Thursday, December 13, 2012

கோணல் மொழி பேசும் இளஞ்சமூகம்

நன்றி: பாவையர் மலர்

"நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்" 

என்று பட்டுக்கோட்டையார் எழுதியிருப்பார். அத்துடன் பேசிக் கெடுத்தவர்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அலைபேசிக்கு மக்கள் சமூகமே அடிமைப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் நாளைய சமூகத்தை உறுதியுடனும் உத்வேகத்துடனும் எதிர்கொள்ள இருக்கும் இளைய பட்டாளம் மாணவர்களும் அந்தச் சுழலுக்குள் சிக்கியிருப்பது பெரும் ஆபத்துக்கான அறிகுறியாய் இருக்கிறது. இன்றைய கல்விமுறையில் வழங்கப்படும் வினாத்தாட்கள் அறிவின் விரிவைப் பெருக்குவதாக இல்லை. சுய அறிவைப் புறந்தள்ளி, மனன அறிவையே ஊக்குவிக்கிறது. கற்பனைத் திறனைப் பெருக்கும் கேள்விகள், கட்டுரை, கடிதம் ஆகிய வினாக்களெல்லாம் ஆசிரியரின் பாரபட்சமான மதிப்பெண்ணைப் பெறும். அது ஒரே மாதிரியான மதிப்பெண் வழங்கும் முறைமையை அளிக்காது என்ற எண்ணத்தில் மேற்சொன்னவற்றை எடுத்து விட்டது, மொழிவெளியெங்கும் பிரதிபலித்துக் கிடக்கிறது. சிதறிக் கிடக்கும் கண்ணாடித் துண்டுகளில் மாணவர்களின் முகங்களுக்குப் பதிலாகப் பிழைகளே பதிந்து கிடக்கின்றன. அதையும் அழகு என்று சொல்லி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது கல்வித்துறை.

இதில் கொடுமை, இன்றைய இளைஞர் கூட்டம் யாருக்கு, எதற்கு அனுப்புகிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஏது பயனுமின்றிக் குறுஞ்செய்தியாய் அனுப்பித் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் உணர்வுகளைத் தூண்டிப் பல்வேறு வகையில் காசு பார்த்துக் கொண்டிருக்கின்றன அலைபேசி நிறுவனங்கள். குறுஞ்செய்தி அனுப்பும் இவர்கள் குறுஞ்செய்தியை இன்னும் குறுமையாக்கி அனுப்புவது பெரும் கொடுமை. ஆங்கிலமானாலும் தமிழானாலும் மொழியைச் சுருக்கி, சொற்களைக் குறுக்கி, எழுத்துப் பிழையைச் சரியான ஒலி வடிவத்துடன் மட்டும் அடித்து அனுப்பும் வித்தையை எந்தத் துரோணரிடமிருந்து கற்றார்களோ என்று தெரியவில்லை. O.k என்பது k ஆகி விட்டது. Orl correct என்பதன் சுருங்கிய வடிவமே o.k அதனை இன்னும் சுருக்கி k ஆக்கி விட்டார்கள். And என்பது n ஆகி விட்டது. இப்படித் தமிழையும் இப்போது சுருக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறுஞ்செய்தி அனுப்பும் அதே மனம், விடைத்தாளிலும் வேகமாய் எழுதும்போது இந்தச் சுருக்க மொழியையே பயன்படுத்துகிறது. மெல்ல மெல்ல இதுவே இன்றைக்குப் பயன்பாடாகிக் கொண்டிருக்கிறது. கூடாரத்துக்குள் நுழையும் ஒட்டகம் கூடாரத்தையே சாய்த்துச் செல்வது போல, ஏற்கெனவே சீரழிந்து கிடக்கும் மொழி வெளி இன்னும் கம்பிக்குள் சிக்கிய துணியாய்க் கிழிந்து கிடக்கிறது. 

மொழியின் உண்மைப் பயன்பாடு, அதன் உணர்வுத் தளம், கருவியாய் மட்டுமின்றி நம் உள்ளும் புறமும் மொழி நிகழ்த்தும் அரசியல் செயல்பாடுகள் என எதைப் பற்றிய அறிவுமின்றித் தங்களையே மெல்ல இவர்கள் அழித்துக் கொண்டிருக்கின்றனர்.

"மெல்லத் தமிழினிச் சாகுமென்றந்தப்
பேதை உரைத்தான்"

என்று பாடிய பாரதி அழிந்து போன நம் மொழியை எண்ணி வருந்தியும் அழித்த தமிழர்களைச் சபித்தும் பாடல்கள் புனைந்திருப்பான்.

தன் மொழியை, அதன் செழுமையை, இலக்கிய வளத்தை, வரலாற்றை உணராத சமூகமாக நம் நாளைய சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. உழைப்பு, விடா முயற்சி ஆகிய நல்ல பண்புகளை, அதனால் வெற்றி கொண்டவர்களை அது கவனிக்க மறுக்கிறது. பெரும்பான்மைச் சமூகம் இப்படி இருப்பதை வருத்தத்துடன் பேச வேண்டியதாகத்தான் இருக்கிறது. எல்லா இளைஞர்களையும் இப்படிக் குற்றம் சொல்லவில்லை. இன்னமும் நம்பிக்கை தரும் சில இளம் குருத்துகள் நம்மிடையே நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், தொலைக்காட்சி, அலைபேசி, இதழ்கள் எனப் பல்வேறு அசுரப் படையெடுப்புகளால் இளைய சமுதாயம் புண்ணாகிக் கிடப்பதைச் சொல்லத்தான் வேண்டும்.

மாணவர்களின் நடை, உடை, பாவனைகள் எல்லாம் திரையுலகைப் பின்பற்றி இருக்கிறது. ஒரு சூத்திரத்தை மனனம் செய்ய முடியாத மனம், பக்கம் பக்கமான வசனங்களை, இரட்டை அர்த்தப் பாடல்களை அநாயாசமாகப் பேசுகிறது; பாடுகிறது. சிறியன சிந்தியாமல் வளர்க்கப்படவேண்டிய நம் நாற்றுகளெல்லாம் சின்னப்பெட்டிக்குள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. வரலாறு இல்லாத சமூகம் ஒன்றுக்கும் உதவாமல் மிக விரைவில் அழிந்து போகும். அதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. நம் சமூகத்தின் தமிழறிஞர்களை, போராளிகளை, சமூக ஆர்வலர்களை, படைப்பாளர்களை விழைய வேண்டிய பிஞ்சுகள் நடிக, நடிகையரின் பாதங்களில் மண்டியிட்டுக் கிடக்கின்றன. 

உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் அவர்கள் துன்பத்திலிருக்கின்றனர். மாற்றம் பற்றிப் பேச வேண்டிய ஊடகங்களே சீரழித்துக் கொண்டிருக்கின்றது. 
தமிழ்த்தாய் வாழ்த்தையும் நாட்டு வாழ்த்தையும் பாடக் கூச்சப்படும் அவர்கள் தரக் குறைவான பாடல்களைப் பாடியும் அதற்கு ஆடியும் பரிசில் பெற வரிசையில் நிற்கிறார்கள். 

வகுப்பறை ஒழுங்கு என்பது இன்றைக்குக் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. பாடல்களில் ஆங்கிலக்கலப்பும் அர்த்தமற்ற ஒலிக் கோவைகளும் நுழைந்து கோலோச்சுகிறது. நூலறுந்த பட்டத்தின் பின்னால் ஓடும் சிறுவர்களென அவர்கள் ஆபத்தையறியாமல் ஓடுகின்றனர். 

அரசு கவனம் செலுத்த வேண்டிய இவ்விஷயம் இன்னும் கையெடுக்கப்படாமலே இருக்கிறது. புறக்கட்டமைப்பில் செலுத்தும் கவனத்தை அகக் கட்டுமானத்திலும் செலுத்தும்போதுதான் மாணவர் உள்ளம் பண்பட்டதாய் மாறும். அதற்கு அரசு அதன் பாடத்திட்டத்தில் முதன்மைக் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக 11, 12 வகுப்புப் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு 8 ஆண்டுகள் ஆகி விட்டன. ஒரே பாடத்தைத் தொடர்ந்து எடுத்துச் சோர்ந்திருக்கின்றனர் ஆசிரியர்கள். இது அவர்களுடைய பாடம் எடுக்கும் திறனை, கற்பனை ஆற்றலை வலுக் குன்றச் செய்யும்; செய்கிறது.

சமச்சீர்கல்வி என்று சொல்லப்பட்டாலும் அது சமச்சீராய் இல்லையென்பதை, இவ்விஷயத்தைத் தொடர்ந்து அவதானித்து வந்தவர்கள் புரிந்து கொள்ளலாம். ஒரு பகுதி, அடிப்படைக் கருத்துகளுக்கு முதன்மைதந்தும் மற்றொரு பகுதி எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அதற்குத் தேவையானவற்றையும் கோர்த்து மாலையெனத் தொடுத்தால் அழகான மாலையாகும். அல்லாவிட்டால் அது குரங்குகைப் பூவாகும். நம்மிடமிருப்பது மாலையா குரங்கு கைப்பூவா என்பதை ஓர்ந்து பார்க்க வேண்டும். பாடத்திட்டத்தில் பல திறன்களை வளர்ப்பதாகச் சொன்னாலும் அப்படியான பாடத்திட்டம் நம்மிடையே இல்லை என்பதே உண்மை. மனப்பாடம் செய்தல், கவனித்தல், கவனித்தவற்றை மொழியாக்கி எழுத்தில் வடித்தல், இசையாக்குதல், நாடகமாக்குதல், தனி நடிப்பாக்குதல் என ஏராளமான திறமைகளை வெளிக் கொண்ரலாம். 

அடிப்படையான கவனிக்கும் திறன் மடைமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்கள் கூர்ந்து கவனித்தலை, சிந்தித்தலை அழிக்கும் விதத்திலேயே இன்றைய கல்வி முறையும் அமைந்திருக்கிறது என்பது ஒரு மிகையான கூற்று அன்று. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஓவியம் வரைதல் போன்ற திறன்களை வளர்ப்பதாகச் சொன்னாலும் படிக்கும் எழுதும் திறனை அழித்து விடுவதாகவே இன்றைய ஆசிரியர்கள் கருதுகின்றனர். இது மாணவர்களை வேலைவாங்கும் திட்டமாகவன்றி ஆசிரியருடைய சுமையை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளது. 

"அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்"

என்பது பாரதி வரிகள். ஊடகத்தின் வழியாக மொழி வளமையைச் செழிக்கச் செய்யாமல் அழிக்க நினைப்பது தனக்குத் தானே குழி தோண்டிக் கொள்வதற்குச் சமம். எனவே சரியான பாடத்திட்டத்தை, அரசின் குறுக்கீடுகளின்றி உருவாக்கும் அறிஞர்களின் உதவியுடன் தயாரித்து மாணவர்களை வழிப்படுத்த வேண்டும். மொழிப் பயன்பாட்டில் சற்றே கவனத்துடனும் கண்டிப்புடனும் இருந்து படைப்பாற்றலை வளர்க்கச் செய்தாலே மொழி வளம் பெறும். சிறந்த படைப்பாளர்களை உருவாக்கிச் சமுதாயத்திற்கு அளிக்கும் மிகப் பெரிய கொடையாக இவர்கள் இருப்பார்கள். 


3 comments:

  1. நம் சமூகத்தின் தமிழறிஞர்களை, போராளிகளை, சமூக ஆர்வலர்களை, படைப்பாளர்களை விழைய வேண்டிய பிஞ்சுகள் நடிக, நடிகையரின் பாதங்களில் மண்டியிட்டுக் கிடக்கின்றன.

    எனவே சரியான பாடத்திட்டத்தை, அரசின் குறுக்கீடுகளின்றி உருவாக்கும் அறிஞர்களின் உதவியுடன் தயாரித்து மாணவர்களை வழிப்படுத்த வேண்டும். மொழிப் பயன்பாட்டில் சற்றே கவனத்துடனும் கண்டிப்புடனும் இருந்து படைப்பாற்றலை வளர்க்கச் செய்தாலே மொழி வளம் பெறும். சிறந்த படைப்பாளர்களை உருவாக்கிச் சமுதாயத்திற்கு அளிக்கும் மிகப் பெரிய கொடையாக இவர்கள் இருப்பார்கள்.

    Nalla Pathivu. Vizhipunarvu vendum naam pillaigal enke sentru kondu ullanar intha nilai il entru.- Vazhthukkal.

    ReplyDelete
  2. அன்புத் தோழர் தி.ப. அவர்களுக்கு வணக்கம்.
    தங்கள் வலைப்பக்கம் பார்த்து வருகிறேன்.
    ஒரு தமிழாசிரியரின்,
    ஒரு நேர்மையான பெண்படைப்பாளரின்,
    எங்கள் மதிப்பிற்குரிய அய்யா ம.பொ.சி.அவர்களின் பேத்தியின்
    சிறப்பான வலைப்பக்கத்தை -என் நண்பர்களுக்கும்- அறிமுகப் படுத்த வேண்டிய என் கடமையை உணர்ந்து செய்திருக்கிறேன்.
    பார்க்க - http://valarumkavithai.blogspot.in/
    அன்புத் தோழன்,
    நா.முத்துநிலவன்,
    புதுக்கோட்டை.

    ReplyDelete