Sunday, June 16, 2013

பெண்ணிற் பெருந்தக்க யாவுள..

நன்றி : பாவையர் மலர்


மஞ்சு காலை 7 மணிக்கே தன் வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்பி விடுவாள். அப்போதுதான் 12 ஆம் வகுப்புப் படிக்கும் அவள் பள்ளியில் 8.30 மணிக்கு நடக்கும் சிறப்பு வகுப்புக்கு வந்து சேர முடியும். 7 மணிக்கே கிளம்புவதனால் அவள் காலையில் எதுவும் சாப்பிடுவதில்லை; மதிய உணவும் கூடத்தான். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே சத்துணவு என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவளுடைய ஊரிலிருந்து பள்ளிக்குப் பேருந்து வசதி கிடையாது. சரியான பாதை இல்லாததால் பேருந்து இன்னும் அவளுடைய ஊருக்குள் நுழையவில்லை. அவளும் அவளையொத்த பிற மாணவிகளும் நடந்தேதான் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். மாலை 5.30 மணிக்குச் சிறப்பு வகுப்புகள் முடிந்து வீட்டுக்கு அவள் சென்று சேர இரவு 7 மணியாகி விடும். இடையில் அவள் செல்லும் பாதை, ஒற்றையடிப் பாதை மட்டுமல்ல; பல நேரத்தில் ஆளரவமற்ற பாதையும் கூட. வெகு சில நேரத்தில் அந்த வழியாகச் செல்லும் வண்டிகளை நிறுத்தி, அதில் ஏறிச் செல்வதுமுண்டு. இது ஏதோ குக்கிராமத்தைச் சேர்ந்த ஊரைப் பற்றி நான் சொல்வதல்ல. சென்னையிலிருந்து ஒரு மணிநேரப் பயணத்திலிருக்கும் சென்னைக்கருகிலுள்ள காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம். 

அண்மையில் தில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரமும் தூத்துக்குடியில் ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவி சிதைக்கப்பட்ட செய்தியும் அதற்குப் பிறகு நான் இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வினாடி வரையிலும் கூடப் பெண்களுக்கான கொடுமைகள் நிமிடம்தோறும் நடந்துகொண்டிருக்கின்றன என்பது நம் செயலற்ற தன்மையைக் காட்டும் உண்மை. மஞ்சு போன்று ஆயிரக்கணக்கான பெண்கள் தினமும் பாதுகாப்பற்ற சூழலுடன்தான் பள்ளிக் கல்வி பெற வந்து கொண்டிருக்கிறார்கள். அவளுக்கு அரசால் கொடுக்கப்பட்ட மிதிவண்டி அவளுடைய தந்தையின் கடனடைக்கப் பயன்பட்டது. கிராமத்தில் பணியில் சேர்ந்த புதிதில் பேருந்து மாணவர்கள் அருகில் நிறுத்தப்படாமல் தள்ளி நிறுத்தப்படுவதையும் சிலசமயம் நிறுத்தாமலே செல்வதையும் கண்டு மனம் கொதித்திருக்கிறேன்; நடத்துநரிடம் சண்டையிட்டிருக்கிறேன். பிறகு மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கப்பட்ட பிறகு அவர்கள் பேருந்தில் இடிபடாமல் நிம்மதியாக வண்டியில் வருவதைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் இன்னும்கூட ஒரு பகுதிப் பெண்களுக்கு இது சென்று சேரவில்லையென்பதோடு மிக அபாயமான சூழலில் அவர்கள் வந்து செல்கிறார்கள் என்பதும் மனத்தில் குறித்துக் கொள்ளவேண்டியது. நடந்து செல்கையில் பாம்பு உள்ளிட்ட பயங்களோடு ஆணையும் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவசரத்திற்கு ஏதேனும் ஒரு வண்டியை நிறுத்தி ஏறினால் அது மற்றொரு ஆபத்தை வலிய அழைப்பதாக முடிகிறது. கிராமத்திலிலுள்ள மாணவிகள் தங்கள் கல்வியைப் பள்ளிப் படிப்போடு முடித்துக் கொள்வதற்கு இதுவுமொரு முக்கியமான காரணம்.

கல்விக்கான பயணத்தில் இங்கு மட்டும்தான் சிக்கலென்று சொல்லிவிட முடியாது. முன்னைவிடவும் இன்றைக்கு பெண்கள் ஓரளவு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு அவர்களுடைய பெற்றோர் இருவருமே இன்றைக்கு வேலைக்குச் செல்லத் துவங்கியிருப்பதும் அலைபேசி உள்ளிட்ட வசதிகளும் துணை செய்கின்றன. ஆனால் இந்தக் கட்டற்ற சுதந்திரமே அவர்களுக்கு வேறுவிதமான சிக்கல்களைத் தருவிப்பதாக இருப்பதையும் சொல்ல வேண்டும். நாம் நினைத்தால்கூட வீட்டின் நடுவில் மிக அமைதியாய் அமர்ந்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை வெளித் தள்ள முடியாது (மிதிவண்டியை விற்பவருக்கு இலவசத் தொலைக்காட்சியை விற்கத் தோன்றுவதில்லை). பள்ளியிலிருந்து கிளம்பி வீடு செல்லும் குழந்தைகளுக்கு இலவசமான பொழுதுபோக்கைத் தொலைக்காட்சி மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. அதில் அறிவை விரிவாக்கும் பல நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. ஆனால் பொதுமக்களில் பெரும்பான்மையோர் நகரம், கிராமம் என்ற பேதமின்றி குழந்தைகளின் மனத்தைச் சிதைக்கும் தொடர்களையும் திரைப்படங்களையும் குத்தாட்டங்களையும் இன்ன பிற நிகழ்ச்சிகளையுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் முழுமையான மன வளர்ச்சி அடையாத நம் குழந்தைகளும் இதே நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள். இவை அவர்களுடைய மனத்தில் விதைக்கும் நஞ்சுகளைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகிறார்கள்.

இத்தனை ஆபத்தான சூழலில் வரும் மாணவிகள் பள்ளிக்கு வருகையில் கவனித்தால் புரியும்; அவர்களுடைய ஆடை அணியும் முறை, அலங்காரம், பட்டையான கொலுசும் அதிகப்படியான மலர் உள்ளிட்ட அணிகளும் எல்லாம் அழகுபடுத்திக் கொள்வதாகவே நினைத்துக் கொள்கிறார்கள். மாணவர்களும் கூட, அவர்கள் விரும்பும் நடிகரின் தலையலங்காரம், கைகளில் பட்டை, கழுத்தில் இரும்புச் சங்கிலிகள், அருவருக்கத்தக்க அளவுக்கான குட்டிச் சட்டைகள், இறுக்கமான பேண்ட்கள் எனத் தங்கள் சீருடையைச் சீரழித்தே அணிந்து வருகிறார்கள். இதற்கு அவர்களை மட்டும் குற்றம் சுமத்த முடியாது. வீட்டிலிருந்து கிளம்புகையில் அவர்களை வழியனுப்பும் பெற்றோரும் இதைக் கண்டுகொள்வதில்லையென்பது கசப்பான ஒன்று. இது மாணவிகளுக்கு மற்றொரு சிக்கலாக மாறி விடுகிறது. இளம் வயதில் தங்களைப் பிறர் திரும்பிப் பார்ப்பதை, பின் தொடர்வதை ஒரு கட்டம் வரையிலும் அவர்கள் ரசிக்கவே செய்கிறார்கள். இதை உளவியல்ரீதியாக நாமும் புரிந்து கொள்கிறோம். ஆனால், தன்னைப் பார்க்கும் பலரின் கண்களில் இருக்கும் விஷத்தை அந்தப் பெண்கள் அறிவதில்லை. குறிப்பாக, தனியாகச் செல்லும் மாணவிகளை இப்படிக் கவனித்து வம்பிழுப்பது, சீண்டுவது, பாலியல் தொந்தரவு தருவது ஆகியவை அன்றாடம் நிகழ்ந்து வருகிறது. இதற்கு மறைமுகமாக, தங்களின் உடையலங்காரமும் ஒரு காரணமென்பதை இவர்கள் அறிவதில்லை. இப்படியான சிக்கல்கள் எழுந்து, அதனால் அவர்கள் பாதிக்கப்படும்போதோ அல்லது அதை வீட்டில் தெரிவிக்கும்போதோ பெற்றோர் எடுக்கும் மிகச் சுலபமான தீர்வு, பள்ளியிலிருந்து நிறுத்தி விடுவது. 
பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளி வரும்போது ஊடகங்கள் தரும் புள்ளி விவரங்களைக் கவனித்தால் நமக்குச் சில விஷயங்கள் விளங்கும். தேர்ச்சியடையும் மாணவர்களை விட மாணவிகளின் சதவிகிதமே அதிகமாக இருக்கும். இத்தகைய மன அலைக்கழிப்புகள் மாணவர்களையே கல்வி சார்ந்து பெரும்பாலும் பாதிக்கிறது. எனவே அவர்களுடைய தேர்ச்சி சதவிகிதம் குறைவாகவே இருக்கிறது. மாணவிகள் மேலே படிக்க வேண்டிய ஆர்வத்திலும் தேர்ச்சி அடையாவிட்டால் காத்திருக்கும் திருமண அபாயத்திற்காகவாவது எப்படியாவது படித்துத் தேர்ச்சி அடைந்து விடுகின்றனர். ஆனால் இப்படித் தேர்ச்சி அடையும் மாணவிகளில் எத்தனை சதவிகிதம் பேர் கல்லூரிக்குப் போகிறார்களென்று ஒரு கணக்கு எடுத்துப் பார்த்தால் அந்தத் தேர்ச்சி விகிதம் சட்டென்று குறைந்து போவதை உணரலாம். இளங்கலை படிப்பது ஒரு கண்டமென்று வைத்துக் கொண்டால் அது தாண்டி முதுகலை, முனைவர், மருத்துவம் ஆகிய தொழில்நுட்பப் படிப்புகளில் பெண்களின் சதவிகிதம் குறைந்தே இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். கணவனை விட மனைவி குறைவாகப் படித்திருக்க வேண்டும், பெண்ணை அதிகமாகப் படிக்க வைத்துப் பின் அவள் இன்னொரு குடும்பத்துக்குத் தானே உதவியாக இருக்கப் போகிறாள் போன்ற எண்ணங்களும் இதற்குப் பின்னால் இருக்கின்றன.

எட்டாவது படிக்கும், தந்தையை இழந்த ஒரு மாணவியை, இப்படியான ஒரு சிக்கலுக்காகப் பள்ளியிலிருந்து  அவளுடைய தாயார் நிறுத்திவிட்டார். பிறகு ஆசிரியர்களின் முயற்சியால், அவள் தொடர்ந்து வருகிறாள். இப்படி அவளைக் கேலி செய்த சிலரில் அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களும் அடக்கம். அவர்களையும் அழைத்துப் பேசி, தவறென்று உணர்த்தி, இனியும் தொடர்ந்தால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதையும் சொல்ல வேண்டியிருந்தது. ஆண்கள் பெண்களைக் கேளிக்கைக்கான பொருளாக மட்டுமே பாவிப்பது எந்தக் காலத்திலும் மாறாமலே இருக்கிறது என்பது வருந்தத்தக்கது. அதனை எழுத்து, காட்சி ஊடகங்கள் பெரும்பான்மையும் திட்டமிட்டே செய்து கொண்டிருக்கிறது என்பது கண்டிக்கத்தக்கது. வளரிளம் பருவத்தினரின் உளவியலை உணராமல் அல்லது அவர்களை வேண்டுமென்றே தூண்டும் வகையில்தான் இன்றைய நிகழ்ச்சிகள் இருக்கின்றன. திரைப்படங்கள் அதற்கு எண்ணையிட்டு வளர்த்தெடுக்கின்றன. இவற்றை உண்மையென்றே தன் மனத்தில் பதித்துக் கொள்ளும் இளைய தலைமுறை ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் வரும் மனிதர்களைப் பிரதியெடுக்க முயற்சிக்கிறார்கள்; அவர்களையே தங்கள் முன்னுதாரணங்களாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். தவறான முன்னுதாரணங்களால் தங்கள் வாழ்க்கை சிதைவதை அவர்கள் உணர்வதில்லை; கல்வி கற்க வேண்டிய வயதில் மனம் போன போக்கெல்லாம் அலைக்கழிந்து, பின் தொலைந்த வாழ்வை எண்ணி வேதனைப்பட்ட மனிதர்களாய் அலைபாயத் தொடங்குகிறார்கள்.

ஆணைச் சக பாலினமாய் மதிக்கப் பெண் தவறி விடுகிறாள்; ஆணும் பெண்ணைத் தன் தோழமையாய்ப் பார்ப்பதேயில்லை. பள்ளிகளில் ஆண், பெண் பள்ளிகள் தனியாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அல்லது, ஆண், பெண் இரு பாலருக்கான பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பேசிக் கொள்ளவே அனுமதிக்கப்படுவதில்லை. இது அவர்களிடைய இருக்கும் இனக் கவர்ச்சியை ஊதிப் பெரிதாக்கி உடலியல் கவர்ச்சியை முன்னிலைப் படித்திவிடுகிறது. அப்படியே தப்பித் தவறி ஒரு மாணவனும் மாணவியும் பேசி விட்டால் சக தோழமைகளே அதைக் காதலென்று பெயரிட்டுப் பரப்பி விடுவதும் சந்தேகப்பட்டு ஆசிரியர்கள் கடுமையாகக் கண்டிப்பதும் இயல்பாக மலரும் நட்பைக் கசக்கும் அவலமே நிகழ்கிறது.

12 ஆவது படிக்கும் மாணவன், 8, 9, 10 வகுப்புகளில் படிக்கும் மாணவிகளைப் பின்தொடர்வதும், அவர்களின் வகுப்புகளுக்குக் காரணமற்றுச் செல்வதும் வகுப்புக்கு வெளியே நின்று அவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதும் அன்றாட நிகழ்வாகிறது. இதை மறைமுகமாக வரவேற்கும், ஊக்குவிக்கும் மாணவிகள் இதனால் தங்கள் கல்வி பாதிப்பதை, தடைபடுவதை உணர்வதில்லை. இரு பாலினருக்குமே சிக்கலெனினும் மாணவி வீட்டில் உடனே அவளுடைய படிப்பை நிறுத்தி விடுவதும் அவளுக்குத் திருமண ஆசை வந்துவிட்டது என்று கேவலமாகப் பேசுவதும் மானத்துக்குப் பயந்து திருமணம் செய்து கொடுப்பதும் நிகழ்கிறது. ஒரு மாணவியை அவளுடைய கவனமின்றி ஒருவன் நெடுநாள் தொடர்ந்து வருவதைக் கவனித்த, அப்பகுதியில் கடை வைத்திருந்த ஓர் உறவினர் அவளுடைய தந்தையிடம் சொல்லப்போக, மிக நன்றாகப் படிக்கக்கூடிய, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்த அந்த மாணவி யாரோ ஒரு முகம் தெரியாத மனிதனுக்கு மனைவியாக்கப்பட்டு வீட்டில் மூலையிலிருக்கும் சமையலறையில் முடக்கப்பட்டாள். அவளுடைய வாழ்க்கை மாறிப் போனதற்கு யாரைக் குற்றம் சாட்டுவது?

சமயங்களில் எல்லை மீறி, வாழ்வில் தங்களை இன்னும் நிலைநிறுத்திக் கொள்ளாத அந்த மாணவனும் மாணவியும் ஓடிப் போவதும் வாழ்வின் துயர அலைகளில் சிக்கிப் பின்னர் காதலையே வெறுப்பதும், சில வேளைகளில் தற்கொலை செய்வதும் நடக்கிறது. காதலித்தவன் பின்னால் சென்று, அவனால் கைவிடப்பட்டு, மிகக் குறைவான கூலிக்குப் பக்கத்திலிருக்கும் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மாணவியையும் எனக்குத் தெரியும். பள்ளி இறுதித் தேர்வின் கடைசி நாளில் தேர்வை எழுதி முடித்தபின் பள்ளியிலிருந்தே ஓடிப் போய், கையிருப்பைச் செலவு செய்தபின், வீட்டார் கையில் பிடிபட்டு, வேறொருவனுக்கு மணமுடிக்கப்பட்டு அந்தப் பெண் சென்று விட, அந்தக் கிராமத்தின் பேருந்து நிலையத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும் மாணவனையும் நானறிவேன். நம் திரை இயக்குநர்களுக்குத் தெரிந்தால் இவர்களுடைய வாழ்க்கையையும் ஒரு காவியக் காதலாக மாற்றி, இன்னும் ஒரு மாணவக் கூட்டம் ஓடிப் போவதற்குத் தூண்டுகோலாக இருப்பார்கள்.

இன்றைக்கு இருக்கக்கூடிய உணவு முறை குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மட்டுமே கவனிக்கிறதேயன்றி, அவர்களுக்குரிய சத்துகளைத் தருவனவாக இல்லை. மிகச் சிறு வயதிலேயே பெண்களும் ஆண்களும் பருவமடைந்து விடுகிறார்கள். அவர்களுடைய ஹார்மோன்கள் திரைப்படங்களாலும் ஊடகங்களாலும் தூண்டப்படுகின்றன. அலைபேசிகளில் சக மாணவிகளை மட்டுமின்றி ஆசிரியைகளையும் மோசமான கோணங்களில் படம் பிடிப்பது, கணினியிலிருந்து நீலப் படங்களையும் பிடித்த நடிகைகளின் ஆபாசப் படங்களைத் தரவிறக்கம் செய்து ரசிப்பது என மாணவர்களில் பெரும்பாலானோர் மோசமானதொரு மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இப்படியான சூழலில், அவர்களுடைய உடல் இச்சைக்கு, கைக்கெட்டும் தூரத்தில் இருக்கக்கூடிய மாணவிகளே பலியாகிப் போகிறார்கள்.

அண்மையில் நடந்த தருமபுரி காதல் சம்பவத்தில்கூட, இருவருமே வளரிளம் பருவத்தில் இருக்கக்கூடிய மாணவர்கள். தங்கள் கல்வியை இன்னும் முடிக்காதவர்கள். திவ்யாவின் பெற்றோர், அவளுக்குத் திருமண முயற்சி எதையும் செய்யத் தொடங்கவில்லை. படித்து, நல்ல வேலையில் அமர்ந்தபின் தன் காதல் பற்றியும் திருமணம் பற்றியும் பெற்றோரிடம் பேசியிருக்கலாம். அவர்கள் அனுமதிக்காவிடில் இதே முடிவை அப்போது எடுத்திருக்கலாம். யோசிக்காமல் எடுக்கக்கூடிய இம்மாதிரியான முடிவுகள் பல துன்பங்களுக்குக் காரணமாகின்றன. இந்தச் சம்பவத்தில் பேசப்படும் சாதி போன்றவை குறித்து விவாதிக்கும் களம் இது அல்ல. இன்றைய இளந்தலைமுறையினரின் அவசரம் பற்றியே இதைச் சொல்லிச் செல்கிறேன். இன்னமும் காதல் போன்ற பல விஷயங்களை, குழந்தைகளுடன் பெற்றோர் ஆரோக்கியமாக உரையாடும், விவாதிக்கும் சூழல் இல்லை என்பதையும் இங்கே வேதனையுடன் பகிர வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் கடந்த வருடத்தில் 5,484 குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டனர் என்பதும் 1408 குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர் என்றும் தேசியக் குற்றப்பதிவு நிறுவனத்தின் ஒரு தகவல் கூறுகின்றது. அரசால் பதிவு செய்யப்பட்ட தகவலே இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இருக்குமாயின் வெளிவராத இது போன்ற சம்பவங்கள் இன்னும் மிகுதியாகவே இருக்கும். கோயமுத்தூரில் இரண்டு குழந்தைகளைக் கடத்திச் சென்று எட்டு வயதேயான அந்தப் பெண் குழந்தையைப் பாலியல் வல்லுறவு செய்ததுடன் அவளுடன் இருந்த அவள் தம்பியையும் தூக்கிக் கால்வாயில் போட்டுக் கொலை செய்ததையும் நாம் மறந்து விட முடியாது.

சேலத்தில் ஒரு பள்ளி மாணவி பள்ளியிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாள். உடற்கூறு ஆய்வில் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் விந்து அவளுடைய வயிற்றில் இருந்ததாகத் தெரியவந்தது. தொழில் நுட்பக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவி, தன்னைக் காதலிக்க மறுத்தாள் என்ற காரணத்துக்காக அவளுடைய முகத்தில் ஆசிட் ஊற்றிச் சிதைத்தான் அவளுடைய தோழனான ஒரு மாணவன். தங்களை நம்பி உடன் வரும் தோழியைக் கூட்டாகச் சேர்ந்து சிதைத்திருக்கிறது ஒரு மாணவர் கூட்டம். காதலிக்க மறுத்த தோழியை நண்பனின் துணையுடன் வெளியே வரச் செய்து கத்தியால் குத்திக் கொலை செய்கிறான் ஒரு மாணவன். இப்படி, பெண்கள் படிக்க மட்டுமல்ல வெளியே வருவதற்கே லாயக்கில்லாத சூழலே இன்று தமிழகத்திலிருக்கிறது. கல்லூரியை விட்டு வெளியே வந்து பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவளைக் கேலி செய்து ஆட்டோவுக்குள் இழுக்க முயற்சி செய்து, அதிலே மாட்டிக் கொண்ட துப்பட்டாவுடன் இழுக்கப்பட்டு இறந்து போன எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகா ஷாவை மறக்க முடியுமா?

பாலின்பம் என்பது உயிரினங்களின் அடிப்படைத் தேவையென்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்குப் பண்பாட்டுப் புனிதம் கற்பிக்கும் அதே சமூகம்தான் தன் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு தன் குழந்தைகளுடனே ஆபாசக் குப்பைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒற்றை அறைகளில் வசிக்கும் வறுமையின் பிடியிலிருக்கும் குழந்தைகளுக்கு எல்லாக் காட்சிகளும் சிறு வயதிலேயே பழகிப்போய் விடுகின்றன. பள்ளிக்குள் தன்னுடன் பயிலும் சக மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் துன்புறுத்தப்படும் மாணவிகள் வெளியே இருக்கும் சமூக நச்சரவங்களாலும் பாதிக்கப்படுகின்றனர். மட்டுமின்றி, அதிர்ச்சி தரத்தக்க தகவல், பெண்குழந்தைகள் தங்கள் நெருங்கிய உறவுகளாலேயே இப்படித் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது. பெங்களூரில் பள்ளி செல்லும் 4 வயதுச் சிறுமியொருத்தி பள்ளி வாகனத்தை ஓட்டும் ஓட்டுநராலும் கிளீனராலும் வன்புணரப்பட்டிருக்கிறாள். வீடு திரும்பிய சிறுமி அவளுடைய யோனியில் வலியென்று அழ, பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். பரிசோதனையில் வெளியான தகவலால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை விசாரிக்க, விஷயம் வெளியாகி இருக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து மரணத்தறுவாய் வரையும் பெண் இந்தச் சோதனையிலிருந்து மீள முடியாத ஒரு சிக்கல் இந்தியத் திருநாட்டிலிருப்பதை நாம் மறுக்க முடியாது. இதற்கு வி.வி.ஐ.பிக்குப் பிறந்த பெண் குழந்தைகளும் விதிவிலக்கல்ல.

உலகமயமாதல் போன்ற இன்னும் பல காரணங்களால் நம் ஆணாதிக்கச் சமூகம் பாலியல் பண்பாடற்று மேலும் நோய்ப்பட்ட சமூகமாய் மாறி இருக்கிறது. நம் குடும்ப அமைப்பில் ஆண் உயர்ந்தவனாகவும் பெண் சற்றே குறைந்தவளாகவும் ஏற்றத்தாழ்வுடன் பார்க்கப்படுவதை எவரும் மறுக்க முடியாது. எல்லாத் தவறுகளுக்கும் பெண் குழந்தைகளே பொறுப்பாக்கப்படுகின்றனர். புறச்சூழல்களும் அதற்குத் தக அமைந்து பெண்வாழ்வை இன்னும் சிக்கலாக்குகிறது. அக்கம்பக்கத்தார், சக தோழர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், ஏன், சொந்தத் தந்தையை, சகோதரனைக் கூட பெண் சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய அளவுக்கு நோய்மை முற்றியிருக்கிறது. பெண் பாதுகாப்பு அறவே இல்லாத தன்மையிலிருக்கிறது. நம் அண்டையில் இருக்கும், நூறு சதவிகிதக் கல்வியறிவு பெற்ற கேரளத்தில்தான் ஒரு மாணவியைச் சகோதரனும் தந்தையும் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் நடந்திருக்கிறது.

இத்தகைய சூழலில் என்ன செய்யலாம் என்று சிந்தித்தோமானால், பெண் குழந்தை, ஆண் குழந்தை என்ற பேதமின்றிப் பெற்றோர் வளர்ப்பதிலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது. ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் வாங்கிக் கொடுக்கும் விளையாட்டுப் பொருட்களிலும் அவர்கள் செய்யும் வீட்டு வேலைகளிலும் கூடப் பேதம் கற்பிக்கப்படுகிறது. இது முற்றிலும் களையப்பட வேண்டியது. பெண்ணைச் சக உயிரியாகப் பார்க்கும் தன்மையை வீடு, பள்ளி என எல்லா இடத்திலும் ஆணின் மனத்தில் புகுத்த வேண்டிய தேவை இருக்கிறது. உடல் சார்ந்து மட்டுமான அவனது பார்வையை மாற்றவேண்டிய நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக எடுக்க வேண்டும். நடைமுறைப் பொருத்தப்பாடற்ற நம் கல்விமுறை பிரதிகளுக்குள்ளேயே நம் குழந்தைகளைச் சிக்கச் செய்திருக்கிறது. அதிலிருந்து அவர்களை மீட்டு, அன்றாட நிகழ்வுகளை அவர்கள் அறியச் செய்து, அது பற்றி சிந்திக்கத் தூண்டி விவாதிக்குமொரு கல்வி முறை அறிமுகம் செய்யப்பட வேண்டும். அறிவியல் பாடங்களில் வரும் ஆண், பெண் உடற்கூறு பற்றிய தகவல்களை இயல்பாக அவ்ர்களுக்குப் போதிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். பெண்களின் மாதவிலக்கு சுழற்சி போன்ற கவனமாக, ஆனால் முக்கியமாக எடுக்க வேண்டிய பாடங்களை எடுக்காமலே தவிர்க்கும் ஆசிரியர்களை நானறிவேன். இது மிகத் தவறானது. பள்ளியில் பாலியல் கல்வி தேவையா? இல்லையா? என்பது பற்றிய சர்ச்சையே இன்றைக்கும் முடிவடையாமல் இருக்கிறது. பாலியல் கல்வியின் அவசியம் உணர்வதுடன் அதற்கான பாடத்திட்டத்தை மிகக் கவனத்துடன் உருவாக்க வேண்டிய நிலையில் இன்னும் தேவையா என்ற கேள்வியிலேயே நம் கல்வித்துறை சுழன்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மாணவர்கள் தவறான வழியில் பாலியல் சார்ந்த அரைகுறை அறிவைப் பெறுவது சிக்கலை மேலும் இறுக்குவதை யாரும் கவனத்தில் கொள்ளுவதில்லை. ஆண், பெண் இருவருமே தன் உடல் பற்றிய சரியான புரிதலைப் பெற வேண்டும். ஆண், பெண்ணுக்கிடையிலான நட்பு சமூகத்தால் வரவேற்கப்பட வேண்டும். ஆண்களுக்கும் பெண்களுக்குமான தனிப் பள்ளிகள் இழுத்து மூடப்பட்டு, இரு பாலர் பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும். இருவரும் சேர்ந்து பழகும் இனிய சூழலில் இயல்பான நட்பை அவர்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். அது சார்ந்த உரையாடல்களை பெற்றோரும் ஆசிரியர்களும் உருவாக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டும். உடல் நலம், வலிமையான உடல், மனம் சார்ந்த பயிற்சிகளைப் பள்ளியில் கட்டாயமாக்க வேண்டும். இன்றைக்கும் விளையாட்டு பீரியடில் பாடங்களை நடத்துவதும் பெண்களுக்கு மட்டும் விளையாட்டு மறுக்கப்படுவதும் பல பள்ளிகளில் நடக்கிறது. வாய்ப்பு இருப்பின் ஆர்வமுள்ள ஏதேனும் ஒரு தற்காப்புக் கலையை இரு பாலருக்குமே கற்பிக்கலாம். கற்பதைக் கட்டாயமாக்கலாம்.

ஆசிரியர்களுக்கும் ஆண், பெண் குழந்தைகளைப் பால் பேதமற்றுப் பார்க்கும் அறிவைப் புகட்டுவதோடு அவர்களுடைய இயல்பான உரையாடல்களை நோய்மையோடு பார்க்கும் முட்டாள்தனத்தையும் அகற்ற வேண்டும். மாணவப் பருவத்திலேயே ஆபத்துகளை எதிர்கொள்ளத்தக்க மனரீதியான வலிமை பெறத் தக்க பாடத்திட்டங்கள் இணைக்கப்பட வேண்டும். மாணவர் வாழ்நிலை, அவர்களுடைய குடும்பச் சூழல் பற்றிய தரவுகள் அரசால் சேகரிக்கப்பட்டு, அதை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கல்வித்துறைக்கும் பாடத்திட்டக் குழுவுக்கும் அரசின் இறுக்கமான கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, சுதந்திரமான அமைப்புகளாகச் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். கல்வித்துறைக்கு இன்னும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர் சூழல், உளவியல் சிக்கல்களுக்குத் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இப்படியான சம்பவங்கள் நடைபெறும்போது மேலோட்டமான ஆய்வுகள் செய்யப்படுவதும் நிவாரணத் தொகை அளிப்பதும் தண்டனைகள் அளிப்பதும் மட்டும் போதாது. அது புரையோடிப் போன புண்ணுக்கு மேலாகக் களிம்பு பூசுவதாகவே அமையும். அதை விடுத்து அரசு உண்மையான அக்கறையோடு, இளந்தலைமுறையிடம் அக்கறை செலுத்தும்போது மட்டுமே பெண்களைப் பற்றிக் காந்தியடிகள் கண்ட நனவாகும். இளம்பெண்ணொருத்தி நடுஇரவில் தனியாய்த் தன் வீடு திரும்பும் அளவுக்குச் சமூகம் நலமாக இருக்கும்போதுதான் ஆணும் பெண்ணும் இணைந்த ஒரு ஆரோக்கியமான, ஆதிக்கமற்ற சமூகம் உருவாகும்.
No comments:

Post a Comment