Sunday, June 16, 2013

வெட்டப்படும் சிறகுகள்

நன்றி பாவையர் மலர்


ஐம்பூதங்களால் ஆன இந்த உலகத்தின் இயக்கத்தைச் சாத்தியப்படுத்தியது ஆணும் பெண்ணுமான உயிரிகள். ஆனால் இந்த உயிரிகளிடமும் பேதத்தைக் கற்பிக்கிறது மனிதச் சமூகம். ஒருவரை உயர்த்தியும் ஒருவரைத் தாழ்த்தியும் காலங்காலமாய்ச் சொல்லி வருகிறது. அதுவே மனித மனத்தில் விதைத்து முளைக்கிறது. 

சிறுவயதிலிருந்தே கற்பிக்கப்படும் இவ்வேற்றத்தாழ்வுகள் இரு உயிரிகளிடமும் வெவ்வேறு விதமான மாற்றங்களை உண்டு பண்ணுகிறது. ஆணின் மனத்தில் தான் உயர்ந்தவன், கண் கலங்காதவன், பெண்ணைக் கட்டிக் காப்பாற்றப் புறப்பட்டவன் என்ற பிம்பத்தையும் பெண் மனத்தில், தான் தாழ்ந்தவள், ஆணால் காப்பாற்றப்பட வேண்டியவள், சட்டென்று உடைந்து விடக்கூடியவள் என்ற பிம்பத்தையும் வளர்த்தெடுக்கின்றது. சிறு வயதிலிருந்தே வளர்த்தெடுக்கப்படும் இப்பிம்பங்ளே ஆணாய்ப் பெண்ணாய் மாற்றம் பெறுகிறார்கள்; அதிலிருந்து வெளிவர முடியதபடி உருவேற்றப்படுகிறார்கள். உயர்ந்த ஞானத்தையும் அறிதலையும் கொண்ட மானிடர் கூட இதிலிருந்து விலக முடியாமல் சிக்குண்டு தடுமாறுவதையும் நாம் அறிவோம்.

பெண் அடிமைப்பட்ட காலத்திலிருந்து இன்றைக்கு வரையுமான நீண்ட நெடிய போராட்டத்தையோ, ஏற்பட்டுள்ள மாறுதல்களையோ, இன்றைக்கும் மாறாமலே இருக்கின்ற பெண்ணடிமைத்தனச் சிந்தனைகளையோ பற்றி இங்கு பேசப் போவதில்லை. ஆனால் ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்; வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார் என்னும் பாரதியின் வரிகள் இன்று பெரும்பான்மையும் நனவாகி, பெண் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்குப் போகும் காட்சி ஒவ்வொரு நாளும் நமக்குக் காணக் கிடைக்கிறது.

பெண்கள் வீட்டுப் படியிறங்குவதே பாவமென்று பேசிய வேடிக்கை மனிதர்கள் வீழ்ந்துவிட்டனர். ஆனாலும் பெண்கல்வியில் சில அளவீடுகளும் கற்பிதங்களும் இன்றைக்கும் இருப்பதை நாம் மறுக்க முடியாது. இங்கு சில அவதானிப்புகளையும் நோக்கலாம். சங்க இலக்கிய காலத்தில் 40 க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு காப்பியம் கூடப் பெண்ணால் எழுதப்பட்டதில்லை. நீதி இலக்கியக் காலத்திலும் சிற்றிலக்கிய, பக்தி கால கட்டத்திலும் எழுதிய பெண்களின் பட்டியலை இரு கைவிரல்களுக்குள் அடக்கி விடலாம். எனில், இடைக்காலத்தில் இவ்வளவு குறைவாகவேவா பெண்கள் எழுதியிருப்பார்கள்? அல்லது அவை அழிக்கப்பட்டனவா? எழுதாமல் இருந்தார்களா? கல்வி மறுக்கப்பட்டதன் விளைவா? போன்ற கேள்விகளுக்கு நம்மிடம் விடையில்லை.  கலை, அரசியல், அறிவியல், தத்துவம், அறவியல் என அனைத்துத் துறைகளிலுமான பெண்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாகவே இருப்பதை நாம் கவலையுடனே சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்று சொல்ல வேண்டிய அவசியம் வள்ளுவருக்கு ஏன் ஏற்பட்டது?

இன்றைய நவீன காலத்திலும் கூட, ஒரு பெண் எவ்வளவு படிப்பது என்பது அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அவள் படிப்பதற்குரிய செலவுக்கும் திருமணத்துக்கான செலவுக்கும் இடையிலான பண மதிப்பீடுகள் அவளுடைய கல்வியில் குறுக்கீடு செய்து கொண்டேயிருக்கிறது. இசுலாமியச் சமூகத்தில் ஓரளவு வரவேற்கத்தக்க மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பினும் கூட மொத்தப் பெண் சமூகத்துக்கும் அவர்களுக்கும் இடையில் இன்னும் ஓர் இடைவெளி இருப்பதைப் பார்க்க முடிகிறது. பள்ளியில் ஆசிரியராக பத்தாண்டுகளுக்கும் மேல் வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அனுபவத்தில் சொல்கிறேன். இசுலாமிய சமூகத்தில் பெண் பத்தாம் வகுப்பைக் கடப்பதே பெரிதெனக் கருதப்படுகிறது. கிராமத்தில் இன்றைக்கும் மொத்தப் பள்ளியில் 5 அல்லது 10 மாணவிகளே தொடர்ச்சியாக 12ஆம் வகுப்பு வரையிலும் படித்தவர்களாக இருக்கிறார்கள். இடைநின்றவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

அண்மையில் மேல்நிலைப் பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்திருக்கின்றன. தொடர்ந்து பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கி விட்டன. 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து பெண்களின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்து வருவதையும் அவர்களே முன்னணியில் இருப்பதையும் முதல் மதிப்பெண்களை அடைவதையும் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து கவனிப்பவர்கள் அறிந்திருப்பர். உண்மை, ஆனால் இந்த எண்ணிக்கை, கல்லூரி செல்லும், மேற்படிப்பு, ஆய்வுப் படிப்பு என்ற தொடர்ச்சியில் பார்க்கும்போது குறைந்துகொண்டே வந்து மிகக் குறைவான பெண்களே எதிர்நீச்சல் போட்டு முன்னேறுகின்றனர்.

பொருளாதாரத்தால் படிக்க முடியாமல் போகும் சூழலோடு பெண் என்பதாலேயே அதிகம் படிக்க வேண்டியதில்லை என்ற அலட்சியமும் பெரும்பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. ஒரு மாணவி தனித்துப் பள்ளிக்கு வரக் கூடியசூழல் சரிவர இல்லாத நிலையில் அரசு சார்பாக மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை ஆண்டுதோறும் வழங்கி வருவது மிகச் சிறப்பானதொன்று. கிராமத்தில் அது எத்துணைப் பயனுடையதென்பதைச் சொல்லில் விளக்க முடியாது. அதே போல நகரத்தில் படிக்கும் மாணவியரை விடவும் கிராமத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவியருக்குச் சிக்கல்கள் அதிகம். ஏழைப் பெற்றோருக்குப் பிறக்கும் பெண்கள் படிக்கும் ஆர்வமிருப்பினும் நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் குடும்பத்துக்கான பலியீடுகளாகவே ஆகி விடுகின்றனர். குடும்பத்தின் வறுமையைப் போக்க 12 ஆம் வகுப்போடு தன் படிப்பை முடித்துக் கொண்டு தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். வீட்டுக்கு வந்து, வேலைக்குப் போன அம்மா வருவதற்குள் சமையலை முடிக்கப் பரபரக்கின்றனர். இதையெல்லாம் பார்த்தும் ஏதும் பெரிதாகச் செய்ய முடியாத நிலையில் மனம் வெம்புகிறது. வீட்டில் ஆண் குழந்தையும் இருந்து பெண் குழந்தையும் இருந்து ஒருவர் மட்டுமே படிக்கும் சூழலிருப்பின் யாருக்குப் படிக்கும் ஆர்வம் இருக்கிறது என்று பெற்றோர் சிந்திப்பதில்லை. உடனடியாக, அந்தப் பெண் குழந்தைக்கே கல்வி மறுக்கப்படுகிறது. தமிழகத்தின் பல கிராமங்களில் இன்றைக்கும் இந்த நிலைதான்.

நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் பெண் திடீரென்று சில நாட்கள் பள்ளிக்கு வர மாட்டாள். திடீரென்று மாறுதல் சான்றிதழ் கேட்டு அவளுடைய பெற்றோர் வருவர். அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும். அல்லது ஏதோ ஒரு காரணத்துக்காக படிப்பு நிறுத்தப்படும். இப்படியான பல குழந்தைகளைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறேன்.

பூங்குழலி, நான் பணியாற்றிய பள்ளியில் மேல்நிலையில் படித்த ஒரு மாணவி; இன்றைக்கு அவள் சென்னைப் பல்கலையில் கணிதத்தில் மேல்பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். தமிழ் வழியில் படித்த அந்தப் பெண், ஆங்கில வழியில் கல்லூரியில் கணிதம் படித்து முதலிடம் பெற்று, சென்னைப் பல்கலையில் நடந்த மேல்பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்விலும் இரண்டாம் இடத்தைப் பிடித்தாள். பள்ளியிலேயே பேச்சு, கவிதை, கட்டுரை போன்ற போட்டிகளில் முன்னணியில் நிற்பாள். இனிமையான குரல் வளம் கொண்டவள். கல்லூரியிலும் தேசிய மாணவர் நலத் திட்டத்தில் கல்லூரி அளவில் தலைவியாக இருந்து செயல்பட்டவள். இன்றைக்கு, கணித முதுகலையில் 90% தேர்ச்சியுடன் இன்னும் முன்னேறிக் கொண்டிருக்கிறாள். இந்தக் கடின உழைப்புக்குப் பின்னால் ஒரு கண்ணீர்க் கதை இருக்கிறது. எல்லாப் பெற்றோரையும் போலவே அவளுடைய பெற்றோரும் நகரத்துக்குக் கல்விக்காக அனுப்ப அஞ்சியபோது சில நாட்கள் பட்டினி கிடந்து, ஆசிரியர்கள் பலர் சென்று பேசிய பின்னரே அவள் பெருநகரத்தின் ஒரு கல்லூரி விடுதியில் அடைக்கலமானாள். அப்போதும் அஞ்சியபடியே இருந்த அவளுடைய பெற்றோருக்கு இன்றைக்கு அவளுடைய மதிப்பெண்கள் பெரும் இளைப்பாறுதல். அவளுடைய படிப்புச் செலவு முழுவதையும் அவள் தன் மதிப்பெண்களின் உயர்வில் அடைந்தாள். சிறபபான மாணவியாக, இவள்தந்தையும் தாயும் என்னோற்றான்கொல் என்னும் வாழ்த்துகளுடன் ஆசிரியர் மெச்சும் மாணவியாக இன்னும் உயரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாள். தன் நிலையைத் தக்க வைக்க அவள் ஆர்வத்துடனும் விடா முயற்சியுடனும் படிக்கிறாள்.

இங்கே, மற்றொரு பெண்ணைப் பற்றியும் பேச வேண்டிய தேவை இருக்கிறது. அவள் அபிராமி. பூங்குழலியைப் போலவே சிறப்பாகப் படிக்கக் கூடிய அறிவான பெண். ஆனால் அவளுடைய பெற்றோர் அவளுடைய அழகைக் கண்டு அஞ்சினர். பத்தாம் வகுப்பிலேயே நிறுத்த முயன்றபோது ஆசிரியர்களின் உதவியால் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தாள். இப்போது தேர்வெழுதியிருக்கிறாள். நிச்சயம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவாள். ஆனால் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் தன் தந்தையை காப்பாற்ற நினைக்கும் அவள் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து விட்டாள். ஆசிரியர், அவளிடம் அரசே இலவசமாகக் கொடுக்கும் கல்லூரிக் கல்வி பற்றியும் இலவச விடுதி போன்ற வசதிகளைப் பற்றியும் பல நாட்கள் எடுத்துச் சொல்லியும் அவள் தன் தந்தைக்காகத் தன் படிக்கும் ஆர்வத்தைக் கருக்கிக் கொண்டாள்.

இங்கே பூங்குழலிகளை விடவும் அபிராமிகளே அதிகம் இருக்கிறார்கள். ஆனால் மிகச் சுமாராக, அல்லது படிக்காமலே அலப்பறை செய்தாலும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும், உத்தியோகம் புருஷ லட்சணம். அதற்காகவாவது படிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டாவது படிக்க வைக்கப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment