Thursday, July 5, 2012

மனம் தொடாத உறவுகளில் பசியாறும் பரத்தையர்

நன்றி : தமுஎகச பண்பாட்டு மலர் 2012

சங்கஇலக்கிய அகமரபில் காணப்படும் பெண்மாந்தர்களில் குடும்ப அமைப்பு சாராத பெண்ணாக அமைபவள் பரத்தை. இரண்டாயிரம் வருடப் பழமை வாய்ந்த சங்க இலக்கியத்திலிருந்து இற்றைநாள் வரையிலான கவிதைகளில் பரத்தை புனையப்படுமாற்றைக் கவனித்தலே இக்கட்டுரையின் நோக்கம்.

தனிச்சொத்துரிமைக்காக ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுங்குபடுத்தப்பட்டாலும் ஒருத்திக்கு ஒருவன் என்பதே நடைமுறைப்படுத்தப்பட்டது. தன் வாரிசுரிமையைப் பாதுகாக்க ஆண், பெண்ணுக்குக் கற்புக்கோட்பாட்டை வலியுறுத்தினான். குடும்ப நிறுவனத்தைக் கட்டமைத்த ஆண்மையச்சமூகம் தன்பாலியல்வேட்கைப் போதாமையை நிறைவு செய்ய உருவாக்கிக்கொண்டதே பரத்தமை எனலாம். சங்க இலக்கியம் காட்டும் இற்பரத்தை,  காதற்பரத்தை, சேரிப்பரத்தை போன்றோர் அத்தகையோரே. பெண் ஒடுக்குமுறையின் ஒருபகுதி என்று இதைக் குறிப்பிடும் அதேவேளையில் இதற்குள்ளும் தனக்கான ஒரு வெளியைப் பரத்தை உருவாக்கிக் கொள்கிறாள் என்பதற்கும் சங்க இலக்கியங்களே சான்று பகர்கின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களில் மருத நிலமே தனிச் சொத்தும் அது சார்ந்த ஆண்மையச் சமூகமும் அவர்களுக்காக் பரத்தையர்களையும் உருவாக்கிய களமாக அமைகிறது. குறிஞ்சி, முல்லைக் காலத்தில் மலையிலும் காட்டிலும் திரிந்த மனிதனுக்குள் ஆண், பெண் ஆகிய பால் பேதம் பெரிதாய் இருந்திருக்கவோ அது சார்ந்த ஏற்றத்தாழ்வுக்கோ வழியில்லை. எனவே மருத நிலம் சார்ந்த பாடல்களிலேயே பரத்தையர் சார்ந்த பாடல்களையும் மிகுதியாகப் பார்க்க முடிகிறது.

சங்கம் காட்டும் இச்சித்திரமும் மேட்டிமைப் பெண்களுக்கானதேயொழிய சமூகத்தின் அடித்தட்டில் உள்ள பெண்களின் நிலை பெரும்பான்மையும் பதியப்படவில்லை என்ற வர்க்க பேதத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேட்டிமைப் பெண்ணான தலைவிக்குரிய பண்புகளாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று வரையறுக்கும் தொல்காப்பியர், 

சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின் (தொல். பொ. கள. 20) 

என்றும்

தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை (தொல். பொ. கள. 28) 

என்றும்

சொல்லி ஆணாதிக்க விழுமியங்களால் பெண்ணுக்கான மொழியைத் தடை செய்கிறார். மொழி காலங்காலமாக ஆணாதிக்கவயப்பட்டதாக உள்ளதையும் பெண்மொழி இன்றும் சாத்தியப்படாத நிலையையும் கண்கூடாகப் பார்க்கிறோம். எந்தவகையான அதிகாரமும் முதலில் எதிராளியின் சிந்தனையை, செயலை அழிக்கத் தொடங்கும். அவ்வகையில் பெண் ஒடுக்குமுறை தொடங்கும்போதே அவளுடையபேச்சு, குரல், மொழி ஆகியவற்றை அழிப்பதற்கான செயல்பாடுகள் நடந்தேறியுள்ளன.
அகஇலக்கிய மரபில் பேசப்படும் பெண்களான நற்றாய், செவிலி, தோழி, தலைவி ஆகியோருள் ஓரளவாவது பேசுபவள் தோழி மட்டுமே. அவளும் பல்விதமான கட்டுப்பாடுகளுக்கிடையிலேயே பேசுகிறாள். 

இவர்களிடமெல்லாம் இருந்து வேறுபட்டு ஒலிக்கும் ஒற்றைக் குரலாய்ப் பரத்தையின் குரல் ஒலிக்கிறது. நாணம் பெண்ணுக்கு வரையறுக்கப்பட்ட விதிகளுள் முதன்மையானது. எனவேதான் உயிரைவிட நாணத்தை வலியுறுத்திய பாடல்கள் இயற்றப்பட்டன. ஆனால் பரத்தை இதனைத் துச்சமாக மதித்துப் பேசுகிறாள்.

சாஅய் ஒதுங்குந் துறைகேழ் ஊரனொடு
ஆவதாக இனிநாண் உண்டோ (அகம் 276)

நாணத்தை உயிர்நிலையாய் நினைக்கும் தலைவிக்கு எதிர்நிலையில் வைக்கப்படும் பரத்தையின் வாழ்வில் நாணம் அர்த்தமற்றதாய் மாற்றம் பெறுகிறது.

பெண்ணுடல் எப்போதும் தணிக்கை செய்யப்படுவது; கண்காணிக்கப்படுவது. அது எண்ணற்ற ஆணாதிக்க விழுமியங்களால் கட்டுண்டுள்ளது. குடும்பப் பெண் தன் கணவனுக்காகவே தன்னை ஒப்பனை செய்து கொள்ளக் கடமைப்பட்டவள். கணவனைப் பிரிந்து இருக்கும்போதோ, இல்லாதபோதோ அல்லது மிகையாகவோ தன்னை ஒப்பனை செய்து கொள்ளும் பெண்ணை வேசி என்றும் நாடகக்காரி என்றும் ஏசும் பழக்கம் இன்றளவிலும் உள்ளது.
தன்னை அழகுபடுத்திக் கொண்டு நறுமணம் கமழத் தெருவில் உலாவும் பரத்தையை மதுரைக் காஞ்சி காட்டுகிறது. 

நீர் திரண்டன்ன கோதை பிறக்கிட்டு
ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப்
போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ (ம.காஞ்சி 562 - 564)

சுதந்திரமில்லாத பெண்ணுடல் பரத்தையுடையதாயிருக்கும்போது புதிய விதிகளும் தளைகளும் பிறக்கின்றன. தனக்கு விதிக்கப்பட்டதே இதுவும் என்பதை உணராத பரத்தை, சுதந்திரமென்று கருதிக் கொண்டு, மலர்களால் தன்னை அலங்கரித்தவளாய் வளையல்கள் ஒலிக்கக் கைகளை வீசியபடி தெருவில் நடப்பதை இப்பாடல் வரிகள் வெளிக்காட்டுகின்றன.

எவையெல்லாம் குடும்பப்பெண்ணுக்கு மறுக்கப்பட்டதோ அவையெல்லாம் பரத்தைக்கான விதிகளாக்கப்பட்டன. அலங்கரித்தல், உரக்கப் பேசுதல், சிரித்தல், ஆடுதல், பாடுதலுக்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. பிறரைக் கவர்தலே அவளுக்கான பணியாக்கப்பட்டது. ஆண்மையச் சமூகத்தால் உருவாக்கப்பட்ட பரத்தையரைச் சுதந்திரம் பெற்றவர், ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டவர் என்று பார்ப்பது ஏற்புடையதல்ல. ஆனாலும் தனக்கான குறுகிய வெளியின் இடையில் பரத்தை தன் உணர்வுகளை வெளிப்படுத்திச் சினக்கிறாள், வெளிக்காட்டுகிறாள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பரத்தை தன்னை ஏமாற்றிய தலைவனிடம்,

தெறலருங் கடவுள் முன்னர்த் தேற்றி
மெல்லிறை முன்கை பற்றிய சொல்லிறந்து
ஆர்வ நெஞ்சந் தலைத்தலை சிறப்பநின்
மார்புதரு கல்லாய்ப் பிறனாயினையே
இனியான் விடுக்குவென் அல்லேன் (அகம் 396)

என்று சூளுரைக்கிறாள். பரத்தையும் தலைவனுக்கு ஓரோர் வகையில் கட்டுப்பட்டவளாயினும் தலைவனை விமர்சிக்கிறாள்; இனியான் விடுக்குவென் அல்லேன் என்று சினத்தைக் காட்டிச் சபதம் செய்கிறாள். இது தலைவிக்கு முற்று முழுதாக மறுக்கப்பட்ட ஒன்று. ஆனால் குடும்ப நிறுவனத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட பரத்தைப் பெண், தலைவனை நோக்கிக் குரலுயர்த்திப் பேசுகிறாள். தலைவனைக் கேள்வி கேட்பவளாக இருக்கின்றாள். மட்டுமல்லாமல் தலைவியிடம் வாதிடும்போது, தலைவனே உடனுறை பகை என்று உண்மையுரைப்பவளாகவும் இருக்கின்றாள்.

யாந்தம் பகையேம் அல்லேம் சேர்ந்தோர்
திருநுதல் பசப்ப நீங்கும்
கொழுநனுஞ் சாலுந்தன் உடனுறை பகையே (அகம் 186)

தலைவன் மீதான சினத்தையும் பரத்தை மீது ஏற்றி, அவளிடம் தன் பகையைக் காட்டும் தலைவியிடம், நான் உன்னுடைய பகை அல்ல. உனக்கும் எனக்கும் இடையில் நின்று நம் இருவரையும் ஒடுக்கும் தலைவனே உனக்கு உடனுறை பகை என்று பேசுகிறாள். இந்த இடத்தில் பரத்தையின் பேச்சு அதிகாரத்திற்கெதிரான கலகச் செயற்பாடாக மாற்றம் பெறுகிறது. அறிவுநுட்பத்துடன் சிந்தித்து ஆணின் வல்லாதிக்கத்தைக் கேள்வி கேட்பவளாக, எள்ளல் செய்பவளாக, விமர்சிப்பவளாக சங்க இலக்கியத்தில் பரத்தையே இருக்கிறாள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

சங்க இலக்கியத்திற்குப் பின் காப்பிய காலத்திலும் கூட மாதவி, மணிமேகலை, பரவையார் எனச் சில கதை மாந்தரைத் தாண்டினாலும் நீதியிலக்கியக் காலம் தொட்டுப் பரத்தையர் என்ற பிரிவினர் மிகவும் இழிவுபடுத்திப் பார்க்கப்பட்டனர். உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் வள்ளுவத்தில் மாய மகளிர் (918), பொருட் பெண்டிர் (913), அன்பின் விழையார் (911), இருமனப் பெண்டிர் (920), வரைவின் மகளிர் (919) என்றெல்லாம் வசை பாடப்பட்டனர். ஆணின் பாலியல் பசிக்கு இரையாகும் பரத்தை, ஆணாதிக்கச் சமூகத்தால் சுரண்டப்பட்டு, ஒதுக்கப்பட்டே வாழ்வு நடத்துகின்றாள். விளிம்புநிலையில் வாழும் பரத்தையைச் சுரண்டும் ஆண் சமூகமே மீண்டும் அவள் மீது குற்றச்சாட்டுகளையும் சுமத்துகிறது. அன்பில்லாதவர்களென்றும் இரு மனம் கொண்டவர்களென்றும் வள்ளுவர் பேசும் பரத்தையிடம் வரும் ஆண் மட்டும் அன்புள்ளம் கொண்டவனா? வள்ளுவர் பரத்தையர் மீது சுமத்தும் பண்புகளை அவரிடம் வரும் ஆணுக்கும் கற்பிக்க முடியும்தானே? ஆண்மையச் சிந்தனையுடன் இக்கருத்தைப் பேசும் வள்ளுவர் மேற்சொன்ன செய்திகளை மறந்து அல்லது கவனிக்க மறுத்து நடுநிலை தவறிப் பேசுகிறார்.

முருகனின் பெருமை பேசும் திருப்புகழில் முருகனுக்கு அடுத்தபடியாகப் பேசப்படுவோர் பரத்தையர் எனில் அது மிகையான கூற்று அன்று. அந்நூலை எழுதிய அருணகிரிநாதர் தாசிகளால் செல்வமிழந்து, நோயுற்ற நிலையில் தாசிகளாலேயே புறக்கணிக்கப்படுபவராக அவருடைய வரலாறு பேசப்படுகிறது. அவருடைய பாடல்கள் சந்தத்துக்குப் பெயர் பெற்றவை. ஆனால் பெரும்பான்மைப் பாடல்கள் தாசிகளைப் பழிப்பதும் வசை பாடுவதும் நிரம்பியதாகவே உள்ளது.

உருக்கம் பேசிய நீலியர் காசுகள்
பறிக்கும் தோஷிகள் மோக விகாரிகள்
உருட்டும் பார்வையர் மா பழிகாரிகள் ( திருப்புகழ் 27)

பரத்தையர் வாழ்நிலை உணர்ந்தே பரத்தையரிடம் சென்று பொருளிழந்த அருணகிரிநாதர் தன் வரம்பு மீறித் தன்னை எதிர்கொண்டு நிற்கும் கணிகையரைப் புரியாமல் வெறுப்பை உமிழ்கிறார். அருணகிரிநாதர் மட்டுமின்றி சித்தர் பாடல்களிலும் இத்தகைய போக்கை நாம் காண முடியும். 

சித்தர் பாடல்களில் பரத்தையர் மட்டுமன்றிப் பொதுவாகவே பெண்களை இகழும் தன்மையைக் காணலாம். தம் துன்பத்துக்கே மாயப் பிசாசாக வந்த பெண்களே காரணம் என்று இவர்கள் கற்பிக்கும் தன்மை, தன் தவறு மறுத்து, தன் தவறையும் சேர்த்துப் பிறர் மேல் ஏற்றிக் கூறும் போக்கையே காட்டுகிறது. பெண்ணுடல் நுகர்விற்கானது; பாலியல் துய்ப்பிற்கானது என்று நம்பும் ஆண்மையச் சமூகத்தில் இயங்கும் இத்தகு பெரியோர்களும் கூடத் தன் புலனுணர்வை கட்டுப்படுத்த இயலாதவர்களாய்த் தன் புலம்பலைப் பெண்களின் மீதான வெறுப்பாய் மாற்றிக் கவி புனைகின்றனர். சுவர் வந்து தன்னை இடித்துவிட்டது என்று சொல்லும் சிறு குழந்தை போலத் தன் மனத்தை அடக்க முடியாதவர்களாய் அலைபாய்ந்து, அல்லாடி விட்டு, தாசிகளின் மீது பாய்ந்து வசை பாடுவதே இவர்களின் ஆணாதிக்க அறம்.

பொருளாதாரச் சுதந்திரமின்றி முடக்கப்பட்ட பெண்ணினத்தில் ஆதி காலம் தொட்டே பொருட் பெண்டிராய் வலம் வந்த இப்பெண்களின் உலகம் உண்மையில் துக்கத்தாலும் துரத்தாலும் நிரம்பியது. புறக்கணிப்பின் கண்ணீர்க் காவியங்கள் ஏராளம், ஏராளம். இளம் வயதில் தன் உடலையே மூலதனமாக்கிப் பிழைக்கும் இப்பெண்டிர் வயது முதிரும் பருவத்தில் படும் பாடுகளை எவரும் சிந்திப்பதில்லை. வெவ்வேறு விதங்களில் இவர்தம் உடலை வருணித்தும், ஏசியும் பாடிய சங்கப் புலவர் காலம் தொட்டு இக்காலம் வரையில் இவர் பாடுகளைப் பாடிய பாடல்களைக் கை விட்டு எண்ணி விட முடியும். 

தாய்மை என்ற புனைவின் வழியே பெண் முழுமை பெறுகிறாளென்று பெண்மையை ஏத்தும் தமிழ்ச் சமூகம், அவ்வுரிமையைப் பரத்தையருக்கு வழங்குவதில்லை. தாய்மையின் வழியே ஆணின் தனிச் சொத்துக்குரிய வாரிசைப் பெற்றுத் தருவது தந்தையாதிக்கத்தின் வளர்ச்சிக்கு உதவுவது என்பதாலேயே பெண்ணின் தாய்மை புனிதமாக்கப்பட்டுப் போற்றப்படுகின்றது. ஆனால் பரத்தையரின் தாய்மையினால் ஆண்மையச் சமூகத்துக்குப் பயன் இல்லை என்பதாலேயே அது சமூகத்தின் எள்ளலுக்கும் கேலிக்கும் ஆளாக்கப்படுகிறது.

சிலப்பதிகாரத்தில் பேசப்படும் சித்திராபதி தவிர்த்து பரத்தையரின் முதுமைப்பருவம் பற்றிய பதிவுகளேதும் தமிழ் இலக்கியத்தில் இல்லை. தூதுகளில் பேசப்படும் முதுகிழவிகள் தாய்மை வரம் வேண்டி இறைவனைப் பூசிப்பதையும் கருவுறுதலையும் கேலி பேசுவதாகவே அமைகிறது. ஆனால் இப்பெண்களின் முதுமைப் பருவத்தை அனுதாபத்துடன் அணுகும் ஒரு பிரதியும் தமிழ் இலக்கியத்தில் இல்லையென்று துணிந்து கூறலாம்.

பொய்/வஞ்சகம்/இச்சகம் பேசுவோர், அன்பற்றவர், நோய் பரப்புவோர், பொருட் பற்றுடையோர், மது வகைகளை அருந்துவோர், நிலையற்ற மனமுடையோர், தம்மையே விலை பேசிக் கொள்வோரென்றெல்லாம் பாடல்களில் இவர்கள் இகழப்படுகின்றனர். பொது மகளிர், தாசி, வேசி, விலை மகள், தேவரடியார், தேவடியாள், அவிசாரி, விபச்சாரி, கணிகையர், காமக்கிழத்தி என்றெல்லாம் பல்வேறு பெயர்களால் அழைத்து மலினப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக் கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணைர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது. சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்து கொள்ள முடியும். எது எப்படி இருப்பினும் தேவடியாள் என்பதை ஒரு வசைச் சொல்லாகப் பயன்படுத்த நியாயமே இல்லை என்று ஜி. நாகராஜன் இவர்கள் பால் அனுதாபத்துடன் பேசுகிறார்(சதங்கை, ஏப்ரல் 84). இவர்களுடைய இளமையே சமூகத்துக்குப் பிரதானமாக இருக்கிறது. அதில் அவருடைய துயரங்களும், இளமையை இழந்த பின் அவர் படும் இன்னல்களும் எவராலும் பொருட்படுத்தப்படுவதே இல்லையென்பது வருந்தத்தக்க உண்மை.

கற்பை அணியாகப் பேசும் இந்த மண்ணில்தான் அதை விலை பேசும் அவலமும் நடக்கிறது. குடும்பப் பெண் X பரத்தை என்னும் எதிர் அரசியல் காலங்காலமாய் முன்னெடுக்கப்பட்டுப் பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாக, சங்க இலக்கியக் காலம் தொட்டே கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதுவே ஆணாதிக்க நுண்ணரசியல். ஒன்றை உயர்த்துவதற்காகவே ஒன்றைத் தாழ்த்துவதும் இதில் அடங்கும். அப்படித்தான் கற்புக் கோட்பாடு உயர்த்தப்பட்டு, பரத்தையர் இழிவானவர்களாகக் காட்டப்பட்டனர். பெண்ணைப் புனிதமென்று பேசும் இந்தச் சமூகம்தான் பண்டமாக்கிச் சந்தையில் தோல் வியாபாரமும் செய்து வருகிறது. ஒவ்வொரு காலத்திலும் இதன் வடிவங்கள் மாறினாலும் பெண் பண்டப் பொருள், போகப் பொருள் என்பதில் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

நவீனப் புதுக்கவிதைகளில் பரத்தையர் பற்றிப் பேசும் மிக முக்கியமான நூலாக சரவண் கார்த்திகேயன் எழுதிய பரத்தையர் கூற்று தொகுப்பைச் சொல்லலாம். 

சுதந்திரமென்பது
புணர்தலல்ல
புணர மறுத்தல்
என்றும்
கதவு ஜன்னலடைத்து
ஒளிர் விளக்கணைத்து
விழிசொக்கிப் புணரும்
பத்தினித் தாலி கட்டிய 
வீட்டுப் பிராணியல்ல
நான் காட்டுராணி

என்று பெருமிதம் பேசும் சரவண கார்த்திகேயனின் கவிதைகளிலே இவர்களுடைய துயரமும் பதியப் பெற்றிருப்பதே இத்தொகுப்பை முக்கியமானதாக்குகிறது. இன்றைய சமூகத்தில் அடிமை வழக்கங்கள் ஒழிந்து விட்டதாகச் சொல்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. அவை இன்றும் இருக்கின்றன. ஆனால் பெண்கள் மட்டுமே அதற்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். அதன் பெயர்தான் விபச்சாரம் என்று விக்டர் ஹியூகோ பரத்தைமையின் பெயராலும் பெண் அடிமைப்படுத்தப்படுவதைப் பேசுகிறார். தொடர்ந்த காலங்களில் மையத்தை மட்டுமே புனிதப்படுத்தி, விளிம்புகளின் துயரத்தைப் பேசாதே தவிர்த்த ஒரு படித்தான பார்வையில் இருந்து விலகி நிற்கும் இக்கவிஞர், பெருமிதத்தைச் சொல்லும் நிலையிலேயே துயரத்தையும் பதிவு செய்கிறார்.

உறக்கத்தின் அருமை கேள்
கறைபடாத இரவொன்றில்
கம்பளி போர்த்தித் துயிலும்
நிம்மதியின் சுகஸ்பரிசத்தைப்
பெருங்கனவாய்த் தரிசிக்கும்
ஓர் தேவடியாளிடம் 

என்று உறக்கமற்ற இரவுகளைப் பேசும் கவிஞர்,

விரல் தொடுகிறாய்
இதழ் தொடுகிறாய்
இடை தொடுகிறாய்
முலை தொடுகிறாய்
பிருஷ்டம் தொடுகிறாய்
யோனி தொடுகிறாய்
எவனும் மனம் தொட்டதில்லை

என்று அவளுடைய குற்றச்சாட்டை, மனம் தொடாத உறவுகளில் பசியாறும் அவளது துயரத்தைச் சொற்களில் மொழிபெயர்க்கிறார். வருணிப்பதாயினும் இகழ்வதாயினும் பெருமிதம் பேசுவதாயினும்  ஆண் குரலாகத்தானே இருக்கிறது, ஒற்றை குரலேனும் பெண் குரல் கிடைக்காதா என்று தேடுகையில் கிடைத்தாள் பரத்தையருள் ராணி. லீனா மணிமேகலை எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பு அது.

என் படுக்கையறைக்கு வந்தான் அவன்/அம்மணம்/அவனுக்குக் காட்சி/எனக்குச் செயல்/எனக்குக் காட்சி/அவனுக்குச் செயல்/தவளை வாசனை/நனைந்த பறவைக் குஞ்சொன்றின் தலை/கசியும் ரகசியங்களின்வெளுப்பு/பொந்து/நனவிலி/நரகத்தின் வாசல்/வெளியேறினான்/ஆனால் மீண்டும் வந்தான்/பருத்த மின்னலொன்று/ தாக்குண்டவனாய்/அதன் ஒளிக்குக் கட்டுண்டவனாய்/கன்னிமை என்பது கட்டுக்கதை என்றேன்/நீ நம்ப விருப்பப் படாதது என்றேன்/என் உடல் நினைவகம் அல்ல/மொழியுமல்ல/பேசுவேன்/புரிந்து கொள்ள மாட்டேன்/அர்த்தம் அதிகாரம் என்றேன்/பார்க்க முடியாததை நோக்கித் திரட்டப்பட்ட/மழுங்கிய முனையின் விறைப்பு/அவன் பார்வையை மங்கலாக்கியது என்று எழுதிச் செல்லும் இக்கவிதையின் இறுதியில்,

அவன் வாய் முணுமுணுத்தன           பரத்தை
கவனிக்காமல் இல்லை
அசை போடும்போது திருத்திக் கொள்வான்
நான் பரத்தையருள் ராணி 

என்று பரத்தையர் பற்றிப் பேசுவதாய்ப் புனைந்து முடிக்கிறார் லீனா. ஆனால் கவிதையில் எங்கும் பரத்தையருக்கான வெளி பேசப்படாததுடன் லீனாவின் குரலே பதிவாகியிருப்பதைக் கவிதை வாசிப்போர் உணர முடியும். இங்கே சொல்லப்படும் பரத்தை என்ற வசைச் சொல் கூட, மேலே கவிஞரின் குரலாகப் பதியப்பட்ட செய்திகளால் அழுத்தமின்றி, எந்த விதமான உணர்வையும் கிளர்த்தாமலே நம்மைக் கடந்து செல்கிறது. லீனாவின் இந்தப் பதிவு கடந்து பிற பெண் கவிஞர்கள் எவரும் பரத்தையர் பற்றிக் கவிதைகளை எழுதியதாக நானறிந்த வரையில் இல்லை என்பதை இக்கட்டுரையில் வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியதாய் இருக்கிறது.

தொடர்ந்த இத்தனை நூற்றாண்டுப் பதிவுகளில் பரத்தையென்பவள் சுதந்திரமானவள், துடிப்புடன் பேசுபவள் போன்ற விடுதலைச் சிந்தனையுடனான குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பதியப்பட்டிருப்பினும் அதை முழுமையாக ஒதுக்க முடியாதெனினும் ஏற்றுக் கொள்ள இயலாத நிலையிலேயே கொள்ள வேண்டியதாயிருக்கிறது. 

பெண்களின் மீது மட்டுமே திணிக்கப்பட்ட ஒழுக்கம் பெரும் வன்முறைத்தன்மை கொண்டதாகவும் ஒடுக்குமுறையின் அடையாளம் பெற்றதுமாகவே இருப்பதை வரலாற்றின் பக்கங்களில் பரக்கக் காண முடியும். இந்த ஒழுக்க வரையறைக்குள் வராத பரத்தைக்கும் கூடச் சில விதிகளை அமைத்து, சமூகத்தில் இத்தகைய கட்டுமானத்தை உருவாக்கிய ஆண்மையமே அவர்களை இழிவானவர்களாகவும் கட்டமைத்து, அப்பெயர்களையே சமூகத்தின் வசைச்சொல்லாகவும் மாற்றிக் கேலி பேசியது. தன்னை அடக்க இயலாமையின் ஆற்றாமைகளை இந்தப் பெண்களின் மீது ஏற்றி ஏசியதும் பேசியதும் ஒரு பக்கப் பார்வையாய் விமர்சிப்பதுமே தமிழ் இலக்கியப் பக்கங்களில் மிகுதியாக இருக்கிறது.  இன்றைய நவீன யுகத்தில் விளிம்பு நிலை மக்களின் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இற்றைக் காலத்திலும் மிகச் சிறிய குரலாகவே இவர்களைப் பற்றிய பதிவுகள் இருப்பது பரத்தையர் சார்ந்த சமூகக் கண்ணோட்டம் இன்றும் மாறாமல் இருப்பதன் அடிப்படையிலேயே என்று கொள்ளலாம்.

தி. பரமேசுவரி

4 comments:

  1. அருணகிரினாதரை பற்றி விரிவாகவே ஒரு கட்டுரை எழுதலாமே..யோசியுங்க பரமேஸ்வரி..

    ReplyDelete
  2. அருமை......இக்காதில் வாங்கி மனதில் வைக்கவேண்டியது.ஒரு சமூக பதிவு.

    ReplyDelete
  3. அருமை.....

    விரல் தொடுகிறாய்
    இதழ் தொடுகிறாய்
    இடை தொடுகிறாய்
    முலை தொடுகிறாய்
    பிருஷ்டம் தொடுகிறாய்
    யோனி தொடுகிறாய்
    எவனும் மனம் தொட்டதில்லை

    என்று அவளுடைய குற்றச்சாட்டை, மனம் தொடாத உறவுகளில் பசியாறும் அவளது துயரத்தைச் சொற்களில் மொழிபெயர்க்கிறார். வருணிப்பதாயினும் இகழ்வதாயினும் பெருமிதம் பேசுவதாயினும் ஆண் குரலாகத்தானே இருக்கிறது, ஒற்றை குரலேனும் பெண் குரல் கிடைக்காதா என்று தேடுகையில் கிடைத்தாள் பரத்தையருள் ராணி. லீனா மணிமேகலை எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பு அது.

    ReplyDelete