்கூடிய பகுதிகளில் மட்டும் இடையறாத, தடையிலாத மின்வசதி. மன்னருக்குக் கப்பம் கட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கோ தடையில்லாத மின்சாரம், வரிச் சலுகை. பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டு உருவாக்கப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு விதிகளை வளைத்தும் மக்கள் நலன் கருத்தில் கொள்ளப்படாமலும் வசதிகள் செய்து தரப்படுகின்றன. இந்தியாவின் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் (SPECIAL ECONOMIC ZONE) தமிழ்நாட்டில்தான் தொடங்கப்பட்டது. சென்னைக்கு அருகில் மஹிந்திரா நிறுவனத்தைக் கொண்டு தொடங்கப்பட்டதால் அது ‘மஹிந்திரா சிட்டி’ எனப்பட்டது. இப்போது இன்னும் பல பன்னாட்டு நிறுவனங்களும் அங்கு இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கொல்கத்தா போன்ற இந்தியாவின் பிற மாநிலங்களில் தொடங்கப்பட்ட போது அந்தந்த மாநிலத்தில் மக்கள் இப்பன்னாட்டு நிறுவனங்களை வர விடாமல் போராடி, வெளியேற்றினர். காரணம், அங்கெல்லாம் மக்கள் நிலத்தின்மீது இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை. அவர்களிடம் தாங்கள் நம்புகின்ற ஒன்றிற்காக அரசையும் எதிர்த்து நிற்கும் தறுகண் உயிர்ப்புடன் இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் அதிருப்தியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எனினும் பெருத்த சகிப்புத் தன்மையுடன் வாழ அவர்கள் பழகிக் கொண்டு விட்டார்கள். வலிமை பொருந்திய யானையைப் பிச்சையெடுக்கப் பழக்கும் மன ஊனமுற்ற மனிதர்கள் நிறைந்த சமூகமாக நம் தமிழ்ச் சமூகம் மாறி விட்டது. நிலத்தடி நீர் இல்லை, ஆற்று நீர் இல்லை; மின்சாரம் இல்லை; நிலங்கள் மலடாக்கப்பட்டு விட்டன. இருக்கின்ற நிலங்கள் எல்லாம் பெருமுதலாளிகளாலும் அரசியல்வாதிகளாலும் வளைக்கப்பட்டு விட்டன. ஆறுகள் சுரண்டப்படுகின்றன. எதைக் கண்டும் கோபமில்லாமல் இலவசங்களின் துணையுடன் அரைவேக்காட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்தபடி எதிர்காலக் கனவுகளில் மூழ்கியிருக்கின்றனர் தமிழ் இளைஞர்கள். சென்னைக்குப் பிழைக்க வந்து கொடும்பாடுபட்ட ஒரு மனிதனின் அனுபவமாகப் பாடப்பட்ட ஒரு தனிப்பாடலொன்று தவிர்க்க இயலாமல் நினைவிலெழுகிறது.


 
“சென்னபுரி மேவி சிவனானேன் - நல்ல
அன்னம் அறியா தவனாகி மன்னுசிரம்
கைக்கொண்டு அரைச்சோமன் கட்டி சடைமுறுக்கி
மெய்கொண்ட நீறணிந்து மே”





ஐ.நா. வின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, “தொழில் செய்யும் நாடுகளின் சட்டப்படியே பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட வேண்டும்” என்று அறிவித்திருக்க, தமிழ்நாட்டின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் மட்டும் நம் நாட்டுத் தொழிலாளர் நலச் சட்டங்கள் செல்லுபடியாவதில்லை. வானளாவிய அதிகாரத்துடன் நகரங்களைக் கபளீகரம் செய்து, நம் நாட்டின் சிறு முதலீட்டு நிறுவனங்களை விழுங்கி, விவசாய நிலங்களை வளைத்து, தன்மானமுள்ள நம் மக்களைத் தம் தொழிலாளராக்கி அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்து தராமல் அசுரப் பசியோடு அனைத்தையும் அழித்து வருகின்றன இந்நிறுவனங்கள். ஹூண்டாய் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சங்கம் அமைப்பதில் ஆர்வத்தோடு செயல்பட்ட 83 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



ஸ்ரீபெரும்புதூரில் 8000 ஊழியர்கள் பணியாற்றும் ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரி பாக ஆலையில் 1,400 ஊழியர்களே பணி நிரந்தரம் செய்யப்பட்டோர். மற்றவர்கள் பயிற்சியாளராகவே வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கும் ஊழியர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் செய்தனர். உடனே, 23 தொழிலாளர்களைப் பணியிடை நீக்கம் செய்தது நிர்வாகம். 317 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் 12 பேர் இன்னும் விடுவிக்கப்படாமல் கைதிகளாகவே வைக்கப்பட்டிருக்கின்றனர்.



கொடுமையிலும் கொடுமையாக, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூன்று வாரங்களுக்கும் மேலாகத் தொடர் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், கடைநிலை ஊழியரின் ஊதியமான 9,800 ரூபாயையேனும் ஒப்பந்தத் தொழிலாளருக்கு வழங்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்குத் தங்கள் நிலத்தையும் வழங்கி விட்டு, 30 வருடங்களாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே நீடிக்கும் இந்த 13,000 தொழிலாளர்களின், அவர்தம் குடும்பங்களின் சோகத்தை அந்த நிறுவனமோ, நிறுவனத்துக்குத் துணை நிற்கும் இந்த அரசோ உணர முடியுமா? 30 வருடங்களாகத் தகுந்த பாதுகாப்பின்றி, பயிற்சியின்றி உயிரைப் பணயம் வைத்துச் சுரங்கத்திலும் மின் ஆலையிலும் பணியாற்றும் தொழிலாளர்களின் துன்பத்தை, மக்களாட்சி என்ற போர்வையில் மன்னராட்சி நடத்திக் கொண்டிருக்கும் இந்த இரும்பு இதயங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்குமா? எல்லாவற்றுக்கும் கடிதம் எழுதும் நம் மானமிகு முதல்வர் இந்த ஏழைத் தொழிலாளர்களுக்காகவும் கருணைகூர்ந்து, இந்தியப் பிரதமருக்குக் கோரிக்கை வைத்துக் கடிதம் எழுதி விட்டாராம். ஈழப் பிரச்சனைக்காகக் கடிதம் எழுதினார்; முடிவு கிடைத்துவிட்டது. இன்றைக்கு இந்தத் தொழிலாளர்களுக்காகவும் கடிதம் எழுதி இருக்கிறார். விரைவில் இவர்களுக்கும் முடிவு கிடைத்துவிடும் என்று நம்பலாம்.
அங்கன்வாடி ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்; சத்துணவு ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்; டாஸ்மாக் ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.... எதற்காக? ஏ.சி காரும் வசதியான வாழ்க்கையும் பெறவா? எட்ட முடியாத உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் காய்கறிகளையும் மளிகைப் பொருட்களையும் எட்டிப் பிடித்துத் தம் குழந்தைகளுக்கு மூன்று வேளை வயிறார உணவிட, அடிப்படை வசதிகளைப் பெற்றுத் தரப் போராடுகிறார்கள். ஆனால் அரசு அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி மடுக்காமல் அவர்தம் போராட்டங்களைக் கடுமையான அடக்குமுறையின் மூலம் ஒடுக்கிக் கொண்டிருக்கிறது; உரிமை முழக்கத்துக்கு எதிர்நிலையில் நின்று கொண்டு முதலாளித்துவத்திற்கு லாவணி பாடிக் கொண்டிருக்கிறது.


நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு
என்று தொழிலாளர்களின், வினை செய்பவர்களின் மனம் கோணாமல் நடப்பதே நல்ல தலைவனின் கடமையாக வள்ளுவர் வகுத்திருக்கிறார். அப்படி நீதி வழி செல்லாத அரசன், குடிமக்களின் ஆதரவை இழந்து விடுவான் என்றும் அவரே உரைத்திருக்கிறார். தீயின் நடுவிலும் தூங்க முடியும்; நடுவில் (பசித்)தீயை வைத்துக் கொண்டு கண் மூட முடியுமா? என்று தொழிலாளர் சார்பில் நின்று மன்னனிடம் கேள்வி கேட்கிறார். தங்கள் வயிற்றுப்பாட்டுக்காகப் போராடும் மக்களின் அல்லலுற்று அழும் கண்ணீரின் சக்தியை அரசு ஒரு நாள் உணரும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

உதவி கேட்கிறேன்....ஓட்டுப் போடுங்கள்..!


நன்றி: எஸ். சதீஷ், அக்.25

சக பதிவரான திரு. எஸ். சதீஷ் அவர்களின் தளத்தை இரண்டு நாளுக்கு  முன் படித்தேன்....அதில் முக்கியமான ஒருவரை பற்றி எழுதி இருந்தார்....அவர் பெயர் திரு. நாராயணன் கிருஷ்ணன்.  நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்”  அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக  நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது  மிக பெரிய பெருமை.  இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில்  அதிபரோ இல்லை.  'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை.   சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட  முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்துக் கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!

யார் இந்த கிருஷ்ணன்...?!!

சமையல்கலைப் படிப்பு படித்துத் தங்கப் பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில்  வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த  சமயம்......தனது வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் விடை பெறுவதற்காக  மதுரை செல்கிறார் கிருஷ்ணன்.

அங்கே கோவிலுக்குச் செல்வதற்க்காக சைக்கிளில் சென்றவர், யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். அது இந்த உலகின்/நாட்டின் சாபக்கேடுகளான பலவற்றுள் ஒன்றான புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தைத் தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்கான சன்மானம், அந்த முதியவரின்  பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின்  கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதைத்” தூள்தூளாக்கிவிடுகிறது!

நம்மவர்கள்  ஹோட்டல் சென்றாலும் அதிக பணம்  கொடுத்து வாங்கிய உணவையும் நாகரீகம் என்ற பேரில் பட்டும் படாமல் சிறிது  சாப்பிட்டு.... குப்பைக்கும் போகும் அந்த மீத உணவுகள்....?!!  கல்யாண விருந்து போடுகிறேன் என்று சிலர் தன் கௌரவத்தை காட்டுவதற்காக இலையில் இடம் போதாமல் உணவு வகைகளை நிரப்புவார்கள்..... சாப்பிட அமர்ந்த கனவான்களோ பணக்கார நோய்களின் நிர்பந்தத்தால் ஏனோ தானோவென்று கொறித்துவிட்டு செல்வார்கள்......இங்கும் அந்த உணவுகள் போகும் குப்பைக்கு.........?!!  இப்படிப்பட்ட ஒரு நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்து செழிப்பாய் பணம் சம்பாதிப்பதை விட இந்த மாதிரி மக்களுக்கு  நாம ஏன் உணவளிக்கக் கூடாது....? கண்டிப்பாய்ச் செய்வேன் என்று உறுதி பூணுகிறார்... 

இந்த மாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக  உதவணும் என்று இவர் முடிவு செய்த போது  இவரது வயது வெறும்  21.  

இப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... !! இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொள்ளி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......!!   

வெற்றிகரமாக இன்றும் தன் பணியை தொடரும் கிருஷ்ணன், அக்ஷ்யா என்னும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி தினமும் 400 பேருக்கு உணவளிக்கும் மக்கள்சேவை/மகேசன் சேவையை செய்துவருகிறார்!

இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது!

சி.என்.என். தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.....!

இந்த வாக்கெடுப்பில் அவர் முதலிடம் பெற இணையவாசிகளான நாம் உதவி செய்யலாமே......இந்த உதவியைத் தான் நான் உங்களிடம் கேட்கிறேன்.....

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் சென்று அவருக்கு வோட் பண்ணுங்கள்....


பின் குறிப்பு
 
நண்பர்களே இப்பதிவு நம் சக வலைப்பதிவு சகோதரர் திரு. எஸ். சதீஷ் 
அவர்களின் பதிவில் இருந்து எடுத்துப் பதிவிடுகிறேன் அவருக்கு என் நன்றி...

இந்த மனிதநேயமிக்க மனிதருக்கு நம் செய்யும் பேருதவி ஒரு ஓட்டு போடுவதுதான்..