Thursday, February 18, 2010

வீழ்வேன் என்று நினைத்தாயோ?


– தி. பரமேசுவரி
நன்றி : தடாகம்.காம்


தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிகவுழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல – நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ ?



புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கழகத்தின் நுழைவு வாயில். ஆயுதம் ஏந்திய போலீசாரின் கூட்டம். 57- ஆம் எண் அறைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்கும் நம்மைத் துளைக்கும் சந்தேகக் கண்கள். ஏகப்பட்ட கேள்விக் கணைகள். எல்லாவற்றையும் கடந்து அறைக்குள் நுழைந்தால், மிக மெலிந்த தேகத்துடன் துவண்ட நிலையில் ஓர் இளம்பெண் படுத்திருக்கின்றார். கூர்மையான கண்கள், அழுக்கடைந்த சிக்கான தலைமுடி, மூக்கைச் சுற்றிப் போர்வைக்குள் சுருண்டிருக்கும் உடல் அவர்தான் இரோம் ஷர்மிளா சானு.



ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து பள்ளி இறுதியைக் கூட முடிக்காத இளம் பெண்ணாக இருந்தாலும் கூட தன் வாழ்நாளிலேயே சகாப்தமாகி விட்ட இவரை ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை என்பது மிகவம் வேதனைக்குரிய செய்தி. இந்த இளம்பெண்ணின் போராட்டம் மட்டும் இந்தியாவின் வேறு பகுதிகளில் நடைபெற்றிருந்தால் பெரும் எழுச்சி ஏற்பட்டிருக்கும். ஆனால் இந்தியாவின் கவனிக்கப்படாத பகுதிகளில் ஒன்றான மணிப்பூரில் இந்தப் போராட்டம் நடைபெற்றதால் ஒன்பது வருடமாகத்தொடர்ந்து உண்ணா நோன்பிருக்கும் இந்தப் பெண்ணின் மன உறுதி இன்று வரை பல இந்தியர்களாலேயே அறியப்படாத நிலையில் உள்ளது.



விடுதலை பெற்ற காலகட்டத்தில் இருந்தே மணிப்பூரில் தனி நாடு கேட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 40 தீவிரவாதக் குழுக்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் உள்ளது. இவர்களின் தீவிரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 1948 – என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது நடுவண் அரசு. இந்தச் சட்டத்தின் மூலம் தீவிரவாதிகள் என்று சந்தேகப்படும் யாரையும் கைது செய்யவும், விசாரணை இன்றிச் சிறையில் தள்ளவும் ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தினால் தண்டிக்கப்பட்ட தீவிரவாதிகளை விடவும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் ஏராளம்.



ஒரு கவிஞராகவும் யோகக் கலை வல்லுநராகவும், ஓவியராகவும் அமைதியாக வாழ்ந்த ஷர்மிளாவின் வாழ்வில் 2000-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் நாள் ஒரு பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. மணிப்பூரில் உள்ள ‘மலோம்” என்ற இடத்தில் அமைதிப் பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் ஷர்மிளாவும் கலந்து கொள்வதாக இருந்தார். ஆனால் அவர் அங்கு வந்த போது அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினர் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியதற்குப் பழிவாங்கச் சுட்டதில் அப்பாவி மக்கள் 10 பேர் இறந்து போனார்கள். இந்தக் கொடுமைக்குப் பொறுப்பேற்க வேண்டிய இராணுவமோ மிகச் சாதாரணமாக, ‘இது தவறுதலாக நிகழ்ந்துவிட்ட சம்பவம்.... ஓநாய் வேட்டையில் சில ஆடுகளையும் பலி கொடுக்கத்தான் வேண்டும்” என்று கூறியது. இயல்பாகவே மென்மையான மனம் படைத்த ஷர்மிளாவை இந்தச் சம்பவம் வெகுவாகப் பாதித்தது. இந்தச் செயலை எதிர்த்துப் போராட நினைத்தார் ஷர்மிளா. தனது தாயிடம் ஆசி பெற்று, துப்பக்கிச் சூடு நடைபெற்ற இடத்துக்குச் சென்று, இறக்கும் வரை உண்ணாநோன்பினைத் தொடங்கினார். ‘ஆயுதப் படையினருக்குத் தேவைக்கு அதிகமாக அதிகாரங்களை வழங்கும் “ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் - 1958 ஐ நீக்க வேண்டும்” என்பதே அவரது கோரிக்கை. இந்த உண்ணாநோன்பினைத் தொடங்கிய போது அது ‘மாரத்தான் உண்ணாவிரதமாக” வரலாற்றில் பதிவு செய்யப்படும் என்பதை அவரே நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். ஏன்? அந்த நேரத்தில் இவர் செயலை விமர்சித்தவர்களும் எள்ளி நகையாடியவர்களும், இவருடைய தன்னம்பிக்கையையும் உறுதிப்பாட்டையும் சந்தேகித்தவர்களும் கூட, இவர் இந்த அளவுக்குப் போராட்டத்தைத் தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார் என்று கருதவில்லை.


இராணுவத்துக்கு எதிராக உண்ணாநோன்பு தொடங்கிய மூன்றாவது நாளே தற்கொலை முயற்சி வழக்கின் கீழ் அரசால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் ஷர்மிளா. சிறையில் அடைபட்டும் தன் உண்ணா நோன்பினை அவர் கைவிடவில்லை. நவம்பர் 21 ஆம் தேதி அவருக்கு வலுக்கட்டாயமாக நாசி மூலம் உணவு கொடுத்து உண்ணா நோன்பினை முறியடிக்கும் முயற்சி தொடங்கியது. தொடர்ந்து ஒன்பது வருடங்களாகத் திரவ உணவு ரப்பர் டியூப் மூலம் நாசித் துவாரம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. விட்டமின்கள், புரதச் சத்து, மினரல்கள் என உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துப் பொருட்களும் திரவ வடிவிலேயே செலுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் வருடக் கணக்கில் உணவு உண்ணாத காரணத்தால் ஷர்மிளாவின் நாடித் துடிப்பு குறைந்துவிட்டது. கால்சியம் குறைபாட்டால் எலும்புகளும் வலுவிழந்து விட்டன. எனவே நகரக் கூட முடியாமல் தவழ்ந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளது அவரது உடல் நிலை.


அண்மையில் அக்டோபர் 2-ஆம் நாள், காந்தி ஜெயந்தி அன்று விடுதலை செய்யப்பட்டார் ஷர்மிளா. அவருடைய ஆதரவாளர்கள் அவரை இம்பாலிலிருந்து புது தில்லிக்கு யாருமறியாமல் கடத்திச் சென்றனர். தில்லியில் இருக்கும் மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திய ஷர்மிளா, பாராளுமன்றத்துக்கு அருகில் இருக்கும் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் தன் உண்ணா நோன்பினைத் தொடங்கினார். அதற்குப் பிறகு தான் இந்தச் செய்தி – மாபெரும் போராட்டம் - மக்களால் அறியப்பட்டது. நாடெங்கும் ஷர்மிளாவுக்கு ஆதரவுக் குரல்கள் பெருகத் தொடங்கி உள்ளன.


கடந்த ஆறு வருடங்களாக இவரது தாய் இவரைப் பார்க்கவேயில்லை. “எனது கண்களில் இருந்து வடியும் கண்ணீர் எனது மகளின் மன உறுதியைப் பாதித்து விடக்கூடாது. எனவே நான் அவளைப் பார்க்க மாட்டேன் “ என்று கூறுகிறார் இந்தத் தாய். இத்துணை வேதனைக்கும் இடையில் ஷர்மிளாவின் உண்ணா விரதம் தொடாந்து கொண்டே இருக்கிறது. லண்டனின் பி.பி.சி. நிறுவனமானது ஷர்மிளாவின் மாபெரும் உண்ணா நோன்புப் போராட்டத்தைப் பற்றியும் மோசமாகி வரும் அவது உடல்நிலை பற்றியும் செப்டம்பர் 19, 2006 அன்று ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அவருடைய உள் உறுப்புகள் பலமிழந்து வருவதையும் , எலும்புகள் வலுவிழந்து இருப்பதையும் குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவனத்துக்கு ஷர்மிளா அளித்த பேட்டியில் “இது எனது சொந்தப் போராட்டம் அல்ல; இது உண்மை, அன்பு, அமைதியின் அடையாளம்” என்று கூறியிருக்கின்றார்.


ஷர்மிளாவின் உடல்நிலை அபாயகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் உண்ணா நோன்பினைத் தொடாந்தால் அவரது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று ஷர்மிளாவுக்குச் சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். காந்தியச் சிந்தனைகளில் மிகுந்த பற்றுக் கொண்ட ஷர்மிளா “இன்று மகாத்மா காந்தி உயிருடன் இருந்திருந்தால் தேசிய அளவில் இச்சட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடங்கி இருப்பார்” என்று கூறுகிறார். இவருடைய போராட்டத்துக்கு இவரது குடும்பத்தினர் முழுமையான ஆதரவினைத் தந்துள்ள அதே வேளையில் சொல்லொணத துயரத்தையும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர். அவருடைய சகோதரரின் அரசுப் பணி பறிக்கப்பட்டது. குடும்பச் சொத்துகளையும் இழந்து பணியின்றித் தவிக்கும் சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்கொலை என்பது கோழைத்தனமான முடிவு. ஆனால் மக்களின் நன்மைக்காக உண்ணாநோன்பிருக்கும் ஷர்மிளாவின் மீது தற்கொலை வழக்கினைப் பதிவு செய்கிறது அரசு. இன்றியமையாத இப்பிரச்சினையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லக் காந்திய வழியில் போராடும் ஷர்மிளாவின் போராட்டத்தைச் சட்ட விரோதம் என்று அரசு கருதுகிறது. தன்னுடைய நிலையில் இருக்கும் தவறினை உணர்ந்து அரசு ஷர்மிளாவின் போராட்டத்துக்குச் செவி சாய்க்க வேண்டும். மணிப்பூர் மக்களின் வேதனை நீங்க வேண்டும் என்பதே இப்போராட்டத்தைக் கவனித்து வரும் மக்களின் பிரார்த்தனையாகும்.

1 comment:

  1. வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    ReplyDelete