Thursday, February 23, 2012

தமிழ் நாடா? திராவிட நாடா?

- தி.பரமேசுவரி 

கருணாநிதி

“1912 ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்ற அமைப்பின் வழிகாட்டியாக இருந்த டாக்டர் நடேசனார்தான் திராவிட இயக்கத்தின் நிறுவனர். 1913 ஆம் ஆண்டு நடந்த அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவில் திராவிடர் சங்கம் என அது பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டாக்டர் நடேசனார் தொடங்கிய திராவிடர் சங்கம்தான் இன்று வளர்ந்துள்ள மொழி உணர்வு, பகுத்தறிவு உணர்வு, சமூக நீதி ஆகியவற்றுக்கு அடித்தளம் என்பதை அறிந்து கொள்ளலாம். எனவே திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை தி.மு.க சார்பில் ஆண்டு முழுவதும் திராவிடர்களாகிய நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். இது தமிழன் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் விழா, தன்மான உரிமைத் திருவிழா என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்” என்று மானமிகு முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழக மக்களை... தவறு... திராவிட மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

உண்மையில், “மலையாளியான டாக்டர் டி.எம். நாயர், தமிழ்நாட்டுத் தெலுங்கரான சர். பி.டி. தியாகராச செட்டியார் ஆகிய இரு பேரறிஞர்களின் கூட்டு முயற்சியால்தான் இந்தப் புதிய கட்சி ஆரம்பிக்கப் பெற்றது. 1920 இல் முதன்முதலாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒற்றைக் கட்சியாகத் தேர்தலில் புகுந்து பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. ஏ. சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராகவும் பனகல் அரசர் பி. இராமராய நிங்கார், கே. வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய இருவரும் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இந்த அமைச்சரவையில் தமிழர் ஒருவர் கூட இடம் பெறவில்லை. முதல்வரான ஏழே திங்களில் சுப்புராயலு ரெட்டியார் நோய் காரணமாகப் பதவி விலகியதால் இரண்டாவது அமைச்சரான பனகல் அரசர் முதல் மந்திரியானார். இதனால் காலியான ஓர் இடத்திற்கு ஆந்திரரான ஏ.பி. பாத்ரோ நியமிக்கப் பெற்றார். தொடர்ந்து தமிழர் புறக்கணிக்கப்பட்டனர். 1923 இல் நடந்த சட்ட மன்றத்தேர்தலில் மீண்டும் பனகல் அரசரே முதல் அமைச்சரானார். டி.என். சிவஞானம் பிள்ளை என்ற ஓய்வு பெற்ற அதிகாரி அமைச்சரானார்.

1916 இல் ஜஸ்டிஸ் கட்சி தோன்றியதிலிருந்து 1936 இல் அந்தக் கட்சியின் ஆட்சி அஸ்தமித்தது வரையுள்ள 17 ஆண்டுக் காலத்திலே சுத்தத் தமிழர் எவரும் அந்தக் கட்சியின் தலைவர் பீடத்தில் ஏறியதில்லை. அது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அதன் தலைமை ஆந்திரரிடமே இருந்தது. பிராமணர் ஆதிக்கத்திலிருந்து பிராமணரல்லாத்தாரைக் காப்பதற்குப் பிறந்த ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியிலே அரிசனர் எவரும் அமைச்சராக்கப்படவில்லையென்பதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும். இத்தனைக்கும் இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, வி.ஐ. முனுசாமிப்பிள்ளை, தர்மலிங்கம் பிள்ளை, என். சிவராஜ் ஆகிய பட்டதாரிகளான அரிசனத் தலைவர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் முன்னணியில் இருந்தனர். ஆனால் அப்படி ஒரு நீதியை அரிசன மக்களுக்கு வழங்கவில்லை நீதிக் கட்சி. பிராமணர் ஆதிக்கத்தை அழிக்கப் பிறந்த நீதிக் கட்சியின் ஆதரவோடு என். ஆர். சேதுரத்தினம் ஐயர் கூட அமைச்சராக முடிந்தது. ஓர் அரிசனருக்கு அந்தப் பேறு கிடைக்கவில்லை”.

(தமிழகத்தில் பிற மொழியினர் - பக்கம் 31-32, 35)

கருணாநிதி சொல்லும் நடேசனார் ஒரு தெலுங்கு முதலியார். ஆனால், அவர் தெலுங்கர் என்பதை வெளிக்காட்டாமல் தமிழர் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தும் இவ்வறிக்கையை நரித்தனத்துடன் வெளியிட்டுள்ளார் கருணாநிதி. தெலுங்கர்களால் தொடங்கப்பட்டது ஜஸ்டிஸ் கட்சி. அக்கட்சி ஆட்சியில் இருந்தவரை சென்னை மாகாணம் தெலுங்கு முதல்வர்களாலேயே ஆளப்பட்டது. ஏ. சுப்பராயலு ரெட்டி, பனகல் அரசர்(ராஜா பனங்கன்டி ராமராயநிங்கார்), பி. முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர் (ராஜா ராமகிருஷ்ண ரங்காராவ்), சர். கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய தெலுங்கர்களே ஆண்டனர். ஆந்திரம் பிரிந்து போன பிறகுதான் காமராசர் முதல்வர் பதவிக்கு வர முடிந்தது என்பதை மறக்கக் கூடாது. பிராமணர், பிராமணரல்லாதார் என்ற சாதிப் பிரிவினைப் போராட்டத்தில் தமிழர் என்ற மொழிவழி இன உணர்வு மங்கி இன்று மறைந்தே போய்க்கொண்டிருப்பதை இப்போதாவது நாம் உணர வேண்டும். இப்படிச் சொல்வதனால், சாதிவழி ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்வதாகப் பொருளில்லை. சாதீய ஏற்றத்தாழ்வுகளைக் களையும் நம் முயற்சியில் மொழி, இன உணர்வை இழந்து, தெலுங்கர் உள்ளே புக இடம் கொடுத்து விட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று வரையிலும் தமிழகத்தில் தமிழரால் தொடங்கப்படும் கட்சிகள் சாதீய அடையாளத்துடன் பார்க்கப்படுவதையும் தெலுங்கர்களால் 'திராவிட' என்னும் அடைமொழியுடன் தொடங்கப்படும் கட்சிகள் “பொதுவான கட்சிகளாகப்” பார்க்கப்படுவதையும் கவனத்தில் கொள்வது நல்லது.

தமிழ்நாட்டில் அரசியல் செய்து பிழைப்பு நடத்தும் தெலுங்கர்கள் தலைமைப்பதவியை நோக்கி நகர்வதை எல்லாக் கட்சிகளிலும் பேதமின்றிப் பார்க்க முடியும். தமிழ்த் தேசிய அடையாளத்துடன் இயங்கும் அமைப்புகளிலும் தெலுங்கர்கள் ஊடுருவி, தலைமைப் பதவியில் இருப்பதைப் பார்க்கும்போது தமிழரின் அறிவைப் பற்றி அவர்கள் 'தமிழர் தந்தை' என்று போற்றும் ஈ.வெ. ராமசாமி சொன்னது சரிதானோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இன்று வரையிலும் பொருளாதாரம், ஊடகம், அரசியல் என மாநிலத்தை நிர்ணயிக்கும் அனைத்துத் துறைகளும் பெரும்பாலும் அவர்கள் கையிலேயே உள்ளது. வடநாட்டினரை ஏன் கணக்கில் கொள்ளவில்லை என்ற கேள்வி எழலாம். நம் பொருளாதாரத்தை அவர்களும் சேர்ந்துதான் சுரண்டுகிறார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் அதிகாரம், பதவிகளில் இருப்பவர் யார் என்பதை மனச்சாட்சியுடன் சிந்தியுங்கள்.

"தெலுங்கருக்குத் தெலுங்கு பாஷையில் பிறந்திருக்கும் உண்மையான அபிமானம் தமிழருக்குத் தமிழினிடமில்லை" (பாரதி தமிழ் பக்: 273 -274) என்று பாரதியும் சுதேசமித்திரனில் அப்போதே இடித்துரைத்திருக்கிறார். அன்று முதல் இன்று வரையிலும் இந்த நிலையில் மாற்றம் இல்லை. தமிழ்நாட்டில் தமிழுக்கு ஏற்றம் இல்லையென்பதே கசப்பான உண்மை. ஓர் அயலானுக்குக் கூட இடம் கொடுக்கும் தமிழன், மற்றொரு தமிழன் அங்கே அமர்வதைச் சகிப்பதில்லை. தமிழர் இப்படித் தமக்குள் ஏற்றத்தாழ்வு கொண்டு இருப்பதாலேயே நாம் இன்று வரையிலும் திராவிடக் கட்சிகளால் ஆளப்பட்டு வருகிறோம். நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான் வரைக்கும் இது பொருந்தும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில், விருந்தோம்பும் பண்பில் சிறந்த தமிழர், உகாதி மற்றும் ஓணம் பண்டிகைகளுக்கு விடுமுறை விட்டு மிகச் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆந்திர முதல்வர் இராஜசேகர ரெட்டி விமான விபத்தில் அகால மரணமடைந்தபோது அரசு விடுமுறை கொடுத்து அஞ்சலி செலுத்தினோம். சென்னையை ஆந்திரத்தோடு சேர்க்க வேண்டுமென்று போராடிய பிரகாசம் பந்துலுவுக்கு சென்னை பாரிமுனையில் சிலையும், தெருவின் பெயரும், உண்ணாவிரதமிருந்த பொட்டி ஸ்ரீராமுலுவிற்கும் மயிலையில் சிலையும், சென்னையை ஆந்திரத்தோடு சேர்க்க வேண்டுமென்று மாநகராட்சியில் போராடிய பிட்டி தியாகராசருக்கு அங்கேயே சிலை, தெருவின் பெயர், சென்னையின் இதயப்பகுதிக்கும் அங்கே உள்ள அரசு கலையரங்கத்திற்கும் அவர் பெயரை வைத்து மரியாதை செலுத்தியிருக்கிறோம். இவ்வளவும் போதாதென்று இந்த அவமான வரலாற்றிற்கு நூற்றாண்டு விழாவும் கொண்டாட வேண்டுமென்று கூறுகிறார் கருணாநிதி.

நன்றி :  தடாகம்.காம்

5 comments:

  1. நல்ல கட்டுரை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை பதிவு பரமேசுவரி அவர்களே...!! முகநூலில் cartoonist bala அவர்கள் சாதி இல்லை என்று கூறி அதிலே தமிழர்கள் எத்தனை முட்டாள்கள் ஆக்கப்பட்டனர் என்பதனை உணராதவராய், அய்யநாதன் அவர்களைப் பற்றி கதைக்கும் போது அவருக்கு நான் கொடுத்த சாட்டையடி பதில் கீழ்கண்ட இணைப்பில் உள்ளது. தமிழ் தேசியம் அரைகுறை சித்தாந்தவாதிகளிடமும், தெலுங்கர்களிடமும் படும் பாட்டை என்னவென்று கூறுவது.!?!?

    https://www.facebook.com/photo.php?fbid=2717733708880&set=a.1067477413504.2010471.1423116401&type=1&theater&notif_t=photo_reply

    ReplyDelete
  3. மிகவும் கால தாமதமாக ஆசிரியர் அலசினாலும் திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளை மிக மிக சிறப்பாக தந்துள்ளார். அவருக்கு என் பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள் இது போன்று,

    புதுக்கோட்டை ஜி வரதராஜன்

    ReplyDelete

  4. காலத்தின் தேவையறிந்து எழுதப்பட்டு இருக்கும் அற்புதமான கட்டுரை! நன்றி!

    -கிரிஷ்ணா என்கிற கலகக்காரன்

    ReplyDelete
  5. நடேச முதலியார் தமிழர் என்பதாலேயே நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்காதபோதும் அதை ஆட்சியமைக்க கூறியபோது இங்கிலாந்தின் வழக்கப்படி கட்சித்தலைவர் முதல்வர் ஆகக்கூடாது என கூறிய தி.செ. மறுத்தார். அடுத்த இடத்தில் இருந்த ந.மு. தமிழர் என்பதால மறுத்து வேறு ஒரு தெலுங்கருக்கு வழங்கப்பட்டது. இதை கண்டித்து நடேசர் கட்சியை விட்டு விலகினார்.

    ReplyDelete