Monday, May 13, 2013

சித்ராவும் கடவுளும் தனிமையும்



நன்றி: தினமலர் பெண்கள் மலர்.


கைகள் மேசையில் இருந்த கோப்புகளை அடுக்கிக் கொண்டிருந்தாலும் சித்ராவின் கண்கள் கடிகாரத்துக்குச் சென்று மீண்டது. மணி 5.30 ஆச்சா.. அப்ப எல்லாத்தையும் எடுத்து வைக்க வேண்டியதுதான் மனசுக்குள் நினைத்துக்கொண்டே அந்த அலுவலகத்தின் கழிவறைக்குப் போனாள். அவளைப் போலவே இன்னும் பலர் நிற்பதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள். மனசுக்குள், செய்ய வேண்டிய வேலைகள் ஒரு முறை வந்து போனது.

துணி துவைக்கணும்.. மூணு நாள் துணி, சேர்ந்து போயிருக்கு. போகும்போதே காய்கறி பால் எல்லாம் வாங்கிட்டுப் போகணும். காலையில் இஸ்திரி போடக் கொடுத்த துணியை வாங்கி வைக்கணும்.. தையல்காரர் ஜாக்கெட் தைச்சி முடிச்சிருந்தா அதிர்ஷ்டம்.. நாளைக்கு வெள்ளிக்கிழமை.. புதுப்புடவை கட்டிட்டுப் போகலாம் மனத்தின் அலைவரிசையில் எண்ணங்கள் ஒரு பக்கம் ஊர்வலம் போய்க்கொண்டிருக்க, தெரிந்த முகங்களுக்கு ஒரு புன்னகையைப் பரிசளித்து, முகம் கழுவிக்கொண்டு தன் இருக்கைக்கு வந்தாள். பையை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாகப் பேருந்து நிலையத்திற்குப் போனாள். திரும்பிப் திரும்பிப் பார்த்துத் தன் பேருந்துத் தோழி சுபாவைத் தேடிக்கொண்டிருக்கும்போதே, PP66 மூச்சுத் திணறலின் முனகல் சப்தத்தை வெளியிட்டபடி வந்து நின்றது.

இரு புறமும் பேருந்துகள் நிறையத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இவ்வளவுநேரம் இந்தக் கூட்டம் எங்கேதான் இருந்ததோ என்று புலம்புமளவுக்கு முட்டித்தள்ளிக்கொண்டு ஏறினர். சித்ராவுக்குச் சற்றே படபடப்பாக இருந்தது என்றாலும் எப்படியோ முண்டித்தள்ளி ஏறி, ஒரு இருக்கையைப் பிடித்து உட்கார்ந்தாள். கடவுளின் ஆசீர்வாதம் அன்றைக்கு முழுமையாக இருந்தது என்று நினைத்தாள்; அது ஜன்னலோர இருக்கை. படபடப்பு குறைந்து, காதில் வாக்மேனைச் செருகினாள். சுதா ரகுநாதனின் குறையொன்றுமில்லை மனத்தை மெல்ல இயல்புக்குக் கொண்டு வருவதை உணர்ந்தபடியே குறையொன்றுமில்லைன்னு சொல்லியேதான் நம் குறைகளை மறக்கணும்போல என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

நடத்துநர் கிட்டே வந்து விட்டிருந்தார். பூந்தமல்லி என்று சொல்லிச் சில்லறை கொடுத்தாள். அவ்வப்போது பார்ப்பதால் ஏற்பட்ட பரிச்சயத்தில் அவள் சொல்லுமுன்னாலேயே சீட்டைக் கிழித்துக் கையில் கொடுத்துவிட்டுச் சில்லறையைப் பையில் போட்டபடியே கூட்டத்தைப் பொருட்படுட்தாமல் முன்னால் நகர்ந்தார்.

காது பாட்டுக்குள் ஆழ்ந்துபோக, குளத்தில் எழும் வட்ட வட்ட அலைகளைப் போல மீண்டும் மனத்துள் வீட்டு வேலைகள் நினைவுக்கு வர, முதலாவது அடுத்தது என்று வரிசைப்படுத்தத் துவங்கினாள். நிறுத்தம் வருவதற்குச் சற்று முன்னரே எழுந்து மெல்ல மெல்ல நகர்ந்து படிக்கட்டுக்கருகே உள்ள கம்பியைப் பிடித்து நின்றாள். ஒரு குலுங்கலுடன் நின்ற பேருந்திலிருந்து மலர் உதிர்வது போல இறங்கினாள். ரொம்பக் களைப்பாக இருந்தது. கைப்பையை எடுத்துத் திரும்பி மாட்டிக்கொண்டு, கையிலிருந்த பெரிய பையில் இருந்த அலுவலகக் கோப்புகள் சிலவற்றை ஓரமாக நகர்த்திவிட்டுக் கீழே காய்கறி வாங்க வைத்திருந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து மேலே வைத்தபடி நகர்ந்தாள்.
சித்ராவின் உடலில் இரும்புக்குண்டு வைத்துக் கட்டியதுபோல வலித்தது. பை கனத்தது. வீட்டுக்குப் போக ஆட்டோ வைத்துக் கொள்ளலாமா என்ற யோசனையை உடனே புறந்தள்ளியவளாய்க் களைத்துப்போன கால்களை மெல்ல அடியெடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தாள். சூரியன் விழுந்துவிட்டது. பத்து நிமிட நடையில் வீடு என்றாலும் நடக்க நடக்க வீடு இன்னும் தள்ளித் தள்ளிச் செல்வதுபோலத் தோன்றியது. மூச்சு வாங்கியது. நாக்கு வறண்டது. உடலெங்கும் வியர்வைக் கசகசப்பு. காய்கறிக் கடையில் சுமைப்பையை இறக்கி வைத்து ஆசுவாசத்துடன் அடுத்தநாள் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை மட்டும் வாங்கிக்கொண்டாள். அடுத்த ஐந்துநிமிட நடையில் ஆவின் பால்கடை. பெரியவருக்கு அவள் மேல் கொஞ்சம் கரிசனம். வாடிய முகத்துடன் வரும் அவளிடம் கனிவுடன் விசாரிப்பார். பால் வாங்கிக்கொண்டு மெதுவாக நடையைத் தொடர்ந்தாள். இதோ ஆரஞ்சு வீடு.. இன்னும் கொஞ்சதூரம்தான்.. நாடார் கடையும் வ்ந்துருச்சு.. தனக்குத்தானே ஆறுதல் சொல்லியவளாய்த் தான் குடியிருக்கும் நீல வண்ண வீட்டைக் கண்டதும் அப்பாடா, கொஞ்சசேரம் தரையில் அப்படியே படுத்துரணும் என்று நினைத்தபடி படியேறினாள். பையில் எப்போதும் சாவிகள் வைத்திருக்கும் ஜிப்பைத் திறந்து கை விட்டாள். அடிவயிறு சிலீரென்றது. சாவியைக் காணோம். எப்பவும் இங்கதானே வைப்போம்.. பரபரப்பாய்த் தேடத் தொடங்கினாள். பூட்டியிருந்த வீடு அவளுடைய களைப்பை இன்னும் அதிகப்படுத்தியது. பை முழுக்கத் தேடியும் இல்லை என்று உறுதிப்படுத்தியபிறகு என்ன செய்வது என்ற கேள்விஎழுந்தது.

இரண்டு மூன்று தெரு தள்ளி அகிலா மிஸ் வீடு இருந்தது. தெரிந்தவர்தான். அவர் வீட்டுக்குப் போவோமா? அவ்வளவுதூரம் நடக்கக்கூடத் தெம்பே இல்லையே. யாரிடம் எரிச்சல் கொள்வதெனத் தெரியாமல் தன்னையே திட்டிக் கொண்டாள். பையில் வைத்த சாவி எப்படிக் காணாமல் போகும்? தன்னையே சபித்துக்கொண்டு காலையிலிருந்து நடந்ததை மனத்துக்குள் அசை போட்டாள். எப்போதும் சித்ராதான் வீட்டைப் பூட்டிவிட்டு இறங்குவாள். சித்ரா, பிரகாஷ் இருவருமே ஆளுக்கொரு சாவி வைத்திருந்தனர். சித்ராதான் முதலில் வருவாள். அதற்கே 6.30, 7 ஆகி விடும். மின்சாரம் இருக்கும்போதே அரைக்க வேண்டியதை எல்லாம் முடித்து விடுவாள். வீடு பெர்க்கி, சாமி விளக்கேற்றி, துணி துவைக்க வேண்டியிருந்தால் இயந்திரத்தில் போட்டு எடுத்து அக்கடா என்று உட்காரும்போது மின்சாரம் போய்விடும். அப்போதுதான் பிரகாஷ் வந்து சேருவான்.

சென்னையின் மையப்பகுதியில் உள்ள அரசு அலுவலகத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்களில் அவனும் ஒருவன். காலை இருவருமே அவசர அவசரமாகக் கிளம்பி அலுவலகத்துக்கு விரையும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். இவளை நிறுத்தத்தில் இறக்கிவிட்டுப் பாதி வழி தன் வண்டியில்போத் தெரிந்தவர் ஒருவரின் கடையில் நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்து பிடித்துத் ட்ஹன் அலுவலகத்துக்கு விரைவான். காலை அவசரத்தில் பிரகாஷ் அவள் கையிலிருந்த சாவியைப் பிடுங்கிப் பூட்டியது சித்ராவுக்கு நினைவுக்கு வந்தது. அச்சச்சோ.. அவன் சாவியைத் திருப்பித் தரவே இல்லையோ.. வீட்டு வாசலில் நின்று தன் தலையில் அடித்துக் கொண்டாள். அமைதி என்று பதற்றமடையும் மனத்துக்கும் துவளும் தன் கால்களுக்கும் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டாள்.

நேற்று இரவே உப்புச்சப்பில்லாத ஒரு விஷயத்துக்கு இருவரும் கடுமையாகச் சண்டையிட்டுக்கொண்டது நினைவுக்கு வந்தது. தனக்குத் தானே ஆயிரம் அறிவுரைகளைச் சொல்லியபடி தன் பதற்றத்தை வெளிக்காட்டாமல் பிரகாஷுக்குத் தொலைபேசினாள். பிரகாஷும் இரவுச் சண்டையை நினைவுகூர்ந்தவனாய், எரிச்சலுடன், சாவியை ஞாபகமா வாங்கி இருக்கலாம்ல என்று கேட்டபோது தன் அறிவுரைகளை எல்லாம் ஒரு கணத்தில் கைவிட்டவளாய், நீங்கதான் கொடுத்திருக்கலாம்ல என்று வெடித்து விட்டுப் பின் நாக்கைக் கடித்துக்கொண்டே, ஒண்ணும் பிரச்சனையில்லே. நீங்க வர்றவரைக்கும் நான் அகிலா மிஸ் வீட்ல இருக்கேன். நீங்க பதற்றப்பட்டு வேகமால்லாம் வண்டிய ஓட்டிக்கிட்டு ஓடி வர வேணாம். நிதானமா வாங்க என்று சொல்லிவிட்டுக் கைபேசியை அணைத்தாள்.
அகிலா மிஸ் வீட்டில் இருப்பார்களா என்று தெரியவில்லை. எதற்கும் பேசிவிட்டுப் போவோமென்று நினைத்து அகிலாவுக்குப் பேசிய சித்ராவுக்கு ஏமாற்றம்தான். யாரும் எடுக்காமல் ஒரு இனிமையான பாடலைப் பாடியபடி நின்றுபோனது. பாடலை ரசிக்கவும் மனமின்றி என்ன செய்வது என்ற யோசனையுடன் நின்றவளுக்குத் தான் வெகுநேரமாக வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருப்பது உறைத்தது. பக்கத்து வீட்டில் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று நினைக்கும்போதே தெருவில் யாரோ இருவர் பேசிக்கொண்டுபோன குரல் கலைத்தது. அதில் கோயில் என்ற சொல்லைச் சித்ரா கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். ஆமாம், யாரையுமே தொந்தரவும் செய்ய வேண்டாமே, பக்கத்தில் இருக்கிற ஏதாவது ஒரு கோயிலில் போய் உட்காரலாம். பிறகு கடவுள் விட்ட வழி என்று நினைத்தவளாய் இரண்டு சந்து தள்ளியிருந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றாள்.

நல்லவேளை கருவறை பூட்டியிருந்தாலும் வெளிக்கதவு திறந்திருந்தபடியால் உள்ளே நுழைந்து அமர்ந்தாயிற்று. கொஞ்சநேரம் அமைதியாய் உட்கார்ந்தாள். யாருமற்ற அந்தக் கோயிலில் தானும் கடவுள்களுமாக உட்கார்ந்திருப்பது சற்றே வித்தியாசமாக இருப்பதாகப் பட்டது. பக்கத்தில்தான் இருந்தும் இதுவரையில் அந்தக் கோயிலுக்கே வந்ததில்லையென்பதும் அசந்தர்ப்பமாய் நினைவுக்கு வந்தது. பையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, எழுந்து கோயிலை ஒரு முறை சுற்றி வந்தாள். ரொம்பச் சின்னதாகவுமில்லாமல், பெரியதாகவுமில்லாமல் இருந்தது. ஒரு சிறிய கிணறும் ஒழுங்கில்லாமல் வளர்ந்திருக்கும் மலர்ச்செடிகளும் சிறிய பிரகாரமும் அதில் உள்ள தேவதைகளுமாக எல்லாமே மனத்துக்கு இதம் தந்தது. சுற்றிவிட்டு வந்து அமர்ந்துகொண்டாள். கைபேசியை எடுத்துத் தான் கோயிலிலிருப்பதையும் சண்டைபோடும் மனநிலையில் இல்லை என்பதையும் ஒரு குறுஞ்செய்தியாக அவனுக்குத் தட்டிவிட்டு, பாட்டியுடன் வரும் இரு குழந்தைகளை வேடிக்கை பார்க்கத் துவங்கினாள்.


கொசுக்கள் நடமாட்டம் தாங்க முடியவில்லை. புடவையை எடுத்துத் தன் உடலைப் போர்த்திக் கொண்டாள். அப்போதும் வெளிப்பட்டிருக்கும் உடலின் மிகச் சில இடங்களைத் தேடிக் கண்டுபிடித்து இப்போ என்ன செய்வீங்க என்று பாடிக் கொண்டிருந்தன கொசுக்கள். அதைத் தன் இரு கரங்களாலும் தட்டித்தட்டி வரவேற்றவளைத் தன் இனிய கீதத்தால் அவை மகிழ்வித்தன. பாட்டியும் ஒரு பெருமூச்சுடன் அவளைப் பார்த்தபடி அமர்ந்தாள். குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடத் தொடங்கின. சிறிது நேரம் அதை வேடிக்கை பார்த்தபடி இருந்தவள், அலுவலகத்துக் கோப்புகளை எடுத்து வைத்து விட்ட வேலையைத் தொடர ஆரம்பித்தாள்.  ஒரு வழியாகக் குருக்களும் அவருடைய மகனும் குடம், நைவேத்தியம் சகிதமாக வந்து சேர்ந்தனர். இன்னும் ஒரு பெண், தன் சிறு குழந்தைகளுடன் வந்து சேர்ந்தாள். அவள் குருக்களுக்கு முன்னரே அறிமுகமானவள் போல.. அவளை வாழ்க வளமுடன் என்று வரவேற்றவராய்க் குழந்தைகளைக் கொஞ்சினார். வாய் வருபவர்களிடமெல்லாம் பேசிக்கொண்டிருக்க, தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருந்தார். பூட்டியிருந்த கதவைத் திறந்து உணவை உள்ளே வைத்தார். சிறுவன், குடத்தை எடுத்துப்போய்க் கிணற்றிலிருந்து நீரெடுத்து வந்து கொடுக்க, உள்ளே இறைவனுக்கு நீராபிஷேகம்.. பூ அலங்காரம்.. புரியாத மொழியில் பூசை.. கொண்டு வந்திருந்த ஒரே தட்டு உணவை மூலவருக்கும் பிரகாரத்தில் உள்ள தேவதைகளுக்கும் சுற்றிக் காண்பித்துவிட்டு மீண்டும் பத்திரமாகத் தான் கொண்டு வந்திருந்த கூடையில் எடுத்து வைத்துக் கொண்டார். வேடிக்கையாக இருந்தது சித்ராவுக்கு. சிரிப்பும் வந்தது. கோப்புகளை ஓரமாக வைத்துவிட்டு, எழுந்து நின்று பூசையில் கலந்து கொண்டு, கற்பூர ஆரத்தியைக் கண்களில் ஒத்திகொண்டு நின்றாள். அந்தக் குழந்தைகள் கம்பியின்மீதேறி விளையாடிக் கொண்டிருந்தன. பெண் குழந்தையின் முட்டியில் கட்டுப் போடப்பட்டிருந்ததைக் குருக்கள் விசாரித்துக் கொண்டிருந்தார். சித்ராவும் அப்போதுதான் அதைக் கவனித்தாள். அந்த அம்மாவுக்குக் கண்களில் கண்ணீர் துளிர்த்து விட்டது. குழந்தைக்கு இன்றைக்குப் பிறந்தநாளென்றும் கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டாளென்றும் குருக்களிடம் குறைபட்டுக் கொண்டவளாய், குழந்தைகளின் பேரில் அருச்சனை செய்யச் சொன்னாள்.
மீண்டுமொருமுறை வாழ்க வளமுடன் என்று அவளுக்கு ஆறுதல் சொன்னவராய் அருச்சனை செய்து குழந்தையின் நெற்றியில் குங்குமம் வைத்துத் தன் வாழ்த்துகளைச் சொன்னார். சித்ரா தூணோரம் அமர்ந்தவளாய்க் குருக்களையே கவனித்துக் கொண்டிருந்தாள். மணி எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது. இடையில் வரும் ஒவ்வொருவரிடமும் வாழ்க வளமுடன் என்று சொல்லிக்கொண்டே தெரிந்தவர்களைப் பெயர் சொல்லி அழைத்தும் விசாரித்தும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். அவருடைய மகன் தண்ணீர் எடுத்துக் கொடுத்து விட்டு ஓடி விட்டிருந்தான். கோயிலின் ஒரு ஓரத்திலிருந்த ஒற்றை அறைக்குள் சென்று ஏதோ செய்து கொண்டிருந்தார். மின்சாரம் வந்த ஒரு அரைமணி நேரம் பக்திப் பாடல்களை மைக் மூலமாகப் போட்டிருந்தது கூட அந்த நேரம் இதமாகவே இருந்தது. இப்போதெல்லாம் எல்லாக் கோயில்களிலும் மின்சாரத்தின்மூலமாகவே இயங்கும் மேளங்கள் இங்கும் இருந்ததைக் கவனித்தாள்.

கூட்டம் மெல்ல மெல்லக் குறைந்தது. இடையில் வந்த ஒரு அலைபேசி அழைப்பைத் தவிர்க்க முடியாமல், கோயிலில் நிற்கும் சங்கடத்துடனே பேசி வைத்தாள். குருக்கள் கிளம்பிடுவாரோ என்ற எண்ணம் எழுந்ததும் பகீரென்றது. கோயிலைப் பூட்டினால், இப்போது எங்கே போவது என்று பயந்தாள். படியில் அமர்ந்திருந்த குருக்களிடம் சென்று கோயில் நடை சாத்தும் நேரத்தை விசாரித்தாள். ஒன்பதாகி விடுமென்ற அவருடைய பதில் சில்லென்று அவளுடைய வயிற்றில் இறங்கியது. சாவி கணவரிடம் சிக்கிக் கொண்ட கதையை அவரிடம் சொல்லி, அவர் வரும்வரையில் அவளுக்குப் போக்கிடமில்லையென்பதையும் உணர்த்திவிட்டு மீண்டும் தான் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தாள். அலுவலகக் கோப்புகளைக் கையிலெடுத்து அமைதியாகத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். இடையில் ஓரிருவர் கோயிலுக்கு வந்து போயினர். பிரகாஷ் ஒரு முறை பேசினான். பேருந்து ஊர்ந்து கொண்டிருப்பதைச் சொல்லித் தவித்தான். பாவமாக இருந்தது. தான் ஒரு குறையுமில்லாமல் கோயிலுக்குள் உட்கார்ந்திருப்பதைச் சொல்லித் தாமதமானாலும் பரவாயில்லையென்றாள்.

அகிலா மிஸ்ஸின் வீட்டுக்காரர் மற்றொருவருடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். அவளைப் பார்த்ததும் சற்றே ஆச்சரியமாகப் புன்னகைத்தபடி விசாரித்தார். அவள், சற்றே சங்கோதத்துடன் மீண்டும் தன் சாவிக் கதையைச் சொல்லிவிட்டுக் கோப்புக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். தெரிஞ்சவாளா என்று அவரிடம் என்னைப் பற்றி விசாரித்தார் குருக்கள். பிறகு அவர் கொண்டு வந்திருந்த ஜாதகம் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். எதையும் காதில் வாங்காதவளாய்த் தன் வேலையில் மூழ்கி அதையும் ஒரு வழியாய் முடித்தவளை மறுபடியும் அலைபேசி சிணுங்கி அழைத்தது. பிரகாஷ்தான். வந்துவிட்டிருப்பானென்று பரபரத்தவளை வண்டி பங்க்சர் என்ற அவனுடைய தவித்த சொற்கள் காலி செய்தது. மீண்டும் தன்னை நிதானித்துக்கொண்டவளாய், ஒன்றும் அவசரமில்லை. நான் இங்கேதான் இருக்கேன். பசியில்லை. குருக்கள் இருக்கார்.. சாமியெல்லாம் கூட துணைக்கு இருக்காங்க.. மின்விசிறி கூட இப்போ சுத்த ஆரம்பிச்சுடுச்சு என்று தான் இயல்பாய் இருப்பதை அவனுக்குத் தெரிவித்து, வேலையை முடித்துக் கொண்டு வரச் சொன்னாள். 
அகிலா மிஸ்ஸின் வீட்டுக்காரர் ஏதோ ஒரு உறவினரின் மகன் திருமணம் தள்ளிப் போவதைப் பற்றிச் சொல்லிக் குருக்களிடம் கவலைப்பட்டார். பிரகாஷின் வண்டி ஓசை கேட்டது. சித்ரா அயர்ச்சியில்லாமல் மெதுவாக எழுந்து நின்றாள். வீட்டிலிருந்தால் கூட இவ்வளவு ஓய்வாக இருந்திருக்க மாட்டோமென்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள். பிரகாஷ் பயந்தவனாய், அகிலா மிஸ்ஸின் வீட்டுக்காரரைப் பார்த்துச் சிரித்துக் கை குலுக்கி, நலம் விசாரித்துவிட்டு, போகலாமா? என்றான். இருவருமாக கோயிலைச் சுற்றி வந்து வணங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டு, கீழே விழுந்து வணங்கி விட்டு, சாஸ்திரத்துக்கு அமர்ந்து எழுந்தனர். பிரகாஷ் அவளுடைய கனத்த பையைத் தன் கையில் வாங்கிக் கொண்டு வண்டியை நோக்கி நடந்தான்.

குருக்கள் மீண்டும் அந்தப் படியில்போய் அமர்ந்து கொண்டார். கோயிலில் யாருமேயில்லை. குருக்களுடைய மகன் வந்து பிரகாரத்துக் கதவுகளைப் பூட்டத் தொடங்கினான். கருவறையில் இருந்த கடவுளைப் பார்த்தபடியே வெளியே வந்த சித்ரா மெல்ல வண்டியில் ஏறி அமர்ந்தாள். ஏனோ  கடவுளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. திரும்பிப் பார்த்தபடியே சென்றாள். பிரகாஷ் அன்று பார்த்து வண்டி பங்க்சர் ஆன கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான். காதில் வாங்கியும் வாங்காமலும் கேட்டுக் கொண்டிருந்தவளைசமைக்க வேண்டாம்; நான் வாங்கிக்கிட்டு வந்துடுறேன் என்ற குரல் கை பிடித்து இழுத்தது.  ஒரே சமயத்தில் லேசாகவும் வருத்தமாகவும் இருக்கும் தன் மனத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.    

No comments:

Post a Comment