Showing posts with label இனவுணர்வு. Show all posts
Showing posts with label இனவுணர்வு. Show all posts

Thursday, February 23, 2012

தமிழ் நாடா? திராவிட நாடா?

- தி.பரமேசுவரி 

கருணாநிதி

“1912 ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்ற அமைப்பின் வழிகாட்டியாக இருந்த டாக்டர் நடேசனார்தான் திராவிட இயக்கத்தின் நிறுவனர். 1913 ஆம் ஆண்டு நடந்த அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவில் திராவிடர் சங்கம் என அது பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டாக்டர் நடேசனார் தொடங்கிய திராவிடர் சங்கம்தான் இன்று வளர்ந்துள்ள மொழி உணர்வு, பகுத்தறிவு உணர்வு, சமூக நீதி ஆகியவற்றுக்கு அடித்தளம் என்பதை அறிந்து கொள்ளலாம். எனவே திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை தி.மு.க சார்பில் ஆண்டு முழுவதும் திராவிடர்களாகிய நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். இது தமிழன் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் விழா, தன்மான உரிமைத் திருவிழா என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்” என்று மானமிகு முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழக மக்களை... தவறு... திராவிட மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

உண்மையில், “மலையாளியான டாக்டர் டி.எம். நாயர், தமிழ்நாட்டுத் தெலுங்கரான சர். பி.டி. தியாகராச செட்டியார் ஆகிய இரு பேரறிஞர்களின் கூட்டு முயற்சியால்தான் இந்தப் புதிய கட்சி ஆரம்பிக்கப் பெற்றது. 1920 இல் முதன்முதலாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒற்றைக் கட்சியாகத் தேர்தலில் புகுந்து பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. ஏ. சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராகவும் பனகல் அரசர் பி. இராமராய நிங்கார், கே. வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய இருவரும் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இந்த அமைச்சரவையில் தமிழர் ஒருவர் கூட இடம் பெறவில்லை. முதல்வரான ஏழே திங்களில் சுப்புராயலு ரெட்டியார் நோய் காரணமாகப் பதவி விலகியதால் இரண்டாவது அமைச்சரான பனகல் அரசர் முதல் மந்திரியானார். இதனால் காலியான ஓர் இடத்திற்கு ஆந்திரரான ஏ.பி. பாத்ரோ நியமிக்கப் பெற்றார். தொடர்ந்து தமிழர் புறக்கணிக்கப்பட்டனர். 1923 இல் நடந்த சட்ட மன்றத்தேர்தலில் மீண்டும் பனகல் அரசரே முதல் அமைச்சரானார். டி.என். சிவஞானம் பிள்ளை என்ற ஓய்வு பெற்ற அதிகாரி அமைச்சரானார்.

1916 இல் ஜஸ்டிஸ் கட்சி தோன்றியதிலிருந்து 1936 இல் அந்தக் கட்சியின் ஆட்சி அஸ்தமித்தது வரையுள்ள 17 ஆண்டுக் காலத்திலே சுத்தத் தமிழர் எவரும் அந்தக் கட்சியின் தலைவர் பீடத்தில் ஏறியதில்லை. அது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அதன் தலைமை ஆந்திரரிடமே இருந்தது. பிராமணர் ஆதிக்கத்திலிருந்து பிராமணரல்லாத்தாரைக் காப்பதற்குப் பிறந்த ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியிலே அரிசனர் எவரும் அமைச்சராக்கப்படவில்லையென்பதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும். இத்தனைக்கும் இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, வி.ஐ. முனுசாமிப்பிள்ளை, தர்மலிங்கம் பிள்ளை, என். சிவராஜ் ஆகிய பட்டதாரிகளான அரிசனத் தலைவர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் முன்னணியில் இருந்தனர். ஆனால் அப்படி ஒரு நீதியை அரிசன மக்களுக்கு வழங்கவில்லை நீதிக் கட்சி. பிராமணர் ஆதிக்கத்தை அழிக்கப் பிறந்த நீதிக் கட்சியின் ஆதரவோடு என். ஆர். சேதுரத்தினம் ஐயர் கூட அமைச்சராக முடிந்தது. ஓர் அரிசனருக்கு அந்தப் பேறு கிடைக்கவில்லை”.

(தமிழகத்தில் பிற மொழியினர் - பக்கம் 31-32, 35)

கருணாநிதி சொல்லும் நடேசனார் ஒரு தெலுங்கு முதலியார். ஆனால், அவர் தெலுங்கர் என்பதை வெளிக்காட்டாமல் தமிழர் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தும் இவ்வறிக்கையை நரித்தனத்துடன் வெளியிட்டுள்ளார் கருணாநிதி. தெலுங்கர்களால் தொடங்கப்பட்டது ஜஸ்டிஸ் கட்சி. அக்கட்சி ஆட்சியில் இருந்தவரை சென்னை மாகாணம் தெலுங்கு முதல்வர்களாலேயே ஆளப்பட்டது. ஏ. சுப்பராயலு ரெட்டி, பனகல் அரசர்(ராஜா பனங்கன்டி ராமராயநிங்கார்), பி. முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர் (ராஜா ராமகிருஷ்ண ரங்காராவ்), சர். கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய தெலுங்கர்களே ஆண்டனர். ஆந்திரம் பிரிந்து போன பிறகுதான் காமராசர் முதல்வர் பதவிக்கு வர முடிந்தது என்பதை மறக்கக் கூடாது. பிராமணர், பிராமணரல்லாதார் என்ற சாதிப் பிரிவினைப் போராட்டத்தில் தமிழர் என்ற மொழிவழி இன உணர்வு மங்கி இன்று மறைந்தே போய்க்கொண்டிருப்பதை இப்போதாவது நாம் உணர வேண்டும். இப்படிச் சொல்வதனால், சாதிவழி ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்வதாகப் பொருளில்லை. சாதீய ஏற்றத்தாழ்வுகளைக் களையும் நம் முயற்சியில் மொழி, இன உணர்வை இழந்து, தெலுங்கர் உள்ளே புக இடம் கொடுத்து விட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று வரையிலும் தமிழகத்தில் தமிழரால் தொடங்கப்படும் கட்சிகள் சாதீய அடையாளத்துடன் பார்க்கப்படுவதையும் தெலுங்கர்களால் 'திராவிட' என்னும் அடைமொழியுடன் தொடங்கப்படும் கட்சிகள் “பொதுவான கட்சிகளாகப்” பார்க்கப்படுவதையும் கவனத்தில் கொள்வது நல்லது.

தமிழ்நாட்டில் அரசியல் செய்து பிழைப்பு நடத்தும் தெலுங்கர்கள் தலைமைப்பதவியை நோக்கி நகர்வதை எல்லாக் கட்சிகளிலும் பேதமின்றிப் பார்க்க முடியும். தமிழ்த் தேசிய அடையாளத்துடன் இயங்கும் அமைப்புகளிலும் தெலுங்கர்கள் ஊடுருவி, தலைமைப் பதவியில் இருப்பதைப் பார்க்கும்போது தமிழரின் அறிவைப் பற்றி அவர்கள் 'தமிழர் தந்தை' என்று போற்றும் ஈ.வெ. ராமசாமி சொன்னது சரிதானோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இன்று வரையிலும் பொருளாதாரம், ஊடகம், அரசியல் என மாநிலத்தை நிர்ணயிக்கும் அனைத்துத் துறைகளும் பெரும்பாலும் அவர்கள் கையிலேயே உள்ளது. வடநாட்டினரை ஏன் கணக்கில் கொள்ளவில்லை என்ற கேள்வி எழலாம். நம் பொருளாதாரத்தை அவர்களும் சேர்ந்துதான் சுரண்டுகிறார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் அதிகாரம், பதவிகளில் இருப்பவர் யார் என்பதை மனச்சாட்சியுடன் சிந்தியுங்கள்.

"தெலுங்கருக்குத் தெலுங்கு பாஷையில் பிறந்திருக்கும் உண்மையான அபிமானம் தமிழருக்குத் தமிழினிடமில்லை" (பாரதி தமிழ் பக்: 273 -274) என்று பாரதியும் சுதேசமித்திரனில் அப்போதே இடித்துரைத்திருக்கிறார். அன்று முதல் இன்று வரையிலும் இந்த நிலையில் மாற்றம் இல்லை. தமிழ்நாட்டில் தமிழுக்கு ஏற்றம் இல்லையென்பதே கசப்பான உண்மை. ஓர் அயலானுக்குக் கூட இடம் கொடுக்கும் தமிழன், மற்றொரு தமிழன் அங்கே அமர்வதைச் சகிப்பதில்லை. தமிழர் இப்படித் தமக்குள் ஏற்றத்தாழ்வு கொண்டு இருப்பதாலேயே நாம் இன்று வரையிலும் திராவிடக் கட்சிகளால் ஆளப்பட்டு வருகிறோம். நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான் வரைக்கும் இது பொருந்தும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில், விருந்தோம்பும் பண்பில் சிறந்த தமிழர், உகாதி மற்றும் ஓணம் பண்டிகைகளுக்கு விடுமுறை விட்டு மிகச் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆந்திர முதல்வர் இராஜசேகர ரெட்டி விமான விபத்தில் அகால மரணமடைந்தபோது அரசு விடுமுறை கொடுத்து அஞ்சலி செலுத்தினோம். சென்னையை ஆந்திரத்தோடு சேர்க்க வேண்டுமென்று போராடிய பிரகாசம் பந்துலுவுக்கு சென்னை பாரிமுனையில் சிலையும், தெருவின் பெயரும், உண்ணாவிரதமிருந்த பொட்டி ஸ்ரீராமுலுவிற்கும் மயிலையில் சிலையும், சென்னையை ஆந்திரத்தோடு சேர்க்க வேண்டுமென்று மாநகராட்சியில் போராடிய பிட்டி தியாகராசருக்கு அங்கேயே சிலை, தெருவின் பெயர், சென்னையின் இதயப்பகுதிக்கும் அங்கே உள்ள அரசு கலையரங்கத்திற்கும் அவர் பெயரை வைத்து மரியாதை செலுத்தியிருக்கிறோம். இவ்வளவும் போதாதென்று இந்த அவமான வரலாற்றிற்கு நூற்றாண்டு விழாவும் கொண்டாட வேண்டுமென்று கூறுகிறார் கருணாநிதி.

நன்றி :  தடாகம்.காம்

Friday, December 24, 2010

பன்மொழித் திட்டமும் திராவிடத் தந்திரங்களும்

'சிறுபான்மை மொழிச் சங்கங்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநாட்டுக் (டிச.11) கோரிக்கைகளைப் பரிவுடன் பரிசீலித்து, பள்ளிகளுக்கான சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டத்தில், உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற சிறுபான்மை மொழிகளையும் கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும் மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்படும். சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும். மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான மதிப்பெண்கள் இடம்பெறும் என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்' என்பது 16.12.2010இல் வெளி வந்த செய்தி.

இந்த அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் செறிவாக வசிக்கும் பகுதிகளில் உள்ள  அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், என்று யோசித்தாலே நெஞ்சில் கனலேறுகிறது. இத்திட்டத்தின் நடைமுறைச் சாத்தியம் என்ன? நடைமுறைப் படுத்தப்பட்டாலும் இதன் விளைவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நாம் நிச்சயமாக ஆராய வேண்டும். இது வரையிலும் இத்திட்டம் பற்றி இன்றைக்குத் தமிழறிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிடமிருந்து கூட ஒரு எதிர்ப்பும் வரவில்லை என்பது நாம் கவனிக்க வேண்டிய செய்தியாகும்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல எனக்குத் தெரிந்த வரையில் மாநில எல்லையோரப் பகுதிகள் எல்லாவற்றிலுமே சிறுபான்மை மொழியினரின் பாடங்கள் ஏற்கெனவே கற்பிக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை. உதாரணமாக, கன்னியாகுமரியில் உள்ள மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் மலையாள மொழி பயிலவும் கேரள எல்லையில் உள்ள தமிழர்கள் தமிழ் கற்கவும் வாய்ப்புள்ளது போன்று கர்நாடக, ஆந்திர எல்லையில் உள்ள மக்களுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. வட சென்னையில் கூடத் தெலுங்கு பேசும் மாணவர்கள் தெலுங்கு கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புள்ளதாகவே அறிகிறோம்.

நிலை இவ்வாறிருக்க, திடீரென்று திராவிடத் தலைவர் இத்திட்டத்தைத் தமிழ்நாடு முழுதும் கொண்டுவர வேண்டும் என்று துடிப்பதன் அடிப்படை நோக்கம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தேர்தல் நெருங்கி வருகிறது. சிறுபான்மையினரின் ஓட்டுகளை யார் பறிப்பது என்பதில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் போட்டி. இவர்களுடைய விளையாட்டுக் களம், சோதனைக் கூடம் தமிழகம். இது தான் இன்றைய தமிழகத்தின் நிலை.

சிறுபான்மையினருக்கான மொழித்திட்டம் முன்னர் இருந்தபடி இருப்பதே சரியா? என்பது கேள்விக்குறிதான். தமிழ்நாடு தவிர மற்ற தென்மாநிலங்களில் மும்மொழித்திட்டம் நடைமுறையிலுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  இந்தத் திடீர் அறிவிப்பின் விளைவுகளை, தமிழகத்தின் எதிர்காலம், அதன் பொருளாதாரம், மாணவர்களின் உழைப்பு, உளவியல் எனப் பல கோணத்தில் ஆராயலாம்.

தமிழகத்தில் இன்று தனியார் பள்ளிகள் தமிழர்களைச் சுரண்டுமளவுக்கு வளம் கொழிக்கச் செய்ததுடன், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் புற்றீசல் போல, ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கித் தமிழ் இன உணர்வை, மொழி உணர்வை மழுங்கச் செய்து விட்டார்கள். பெரும்பாலும் இப்பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்பதோடு தமிழை ஒரு மொழியாகக் கூடக் கற்பிக்காத அவமானமான சூழலில்தான் தமிழ்நாடு இருக்கிறது; தமிழை, தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கான பகடைக்காயாக மட்டுமே பயன்படுத்திக் கொண்ட திராவிடத் தந்திரங்களில் இதுவும் ஒன்று.

எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதைத் தோழர்கள் உணரவேண்டும். மற்றெதற்கு என்றால், ஆங்கிலமே பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக, தமிழன் வீட்டுமொழியாக ஆகவேண்டும் என்பதற்காகவேயாகும்

ஆகையால் தமிழர் தோழர்களே! உங்கள் வீட்டில் மனைவியுடன், குழந்தைகளுடன், வேலைக்காரிகளுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்; பேசப் பழகுங்கள்; பேச முயலுங்கள். தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள்.
  
 [ விடுதலை - அறிக்கை 27.1.1969]

(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் - 2, வே.ஆனைமுத்து, சிந்தனையாளர் கழகம், 1974)

இதைத்தான் பெரியார் வழி வந்த திராவிட இயக்கங்கள் கடந்த நாற்பதாண்டு ஆட்சிக் காலத்தில் சாதித்துக் காட்டியிருக்கின்றன.

தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் நம் தாய்மொழியாம் தமிழ்மொழி படும் துன்பம் பிறிதொரு இடத்தில் விரித்துப் பேசவேண்டிய ஒன்று. பாட வேளைகளைப் பொருத்த வரையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு வாரத்திற்கு ஏழு பாட வேளைகளும் சமூக அறிவியலுக்கு மட்டும் ஐந்து பாட வேளையும் ஓவியம், விளையாட்டு, தையல், அறிவியல் தமிழ், விழுமியக் கல்வி, இசை ஆகியவற்றிற்கு ஏழு பாட வேளைகளுமாக மாணவர்களின் பாடவேளைத் திட்டம் பிரிக்கப் பட்டுள்ளது; ஒரு நாளுக்கு நாற்பது நிமிடங்கள், எட்டு பாட வேளை.

முதல்வரின் இந்த அறிவிப்பு சொல்வது என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினர் இனி ஒரு பாடமாகக் கூடத் தமிழைப் படிக்க வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, தமிழகத்தின் வளங்களில் வாழ்ந்து கொண்டு அவரவர் தாய்மொழியில் படிக்கலாம் என்பதே. அல்லது இதனை மூன்றாம் மொழியாகப் படிக்கலாம் என்று பொருள் கொண்டாலும் ஏற்கெனவே பாடச்சுமை அதிகம் உள்ள மாணவர்களுக்கு இது மற்றொரு சுமையாகவே முடியும். மட்டுமின்றி பாகுபாடின்றிப் பழகும் மாணவப் பருவத்திலேயே அவர்களுக்குள் மொழி, இனப் பிரிவினைகளைத் தூண்டி, பிரிவினைச் சக்திகள் குளிர் காய்வதற்கும் இத்திட்டம் மறைமுகமாக வழியேற்படுத்திக் கொடுக்கிறது. இன்று கல்லூரிகளில் அரசியல் கட்சிகள் நுழைந்து கொண்டு படுத்தும் பாட்டினை நாம் சற்றே நினைவு கூர வேண்டும்.

முன்னதின்படி பார்த்தால் இப்போதே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலானோருக்குத் தமிழ் தெரியவில்லை என்பதும் தமிழ் தெரியாமலே தமிழ்நாட்டில் உயர் கல்வி வரை படிக்கவும் உயர் பதவிகளை வகிக்கவும் அரசுப் பணிகளில் பணியாற்றவும் முடியும் என்பதும் உண்மை. இனி இந்தத் திட்டத்திற்குப் பிறகு இந்த எண்ணிக்கை பெருமளவில் கூடும். இவர்கள் வாழ்விடம் தமிழகம் என்பது தவிர இவர்களுக்கும் இந்த மண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்பதே நிதர்சனம்.

மூன்றாம் மொழியாகப் படிக்கச் செய்யப் போகிறார்களெனில் அதற்கான பாடத்திட்டம் பற்றியும் புகுத்தும் வழிமுறை பற்றியும் எந்தக் கல்வியாளரிடமும் ஆலோசிக்காமல் தான்தோன்றித்தனமாக இவ்வறிவிப்பு வெளியாகியிருப்பதாகவே கருத வாய்ப்புள்ளது. மாணவர்களின் பாடவேளை, பாடச் சுமை, இதன் உளவியல் ஆகியவை கருத்தில் கொள்ளப்படவில்லை.

இனி இதற்காக இந்த மொழியாசிரியர்கள், இந்த மொழிவழி கற்பிக்கக் கூடிய பாட ஆசிரியர்கள் அரசால் பணியமர்த்தப்படுவார்களெனில்  வேற்று மொழியாளர்களின் வேட்டைக்காடாய் ஏற்கெனவே மாற்றப்பட்டு விட்ட தமிழகத்தில் தமிழர்கள் அன்னியப்பட்டுப் போகக் கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை உறுதியாகவே கூறலாம். தமிழ் படித்தவர்களுக்குத் தமிழ்நாட்டில் வேலை இல்லை. காலியாக உள்ள  தமிழாசிரியர் பணியிடங்களும் இன்னும் நிரப்பப்படாமல், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழாசிரியர் இன்றியோ, தகுதி குறைந்த ஆசிரியரைக் கொண்டோ தமிழ் பயிலும் இழிநிலை தான் உள்ளது.


அதிலும் குறிப்பாக, மேல்நிலை வகுப்புகளை எடுத்துக் கொண்டால் தமிழாசிரியர்களின் பணிச்சுமை மிக அதிகம். எத்தனை மாணவர்கள் எண்ணிக்கையில் இருந்தாலும் ஒரே மொழி ஆசிரியர்தான். பத்தாவது வரை ஏழு பாடவேளை கற்பிக்கப்பட்ட தமிழ், இதற்குப் பிறகு நான்கு பாடவேளையாகக் குறைக்கப்படுகிறது. இந்த நான்கு பாட வேளையில்தான் மொழியாசிரியர் செய்யுள், உரைநடை, இலக்கணம், துணைப்பாடம் ஆகியவற்றைக் கற்பிக்க வேண்டும். ஏனைய நான்கு பாடங்களுக்கு மட்டும் ஏழு பாட வேளை. இதென்ன அநியாயக் கணக்கு என்று பொருமிக் கொண்டிருக்கும் வேளையில்தான் இப்படி ஒரு அறிவிப்பு. தமிழ்நாட்டில் தமிழுக்கும் நான்கு பாட வேளை, பிற மொழிகளுக்கும் அதே நான்கு பாடவேளை என்பது எப்ப்டி நியாயமாக இருக்க முடியும்? மானமுள்ள தமிழர்கள் மட்டுமாவது சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழாசிரியர்களைப் பணியமர்த்தாமல் பொருளாதாரக் கணக்கு பார்க்கும் வக்கில்லாத அரசாங்கம்தான் பிற மொழியாசிரியர்களைப் பணியமர்த்தத் திட்டமிடுகிறது.

அதிலும் இந்தி, சமஸ்கிருதத்தைக் கவனமாக ஒதுக்கிப் பிற மொழிகளுக்கு இங்கு இடத்தை வலுவாக அமைத்துக் கொடுக்கும் முயற்சி இது. இந்த மொழிகளை மட்டும் ஏன் விலக்க வேண்டும்? பிற மொழிகளை உள்ளே நுழைக்க வேண்டும் என்று திட்டமிட்ட பிறகு, நம் மாநிலத்தில் கணிசமான அளவில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டு  வாழும் மக்களையும் மகிழ்ச்சிப்படுத்த இந்தியையும் கற்பிக்கலாம். இஸ்லாமியர்களின் புனித மொழி என்பது தவிரப் பேச்சு மொழியாக அல்லாத அரபி கற்பிக்கப்படுமெனும் போது இந்துத்துவா சக்திகள் திரண்டெழுந்து சமஸ்கிருத்தையும் அரசு கற்பிக்கக் கோருமே. ஆவன செய்யுமா திராவிட அரசு? நியாயம் என்பது எல்லோருக்கும் ஒன்று தானே.

தமிழ்நாட்டில் ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் தமிழர்களை விடவும் பிற மொழியாளர்கள் அதிகம் இருப்பார்களோ என்று ஐயுறும் நிலையில் அரசின் இந்த மொழித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பிறமொழியாளர் எண்ணிக்கையில் பெருகி, தமிழ்நாட்டில் தமிழர் அந்நியப்படும் சூழல் உருவாகும். வளரும் தமிழ்த் தலைமுறையும் மொழியுணர்வோ, இனவுணர்வோ இன்றி, தன் இன வரலாறு அறியாத வெற்றுக் கூட்டமாக மாறி வரும் நிலையில் திராவிட நாடு உருவாக்க வேண்டுமென்று பேச்சளவில் மட்டுமே, அதுவும் தமிழகத்தில் மட்டுமே செயல்பட்டு மூக்குடைபட்ட திராவிட இயக்கம் இன்று தமிழகத்தை மட்டுமேனும் திராவிட நாடாக்கச் செய்யும் திராவிடத் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றோ என்ற ஐயமும் தவிர்க்க முடியாமல் மேலெழுகிறது. அல்லது தமிழ்நாடே சில, பல பகுதிகளாகச் சிதறுண்டு கர்நாடக, ஆந்திர, கேரள மாநிலங்களோடு ஒன்றிப் போய் 'நாளை தமிழ்நாடு என்ற நிலப்பகுதி ஒன்று ஒரு காலத்தில் இருந்தது' என்ற வரலாறும் இயற்றப் படலாம். நீள்துயிலாய் உறங்கும் தமிழர் கூட்டமே, உன் உடையைக் கழற்றும் முயற்சி நடக்கிறது.இப்போதேனும் துயில் கலைந்து  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய உன் உடைவாளை உறையில் இருந்து கழற்றுவாய் என்று எதிர்பார்க்கலாமா?