Showing posts with label நிகழ்வு. Show all posts
Showing posts with label நிகழ்வு. Show all posts

Monday, December 6, 2010

காஞ்சி இலக்கியக் களம் - முதல் கூட்டம்

கடந்த டிசம்பர் 5, ஞாயிறு அன்று இலக்கியக் களம் அமைப்பின் முதல் கூட்டம் காஞ்சீபுரத்தில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்றது. ருஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் நூற்றாண்டு நினைவு நாள் மற்றும் காஞ்சீபுரம் இலக்கிய வட்டம் வெ. நாராயணனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் ஆகியவற்றை முன்னிட்டு இருவரது புகைப்படங்களும் திறந்து வைக்கப்பட்டன.
 
இக்கூட்டத்திற்கு எழுத்தாளர் எக்பர்ட் சச்சிதானந்தம் அவர்கள் தலைமை வகித்தார். பாரதி விஜயன் வரவேற்றார். கவிஞர் அமுதகீதன் இலக்கியக் களம் அமைப்பின் நோக்கங்களைக் கூறினார். டாக்டர் சீனிவாசன், வெ. நாராயணனைப் பற்றியும் காஞ்சி அண்ணல் டால்ஸ்டாய் பற்றியும் பேசினர்.
 
எழுத்தாளர் இராசேந்திர சோழன் டால்ஸ்டாய் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். இலக்கியக் களம் அடுத்து நடத்த இருக்கும் ம.பொ.சி. குறித்த கூட்டம் பற்றி காஞ்சி அமுதன் பேசினார். கவிஞர் அமுதகீதன் நன்றியுரை ஆற்ற கூட்டம் இனிதே நிறைவுற்றது.  

Wednesday, September 8, 2010

கூர் தீட்டிய விழிகள் - நூல் வெளியீட்டு விழா



           கூர் தீட்டிய விழிகள் கவிதை நூல் வெளியீட்டு விழா திருவண்ணாமலை அபிராமி திருமண மண்டபத்தில் 04.09.10 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

            அ.அப்போலியன் வரவேற்றுப் பேசினார். கவிஞர் யுவபாரதி தலைமை வகித்துப் பேசினார். சேத்துப்பட்டு  திவ்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தாமஸ் அப்பாத்துரை வெளியிட கவிஞர் குமாரி பிரகாஷ் பெற்றுக் கொண்டார். பாவலர் வையவன், கவிஞர் தி. பரமேசுவரி, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் பேரா. வே. நெடுஞ்செழியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

            நூலாசிரியரின் பெற்றோர் கெங்கம்மாள் - வாசுதேவன் ஆகியோர் பிரதிகளை வழங்க ஏந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் இரா.நாகசங்கர், குமுதம் இராமசாமி முதலான பலர் பெற்றுக் கொண்டனர்.

சுரேஷ் நிகழ்வைத் தொகுத்து வழங்க, நூலாசிரியர் ஏந்தல் கணா ஏற்புரைத்தார்.

நூலின் விலை: ரூ. 50/-
மணிவாசகர் பதிப்பகம்,
31, சிங்கர் தெரு,
பாரி முனை,
சென்னை - 108.

நன்றி: யுவபாரதி

ரெட் சன்’ - நூல் அறிமுக நிகழ்வு


ஆங்கிலத்தில் இதழியலாளர் சுதீப் சக்கரவர்த்தியால் எழுதப்பட்டு, தமிழில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அ. இந்திராகாந்தியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள ‘ரெட் சன் - நக்சல் பகுதிகளில் ஒரு பயணம்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வு காஞ்சிபுரம் புல்வெளி செ. காமராசு இல்லத்தில் 05.09.10 ஞாயிறு காலை 10 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்விற்கு காஞ்சி அமுதன் வரவேற்றுப் பேச கவிஞர் அமுதகீதன் தலைமை வகித்தார். மொழிபெயர்ப்பாளர் அ. இந்திராகாந்தி, புல்வெளி செ. காமராசு, எழுத்தாளர் எக்பர்ட் சச்சிதானந்தம், கவிஞர்கள் யுவபாரதி, தி. பரமேசுவரி, ஹவி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

சிறப்புரை வழங்க இசைந்திருந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு உடல் நலக் குறைவு காரணமாக நிகழ்வில் பங்கேற்க இயலாத நிலையிலும், நூல் குறித்த அவரது கட்டுரையை அவ்வியக்கத்தைச் சேர்ந்த தோழர் பாரதி வாசித்தார்.

நூல் குறித்த தமது கருத்துரையில் யுவபாரதி, பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களின் சூறையாடலுக்காக அரசால் கொடூரமாகச் சுரண்டப்படும் தண்டகாரண்ய (தண்டேவாடா) வனப் பழங்குடிகளின் நிலை, அவர்கள் மாவோயிஸ்டுகளை ஆதரிப்பதற்கான காரணங்கள், அரசாலும் ஆதிக்க வர்க்கத்தினராலும் உருவாக்கப்பட்டு அனைத்து அழிவு வேலைகளயும் செய்யும் ‘சல்வா ஜுதும்’ அமைப்பு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் விவசாயிகளுக்கும் பூர்வகுடிகளுக்கும் நேர்ந்துள்ள துயரம், நேரடி கள ஆய்வின் மூலம் நூலாசிரியர் பழங்குடிகள், போராளிகள், அரசு மற்றும் இராணுவ அதிகாரிகளுடனான நேர்காணல்களுடன் எழுதியிருப்பது, அ. இந்திராகாந்தியின் நீரோட்டம் போன்ற மொழிபெயர்ப்பு முதலியவற்றைப் பற்றிப் பேசினார்.

நிகழ்வின் இறுதியில் அ. இந்திராகாந்தி ஏற்புரை வழங்கியதோடு, இந்நூலை மொழிபெயர்க்க நேர்ந்த சூழல், அதற்கான எதிர் வெளியீடு நிறுவனத்தாரின் தூண்டுதல் மற்றும் முயற்சிகள் குறித்துப் பேசினார்; நூல் குறித்த பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். லோகு நன்றி கூறினார்.


நூலின் விலை. ரூ.250/-
எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642 002.
பேசி: 98650 05084
மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com

நன்றி: யுவபாரதி

Wednesday, September 1, 2010

ஜனவரி 29 - ஆவணப் பட வெளியீட்டு விழா



ஆகஸ்டு 29ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 3.30 மணியளவில் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை அரங்கில் முத்துக்குமார் குறித்த ஆவணப் பட வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக மின்னஞ்சல் பெறப்பட்டிருந்தது. பொதுவாக அவ்வரங்கில் வழக்கமாக திரையிடப்படும் படங்களுக்கெல்லாம் குறிப்பிட்ட நேரத்தில்தான் பார்வையாளர்கள் வருவார்கள். அவ்வரங்கம் முழுக்க நிறைவதும் பெரும்பாலும் நேர்வதில்லை. 'நாம்தான் மிகவும் சீக்கிரமே போய்ச் சேர்கிறோம்' என்கிற எண்ணத்தோடே பிற்பகல் 2.45 மணிக்கே சென்ற எனக்குப் பெரும் இன்ப அதிர்ச்சி. அரங்கத்தின் உள்ளும் புறமும் நிறைந்திருந்தது. பார்வையாளர்களின் வருகையைப் பதிவு செய்து அடையாள அட்டை வழங்குவதில் ஒரு தோழரும், தோழியரும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். மிகச்சரியான நேரத்தில் விழா தொடங்கியது.

70 நிமிடம் ஓடியது 'ஜனவரி-29'. முத்துக்குமாரின் பள்ளிப்பருவக் காட்சிகளையும், அவரது இளமைக் கால நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியரது ஞாபகப் பகிர்தல்கள், சென்னையில் திரைத்துறை, இதழியல் துறையில் அவரது தனித் தன்மை வாய்ந்த செயல்பாடு, 'பெண்ணே நீ' ஆசிரியர் மற்றும் 'நிழல்' திருநாவுக்கரசுஆகியோரது நினைவு கூர்தல்கள்; நெஞ்சை அதிரவைக்கும் ஈழத்துப் போர்க்களக் காட்சிகள்; முத்துக்குமாரின் இறுதி நேரத்து 'சாஸ்திரி பவன்' நிகழ்வு, இறுதி ஊர்வலம் ஆகியவை காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. சூரியா என்பவர் முத்துக்குமாராக நடித்திருந்தார்.

வழக்கறிஞர் ஏ.நல்லதுரை மற்றும் செல்வராஜ் சி.முருகையன் தயாரிப்பில் இயக்குநர் பிரகதீஸ்வரன் இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்தின்முதல் பிரதியை நடிகர் சத்தியராஜும் இயக்குநர் அமீரும் வெளியிட முத்துக்குமாரின் தந்தை குமரேசன் பெற்றுக் கொண்டார். சத்தியராஜ், அமீர், கவிஞர் அறிவுமதி, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் இந்த ஆவணப்படம் பற்றிய தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்தனர். இயக்குநர் கவுதமன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.


'வெறும் 11 பேர் மட்டுமே பாரதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அந்த எழுச்சிக்கவியின் வீரியம் இன்னும் அடங்கவில்லையே! அப்படியிருக்க இத்தனை லட்சம் பேர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு, அடக்கம் செய்யப்பட்ட முத்துக்குமாரின் லட்சியமும் உணர்வும் எளிதில் ஓய்ந்துவிடுமா?' என்று கேட்டார் அமீர்.

'எப்போ முத்துகுமாருக்குச் சிலை வைக்க இங்கே பெயப்பட ஆரம்பிச்சாங்களோ? அப்பவே முத்துக்குமார் ஜெயிச்சுட்டாரு...என் மனதில் உள்ள கோபத்தையெல்லாம் இங்கே நான் கொட்டிப் பேசினால், ஆயுளுக்கும் நான் வெளியே வர முடியாது. அப்புறம் 'இரண்டு முகம்'தான் என் கடைசிப் படம்னு ஆயிடும்' என்றார் சத்தியராஜ். 

நன்றி:  யுவபாரதி