நன்றி: பாவையர் மலர்
பொதுத் தேர்வுகள் நடைபெறும் நேரம். மாணவர்கள் கண்ணுங்கருத்துமாக, இரவுபகல் பாராது படிக்கும் தருணம். இத்தனை ஆண்டுக் கல்வியின் அறுவடைப் பருவம். நடத்தும் பரபரப்பில் கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் பள்ளிகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அன்றாடம் நாளிதழில், மாணவர்கள் காப்பியடித்துப் பிடிபடுவதும் தேர்வுத்தாள் கடினமாக இருந்ததாகச் சொல்லித் தன்னையே வருத்திக் கொள்வதும் செய்திகளாகின்றன. அப்படித்தான் சென்ற வாரம் அதிகாலை, நாளிதழைப் புரட்டுகையில் கண்ணில்பட்டது அந்தச் செய்தி. திருவண்ணாமலையில் உள்ள ஒரு புகழ் பெற்ற ஒரு பள்ளி, தன் மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு வினாத்தாளின் விடைகளை நகலெடுத்துக் கொடுக்கையில் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவிடம் நகலும் கையுமாகப் பிடிபட்டிருக்கின்றனர். அதற்கு உதவி செய்த அரசுப் பள்ளி சார்ந்த ஏழு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்வுமுறை சரிதானா என்று தொடர்ந்து நடைபெறும் விவாதத்துக்கு இந்நிகழ்வு வலிமை சேர்க்கிறது. இத்தகைய தேர்வுமுறை சரியில்லையென்று சொல்லும் தரப்பினர் அதற்குச் சில தீர்வுகளையும் சொல்கின்றனர். அவையும் விவாதத்திற்குரியதே. இன்றைய நம் கல்விமுறை என்பதே மெக்காலேவின் குமாஸ்தாக்களை உருவாக்குவதற்கான கல்வித்திட்டம் என்பது அனைவரும் அறிந்தது. நம்முடைய பாரம்பரியமான கல்வித்திட்டத்தை, அதில் சில குறைபாடுகள் இருந்தாலும் கூட நாம் இன்றைக்கு இழந்துவிட்டோமென்பது மிகவும் வருந்துதற்குரிய ஒன்று. இந்த மெக்காலே கல்விமுறையே இன்றைய நம் குறைபாடுகளுக்கும் குளறுபடிகளுக்கும் முதன்மைக் காரணமாகும்.
இன்றைய நம் கல்வி அமைப்பில் உள்ள தேர்வு முறையைப் பொருத்த அளவில் மாணவரின் அறியாமையை அளக்கிற அளவுகோலாக மட்டுமே இருக்கிறதேயொழிய அறிவை வளர்க்கும் அளவுகோலென்று சொல்ல முடியாது. அறியாமையை அகற்றி நல்வழிப்படுத்துவதே கல்வியின் தலையாய பயன். ஆனால் நீ இவ்வளவு அறியாமையுடன் இருக்கிறாய் என்று மாணவனை உளவியல்ரீதியாகத் துன்புறுத்தும் ஒரு முறை எப்படி நன்மையைத் தருவதாக, அறிவை வளர்ப்பதாக, தனித்திறன்களை அடையாளம் காட்டுவதாக இருக்க முடியும்?
"குழந்தைகளிடமிருந்து உடல், உள்ளம், ஆன்ம உணர்வு ஆகியவற்றில் சிறந்தவற்றை ஒருங்கே வெளிக்கொணர்வதுதான் கல்வி" எனத்தான் நம்புவதாகக் காந்தியடிகள் கூறுகிறார். அத்தகைய ஒரு கல்விமுறையில் முட்டாளென்று ஒருவனை முத்திரை குத்தி ஒதுக்க முடியுமா? நீ எதற்குமே இலாயக்கற்றவனென்று சொல்லி முகம் முறிக்க முடியுமா? அத்தகையதொரு வேலையைத் தான் இன்றைய தேர்வுமுறை செய்து வருகிறது. கற்றுக் கொள்ளுதல் என்பதை ஆனந்தமானதொரு விஷயமாகக் கருதப்படுவதற்கு மாற்றாகக் கசப்பாக்குகிறது. தேர்வு, தேர்ச்சி என்பதே ஒருவன் உயர்ந்தவனென்றும் மற்றவன் ஏதோவொரு வகையில் அவனை விடத் தாழ்ந்தவன் என்பதயுமே சுட்டிக்காட்டுகிறது.
மனனம் செய்தலென்பது ஒரு வகைத் திறமை. அதுவும் ஓரளவிற்குத் தேவை. இன்றைக்கு அலைபேசி வந்த பிறகு, நாம் எண்களை நினைவில் பதிக்கும் ஆற்றலை இழந்து விட்டதை நினைத்துப் பாருங்கள். நம் பாடத்திட்டத்திலோ மனனம் என்பதும் ஒரு வகைத் திறனாகக் கருதப்பட்டு, அத்திறனை வளர்த்துக் கொள்ளும் பொருட்டுத்தான் மனப்பாடச் செய்யுள் என்ற வகையில் பாடல்களையும் அறிவியல், கணித விதிகளையும் கொடுத்திருக்கிறார்கள். இது தவிர, கூர்ந்தறிதல், சிந்தித்தல், காரண காரியமுணர்தல், கவனித்தல் எனப் பல வகையான திறன்கள் பாடத்திட்டத்திலே பேசப்படுகின்றன. ஆனால், தனியார் பள்ளிகள் கரையான் புற்றுகளெனத் தமிழகத்தை ஆக்கிரமித்தபிறகு புரிந்து கொள்ளாமலே மனப்பாடம் செய்தல், கணிதக் கணக்குகளைக் கூட அப்படியே மனனம் செய்து எழுதுதல், புத்தகத்தில் உள்ளதை அச்சுப் பிசகாமல் எழுதுதல் ஆகியவையே திறமைகளாகத் தவறான புரிதலோடு மதிப்பெண்ணை நோக்கி ஓடும் பந்தயக் குதிரைகளெனத் தயார் செய்யப்பட்டனர் நம் மாணவர்கள். 100% தேர்ச்சி என்பதே முழுமையான கல்விக்கான அளவுகோல் என்ற கருத்து திட்டமிட்டே உருவாக்கப்பட்டது. ஆடம்பரமான கட்டிடங்கள், விலை உயர்ந்த வண்ணமயமான சீருடைகள், நுனிநாக்கு ஆங்கிலம் ஆகியவற்றை உள்ளடக்கிய பள்ளிகளே சிறந்த பள்ளிகள் என்ற மாயத் திரை விரிக்கப்பட்டது. அந்த வலையில் விழுந்த பெற்றோர்களின் தொடர்ச்சியான ஓட்டத்தில் இன்றைக்கு அரசு பள்ளிகளும் 100% தேர்ச்சி என்னும் இலக்கை நோக்கி ஓடத் தொடங்கியுள்ளது, தவறான முறையில்.
அப்படியென்றால் 100% தேர்ச்சி தேவையில்லையா என்னும் கேள்வி எழும். தேவைதான். அது எப்படிப் பெறப்படுகிறது என்பதில்தான் இருக்கிறது சூட்சுமம். பல தனியார் பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களே எடுக்கப்படுவதில்லை என்பது வருந்தத்தக்க செய்தி. ஏனெனில் அடுத்த வகுப்புக்கான தரத்தை இந்த வகுப்பில் தான் மாணவர்கள் அடைகிறார்கள். அந்தப் பாடங்களையே படிக்காமல் அடுத்த நிலைக்குச் செல்வதென்பது அவர்களுக்கு நன்மை செய்யாது. தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஒரே பாடத்தை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கும் ஒரு வருடம் படிக்கும் மாணவனுக்கும் நிச்சயம் மதிப்பெண் வேறுபாடு வரும்தானே. புரியாமலே மனப்பாடம் செய்வதால் ஏதேனும் பயன் விளையுமா? சாலிப் பயிராக அன்றோ நிற்கும்.
மதிப்பெண் போட்டியில் அடுத்தபடியாக, தேர்வுகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள ஆசிரியர்களே பிட் போடுதல், காப்பி அடிப்பதைக் கண்டும் காணாமல் இருத்தல், ஒரு மாணவரின் தாளை அடுத்தவருக்கு மாற்றித் தருதல், ஒரு மதிப்பெண் வினாக்களின் விடைகளை தேர்வறையிலே உரக்கச் சொல்லுதல் எனப் பல வழிமுறைகளுண்டு. அந்தப் போட்டியின் அடுத்த நிலைதான் விடைகளை ஆசிரியரைக் கொண்டே எழுதச் செய்து நகலெடுத்து அனைவருக்கும் தேர்வறையிலேயே வழங்குதல். இவற்றுக்கெல்லாம் ஒருவரை மட்டும் பொறுப்பாக்க முடியாது. கல்வித் துறை சார்ந்த அதிகாரிகள், பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர், ஆசிரியர் என இந்தக் குற்றத்தில் அனைவருக்கும் பங்குண்டு. இவர்களே செய்வதால் இதைப் பெரிய தவறாக உணராத மாணவனிடமிருந்து சமுதாயம் என்ன ஒழுங்கை எதிர்பார்க்கமுடியும்? அவர்தம் வாழ்நெறியில் நேர்மைக்கு என்ன இடம் இருக்கும்?
உணரப்படாமல், புரியாமல் எழுதும் இந்தத் தேர்வுகள்தான் மாணவர்களின் அடுத்தகட்டக் கல்வியை, வாழ்வை நிர்ணயம் செய்வதாக உள்ளது என்பது எவ்வளவு அநியாயம்? நவீன கட்டமைப்புகளைக் கொண்ட மேல்தட்டு வர்க்கத்தினருக்கான பள்ளி, ஓரளவு வசதி கொண்ட மத்தியதரத்தினருக்கான பள்ளி, சாதாரண மக்களுக்கான அரசுப் பள்ளி என்று தான் இன்று பள்ளிகள் பிரிக்கப்படுகின்றன. அதிலும் நம் மாநிலத்தில் மட்டும்தான் சிபிஎஸ்இ, மெற்றிகுலேஷன், ஆங்கிலோ இண்டியன், ஸ்டேட் போர்டு என்று கல்வியின் தரம் வெவ்வேறு வகையாக உள்ளது. பல அறிஞர்கள் பன்னெடுங்காலம் இந்த ஏற்றத்தாழ்வைப் பற்றிப் பேசித் தான் இன்று சமச்சீர்க் கல்வி கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதுவும் சமச்சீர்க் கல்வி அல்ல; பொதுக் கல்விதான். அதற்குள்ளும் தனியார் பள்ளி முத(லை)லாளிகள் புகுந்து புறப்படும்வகையில் எல்லா ஓட்டைகளும் வைத்துத் தான் கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்தனை சிக்கல்களை, அகழிகளைத் தாண்டித்தான் நம் மாணவர்கள் மதிப்பெண் பெற்று வருகிறார்கள். நகர்ப்புற மாணவருக்கும் கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவருக்கும் பாரிய வேறுபாடு இருக்கும். முதல் தலைமுறையாகக் கல்வி வாய்ப்புப் பெறுபவரும் இன்ன பிற வகையில் பின் தங்கிய மாணவர்கள் எல்லாம் சேர்ந்துதான் பொதுத்தேர்வு என்னும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறார்கள். இது எப்படி சமமான போட்டியாக இருக்க முடியும்? வசதி வாய்ப்புகளைப் பெற்ற மாணவர்களே குறுக்கு வழிகளின் மூலமாக மேலும் மதிப்பெண் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இம்முறைகேட்டிற்குப் பெற்றோரும் பள்ளி நிர்வாகமும் கூட உறுதுணையாகவும் உடந்தையாகவும் இருக்கும் பேரவலமும் இன்றைக்குப் பரவலாக நடக்கிறது. இவர்களையெல்லாம் தாண்டி எப்படி எந்த வசதியுமில்லாத ஒரு மாணவர் தொழில்நுட்பப் படிப்புகளை நோக்கி முன்னேற முடியுமென்பதைச் சிந்திக்க வேண்டும்.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஓர் ஒழுங்கு இல்லை. மதிப்பெண் போடும் முறையில் ஆசிரியருக்கு ஆசிரியர் வேறுபடுகிறார் என்று சொல்லி ஒற்றைச் சொற்களில் விடைதரும் முறையைக் கொண்டு வந்தனர். இதை அடியொற்றித்தான் ஒற்றைச் சொல்லாகவும் விரிவாகவும் பதிலளிக்கக் கூடியதாக இருந்த வங்கித் தேர்வு, அரசுப் போட்டித் தேர்வு, மத்திய அரசுத் தேர்வு ஆகியவற்றையெல்லாம் இன்று வெறும் ஒற்றை வார்த்தை விடைகளைத் தேர்வு செய்வதாக மட்டுமே மாற்றி விட்டனர். விரிவான வகையிலும், சொந்தமாக எழுதும் திறனை வளர்க்கும் வகையிலும் இருந்த கட்டுரை வடிவக் கேள்விகளையெல்லாம் எடுத்துவிட்டு இன்று ஒற்றைச் சொற்களை எழுதுவதன் மூலமாகவே தேர்ச்சி அடையலாம் என்னும் நிலை உள்ளது. இது மாணவர்களின் எழுத்தாற்றலை அறவே அழித்து விட்டது. வாக்கியங்களை அமைத்து எழுதவே தெரியாத ஒரு மாணவர் கூட்டம் உருவாகி விட்டது. இவர்களால் புதியதொரு சொல்லையோ, தன் சிந்தனையில் எழுந்த ஒரு வாக்கியத்தையோ எழுத முடியாது. வழிகாட்டி நூல்களில் உள்ளதை அப்படியே படித்து ஒரு சொல்லும் மாற்றாமல் எழுதும் பயிற்சி மட்டுமே பள்ளிகளில் இன்றைக்கு வழங்கப்படுகிறது. இப்படியான ஒரு தவறான தேர்வு முறையால் மாணவர்கள் தங்கள் திறன்களை இழக்கிறார்கள், தேர்வு பயத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதே நிதர்சன உண்மை.
தன் பிள்ளைதான் நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற பெற்றோரின் ஆசைக்கும் தன் மாணவனே முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற பள்ளியின் போட்டி வெறிக்கும் ஆளாகி, கண் கட்டப்பட்ட குதிரைகள் போல எதை நோக்கி ஓடுகிறோம் என்ற தெளிவோ அறிவோ இன்றி அவர்கள் போட்ட பாதையிலே ஓடிக்கொண்டிருக்கின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர். மதிப்பெண் மட்டுமே குறியாகக் கொண்டு ஓடுவதனாலேயே அதற்காக எதற்கும் துணியும் நிலைக்குச் சென்று மனிதத்தன்மை இழந்து, அறிவிழந்து அஃறிணைகளைப் போல மாறிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் மொழி, நாடு எதன் மீதும் பற்றற்றவராய் சுயநலமிகளாய் மாறி வருவதற்கு நாம் தானே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாத மாணவக் கூட்டம் தவறான கல்வி, தேர்வு முறையால் லெகான் கோழி இனத்தைப் போல செயற்கை முட்டைகளை இட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நடைமுறை வாழ்வின் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு உதவுவதற்குப் பதிலாக தவறான தேர்வுமுறையின் மூலமாக மாணவர்களைக் கடுமையான உளவியல் அழுத்தத்திற்குள்ளாக்குவதுடன், மன நோயாளிகளாகவும் மாற்றி விடுகிறது. சிந்திக்கும் ஆற்றலே ஒருவரைச் சிறப்பாக்கும். சிந்திக்கும் ஆற்றலே மழுங்கடிக்கப்படும் தேர்வு முறையே இன்றைக்கு இருப்பதால் சவலைப் பிள்ளைகளாய் நம் மாணவர்கள் மாறி விட்டனர். 35 மதிப்பெண் பெற்றவன் தேறியவன், 34 எடுத்தவன் தவறி விட்டவன் என்பது எவ்வளவு கேலிக்கூத்து. அதுவும் கல்வி பெரும் சூதாட்டமாக மாறி விட்ட இந்தக் காலத்தில் இந்த மதிப்பெண்களை எப்படி உணர்வது? நடைமுறையில் இருக்கும் தேர்வுமுறை மாணவரின் திறன்களைக் கண்டடைவதாகவோ, வளர்ப்பதாகவோ, ஊக்குவிப்பதாகவோ அல்லாமல் முடக்குவதாகவும் ஏற்றத்தாழ்வினை அப்படியே கொண்டு செல்வதாகவும் இருப்பதே இன்றைய கல்வியாளர்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால்.
ஒவ்வொரு வருடமும் தேர்வரக்கன் இளம்உயிர்களைப் பலியாக எடுத்துக் கொண்டே இருக்கிறான். தவறான நடைமுறைத் தேர்வுமுறை மாற்றப்பட வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும். தவறு செய்யும் மாணவனை விடவும் முறைகேட்டில் ஈடுபடும் ஆசிரியருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.
"காற்றில் அலைக்கழிக்கப்படும் தூசு போல ஒன்றுக்கும் உதவாதவன் என்று எவருமே இருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் ஒளிர வேண்டும், கோடானுகோடி விண்மீன் திரள்கள் ஒளிருவது போல" என்று சோவியத் நாட்டைச் சேர்ந்த கல்வியாளரான வாசிலி சுகோம்லின்ஸ்கி கூறுவதன் அடிப்படையில் தேர்வுமுறை அமைந்து முரண்கள் களையப்பட்டால் கல்விப் பூங்காவில் அறிவுள்ள மலர்களை நாமும் பறிக்கலாம்; தொடுக்கலாம்; மகிழலாம்.
nalla pathivu
ReplyDeleteஇன்றைய கல்வி முறையின் சாதனை அறிவாற்றல் மிகுந்த மாணவரை உருவாக்கியது அல்ல. தமிழும் தடுமாறி ஆங்கிலமும் கலந்து பேசும் சமுதாயத்தை உருவாக்கியதுதான் சாதனை.
ReplyDeleteமிக நல்ல சிந்திக்க தூண்டுகிற கட்டுரை.
மனிதர்கள் கூட்டுறவாக வாழ்கிறார்கள், ஒருவரின் உழைப்பு மற்றொருவருக்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ பலனை தருகிறது. ஒவ்வொருவரும் வாழ்வதற்கு என்ன தேவை? பொருட்களும்(commodities), வசதிகளும்(facilities) தேவை. அவ்வாறு பலதரப்பட்ட பொருட்களையும் வசதிகளையும் உற்பத்தி செய்ய அல்லது உருவாக்க பல்வேறு திறமைகள்(skills and capabilities)ஒரு மாணவனுக்கு தேவை. என்ன மாதிரியான திறமைகளும் அறிவும் - தொழிற்சாலைகளில் தேவைப்படுகிறது என தெரிந்து விட்டால் பாடத்திட்டத்தையும் அதை அனுசரித்தே அடுக்கு முறையில் உருவாக்கி விடலாம். மாணவர்களுக்கும் அழுத்தம் குறையும். கல்வி கற்று வெளியே வரும்போது , நிபுணர்களாக வருவார்கள். மாணவர்களும் சமுதாயமும் பரஸ்பரம் பலன்பெறுவார்கள்.
ReplyDeleteஇந்த சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்கு கடினம்போல தோன்றினாலும், அறிஞர்கள்-கல்வியாளர்கள்-தொழில்துறை தலைவர்கள் இவர்கள் அனைவரும் மனது வைத்தால் படிப்படியாக கொண்டுவந்து விடலாம். இங்கு பிரச்சினை யாரென்றால் பேராசை பிடித்த சுயநலவாதிகள்தான்.
காற்றில் அலைக்கழிக்கப்படும் தூசு போல ஒன்றுக்கும் உதவாதவன் என்று எவருமே இருக்கக் கூடாது - அப்படி ஒரு கல்வி மட்டுமே நிரந்தர தீர்வை உண்டாக்கும் என்று நம்புகிறேன்... நல்ல பதிவு
ReplyDelete