Showing posts with label மீனவர். Show all posts
Showing posts with label மீனவர். Show all posts

Monday, February 7, 2011

ரௌத்ரம் பழகு

- தி.பரமேசுவரி 
கானலம்பெருந்துறை எனச் சிறப்பிக்கப்படும் மூதாதைக் கூட்டம்; நம் தொல்பழங்குடி மக்களின் நீட்சியாய் நெய்தல் மக்கள்; கடற்கரைப் பரதவர். மிதமாய் வீசும் வாடைக் கொண்டலின் சுகத்தில் திளைக்கும் கடற்புறாக் கூட்டம். நுரை பூத்துக் கிடக்கும் நெய்தல் துறை; உமணரின் உப்பு வயல்கள்; பரந்து விரிந்து கிடக்கும் வெள்ளை மணற்பரப்பு.

நாவாய்களும் நாட்டுப்படகுகளும் கட்டுமரங்களும் ஓடிய பவ்வத்துள் இன்று விசைப் படகுகளின் ஓசை. நெய்தலந்துறையின், பரதவரின் பழம்பெருமை அழிந்து, ஒடுக்கப்பட்டு மீனவ சாதியென சுருங்கிய நொய்மை. தெற்கே இந்தியப் பெருங்கடலும் கிழக்கே வங்காள விரிகுடாவுமாகத் தண்ணீர் சூழ்ந்த மாநிலமான தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களின் இன்றைய கேட்பாரற்ற, கவனிப்பாரற்ற சூழல்.
 
பழவேற்காட்டில் தொடங்கி குமரி மாவட்டத்தின் கேரள எல்லையான நீரோடி வரைக்கும் சுமார் 1,225 கி.மீ பரப்புள்ள கடற்கரைப் பகுதி கொண்ட தமிழகத்தில் கடல்சார் வாழ்வுடன் சுமார் 10 லட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். மீன் பிடிப்பதையே தொழிலாகக் கொண்டு வாழும் மிகுதியான இம்மக்கள் தமிழகத்தின், இந்தியாவின் கடல்சார் வளத்துக்குப் பெரும் பங்களிப்பைச் செய்து வருகிறார்கள். லட்சக்கணக்கான மதிப்புள்ள மீன்களைப் பிடிப்பதும் முத்துக் குளித்தலும் உப்பு விளைத்தலுமான இவர்களது வாழ்வு அன்றாட உணவுக்கே துன்பப்படும் நிலையில். துறைவனும் சேர்ப்பனுமென சங்க காலத்தில் போற்றப்பட்ட நிலை மாறி இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாகவே கழிகிறது வாழ்க்கை.

பரதவர்களின் பண்டைவீரம் இன்றும் சவாலும் சாகசமும் நிறைந்த அன்றாடக் கடற் பயணத்தில் தெறிக்கிறது. மரணத்தின் விளிம்பில் ஊடாடும் இவர்களின் நெருக்கடியான வாழ்வை நிலப்பரப்பில் இருப்பவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போவதும் இரு வேறு நிலப்பரப்பு மக்களுக்குமான இடைவெளியே இன்றைய பெருஞ்சோகம். கடல்வாழ் மக்களின் துயரம் மண்வாழ் மக்களால் பிரதிபலிக்கப்படாமல் கவனமற்றே கிடக்கிறது.

இராமேசுவரத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலிருக்கும் கச்சத்தீவு, நம் மீனவர்கள் காலங்காலமாக மீன் பிடித்துவந்த பகுதி. இராமநாதபுரத்தைத்தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட சேதுபதி மன்னனுக்குச் சொந்தமான எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று. ஆமைகள் அதிகமுள்ள இடமாதலால் இது கச்சத்தீவு எனப்பட்டது (கச்சம் - ஆமை). இந்திய நாட்டின் தமிழகத்திலுள்ள இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமான கச்சத்தீவைத் திடீரென இலங்கை அரசு உரிமை கொண்டாடியபோது, அப்போதைய இந்தியப் பிரதமரான நேரு கடுமையாக எதிர்த்தார். ஆனால் அவருக்குப் பின்னால் பிரதமர் பதவிக்கு வந்த இந்திராகாந்தி சில, பல அரசியல் காரணங்களுக்காகத் தமிழக அரசின் ஒப்புதலின்றி, தமிழக மக்களின் அனுமதியின்றி 1974இல் இலங்கை அரசுக்குத் தாரை வார்த்தார். ஆனாலும் தமிழக மீனவர்களிடம் மிகுந்த அக்கறை கொண்டிருந்த அரசு அவர்களின் நலனுக்காகச் சிலவற்றை ஒப்பந்தத்தில் சேர்த்தது.

அவை,

1.    இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் இளைப்பாறலாம்.
2.     வலைகளைக் காய வைக்கலாம்.
3.    அந்தோணியார் கோயில் விழாவுக்கு ஆண்டுதோறும் வரலாம்.

என்பனவாகும். ஆனால் மெல்ல மெல்ல காட்சிகள் மாறத் தொடங்கின. அதுவரையிலும், நிம்மதியாக அந்தப் பகுதியில் மீன் பிடித்து வந்த, ஓய்வெடுத்த, தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படை அடிக்க ஆரம்பித்தது.

இதன் தொடக்கமாக, 1970 களைச் சொல்லலாம். இலங்கையில் தமிழரைத் துன்புறுத்திய இனக் கலவரம் தொடங்கிய காலகட்டம். இரண்டாந்தர மக்களாகச் சொந்த நாட்டிலேயே தமிழர்கள் இழிவு படுத்தப்பட்டனர். இலங்கை அரசுக்கு எதிராக அணி திரண்ட ஈழத்தமிழர்களுக்குத் தமிழக மீனவர்கள் உதவிகள் செய்வதாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பின. மீனவர்கள் வழியாகத் தமிழக அரசு மறைமுக உதவிகள் செய்வதாகவும் இலங்கை அரசு ஐயப்பட்டது. அது வரையிலும் இலங்கையின் பருத்தித்துறை, யாழ்ப்பாணம் வரை வந்து மீன் பிடித்து வந்த இராமேசுவரம் மீனவர்கள், இந்த ஐயத்திற்குப் பிறகு தடுக்கப்பட்டனர்; கைது செய்யப்பட்டனர்; சுடப்பட்டனர். இலங்கையில் போராட்டம் தீவிரமடையத் தொடங்கிய நேரத்தில் மீனவர்களின் ஒரு பிரிவான கரையாளர் இனத்தில் பிறந்த பிரபாகரனின் மீது காட்ட முடியாத சினத்தை நம் மீனவர்கள் மீது காட்டியதாகவும் ஒரு கருத்துண்டு. விடுதலைப் புலிகள் நிகழ்த்தும் வன்முறைக் கொலைகள் என்று புலிகளுக்கு எதிராகப் பரப்புரை செய்யவும் இலங்கை அரசு  மீனவர் படுகொலைகளைப் பயன்படுத்திக் கொண்டது.

தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக எழும் குரல்களை நசுக்கி, மீண்டும் ஈழத்தில் போராட்ட எண்ணங்கள் மலராதபடிக்கு அதன் வேர்களைக் கருக்குமுகத்தான் எல்லையோரப்பகுதிகளைத் தம் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வருவதே இலங்கை அரசின் நோக்கமாக இருக்க முடியும். அதற்கு அத்துமீறி உள்நுழையும் தமிழக மீனவர்கள் தடையாக இருப்பார்களென்று அந்த அரசு கருதுவதாலேயே இத்தகைய தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. கடலையும் கடற்கரையோரங்களையும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்குக் கைமாற்றிக் கொடுக்கவே இந்தக் கொலைகள் இந்திய - இலங்கை அரசுகளால் கூட்டாக நடத்தப்படுவதாகவும் கருத இடமிருக்கிறது. இந்தியாவின் கிழக்குக் கடற்படைக் கமாண்டோ இராஜசேகர் அளித்த ஒரு பேட்டியில் "இலங்கைக் கடற்படையினர் இந்தியாவில் எங்களை மீறி நுழைய வாய்ப்பில்லை" என்று கூறுவது கவனிக்கத்தக்கது. நீ அடிப்பதுபோல அடித்தால், நான் அழுவது போல அழுகிறேன் என்னும் பகல் வேடதாரிகளின் பொய்ப்பூச்சு உப்புக்கடல்நீரால் கரைந்தபடிதான் இருக்கிறது. இவ்விரு அரசுகளின் இந்தப் பொருந்தாக் கூட்டணியின் முகமூடி கிழிபடும் நாளில் இந்திய இறையாண்மைக்குச் சரியான பரிசு கிடைக்குமென்று நாம் நம்பலாம்.

கடல் மேல் பிறந்து, கண்ணீரிலும் மிதக்கின்ற தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும்போது, சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதும், அவர்களின் மீன் வலைகள் அறுக்கப்படுவதும், அவர்கள் பிடித்த மீன்கள் சூறையாடப்படுவதும் தொடர்ந்த கதையாகவே நடந்து வருகிறது. 1983 முதல் 1991 வரை தாக்கப்பட்ட, கொல்லப்பட்ட மீனவர்கள் என்று புள்ளிவிவரங்களை அளித்துவந்த அரசு அதன் பிறகு கணக்கெடுப்பதையே நிறுத்தி விட்டது. கடந்த 30 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டதாக ஒரு கணக்கை இராமேசுவரம் மீனவர்கள் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் உயிருக்கு உத்திரவாதமின்றி, கடல் நடுவில் பயணிக்கும் மீனவன் பேதம் பார்ப்பதில்லை; பகை பாராட்டுவதுமில்லை. அவனது உயிர்நாடியில் மரணம் கசிந்து கொண்டே இருக்கிறது. ஆனால், எல்லை தாண்டி, புயல் மழையில் சிக்கி உணவின்றித் தவிக்கும் மனிதர்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும் எல்லையற்ற பெருங்கருணையும் அன்பும் கொண்டவன் அவன்.

உண்மையில் கடலோரம் விடுதிகள், பூங்காக்கள், செயற்கைத் துறைமுகங்கள், கேளிக்கை மையங்கள், இறால் பண்ணைகள் என அரசு பெருமுதலாளிகளோடு கை கோர்த்துக் கொண்டு தம் சுய லாபத்துக்காகப் பல்வேறு வணிகத் திட்டங்களைச் செயல்படுத்த எண்ணியுள்ளது. நிலங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களமைத்து, மக்களின் வளத்தைச் சுரண்டுவது போலவே கடலையும் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கும் மீன்பிடி நிறுவனங்களுக்கும் பிரித்துக் கொடுத்துச் சம்பாதிக்கவே மீன்பிடி மசோதாவை கொண்டு வர எண்ணியது. இது இயற்கையாகவே கடல் காவலர்களாக விளங்கும் மீனவர்களைக் கடலை விட்டு விலக்கி வைக்கும் திட்டமாகும். மீனவர்களின் கடுமெதிர்ப்பு காரணமாக அரசு தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ளது. மீனவர்கள் எதிர்க்கும் சேது சமுத்திரத் திட்டத்தையும் இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும்.

இத்தகையதொரு விரிவான பின்புலத்தில் மீனவர்களின் கொலைகளைப் பற்றி நாம் பேச வேண்டியிருக்கிறது. கடல் எல்லை பற்றிக் குறிப்பிட்டு அறிய இயலாத நிலையில் மீனவர்கள் எல்லை தாண்டிப் போவதைப் பெருங்குற்றமாகச் சொல்ல முடியாது. மட்டுமின்றி, எல்லை தாண்டும் மீனவர்களைக் கைது செய்யலாம்; சிறைப்படுத்தலாம்; குற்றம் சாட்டி நம் இந்திய அரசிடம் ஒப்படைக்கலாம். உயிரைப் பறிக்கும் அதிகாரத்தை இவர்களுக்குத் தந்தது யார்? பாகிசுதான், பங்களாதேசு, தாய்லாந்து, இலங்கை மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டியபோது இந்திய அரசு அவர்களை என்ன செய்தது? கைது செய்து, அந்த நாட்டுக்குத் தகவல் கொடுத்தபின் நல்லெண்ண அடிப்படையில் அவர்களை விடுதலை செய்தது. இது ஏன் தொழில் காரணமாக எல்லை தாண்டும் நம் அப்பாவி மீனவர்களுக்கு நிகழவில்லை? அப்போது நம் கடற்படை என்ன செய்து கொண்டிருக்கிறது? ஏன் இலங்கை அரசு சொல்லும் உப்புசப்பில்லாத காரணங்களை ஏற்றுக்கொண்டு நம் நடுவண் அரசு சும்மா இருக்கிறது?

உலகெங்கிலும் உள்ள மீனவர்கள் சந்திக்கும் சிக்கல்தான் இது. எங்கு மீன்வளமிருக்கிறதோ அதைத் தேடிச் செல்லும் மீனவர்கள் எல்லைக்கோட்டைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்க முடியுமா? இதனைப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணனும் ஒப்புக் கொண்டிருக்கிறார். "இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பது முறையற்றதுதான். ஆனாலும், கடலுக்குப் புறப்படும் எந்த மீனவனும் மீன் வளம் எங்கிருக்கிறதோ, அங்கேதான் போவார்கள். எனவே இந்திய, இலங்கை எல்லைக்கோட்டைத் தாண்டி மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவரைத் தடுக்க முடியுமா? அப்படி அவர்கள் சென்றால், அவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுடலாமா? துப்பாக்கியால் சுடாதீர்கள். இந்திய மீனவர்களைக் கொல்லாதீர்கள் என்று இலங்கை அரசிடம் சொல்லியுள்ளோம். ஒத்துழைப்பதாக இலங்கை அரசும் உறுதி அளித்துள்ளது" என்பது அவர்தம் கருத்து.

அன்று ஒரு செல்லப்பன், நேற்று ஒரு வீரபாண்டி, இன்று மாற்றுத்திறனாளியாக, ஒரு கை பகுதி செயலிழந்தவரானாலும் நம்பிக்கை தளராமல் மீன் பிடிக்கச் சென்ற ஜெயக்குமார் என்று இன்னும் எத்தனை களப்பலிகளைத் தமிழகம் இழந்து கொண்டிருக்கப் போகிறது? ஒவ்வொரு முறையும் இத்தகைய கொடூர நிகழ்வுகளின்போது, இன உணர்வுடன் அப்போதைக்கு அங்குமிங்குமாய்க் குரலெழுவதும் உடனே தமிழக அரசு நடுவணரசுக்குத் தகவல் அனுப்புவதும், கடிதமெழுதுவதும், தந்திகள் கொடுப்பதும் இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதுமாகக் கொடுங்காலம் கழிந்து கொண்டிருக்கிறது. 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்தபோதும் நடுவணரசு இது வரையிலும் ஒரு குடும்பத்திற்கேனும் நிவாரணத் தொகையோ, ஆறுதல் அறிக்கையோ அளித்ததேயில்லை. தமிழக அரசோ ஒரு சடங்கு போல தொகையும் அரசு வேலையும் வழங்கி அமைதியடைகிறது. தேர்தல் நெருக்கம் காரணமாக, அண்மையில் நடந்த மரணத்திற்குச் சில சிறப்பான காட்சிகள் நடந்தேறின. கட்டியணைத்து ஆறுதல் சொல்வதும் பணம் வழங்குவதும் நடந்ததோடு சிறப்புப் பரிசாக மீனவ சமுதாயத் தலைவர் சிங்காரவேலரின் 151-ஆவது பிறந்தநாள் விழாவை அரசே கொண்டாடும் என்ற அறிவிப்பும் பின் தொடர்ந்தது.

தன் வாழ்வாதாரங்கள் சீரழிக்கப்பட்டு, உணவுக்குத் திண்டாடும் நிலையிலும், உயிருக்கு உத்திரவாதமில்லாத, உயிராபத்து அதிகமுள்ள மீன்பிடித் தொழிலை இப்போதும் மீனவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கடலில் இறங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் கண்ணீரோடு செந்நீரும் கடலில் கலந்துகொண்டுதான் இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் முதல்வர் கருணாநிதி சொன்னார், "இது தொடர்ந்தால், எங்கள் மீனவர் கை, மீனை மட்டுமே பிடித்துக் கொண்டு இருக்காது". இன்றைக்கு அது காற்றோடு கலந்த சொற்களாகி விட்டன. காற்றின் ஓசையில் மீனவக் குடும்பங்களின் அழுகையொலி கரையோர மனிதர்களை வந்தடைவதில்லை.

இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு ஒன்றென்றால் பதறும் நடுவணரசு, தமிழக மீனவர்களை மட்டும் மனிதர்களாகவே சிந்திப்பதில்லை. பிரான்சு நாட்டில் ஒரு சீக்கியருக்கு உரோம-மதப் பிரச்சனை எழுந்தபோது நம் பிரதமர் அடுத்த விமானம் பிடித்து அந்நாட்டிற்குச் சென்று சிக்கலைச் சரி செய்தார். ஆனால், நமக்கென்று வரும்போது சும்மா இருக்கும் அவர்கள் முகம் பார்த்து, "சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூடத் தமிழ் மீனவனின் உயிருக்கு இல்லையா?" என்னும் சீமானின் இந்தக் கேள்வியை நாமும் கேட்கத் தோன்றுகிறது.

இனியாகிலும், தாள்களைக் கொண்டே அரசு நடத்துவதைக் கைவிட்டு நம் தமிழக அரசு, தன்மான வாளெடுத்து நடுவணரசிடம் கேள்விகள் கேட்டால் நம் தமிழக மீனவனுக்குக் கடல் வசப்படலாம். நடக்குமா?     

Friday, September 17, 2010

பின்னிய இழை நெசவில் மானிட அனுபவம் – கொற்கையை முன் வைத்து





மனித மனத்தின் ஆழ் அடுக்குகளில் பதிந்திருக்கும் படிமங்களே கலையாக உருவெடுக்கிறது. இசை, நடனம், சிற்பம், ஓவியம், இலக்கியம் எல்லாம் இப்படித்தான். இலக்கியம் எனும் மகா நதி, சிறுகதை, கவிதை,கட்டுரை, நாவல் எனக் கிளை நதிகளாகப் பிரிந்து பிரிந்து கவின் நடை போடுகிறது. மனித மனம் மொழியை ஊடகமாகக் கொண்டு, தன்னைப் பாதித்தவற்றைத் தனக்குத் தெரிந்த வகையில் வெளியேற்றுகிறது. படைப்பாளியின் மொழி ஆளுமையும் தன் உணர்வுகளை வாசகர்களிடம் கடத்தும் விழைவும் முயற்சியும் படைப்பு வடிவத்தைத் தீர்மானிக்கின்றது. மனப் பதிவின் அடுக்குகளில் அழுத்தம் பெரும் வாழ்வனுபவங்களே இலக்கியமாக வடிவெடுக்கின்றன. படைப்பாளி தன் உள்ளுணர்வால், தன் அனுபவத்தின் சாரத்தை, தன் அனுபவ முழுமையைத் தொகுத்துப் பார்க்கின்றான். இழைகளின் ஊடு பாவுகளிடையே அலசி ஆராய்கின்றான். எழும் கேள்விகளுக்குத் தர்க்கபூர்வமாய் விடை தேடுகின்றான். கிடைக்கும் விடைகளைப் பல்வேறு கோணங்களில் பார்வையிடுகின்றான். கூர்மையாக்குகின்றான். நாவலாசிரியர் ஜோ டி குருஸ் இப்படித் தன் அனுபவங்களைத் தொகுக்கையில் அது ‘கொற்கை’ நாவலாக வடிவம் கொள்கிறது.

வாழ்வு பன்முகத்தன்மை கொண்டது. சிக்கலான வலைகள் சூழ்ந்து நிற்பது. நம்ப முடியாத திருப்பங்கள் நிறைந்தது. இப்பேரலைகளுக்கிடையில் சிக்கித் தவிக்கும் மனிதன், வாழ்வைத் தன் கைகளால் அள்ள முயல்கின்றான். அப்படியானதொரு மனித முயற்சியே ‘கொற்கை’ எனலாம். கொற்கையில் யார் முதன்மைப் பாத்திரம்? நாவலின் முதல் நூறு பக்கங்களுக்குத் தலை காட்டா விட்டாலும் பிறகு இறுதி வரை பயணிக்கும் தண்டல் பிலிப்பா, நாவலின் மையமாக விளங்கும் தோணியா, நாவலின் பரந்து பட்ட எல்லையை நிர்ணயிக்கும் காலமா, அங்கு வாழும் மனிதர்களின் நிலைகளை நிச்சயிப்பதில் முதன்மையாய் நிற்கும் காமமா, மானுட அனுபவத்தின் விரிவு நோக்கிச் செலுத்தும் மரணமா எப்படிக் கூற முடியும். இவை எல்லாமுமானதுதான் ‘கொற்கை’.

நூற்றாண்டுகள் பயணிக்கும் நாவல், நாடு, மனிதர் சார்ந்து கால நிலை மாற்றங்களைப் பதிவு செய்தபடி நிதானமாய் முன்னகர்கிறது. பழமைத் தன்மையிலிருந்து நவீனத்துக்கு மாறும் கொற்கையை சமூகம், சமயம், பொருளாதாரம், அரசியல், கலை, தனிமனித வாழ்வு, குடும்ப அமைப்பு மூலமாக சித்திரப்படுத்துகின்றார். இவற்றினூடாகப் பிலிப்பின் வருகை, ஏற்றம், வளர்ச்சி, தேக்கம், மரணம் எனத் தண்டலின் வாழ்வும் பயணிக்கிறது. நேர்கோடாய் இன்றி நாவலின் நகர்வு நாலாபுறமும் கிளை பரப்பி வாசக சாத்தியங்களுக்கு வழி வகுக்கிறது. நிலத்துக்கும் கடலுக்குமான உறவு நாவல் முழுவதும் மௌனமாய்ப் பேசப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கடல் இருக்கிறது. அதன் ஓயாத அலைகளை,  பிறழ்வுகளை, அலைக்கழிப்புகளை வாழ்வின் குரூர யதார்த்தம் கொண்டு நெய்திருக்கிறது இந்நாவல்.

கடல் சார் சமூகமான பரதவர் வாழ்வு பேசும் ‘கொற்கை’ நாவலில் மனித ஆளுமைகள் விரிவும் வீச்சும் பெறும் அதே நேரத்தில் மனித மதிப்பீடுகள் உடைந்து சிதறுவதையும் காண முடிகிறது. அனேகமாக இந்நாவலில் கொற்கை மாநகரின் மனிதர்கள் அத்துணை பேருமே பாத்திரங்களாக்கப் பட்டிருக்கிறார்களோ என ஐயுறும்படிக்கு எண்ணிக்கை கிடக்கிறது. பாத்திரங்களுக்குத் தனிப்பட்ட அழுத்தம் தராவிடினும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதிய, புதிய கதை மாந்தர் வருகை தந்தாலும் அவர்கள் மறக்க முடியாதபடிக்குக் கவனம் பெறும் தன்மை இந்நாவலின் வெற்றி. (உ-ம்) கொண்டைய்யா, வெரோணிக்கம், சேசு, சுகந்தி, இலட்சுமணன், கமலம்.
வெள்ளையர் வருகை, காங்கிரசின் வீழ்ச்சி, கழகங்களின் எழுச்சி, ஈழக் கலவரமென வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டே நகர்த்துதல், நடிகர் சந்திர பாபுவை ஒரு பாத்திரமாகவே வடித்திருத்தல், பரதவச் சொல்லாடல்கள், தெற்கின் மொழியமைவை வலிமையாய்ப் பயன்படுத்தல், ஆசிரியர் குறுக்கீடின்றி, தன் விருப்பம் சார்ந்த பதிவுகளின்றி பாத்திரங்களின் மன ஓட்டங்களூடே கதையைச் செலுத்துதல் இவ்வாறான உத்திகளைச் சிறப்பாகக் கையாண்டுள்ளதன் வாயிலாக குரூஸ் நாவலை முழு வீச்சுடன் கொண்டு செல்கின்றார்.
வலைவீசு புராணம், கந்த புராணம், ஒளவையின் பாடல் என இலக்கியப் பாடல்களுடன் தாலாட்டுப் பாடல், மீனவர்களின் அம்பாப் பாட்டு, பாண்டிய பதியின் பட்டாபிஷேகப் பாடல், பொருத்தமான பைபிள் வசனங்களையும் இணைத்திருத்தல் கூடுதல் சுவை. எழுத்தாளர்கள்  ப. சிங்காரம், நாஞ்சில் நாடன்  போன்று தமிழ் இலக்கியங்களை இடையிடையில் பயன்படுத்திச் செய்நேர்த்தியுடன் நாவலுக்கு எழில் கூட்டுகின்றார் ஜோ டி குருஸ். நாவல் முழுதும் இடையிடையே வரைபடங்களும் நிழற்படங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் நாவலின் இறுதியில் குடும்ப வரைபடங்களும் வட்டாரச் சொற்களுக்கான விளக்கங்களும் பின்னிணைப்பாகத் தந்திருப்பது நாவலின் நம்பகத்தன்மைக்குத் துணை நிற்கின்றது.
நாவல் முழுதும் தீராப் பெருங்காமம் பசித்து அலைகிறது. மனிதப் பரவசம், தடுமாற்றம், அகங்காரம், அலைக்கழிப்பு, அவலம், ஒருமித்த காதலும் இயைந்த காமமும் என நாவலை முன்னகர்த்தும் கதாபாத்திரமாகக் காமம் முன் செல்கிறது. ரஞ்சிதத்தின் அதீத காமம், அல்வாரிஸ் - கோகிலாவின் ஏமக் காமம், தெரசாளின் காரியக் காமம், மதலேனின் அழிவுக்கு வழி வகுக்கும் பபிலோன் பாதிரியின் பொருந்தாக் காமம், மரிய தாஸ் பாதிரியின் காம தகனம், தண்டல்களின் பொடியன் சோக்கு (கடலில் வேலைக்குச் சேரும் சிறு வயது ஆண் பிள்ளைகளைத் தங்கள் காம இச்சைக்குப் பயன்படுத்துதல்) என நாவல் முழுதும் விரவிக் கிடக்கிறது காமம். இதுவே இந்நாவலின் பலமும் பலவீனமுமாக இருக்கின்றது. வசைச் சொற்களிலும் கூடக் காமம் பரக்கக் கிடந்து சற்றே முகம் சுளிக்கச் செய்கிறது. எந்தச் சமூகமாயினும் இவ்வசவுகள் பெரும்பாலும் பெண் உறுப்புகள், பாலியல் சார்ந்த சொல்லாடல்களாகவே இருப்பது ஆய்வுக்குரியவை.
நாவலின் தொடக்கத்திலேயே இரண்டு அத்தியாயங்கள் முழுவதும் 6 டன் எடையுள்ள என்ஜின் இறக்கச் செய்யப்படும் தட்டு மிதப்பான் பற்றியும் அதனைக் கப்பலிலிருந்து இறக்கும் முறை பற்றியும் இறக்கிய பிறகு உருட்டுக்கட்டைகள் மூலமாக அதனைக் கொண்டு செலுத்துதல் ஆகியவற்றைத் தன் மொழி நேர்த்தியின் மூலமாகவும் வாழ்க்கை அனுபவம் சார்ந்தும் சிறிதும் சலிப்புத் தட்டாமல் விவரிக்கிறார். தோணி கட்டும் முறை பற்றி ஒரு அத்தியாயம் முழுதும் பேசுகிறார். வாழ்வும் எண்ணமும் ஒருங்கிணைந்திருந்தாலன்றி இது சாத்தியமில்லை.
கொற்கையின மக்களான பரதவர்களிடையே உள்ள வர்க்கப் பிரிவுகள் அவர்தம் வாழ்வைச் சூறையாடுவதை, கொற்கையில் தோணிகளுக்கு அதிபதிகளாய் வாணிகம் செய்து பணம் கொழிக்கும் மேசைக்காரர், படித்து முன்னேறியும் மேலேயும் ஏற முடியாமல் கீழ் இருப்பவர்களையும் தங்களுடன் இணைத்துக் கொள்ள எண்ணாமல் நடுவில் நிற்கும் மெனக்கெடன்மார், பெரும்பாலும் தோணியிலே பிழைப்பு நடத்தியும், மூச்சடக்கி சங்கு, முத்துக் குளிக்கும் தொழில் செய்தும் பிழைக்கும் கம்மரர் வாயிலாகப் புனைவுக்குரிய கலை அமைதியுடன் வாழ்வியலாக்குகின்றார்.
ஓரே சாதியைச் சேர்ந்தவராயினும் இவர்களுக்குள் நிலவும் வேற்றுமைகளை, அடுத்தவர் முன்னேற்றம் காணப் பொறாத மனநிலையை, பசாந்திக்கும் டக்ளசுக்குமிடையிலான உரையாடலில் வெளிப்படுத்துகின்றார்.  “மொத்த வழக்குல பாதிக்கி மேல ஒங்க கம்யூனிட்டியில ஒருத்தர் மேல ஒருத்தர் போட்ட வழக்காத்தாம் இருக்காம். பட்... நாட் ஈவன் அ சிங்கிள் கேஸ் ரெஜிஸ்டர்ட் இன் நாடார் டு நாடார், சர்ப்ரைசிங்”(பக். 206). உருண்டையன் தியேட்டரில் தீப்பிடித்துப் பரதவக்குடியினர் பலர் இறந்த போது கூட சிங்கராயனோ, பல்டோனாவோ, கர்டோசாவோ வலைக்குடிப்பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. ஏழையாயினும் தம் மக்கள் என்ற எண்ணம் சிறிதுமின்றி, போய்ப் பார்த்தால் எங்கே செலவுகளைத் தங்கள் தலையில் வைத்து விடுவார்களோ என்ற பயம்.
சிலுவைப்புரத்தில் தன் தோணித் தொழிலாளர்களுக்காகப் புறாக்கூண்டுகள் போன்ற கூட்டு வீடுகள் கட்டுகிறார் குருஸ் பல்டோனா. அதைச் சற்றே காற்றோட்டமாகக் கட்டலாமென்று ஆலோசனை கூறும் கொத்தனாரிடம் எரிந்து விழும் பல்டோனா, தன்னிடம் வேலை பார்க்கும் மெல்கியாசிடம்,
“இப்புடி கெட்டுனாத்தாம் வூடு தங்காம தோணியள்ள படுப்பான்வ, வேலைய பாப்பான்வ. அதவுட்டுட்டு இந்த கூதி வுள்ளய குடியிருந்து கூத்தடிக்கவா வீடு கெட்டுறம்.”
காட்டுமிராண்டிக் கூதிவுள்ளய காலம் பூதாவும் நம்ம கிட்ட கொத்தடிமயாக் கெடக்கணும் கேட்டியா?..... கொஞ்சம் சொகுசு குடுத்தமின்னு வையி, அதுக்கு மேல, அதுக்கு மேலயின்னு ஆசப்படுவான்வ. எதுத்துக் கேள்வி கேப்பான்வ. எல இவன்வ குனிஞ்சிக்கிட்டேயிருக்கனும். நிமிர வுட்டியா பிரச்சன தாம்.”
எலேய் எனக்கு சாதியெல்லாம் ஒரே சாதி தாம் பணக்கார சாதி, மத்ததெல்லாம் எனக்குத் தெரியாது கேட்டியா”
என்று பேசுகையில் சாதியை விடவும் வர்க்கத்தால் மக்கள் பிளவுபட்டிருப்பதை, சமூகத்தில் இந்நோய் ஆழ வேரூன்றியிருப்பதை, பணக்கார முதலாளி தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளியைச் சக மனிதன் என்று எண்ணாமல் அவன் உழைப்பைச் சுரண்டுவதை பல்டோனா மூலம் வெளிப்படுத்துகின்றார்.
ஆற்றல் சான்ற பரதவர் குலம் பழம்பெருமை பேசி அழியாமல் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களைக் கொணர்ந்து வளர்ச்சி காண வேண்டும் எனும் எண்ணத்தை,
“சங்கு குளி, மீன் புடி, வள்ளத்துக்குப் போ, தோணி வச்சி நட செய்யி, எல்லாஞ்செரி, ஆனா புள்ளயள மட்டும் படிக்க வைச்சிருங்கப்பா” (பக்.66)  என்று சிலுவை பர்னாந்து வாயிலாக வெளிப்படுத்துகின்றார். அவர் அப்படி முன்னேற்றம் நோக்கிய பாதை பற்றிப் பேசிய போதும் அதை காதில் வாங்காத கம்மரர்,
“கற்கை நன்றே கற்கை நன்றே         
 கொற்கை புகினும் கற்கை நன்றே”
என்று கேலி பேசுகின்றனர். ஆனால், நாடார் சமுதாயத்தின் ஒற்றுமை, மகிமை, சங்கம்,  நாடார்களுக்கான வங்கி திறக்குமளவு முன்னேறுதல் ஆகியவற்றையும் நம் முன் நுட்பமான மௌனத்துடன் பரத்துகின்றார். எந்தச் சமுதாயமும் போர்க்குணத்துடன் ஒற்றுமையும் சேர்கையில் தான் முன்னேற முடியும் என்பதனைப் போர்க்குணம் கொண்ட பரதவர் ஒற்றுமையில்லாத காரணத்தால் சீரழிவதையும் வேகமாக முன்னேறும் நாடார் சமூகத்தின் பிந்தைய தலைமுறை சொகுசான வாழ்க்கைக்குப் பழகிய பின் தடுமாறுவதையும் காட்டுகையில் படைப்பாளுமையின் கூருணர்வைக் காண முடிகிறது.
சாமியார் ஆனாலும் நிலம், பெண் மீதான பற்று எத்தனைக் கீழ்நிலைக்குத் தள்ளும் என்பதை பபிலோன், மரியதாஸ், மேற்றிராணியார் போன்றோர் மூலம் உணர முடிகிறது.  என்ன செய்தாலும் திருச் சபையைப் பகைத்துக் கொள்ள முடியாது எனும் எண்ணம், மறைவாய்ச் சந்தன மாரியை வணங்குதல் எனக் கிருத்துவத்தை விமர்சிப்பதோடு, பெரியாரின் குருகுல எதிர்ப்புப் போராட்டத்தையும் சிதம்பரனாரின் சிறைவாழ்விலும் சாதீயத்தின் மீதான பற்று ஆகிய நிகழ்வுகளைக் குறிப்பிடுவதன் மூலம் இந்து மதத்தின் பலவீனத்தையும் சார்பின்றிப் பேசுகின்றார்.
 இந்து மதத்தின் அத்தனை அடுக்குகளின் மீதும் ஏறி அமர்ந்திருந்த  பிராமண அகங்காரத்தை, “ பீநாறிப் பெயல்வ. அடுத்தவனத் தீட்டு தீட்டுயிங்கியான்வ”, மண்டயில உள்ள சரக்க வச்சி நம்மள கால காலமா பயங்காட்டுதாமுல்லா”, “மண்டயில சரக்கிருக்குன்னு நம்மள சொல்ல வச்சிருக்காமுல்லா” (பக்.93) என்று வேல் நாடார் சாதீய அடக்குமுறைகளைக் கேள்வி கேட்கிறார்.
அவருக்கும் ஒரு கேள்வியாக “ நீரென்ன சக்கிலியன்னா ஆவிக் கட்டியா புடிக்கிறியரு. ஊருக்குத் தானவே உபதேசம்” என்று தாவீது வேல் நாடாரைப் பேச, ஒவ்வொருவரும் மற்றவர் மேல் அமர்ந்து மூச்சுத் திணறும், முடை நாறும் சமுதாய ஒழுங்கீனம் நிர்வாணமாய் நிற்கிறது. இப்படிக் கடந்த கால மதிப்பீடுகள் மீது கேள்விகள் எழுப்பப்பட்டாலும் பெரிய அதிர்வை ஏற்படுத்தாமல் தன்னளவிலேயே அது நின்று போவதுடன் நமது மரபு, பெண் மீதும் குடும்ப அமைப்பு மீதுமேற்றியுள்ள கருத்துச் சுமைகளைத் தன் பார்வை மூலம் எதிர் கொள்ள ஆசிரியர் முனையவில்லை.
தோணியிலிருக்கும் போதும் ராச் செபம் செய்தல், குமரி விளக்குத் தெரிகையில் குமரி ஆத்தாளுக்குத் தேங்காய் உடைத்தல், கத்தோலிக்கராயினும் சந்தன மாரியை வணங்குதல், தெய்வானையைப் பரத்தியாக்கி முருகனை மச்சானாகப் பாவித்தல் என நாவலில் பரதவர் தொன்மம் பேசப்படுகிறது. எல்லாவற்றையும் மீறித் தங்களுக்குத் தோன்றாத்துணையாய் இருக்கும் கடல் தாய் பற்றிச் சொல்லும் போது, இருமி இருமி மார்புக்கூட்டைத் தடவும் கிலுக்கு தண்டல்  கடலை பார்த்துத் துப்பி விட்டுச் சொல்கிறார், “ மன்னிச்சுக்க தாயி”. கிலுக்கின் இச்செய்கை கடல் மீது பரதவர் கொண்டிருக்கும் அளப்பரிய பக்தியை வெளிப்படுத்துகிறது.
தமிழகத்தில் நிலவிய வேர்ப் பஞ்சம் காரணமாக்ச் சோற்றுக்கு வழியற்றிருந்த தமிழர்கள், ஆங்கிலேயர்களால் இலங்கை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்த மலங்காட்டில் பல கொடுமைகளை அனுபவித்துத் தம் உழைப்பால், ரத்தம் சிந்தி அதனைச் செல்வங் கொழிக்கும் தேயிலைத் தோட்டங்களாக மாற்றியதையும் இப்படி வந்த தமிழர்களை அங்கேயிருந்த பூர்வகுடித் தமிழர்கள் விரோதிகள் போலப் பாவித்து அவர்க்குக் குடியுரிமை கொடுக்க்க் கூடாதென்று சொன்னதையும் குறிப்பிடும் நாவலாசிரியர் தமிழர்களைப் பற்றி ஆங்கிலேயர் சொன்னதாக,
“கொஞ்சமா சாப்புட்டு, அதியமா வேலை பாத்து, எசமான விசுவாசத்தோட இருக்கிற ஒரு கூட்டம் இங்க தமிழ் நாட்டுல இருக்கு. நீக்ரோ அடிம கெடைக்கலயின்னு ஏங்கவலப்படுறீங்கன்னு சொன்னானாம்” எனும் போது நம் ரத்தம் கொதிக்கிறது.
பரதவரைப் பொறுத்தவரையில் தோணி நடையில் செல்லும்போது, கொழும்பு அயல்நாடாகவே பாவிக்கப்படாமல் வருவதும் போவதுமாயிருந்த நிலை மாறி ஈழத்தில் கலவரம் ஏற்படுதல், ‘கள்ளத்தோணி’ என நம் மீனவர்களை இழிவாகப் பேசி அடித்து விரட்டுதல், என்று வரலாற்றை விரித்துக் கலவரம் தொடங்கிய காலம் பற்றி ஆசிரியர் பதிவு செய்கையில் இன்றைய ஈழம் தவிர்க்க இயலாமல் மனத்துள் எழுந்து துக்கிக்கிறது.
ஈழச் சிக்கல் தோன்றிய காலம் தொட்டே நம் இந்திய அரசு அதனைக் கையாளும் முறையை,
“எல்லாமே டெல்லி சர்க்கார் பாக்குற பார்வ. அவுருக்கு ரோசாப்பூ குடுக்கவே நேரம் சரியா இருக்கு, தனித் தமிழ்நாடு எதுக்கு கேட்டாவ? இதுக்குத்தாம். நம்ம பிரச்சினயள ஒரு பிரச்சனயாவே நெனைக்க மாட்டான்வ டெல்லியில உள்ளவன்வ..”
“என்னமோ இங்க உள்ளவங்க ஒதவி கேட்டுருக்காங்க கண்டிப்பா வந்திரும் அப்புடி இப்புடியின்னான்வ.”
“அதெல்லாம் வரும். கண் தொடைப்புக்கு அப்புடி ஒரு காட்டு காட்டுவான்வ, ஆனா பிரச்சனைக்கி ஒரு முடிவு காண மாட்டான்வ. அது முடியிறதுல அவன்வளுக்கு விருப்பம் இருக்காது”
என்ற உரையாடல்களில் அறுபதுகளில் இருந்து இன்று வரை மாறாத இந்திய அரசின் மனோபாவம், அதற்குத் துணை நிற்கும் தமிழக அரசுகளின் எட்டப்பத்தனம் வெட்ட வெளிச்சமாக்கப்படுகிறது.
 1989இல் கிளாடியஸ், “இந்தியாவே நேரு குடும்பத்துக்கு எழுதிக் கொடுத்த சொத்து. தமிழ்நாடு கழகங்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட சொத்து” (பக். 950) 2010ஆம் ஆண்டிலும் பொருத்தமாகவே இருப்பது முரண்நகை.
வன்மம் காட்டும்பெண் பாத்திரங்களான ரஞ்சிதம், சலேட்டம்மாள், தெரேசா, அருள்மொழி போன்றோர் விவரிக்கப்படும் விதத்தில் கூடுதல் கனம் பெறுகின்றனர் என்றாலும் சலோமி, கமலம், சுகந்தி, மதலேன், பூங்கோதை, பிளாவி, வெரோணிக்கம், லிடியா ஆகிய  மென்மையான பாத்திரங்கள் முழுமையின்றி நிற்கின்றனர்.
இல்லற வாழ்வில் முழுமை காணும் சிலுவைப் பர்னாந்து-கமலம், சண்முகவேல்-அன்னக்கிளி, லெட்சுமணன்-சாவித்திரி போன்ற கதை மாந்தர்களை வடித்துக்காட்டி குடும்ப வாழ்வின் அழகியல் இழைகளைப் பின்னும் குருஸ் அதன் முரணில் நின்று ததேயு பூபாலராயன்-கரோலின், தாமஸ்-கவி தம்பதியினரை எதிர்மறை இழைகளாகத் தெளிவாகவும் அழுத்தமாகவும் அமைக்கின்றார்.  
 பண்பாட்டு விழுமியங்கள் பற்றிச் சொல்லும்போது சொந்த அக்காளின் மீது காமம் பாராட்டும் சகோதரனை, அது பற்றிச் சுட்டிக் காட்டாமலே தவறு உணர்த்தும் அக்கா, பபிலோனின் முறைகேடான செய்கையைத் தன் மகனான கிளமென்ட்டிடம் கூற வேண்டாமென்று கூறும் வெரோணிக்கம், “பொண்ணாப் பொறந்தவ எத யார்ட்ட சொல்லுறது, எத மனசுக்குள்ள போட்டு அமுக்குறதுன்னு இருக்கும்மா” (பக். 592) என்று தன் மகள் போல எண்ணி உபதேசிப்பதும் சக்கிலியக் குடியைச் சேர்ந்த ராகம்மா தன் சேரிப் பெண்களின் துயர நிலையைத் தொட்டுக்காட்டிப் பேசுவதும்  சுட்டத்தக்கவை.
நாவலில் இரு தலைமுறையினர் சந்திக்குமிடங்கள் மிக ஆரோக்கியமாகப் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக, சண்முகவேல் நாடாருக்கும் அவர் பேரன் ரமேஷுக்குமிடையில் நடைபெறும் உரையாடல். சில்வியாவிடம் தனக்கு ஏற்பட்டிருக்கும் காதல், தன் முதல் மணத் தோல்வி, அவளுடைய துயரம் ஆகியவற்றைத் தோழனுடன் பகிர்ந்து கொள்ளும் பாவனையில் ரமேஷ் பேசுவது இருவர் மீதுமே நமக்கு மரியாதையை ஏற்படுத்துகின்றது.
ஸ்டீபன் கல்லூரியில் சேரும் அமுதன் அக்கல்லூரியின் நவீனத்தில் மிரண்டு அங்கே படிக்க முடியாது என்று தன் தாய் ரொசிற்றாவுக்குக் கடிதம் எழுதுகின்றான். கொற்ற்கையிலேயே பிறந்து, வாழ்ந்து வேறு வெளி அனுபவமற்ற அவன் தாய் அமுதனுக்கு எழுதிய உணர்வுபூர்வமான கடிதம் அவனை அங்கேயே நிறுத்துகிறது. மேற்கொண்ட பயணத்துக்கான வலிமையையும் தருகிறது. இன்றைய மாணவர்களுக்கும் உந்துசக்தியாய் விளங்கக்கூடிய ஆற்றல் மிகுந்த கடிதம் அது.   
கொற்கையின் ஆண்டாமணியார், ஆழி சூழ் உலகின் காகுச் சாமியாரைச் சற்றே நினைவூட்டுகின்றார். சுகந்தி, பிளாவி, நிக்கோலஸ் ஆகியோரின் நிறைவேறாக் காதல்கள் நம் இதயத்தின் நுண்ணூற்றுகளைச் சுரக்கச் செய்கின்றன. வாழ்வின் அடிமட்டத்திலிருந்து வந்த, தான் காதலித்த பெண்ணை மணந்த பிலிப்பு,  தன் மகள் பூங்கோதையின் காதலை நிராகரித்து அவளை விரும்பிய நிக்கோலசுக்குத் திருமணம் செய்விக்காமல் ஒதுக்குவதும் நிலை உயர உயர பிலிப்பிடம் காணப்பெறும் மாற்றங்களும் பணக்கார வாரிசுகளான அவரது குடும்ப வாரிசுகளின் பணம் சார்ந்தே உறவுகளைப் பார்க்கும் பண்பும் அலட்சியப் போக்கும் கதையின் மையம் நோக்கி நம்மை இழுத்துச் செல்கின்றன. சண்முகவேல் நாடாருக்கும் பிலிப்புக்கும் இருக்கும் ஆத்மார்த்தமான நட்பு, நாடார்களின் காலத்துக்கேற்ற மாற்றத்தையும் வளர்ச்சியையும் சண்முக வேலின் குடும்பம், தொழில் கொண்டு உணர்த்துவது நல்ல யுக்தி.
ரேவதியைக் கயவர்களிடமிருந்து ரேனால்டு காப்பாற்றுவதும் அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆவலாதியினால் தன் வெளிநாட்டுப் பயணத்தையே கைவிட்டு, அவனைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதும் புளித்துப் போன நம் தமிழ் சினிமாவை நினைவூட்டுகிறது.
பக்கம் 929இல் முத்துக்கிருஷ்ணனின் மகள் பெயர் பத்மினி என்பது மாறி பானுமதி என்று தவறாகப் பதியப்பட்டிருக்கிறது.
தனிமனிதத் துயரம் விரிவு பெற்று, வாழ்க்கையின் மனித உறவுகள் சார்ந்த அடிப்படைக் கேள்விகளாய் மாறும் தீவிரம், வரலாற்றையும் தத்துவத்தையும் உள்ளடக்கி வாழ்வு குறித்த முழுமையான தேடலை நிகழ்த்தும் ஓர் இலக்கிய வடிவமே நாவலாகும். நாவலில் காணக் கிடைக்கும் வாழ்வு குறித்த தரிசனம்,  வாசகர்களுக்கான  மௌன இடைவெளிகள்,அபூர்வமான நுட்பங்கள், வடிவ ஒழுங்கு, மொழித் திறன், நம்பகத் தன்மை எனக்  ‘கொற்கை’ நாவலுக்குரிய விவாதத் தன்மையுடனும் உயிர்ப்புடனும் இருப்பதைக் காணலாம். நிலக்காட்சிகளின் அழகியலும் கடல் சார் வருணனைகளுமான நகாசு வேலைகள் எழில் கூட்டுகின்றது. மிகை யதார்த்தத்தின் அலைவுகள் தென்பட்டாலும் கூட நாவல் யதார்த்தத் தளத்திலேயே இயங்குகிறது.
“மனுசனோட பொறப்பில்ல அண்ணாச்சி, அவனோட படிப்போ, பணமோ கூடயில்ல... அவனோட செயல்பாடு இருக்கு பாத்தியளா அதுதாம் அவம் யாருன்னு சொல்லுமுண்ணேம்” (பக். 212)
“பரந்து விரிஞ்ச கடல்ல பயணம் பண்ணும்போது, ஆண்டவா... ஒண்டை கடல் எவ்வளவு பெருசு, நாங்க எவ்வளவு சிறுசுன்னு நெனைக்க வைக்கிது” (பக். 767-768) போன்ற உரையாடல்கள் ஆழி போலப் பரந்து விரிந்த மனித மனத்தின் ஆழத்தையும் அதன் சூட்சுமத்தையும் உணர்த்தி வாழ்வின் பரிமாணங்களை, நெகிழ்வுகளை, விழுமியங்களைக் காட்டி நிற்கின்றன. 
                      


நன்றி:  புத்தகம் பேசுது செப்டம்பர் 2010