Showing posts with label ஐ​ரோம் சர்மிளா. Show all posts
Showing posts with label ஐ​ரோம் சர்மிளா. Show all posts

Wednesday, March 9, 2011

மார்ச் 8 - பெண்கள் தினம்?!


மார்ச் 8 சர்வதேசப் பெண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதற்கு ஒரு வரலாறும் இருக்கிறது. ஆனால் எதுவுமே தோன்றும்போது எந்த நோக்கத்தோடு தோன்றியதோ அந்த நோக்கத்திலிருந்து விலகியும் பிறழ்ந்தும் முரண்பட்டும் போவது காலப்போக்கில் நிகழ்கிற மாற்றமாக இருக்கிறது. மதம், சமயம், சாதி, கடவுள், நாம் போற்றிய - போற்றும் இயக்கங்கள் என நிறுவனமயமாக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் என்ன நேர்ந்ததோ அதுவே பெண்கள் தினத்திற்கும் நிகழ்ந்திருக்கிறது.
இன்றைக்கு, மேலைநாட்டினர் தாக்கத்தாலும் உலகமயமாதலின் சந்தைப் பொருளாதாரத்தாலும் கொண்டாடப்படும் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் போன்றதல்ல பெண்கள் தினம். உழைப்பாளிகள் தினம் போன்று உயர்ந்த நோக்கத்தோடு வெகு நாட்கள் போராடிப் பெற்ற தினமது.

ஆனால் மார்ச் 8 என்றால் ஒரு பக்கம் அழகுக் கொண்டாட்டங்கள் (Fashion Parade, etc.,), சமையல், கோலப் போட்டிகள், பெண்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான குறைந்தபட்சத் தள்ளுபடிகள், ஆண்களா? - பெண்களா? விதத்திலான பட்டிமன்றங்கள், ஆடம்பரங்கள், ஆர்ப்பாட்டங்கள், கேளிக்கைகள். மற்றொரு புறம், பெண் படைப்பாளிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகைகள் கலந்து கொள்ளும் கருத்தரங்குகள், கூட்டங்கள். இந்த இரு மலைகளுக்கும் இடையில் இருக்கும் மடுவை எவரும் பார்ப்பதில்லை என்பதே கசப்பான உண்மை.

அன்றைக்கு ஒரு நாளில் இதைப் பற்றிப் பேசக் கூடிய பெண்களில் பெரும்பாலானோர் வணிகவயப்பட்டவர்களாயும் பெண்கள் தினம் பற்றிய ஓர்மையின்றியும் செயல்படுபவர்களே! அது ஒரு கொண்டாட்ட நாள் அன்று. அது ஒரு அடையாள நாள். நாம் செய்ய வேண்டிய, முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணிகளை நமக்கு நினைவூட்டும் நாள். நம்மைப் பற்றி நாம் சிந்திக்கத் தொடங்கிய, கேள்விகள் எழுப்பிய, களத்தில் இறங்கிப் போராடிய பெண்களை நினைவூட்டும் அடையாள நாள்.

முதன் முதலில் 1909ல் பெண்களுக்கான ஒரு நாளை வரையறை செய்ய வேண்டுமென்ற தீர்மானம், அமெரிக்காவில் சோஷலிசக் கட்சியால் கொண்டுவரப்பட்டு, தேசியப் பெண்கள் தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, பிப்ரவரி 28ம் தேதி பெண்கள் தினமாகக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.

பிறகு, 1910ல் கோபன்ஹேகனில் நடந்த சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாட வேண்டுமென்று பல நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.
இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு பல நாடுகளும் முதன்முறையாக
1911 -ல் இது பற்றிக் கூடி விவாதித்தன. முதன் முறையாக, சர்வதேசப் பெண்கள் தினம் மார்ச் 19ம் தேதி கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பல நாடுகளில் அன்றைய தினம், பிரம்மாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.

அதன்பின், மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் 1913ல் மீண்டும் கூடி, மார்ச் 8ம் தேதியைப் பெண்கள் தினமாகக் கொண்டாட முடிவு செய்தன. இது பற்றி ஐ.நா., சபையில் விவாதிக்கப்பட்டு, சர்வதேசப் பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

இத்தகைய உன்னதமானதொரு நாளில் உளப்பூர்வமாக வரும் இளைய தலைமுறையினரின் மனத்தில் பெண்ணின் ஆற்றலை உணர்த்துவதான, தன்னில் சரிபாதியான பெண்ணை உணரச் செய்வதற்கான சிந்தனைகளைக் கிளர்த்த வேண்டும். பெண்கள் பெரும்பான்மையும் ஈடுபடாத (அறிவியல், கனரக வாகனங்கள் ஓட்டுதல், நடத்துநர், ஓதுவார், வரலாற்று ஆய்வாளர்), அல்லது அத்தி பூத்தாற்போல ஈடுபடுகின்ற பெண்களைக் கொண்டு அதில் அவர்கள் சந்தித்த சங்கடங்கள், பெற்ற வெற்றி, தீர்வு ஆகியவற்றை விவாதிப்பதுடன் நில்லாமல் பரவலாக அதனை எடுத்துச் சென்றால் இளந்தலைமுறைப் பெண்கள் அந்தப் புதிய பாதையில் நடை போடும் வாய்ப்பிருக்கிறது.

சமூகத்தில் வீட்டிலும் பயணத்திலும் அலுவலகத்திலும் பெண்கள் சந்திக்கக் கூடிய சிக்கல்களை, அரசு இயந்திரங்கள்வழி எதிர்கொள்ளக்கூடிய வன்முறைகளை நேர் நின்று சந்திக்கக் கூடிய ஆற்றல் பெறுவதற்கான வழிமுறைகளைப் பேசலாம்.

இது பற்றியெல்லாம் எந்த வகையிலும் சிந்திக்க வாய்ப்பில்லாத நாம் அன்றாடம் சந்திக்கின்ற, ஆனால் சிந்திக்காத நம் விளிம்புநிலைப் பெண் தோழியர்களிடம் பெண்கள் தினம் பற்றிய உணர்வுகளைக் கடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

சமுதாயத்தில் ஆண்களுக்கு இணையான கருத்து / பொருளாதார / கல்விச் சுதந்திரம் இன்று வரையிலும் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. இன்று  பெண்கள் பல துறைகளில் நுழைந்துள்ள போதும் அவர்களின் திறமைக்கேற்ற வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை. திறமையை வெளிப்படுத்தி வாய்ப்புகளைப் பெற்றாலும் அவற்றை இழித்துப் பேசுவதற்கான வாய்கள் எப்போதும் மூடுவதேயில்லை.

இவற்றுக்கான தீர்வாக எழுத்தறிவு, பொருளாதாரத் தற்சார்பு, எதிர்கொள்ளல், செயல்படுதல், சிறுமைகளை எதிர்த்தல் ஆகிய பண்புகளை வளர்த்தெடுத்தல் ஆகியவற்றை ஊடக வலையில் சிக்கிக் கொண்டிருக்கும் இளந்தலைமுறைப் பெண்களிடம் கொண்டு செல்வதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை முன்னெடுத்தல் போன்றவையே நம் தேவை.

ஐரோம் ஷர்மிளா சானு
தான் நம்பும் கொள்கைக்காக, சிறப்பு அதிகாரங்களை இராணுவத்துக்கு வழங்கும் சட்டத்தை விலக்கிக் கொள்ளும்படி மத்திய அரசை வேண்டி உறுதி தளராமல் பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து உண்ணாநிலை இருந்து வருகிறார் வடகிழக்கு மாநிலத்து ஷர்மிளா சானு.


ப்ரீஜா
13 ரூபாய் தினக்கூலி மட்டுமே சம்பாதிக்கும் தாய்க்குப் பிறந்த, பாதி நாட்கள் இரவு உணவு உண்ண முடியாத அளவுக்கு வறுமையில் வாடும் கேரளச் சிறுமி ப்ரீஜா சீனாவில் நடந்த ஓட்டப் பந்தயத்தில் தங்கமும் வெள்ளியும் வென்று திரும்பியிருக்கிறார். யானைகள் நிற்கும் காட்டுப்பாதை வழியே பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த ப்ரீஜா பயத்தில் ஓடிய ஓட்டமே இதற்குப் பயிற்சியாயிற்று. வெறும் கால்களில் ஓடிய சிறுமி பெற்ற பரிசுகளைக் கண்ட அவருடைய ஆசிரியர் காலணி வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

வறுமையின் காரணமாகப் படிக்க வசதியின்றி, இலவசமாக அரசு இசைப் பள்ளியில் இசை பயின்று, விடா முயற்சியுடன் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் ஓதுவார் பணியில் சேர்ந்துள்ள திருச்சியைச் சேர்ந்த அங்கயற்கண்ணி.

இவர்களே இன்று நம் முன்னால் கவனப்படுத்தப்பட வேண்டியவர்கள்; ஆனால், நீரா ராடியாக்களும் ஊழலில் திளைக்கும் பெண் அரசியல்வாதிகளும் உடலை மூலதனமாக்கும் நடிகைகளுமே ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டு மக்களின் குறிப்பாக, பெண்களின் கவனத்தைக் கவருகிறார்கள். சிறுமைப்படுத்தப்பட்ட வடிவமான ஊடக விளையாட்டுகளும் தொடர்களும் வெற்று நிகழ்ச்சிகளும் பெண்களை மையப்படுத்தியே நிகழ்த்தப்படுகின்றன.

இவற்றையெல்லாம் நாம் கவனத்தில் கொண்டு நம் பெண்கள் தின நிகழ்ச்சிகளை வடிவமைக்கவில்லையென்றால் மேலே சொன்ன வெற்று ஆரவாரங்களுடன் தோன்றிய காரணமே அழுந்தப் புதைக்கப்பட்டு எல்லா நாட்களையும் போன்ற ஒரு நாளாக மாறிவிடும் அபாயமிருப்பதை நாம் நூற்றாண்டுப் பெண்கள் நாளிலாவது சிந்தித்து, ஒவ்வொரு பெண்ணும் இதை மாற்றுவதற்கான எள்ளத்தனை முயற்சியையாவது இந்த நாளில் செய்ய வேண்டும்.

நான் ஒரு பெண்;
நான் வளர்வதைக் கூர்ந்து கவனியுங்கள்
காலோடு கால் சேர்ந்து நிற்கும்
என்னைப் பாருங்கள்.
நிலப்பரப்பை
என் அன்புக் கரங்களால் அரவணைக்கிறேன்.
ஆயினும் இன்னும் நான் ஒரு கருவே (சிறுமுளையே)
என் சகோதரன் என்னைப் புரிந்துகொள்ளும் வரையில்
நான் விதை
நான் செய்ய வேண்டுமென்றால்
எதையும் என்னால் செய்ய முடியும்
நான் வலுவானவள்!
நான் வெல்லப்பட முடியாதவள்!
நான் ஒரு பெண்!

-    (ஹெலன் ரெட்டியின் கவிதை)  
  
 (பெண்கள் தினத்தின் வெற்று ஆரவாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எண்ணியே ஒரு நாள் பிந்தி இந்தக் கட்டுரையை இன்று பதிவிடுகிறேன்) 

- தி. பரமேசுவரி

Thursday, February 18, 2010

வீழ்வேன் என்று நினைத்தாயோ?


– தி. பரமேசுவரி
நன்றி : தடாகம்.காம்


தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிகவுழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல – நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ ?



புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கழகத்தின் நுழைவு வாயில். ஆயுதம் ஏந்திய போலீசாரின் கூட்டம். 57- ஆம் எண் அறைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்கும் நம்மைத் துளைக்கும் சந்தேகக் கண்கள். ஏகப்பட்ட கேள்விக் கணைகள். எல்லாவற்றையும் கடந்து அறைக்குள் நுழைந்தால், மிக மெலிந்த தேகத்துடன் துவண்ட நிலையில் ஓர் இளம்பெண் படுத்திருக்கின்றார். கூர்மையான கண்கள், அழுக்கடைந்த சிக்கான தலைமுடி, மூக்கைச் சுற்றிப் போர்வைக்குள் சுருண்டிருக்கும் உடல் அவர்தான் இரோம் ஷர்மிளா சானு.



ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து பள்ளி இறுதியைக் கூட முடிக்காத இளம் பெண்ணாக இருந்தாலும் கூட தன் வாழ்நாளிலேயே சகாப்தமாகி விட்ட இவரை ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை என்பது மிகவம் வேதனைக்குரிய செய்தி. இந்த இளம்பெண்ணின் போராட்டம் மட்டும் இந்தியாவின் வேறு பகுதிகளில் நடைபெற்றிருந்தால் பெரும் எழுச்சி ஏற்பட்டிருக்கும். ஆனால் இந்தியாவின் கவனிக்கப்படாத பகுதிகளில் ஒன்றான மணிப்பூரில் இந்தப் போராட்டம் நடைபெற்றதால் ஒன்பது வருடமாகத்தொடர்ந்து உண்ணா நோன்பிருக்கும் இந்தப் பெண்ணின் மன உறுதி இன்று வரை பல இந்தியர்களாலேயே அறியப்படாத நிலையில் உள்ளது.



விடுதலை பெற்ற காலகட்டத்தில் இருந்தே மணிப்பூரில் தனி நாடு கேட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 40 தீவிரவாதக் குழுக்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் உள்ளது. இவர்களின் தீவிரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 1948 – என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது நடுவண் அரசு. இந்தச் சட்டத்தின் மூலம் தீவிரவாதிகள் என்று சந்தேகப்படும் யாரையும் கைது செய்யவும், விசாரணை இன்றிச் சிறையில் தள்ளவும் ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தினால் தண்டிக்கப்பட்ட தீவிரவாதிகளை விடவும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் ஏராளம்.



ஒரு கவிஞராகவும் யோகக் கலை வல்லுநராகவும், ஓவியராகவும் அமைதியாக வாழ்ந்த ஷர்மிளாவின் வாழ்வில் 2000-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் நாள் ஒரு பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. மணிப்பூரில் உள்ள ‘மலோம்” என்ற இடத்தில் அமைதிப் பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் ஷர்மிளாவும் கலந்து கொள்வதாக இருந்தார். ஆனால் அவர் அங்கு வந்த போது அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினர் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியதற்குப் பழிவாங்கச் சுட்டதில் அப்பாவி மக்கள் 10 பேர் இறந்து போனார்கள். இந்தக் கொடுமைக்குப் பொறுப்பேற்க வேண்டிய இராணுவமோ மிகச் சாதாரணமாக, ‘இது தவறுதலாக நிகழ்ந்துவிட்ட சம்பவம்.... ஓநாய் வேட்டையில் சில ஆடுகளையும் பலி கொடுக்கத்தான் வேண்டும்” என்று கூறியது. இயல்பாகவே மென்மையான மனம் படைத்த ஷர்மிளாவை இந்தச் சம்பவம் வெகுவாகப் பாதித்தது. இந்தச் செயலை எதிர்த்துப் போராட நினைத்தார் ஷர்மிளா. தனது தாயிடம் ஆசி பெற்று, துப்பக்கிச் சூடு நடைபெற்ற இடத்துக்குச் சென்று, இறக்கும் வரை உண்ணாநோன்பினைத் தொடங்கினார். ‘ஆயுதப் படையினருக்குத் தேவைக்கு அதிகமாக அதிகாரங்களை வழங்கும் “ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் - 1958 ஐ நீக்க வேண்டும்” என்பதே அவரது கோரிக்கை. இந்த உண்ணாநோன்பினைத் தொடங்கிய போது அது ‘மாரத்தான் உண்ணாவிரதமாக” வரலாற்றில் பதிவு செய்யப்படும் என்பதை அவரே நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். ஏன்? அந்த நேரத்தில் இவர் செயலை விமர்சித்தவர்களும் எள்ளி நகையாடியவர்களும், இவருடைய தன்னம்பிக்கையையும் உறுதிப்பாட்டையும் சந்தேகித்தவர்களும் கூட, இவர் இந்த அளவுக்குப் போராட்டத்தைத் தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார் என்று கருதவில்லை.


இராணுவத்துக்கு எதிராக உண்ணாநோன்பு தொடங்கிய மூன்றாவது நாளே தற்கொலை முயற்சி வழக்கின் கீழ் அரசால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் ஷர்மிளா. சிறையில் அடைபட்டும் தன் உண்ணா நோன்பினை அவர் கைவிடவில்லை. நவம்பர் 21 ஆம் தேதி அவருக்கு வலுக்கட்டாயமாக நாசி மூலம் உணவு கொடுத்து உண்ணா நோன்பினை முறியடிக்கும் முயற்சி தொடங்கியது. தொடர்ந்து ஒன்பது வருடங்களாகத் திரவ உணவு ரப்பர் டியூப் மூலம் நாசித் துவாரம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. விட்டமின்கள், புரதச் சத்து, மினரல்கள் என உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துப் பொருட்களும் திரவ வடிவிலேயே செலுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் வருடக் கணக்கில் உணவு உண்ணாத காரணத்தால் ஷர்மிளாவின் நாடித் துடிப்பு குறைந்துவிட்டது. கால்சியம் குறைபாட்டால் எலும்புகளும் வலுவிழந்து விட்டன. எனவே நகரக் கூட முடியாமல் தவழ்ந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளது அவரது உடல் நிலை.


அண்மையில் அக்டோபர் 2-ஆம் நாள், காந்தி ஜெயந்தி அன்று விடுதலை செய்யப்பட்டார் ஷர்மிளா. அவருடைய ஆதரவாளர்கள் அவரை இம்பாலிலிருந்து புது தில்லிக்கு யாருமறியாமல் கடத்திச் சென்றனர். தில்லியில் இருக்கும் மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திய ஷர்மிளா, பாராளுமன்றத்துக்கு அருகில் இருக்கும் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் தன் உண்ணா நோன்பினைத் தொடங்கினார். அதற்குப் பிறகு தான் இந்தச் செய்தி – மாபெரும் போராட்டம் - மக்களால் அறியப்பட்டது. நாடெங்கும் ஷர்மிளாவுக்கு ஆதரவுக் குரல்கள் பெருகத் தொடங்கி உள்ளன.


கடந்த ஆறு வருடங்களாக இவரது தாய் இவரைப் பார்க்கவேயில்லை. “எனது கண்களில் இருந்து வடியும் கண்ணீர் எனது மகளின் மன உறுதியைப் பாதித்து விடக்கூடாது. எனவே நான் அவளைப் பார்க்க மாட்டேன் “ என்று கூறுகிறார் இந்தத் தாய். இத்துணை வேதனைக்கும் இடையில் ஷர்மிளாவின் உண்ணா விரதம் தொடாந்து கொண்டே இருக்கிறது. லண்டனின் பி.பி.சி. நிறுவனமானது ஷர்மிளாவின் மாபெரும் உண்ணா நோன்புப் போராட்டத்தைப் பற்றியும் மோசமாகி வரும் அவது உடல்நிலை பற்றியும் செப்டம்பர் 19, 2006 அன்று ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அவருடைய உள் உறுப்புகள் பலமிழந்து வருவதையும் , எலும்புகள் வலுவிழந்து இருப்பதையும் குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவனத்துக்கு ஷர்மிளா அளித்த பேட்டியில் “இது எனது சொந்தப் போராட்டம் அல்ல; இது உண்மை, அன்பு, அமைதியின் அடையாளம்” என்று கூறியிருக்கின்றார்.


ஷர்மிளாவின் உடல்நிலை அபாயகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் உண்ணா நோன்பினைத் தொடாந்தால் அவரது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று ஷர்மிளாவுக்குச் சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். காந்தியச் சிந்தனைகளில் மிகுந்த பற்றுக் கொண்ட ஷர்மிளா “இன்று மகாத்மா காந்தி உயிருடன் இருந்திருந்தால் தேசிய அளவில் இச்சட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடங்கி இருப்பார்” என்று கூறுகிறார். இவருடைய போராட்டத்துக்கு இவரது குடும்பத்தினர் முழுமையான ஆதரவினைத் தந்துள்ள அதே வேளையில் சொல்லொணத துயரத்தையும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர். அவருடைய சகோதரரின் அரசுப் பணி பறிக்கப்பட்டது. குடும்பச் சொத்துகளையும் இழந்து பணியின்றித் தவிக்கும் சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்கொலை என்பது கோழைத்தனமான முடிவு. ஆனால் மக்களின் நன்மைக்காக உண்ணாநோன்பிருக்கும் ஷர்மிளாவின் மீது தற்கொலை வழக்கினைப் பதிவு செய்கிறது அரசு. இன்றியமையாத இப்பிரச்சினையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லக் காந்திய வழியில் போராடும் ஷர்மிளாவின் போராட்டத்தைச் சட்ட விரோதம் என்று அரசு கருதுகிறது. தன்னுடைய நிலையில் இருக்கும் தவறினை உணர்ந்து அரசு ஷர்மிளாவின் போராட்டத்துக்குச் செவி சாய்க்க வேண்டும். மணிப்பூர் மக்களின் வேதனை நீங்க வேண்டும் என்பதே இப்போராட்டத்தைக் கவனித்து வரும் மக்களின் பிரார்த்தனையாகும்.