Tuesday, March 16, 2010

தலைநகரை மீட்ட தலைவர்!

நன்றி : தினமணி 29.01.2010
சென்னை ஆயிரம் விளக்கின் சால்வான் குப்பத்தில், எளிய குடியில் பிறந்தாலும், அயராத உழைப்பால், ஆற்றலால் ஏற்றம் பெறலாம் என்பதை உணர்த்தியவர் ம.பொ.சி. என்றழைக்கப்படும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம். சித்தாள், நெசவுத் தொழிலாளி, அச்சுத் தொழிலாளி என வாழ்வியல் நிமித்தம் பல்வேறு தொழில்களைச் செய்தார்.

காந்தியத்தின்பால் ஈர்க்கப்பட்டு 1927-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்த ம.பொ.சி. உப்புச் சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டார். கள் இறக்கும் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தாலும், சென்னைப் பெருநகர மதுவிலக்கு குழுச் செயலராகப் பொறுப்பேற்றுத் தீவிரப் பிரசாரம் செய்த காரணத்தால் தன் ஜாதி மக்களின் பகையைத் தேடிக்கொண்டார்.

ஆகஸ்ட் கிளர்ச்சி தொடங்கி, "வெள்ளையனே வெளியேறு' என்ற முழக்கம் நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கிய காலம். ம.பொ.சி.யும் போராட்டத்தில் ஈடுபட்டு, 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் நாள் கைதாகி, இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் வைக்கப்பட்டு, பின்னர் ஆகஸ்ட் 30-ம் நாள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமராவதி சிறையில் வி.வி.கிரி, கு. காமராஜ், முத்துரங்க முதலியார், சத்தியமூர்த்தி ஐயர், சஞ்சீவ ரெட்டி போன்ற தலைவர்களுடன் அடைக்கப்பட்டார்.

சிறை வாழ்க்கையில் இலக்கியம் பயின்று, அதன்வழி தன் அரசியல் சிந்தனைகளைச் செம்மையாக வளர்த்தெடுத்தவரின் உள்ளம் இந்திய விடுதலையோடு இன உணர்வையும் இணைத்துப் பார்த்தது. சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும், பாரதி பாடல்களும் அவருக்குத் துணை நின்றன. புதிய தமிழகம் படைக்கும் எழுச்சியுடன் 1946-ம் ஆண்டு நவம்பர் 21-ம் நாள் தமிழரசுக் கழகத்தைக் காங்கிரசுக்குள் இருந்தபடியே ஒரு கலாசார இயக்கமாகத் தோற்றுவித்தார்.

1947-ம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இனங்களும் கிளர்ந்தெழுந்த காலகட்டத்தில், இந்தியாவில் இருந்த பிறமொழி வழி இனத் தலைவர்கள், தங்களுக்கென இன மொழி வளர்ச்சிக்காகத் தனி மாநிலக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களைத் தொடங்கினர். ஆனால், தமிழகத்தில் மொழிவாரி தனியரசு கோர ஓர் இயக்கமில்லை. எல்லைப் பகுதிகளைக் காக்கவும் மீட்கவும் எந்தத் தலைவரும் முயற்சிக்கவில்லை. திராவிடத் தனிநாடு கோரியவர்களும்கூட அதற்கென எந்த முயற்சிகளையும் முன்னெடுக்காத வேளையில், தமிழ் இன உணர்வாளர்களும் தேசிய வாதிகளும் பிளவுபட்டிருந்த நேரத்தில், தமிழின உணர்வும் உரிமையும் தேச ஒருமைப்பாடும் வேறுவேறல்ல என்பதைத் தேசியத் தலைவர்களுக்கும் பிரிவினைச் சக்திகளுக்கும் உணர்த்தும் வகையில் "உரிமைக்கு எல்லை வேங்கடம்; உறவுக்கு எல்லை இமயம்' என்று முழங்கித் தேச உணர்ச்சி, மொழி உணர்ச்சி என்ற இரண்டையும் வளர்த்தெடுத்தார் ம.பொ.சி. அவரின் இந்த முழக்க எல்லைப் போர், மொழியுரிமைப் போர், மாநில சுயாட்சிப் போர் என்ற எல்லாவற்றுக்குமான சூத்திரம், இதையே, "சுயாட்சித் தமிழகம்' படைக்கும் தேவைக்கான கொள்கையாகவும் எடுத்துரைத்தார்.

1956-ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் தமிழகம் தனி மாநிலம் ஆனது. முன்னதாக பொட்டி ஸ்ரீராமுலு என்கிற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் உண்ணாவிரதம் இருந்து ஆந்திரப் பிரிவினையைக் கோரினார். சென்னையில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்த புலுசு சாம்பமூர்த்தி என்ற ஆந்திரத் தலைவரின் இல்லத்தில் தனது உண்ணாவிரதத்தை 1952-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் நாள் தொடங்கினார். ஆந்திரத் தலைவர்களான பிரகாசம், புலுசு சாம்பமூர்த்தி போன்றோர் அவரை ஆதரித்தனர்.

சென்னையைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் அமைய வேண்டும் என்பதே அவர்தம் கோரிக்கை. "மதராஸ் மனதே' என்ற முழக்கத்தோடு பட்டினி கிடந்த ஸ்ரீராமுலுவைக் காணச்சென்ற ம.பொ.சியிடம் பிரகாசம், ஸ்ரீராமுலுவின் உயிரைக் காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்று கோர, அதற்கு ம.பொ.சி., ""சென்னை நகர் மீது உரிமை கொண்டாடுவதை விட்டு ஆந்திர மாநிலம் கோரினால், தமிழரசுக் கழகம் ஆந்திரர்களுடன் பூரணமாக ஒத்துழைக்கும்'' என்று பதிலிறுத்தார். பிரகாசம் விடாமல், ""ஆந்திர அரசு தாற்காலிகமாகவேனும் சென்னையிலிருக்க அனுமதித்தாலும் போதும். விசால ஆந்திரம் அமையும்போது எங்களுக்கு ஹைதராபாத் கிடைத்துவிட்டால் நாங்கள் போய்விடுவோம். இதற்கு நீங்கள் இசைந்துவிட்டால், மற்றவர்கள் எதிர்க்க மாட்டார்கள்'' என்று கூறியபோதும், கொடாக் கண்டராய், ""ஆந்திர அரசுக்குத் தாற்காலிகமாகச் சென்னையில் இடமளிக்க மற்றவர்கள் இசைந்தாலும், நான் இசைய மாட்டேன்'' என்று உறுதியாகக் கூறிவிட்டுத் திரும்பினார்.

1952-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்த நிலையிலேயே உயிர் துறந்தார். அப்போது ஆந்திரத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்ந்து மூன்று நாள்கள் நீடித்தது. நிலைமை மேலும் மோசமாகக் கூடுமென்ற அச்சத்தால், ஆந்திர மாநிலம் 2-10-1953 அன்று பிரிக்கப்படுமென்று நாடாளுமன்றத்தில் நேரு அவசரமாக அறிக்கை வெளியிட்டார். "சென்னை நகரம் அல்லாத தகராறுக்கு இடமில்லாத - தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு - சித்தூர் மாவட்டம் முழுவதையும் சேர்த்து ஆந்திர மாநிலம் அமையும் என்றும், தலைநகர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், நேரு தம் அறிவிப்பில் விளக்கியிருந்தார்.

சித்தூர் மாவட்டத்தின் தெற்கேயுள்ள பகுதிகள் தமிழகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே தமிழரசுக் கழகம் கோரிவந்த நிலையில், சித்தூர் ஆந்திரத்தில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும் , பிரகாசம் மீண்டும், "சென்னையை இரு பகுதியாகப் பிரித்துக் கூவத்தை நடுவில் வைத்து, வட சென்னையை ஆந்திரத்துக்கும் தென் சென்னையைத் தமிழ்நாட்டுக்குமாகப் பங்குபோட வேண்டும் அல்லது சென்னை நகரம் ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொது நகராகச் செய்ய வேண்டும்' என்று அறிக்கை விட்டதும் தமிழகத்தின் நிலையைக் கேள்விக்குள்ளாக்கியது.

அப்போது சென்னை மாநகராட்சியின் ஆல்டெர்மேனாக இருந்த ம.பொ.சி., "தன் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போதைய சென்னை மேயர் செங்கல்வராயனின் உதவியுடனும், தமிழக முதல்வர் ராஜாஜியின் ஆதரவுடனும் திருவல்லிக்கேணி கடற்கரையில் கட்சி சார்பற்ற நிலையில், ராஜாஜி, பெரியார், எஸ்.எஸ். கரையாளர், பக்தவத்சலம் போன்ற தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தை நடத்தினார்.

அத்துடன் உள்துறை அமைச்சர் லாலபகதூர் சாஸ்திரிக்குத் தமிழ்நாடு முழுவதுமிருந்து தந்திகள் அனுப்பவும் ஏற்பாடு செய்தார். மேலும் மாநகராட்சியின் சிறப்புக்கூட்டத்தைக் கூட்டச் செய்து "தலைநகரம் தமிழருக்கே' என்பது பற்றிய தீர்மானத்தையும் கொண்டுவந்தார். நீண்ட விவாதத்துக்குப் பின்னர், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தந்தி வடிவில் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், சென்னை மாநில முதல்வர் ஆகியோருக்கு மேயரால் அனுப்பப்பட்டது. கடைசியாக 25-3-1953 அன்று தில்லி நாடாளுமன்றத்தில் நேரு, மத்திய அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமான பிரகடனம் ஒன்றை வெளியிடுகையில் "ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர நாட்டின் எல்லைக்குள்ளேயே இருக்கும்' என்று அறிவித்தார்.

தலைநகரைக் காப்பாற்ற உறுதுணையாய் நின்ற தலைவர்கள்கூடத் தமிழ்நாட்டின் எல்லைப் பிரச்னையில் ம.பொ.சி.க்கு கை கொடுக்கவில்லை. ஆனால், தமிழகத்தின் வடக்கெல்லை, தெற்கெல்லை மீட்பில் ம.பொ.சி.யின் பங்களிப்பை வரலாறு உணர்த்தும். "தமிழ்நாடு' என்ற பெயர் சூட்டவும் பயிற்சி மொழியாகத் தாய் மொழியாம் தமிழ் மொழியே இருக்க வேண்டும் என்றும் அறப்போர் நடத்தினார். அவர்ஆல்டெர்மேனாக இருந்தபோதுதான் ஆங்கிலேயர் வடிவமைத்திருந்த சென்னை மாநகராட்சியின் கொடியை மாற்றி, சேர,சோழ,பாண்டியரின் வில், புலி,மீன் ஆகியவற்றைப் பொறித்தார். மாநகராட்சியின் வரவு-செலவுக் கணக்கை முதன்முதலாகத் தமிழிலே தாக்கல் செய்தார்.

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, தமிழகத்தில் பிற மொழியினர், தமிழ் இலக்கியத்தில் இனவுணர்ச்சி, விடுதலைப் போரில் தமிழகம், சிலப்பதிகாரத் திறனாய்வு போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் அவருடைய இலக்கியப் பங்களிப்பை நமக்கு உணர்த்தி நிற்கும்.
2006-ல் ம.பொ.சி.யின் நூற்றாண்டு விழா நடைபெற்றபோது, தமிழக முதல்வர் கருணாநிதியால் ம.பொ.சி.யின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது சந்ததியினருக்கு 20 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும் 2006 ஆகஸ்ட் 15 அன்று ம.பொ.சி.யின் உருவம் பொறித்த அஞ்சல் தலை ஒன்றும் முதல்வரால் தலைமைச் செயலகத்தில் வெளியிடப்பட்டது.
நூற்றாண்டு விழா மேடையில் முதல்வர் அறிவித்த "சென்னையில் ம.பொ.சி.யின் சிலை அறிவிப்பு' மட்டும் ஏனோ இன்றுவரையிலும் நிறைவேற்றப்படவில்லை.

இதே போராட்டத்தில் ஈடுபட்டுத் தம் நோக்கத்தில் வெற்றி அடையாத பொட்டி ஸ்ரீராமுலு, "அமரர் ஜீவா' என்று இன்றளவும் ஆந்திர மக்களால் போற்றப்படுகிறார்.
அவர் உண்ணாவிரதம் இருந்த ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள புலுசு சாம்பமூர்த்தியின் இல்லம் ஆந்திர அரசால் நினைவிடமாகப் பாதுகாக்கப்படுகிறது. 2000-ம் ஆண்டு மார்ச் 16-ம் நாள் அவர் நினைவாக அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது.

"பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகம்' ஹைதராபாதில் நிறுவப்பட்டுள்ளது. நெல்லூர் மாவட்டத்தை 2008 ஜூன் மாதம் "ஸ்ரீபொட்டி ஸ்ரீராமுலு நெல்லூர் மாவட்டம்' என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர். இப்போராட்டத்தில் அவருக்கு ஆதரவாக நின்ற பிரகாசம் பெயராலும் ஆந்திரத்தில் தனி மாவட்டம் உள்ளது. நாடாளுமன்றத்திலும் சிலை அமைத்துள்ளனர். சென்னையின் முக்கியமான பகுதியிலே பிரகாசம் சாலை என்று அவர் பெயரால் சாலை அமைக்கப்பட்டுள்ளதுடன், பொட்டி ஸ்ரீராமுலு, பிரகாசம் இருவருக்கும் சென்னையிலேயே சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

ஆனால், சென்னை தமிழகத்தில் நிலைத்திருப்பதற்குப் பெரும்பங்காற்றிய ம.பொ.சி.க்குச் சென்னையில் சிலை இல்லை. முதல்வர், தாம் அறிவித்தபடி சென்னையின் முக்கியமான சாலை ஒன்றில் ம.பொ.சி.யின் சிலையை நிறுவுவதுடன் "ரிப்பன் மாளிகை' க்கும் ம.பொ.சி. மாளிகை என்று பெயர் சூட்ட வேண்டும் என்பதே தமிழார்வலர்களின் கோரிக்கை.


கருத்துக்கள்
It is a must. Act soon and ensure perpetual/permanent memory of our great leader Ma.Po.Si at least now. We still remember his valuable deeds.
By M.V.Varadharajan. 2/2/2010 4:21 AM
ma po si paethi.......neenga romba late........
pradeep 1/30/2010 7:57:00 PM
TAMIZHAN ENDRU SOlLADA TALAI NIMIRNDHU NILLADA
By RASA 1/30/2010 8:03:00 AM
"உரிமைக்கு எல்லை வேங்கடம்; உறவுக்கு எல்லை இமயம்" என்று முழங்கியிருக்கிறார் ம.பொ.சி. நாமோ திருப்பதியைத் தாரை வார்த்து விட்டு உட்கார்ந்திருக்கிறோம். (இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்ததைப் போல). தெலுங்கானா பிரச்சினை தலையெடுத்திருக்கும் இவ்வேளையில் நாம் கொஞ்சம் அசந்து இருந்தால் எல்லையோர மாவட்டங்களை அவர்கள் அபகரிக்க வாய்ப்பு உள்ளது. உஷாராக இருப்போம். எஞ்சி இருப்பதையாவது காப்போம்.
By சரவணன், சென்னை 1/29/2010 2:52:00 PM
Nice Article! சிலைவைத்து மா.போ.சி அய்யா அவர்களை பெருமைபடுதுவதை விட அவர் காட்டிய மொழி பற்றையும் நாடு போற்றியும் மக்களுக்கு எடுத்து செல்லுதல் அவசியம்! சிலை வைத்தால் பெருமை என்று யார் சொன்னது, உத்தர்பிரதேஷ் இல் மாயாவதி அமைத்திருக்கும் சிலைகளால் சிறுமையே!
By indian 1/29/2010 10:57:00 AM
IT IS LATE.....CONGREES MEN ARE ALWAYS SLEEPING AND DANCING WITH D M K .......IT IS THE DUTY OF CONGREES TO STEPUP THE MATTER
By avudaiappan 1/29/2010 8:01:00 AM
தி.பரமேஸ்வரி அவர்களின் கட்டுரையில் எழுப்பபட்டுள்ள கோரிக்கை மிகவும் நியாயமானதுமட்டுமல்ல, மிகவும் முக்கியமானதும் ஆகும். திரு.மா.பொ.சி. அவர்கள் போராடாமல் இருந்திருந்தால் இன்றைய தமிழகம் சென்னையை இழந்திருக்கும் என்பது நிச்சயம். ஆனால் தமிழகத்தின் துரதிருஷ்டம் கருணாதிக்கு தன் குடும்பமே சரித்திரத்தில் எல்லாரையும்விட முன்னிலை வகிக்கவேண்டும் என்கிற பேராசையால், மற்ற முக்கிய பெருந்தலைவர்கப்பற்றி யோசிக்கவும் வாய்ப்பில்லை அவர்கள் பெயரையோ சிலையையோ நிலைக்க வைக்க இடமிருக்காதே? என்ன செய்வது? மா.பொ.சி போன்றவர்களின் தியாகம் மு.க.போன்ற துரோகிகளைத்தானே வளர்த்துள்ளது. என்ன செய்வது?
KRISHNAN 1/29/2010 6:28:00 AM
தமிழ் உணர்வுகொண்ட ஒரு தேசிய தலைவன் ம.பொ.சி.""நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ((கொஞ்சம் ம.பொ.சி க்கும்)"" பாய்ந்தால் நல்லது.எல்லாம் தன குடும்பத்துக்கே என்கிற ஏகபோகம் கொஞ்சம் ம.பொ.சி. விஷயத்தில் குறைத்துக்கொண்டால் நாங்கள் மகிழ்வோம் கலைஞரே .எஸ் ஆர்.சேகர்.
By sr.sekhar 1/29/2010 5:54

No comments:

Post a Comment