Showing posts with label தகவல். Show all posts
Showing posts with label தகவல். Show all posts

Sunday, February 27, 2011

அஸ்திக்கும் செய்யும் அவமானம்


மலேசியாவிலிருந்து உயர்ச் சிகிச்சைக்காகத் தமிழகம் வந்தும் விமான நிலையத்திலேயே பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட வடுவே நம்மில் இன்னும் மறையவில்லை. இதற்கிடையே ஈழத்திலுள்ள வல்வெட்டித் துறை மருத்துவமனையில் அண்மையில் மரணமடைந்து நம்மைப் பெருஞ் சோகத்திலாழ்த்தியுள்ளார் அவர். இந்நிலையில் அவரது அஸ்திக்கும் சிங்கள இனவாதம் செய்துள்ள அவமானம் நம்மைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
வல்வெட்டித் துறைக் கடற்கரையிலுள்ள ஊரணி மயானத்தில் பார்வதி அம்மாளின் உடல் எரிக்கப்பட்ட இடத்தில், அதே இரவில், சில நாய்களை அரைகுறையாக எரித்துப் போட்டிருக்கின்றன சில மனித மிருகங்கள். மறுநாள் அஸ்தியைச் சேகரிக்க முடியாதபடி சிதறடித்துச் சென்றிருக்கின்றன அவை. அஸ்தியைச் சேகரிக்கச் சென்றோர் அரைகுறையாக எரிந்த நிலையிலிருந்த அந்நாய்களின் உடல்களைக் கடற்கரையில் புதைத்துவிட்டு, பார்வதி அம்மாளின் அஸ்தியைச் சிரமத்துடன் சேகரித்துக் கடலில் கரைத்துள்ளனர். சிங்களப் பேரினவாதத்தின் இவ்வடாத செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

-   தி. பரமேசுவரி

Sunday, February 20, 2011

பிரபாகரன் தாயாரின் மரணம்…

தகவல்: இனியொரு...

கடந்த பல மாதங்களாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை (தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார்) இன்று காலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமானார்.

கடந்த பத்து வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். தனது மேல் சிகிச்சைக்காக இந்தியா வந்த அவர் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு கருணாநிதி அரசு மறுத்தது தெரிந்ததே.

மக்களின் அன்றாட மனிதாபிமான செயற்பாடுகள் கூட அதிகாரவர்க்க அரசியலின் மரணித்துப் போனதற்கு பிரபாகரனின் தாயார் ஒரு குறியீடு!

Tuesday, September 7, 2010

பேரறிவாளனின் நூல் அறிமுக நிகழ்வு


        
       வேலூர் சிறையில் தூக்குத் தண்டனைக் கைதியாக இருந்து வரும் பேரறிவாளன் எழுதி ஐந்தாம் பதிப்பாக வெளிவரும் ‘தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்’ நூல் அறிமுக நிகழ்வு 11.09.2010 மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா சாலை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டட அரங்கில் நடைபெற உள்ளது.

          ‘தமிழர் எழுவர் விடுதலைக் குரல்’ ஒருங்கிணைப்பாளர் தோழர் தியாகு தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் கவிஞர் தணிகைச் செல்வன் அறிமுக உரை வழங்குகிறார். மனித உரிமைப் போராளி ஜக்மோகன் சிங், முன்னாள் காவல் துறை அதிகாரி வி. ஆர். லட்சுமி நாராயணன், பேரா. சரசுவதி, உச்சநீதி மன்ற வழக்கறிஞர் பாரி வேந்தன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது,, மலையாள மனோரமா கவிதா, கவிஞர் தாமரை, மனித உரிமைச் செயற்பாட்டாளர் எம். ஏ. பிரிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துரைக்கிறார்கள். 

நன்றி:  யுவபாரதி

Sunday, January 10, 2010

செங்குருதியில் நனையும் செம்மொழி மாநாடு

தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு,
29, பத்திரிகையாளர் குடியிருப்பு,
திருவான்மியூர், சென்னை – 600 041.
மின்னஞ்சல் : jpirakasam@gmail.com பேசி : 94440 90186

05.01.2010.

தோழமைக்குரிய இளம் ஆய்வாளர்களே,

தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் சார்பில் உங்களுக்கு மனமார்ந்த வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று தமிழினத்தை துன்ப இருள் கவ்விக் கொண்டிருக்கிறது. இந்நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகள் தமிழீழ மக்களின் கண்ணீராலும் குருதியாலும் நனைந்து கொண்டிருக்கின்றன. இந்த வன்கொடுமைகளுக்குக் காரணமான நம் அரசுகள் இப்பொழுது இது அயல்நாட்டுச் சிக்கல் என்கின்றன. நாம் நமது கவலை என்கிறோம்.
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு எந்தப் பின்னணியில் கூட்டப்படுகிறது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். ஒரு கட்சி மாநாட்டை அறிவிப்பது போல் உலகத்தமிழ் மாநாடு குறித்துத் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது. உரிய கால இடைவெளி, ஆராய்ச்சிப் புலம்சார்ந்த அணுகுமுறை இல்லாமல் செய்யப்பட்ட இந்த அறிவிப்பை உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் நோபரு கரோஷிமா ஏற்க மறுத்து விட்டார். இதை அடுத்துத் தடாலடியாக இந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்களுக்குப் பின்னியங்கும் அரசியலை நுழைபுலம் காணும் ஆய்வாளர்களாகிய நீங்கள் நன்கறிவீர்கள்.
ஈழத்தமிழர் சிக்கலில் உலக அளவில் சரிந்து வரும் தம் செல்வாக்கை உயர்த்துவது என்பது வெளிப்படையான காரணம். இதை வெற்றியுடன் நடத்துவதன் மூலம் தாமும் தமது அரசும் எடுத்த நிலைப்பாடுகளை உலகத் தமிழினம் ஒப்புக் கொண்டு விட்டது என்பது இனி வெளிப்படுத்திட இருக்கிற காரணம். அரசியல் சதுரங்கத்தில் கலைஞரின் காய்களாக நகர்த்தப்படுவதாகத் தமிழ் சமூகமும் தமிழ் மொழியும் ஆனது தான் இன்றின் துன்பியல் வரலாறு.
குறைபடியாத காலைக்கதிர்கள் நீங்கள் தாம் துடிப்புமிக்க மனச்சாட்சியும் நீங்கள் தாம் உங்களை ஒத்த இளைஞர்கள் களச்சாவு கண்டுள்ளனர். தீக்குளித்து மாண்டுள்ளனர். அவர்கள் செய்த ஈகங்கள் அளப்பரியவை. இந்த வரிசையில் இம்மாநாட்டைப் புறக்கணிப்பது நீங்கள் செய்யும் ஒப்பற்ற ஈகமாக வரலாறு பதிவு செய்யும். உங்கள் ஆய்வுத்திறனைக் காட்டும் பெரியதொரு வாய்ப்புத்தான் இது. எனினும் இதில் நீங்கள் பங்கேற்பது அறம் சார்ந்ததாய் இருக்காது. இளமையில் நிற்கும் உங்கள் முன் விரிந்து கிடக்கிறது காலம். இதனினும் மதிப்புமிக்க வாய்ப்புக்கள் காத்துக் கிடக்கின்றன.

ஆம், தமிழினத்தை ஒளிபெறச் செய்பவர்கள் நீங்களன்றோ!
தோழமையுடன்

ஒருங்கிணைப்புக் குழு :
பேராசிரியர் சரசுவதி
கவிஞர் இன்குலாப்
இராசேந்திர சோழன்
சூரியதீபன்
பொன். ஏழுமலை
கவிஞர் ஜெயபாஸ்கரன்
கவிபாஸ்கரன்
செ. சுகுமார்

Monday, January 4, 2010

எனக்கான வெளிச்சம்

தி. பரமேசுவரி எழுதிய இக்கவிதை நூல் செப்டம்பர் 2005 இல் வெளி வந்தது. திருவண்ணாமலையில் உள்ள வம்சி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. இதன் இரண்டாம் பதிப்பு ஜனவரி 2010இல் வெளியிடப்பட்டுள்ளது. 2006இல் திருப்பூர் கலை இலக்கியப் பேரவையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த கவிதை நூலுக்கான பரிசினைப் பெற்றது. இக்கவிதைத் தொகுப்பினைப் பற்றி இரண்டு ஆய்வுக்கட்டுரைகளும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் எம்.ஃபில் பட்ட ஆய்வும் வெளிவந்துள்ளது

தி. பரமேசுவரி

சென்னையில் 1970இல் பிறந்தவர். பூங்குழலி, திலீபா ஆகிய புனைபெயர்களிலும் இவருடைய கதைகளும் கட்டுரைகளும் வெளி வந்துள்ளன. காஞ்சீபுரத்தில் உள்ள அரசு மேனிலைப்பள்ளி ஒன்றில் மேனிலைத் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவ்வாய்வேடு “ம.பொ.சி பார்வையில் பாரதி” என்ற பெயரில் நூலாகவும் வெளிவந்துள்ளது. பூங்கொடிப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவருடைய கவிதைகள் உயிர்மை, அவள் விகடன், ஆனந்த விகடன், பூங்குயில், புதிய பார்வை, யாதும் ஊரே, இளந்தமிழன், அணி, நொச்சி ஆகிய இதழ்களில் வெளி வந்துள்ளது.