Thursday, February 16, 2012

பயன்தவா செய்வார் சிலர்

"திரைத்த விரிக்கின் திரைப்பின்நா வாய்போல்
உரைத்த உரையதனைக் கேட்டும் - உரைத்த
பயன்தவா செய்வார் சிலர்ஏதம் நெஞ்சத்து
இயன்றவா செய்வார் பலர்"
 
என்னும் இன்னிலையில் உள்ள பாடலொன்றைப் படித்தது ஒரு தற்செயல் 
 ஆகூழ்(அதிர்ஷ்டம்) என்றே கூறலாம். இது அறத்துப்பால், பொருட்பால், இன்பப்பால், வீட்டுப்பால் என்று நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அறத்துப்பாலில் 10 பாடல்களும் பொருட்பாலில் 9 பாடல்களும் இன்பப்பாலில் 12 பாடல்களும் வீட்டுப்பாலில் 14 பாடல்களுமாக மொத்தமே 45 பாடல்களைக் கொண்ட நூல். பொய்கையார் என்னும் புலவரால் எழுதப்பட்டது. எழுதியவர் பெயர்க் குழப்பம், பதினெண்கீழ்க்கணக்கு நூலில் உள்ளதா, என்னும் வழக்கமான குழப்பங்களுடனே இந்த நூலும் உள்ளது. அதைப் பிறகு பார்ப்போம்.

பாடலின் பொருட்சுவை, சொற்சுவை, நாம் இழந்த சொற்கள், சொல்லப்பட்ட உவமை என இந்தப்பாடலைப் படிக்கும்போதே என் மனத்திற்குள் போய் உட்கார்ந்து கொண்டது. பாய்மரத்தையும் காற்றின் திசை வழி செல்லும் பாய்விரிக்கப்பலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் மாலுமியையும் உவமையாகக் கொண்டு ஓர் அறிவுரையைக் கூறுகிறார் பொய்கையார். கடலிலே செல்லும் பாய்மரக்கப்பல் காற்றின் வழியில் விட்டாலோ தன் பாட்டில் போகும். பாயைச் சுருட்டி விட்டாலோ நின்ற இடத்திலேயே சுழன்று திரியும். ஆனால் அக்கப்பலில் ஒரு மாலுமி இருந்தால், அவன் காற்றின் திசையறிந்து, பாயை விரிப்பான். அவன் விரிப்பதையும் மடக்குவதையும் பொறுத்துக் கப்பல் செல்லும். தான் செல்லுமிடத்திற்கேற்ப, மாற்றியும் விரித்தும், சுருட்டியும் கப்பலை மாலுமி வழி நடத்துவான். காற்றின் திசைக்கேற்பப் பாய்மரமும் விதவிதமாகத் திருப்பப்படும்.

மாலுமி போன்ற சான்றோர், நம் வாழ்வெனும் கடலில் வெவ்வேறு விதமான சூழலாக வரும் காற்றைத் தம் அறிவுரையெனும் பாய்மரத்தைக் கொண்டு செலுத்துவர். பாய்மரம் எப்படி மாலுமியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ, அப்படிப் பெரியவர்கள் சொல்லும் அறிவுரையின் வழி நம் வாழ்வை நடத்தினால் நாம் வெற்றி பெறலாம் என்பது பாடலின் பொருள். பாடலுக்குள் சில நுணுக்கமான செய்திகள் இருப்பதைக் கவனித்தால் அதன் சுவை இன்னும் உயர்வதை உணரலாம். பாயை விரித்தால் கப்பல் செல்லுதல் இயற்கை. அறிவுரை கேட்டால் திருந்துவதும் இயற்கை. சான்றோர் சொல்லும் அறவுரைகளைக் கேட்டால் நன்றாக வாழலாம். பாயோ அஃறிணை. ஆறாமறிவினைப் பெற்றிருக்கும் மனிதனோ அந்த அஃறிணைக்கு இருக்கும் செயல்திறம் கூட இன்றி, சொல்லும் அறவுரைகளைக் கேளாமல் தீய வழியில் சென்று இடர்ப்படுகின்றனர்.

பாய்மரத்தை விரித்தல், குறுக்குதல் என்பது மனத்தைக் குறுக்குதல், விரித்தலையும் சுட்டும். காற்றின் சக்தியை மாலுமி தனக்கு உதவியாக்கிக் கொள்வான். கடினமான சூழல் தரும் அனுபவத்தை அறிவுடைய மனிதன் தன் வாழ்வுக்கான அறிவுரையாகப் பெற்றுக் கொள்வான். "தவா செய்வார் சிலர் அவா செய்வார் பலர்" என்னும் வரி பாடலின் உச்சம். காற்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் வீசிக் கொண்டே இருக்கிறது. பாய்மரம் தன் பாட்டில் இருக்கிறது. அப்படி அறிவுரை கூறுவது மட்டுமே நம் கடமை. அதை அவர்கள் கடைப்பிடிக்கிறார்களா இல்லையா என்றெல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அறிவுரையைச் சிலரே விரும்புவர் என்பதைச் சிலர்; பலர் என்ற சொற்களில் சொல்லும்போது அந்தக் காலத்திலும் இதே நிலைதானா என்று நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. உரைத்த உரையதனைக் கேட்டும் என்பதில் அந்த 'உம்' எவ்வளவு இகழ்ச்சியாக ஒலிக்கிறது?!

'நாவாய்' என்னும் ஒற்றைச் சொல் அதனோடு தொடர்புடைய மரக்கலம், தோணி, பரிசல், புணை, தெப்பம், படகு, கப்பல் எனப் பல சொற்களைக் கிளர்த்தியது. விரித்தல் என்பதற்கு எதிர்ச் சொல்லாக சுருட்டுதலை இன்றைக்குப் பயன்படுத்துகிறோம். அதைவிடச் சிறப்பாக திரைத்தல் என்ற சொல்லைப் புலவர் கையாள்கிறார். ஏதம் என்ற சொல் அண்மைக்காலத்தில் பயன்படுத்தப்படாத சொல். இடும்பை, துன்பம், இடர், ஏதம் ஆகியவை ஒரு பொருள் குறித்த சொற்கள். இன்றைக்கும் 'கேதம் விசாரித்தல்' என்று துக்கம் விசாரித்தலைக் கூறுவார்கள். இது பழந்தமிழ்ச்சொல் என்ற ஓர்மையின்றியே இச்சொல் தமிழகத்தின் தென்பகுதியில் வழங்கி வருகிறது. இவ்வளவு செய்திகளை இவ்வொற்றைப்பாடல் தெரிவிக்கிறது எனின் தமிழின் வளமையை எண்ணிப் பெருமைப்படலாம். 

ஆனால், சொல்லச் சொல்ல இனிக்கும் செழுந்தமிழின் குறைபாடுகளுள் முதன்மையானது, சரியான காலப்பதிவின்றி இருப்பது. நம் பெரும்பாலான இலக்கியங்களின் காலம், இயற்றியவர் பெயரில் குழப்பம் போன்றவை நம் தொன்மையைப் பேசுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்தப் பாடலும் கூடப் பொய்கையார் இயற்றியது என்ற தகவல் இருந்தாலும் சங்க காலத்தில் நற்றிணை (18), புறநானூற்றில் (48,49) எழுதிய பொய்கையாரா?, களவழி நாற்பது எழுதிய பொய்கையாரா?, ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வாரா? இவர்கள் யாருமல்லாது வேறொருவரா? என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இன்னிலை எழுதியவரும் பொய்கையாழ்வாரும் ஒருவரே என்று கூறுவாரும் உளர்.

"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணை
முப்பால் கடுகங்கோவை பழமொழி மாமூலம்
இன்னிலை காஞ்சியுடனே லாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு"

என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் பாடலில் இன்னிலையா, கைந்நிலையா என்னும் நூற்பெயர்க் குழப்பமும் உள்ளது. கைந்நிலை என்ற நூல் ஐவகை நிலத்தைப் பின்னணியாகக் கொண்டு புல்லங்காடனார் எழுதிய 60 பாடல்களைக் கொண்டது. இன்னிலை எனும் நூல் பொய்கையார் எழுதிய அறநூல். இவற்றுள் எது பதினெண்கீழ்க்கணக்கு நூல் என்பதில் இப்போதும் குழப்பம் உண்டு.

இன்னிலையே என்று வாதாடி அந்நூலைப் பதிப்பித்துத் தமிழ்ப்பணி புரிந்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையென்று சொன்னால் வியப்பாய் இருக்கும். வ.உ.சி யை விடுதலைப் போராட்ட வீரராக மட்டுமே தெரிந்தவர்களுக்கு ஒரு செய்தி. அவர் ஜேம்ஸ் ஆலன் எழுதிய நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்; தன் வரலாற்று நூலைச் செய்யுள் வடிவில் இயற்றியவர்; பல நூல்களை எழுதியுள்ளார். பதிப்புப் பணியிலும் தன் தனி முத்திரையைப் பதித்தவர். இவ்வாறு தமிழ் இலக்கிய உலகுக்கு அவர் செய்துள்ள தமிழ்ப்பணியை விரிக்கின் தனிக் கட்டுரையாகவே விரியும். ஒரே ஒரு பாடல் அழகிய உவமை, பழஞ்சொற்கள், தொடர்புடைய சொற்கள், அறவுரை, வரலாற்று ஆய்வு என் எத்தனைக் கருத்துகளை உள்ளடக்கியிருக்கிறது என்று சிந்தித்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. 


_


No comments:

Post a Comment