Friday, December 16, 2011

யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம், எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்


- தி. பரமேசுவரி 

"எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்" 

இது பாரதிதாசனுடைய கவிதை வரிகள். படைப்பாளர் என்பவர் அந்தர வெளியிலே சஞ்சரித்தபடி மண்ணிலே கால் பாவாமல் வாழ்பவர் அல்லர். மண்ணின் விஷயங்கள் எவரைப் பாதிக்கின்றனவோ, எவரைச் செயல்படத் தூண்டுகிறதோ அவரே நல்ல படைப்பாளி என்பது என்னுடைய மிகத் தாழ்மையான கருத்து. இங்குச் செயல்படுதல் என்னும் சொல்லின் மூலம் யாரையும் கத்தி எடுத்துப் போரிடச் சொல்லவில்லை. இன்றைக்கு நாம் அட்டைக் கத்திக்கும் வக்கில்லாதவர்களாகத்தான் ஆகிக் கொண்டிருக்கிறோம்.

"  மன்னவனும் நீயோ வள நாடும் உனதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்"

என்று அறம் பாடிய மண் இது. இங்குதான் இன்றைக்குப் படைப்பாளர்கள் மிக அழுத்தமாகத் தன் வாயை ஃபெவிகால் போட்டு ஒட்டிக் கொண்டிருக்கும் அவலமும் நடந்து கொண்டிருக்கிறது. 'பரமக்குடியா? அது எங்கே இருக்கிறது?', 'கூடங்குளமா? எனக்கு ஒன்றும் தெரியாது'. அட, இதற்கெல்லாம் வாய் திறக்காத எழுத்தாளர் இருக்கலாம். ஆனால் அவரையும் நேரடியாகவே பாதிக்கும் நூலக மாற்றத்திற்காவது குரல் கொடுத்திருக்க வேண்டும். ம்ஹூம் எதற்கும் வாய் திறக்காத அழுத்தக்காரர்கள்தான் உலக மகா இலக்கியங்களைப் பற்றியெல்லாம் வாய் கிழியப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உலகப் புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது கூட, அதைப் பாதுகாத்து நமக்குக் கையளிக்கின்ற நூலகம் இட மாற்றம் செய்யப்படும் கொடுமையைக் கோடி காட்டியிருக்கலாமே!

எஸ். இராமகிருஷ்ணன்
நேற்று சென்னையில் நடந்த பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் நூல் வெளியீட்டு விழாக் கூட்டம். எஸ். இராமகிருஷ்ணன் பேசுகிறார். அருமையாக, அற்புதமாகப் பேசுகிறார். கிணறு பற்றிய ஒரு கதையைப் பேசத் தொடங்கி கிணற்றின் வகைகள், நீராதாரம் கண்டுபிடிப்பவர் பற்றிய தகவல்கள், கிணறு நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள தன்மை தொட்டு நீரைப் பற்றி உரை நீள்கிறது. நீர் குளிர்ச்சி; தண்மை; நீரோடான நம் வாழ்வின் பிணைப்பு; இறப்பு வீட்டில் துக்கம் கேட்க, நீரைத் தொட்டுத் துக்கத்தில் உள்ளவரின் கைகளில் விடும் மரபு என்றெல்லாம் சொல்லி நீர் நம்மைச் சாந்தப்படுத்தும், அமைதிப்படுத்துமென்று முடிக்கிறார். நீர் பற்றிய பேச்சு வந்தவுடனே மனத்திலே முல்லைப் பெரியாறு நிழலாடுகிறது. நீர் அமைதிப்படுத்தும் என்று அவர் சொல்கையில், நீரின்றி அமையாத இவ்வுலகில் நீராலாலான நம் சிக்கல்கள் வெளிக்கிளம்பி நிற்கையில், அப்பிரச்சனையை அவர் தொடுவார் என்று நினைக்கையில் தன் வழக்கமான புன்னகையுடன் உரையை முடித்துக் கொண்டார்.

அவருக்குப் பின்னால் பேசிய பாரதி கிருஷ்ணகுமார் இலவசங்களை ஒரு வாங்கு வாங்கி, போன ஆட்சியில் போட்ட சட்டங்கள் செல்லாது என்று ஒரு இடி இடித்து, கும்பகோணம் குழந்தைகளைப் பற்றியும் வாச்சாத்தி கொடுமையைப் பற்றியும் பதிவு செய்கிறார்.

"தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை "என்கிறார் ருஷியக் கவிஞர் ரசூல் கம்சதோவ். உணர்வற்ற அறிவினால் ஏதேனும் பயனுண்டா?  

1 comment:

  1. நல்ல பதிவு! உங்கள் ஆதங்கம் புரிகிறது. பத்திரிகைகளுக்கே துணிவில்லை நம் நாட்டில்!

    ReplyDelete