Thursday, April 8, 2010

ஒரே ஒரு மரக்கன்று

தி.பரமேசுவரி

நன்றி : தடாகம்.காம்

 
1999-ஆம் ஆண்டில், ஜனவரி மாதத்தின் ஒரு அழகான அதிகாலைப் பொழுதில் மரங்கள் வெட்டி அழிக்கப்பட்ட க்ரூரா காட்டின் நடுவே ஒரு பெண்கள் குழு மெல்ல மெல்ல முன்னேறியது. தங்கள் பயணத்தின் ஆபத்தை அவர்கள் அறிந்தேயிருந்தனர். காட்டில் மிகுந்த கவனத்துடன் அமைதியாக வேலையைக் துவங்கினர். ஆனால் அதிகாலை இருட்டில் நிழல் உருவங்களாக அருகில் நெருங்கிய குண்டர் படை அவர்களைத் தலையில் அடித்தனர்; கால்களால் உதைத்தனர். அப்படிப்பட்ட ஆபத்தான வேலைதான் என்ன ? ஒன்றுமில்லை. அவர்கள் ஒரே ஒரு மரக்கன்றை நட்டனர். அது , கோல்ப் மைதானம் அமைப்பதற்காக அழிக்கப்பட்ட வனப்பகுதி. காட்டின் ஒரு பகுதியை அழித்ததற்குத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவே பசுமை மண்டல இயக்கத்தார் (Green Belt Movement ) ஒரு மரக்கன்றை அங்கே நட்டனர். இந்த அமைப்பின் தலைவி வங்காரி மாத்தாய். ஆனால் இது போன்ற தாக்குதல்களும் ஆபத்துகளும் அவருக்குப் புதிதல்ல. இத்தகையதொரு கொடூரமான தாக்குதலை முன்னர் பெற்றிருந்த அனுபவங்களால் எதிர்பார்த்திருந்த இயக்கத்தார், இம்முறை தாக்குதலைப் படம் பிடித்து, நடந்த மோசமான நிகழ்வை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தினர்.

1992- இல் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி அரசுக்கு எதிராக நடந்த உண்ணா நிலைப் போராட்டத்தின் நான்காம் நாளில் மாத்தாய் காவலர்களால் மிக மூர்க்கமாகத் தாக்கப்ட்டு, மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரசின் இத்தகைய அராஜகப் போக்குக்கு வருந்தாமல் அவரைப் பைத்தியம் என்றும் நாட்டின் ஒழுங்கிற்கும் பாதுகாப்பிற்கும் ஊறு விளைக்கும் தீய சக்தி என்றும் குறிப்பிட்டார் அன்றைய ஜனாதிபதி டேனியல் அரப் மோயால்.

1989 இல் நைரோபியில் உள்ள உஹுரு பூங்காவில் அறுபது மாடி வணிக வளாகம் கட்டும் முயற்சியை அந்திய முதலீட்டாளர்கள் தொடங்கினர். பூங்காவில் உள்ள மரங்களை இதற்காக அழிப்பது சுற்றுச் சூழலைச் சீர்குலைக்கும் என்று எண்ணிய மாத்தாய் , தன் ஆதரவாளர்களுடன் கூடி ஆர்ப்பாட்டம் செய்தார். அதன் காரணமாக அரசின் அடக்குமுறைக்கு ஆளானதோடு அவருடைய அலுவலகத்தை விட்டும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதோடு பாராளுமன்றத்திலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டார். ஆனாலும் எதைக் கண்டும் அஞ்சாமல் தன் தொடர்ந்த எதிர்ப்பை வெளிப்படுத்திய மாத்தாயின் முயற்சி காரணமாக அந்த அந்நிய முதலீட்டு வணிக வளாகத் திட்டம் கைவிடப்பட்டது.

ஏப்ரல் 1940 ஆம் ஆண்டு கென்யாவில் நியோ மாவட்டத்தில் தேத்து என்னும் பகுதியில் அகிதே என்னும் கிராமத்தில் பிறந்த வங்காரி முதா மாத்தாய், பசுமைப் போராளியும் அரசியல் புரட்சியாளரும் ஆவார். பள்ளிப் படிப்பைக் கென்யாவில் முடித்த மாத்தாய் உயிரியல் துறையில் மேற்படிப்புகளை அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் படித்தார். 1971 இல் நைரோபியில் அவர் உடற் கூற்றியலில் முனைவர் பட்டம் பெற்றபோது கிழக்காப்பிரிக்காவில் இப்பட்டத்தைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் . 1976 இல் நைரோபி பல்கலைக்கழகத்திலேயே விலங்குகளின் உடற்கூற்றியல் துறையில் முதன்மைப் பொறுப்பினைப் பெற்ற போதும் 1977 இல் இணைப் பேராசிரியராக உயர்ந்த போதும் அதனைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமை அவரைப் பின் தொடர்ந்தது.

நாற்பது வயது முதல் சூழலியலுக்கென்றே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட மாத்தாய், 1976-இல் நைரோபியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் இணைந்தார். அப்போதுதான் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற்றார். சூழல் பாதுகாப்பிற்கு, மரக்கன்றுகளை நடும் எண்ணம் தோன்றியபோதுதான் பசுமை மண்டல இயக்கம் (Green Belt Movement ) என்ற அரசு சாரா அமைப்பை 1977இல் நிறுவினார். இது வரையிலும் சுமார் 30 மில்லியன் மரக்கன்றுகளைக் கென்யாவைச் சுற்றி நட்டிருப்பதால் ஆப்பிரிக்க மக்கள் இவரை ஆப்பிரிக்காவின் தாய் மரம் என்று அன்போடு அழைக்கின்றனர்.

1976 இல் தொடங்கிய மகளிர் ஆணையப் பணி 1987 வரையிலும் நீடித்தது. இதில் 1981 முதல் 1987 வரை ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றினார். அன்று தொடங்கி இன்று வரையிலும் பெண்களுக்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும் குரல் கொடுப்பதையே தன் முதன்மைப் பணியாகக் கொண்டு செயலாற்றுகின்றார்.

உறுதியான பெண்மணியான மாத்தாய், 1980களின் தொடக்கத்தில், பாராளுமன்ற உறுப்பினரான தன் கணவர் வங்காரி மாத்தாய் மணவிலக்குக் கேட்டு வழக்குத் தொடர்ந்த போது கூட அதனைத் தைரியமாக எதிர் கொண்டார். 1969 இல் தொடங்கிய தன் மணவாழ்வு இத்தகைய கசப்பான முடிவில் முட்டி நிற்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரோடு உறவு இருப்பதாகக் கணவர் குற்றம் சாட்டிய போதும் அதனை நீதிபதி ஆதரித்துப் பேசிய போதும் கூட அவர் மனம் கலங்கவில்லை அதற்காக நீதிபதியை விமர்சித்துச் செவ்வி அளித்ததற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கி ஆறாண்டுச் சிறைத்தண்டனை பெற்றார். நைரோபியில் உள்ள லங்காட்டா பெண்கள் சிறையில் மூன்று நாட்கள் இருந்த பிறகு மாத்தாயின் வழக்கறிஞர் தாக்கல் செய்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். மணவிலக்கு வழக்கில் அலைக்கழிக்கப்பட்டபோதும் சிறைத் தண்டனை பெற்றபோதும் பிறகு தன் குடும்பப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் மூலமாக ஆணை பெற்றபோதும் கலங்காமல், சின்ன சிரிப்போடு சிக்கல்களை எதிர்கொண்டு, தன் பெயரில் மற்றும் ஓர் எழுத்தைச் சேர்த்து "mathai", "maathai" ஆனார்.

2002 இல் நடைபெற்ற தேர்தலில் அது வரை ஆட்சியில் இருந்த கென்ய ஆப்பிரிக்கன் தேசியக் கட்சி தோற்கடிக்கப்பட்டு மாத்தாய் சார்ந்திருந்த கூட்டணி வெற்றி பெற்றது. மாத்தாய் தேத்து தொகுதி சார்பாக 98% ஓட்டுகள் பெற்றுப் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு சுற்றுச் சூழல்,இயற்கை வளம் மற்றும் வன உயிர்கள் பாதுகாப்புத் துறையின் துணை அமைச்சராகவும் பணியாற்றினார்.

2004 இல் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் அவரது தொடர் முயற்சிகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மார்ச் 28, 2005இல் ஐக்கிய ஆப்பரிக்காவின் பொருளாதார , சமூக , பண்பாட்டுக் குழுவின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் நவம்பர் 2006இல் பில்லியன் மரங்களை நடுவதற்கான தேசியப் பிரச்சாரக் குழுவுக்கும் தலைமை தாங்கினார். “அரசியல் ஒடுக்குமுறைக்கு எதிரான அவரது செயல்பாடுகள் தேசிய அளவிலும் சர்வ தேசிய நிலையிலும் கவனத்தை ஈர்த்ததோடு, மக்களின் உரிமைக்காகப் போராடுபவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்” என்று நோபல் பரிசுக் குழு அவரைத் தேர்ந்தெடுத்தபோது புகழ்ந்து கூறியது. ஆனால் மேலை நாடுகள் பற்றி அவர் கூறிய ஒரு கருத்தின் காரணமாக அச்சமயத்தில் சர்ச்சையும் எழுந்தது, 2004 இல் ‘டைம்’ இதழுக்கு அவர் அளித்த செவ்வியில் “எய்ட்ஸ் என்கிற உயிர்க்கொல்லி ஆயுதத்தை முன்னேறிய நாடுகள் கறுப்பின மக்களை அழிப்பதற்காகவே பரப்பியுள்ளன என்று முன்னர்க் கூறியிருந்தீர்கள். இக்கருத்தில் இன்னமும் நம்பிக்கையோடு இருக்கிறீர்களா?” என்ற வினாவை எதிர்கொண்டபோது “எய்ட்ஸ் நோயை யார் பரப்பினார்கள் என்பதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இது வானிலிருந்து குதித்தது அல்ல என்று எனக்குத் தெரியும். மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் என்றே எப்போதும் நினைக்கிறேன். இந்நோய் எப்படி வந்தது என்பது மக்களுக்குத் தெரியும். அது நிச்சயமாகக் குரங்கிலிருந்து வரவில்லை” என்று பதிலுரைத்தார். பின்னர் இது பற்றி விரிவானதொரு அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.


மழைநீர்ச் சேகரிப்பு, மக்களுரிமை, ஆப்பிரிக்காவின் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், பசுமை மண்டல இயக்கம் போன்ற கருத்தியல்கள் பற்றி அவர் ஒன்பது நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள வில்லியம்ஸ் கல்லூரி, நார்வே பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம் போன்ற பல கல்வி நிறுவனங்கள் மாத்தாய்க்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளன. நோபல் பரிசு தவிர மாற்று நோபல் பரிசு, சுற்றுச்சூழலுக்கான விண்ட்ஸ்டர் விருது , கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருது, எடின்பர்க் மெடல் விருது எனப் பற்பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.

நில உயிரியலாளராக எழுபதுகளின் மத்தியில் பணியாற்றத் தொடங்கிய மாத்தாய், உள் நாட்டுக் காடுகளை அழிப்பதனால் அரிய வன விலங்குகள் அழிவது மட்டுமல்லாமல் மண்ணின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவததையும் உணர்ந்தார். இச்சீர்கேட்டைச் சரிசெய்ய அவரால் உருவாக்கப்பட்ட பசுமை மண்டல இயக்கமே அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது. 1976 இல் அவர் பெண்கள் ஆணையத்தில் இருந்த போதுதான் பெண்களை ஒருங்கிணைந்து நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அறிமுப்படுத்தினார். இத்திட்டமே பின்னாளில் பெண்களைக் குழுக்களாக ஒருங்கிணைத்துச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாக உருவானதோடு அவர்களது வாழ்க்கை நிலையையும் முன்னேற்றும் வகையில் மாற்றம் கண்டது. தம் பசுமை மண்டல இயக்கப் பெண்களின் உதவியுடன் நாடு முழுவதும் பண்ணை , நிலம் , பள்ளி தேவாலயம் எனப் பல இடங்களிலும் சுமார் முப்பது மில்லியன் மரங்களுக்கும் மேல் நட்டார். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத்தான் இப்பெண்கள் குழுவாக இணைந்தனர் என்றாலும் ஊழல் அரசை எதிர்க்கவும் சமூகத் தேவைகளுக்காகக் குரல் கொடுக்கவும் கற்றுக் கொண்டனர். சிறு செடி அரசியல் செயல்பாட்டின் சக்தி வாய்ந்த ஆயுதமாக உருமாற்றப்பட்டது. இன்று 6000 மகளிர் குழுக்கள் சிறப்பாகச் செயலாற்றுகின்றனர் என்பதே இவ்வியக்கத்தின் வெற்றியை நமக்கு உணர்த்துகிறது.

உள் நாட்டோடு நின்று விடாமல் 1986 இல் தங்களை அணுகிய பிற ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து நாற்பது பேரைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சியளித்து அவர்களைக் கொண்டு பான் ஆப்பிரிக்கன் பசுமை மண்டல அமைப்பு என்று இவ்வமைப்பு விரிவாக்கம் பெற்றது. இங்கே பயிற்சி பெற்றவர்கள் தங்கள் நாடுகளிலும் அறிவியல் முறைகளைப் பின்பற்றிச் சுற்றுச்சூழலை மேம்படுத்தினர். தான்சானியா உகாண்டா, மாலாவி, எத்தியோப்பியா, ஜிம்பாப்வே போன்ற பல நாடுகள் இத்திட்டத்தால் பயனடைந்தன.


ஏழை நாடுகளின் கடன்களை ரத்து செய்தல், மனித உரிமை, மக்களாட்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்ணுரிமை, சமச்சீர் நிலப் பங்கீடு போன்ற கருத்தியல்களுக்கான அவருடைய தொடர்ச்சியான போராட்டங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஐ.நா. அவையில் அவர் பல முறை உலகப் பெண்கள் நிலை குறித்தும் சுற்றுச் சூழல் குறித்தும் உரையாற்றியுள்ளதோடு, இது தொடர்பான குழுக்களிலும் பங்கேற்றுள்ளார்.

2007 டிசம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாய் கிபாக்கிக்கு (Mwai Kibaki) எதிராகப் போட்டியிட்ட மாத்தாய் தோற்றுப் போனார். ஆனால் அவர் எப்போதும் தம் இயக்கத்தில் மிகுந்த கவனத்துடனே பணியாற்றி வருகிறார். அவர்கள் சிறையிலடைத்தனர், மாத்தாய் சிறையிலிருந்து திருப்பி வந்து மரக்கன்றுகளை நட்டார்; வீட்டைச் சேதப்படுத்தியதோடு உள்ளே நுழைந்து தலையில் அடித்தனர், மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்து மேலும் மரங்களை நட்டார். “புவிப்பரப்பின் நிர்வாணத்தைப் பசுமைப் போர்வையால் மறைக்க வேண்டும் என்பதே என் இலக்கு” என்று கூறும் மாத்தாய் தங்கள் இயக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது ” நாங்கள் தொய்வில்லாமல் எங்கள் பணியைத் திரும்பத் திரும்பத் தொடர்வதைக் கண்ட பிறகு, மக்கள் கூட்டம் எங்கள் பின்னால் நிற்பதைக் கண்ட பிறகு, அவர்கள் சிந்திக்கத் தொடங்கினர். ஒரு நாள் அவர்களும் எங்கள் பக்கத்தில் வருவார்கள்” என்று நம்பிக்கை தெரிவிக்கின்றார்.

மாத்தாய் விதைகளைத் தூவுகிறார்… நம்பிக்கை முளைக்கிறது; கன்றுகள் நடுகின்றார்… முன்னேற்றம் மலர்கிறது; புவிப்பரப்பிற்கான பசுமை ஆடையைத் தயார் செய்து கொண்டிருக்கிறார்… பசுமை மண்டல இயக்கத்தார் துணை நிற்கின்றனர்.

1 comment:

  1. வணக்கம் பரமேஸ்வரி.

    மாத்தாயின் படம் ஒன்றை போட்டிருக்கலாமே ?

    இந்த வேர்ட் வெரிபிக்கேஷனை எடுத்துவிடுங்கள். பின்னூட்டம் போட சோம்பலாக இருக்கிறது..!!

    ReplyDelete