Tuesday, October 7, 2014

காளான் காதல்களும் பிஸ்ஸாக் காதல்களும்

நன்றி : பாவையர் மலர்

இயக்குநர் சேரனுடைய மகள் தாமினி தன் காதலனுடன் செல்லப்போவதாகச் சொல்ல, பெற்றோரின் உணர்வு நிலையில் நின்று சேரன் தம்பதியர் மறுத்துப் பேச ஒளி, அச்சு ஊடகங்கள் வழியே கடந்த சில நாட்களாக இந்த உணர்ச்சிப் போராட்டத்தை மக்களும் பொறுப்பான எழுத்தாளர்கள் உள்ளிட்ட பொது வாழ்வில் உள்ளோரும் ஒவ்வொரு விதமாய்க் கருத்து சொல்லிக் கடந்தனர். இதற்கிடையில் சேரன் மகள் தன் பெற்றோருடன் திரும்பிச் செல்வதாக நீதிமன்றத்தில் கூற, வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது. இதுபற்றியும் இப்போது சமூக வலைத்தளங்களிலும் பிற இடங்களிலும் அவரவர் கருத்தை விளம்பியபடி மக்கள் ஊர்ந்து கொண்டிருக்கின்றனர். மற்றொரு சிக்கல் எழும் வரை இது தொடரும்.

அதற்கும் சற்று முன்னால் இரு வேறு சாதிகளைச் சார்ந்த திவ்யா - இளவரசன் இருவருடைய காதலை ஏற்காத தன்மையினால் ஊரே இரண்டுபட்டு, தலித் மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டதும் காதலர்கள் ஊர் ஊராகத் திரிந்து இறுதியில் தங்கள் ஊருக்கே வந்து சேர்ந்து சாதிய வன்மத்தின் கரங்களில் சிக்கி வாழ்வை இழந்ததையும் கூட நாம் தினமும் கவனித்து, விளக்கங்கள் பேசி, வியாக்கியானங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தோமே தவிர உருப்படியாய் ஏதும் செய்தோமில்லை. அவர்களுடைய காதல் சாதீய விவகாரமாக மட்டுமே பார்க்கப்பட்டதேயன்றி அவர்களுடைய மாணவப் பருவம், கல்வியை முடிக்காத நிலை பற்றி ஒருவரும் சிந்திக்கவில்லை.

ஒவ்வொரு வருடமும் நண்பர்கள் மூலமாகவும் நான் பணிபுரியும் பள்ளியிலும் என மாணவப் பருவத்தில் வளரிளம்பருவத்தினர் சந்திக்கக்கூடிய பாலியல் சார்ந்த சிக்கல்களை அவதானித்தே வருகிறேன். பத்து நாட்களுக்குள்ளேயே சுற்றுப்புறத்தைச் சார்ந்த  பள்ளிகளில் இருந்து மூன்று மாணவிகள் வீட்டைவிட்டு ஓடிச் சென்ற செய்தி தெரிந்தபோது மிக வருத்தமாக இருந்தது. 9 ஆம் வகுப்பு மாணவிகள். அவர்கள் வாழும் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர், பள்ளியின் எதிரே கடை வைத்திருப்பவர் இப்படி அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் அறிமுகமாகக்கூடிய, அண்மையில் வசிக்கக்கூடிய ஆண்களுடன் பழகி, ஈர்க்கப்பட்டு அந்த ஈர்ப்பு எதன் காரணமாக ஏற்பட்டதென்று சிந்திக்காமலே தங்கள் தெய்வீகக் காதலை வாழவைக்க எதற்கும் துணிகிறார்கள். பெரும்பாலும் தங்கள் வாழ்வை இழந்தும் மனத்தளவில் சிதைந்தும் திரும்பி வருகிறார்கள். மேற்சொன்ன பெண்களில், ஒருத்தி இன்னும் ஊர் திரும்பவேயில்லை. மற்றொருத்தி காதலனின் கையில் பணம் இருந்த வரையில் ஓரிரு நாட்கள் வெளியூரில் தங்கியிருந்தனர். பணம் தீர்ந்தபோது அவளைக் கொண்டுவந்து அவளுடைய வீட்டு வாசலில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டானாம். அடுத்தவளுடைய பெற்றோர் அவளைத் தேடிக் கண்டுபிடித்து, அடித்து, மீண்டும் பள்ளியிலேயே சேர்த்துள்ளார்கள். ஆனால் அவளால் மனமொன்றிப் படிக்க முடியவில்லை; பள்ளியில் மற்ற மாணவிகளிடம் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறாள்.

கல்லூரிப் பருவத்தில் காதல் மாயங்கள் நிகழ்ந்ததுபோய், 12 ஆம் வகுப்புக்கானதாக மாறி, இப்போது நகர்ந்து நகர்ந்து 9 ஆம் வகுப்பில் வந்து நிற்கிறது. நான் பணியில் சேர்ந்த புதிதில், எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 12 ஆம் வகுப்பு மாணவனும் மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். பல முறை அழைத்துப் பேசியும் கூடத் தம் காதலில் உறுதியாக இருந்து, இறுதித் தேர்வினை எழுதிவிட்டுக் கிளம்பிவிட்டனர். செய்தி தெரிந்தபோது வருத்தமாக இருந்தாலும், ‘பரவாயில்லை, தேர்வு எழுதிவிட்டுப் போனார்களே’ என்று நினைத்துக்கொண்டேன். அவன் மிக நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன்; காதலில் விழுந்தபிறகு மெல்ல மெல்ல தேர்ச்சித் தரத்தில் பின் தங்கிப் போனான். தேர்வில் இருவருமே தோல்வியுற்றனர். வீட்டிலிருந்து இரு சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள்; வழியில் நிகழ்ந்த விபத்தில் சிறு காயங்களோடு தப்பியும் வீட்டுக்குத் தகவல்போய், பெண்ணை அழைத்துச் சென்று வேறு ஒருவருக்குத் திருமணமும் செய்து வைத்துவிட்டனர். வேறு ஒரு வேலையாக அந்த ஊருக்குச் சென்றபோது அந்த மாணவனை, ஊரின் பேருந்து நிலையத்தில் தலைமுடி அலங்கோலத்தோடு சந்தித்தபோது, அவனைப் பெற்றவள் பார்த்தால் எவ்வளவு துடித்துப் போவாளோ அவ்வளவு துடித்துப் போனேன்.

பொறியியல் கல்லூரியில் படித்து வந்த வினோதினியின் முகத்தில் ஆசிட் ஊற்றிய வழக்கு பற்றியும் நாம் செய்தித்தாள்களில் படித்திருப்போம். அதேபோல் வேறு சில சம்பவங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதையும் கவனித்தே வருகிறோம். ‘தனக்குக் கிடைக்காத “பொருள்” அடுத்தவனுக்கும் கிடைக்கக்கூடாது’ என்ற வெறியும் சீரற்ற எண்ணங்களும் மரபு கட்டமைத்துள்ள ஆதிமனத்தின் பால்பேதங்களுமே இத்தகைய சிந்தனைகளைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு வேறு சிக்கல்கள் ஊடாடினாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே. ஒன்று, இளம்வயதில் ஏற்படும் காதலில், அது பாலியல் ஈர்ப்பு மட்டுமா அல்லது இரண்டு உள்ளங்களின் இணைவா என்ற அறிவு இன்றி உடல் கவர்ச்சியை நம்பி அதற்குள் பயணித்துப் பின் பற்பல சிக்கல்களில் உழன்று வாழ்வை இழத்தல். மற்றொன்று, ஒரு தலைக் காதல் என்ற பெயரில் பெண்களைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து, ஒரு கட்டத்தில் அவர்களுடைய உயிருக்கே ஆபத்து விளைவித்தல்.

ஒவ்வொரு காலத்திலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இல்லை; இன்னும் சொல்லப்போனால், “இதற்காகத்தான் பெண்கள் படிக்க வேண்டிய அவசியமில்லையென்று அந்தக்காலத்திலேயே சரியாகத்தான் சொல்லி இருந்தாங்க டீச்சர். இவங்க வீட்டு வாசப்படி தாண்டி வெளியே வந்து படிக்க ஆரம்பிச்சாங்க; ஆம்பளைப் பசங்களும் கெட்டுக் குட்டிச்சுவராயிடுச்சுங்க” என்று ஒரு மாணவியின் தாயார் என்னிடம் சொன்னபோது துடித்துப் போனேன். இந்தச் சிக்கல் எல்லா இடத்திலும் இருந்தாலும் நகரத்தில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்குப் பெற்றோரின் கவனமும் வழிகாட்டுதலும் ஓரளவுக்காவது கிடைக்கத்தான் செய்கிறது. அந்த விகிதத்தில் பார்க்கும்போது கிராமத்தில் உள்ள பெற்றோருக்கே அந்த விழிப்புணர்வு இல்லை என்பது பெரும் சோகமே. மாணவிகளின் தாய்மார் பெரும்பாலானோர் அவர்களே மாணவிகளைப் போல் இருப்பதை அவர்களிடம் கிண்டல் செய்தபோது கிடைத்த தகவல் சோகமானது. பலரும் தங்கள் கல்விப் பருவத்தில் காதலில் சிக்கி, திருமணம் செய்து படிப்பை இழந்து, சிறு வயதிலேயே குழந்தையையும் பெற்று, தங்கள் பிள்ளை இப்படிச் சீரழியக்கூடாது என்று நினைப்பவர்களாக இருப்பதை அறிந்தபோது பெரும் துயரம் சூழ்ந்தது.

இப்படிச் சொன்னாலும் தங்கள் குழந்தைகளிடம் இளம்பருவத்தில் ஏற்படும் உளச் சிக்கல்களைப் பற்றி விவாதிக்கும் ஆற்றலோ, நேரமோ, ஆர்வமோ இன்றிப் பொருள் தேடி அலையும் கிராமத்துப் பெற்றோர், இப்படியொரு சிக்கலை அவர்கள் சந்திக்கும் வேளையில் அடித்துக் கொல்வதும் அழுவதும் ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்துப் பரப்புவதுமாக, பிரச்சனையைப் பெரிதாக்கி மேலும் துன்பத்தைக் கூட்டுவதன்றி அங்கு பிஞ்சு மனங்கள் படும் பாட்டினை, அடையும் கேட்டினை எண்ணிப் பார்ப்பவரிலர். இத்தகைய உளப்பாடுகள் இன்றைய குழந்தைகள் மிக அதிகமாக அனுபவிப்பதன் காரணம் யார்? எவை? என்பது பற்றியும் நாம் இன்னும் சிந்திக்கத் தொடங்கவேயில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் எழும் கேள்விகளையும் கூட மரபுக் காவலர்கள் தம் கையில் வைத்திருக்கும் பண்பாட்டுக் குச்சிகளால் வாய்மூடச் செய்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் நாளை உலக மக்கள்தொகை தினமாக ஐ.நா சபை அறிவித்துக் கடைப்பிடித்து வருகிறது. இந்த ஆண்டு மக்கள் தொகை தினத்தை “வளரிளம் பருவக் கருவுறுதலுக்கு எதிரான விழிப்புணர்வு” என்ற கருப்பொருளுடன் அனுசரிக்க ஐ.நா முடிவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் 15 வயதிலிருந்து 19 வயதுள்ள 1.6 கோடிப் பெண்கள் ஆண்டுதோறும் வளரிளம் பருவத்திலேயே கருத்தரிப்பதாகச் சர்வதேசப் புள்ளிவிவரமொன்று தெரிவிக்கிறது. ஐ.நாவின் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் செய்தி மிகச் சோகமானதும் நாம் கவனிக்கவேண்டியதுமாகும். இந்த மகப்பேற்றின்போது இவர்களில் பலர் உடல்பலமின்றியும் தாங்கும் திறனின்றியும் இறந்து போகின்றனர். வளரிளம்பருவ மகப்பேறின்போது இறக்கும் இத்தகைய பெண்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்று தெரிவிப்பதோடு குறிப்பாக, இந்தியாவிலேயே இத்தகைய மரணங்கள் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கின்றது. இதற்கு வறுமை, சமத்துவமின்மை போன்றவற்றோடு மிக முக்கியமாக எழுத்தறிவின்மை, பாலியல் சார்ந்த போதிய அறிவின்மை ஆகியவற்றையும் முதன்மையான காரணங்களாகக் குறிப்பிட வேண்டும். வளரிளம்பருவக் காதல், கருவுறுதல் ஆகியவற்றை வெறும் உடல்நலச் சிக்கலாக மட்டும் பார்ப்பது சரியான பார்வையாக இருக்க முடியாது.

சமீபத்தில் டெல்லியில் 15 வயதிலிருந்து 24 வயது உள்ளோரிடம் நடத்திய ஓர் ஆய்வில், வெறும் 15 சதவிகிதத்தினர் மட்டுமே பாலியல் தொடர்பான கல்வி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. பாலியல் தொடர்பான குற்றங்கள் மற்றும் வளரிளம் பருவக் கருவுறுதலுக்கான காரணங்களாக இந்த ஆய்வு, பாலியல் கல்வி மறுக்கப்படுவதையும் பாலியல் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்தாத நடைமுறை வாழ்க்கையையும் காரணமாகக் கூறுகின்றது. பாலியல் பற்றிய அறிவு திருமணத்திற்குப் பிறகும்கூடப் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஏற்படுவதில்லையென்றும் இந்த ஆய்வு தெரிவிப்பது கவனிக்கத்தக்கது. இவற்றுக்கெல்லாம் தீர்வாக முறையான பாலியல் கல்வியை நடைமுறைப்படுத்துவதைச் சொல்லலாம்.

வளரிளம் பருவத்தினருக்கான பாலியல் அறிவு பற்றி இந்திய அரசு 1999 ஆம் ஆண்டே பேசத் தொடங்கியது. ஆனால் கடும் எதிர்ப்புகள் காரணமாக, அப்போது அம்முயற்சி கைவிடப்பட்டது. மட்டுமின்றி, எவ்வாறு பாடத்திட்டம் அமைப்பது, எத்தகைய பாடங்களை வைப்பது, அதன் செயல்பாடுகள் பற்றிய குழப்பங்களாலேயே இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. மக்கள்தொகைக் கல்வியோடு இணைத்துப் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியும் கூடத் தோல்வியிலேயே முடிவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

தி. பரமேசுவரி 

2 comments:

  1. பல சரியான வாதங்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.

    திரைப் படங்களின் தாக்கத்தை\அழுத்திச் சொல்லவில்லை. திரைப் படங்களில் தகாத, அல்லது சரியான வயதிலமுதிராத பருவத்தில் வரும் infatuation காதல் அல்ல என்றோ, அல்லது அவர்கள் ஊரையும், உலகத்தையும் எதிர்த்து சேர்ந்து, பின்னர் அவதிப் பட்டதாக சொல்லியிருக்கிறார்களா? அந்த சேரனே அப்படிப் படம் எடுப்பாரா? காதல் தோற்பதாக வரும் அபூர்வம்; அதிலும் பிரிந்த காதலர்கள் நன்றாக வேறு மணம் முடித்து வாழ்ந்ததாகக் காட்டுவது சொற்பம். (ஆலய மணி: படத்தின் முக்கிய கரு இது இல்லை என்றாலும், SSR சரோஜா தேவி காதலைப் பிரித்தும் சரோஜா தேவி நன்றாகவே வாழ்வை அமைத்துக் கொள்வதாக வரும் என்று நினைவு. ஆயிரத்தில் ஒன்றில் தான் காதலை தோல்வி அடையச் செய்ய இயக்குனர்களுக்கு தைரியம் வருகிறது. ) பள்ளி மாணவர் மாணவி காதலைக் காட்டக்கூடாது என்று உலகம் உறுதி எடுத்துக் வேண்டும். செய்வார்களா?செய்வார்களா?

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி
    தங்களின் ஆழமான எழுத்துக்களைப் படித்து கருத்திட எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். மீண்டும் வருகிறேன். அதற்கு முன் ஒரு செய்தி.
    கனவில் வந்த காந்தி எனும் தொடர் பதிவில் கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கு விடையளிக்க தங்களை இன்முகத்தோடு அழைக்கிறேன் வாருங்கள்
    http://pandianpandi.blogspot.com/2014/11/gandhi-in-dream.html

    ReplyDelete